காதல் 04
"என்னடி மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?போய்ப் பார்த்துட்டு வந்து ரெண்டு நாள் ஆகுது இன்னும் ஒன்னும் சொல்லாம சுத்துற, என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது?" என்று தாய் கீதாஞ்சலி வினவினார்.
அங்கு அமர்ந்திருந்த ரஞ்சினியை பார்த்துக் கேலிபுன்னகை சிந்திய, அவளது தங்கை அக்ஷயாவோ, "ம்மாவ், அதெல்லாம் என் மாமா ஃபேர்ஃபோர்மன்ஸ்ல அக்கா அன்னைக்கே காலி சும்மா நடிக்கிறாமா.. இவ தான் உலக மகா நடிகையாச்சே! கூடவே கிரிமினல் லாயர் வேற, உண்மைய மறைக்க சொல்லியா கொடுக்கணும்" என்றவளிடம் தலையணை பறந்து வந்தது.
"மா பாருமா சும்மா சும்மா அடிக்கிறா, உண்மைய சொன்னா போதுமே, சரியான ராங்கி. ரஞ்சினு பேர் வைக்கிறதுக்கு பதிலா ராங்கினு வெச்சிருக்கலாம்ல நீயி" என்க, அவளை முறைத்த ரஞ்சினியோ, "ஆமா மா, எனக்கு ரஞ்சினிக்கு பதிலா, நரேந்திரானு வெச்சிருக்கலாம். அந்த பேர கூப்பிட என் தங்கச்சிக்கு அவ்வளவு தேனா இனிச்சிருக்கும்" என்றவள் வந்த சிரிப்பை பற்களை கடித்து அடக்கிக்கொண்டது பெரிய கதை.
அக்ஷயாவோ உறையாத குறை தான். பதற்றத்தில் சட்டென பேசிகொண்டிருந்த வாய் பசை கொண்டு ஒட்டியது போல அப்படியே பிணைந்து கொண்டது.
அவர்களது தாய் கீதா தான் விடயம் புரியாமல் "நரேந்திராவா, என்னடி பேரு இது பையன் பேர் போல இருக்கு, இப்போ மனோரஞ்சினிங்கிற பேருக்கு என்ன குறையாம்" என்று கேட்டார்.
அதற்கு ரஞ்சினியோ "அது வந்துமா" என்று தங்கையைப் பார்த்த வண்ணம் இழுக்க, பதறிய அக்ஷயாவோ "மா இங்க என்னமா வெட்டிப் பேச்சு, அக்காக்கு மாமாவ பிடிச்சிருக்கு போய், கல்யாண வேலையப் பாரு.. என்ன அம்மாமா நீ பொண்ணு கல்யாணம் வருது ஒரு பொறுப்பு இருக்கா உனக்கு" என்று வாயில் வந்ததெல்லாம் பேசி அவரை அங்கிருந்து அனுப்பினாள்.
அவரோ, "இன்னும் பிடிச்சிருக்குனு கலந்து கூட பேசல, நாளே குறிக்காத கல்யாணத்துக்கு, என்ன வேலையப் போய்ப் பார்க்க சொல்லுறா இவ, நான் பெத்த ரெண்டுங்களும் லூசா சுத்துதுங்களே!" என்று புலம்பியபடி கீழே சென்றார்.
அவர் சென்றது தான் தாமதம், இங்கே சகோதரிகள் இருவரும் மெத்தையில் சண்டையில் உருண்டனர்.
தங்கையின் கீழே, அவளது பாரத்தை தாங்க முடியாமல் நெளிந்து கொண்டிருந்த ரஞ்சினியோ "அடியேய்! எரும மாடு விடுடி என்ன" என்று கீழிருந்தவாறே கத்தினாள்.
அந்த குரலில் அவள் மேலிருந்து சரிந்து பக்கவாட்டில் அக்ஷயா படுத்தபோது தான் ரஞ்சினிக்கு மூச்சே வந்தது.
அவளை கோபமாய் முறைதவளோ "குண்டு பூசணிக்கா என்ன கணம்டி கணக்குற" என்று மூச்சை இழுத்து விட்டவள் "உன் ஆளு பேர் கூட சொல்ல கூடாதா நானு?" என்று வினவினாள்.
"அதுக்குன்னு அம்மா முன்னால சொல்லுவியா நீ?" என்று தங்கை எதிர் கேள்வி கேட்க, சத்தமாய் சிரித்தாள் ரஞ்சினி.
"ஏன்டி எரும மாடே சம்பந்தம் இல்லாம சிரிக்கிற" என்ற தங்கையின் தலையில் கொட்டியவள், "யாரு சம்பந்தம் இல்லாம சிரிச்சா, அதெல்லாம் எக்கச்சக்கமா சம்பந்தம் கொட்டுது" என்க, அப்போதும் புரியாத பார்வை பார்த்து வைத்தாள் தங்கை.
"அடியேய் மண்டு, உன் ஆளு பேர அம்மா முன்னால சொன்னது தான் உன் பிரச்சனைனா, அப்போ?" என்று இழுக்க, அக்ஷயாவும், "ஆமா அம்மா முன்னால சொன்னா மாட்டிப்பேன்ல, அப்போ?" என்று அவளும் இழுத்தாள் அக்காவை போலவே..
"மண்டு மண்டு, உன்ன அரலூசுனு திட்டுறதுல தப்பே இல்லடி.. அப்போ நரேந்திரன் உன் ஆளுன்னு நீயே ஒத்துகிறேன்னு தானே அர்த்தம், மண்டைல இருந்த கொண்டைய மறந்த மொமெண்ட்" என்றவள் இன்னும் சத்தமாய் வெடித்துச் சிரித்தாள்.
'அட நாசமே' என்று எண்ணிய அக்ஷயாவோ அசடு வலிய புன்னகைக்க, அக்ஷயாவோ "என்னா பங்கு?" என்று திரைப்பட பாணியில் கேட்க, அதற்கு அவள் அக்காவும் "மாட்டிக்கிட்ட பங்கு" என்று அதே திரைப்பட பாணியில் பதிலளித்திருந்தாள்.
அடுத்த இருபது நிமிடமும் ரஞ்சினி தங்கையை கேலி செய்தே ஒரு வழியாக்கி விட்டாள்.
அந்த நேரம் சரியாக, ரஞ்சினியின் தொலைபேசியில் குருஞ்செய்தி வந்ததற்கான சத்தம் ஒலிக்க, எடுத்து பார்த்தவள் மனதில் சட்டென ஒரு மின்னல்.
அக்காவிடம் திடீர்னு மௌனத்தை உணர்ந்த, அக்ஷயா அப்படியே உருண்டு அக்காவின் அருகில் வந்து செல்லை எட்டிப் பார்க்க அதிலோ 'திரு ரஞ்சினிக்கு திருமதி ரஞ்சிதனின் நியாபகம் வந்ததால் குறுஞ்செய்தியில் கரம் கோர்க்க ஆவலாக வருகை தந்திருகின்றேன். கரம் கொடுக்க விரும்பி ஒரு பதிலை அனுப்பி விட்டால், வாழ்க்கையில் முழுக்க உன்னை மீள அனுப்பாமல் பார்த்துக் கொள்ள, திரு ரஞ்சினிக்கு கொள்ளை ஆசையாம்.. பதில் வருமா? காத்திருக்கலாமா? இப்படிக்கு திரு ரஞ்சினி" என்று அத்தனை உருகலை தாங்கி அந்த செய்தி வந்திருந்தது.
"அட்றா சக்க, என் மாமாகுள்ள இப்படி ஒரு லவர் பாயா? என் பிரண்ட்ஸ் கிட்ட சொன்னா நம்பவே மாட்டாளுங்க" என்ற தங்கையை மெத்தையிலிருந்து கை பிடித்து எழுப்பியவள் "போ வெளில போ, அக்கா ரூம்ல என்ன வேல உனக்கு" என்று சற்று முன் தங்கை அம்மாவை எப்படி வெளியே அனுப்பினாளோ அப்படி தங்கையை வெளியே கிட்டத்தட்ட தள்ளி கதவை அடைத்திருந்தாள் ரஞ்சினி.
மூடிய கதவில் சாய்ந்தவளது காதில் "நீ நடத்துக்கா, மாமா வந்ததும் என்னையவே வெளிய அனுப்பிட்டேல்ல, உன்ன அப்பறம் பாத்துக்கிறேன்" என்ற தங்கையின் குரல் தான் கேட்டது.
அந்த குருஞ்செய்தியை மீண்டும் மீண்டும் அத்தனை தடவை படித்தாள் ஆனால் பதில் அனுப்ப கைகளில் ஒரு நடுக்கம், இத்தனை நாளில் புதிதாய் நடுக்கம், பதற்றம், கூடவே வெட்கம் வேறு வந்து தொலைத்தது. இந்த உணர்வுகள் எல்லாம் அவளுக்கு புதிது.
இப்படி தனக்கு அவனை அத்தனை பிடிக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன் சொல்லி இருந்தால் வாய்விட்டு அத்தனை சிரித்திருப்பாள். தங்கை அவனை புகழ்ந்து பேசியதற்கே அத்தனை கேலி செய்தவள் அவள், இன்றோ அவன் மேல் காதலில் மொத்தமாய் விழுந்திருந்தாள்.
அவள் மனதோ அன்று அவனை கண்ட அந்த நொடிக்குத் தாவி இருந்தது.
_______________
"என்னடி உன் சார் அப்படி இப்படினு பில்டப் எல்லாம் கொடுத்த இன்னும் ஆள காணோம்" என்று ரஞ்சினி நக்கலாக கேட்க, அதில் ரோஷம் வந்த அக்ஷயாவோ "அதெல்லாம் எங்க சார், டான்னு டைமுக்கு வருவாங்க, இன்னும் டூ மினிட்ஸ் இருக்குல்ல.. ரொம்ப ஆர்வப் படாம வெயிட் பண்ணுமா? என்றிருந்தாள்.
"அட ரொம்ப தான் ஆர்வம், பார்க்க தான போறேன் உங்க சார" என்றவள் அந்த சாரில் சற்று அழுத்தம் கூட்டியே உச்சரித்தாள்.
அப்போது சட்டென அவளது தங்கை அக்ஷயாவோ, "அதோ ரஞ்சிதன் சார் வந்துட்டாங்க" என்று சொல்ல திரும்பி கதவை பார்த்து, தனது கைகடிகாரத்தை பார்த்தவளது புருவத்தில் ஒரு மெச்சுதல். கூடவே மனமோ 'மனிதகுல மாணிக்கம்னு பேர் வெச்சது தப்பில்ல போலிருக்கே' என்று எண்ணிக்கொண்டது.
நேரே அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தவன். "குட் மார்னிங் அக்ஷயா, குட் மார்னிங் செல்வி ரஞ்சினி, இனிமேல் திருமதி ரஞ்சிதனா மாற வாய்ப்பிருக்கு" என்றவன் அந்த இருக்கையில் அமர்ந்தான்.
அடுத்த பத்து நிமிடம் சாதாரணமாக தான் பேசினான். அதில் கவர என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்டால் ரஞ்சினிக்கு சொல்ல பதில் எதுவுமே இருக்காது தான். ஆனால் அவன் பேச்சில் அவளது மனம் கவரபட்டிருந்தது என்பது தான் உண்மை.
இதில் முக்கால்வாசி அக்ஷயாவிடம் தான் பேசினான். ரஞ்சினியிடம் பேசிய அந்த சொற்பப் பேச்சுக்களில், ஏதோ பல ஆயிரம் வருடம் கணவன் மனைவியாய் வாழ்வது போல் அத்தனை உரிமை.
ஆண்களாலும் அத்தனை மிருதுவாய் பேச முடியும் என்பதை அன்று தான் பார்க்கிறாள். மென்மையான பேச்சுகள் தான் ஆனால் அதில் ஆழமான கருத்து புதைந்திருந்தது.
"என்ன ரஞ்சி எதுவுமே பேசாம இருக்கீங்க, அதுவும் நீங்க ஒரு வக்கீல், பேசாம இருக்குறத பார்த்தா ஆச்சரியமா இருக்கே! ஒரு வேள வெட்கமா? எதுவா வேணா இருக்கட்டும் நான் வெட்கமாவே எடுத்துக்கிறேன். உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கானு கேட்க முதல் என்ன பத்தி சொல்லிடுறேன். நேத்து வரை எனக்குன்னு யாரும் இல்ல, எப்போ உங்க அப்பா மிஸ்டர் ரவிவர்மன் எங்கிட்ட வந்து பேசுனாங்களோ அப்போ எனக்குனு மனைவியா மனசுல உங்க படம் தான் பதிஞ்சி போச்சு, இன்கேஸ் உங்களுக்கு பிடிக்கலனா நான் அழிச்சிகிறேன். அதுவரை பதிஞ்சது பதிஞ்சதாவே இருக்க உங்க பெர்மிஸன் வேணும்?" என்று கேட்டவன் அந்த நிமிடமே அவன் முகத்தை அவள் நெஞ்சில் ஆழப் பதித்திருந்தான்.
அவள் தலையும் அவள் அறியாமலே அவன் கேள்விக்கு தலையசைப்பை பதிலாய் கொடுக்க, அவனிடம் மயக்கும் புன்னகை, சாதாரணமான புன்னகை தான் ஆனால் ஏற்கனவே அவனிடம் மயங்கிப் போய் இருந்தவளுக்கு அதுவும் கவரவே செய்தது.
பழைய எண்ணங்களில் இருந்து மீண்டவளது கரமோ "இவ்வளவு தெளிவாய் பேசும் தாங்கள், கேள்வியாய் மட்டும் புரியாதவர் போல் கேட்பது விந்தையாக இருக்கிறதே! நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டுமா? அப்படியென்றால் சொல்ல முடியாது பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன்" என்று அனுப்ப, சில வினாடிகளில் பதில் வந்திருந்தது.
"பதில் அனுப்பியதற்கு நன்றி, இனிமேல் மீள முடியாமல் எனக்குள் புதைந்து கொள்ள இன்னும் சில நாட்களே.. திருமதி ரஞ்சிதன் தயாரா?" என்று வந்திருந்த பதிலை எத்தனை தடவை படித்தாள் என்பது அவளுக்கே வெளிச்சம்.
_________________
ரதியும் நரேந்திரனும் வீட்டை விட்டு வெளியேறி இதோ இரண்டு நாட்கள் கடந்து மூன்றாம் நாளும் விடிந்திருந்தது.
வெளியே வந்ததும், எல்லாம் உடனடியாக கிடைத்து விடவில்லை. அவர்களுக்கே தெரியும் கஷ்டப்பட வேண்டும் என்பது ஆனால் முடிவில் இருந்த உறுதி அவர்களை தேற்றியிருந்தது.
ரதியின் கையில் குறிப்பிட்ட பணம் இருந்தது தான். ஆனால் உடனடியாக வீடு வாடகைக்கு கிடைத்து விடவில்லை, நரேந்திரன் இராபகலாய் தேடி அலைய வேண்டித்தான் இருந்தது.
அவன் மட்டுமன்றி அவனது நண்பர்களும் உதவவே செய்தனர். சில இடங்கள் கிடைக்கவும் செய்தது, வீடு பெரியதாகவும் வசதியாகவும் இருந்தது. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணத்தைவிட அதிகமாக முன் பணம் கேட்டனர். ரதியோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
கையிருப்பில் இருக்கும் பணத்தை விட அதிகமாக கொடுக்கவேண்டும் என்றால் நிச்சயம் கடன் என்று தான் செல்ல வேண்டும். படிக்கும் மகனும் கூட இருக்கையில் அதன் பின்னான வாழ்க்கை செலவுக்கு என்ன செய்வது என்பதை ஒரு தாயாக அவர் யோசிக்க வேண்டியிருந்தது.
அப்படி இரண்டு நாட்கள் நண்பன் ஒருவனின் வீட்டில் இருந்தாகி விட்டது இனியும் இருக்க, மனம் இடம் கொடுக்காததால், நரேந்திரன் தேடலை அதிகப்படுத்தியிருந்தான்.
அன்று கல்லூரிக்குக் கூட செல்லவில்லை, ஒரு இடம் இருப்பதாக நண்பன் ஒருவன் சொல்லியதற்கிணங்க, அங்கே சென்றவன் அதுவும் சரியாக வரவில்லை என்றதும் திரும்பி வந்து கொண்டிருந்தவனது தொலைபேசி வழியிலே அதன் இருப்பை உணர்த்தியது.
உயிர்பித்து காதில் வைக்க, பேசியது அவனது சீனியர் டாக்டரும், பேராசிரியருமான அபரஞ்சிதன் தான்.
"சார், சொல்லுங்க சார்" என்க, அந்த பக்கம் இருந்த அபரஞ்சிதனோ "நரேன், நான் இப்போ **** ஃகாபி ஷாப்ல இருக்கேன் சீக்கிரம் வா" என்றவன், நரேன் இருக்கும் இடத்தையும் விசாரித்து, பக்கம் தான் என்பதை உணர்ந்து "பக்கம் தானே ஓகே டென் மினிட்ஸ்ல வா" என்று அழைப்பை துண்டித்திருந்தான்.
அடுத்த பத்து நிமிடங்களில் நரேந்திரன் அபரஞ்சிதன் முன்னே அமர்ந்திருந்தான்.
"குடி நரேன் ஃகாபி ஆறுது பாரு" என்க, அவன் சொல்லுக்கிணங்க நரேந்திரனும் பருக ஆரம்பித்திருந்தான்.
"வீட்ட விட்டு வெளிய வந்ததா கேள்விப்பட்டேன். தங்க இடம் கிடைக்கல போலிருக்கு" என்க நரேந்திரனோ, "தேடிட்டே இருக்கேன் சார் சீக்கிரம் கெடச்சிடும்" என்றான்.
"ஓகே கிடைக்கட்டும், ஆனா என் வீட்டு மேல் போஷன் சும்மா தான் இருக்கு, என் ஒருத்தனுக்கு எதுக்கு அவ்வளவுனு நான் கீழ் போஷன் மட்டும் தான் யூஸ் பண்ணுறேன். உனக்கு இஷ்டம்னா இப்போவே வந்து தங்கிக்கோ" என்று சொல்ல நரேந்திரன் மறுக்கப் போக,
ரஞ்சிதனோ "அட்வான்ஸும் ரெண்ட்டும் பேசிக்கலாமா?" என்றான் அவன் தயங்கும் காரணம் புரிந்தவனாய்.
எங்கே இலவசமாகவென்று தங்க சொல்லிவிடுவானோ, எப்படி தட்டிக்களிப்பது என்று யோசித்து தயங்கிய, நரேந்திரனுக்கு அவனது அடுத்த கேள்வி நிம்மதியை கொடுத்திருந்தது.
அடுத்து இருவரின் பேச்சு வார்த்தையில் கொடுக்கவேண்டியது முற்பணம் இவர்களிடமிருந்த பணத்தின்னுள்ளே இருக்க, நரேந்திரனுக்கு முகத்தில் அந்த மகிழ்ச்சி தெரிந்தது.
"ஓகே நரேன், அப்போ அம்மாவ கூட்டிட்டு இப்போவே வீட்டுக்கு வா.. நான் அங்க தான் இருப்பேன்" என்றவன் அங்கிருந்து சென்றிருக்க, நரேந்திரனும் மகிழ்ச்சியுடன் தாயை தேடி சென்றிருந்தான்.
கானல் தொடரும்...
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
Last edited: