காதல் 05
இதோ நரேந்திரன் ரதி இருவரும் ரஞ்சிதனின் வீட்டுக்குக் குடிவந்து, ஒரு வாரம் ஆகியிருந்தது.
பெரிதாய் ஆரவராம் இல்லாமல் கடந்த, தாய் மகன் வாழ்க்கையில் இடைஞ்சாலாக வந்து விழுந்தது அன்று காலை அவர்கள் இருக்கிமிடம் தேடி வந்த கடிதம்.
"ம்மா, லேட்டாகிடிச்சு பாரு? சாப்பாடு ரெடியா, இன்னைக்கு பிராக்டிகல்ஸ் இருக்கும்மா" என்றவன் சாப்பாட்டு மேசையில் வந்து அமர, ரதியோ "இதோ முடிஞ்சிடிச்சு நரேன்" என்றவர் அவன் தட்டில் முருகலான நெய் தோசை ஒன்றை வைத்தவர், அவனுக்குப் பிடித்த தக்காளிச் சட்னியையும் பரிமாறியவர் அடுத்த தோசை ஊத்த சமயலறைக்குள் நுழைந்தார்.
அங்கிருந்தவாறே, "டேய் நரேன், இங்க பக்கத்துல அஞ்சல் வாரமலர் ஆஃபிஸ் இருக்குல்ல அதுல ஒரு ஒரு போட்டி அறிவிச்சிருந்தாங்க அதுக்கு கதை ஒன்னு எழுதி முடிச்சிருக்கேன். போகும்போது அங்க கொடுத்துடுறியா?" என்றார்.
நரேந்திரனோ பதில் எதுவும் சொல்லாமல் தட்டைத் தூக்கி கொண்டு சமையலறைக்கே வந்தவன் அங்கிருந்த கட்டில் ஏறி அமர்ந்து, அடுத்த கவலத்தை பிட்டு தாயின் வாயில் வைக்க, அவரும் புன்னகையுடன் வாங்கிக்கொண்டார்.
"இதெல்லாம் கேட்கணுமாமா நீ? கொண்டு போய்க் கொடுனா கொடுக்கப் போறேன். இதுக்கெல்லாம் பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு இருப்பியா? நீ எது செஞ்சாலும் உன் கூட நான் இருப்பேன் சரியா? நீ பெரிய உயரத்துக்கு போகனும். கூடவே நான் ஒரு மகனா உன்ன பிரமிச்சு பார்க்கணும்மா.. அதுக்கான நாள் ரொம்ப தூரத்துல இல்லை, அங்க அந்த வீட்டுல மறைச்சு எழுதுன உன் எழுத்துக்கள் எல்லாம் இப்போ சுதந்திரமாக எங்க வேணா பயணிக்கலாம். யாரும் உன்ன தடுக்கப் போறதில்லை.. உன்ன மாதிரி எல்லா பொண்ணுங்களும் அவங்க உணர்வுகளை ஏதோ ஒரு வழில வெளிப்படுத்த உன்னோட எழுத்துக்கள் உதவனும். சீதைய மீட்க ராமனுக்கு ஒரு அணில் உதவிச்சினா உனக்கு மீட்க உங்கூட நான் இருப்பேன்மா.. நீ வாழாம போன உன்னோட வாழக்கையே உனக்கே உனக்கா திருப்பித் தருவேன்" என்றான்.
ரதியோ அவன் முகத்தைக் கையில் ஏந்தி, அவன் நெற்றியில் முத்தத்தைப் பதித்தவர் "என் வாழ்க்கைல முதல்ல எனக்குப் பிடிப்பையும் நம்பிக்கையையும் எனக்காக நான் தான் பேசணும்னும் கத்துகொடுத்தது நீதான் கண்ணா, அம்மாவோட வயித்துல நீ உதிச்சப்போவே நான் இழந்த எனக்கான நம்பிக்கையை மீட்டுக் கொடுத்தவன் நீ, உங்கிட்ட நான் என் அப்பாவ மறுபடியும் உணருறேன். நீ இப்படி எனக்காகப் பேசும் போதெல்லாம் பழைய பதினேழு வயசு ரதியாதான் என்னை என்னால பீல் பண்ண முடியுது.. தேங்க் யூ சோ மச் கண்ணா" என்று உணர்ந்து பேசியவர் மீண்டும் ஒரு முத்தத்தை அவன் நெற்றியில் பதித்தார்.
தாய் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்தவன் அவர் மனநிலையை மாற்றும் பொருட்டு "அப்போ நான் பாலசந்திரனா? அவ்வளவு பெரிய மனிசனாவா உன் கண்ணுக்குத் தெரியுறேனா? எனக்கு இப்போ தான் டுவண்டிடூ ஆகுது, என்ன கிழவன் ஆக்கப் பிளான் பண்ணாம அடுத்த தோசையை போடு.. அப்பறம் என் கேர்ள் பேன்ஸ் எல்லாம் உன் மேல தான் கோச்சிப்பாங்க" என்க, மகனின் முயற்சி எதுக்கெனப் புரிந்தவரும் புன்னகைத்தார்.
"ஆமா, அப்படியே பொண்ணுங்க தினமும் வீட்டு வாசல் முன்ன கியூல நிக்கிறாங்க பாரு, ரொம்ப தான்டா பண்ற நீ" என்றவர் அடுத்த தோசையை வைக்க, அவனோ தாயின் கன்னத்தைக் கிள்ளியவன் "அது வீடு மாறிட்டோம்ல மா அதான் இந்த இடம் தெரியல இல்லனா கியூ இருக்கும்" என்று அசடு வழிய சமாளித்தான்.
"தெரியுது தெரியுது சீக்கிரம் காலேஜ் போற வழியப் பாரு, அப்பறம் அந்தக் கியூ மேட்டர டீல் பண்ணிக்கலாம்" என்றார்.
அவனோ "ஓகே தாயே உன் கட்டளையே சாசனம்" என்றவன் சாப்புட்டு முடித்த தட்டுடனே இடைவரை குனிந்து நிமிர்ந்து அரசர்களுக்கு மரியாதை செலுத்துவது போல் நடிக்க, ரதியும் தோசை கரண்டியால் "வாழ்க மகனே" என்று அதே பாணியில் நடித்திருந்தார்.
இருவருக்கும் வாய் கொள்ளாப் புன்னகை தான். இத்தனை நாளில் இப்படி சமையலறையில் நின்று பேசியதெல்லாம் இல்லை அவர்கள்.
இவர்கள் பேச ஆரம்பித்தால் தான் பாட்டி மங்கம்மா மூக்கில் வேர்த்து விடுமே! எங்கிருந்து தான் வருவாரோ, எதையாவது சொல்லி அவர்களைப் பிரிப்பதை மட்டும் சரியாய் செய்து விடுவார்.
நரேந்திரன் சண்டைக்கு நின்றால், ரதி எப்படியோ அவனைச் சமாதானம் செய்து விடுவார். ஏன் என்று அவரிடமே கோபம் கொள்ளும் நாட்களும் இருந்திருக்கிறது தான்.
அதற்கு ரதியோ எப்போதும் தரும் பதில் "ஒருத்தரை பேசித் திருத்தலாம்னா அந்த இடத்துல நம்ம பேச்சு இருக்கிறதுல தப்பில்லை நரேன், ஆனா உன் பாட்டி எல்லாம் என்னைக்கும் திருந்தமாட்டாங்கனு உனக்கே தெரியும். அப்பறம் எதுக்கு நம்ம வேர்ட்ஸ் வேஸ்ட் பண்ணனும், மலைய பார்த்து நாய் குறைகிதுனு சொல்லுவாங்களே அப்படினு நினைச்சி கடந்து போய்டணும். அறிவில்லாதவங்க கூடப் பேசுனா நாம தான் முட்டாள் ஆகணும். அவங்க பேசும்போது ஓகே அப்படியானு அத கடந்து போய்டணும்" என்பது தான்.
அதுவும் மங்கம்மா முன்னிலையிலேயே இதைச் சொல்லுவார். அதற்கு மங்கம்மா இவள் தன்னை இப்படி பேசுவதா என்று இன்னும் கொதித்தாலும் ரதியோ பதில் எதுவும் சொல்லாமல் ஒரு பார்வையுடன் கடந்து விடுவார்.
அந்தப் பார்வையில் மங்கம்மாவுக்கு முன்னர் அவர் பேசிய வார்த்தை எல்லாம் மண்டைக்குள் ஓடி அவரை மேலும் கொதிக்கவே வைக்கும்.
அமைதியாகப் பொறுமையாய் போவதின் மூலமும் ஒருவருக்கு தண்டனை கொடுக்க முடியும் என்பதை நரேன் தாயிடமிருந்து தான் கற்றுக்கொண்டான்.
ரதியோ அவர்கள் முன்னிலையில் பயந்து ஒதுங்கவில்லை, அவருக்கான சில காரணங்கள் இருக்க அதற்காகவே அந்த ஒதுக்கம் என்பது மங்கம்மாவுக்கு நாளடையில் புரிந்து போனாலும் புரியாமல் வன்மைத்தை கக்கும் வேலையைச் சரியாகச் செய்தார்.
முதலில் எல்லாம் ஏன் தாய் ஒதுங்கிப் போக வேண்டும் என்று கோபம் வரும் ஆனால் அவர் நோக்கம் அறிந்ததன் பின், ஒரு மகனாகத் தாயின் ஆளுமையில் அவனுக்கு எப்போதும் பிரமிப்பு தான்.
சமையலைறையிலிருந்து வெளியே வந்தவனிடம், "நரேன் இதுல லஞ்ச் இருக்கு, அண்ட் இது ஸ்டோரிக்கான ஃபைல்" என்று ஒரு பையை அவனிடம் எடுத்துக் கொடுக்க, அவனும் புன்னகையுடன் வாங்கிக்கொண்டவன் வெளியே வர, அப்போது சரியாக அவர்கள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.
நரேந்திரன் தான் பிரித்துப் படித்தான். அது விவாகரத்து சம்பந்தமான வக்கீல் நோட்டீஸ். அவனது தந்தை தான் அனுப்பியிருந்தார். அவரே அனுப்பியதில் அவனுக்கு ஒரு வகையில் நிம்மதி தான். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம் தான் அவனைக் கொதிக்க வைத்திருந்தது.
தாயின் நடத்தை சரியில்லை என்ற காரணத்தை எந்த மகனால் ஏற்றுக்கொள்ள முடியும்?
அவன் கோபத்தை உணர்ந்த ரதியும் எதற்காக என்று அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தவர் முகத்தில் இருந்த உணர்வு, தூக்கு தண்டனை கைதி ஒருவருக்கு விடுதலை கிடைத்ததற்கான உணர்வு.
"ம்மா திஸ் ஐஸ் அன்ஃபெயார் இதுக்கு எப்பவுமே நான் ஒத்துக்க மாட்டேன் நீங்களும் ஒத்துக்க கூடாது, கோர்ட்ல அவரா நானான்னு பாத்துடுவோம்"
ரதியோ, "யாருக்கு எத ப்ரூஃப் பண்ணனும்னு நினைக்கிற நரேன் நீ?" என்று ஒரு கேள்விதான்.
நரேன், "மா நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும் ஆனா இப்போ இதுக்கு நாமளும் ஒத்துழைச்சா அவரோட ஸ்டேட்மென்ட்க்கு ஒத்து போறது போல ஆகாதா? எதுக்கு தப்பே பண்ணாம உங்களுக்கு அப்படியொரு பட்டம்" என்றான்.
ரதியோ நிதானமாக "நான் என்ன சொல்லுவேன்ங்கிற வரத் தெரிஞ்ச உனக்கு, என் உணர்வுகள் புரியலையா நரேன்? எனக்குத் தேவை டிவோர்ஸ், ரெண்டு பக்கமும் சம்மதம்னா அது இன்னும் ஈஸியா கிடைக்கும்ங்கிறபோது ஏன் நாம எதிர்க்கணும், ஆமா அப்படித்தான்னு சொல்லிட்டு போறதுல என்ன வந்துட போகுது? அவங்க சொல்றதுனு உண்மையாகிட போகுதா?" என்ற தாயின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை தான் ஆனால் இதை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு ரதியை போல் அவனிடம் பக்குவம் இருக்கவில்லை.
"மா, நீ சொல்லுறது எல்லாமே ஓகே ஆனா இது வேணாம்மா, ப்ளீஸ் எனக்காக உனக்கு இது சாதாரணமா இருக்கலாம் ஆனா என்னால ஏத்துக்க முடியலமா, இந்தச் சமூகம் உன்ன தப்பா பாக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல"
அவன் பேச்சில் புன்னகைத்தை ரதிக்கு ஒரு மகனாய் அவன் உணர்வுகள் புரிந்தது, தாய்க்கான அவனது போராட்டம் அது.
"நான் இத்தனை நாளா கஷ்டப்படும்போது இதே சமூகம் எதுக்குமே வரல நரேன். இப்போவும் இத ரெண்டு நாள் பேசுவாங்க அப்பறம் அடுத்த விசயத்துக்குத் தாவிப் போய்டுவாங்க.. இதே நான் உத்தமினு நிரூபிச்சாலும், விவாகரத்து வாங்கிட்டேன் என்கிற ஒரு காரணத்துக்காக என்ன தப்பா பேசுறவங்க இருக்கத்தான் செய்வாங்க.. இங்க சரி தப்புங்கிறது அவங்க அவங்க நியாயத்தோட மாறுபாட்டுல இருக்கு, அவங்க நியாயத்துக்கு ஏத்தபடி நடந்தா நான் நல்லவ இல்லையா கெட்டவ அவ்வளவு தான் நரேன் இந்தச் சமூகம்" என்றார், அவர் பேச்சில் அத்தனை தெளிவு..
"ஓகே மா, ஒரு மகனா உங்ககிட்ட ஒரே ஒரு சான்ஸ் கேக்குறேன். இனிமேல் உங்க முடிவு எதுலயும் தலையிடமாட்டேன். இந்த ஒரு முறை நான் சொல்றத கேளுமா ப்ளீஸ், உனக்கு டிவோர்ஸ் நிச்சயம் கிடைக்கும் உன் மேல எந்தப் பிழையும் வராம இதுக்கு நான் கேரண்டி" என்று மகன் அவர் மீதுள்ள பாசத்தில் கேட்கையில் என்ன சொல்லிவிட முடியும்.
"மிஸ்டர் மோகனபிரதாப் ஒரு வக்கீலா நல்லா யோசிச்சு காய் நகர்த்தி இருக்காரு நரேன். நாம கேஸ் போட முதல் அவரே ஆரம்பிச்சிருக்காரு அதுவும் நாம எதிர்க்கிற போல, அவர் மேல பழி வரக்கூடாதுனு எந்த எல்லைக்கும் போவார்" என்று பெருமூச்சு ஒன்றை விட்டுத் தன்னை நிதானப்படுத்தியவர் "உன் விருப்பம் நரேன், வேற யாருக்காகவும் எந்தக் காரணத்துக்காகவும் இல்ல, உன் நிம்மதிக்காக நான் சம்மதிக்கிறேன்" என்றவர் புன்னகைத்தார்.
"ரொம்ப தேங்க்ஸ்மா.. இனி இந்த விஷயம் என் பொறுப்பு சரியா? நான் எல்லாம் பாத்துப்பேன்"
"சரிடா கண்ணா அதான் அம்மா உன் இஷ்டம்னு சொல்லிட்டேனே, இப்போ இத இன்னும் பேசப்போனா உனக்குத் தான் லேட்டாகும். நீ காலேஜ்க்கு போய் ஈவினிங் வந்ததும் மீதி பேசிக்கலாம்" என்று அவனை வழியனுப்பி வைத்தார் ரதி.
மருத்துவக்கல்லூரியில் இன்று ஒரு சிறப்பு விரிவுரை இருப்பதால் தயாராகி கீழே வந்த ரஞ்சிதனுக்கு, அவர்கள் பேசிய அனைத்தும் காதில் விழுந்திருக்க, ரதி பேச்சில் அத்தனை பிரமிப்பு அவனிடம்..
எத்தனை புரிதலான பேச்சு, எத்தனை தெளிவு. எது தன் தாயிடம் இல்லாமல் போனது என்று தினம் தினம் எண்ணித் தவிக்கிறானோ அது அத்தனையும் ரதியின் பேச்சில் அவனுக்குத் தெரிந்தது.
ரதி உள்ளே நுழைத்ததும் அவனும் கல்லூரிக்குச் சென்றிருந்தான். அவர்கள் குடி வந்து ஒரு வாரம் ஆகி இருந்தாலும், ரஞ்சனும் சரி நரேந்திரனும் சரி பெரிதாகப் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளவில்லை..
தனிமையையே பழகிய ரஞ்சிதனுக்கு சட்டென்று ஒட்ட முடியவில்லை என்றால், நரேந்திரனுக்கோ ரஞ்சிதன் மீதுள்ள மரியாதை சற்று தூர நிறுத்தியிருந்தது.
______________
அன்று கல்லூரி சென்ற நரேந்திரனுக்கு எதிலும் ஒன்ற முடியவில்லை.. அமைதியாக அங்கே ஒரு மரத்தின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்.
கடந்த சில நாட்களாக அவனிடம் இருந்த துள்ளல் அவனிடமிருந்து குறைந்ததை அக்ஷயா நன்கு உணர்ந்து தான் இருந்தாள், அவளிடம் ஏதேனும் வம்பு பண்ணலாம் நரேந்திரனால் இருக்கவே முடியாது. தினம் ஒரு முறையேனும் காதல் உரைக்கிறேன் பேர்வழியென அவளிடம் வாங்கிகட்டிகொள்ளாத நாட்களே இல்லை எனலாம்.
இத்தனைக்கும் அவளுக்கு அவன்மீது காதல் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். வெளிப்படையாகச் சொல்லாமல் அலைய விடுவதில் அவளுக்குச் சுவாரஷ்யம் என்றால், தெரிந்தும் அவள் பின்னே அலைவதில் அவனுக்கோ ரசனை.
வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான். புதிதாக வீடு தேடுகிறான் அதனால் அலைச்சல் என்பது தெரியும். வீடு கிடைத்து விட்டது என்று ஒரு வாரத்துக்கு முன்னர் அவனே வந்து சொல்லி இருக்க, இன்று மீண்டும் ஏன் இந்த மௌனம் என்பது தான் அவளுக்குப் புரியவில்லை.
அவனிடமே கேட்க எண்ணி, அவனைத் தேடித் திரிந்தவள் இறுதியில் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்திருந்தாள்.
"என்னாச்சு நரேன், எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்க, பிராக்டிகள்ஸ் கூட வரல. என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்க அவனிடம் மௌனம்.
அவளோ, அவன் கரத்தைப் பற்ற, அத்தனை நேரம் யோசனையில் மூழ்கியிருந்தவனோ அப்போது தான் சுயத்துக்கே வந்தான்.
"அக்ஷயா?" என்று கேள்வியோடு அவளை அழைக்க, அந்த அழைப்பிலேயே அவளுக்குப் புரிந்து போனது, ஏதோ இருக்கிறதென்பது.
"என்னாச்சு தீரா? ஏன் இப்படி உக்காந்திருக்க? ஏதாச்சும் ப்ரோப்லமா? உன் முகம் ஏன் இப்படி வாடிப்போயாருக்கு?" என்று ஒவ்வொரு கேள்வியாய் அடுக்கியவள், அவளது துப்பட்டாவினால் அவன் முகத்தைத் துடைத்துவிட்டாள்.
அவள் கரங்களைப் பற்றியவன் மேலோட்டமாக விடயத்தை உரைத்திருந்தான்.
அவன் அவ்வப்போது பேசுகையில் இவளிடம் எதையும் மறைப்பதில்லை. அதனால் ஏற்கனவே ஓரளவுக்கு இவளுக்கு அவர்கள் குடும்ப சூழல் தெரியும் தான். இப்போது இந்த விடயமும் தெரிய, அவளுக்கோ யோசனை.
"இதோ பாரு தீரா ஆன்டியோட எண்ணங்கள் சரிதான் அதுல எந்தப் பிழையும் நான் சொல்லவே மாட்டேன். அட் தி சேம் டைம் ஒரு மகனா உன்னோட ஸ்டாண்டும் ரொம்பவே சரி, எதையும் யோசிக்காத, அம்மாகிட்ட அவ்வளவு பேசி அனுமதி வாங்கிட்டு இங்க வந்து தனியா உக்காந்திருந்தா ஆச்சா? அடுத்தது என்னனு பார்க்க வேண்டாமா?" என்று ஆறுதலாய் பேசியவள் இறுதியில் அவனுக்கு ஒரு கொட்டும் வைத்திருந்தாள்.
"எனக்குப் புரியுது ஷாயா, ஆனா என்ன பண்ணனும்னு ஒரு ஐடியா வரமாட்டேங்கிது"
"இப்படியே விட்டத்தை பார்த்து உக்காந்தா ஐடியா வந்துடுமா? முதல்ல ஒரு வக்கீல் கிட்ட பேசி எல்லாம் கிளீயர் பண்ணிக்கணும், எனக்குத் தெரிஞ்சி வக்கீல் நோட்டீஸுக்கு நம்ம தரப்புல இருந்து ரெஸ்பான்ஸ் பண்ணலனா எப்படியும் தேர்ட்டி டேய்ஸ்ல அவங்க எப்படியும் மனு தாக்கல் பண்ணுவாங்க, சோ அப்போ நம்மளோட எதிர் வாதத்த ஸ்ட்ரோங்கா கொடுத்தா சரி.. முதல்ல ஸ்ட்ரோங்கான ஒரு வக்கீல பிடிப்போம்" என்க, அம்மாவிற்கு நியாயம் செய்ய வழி கிடைத்து விட்டதில் நரேந்திரன் முகத்தில் பழைய புன்னகை மீண்டிருந்தது.
"ஹேய் ஷாயாக்குட்டி சூப்பர்டி, உனக்குள்ள இவ்வளவு அறிவ கண்டு நான் வியக்கேன். நீ எப்போடி லா படிச்ச?" என்று, பழைய துள்ளலில் அவளை வார, அதற்கு அவளது முறைப்பைப் பரிசாய்ப் பெற்றுக் கொண்டான்.
"ஹெலோ, நான் என்ன உன்ன மாதிரியா? நாங்க அறிவாளியாக்கும். வீட்ல ஒரு ஜட்ஜ் அண்ட் ஒரு கிரிமினல் லாயர் கூடவே ஒரு ஏஎஸ்பி வெச்சிட்டு ஓரளவுக்கு கூடச் சட்டம் தெரியலனா தான் அதிசயம்" என்று முறுக்கிக் கொண்டாள்.
"என் அப்பாவும் தான் லாயர் நான் கத்துக்கலையே?" என்று அதிமுக்கிய கேள்வியை அவளிடம் கேட்டு மொக்கை வாங்கி இருந்தான் நரேன்.
"அதெல்லாம் அறிவாளிங்க பண்ணுற வேல ராஜா? உன்ன போலப் பேக்கு எல்லாம் பண்ண மாட்டாங்க" என்க அவளது கழுத்தை முழங்கைகளுக்குள் அவளுக்கு வலிக்காததை போல் பின்னிருந்து சிறை செய்தவன் "என்னையே கலாய்கிறியாடி? சிங்கம் கொஞ்சம் அசந்தா இந்தச் சுண்டெலி தொல்ல தாங்க முடியலப்பா" என்றவன் அவள் தலையில் கொட்டியிருந்தான்.
அவளும் "வலிக்கலையே" என்று அவன் பிடியிலிருந்து விடுபடப் போராட, அவளைப் புன்னகையுடன் விட்டவனோ யோசனையில் ஆழ்ந்தான்.
"என்னடா யோசனை?"
"இல்லடி என் அப்பா தில்லுமுள்ளு வேலைல எல்லாம் ரொம்ப ஷார்ப், சட்டத்துல உள்ள ஓட்ட எல்லாம் நல்லா தெரிஞ்சி வெச்சிருக்காரு, அவரைப் பீட் பண்ண சரியான வக்கீல் பிடிக்கணும். அதத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்றவன் ஏதோ யோசனை வந்தவனாகத் திரும்பிஅவளைப் பார்க்க, அவளுக்கும் சரியாக அதே எண்ணம் தோன்றியிருந்தது.
"உங்க அக்கா"
"ரஞ்சினி"
என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்லியிருக்க, அக்ஷயாவோ "பேர்பெக்ட் சாய்ஸ் தீரா, ரஞ்சனி இதெல்லாம் அசால்ட்டா ஹெண்டில் பண்ணுவா? ஆனா அதுல ஒரு சிக்கல்" என்க, நரேந்திரனோ "என்னடி?" என்று கேட்டான்.
"இன்னும் த்ரீ டேய்ஸ்ல அவளுக்குக் கல்யாணம். எப்படியும் வன் வீக்ல பிரீ ஆகிடுவா? அப்பறம் பேசுறதுனா இது ஓகே தான்"
"ஓகே அதுல பிரச்சனை இல்லை, நீ இத அவங்க கிட்ட பேசி ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணு நான் பேசுறேன்" என்க அவளும் சம்மதமாகத் தலையசைத்தாள்.
கானல் தொடரும்.
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
Last edited: