காதல் 09
இதோ நள்ளிரவையும் தாண்டியிருந்தது நேரம் ஆனால் கோகிலாவுக்கும் சரி பாலச்சந்திரனுக்கும் சரி, தூக்கம் என்பது கண்ணை அண்டி இருக்கவில்லை.
மகளைக் கண்டுகொண்ட ஆனந்தமா? இல்லை இத்தனை நாள் பிரிந்த சோகமா? இல்லை எதுவும் பேச முடியவில்லையே என்ற கவலையா? இப்படி இன்னதென்று பிரிக்க முடியாத அளவுக்குப் பல உணர்வுகள் அவர்களை அலைகளித்திருக்க, எங்கணம் தூக்கம் வரும்.
எப்போதும் எழும் நேரம் நெருங்கி இருக்க வெறுமனே சாய்ந்திருந்தவர் எழுந்தமர, "இன்னும் நேரமிருக்கே கோகிலா, இந்நேரதுக்கே கீழ போய் என்ன செய்யப்போற உக்காரு" என்ற பாலச்ந்திரனும் எழுந்தமர்ந்தார்.
"இங்கயே இருந்தா ரதி நினைப்பாவே இருக்குங்க, கீழ போய் ஏதாச்சும் வேல பார்த்தாளாவது மனசு மாறுதான்னு பாப்போம்" என்ற மனைவியின் கையைப் பற்றிக்கொண்ட பாலச்சந்திரனோ "இவ்வளவு நாள் பார்க்க முடியலயேனு கவலை பட்டோம் இப்போ இங்க பார்க்கிற தூரத்துல தான இருக்கா? கவலை படாத எல்லாம் நல்லதா நடக்கும்" என்றார் நம்பிக்கையுடன், இரவு அவர் தெரிந்து கொண்ட விடயம் அவரைப் புரட்டிப் போட்டிருந்தாலும் அவர் அனுபவம் அதனை நல்ல முறையில் சிந்திக்க உதவியது.
ரதி அங்கே மகனுடன் தனியே வீடெடுத்துத் தங்கி இருப்பது இரவு ரஞ்சிதனின் வீட்டுக்குச் சென்றபோது தெரிந்திருந்தது. அப்போதே தனக்கு தெரிந்த வழக்கறிஞர் வட்டத்தில் விசாரித்திருக்க ரதி பிரிந்து வந்திருப்பதும், மோகன் விவாகரத்து வழக்கு தொடுக்கப் போவதும் தெரிந்தது.
இப்போதுவரை மனைவிக்குத் தெரியப்படுத்தவில்லை, அதனைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவர் மனைவிக்குத் தைரியம் இல்லை என்பது அவரறிந்தது தானே! மகனுக்கு மட்டும் தெரியப்படுத்தி இருந்தார்.
நடப்பது எதுவோ அது மகளுக்கு நன்மையாகவே அமையட்டும் என்பதே அவரது இப்போதைய வேண்டுதலும் கூட..
கோகிலாவோ "அவ நம்ம கூடப் பேசவே இல்லையேங்க" என்று கவலையுடன் முடிக்க, பாலசந்திரனும் மனைவியின் உணர்வுகள் புரிந்தவராக "பேசுவா கோகிலா, நம்ம பொண்ணு நம்மகிட்ட பேசாம இருப்பாளா, நாம அவளைப் பார்த்து எப்படி ஆச்சரியப்பட்டு நின்னோமோ அவளுக்கும் அப்படி தான இருக்கும்" என்றார்.
"புரியுதுங்க, நம்ம ரஞ்சி மாப்பிள்ளை அவளை அம்மா ஸ்தானத்துல கொண்டு வந்து நிறுத்தினப்போ, என் கண்ணுக்குள்ள பதினேழு வயசு ரதி தாங்கத் தெரிஞ்சா... ரொம்ப மாறிட்டால்ல, பார்வைல இருந்த குழந்தை தனம் இப்போ இல்லை, ஒரு கம்பீரம் தெரியுது" என்று மகளைப் பார்த்த அந்த நொடிக்கே சென்றுவிட்டார் அவர்.
மனைவியின் கூற்றில் புன்னகைத்த பாலச்சந்திரனோ "அவ இப்போ இருபத்திரெண்டு வயசு பையனுக்கு அம்மா கோகிலா, எப்படி குழந்ததனம் இருக்கும். அதோட அவ என் பொண்ணுல எப்படி கம்பீரம் இல்லாம இருக்கும்" என்று மீசையை முறுக்கி விட்டபடி சொல்ல, அவர் செய்கையில் மனைவியாகப்பட்டவருக்கு புன்னகையுடன் மனது நிறைந்து போனது.
இனி மகளுடன் நேரம் செலவிடும் காலம் நெருங்கிவிட்டது என்று அந்தத் தாய் உள்ளம் மகிழவெ செய்தது.
"ரொம்பத்தான், அவ எனக்கும் பொண்ணு தான்" என்று அவரும் சொல்ல, இருவரும் மனதார புன்னகைத்தனர்.
"நம்ம பேரன பாத்தியா கோகிலா, அப்படியே என்னப்போலத் தான் இருந்தான்ல, நம்ம அக்ஷு கூடத்தான் படிக்கிறானாம். உன்னப்போல டாக்டருக்குத் தான் பாடிக்கிறான் பாத்தியா?"
"ஆமாங்க, சின்ன வயசுல நீங்க எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கான், அவன பிறக்கும்போது கைல ஏந்தத் தான் நமக்குக் கொடுத்து வைக்கலயே!"
"இப்போ என்ன கூப்பிட்டு வெச்சு ஆச தீரக் கொஞ்சிக்கலாம் சரியா?" என்று மனைவுக்கு சொல்வது போலத் தனக்கும் சொல்லிக்கொண்டார். அவருக்கும் மனதில் அந்த ஆசை இருக்கவே செய்தது.
இவர்கள் இப்படி என்றால் இரவு முழுவதும் மனைவியிடம் தன் கவலையைப் புலம்பி ரவிவர்மன் தூங்கவே விடியல் நெருங்கி இருந்தது.
அவர் மனதில் சொல்லொனா வலி இருக்கவே செய்தது. ஒரு அண்ணனாய் தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து தவறிவிட்டேனேயென அத்தனை சங்கடம் அவருக்கு. கூடவே ஏதும் அறியாத குழந்தையின் மனதைக் கலைத்தது மட்டுமல்லாமல் திருமணம் என்ற பெயரில் காயப்படுத்தி இதோ பிரிவுவரை கொண்டு வந்த மோகன் மீது தான் அத்தனை கோபமும் திரும்பியிருந்தது.
அந்த வீட்டில் அன்றைய இரவு நிம்மதியாகத் தூங்கிய ஒரே ஜீவன் அக்ஷயா மட்டும் தான். சில ரணங்கள் தெரியாமல் இருப்பதே மேல்...
_______________
அடுத்த நாள் விடியல், எப்போதும் போல் யாருக்கும் காத்திருக்காமல் புலர்ந்திருந்தது.
முதலில் விழித்துக்கொண்டது என்னவோ ரஞ்சினி தான். கண்களைத் திறக்க, தன்னை அணைத்தபடி தூங்கும் கணவனின் முகமே தெரிந்தது.
நேரத்தைப் பார்க்க அதுவோ காலை ஆறைக் காட்டியது.
'என்னாது ஆறுக்கே எழுந்தாச்சு, ரஞ்சி வர வர நீ தேறிட்ட போலயே! உன் அம்மாக்கு மட்டும் இது தெரிஞ்சிச்சுனு மட்டும் வெச்சிக்கோ ஊருக்கே பாயசம் பண்ணி கொண்டாடிருவாங்க' என்று எண்ணியபடியே அவனணைப்பிலிருந்து எழுந்தவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் கண்களைத் திறந்த ரஞ்சிதனுக்கு நேற்றைய நினைவுகள் மனதை சுகமாய் வருட, அருகில் கைகளைத் துளாவி மனைவியைத் தேடியவனுக்கு அவள் அங்கில்லை என்பது புரிய எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் குளித்து வெளியே வந்தான்.
அங்கே சமையலறையில் சத்தம் கேட்க, உள்ளே நுழைந்தவனோ பின்னிருந்தே அவளை அணைத்துக் கொள்ள, "எழுந்துடீங்களா, ஃகாபீயா? டீயா?" என்று கேட்க, அவனோ அவள் காதில் "எனக்கு என்னோட பெப்பர் மின்ட் தான் சாப்பிடணும்" என்றதும் அவளுக்குப் புரிந்தது அவளைத் தான் சொல்கிறான் என்பது, இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை.
"ஆஹான், இப்படி எங்கிட்ட இல்லாததை எல்லாம் கேட்டா எப்படி தர்றதாம்?" என்க, அவனோ "இதோ என் கைக்குள்ள இருக்கே என்னோட மின்ட் மிட்டாய், டேஸ்ட் பண்ண நான் ரெடி. என் மிட்டாய்க்கு ரெடியான்னு தெரியணுமே?" காரங்களோ அவளிடையில் அதன் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்த, அவன் கரத்தை இடையை விட்டுப் பிரித்தவள், அவன் பக்கம் திரும்பி, அவன் கையில் ஃகாபீயை வைத்திருந்தாள்.
"ஒழுங்கா இத குடிங்க, இதோ தோசை ஊத்திட்டேன் ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என்றாள்.
அவனோ அவள் கொடுத்த ஃகாபியை மிடரு உள்ளிழுத்த படி, "அப்போ சாப்பிட்டு முடிச்சதும் மிட்டாய் டேஸ்ட் பண்ணலாம்னு சொல்ல வர, எனக்கு ஓகே தான்ப்பா" என்றவன் அடுத்த மிடறை அவளைப் பார்த்தபடி விழுங்க, இவளுக்கோ வெட்கம் தாங்காமல் அடுப்பின் பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அப்படியே புது தம்பதிகளுக்கே உரிய செல்லச் சேட்டைகளுடன் அவர்கள் காலை உணவை முடித்திருக்க, ரஞ்சினிக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
அவளோ அவர்களுடன் ஏதோ பலவருடம் பிரிந்திருந்தவள் போலப் பேசத் தொடங்க, ரஞ்சிதனோ சிரிப்புடன் பால்கனி பக்கம் சென்று நின்றுகொண்டான்.
அவன் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தது. அத்தனை மகிழ்ச்சி உள்ளுக்குள் ஊற்றெடுக்க, முன்னே இருந்த கம்பியை இறுகப் பற்றியபடி வானத்தை அண்ணார்ந்து பார்த்து நின்றவன் "பாட்னர் இனிமேல் என் தொல்லைல இருந்து உனக்குக் கொஞ்சம் விடுதலை, இத்தன நாளா என் புலம்பல் எல்லாம் கேட்டுச் சகிக்க முடியாம கஷ்டப்பட்ட உன் இடத்துக்கு என் பொண்டாட்டி என் மின்ட் வந்துட்டா பாட்னர், உன் காதுல இனி இரத்தம் வர்ற அளவுக்குப் புலம்பமாட்டேன்" என்று அவனது நண்பனைப் பார்த்துப் பேச, வானமோ மேகம் சூழ மழைக்கு தயாராகியது.
அது என்னவோ வானுக்கும் அவனுக்கும் அப்படியொரு உறவு, அவன் கவலையாய் பேசினால் அதுவும் கருமேகங்களை ஆடையாய் சூடிக்கொள்ளும், புன்னகையுடன் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டால் பளிச்சிடும் நீல வர்ணத்துடன் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றும். இதோ இப்போது உன் இடத்துக்கு அவள் என்று சொல்லும்போது பொறாமைப்படும் காதலியைப் போல் அழுகைக்கு தயாராகும் வானம் என ஒவ்வொரு உணர்வுகளிலும் அவன் வாழ்க்கையில் தனிமையை போக்கியதில் அவனது பாட்னருக்கு பெரும் பங்கு உள்ளது எனலாம்.
அந்தப் பறந்து விரிந்த வானம் தான் அவன் உணர்வுகள் அத்தனையையும் உள்வாங்கிக் கொள்ளும் நண்பன் என்பது அவனது பெரிய நம்பிக்கை.
அது தானே இயற்கை நாம் கொடுப்பதை திருப்பி அன்பாய் நம்மிடம் சேர்க்கும் விந்தை அது. பார்க்கும் கண்ணோடத்தில் தான் இருக்கிறது எல்லாம். அவன் நம்பிக்கை அப்படி இருக்க, அதுவும் அவனுக்குக் கைக்கொடுப்பது போலவே ஒரு உணர்வு..
"ஏன் இங்க வந்துடீங்க? யார்கூட பேசிட்டு இருந்தீங்க?" என்று கேட்டவள் அவனைப் பின்னிருந்து அணைக்க, அவளை இழுத்து தன் முன்னே நிறுத்திக் கரங்களால் அணையிட்டு நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தவன் "மேடம் ரொம்ப பிசியா பேசிட்டு இருந்தீங்களா? அதான் என் பாட்னர் அந்த வானத்துகிட்ட உன்னப் பத்தி கம்பளைண்ட் பண்ணிட்டு இருந்தேன். கூடவே அவ இடத்துக்கு நீ வந்துட்டன்னு சொல்லிட்டு இருந்தேன்" என்றான்.
"ஆஹான்! அதுக்கு என்ன சொன்னாங்க உங்க பாட்னர்?" என்று கேட்டவள் அவன் கழுத்தில் கரங்களை மாலையாக்க, அவனோ புன்னகையுடன் அவளை முன்புறம் பார்க்கும் படி திருப்பித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் "அதோ பாரு, என் பாட்னர் கோச்சிகிட்டா. அவ இடத்துக்கு நீ வந்துட்டல்ல அதான், அழ ரெடி ஆகிட்டா" என்று தன் வலது கரத்துடன் அவளது வலது கரத்தைப் பிணைத்தபடி உயர்த்தி வானத்தைக் காட்டினான்.
அவனது உணர்வுகள் தெள்ளத் தெளிவாய் அவளுக்குப் புரியவே செய்தது. கூடவே தனிமையை எப்படி கையாண்டிருக்கிறான் என்பதும் புரிந்தது.
"ஹெலோ ஸ்கை மேடம் இனிமேல் என் புருசனுக்கு எல்லாமே நான் தான். குறுக்கல இந்தக் கௌசிக் வந்தான்னு வந்தீங்க கைமா தான்" என்று முடிக்கவில்லை வானில் பெரும் சத்தத்துடன் இடி இடித்தது.
ரஞ்சினிக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் தான். அது இயற்கையாய் நடக்கும் நிகழ்வு என அறிவு சொன்னாலும் உள்ளம் தங்கள் பேச்சின் வெளிப்பாடு என்று தான் நம்பியது.
"பாத்தியா என் பாட்னருக்கு கோபம் வந்துடிச்சு" என்று ரஞ்சினியிடம் சொன்னவன், மேலே பார்த்தவாறு "பாவம் பாட்னர் மன்னிச்சு விட்டுடலாம், போனா போகுதுனு உன் இடத்துல பாதி அவளுக்குக் கொடுத்துடலாம்" என்க இடிச்சத்தம் குறைந்து மெல்ல மழைத்துளிகள் பொழியத் தொடங்கியது.
"ரொம்ப தான் லவ்வு, அழ எல்லாம் செய்யிறாளே, சக்காளத்தி சண்டை போடணுமோ" என்க, அவனோ சட்டென்று சிரித்து விட, அவளும் அவன் புன்னகையில் இணைந்து கொண்டாள்.
நேரம் நண்பகலை தாண்டியிருந்தது ஆனால் வானமோ இருள் சூழ்ந்து மழையுடன் பார்க்கக் கிட்டத்தட்ட மாலை போலத்தான் காட்சியளித்தது, சாரலாய் தூரிய மழை சற்று வலுக்க, அவளைக் கையில் ஏந்தியவன் அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான்.
அவளை அங்கிருக்கும் ஊஞ்சல் ஒன்றில் அமர வைத்தவன், அவள் மடியில் படுத்துக்கொள்ள, அவளோ, அவனைக் குழந்தையாய் மடி தாங்கித் தலையைக் கோதிக்கொடுத்தாள்.
"ரொம்ப ஹாப்பியா இருக்கேன் மின்ட், நீ எனக்கே எனக்கா என் லைப்ல வேணும் என்கிறது என்னோட அஞ்சு வருஷ தவம். அது இப்போ நிறைவேறி இருக்குனு சொல்றப்போ அத எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணனும்னு கூடத் தெரியல" என்றான் அவள் கண்ணோடு கண் கலக்க விட்டபடி..
அவளோ எதுவும் பேசவில்லை அவன் மனதில் உள்ள அத்தனையும் கொட்டட்டும் என்று அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
மீண்டும் அவனே தொடர்ந்தான் "எனக்கு அப்போ பதினாறு வயசு காசுக்குக் கஷ்டமில்ல தாத்தா பாட்டி இறந்த பிறகு அவங்க சொத்து அம்மாக்கு தான் சேர்ந்தசிச்சு.. அப்போ அம்மாவும் இல்லை, ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தா எப்படியும் தனிமை தான். அதனாலயே அங்க என் ஸ்கூல் பக்கத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாலு அண்ணா கடைல சும்மா அவருக்கு ஒத்தாசைக்கு வேலை பார்த்தேன். அப்போ தான் உன்ன முதல் முதலா அப்போ தான் பார்த்தேன்" என்று அவள் முகத்தைப் பார்த்தான். அவளுக்கு ஏதேனும் ஞாபகம் வருகிறதா என, அவளும் அவன் சொன்னவற்றை அவளது நினைவடுக்கில் தேட, அந்த ஞாபகம் இருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை என்றதும் உதட்டைப் பிதுக்கினாள் தெரியாது என்பது போல..
அவனுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அவளது நிலையும் புரிந்ததில் கதையை மீண்டும் தொடர்ந்தான். "அங்க பக்கத்துல உங்களுக்குக் கணக்கு பாட ஈவினிங் கிளாஸ் நடக்கும்" என்க அவளோ ஞாபகம் வந்ததில் "ஜீவன் சார்?" என்று கேள்வியாக அவன் முகம் பார்த்ததில், அவனும் புன்னகையுடன் "ஆமா அவருதான், அவர் பாடம் முடிஞ்சதும் நீயும் உன் ஃபிரண்ஸும் அங்க பாலு அண்ணா கடைக்குத் தான் வருவீங்க, எல்லாரும் எதை எதையோ வாங்குனாலும் உன்னோட கண்கள் அந்தப் பெப்பர் மின்ட் மிட்டாய்ல தான் இருக்கும், அப்போவே உன்ன சுவரஷ்யமா ஒரு பார்வை பார்ப்பேன், ஆனா அது காதல் அப்படினு எல்லாம் யோசிக்கல, டெய்லி அந்தக் கடைல பெப்பர் மின்ட் மிட்டாய்காக நீயும் என்னோட இந்தப் பெப்பர் மிட்டாய்காக நானும் சந்திச்சோம்.. இப்படியே போய்ட்டிருந்த நேரம் தான் திடீர்னு உன்ன காணோம், நானும் எதிர் பார்த்துட்டே இருப்பேன். ஆனா நீ வரல" என்றவனின் குரல் அந்த இறுதி வரியில் காத்திருப்பின் வலியைக் காட்டியது.
"ஆமா அந்த நேரம் நான் வேற ஸ்கூல் மாறிட்டேன். அதனால ஜீவன் சார் கிளாஸ் வரல" என்று, அன்று அவள் காணாமல் போனதற்காகக் காரணத்தை இன்று அவனிடம் கூறினாள்.
அவனோ "ம்ம்ம் அப்பறமா தெரிஞ்சிகிட்டேன்" என்று எழுந்து அவளைக் கையில் ஏந்தி கொண்டவன், மெத்தையை நோக்கி நடந்தான்.
அவளோ கேள்வியாக அவனைப் பார்க்க, "அந்த ஊஞ்சலயே ரொம்ப நேரமா உக்காந்திருந்தா கால் வலிக்கும்ல, இங்க படுத்துக்கலாம்" என்றவன் அவளைப் படுக்க வைத்து அவனும் அருகில் படுத்துக்கொள்ள, அவளோ தலையை அவன் நெஞ்சுக்குள் இடம் மாற்றியிருந்தாள்.
அந்த நிலையிலும் தன்னை பற்றி யோசிப்பவனை யாருக்குத் தான் பிடிக்காது. அவனை அத்தனை பிடித்ததுத் தொலைத்தது, இத்தனை வருடம் ஒருத்தனின் மனதில் நீங்காமல் குடியிருந்திருகிறோம் என்ற எண்ணமே அவ்வளவு தித்தித்தது.
எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தவளோ "மீதிய சொல்லுங்க" என்க, அவனும் புன்னகையுடன் ஆரம்பித்தான்.
"அதுக்கப்பறம் அடிக்கடி உன் ஞாபகம் வந்துட்டே இருக்கும் ஆனா உன் வீடு நீ யாரு எதுவுமே தெரியாம எப்படி உன்ன கண்டு பிடிக்கிறது, இப்படியே போக ஒருநாள் உன் ஃபிரண்ட்கிட்ட, சும்மா கடைக்கு வரறப்போ பாலு அண்ணாவ வெச்சு விசாரிச்சதுல தான் தெரிஞ்சிது நீ வேற ஸ்கூல் போய்ட்டனு. எனக்கு என்ன செய்றதுனு தெரியல, அப்பப்போ உன் நினைப்பு வர்றப்போலாம் ஒரு பெப்பர் மின்ட் மிட்டாய் வாங்கி வெச்சிப்பேன். அப்படி வாங்கினது தான் நேத்து நைட் நீ பார்த்த மிட்டாய். அது இந்த வருஷம் வாங்குனது மட்டும் தான். ஒவ்வொரு வருஷம் வாங்குறத அந்த இயர் லாஸ்ட்லா இங்க பக்கத்துல உள்ள குழந்தைங்களுக்கு கொடுத்துடுவேன். ஒவ்வொரு வருஷமும் எப்பயாவது உங்கிட்ட கொடுக்கணும்னு காத்திருப்பேன் ஆனா இந்த இயர் தான் அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு" என்றவனின் கூற்றில் ரஞ்சினி தான் பேசாமடந்தை ஆனாள்.
"அதுக்கப்பறம் உன்ன நான் பார்க்கவே இல்ல, என் லைஃபும் படிப்பு அது இதுனு போயிடிச்சு, இப்படியே அஞ்சு வருஷம் கடந்து ஒருநாள் ட்ராஃபிக்ல ஒரு ஆக்ஷிடண்ட்ல தான் உன்னை மறுபடியும் பார்த்தேன். உன்னோட இந்தக் கண்கள் நீதான்னு எனக்குக் காட்டி கொடுத்திச்சு.. அன்னைக்கு உன்ன பார்த்த அந்த நொடி டேய் மடையா உன் காதல் இங்க இருக்காடானு என் மனசு என்க்கு அடிச்சு புரிய வெச்சிச்சு.. அன்னைக்கு உன் கூட வந்த பொண்ணு ஒருத்திக்கு நல்ல காயம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற அவசரத்துல நீ உன்னோட துப்பட்டாவையும் உன் காலேஜ் ஐடி கார்டையும் மறந்து விட்டுட்டு போய்ட்ட, அது ரெண்டும் இப்போ மின்ட் மிட்டாய்களோடு துணையா அந்தப் பெட்டிக்குள்ள இருக்கு" என்று கண் சிமிட்டி சிரித்தான்.
ரஞ்சினிக்கு காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவது எவ்வளவு இன்பம் என்பதை நொடிக்கொரு முறை உணர்த்திக் கொண்டே தான் இருந்தான்.
"அன்னைக்கு என்னோட நல்ல நேரம்னு தான் சொல்லணும், உன் ஐடி கார்ட் பார்த்து உன் நேம் அன்ட் காலேஜ் கண்டு பிடிச்சேன். அத வெச்சு உன் வீடு வரக் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா எனக்குள்ள ஒரு தயக்கம், என் அம்மா காதலால அவங்க உயிர விடுற அளவுக்குக் கூடப் போனாங்க அது என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருந்திச்சு, காதலன்னு இல்லாம என் மனைவியா உங்கிட்ட இதெல்லாம் சொல்லணும்னு அப்போ முடிவு பண்ணுனேன். அதுக்கு முதல்ல என் படிப்ப முடிச்சி வேலை எடுக்கணும்னு காத்திருந்தேன். அப்படியே வேலை கிடைக்கிறதுகான நாளும் வந்திச்சு, அன்னைக்கு அப்பொய்ன்மெண்ட்ட கைல எடுத்திட்டு உங்க அப்பாவ தான் தேடி போனேன்" என்க அவளோ, அவனை இடையிட்டு "அப்பாவா? அப்பாக்கு தெரியுமா உங்க காதல்?" என்று சந்தேகமாகக் கேட்டாள்.
அவனும் புன்னகையுடன் "ம்ம்ம் ஆமா எல்லாமே சொன்னேன், அவருக்கு முதல்ல நம்பிக்கை இல்ல, என்ன அவொய்ட் பண்ணினாரு, நானும் விடவே இல்லை ஒரு வருசமா அவர்கிட்ட என் காதலை புரிய வைக்க ட்ரை பண்ணேன். அட் லாஸ்ட் அவரு என்ன கூப்பிட்டு பேசினாரு.. அவர் தங்கச்சி விஷயத்துல காதல் மேல நம்பிக்கை இல்லைனு எல்லா விஷயமும் சொன்னாரு, கூடவே என் மேல நம்பிக்கை இருக்குனும் சொன்னாரு. அந்த நொடி தான் நான் மறுபடியும் பொறந்தேன்னு கூடச் சொல்லலாம் அவ்வளவு ஹாப்பி" என்றவன் முகத்தில் இப்போதும் அந்த நொடிக்கான மகிழ்ச்சி இருந்தது.
"அப்போ இது ஆரேன்ஞ் மேரேஜ் இல்லையா?" என்று சந்தேகமாய் கேட்டவள் மனதில் இவனது இந்தக் காதலை பெற, தான் அப்படி என்ன செய்து விட்டோம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை..
"ரொம்ப லேட்டா கேட்டுட்ட செல்லம். இது பியோர்லி வன் சைட் லவ் மேரேஜ்" என்று கெத்தாய் சொல்ல, அவளோ அவனைக் கலாய்க்க எண்ணி "அதுசரி உலகத்துலேயே காதலிச்ச பொண்ணு பின்னால சுத்தாம அவ அப்பா பின்னால சுத்தி லவ் சக்ஸஸ் பண்ணின ஆள் நீங்களா தான் இருப்பீங்க" என்றாள்.
"யார் பின்னால சுத்துனா என்ன மின்ட். இப்போ இப்படி என் நெஞ்சுல நீ படுத்திருக்குறது போதாதா? உன் நம்பிக்கையைவிட உன் பேரண்ட்ஸோட நம்பிக்கை ரொம்ப முக்கியம், அத்தனை நாள் உன்னை வளர்த்து, என் கைல கொடுக்குறப்போ மனசு நிறைஞ்சி கொடுக்கணும். நானும் அதுக்கு உண்மையா இருக்கனும்"
"என் அப்பா மேல உள்ள நம்பிக்கைல யாரை பத்தியும் கவலை படாம யாருக்கும் சொல்லாம அவர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவர் மேல அப்படியொரு நம்பிக்கை இவர்தான் புருஷன்னு அவங்க சொல்லிகிட்டது இல்லை என்னையும் அவர்தான் அப்பான்னு சொல்ல விட்டாதில்லை, அப்படிபட்ட என் அம்மாக்கு அவரு பண்ண தப்புல என் அம்மாவும் சரி என் தாத்தா பாட்டியும் சரி பட்ட கஷ்டத்தைப் பார்த்து வளந்தவன் மின்ட் நான். அப்போ அதே தப்ப நான் பண்ணாம இருக்கணும்ல" என்று முடித்திருந்தான்.