• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் - 32

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur
அத்தியாயம் - 32


32
“ஏய் கிழவி.. இப்போ எதுக்கு வந்ததும் வராததுமா உக்காந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்க..” என முத்துசாமி மனைவியை அதட்ட,
“எப்ப பார்த்தாலும் என்னையவே எதாச்சும் ஏசிக்கிட்டு இருக்காட்டி, மூஞ்ச மூனு நீளத்துக்கு தூக்கிட்டு திரியிறவக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே, நானுனாத்தான் உங்களுக்கு தொக்கா போயிட்டே..” எனக் கணவரை குருவம்மா அதட்ட

“அத உம் பேரங்கூட சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் செய்யும் போது யோசிச்சிருக்கனும், இப்போ வந்து குத்துதே குடையுதேன்னு ஒப்பாரி வச்சா யார் உனக்கு உதவி செய்வா.. நானெல்லாம் இதுல தலையவே கொடுக்க மாட்டேன், நீயாச்சு உம்பேரனாச்சு. நீயேதான் அவக்கிட்ட பேசனும்…” என முத்துச்சாமி அத்தோடு பேச்சை முடித்துவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் நுழைந்ததுமே மாமியாரின் நாடகத்தைக் கண்டு ரம்யாவிற்குச் சிரிப்பு வந்தாலும், இது எதையும் கண்டும் காணாமல் அவரும் அறைக்குள் நுழைந்துவிட்டார். பாண்டியனோ அவர்களை இறக்கி விட்டதோடு சரி, வேலையிருக்கிறது என்று அப்படியே ஸ்டேசனுக்குச் சென்றுவிட, தன் அப்பத்தாவை முறைத்தபடி அறைக்குள் சென்ற ஆரணியோ அங்கிருந்த ஆதியின் உடமைகளைப் பார்த்து ‘இவன் இங்கையா இருந்தான்’ எனப் பல்லைக் கடித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அப்போது உள்ளே வந்த ஆதித்யன் ஹாலில் தனியாக சோகமே உருவாக அமர்ந்திருந்த தன் அம்மாச்சியைப் பார்த்து, “என்ன அம்மாச்சி.. உடம்பு சரியில்லையா..?” எனப் பதட்டமாகக் கேட்க

அவனைப் பார்த்ததும் “எய்யா ராசா வந்துட்டியா… எப்படி இருக்கய்யா.. என்ன இளைச்சுப் போய்ட்ட.. கருத்துப் போயிட்ட, அந்த ராங்கி உனக்கு சோறு போடுறாளா இல்லையா..” எனவும்,

“அம்மாச்சி நான் என்ன கேட்டேன், நீங்க என்ன சொல்றீங்க. ஏன் இப்படி சோகமாக இருக்கீங்கன்னு கேட்டேன்..” எனவும்,

“அத ஏன் கேட்குற ராசா.. இந்த ஆரா புள்ள எங்கூட சண்ட போட்டுட்டு பேசமாட்டேங்குறாய்யா, நானும் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் கேட்கவே இல்லைய்யா… உங்க தாத்தனும், மாமனும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, என்னையவே ஏசிட்டு இருக்காங்க..” எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, குருவம்மாவின் இந்த பாவனையில் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது ஆதித்யனுக்கு.

ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், “உங்களுக்குமா அம்மாச்சி, எனக்கும் அதேதான். எங்கிட்டயும் பேசுறதே இல்ல. கட்டிக்கப் போறவனு எனக்கு மரியாதையே தர்ரதில்ல அம்மாச்சி, இப்படியே இருந்தா, அப்புறம் நானும் முறுக்கிக்கிட்டுத் தான் போகனும். ஏதோ நீங்க சொன்னீங்கன்னுதான் அவள சமாதானம் செய்ய, என் வேலையெல்லாம் விட்டுட்டு இங்க வந்தேன். நான் அவ பின்னாடி அலைஞ்சாலும், உங்க பேத்தி என்னன்னா ரொம்பத்தான் பிகு பன்றா..” என ஆதித்யனும் அவன் பங்குக்கு புலம்ப,

“திமிரு ராசா அவளுக்கு, அப்பனும் தாத்தனும், இப்ப உங்கப்பனும் ஆத்தாளும் சேர்ந்து ரொம்ப செல்லங் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்கய்யா.. அதான் கொண்டையை இங்குட்டும், அங்குட்டும் சிலுப்பிக்கிட்டு அலையிறா ராசா.. ஒன்னு பண்ணலாம். பேசாம உங்க தாத்தன் சொன்ன போல, உனக்கு வெளியே பொண்ணு பார்த்தா என்ன.? உனக்கு என்னக் கொறன்னு இவக்கிட்ட கெஞ்சிட்டு கிடக்குறோம்... பேசாம உனக்கு வேற பார்க்கலாம், அப்போதான் அந்த ராங்கிக்கு திமிரு கொறையும்..” என குருவம்மா பேச,

“அதெப்படி அம்மாச்சி சரியா வரும்.. நீயே சொல்லு.. உங்க போலீஸ் மகன் சும்மா இருப்பாரா.. என்னைய பிடிச்சு அவங்க மகளுக்கு கட்டி வச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாரு…” என சோகமே உருவாக சொல்ல, ஆராவின் அறையில் இருந்து, ஆதியை நோக்கி பறந்து வந்து விழுந்தது ஒரு சென்ட் பாட்டில்.

அதில் பட்டென்று தங்கள் பேச்சை நிறுத்தி அந்தப் பக்கம் பார்க்க, இரண்டு கைகளிலும் சீப்பையும், பவுடர் டப்பாவையும் வைத்துக் கொண்டு, அவர்களைக் கொடூரமாக முறைத்துக் கொண்டு பத்ரகாளியாக நின்றிருந்தாள் ஆரணி.

“அம்மாச்சி பேய்..” என ஆதித்யன் கத்த, “அடிங்க..” என்றபடியே அவன் மீது பாய்ந்திருந்தாள் ஆரா..

“விடுடி.. விடுடி..” என ஆதித்யன் கத்த,

“எம்பேரன போட்டு அடிக்கிறாளே, யாராச்சும் வாங்களேன்.. யோவ் கிழவா சீக்கிரம் வாயா.. உம்பேத்திய பாருய்யா.” எனக் கத்த, உள்ளிருந்த மருமகளும், மாமனாரும் என்னவோ ஏதோவென்று பதட்டத்தோடு வெளியே வர,

ஆதித்யனின் மேலமர்ந்து “நான் பேயா… நான் பேயா..” என அவன் தலையை போட்டு ஆட்டிக் கொண்டிருந்த ஆரா நிஜத்தில் பேய் போலத்தான் காட்சியளித்தாள்....

“முன்ன இல்ல, இப்போ இந்த சீன்ல நீ அப்படித்தான் இருக்க..” என அப்போதும் ஆதி அவளிடம் வம்பு வளர்க்க,

“ஏய் ஆரா.. விடுடி.. விடுடி..” என மகளை ரம்யா ஒருப்பக்கம் இழுக்க, மற்றொரு பக்கமோ “வயசான காலத்துல உனக்கு எதுக்கு கிழவி இந்த வேண்டாத வேலை. கொஞ்ச நேரம் வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்தாதான் என்ன.? எப்போ பாரு அவங்கூட சேர்ந்து எம்பேத்திய வம்பிழுக்க வேண்டியது. அவளும்தான் எவ்வளவு நாள் பொறுமையா போவா..” என முத்துச்சாமி மனைவியை பிடித்து ஒரு ஓரமாகத் தள்ளிவிட்டார்.

“யோவ்.. நீரெல்லாம் மனுசனா.. இப்படி தள்ளி விடுறீர்.. என் இடுப்ப உடைக்கனும்னு உமக்கு எத்தன நாள் ஆசை..” எனக் கணவனைத் திட்ட, “எவ்ளோ பட்டாலும் நீ திருந்தமாட்ட கிழவி… அவ உன் தண்டட்டிய அத்துட்டு போனாத்தான் நீ அடங்குவ..” என்றவர், எப்படியோ போ எனும் விதமாக சோபாவில் அமர்ந்துவிட்டார்.

ஒருவழியாக மகளை ஆதியிடமிருந்து பிரித்தவர், “ஆரா.. போதும். சின்னப்புள்ள மாதிரி என்ன விளையாட்டுத்தனம் இது.. போ.. முதல்ல போய் எல்லார்க்கும் காப்பி வை.. தம்பிக்கு மட்டும் பால் கொடு” என அதட்ட,

“என்ன.. என்ன நான் இவனுக்கு பால்.. வேணும்னா பாயாசம் போடுறேன். சைக்கோ எப்படியெல்லாம் டார்ச்சர் பன்றான் தெரியுமா.. காலேஜ்ல நிம்மதியாவே இருக்கவிட மாட்டேங்குறான். ஒரு காப்பி குடிக்க கூட கேண்டீன் பக்கம் விடாம..” என அலறியவள்,

“இதெல்லாம் நீ சொல்லித்தான கிழவி அவன் செய்றான். இனிமே உங்கூட நான் பேசிட்டா என்னனு கேளு.. செய்றதெல்லாம் செஞ்சிட்டு இவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தா இந்த ஆராவையே கிண்டல் செய்வான்..” எனத் தன் பத்ரகாளீ வேசம் கொஞ்சமும் குறையாமல் கத்தியவளை, பாட்டியும் பேரனும் பயத்துடன் பார்க்க,

“ரொம்ப சாதாரணமா அவனுக்கு நான் கிடைச்சிட்டேன்ல, அதான் என்னை எதுக்கெடுத்தாலும் மட்டம் தட்டுறதும், விட்டுட்டு போயிடுறதும். என் ஃபீலிங்க்ஸ புரிஞ்சிக்காம பேசி என்னை ஹர்ட் பன்றதும்ன்னு செஞ்சிட்டு இருக்கான். என்ன நினைச்சிட்டு இருக்க நீ.. நாம என்ன சொன்னாலும், நம்ம பின்னாடி நாய்க்குட்டி மாதிரி அலையிறவதானன்னு நினைச்சிட்டத் தானே. அதனாலத்தான் என்னோட நேசம் புரியாமப் போச்சு உனக்கு.” என ஆவேசமாகக் கத்தியவள்,

தன் பாட்டியிடம் திரும்பி, “ஏய் கிழவி என்ன பூச்சாண்டி காட்டுறியா.. வேற பார்ப்போம், வேற பார்ப்போம்ன்னு உம்பேரனுக்கு வேப்பிலை அடிக்கிற. பாரேன். வேறத்தான் பாரேன். நான் என்ன வேண்டாம்னா சொன்னேன். என்னமோ உம் பேரன் இல்லைன்னா என் உலகமே அழிஞ்சிப் போயிடும்னு நினைப்பு போல உனக்கு. இதுவரைக்கும் நீங்க சொல்லிட்டு இருந்தீங்க இல்ல. இப்ப நான் சொல்றேன். எனக்கு உம்பேரன் வேண்டாம். நீ வேற ‘நல்ல்ல்ல பொண்ண்ணா’ பார்த்து கட்டி வை அந்த பைத்தியத்துக்கு. நான் என்னனு கூட கேட்கமாட்டேன்..” என ஆவேசமாகக் கத்தியவள் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்ள, முத்துசாமி மனைவியையும், பேரனையும் கண்டனப் பார்வை பார்த்தார்.

“எத்தா நீ கொஞ்சம் காபித் தண்ணி கொடு..” என மருமகளை அடுப்படிக்கு அனுப்பி விட்டு, மனைவியை வைத்து வாங்கிவிட்டார்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும், நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன்ல புள்ளைக்கிட்ட வெளாடாதீங்க, வெளையாட்டு வினையாகிடும்னு, யாராச்சும் கேட்டீங்களா..? இப்போ அவ மலையேறிட்டா.. எப்படி அவளை சமாதானம் செய்றது. பாண்டி வர்றதுக்குள்ள இந்தப் பிரச்சனையை ரெண்டு பேரும் பேசி முடிச்சி விடுறீங்க, இல்ல நான் சொன்னத செய்வேன்..” என முத்துச்சாமி முடிக்க,

குருவம்மாவிற்குமே வருத்தமாகிவிட்டது. பேத்தியை வம்பிழுப்பதற்காகச் செய்தது இப்படி அவளை வருத்தப்படுத்தும் எனத் தெரியாமல், “எய்யா..” எனப் பேரனைப் பார்க்க, அவன் முகம் நொடியில் தீவிரமாக மாறியது.

அவன் முகத்தைப் பார்த்த குருவம்மாவிற்கு அவனும் ஏதோ விபரீதமாக முடிவெடுத்துவிட்டான் எனப் புரிய, “எய்யா..” என பதட்டமாக அழைக்க,

“அம்மாச்சி… இனி இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன். உங்க பேத்திக்கு இஷ்டம்னா நீங்க வெளிய பார்த்துக்கோங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல..” என்றவன் அதிர்ந்து நின்ற பெரியவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் கிட்சனில் இருந்த ரம்யாவிடம் சென்றான்.

“அத்த நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. அவளுக்கு என்ன விருப்பமோ அதை செய்ங்க. என்னோட திங்க்ஸ் எல்லாம் அவ ரூம்லதான் இருக்கு. அதை அப்புறமா கொடுத்து விடுங்க. நான் காலேஜ் கேம்பஸ்லயே தங்கிக்கிறேன்..” என்றதும்,

“ஆரு... ரொம்ப கஷ்டப்படுவா ஆதி..” என்று மட்டும் சொன்ன அத்தையிடம்,

ஒரு நொடி அமைதியாக இருந்தவன், அடுத்த நொடியே “நிஜமா எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல, இந்த லவ்வு, ஜவ்வு எல்லாம் எனக்கு செட்டே ஆகல, அவளை எப்படி ஹேண்டில் பன்றதுன்னும் தெரியல.. அவளோட சாதாரண எதிர்பார்ப்பு கூட எனக்குத் தெரியல. பிறகெப்படி நான் அவளுக்கு சரியா இருப்பேன்..” என பெருமூச்சு விட்டவன், “பார்த்துக்கோங்க அத்தை..” என்றுவிட்டு கிளம்பிவிட்டான். பெரியவர்கள் தடுத்தும் கூட அவன் நிற்கவில்லை.

அறைக்குள் இருந்த ஆராவுக்கோ கோபம் கண்மண் தெரியாதளவிற்கு கோபம், ‘திமிர், திமிர் அத்தனையும் திமிர் அவனுக்கு’ என கடுகடுத்தவள், அவளது ட்ரெஸ்ஸிங்க் டேபிள் மேல் இருந்த அவனது சீப்பை எடுத்து எரிந்தாள்.

பின் அப்படியே தரையிலமர்ந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள். ஏன் எதற்கென்றே தெரியாதளவிற்கு அழுகை. அவள் அழுகையின் சத்தம் வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்க, அவர்களோ மூடியிருந்த அறைக் கதவையே பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது தான் ரம்யாவிடம் பேசிவிட்டு வெளியேறிய ஆதித்யனின் காதிலும் அவள் அழுகையின் சத்தம் விழ, அவன் நடை அப்படியே நின்றது.

பின் காதலுக்காக நிக்கியும், ஆதனும் எடுத்த தற்கொலை முயற்சி மின்னலாய் அவன் மனக்கண்ணில் வந்து போக, அடுத்து அவன் கால்கள் வந்து நின்றது அவளது அறை வாயிலில் தான்.

“ஏய் கதவத் திறடி… இப்போ எதுக்கு உள்ள போய் உக்காந்துட்டு சீன் போட்டுட்டு இருக்க.. கதவத் திறடி..” என ஆதி கத்த,

“முடியாது போடா.. போ போய் அப்படியே எங்கையாச்சும் எவளையாச்சும் பார்த்து கட்டிக்கோ, என்னை விட்டுடு… நீ பெரிய இவன்னு உன் பின்னாடி அலைஞ்சேன் பாரு என்ன சொல்லனும்” என அவளும் கத்த

“உனக்கு செட்டாகலன்னா நீ போய் எவனாச்சும் சொட்டத் தலையனையோ, இல்ல ப்ரெக்னன்ட் லேடி மாதிரி தொப்ப வச்சிருக்குற எவனையாச்சும் கட்டிக்கோ, என்ன சொல்லாத..”

“எனக்கு சொட்டத்தலையனா, அப்போ உனக்கு பொண்ணே கிடைக்காம, வெளிய ஒரு பல்லு போன கிழவி இருக்கு பாரு, உன் அம்மாச்சி அது மாதிரி தாண்டா பொண்ணு கிடைக்கும், அப்போதான் உனக்கு இருக்குற திமிர் குறையும்..”

“நான் நாளைக்கு நாலு பொண்ணுங்களையாச்சும் உன் முன்னாடியே கரெக்ட் பண்ணிக் காட்டி, உனக்கு வயித்தெரிச்சல கொடுக்கல, நான் ஆதித்யன் இல்லடி..” என ஆவேசமாக வார்த்தைகள் வந்து விழுந்தாலும், முன் இருந்த இறுக்கம் போய் சிரிப்பிற்கு மாறியிருந்தது அவன் முகம்.

“வயித்தெரிச்சலா எனக்கா..? ஆமா நீ பெரிய மன்மதன் உன் பின்னாடி பொண்ணுங்க அலையிறாங்க, வந்துட்டான்.. போடா.. போ.. போ.. நீ யார வேனாக் கட்டு, எவக்கூட வேனா போ.. என்னமோ பண்ணு.. எனக்கு ஒன்னும் இல்ல..” என்றவள் அறைக் கதவைத் திறந்து கொண்டு அவன் முன்னே நிற்க, அதற்காகவே காத்திருந்தவன் போல, அவளையும் இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவன், “அத்த சாரி..” என்ரு ரம்யாவிடம் சொல்லிவிட்டுக் கதவை அடைத்ததோடு, கைகளுக்குள் திமிறியவளை அடக்கி, அவள் பூவிதழ்களையும் அடைத்திருந்தான்.
 
  • Haha
Reactions: CRVS2797

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
அப்பாடா...! இதுங்க ரெண்டு பேரோட வாயும் இப்பவாவது அடைஞ்சதே..! எம்மாடியோ, ரெண்டுக்குமே வாய், திமிரு, கோபம், பிடிவாதம் சரிக்கு சரியா இருக்குது.
😃😃😃
CRVS (or) CRVS 2797