• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
அத்தியாயம் 3

காலமெனும் கடிகாரத்தில் நேரமும் நாளும் நிற்காமல் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக் கொண்டிருந்தது..

ஒற்றைப் பிள்ளையாக இருந்து மொத்தப் பாசத்தையும் அனுபவித்தவன் இன்று பங்குபோட்டு கொடுக்கும் பாசத்தையும் பழகிக் கொண்டான் செந்தூரன். தன் தங்கையின் மகன் தாயில்லாப் பிள்ளை என்று அவனுக்கு பார்த்து பார்த்து செய்தாலும் ஏதாவது சில விஷயத்தில் கூடக் குறைய செய்வது மனித இயல்பு தானே. அது புரிந்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டான். அவர்களே கஷ்டத்தில் இருக்கும் போது தன்னையும் அவர்கள் வளர்ப்பதே பெரியது. இதில் கூடக் குறைய என்று சண்டை போடுவது தவறு என்பதை அச்சிறுவன் மனது நன்றாகவே புரிந்து வைத்திருந்தது. ஆரம்பத்தில் தாயில்லாப் பிள்ளை என்று அக்கறை காட்டிய கலைவாணி நாளடைவில், 'தன் தலையில் விழுந்து விட்டதே' என்று வேண்டா வெறுப்பாகத் தான் செய்தார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. தன் பிள்ளைகளுக்கு கிடைப்பதில் சரி பங்கு அவனுக்கும் சென்று விடுகிறதே என்ற ஆதங்கம். ஆனால் ஒருநாளும் பட்டினியாக போட்டதில்லை. கொஞ்சம் புலம்பிக் கொண்டே செய்வார். சிலநேரம் சுருக்கென்று மனதில் தைத்தாலும் மனதோடு புதைத்து விட்டு கசந்த புன்னகையோடு நகர்வான். அவர்களை விட்டால் வேறு நாதியும் இல்லை.

அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அன்பு.. அன்புச்செல்வி. சிறுதுண்டு தின்பண்டம் கிடைத்தாலும் அதில் பாதியை அவனுக்குக் கொடுப்பாள். அவன் இல்லாத நேரங்களிலும் மறைத்து வைத்திருந்து அவன் வரவும் கொடுப்பாள். சிறு பாலகன்.. சுடுசொல் கேளாமல் வளர்ந்தவன்.. கலைவாணி பட்டென்று சிலநேரம் வார்த்தையை விடும் போது எங்காவது சென்று விடலாமா? என்ற எண்ணத்தை, 'செந்தூர் மாமா..' என்ற அவள் ஒற்றை வார்த்தை மாற்றும். அதுவே அவன் மனதை மொத்தமாய் மாற்றி இயல்புக்கு திருப்பும்.

'நீ படிச்சு பெரிய ஆளாகனும்' என்ற அவன் தந்தையின் சொல்லை மனதில் ஆணித்தரமாய் பதித்து விடாமல் படிப்பைத் தொடருகிறான். 'எது வரைக்கும் பள்ளி செல்ல முடியும் என்று தெரியவில்லை. பெரியவனான பிறகு பட்டாசு ஆலைக்கு போ என்று பேச்சு வரும் அத்தையிடம் இருந்து. எப்பாடு பட்டாவது அப்பப்போ வேலை செஞ்சாவது படிச்சுறனும்' என்ற வைராக்கியத்தோடு வளர்கிறான்.

இவன்பாடு இங்கு இப்படி இருக்க, அங்கே பரமேஸ்வரன் வீட்டு நிலவரம் என்ன என்று பார்த்து விட்டு வரலாம் வாங்க..

கதரேசன் இறப்பு அக்குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கவில்லை. தினமும் குடி, சண்டை சச்சரவு என்று ஏதாவது இழுத்துக் கொண்டு வந்துவிடுவார். இப்போது அந்தப் பாடெல்லாம் இல்லை. அவனின் அன்னைக்கு இருக்கும் ஒரே கவலையே மூன்று பிள்ளைகளை கரைசேர்ப்பதும், அதற்கு ஒற்றை ஆளாக இருந்து அத்தனை வன்மை வளமை பார்க்கப் போகும் பரமேஸ்வரனைப் பற்றிய கவலையும் தான். ஒற்றைப் பிள்ளையை படிக்க வைத்து ஏதாவது மாத சம்பள வருமானத்தில் அமர்த்தி விட்டால் பெண் பிள்ளைகளுக்கு சீர் செய்யும் போது பிரச்சனை இருக்காது என்றெண்ணி அவரோடு சேர்த்து மூத்தப் பெண்கள் இருவரையும் பட்டாசு ஆலைக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் மூவரின் வருமானமும் குடும்பத் தேவைக்கு அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.

"அக்காங்க பாவம் மா.. அவங்க கஷ்டப்பட்டு நான் படிக்கனுமா?. நானும் வேலைக்குப் போறேன்மா" என்று அவன் வயதுக்கு மீறி வேலை செய்ய தயாராய் இருந்தான்.

"பரமு.. எங்களுக்கு என்னடா கஷ்டம்?. நீ படிச்சு நல்ல வேலைக்குப் போயிட்டா நாளபின்ன எங்களுக்கு செய்ய மாட்ட?. நம்மள பெத்தவரு ஒரு கஷ்டமும் இல்லாம அம்போனு விட்டுட்டு போயிட்டாரு. எங்க பாரத்தைலாம் நீ பெரிசானதும் ஒத்தாளா சுமக்கனும்னு நெனச்சாலே ஏன்டா பொம்பளைப் புள்ளையா பொறந்தோம்னு ராவெல்லாம் ஒறக்கம் வரமாட்டேக்கு பரமு" என்று கண்ணைக் கசக்கினாள் மூத்த அக்கா கமலா.

"கமலா க்கா. என்னக்கா நீயி? நீதான எங்களுக்கு வழிகாட்டனும். நீயே அழுதா எப்படி?. நீங்களாம் எனக்கு பாரமில்லக்கா. நீ இப்படிலாம் பேசாதக்கா. நான் அழுதுடுவேன்" என்று அழுவதற்கு தயாராய் இருந்தான் பரமேஸ்வரன். மற்றவர்களை விட அவன் மூத்த அக்கா மேல் பாசம் அதிகம்‌. அவனை வயது அதிகம் என்பதால் தாயைப் போல். கமலாவும் பிள்ளையைப் போல் தான் பார்த்துக் கொள்வாள். அதுவும் கதிரேசன் அவனை, 'என் சிங்கக்குட்டி இருக்கான் உங்களுக்கு செய்ய' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததால் என்னவோ அவனை எதற்கும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்வாள் கமலா. அவனும் அதற்கு ஏற்றது போல் எதற்கும் துணிந்தவனாக தான் வளர்ந்தான்.

கதிரவனின் கதிர்கள் நிலத்தைச் சூடுபடுத்திக் கொண்டிருந்த காலை வேளை..

"அன்பு.. சீக்கிரம் போயிக் கெளம்பு. பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. அப்புறம் மாமா விட்டுப் போயிருவேன்" என்று செல்லமாய் செந்தூரன் மிரட்டவும், "இரு மாமா.. இந்தக் காளியை கெளப்பவே அம்மாவுக்கு லேட்டாயிடுது. இங்கப்பாரு எனக்கு இன்னும் அம்மா தலை சீவி விடல" என்று தலையை விரித்துக் கிடந்ததை காண்பித்தாள் அன்புச்செல்வி.

"அவன் அழுமூஞ்சி.. எல்லாத்துக்கும் அழுதுட்டு கெடப்பான். இங்க வா சீப்பைக் கொண்டா" என்று சீப்பை அவளிடமிருந்து வாங்கி அவள் முடியிலிருந்த சிக்கை பக்குவமாய் வலிக்காமல் எடுத்து விட்டு, நெற்றியிலருந்து நேராக வகுடு எடுத்து பின்னங்கழுத்தில் வந்து வகுடை நிறுத்தி, வகுடின் இருபக்கமும் சமபங்கு முடியை எடுத்து வழுவழுவென சீவி இறுக்கமாய் அழகாய் பின்னலிட்டு ரத்தச் சிவப்பு நிற ரிப்பனை வைத்துக் கட்டி, இறுதியில் குஞ்சம் வைத்து முடித்தான்‌. மறுபக்கமும் அதே போல் போட்டு விட்டு, பவுடர் அடித்து நெற்றியில் சிவப்பு வண்ண சாந்துப் பொட்டையும் வட்டமாக வைத்து விட்டு, "அழகு அன்பு" என்று திருஷ்யும் கழித்து விட்டான்.

சிறு சதுரக் கண்ணாடியில் அவன் செய்த அலங்காரத்தைக் கண்டவள், "மாமா சூப்பர் மாமா.‌ இனிமே நீயே எனக்கு ஜடை போட்டு விடு"

"ம் சரி அன்பு பையை எடுத்துட்டு வா. பள்ளிக்கூடத்துக்கு கெளம்புவோம்" என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "ஏலே செந்தூரா.. இந்தக் காளிப்பயல அப்படியே அரைக் கிளாஸ்ல விட்டுருங்கடா" என்று அவர்களோடு காளிராஜையும் அனுப்பி வைத்தார் கலைவாணி. மூவரும் மதிய உணவை பள்ளியே முடித்துக் கொள்வார்கள்.

அவர்கள் கிளப்பியபின் தங்கவேலும் கலைவாணியும் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றனர். என்ன தான் கண் நேராக பட்டாசு விபத்தைக் கண்டாலும் அதை விட்டால் பிழைப்புக்கு வேறு தொழிலோ வேலையோ இல்லாததால் வேறு வழியில்லாமல் அதைத்தான் தஞ்சமடைய வேண்டும். பட்டாசு விபத்து நடந்த ஆலையை இரண்டு மாதங்களிலே புதுப்பித்து லைசென்ஸ்ம் வாங்கி விட்டனர். விபத்து நடந்த அந்த ஆலைக்குத் தான் இப்போது வேலைக்குச் செல்கின்றனர். வேறு வழி?. வானம் பார்த்த பூமியை நம்பி, ஐப்பசி மாதம் வரை பூமி வேணா காத்துக் கொண்டிருக்கலாம். வயிற்றுப் பசி காத்துக் கொண்டிருக்குமா?. எப்படியாவது வாழ்க்கையை ஓட்ட வேண்டுமல்லாவா?. ஆபத்து வரும் போது வரட்டும் தன் விதியை கடவுள் எப்படி எழுதி இருக்கிறானோ அவ்வழியே நடக்கட்டும் என்று துணிந்து வேலைக்குச் சென்றனர்.
-----

"ஏலே பரமு.. இந்தா.. மத்தியானம் பள்ளிக்கொடத்துல ஏதாவது வாங்கித் தின்னுக்கோ" என்று தனக்காக மதியம் பட்டாசு ஆலையில் கேன்டீனில் டீ குடிக்க வைத்திருந்த இரண்டு ரூபாய் காசை பரமுவிடம் கொடுத்தாள் கமலா.

"எக்கா.. எனக்கு அம்மா ஒர்ரூவா இருக்கு. அது போதும் நீ போய் ஆவுசுல(ஆபிஸ்) டீ குடிக்க வச்சுக்கோ. மதியம் சாப்பிடுற வரைக்கும் ஒன்னும் சாப்பாடாம குறுக்கு வலிக்க வேலை செஞ்சுட்டு கெடப்ப"

"நீ ரொம்ப யோசிக்காதடா.. இந்தா வச்சுக்கோ.‌ ஆவுசு பஸ்ஸூ வந்துருச்சு. போயிட்டு வாரேன். நீ பார்த்து பள்ளிக்கொடத்துக்கு போடா. எம்மா சுந்திரி உள்ளயே என்ன செய்தீங்க. சீக்கிரம் வாங்க பஸ்ஸூ வந்துருச்சு" என்று அவன் கையில் காசைத் திணித்து விட்டு பட்டாசு ஆபிஸ் பேருந்தைப் பிடிக்க ஓடினாள்.

பரமுவின் அம்மா சங்கரேஸ்வரியை விட இளரத்தம் என்பதால் கமலாவும் சுந்திரியும் கொஞ்சம் அதிகமாக கெட்டு(வளையத்தில் அடைக்கப்பட்ட டியூப்) வைப்பார்கள். ஒரு கெட்டுக்கு ஒரு ரூபாய். அதிகப்படியாக முப்பதிலிருந்து நாற்பது வரை அக்காவும் தங்கையும் வைப்பார்கள். அவர்கள் மூவரும் மொத்தமாய் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பளம் வாங்குவார்கள். பிஎஃப் பிடித்தம் போக வாரம் அறுநூறிலிருந்து அறுநூற்றி ஐம்பது வரை வாங்கும் சம்பளத்தில் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.




இதுக்குப் பேர் தான் கெட்டு. அடிப்பக்கம் கோந்து(பிஸின்) போட்ட செம்மண்ணால் பூசி காய வைத்தபின், மேல்பாகத்தில் வெடிமருந்தை அடைத்து திரும்ப இலகுவான மண் பூசி, கெட்டுக் குத்துகிற ஊசியால்(சிறிய கம்பி போல் இருக்கும்) ஓட்டை போட்டு, வெள்ளைத் திரியை மருந்தில் நனைத்து ஓட்டையை அடைத்து பின் காய வைப்பார்கள். காய்ந்ததும் அதை உதிர்த்து சரவெடியாக பின்னுவார்கள்.

பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம் வந்ததும் காளிராஜ்யை பால்வாடியிலும், அன்புச்செல்வியை அவள் வகுப்பிலும் விட்டுட்டு தனது வகுப்பு அறைக்குச் சென்றான் செந்தூரன். பரமேஸ்வரனும் அதே வகுப்பு தான்.

செந்தூரன் நன்கு படிக்கும் மாணவன் என்பதால், "நாங்கூட பயந்தேன் நல்லா படிக்குற பையன் இப்படி பேச்சில்லாம கெடக்கனு கேள்விப்படவும்.. நல்லவேளை திரும்ப படிக்க வந்த. உங்கப்பா அம்மா இழப்பு ஏத்துக்க கஷ்டமாத் தான் இருக்கும். அந்த வருத்தத்தலாம் படிப்பில காமி. அவங்க ஆசைப்பட்டபடி படிச்சு நல்ல வேலைக்கு போகனும்னு படி செந்தூரா." என்று அவனுக்கு ஆறுதல் வழங்கினார் அவன் வகுப்பு ஆசிரியர்.

"உங்கப்பா செஞ்ச தப்பால இன்னைக்கு எத்தனை குடும்பம் இப்படி திக்கு தெரியாம நிக்குனு பாரு பரமு. நீ அவரைப்போல வந்துறாத. உங்க வீட்ல மூனு பொண்ணுங்க இருக்காங்க. அதை நினைவுல வச்சுட்டு படி பரமு" என்று அவனுக்கும் அறிவுரை வழங்கினார்.

பரமேஸ்வரனுக்கு ஆத்திரம் தான் வந்தது. 'அவரு செஞ்ச தப்புக்கு இன்னும் எத்தனை நாள் தான் எங்களையவே சொல்லி சொல்லி காண்பிப்பாங்களோ இந்த ஊர்க்காரங்க. சே அந்த அந்தாளு நிம்மதியா போய் சேர்ந்திட்டாரு. இப்போ கஷ்டப்படுறது நாங்க' என்று மனதில் செத்தவரை திட்டிக் கொண்டிருந்தான்.

ஆசிரியர் அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, செந்தூரனின் கண்கள் பரமுவை வெறுப்பாகப் பார்த்தது. காலை வகுப்புகள் முடிந்த பின், மதிய உணவு வேளையின் போது எப்போதும் நண்பர்களுடன் உணவுண்ணும் செந்தூரன் அன்று அன்புவுடன் உணவுண்ணச் சென்றான்.

அவனைக் கண்டவுடன், "ஐய் செந்தூர் மாமா.. இனிமே நீ என்கூட தான் சாப்பிடுவியா.. ஜாலி ஜாலி.. தினமும் என்கூடவே சாப்பிடுறியா?" என்று தலைசாய்த்து கொஞ்சிக் கேட்கவும் மாமனவன் மறுக்காமல் சரி என்று தலையாட்டினான். வகுப்பில் நண்பர்களுடன் உண்டால் அவனது பெற்றோரின் இறப்பைப் பற்றியே ஏதாவது கேள்வி கேட்டு மேலும் மனது நோகும் என்று கொஞ்ச நாளைக்கு அன்புவுடனே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து இங்கு வந்து விட்டான்.

"அய்யோ அன்பு சிந்தாம சாப்டு. இரு மாமா ஊட்டுறேன்" என்று அவனே அவளுக்கு ஊட்டியும் விட்டு தானும் உண்டு வகுப்புக்குச் சென்றான்.

வகுப்புக்குச் செல்லவும் "ஏன் சாப்பிட வரல?" என்று அவனது நண்பர்கள் கேள்வி கேட்டும் பதில் சொல்லாமல், "சும்மா தான்" என்று சொல்லி மழுப்பி விட்டான்.

அவனை வம்பிழுக்கும் பொருட்டே அவனைப் பிடிக்காத ஒருவன், "ஏன்டா.. நீ என்ன சின்னப் புள்ளையா? சின்னப்புள்ளக் கூட போய் சாப்பிடுற?. அதுவும் பொம்பளப்புள்ள கூட.. அசிங்கமா இல்லையா?" என்று சொல்லி சிரிக்கவும், "டேய் உனக்கென்னடா?. நான் யாருகூட வேனா போய் சாப்பிடுவேன். அவ என் மாமா பொண்ணு. அதுனால நீ உன் வேலையைப் பாரு" என்று கத்தினான் செந்தூரன்.

அவன் மாமாப் பொண்ணு என்கவும், "ஆமா பெரிய முறைப் பொண்ணு" என்று முனுமுனுத்து சிரித்தான் பரமு.

"டேய் ஆமா முறைப் பொண்ணு தான். நீ யாருடா அதைப்பத்தி பேச?. உன் வேலையைப் பாரு"

"ஏய் போடா அழுமூஞ்சி.. பொம்பளப்புள்ள கூட உட்கார்ந்து அழுதுட்டு வந்துட்டு பெரிய வீராப்பா பேசிட்டு இருக்க"

"டேய் நான் எப்படி இருந்தா உனக்கென்னடா?. உனக்கு உங்கப்பன் புத்தி தான இருக்கும்.. மத்தவங்களை கெடுத்துட்டு அலையுற" என்ற செந்தூரனின் சட்டையைப் பிடித்த பரமு, "டேய் இன்னொரு தடவை அப்படி சொன்ன.. உன்னை கொன்னுடுவேன்டா.. நான் வந்து கெடுத்தேனா?. அந்தக் குடிகாரன் பண்ணிட்டு போனதுக்கு என்னைய ஏன்டா கேட்குறேங்க?" என்று இருவரும் சட்டையைப் பிடித்து உருண்டனர்.

செந்தூரனுக்கு தன் தாய் தந்தையின் மரணத்திற்கு மட்டுமல்ல நிறைய உயிர்களின் சாவிற்கு பரமுவின் தந்தை தான் காரணம் என்பது மனதில் வேரூன்றி விட்டது. அதுனால் பரமு மீதும் அந்த வெறுப்பு பரவியது. பரமுவிற்கு அவன் தந்தை செய்த செயலுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்கிற கோவம். எல்லாரும் அவனையே அப்பன் மாதிரி வந்துறாத அப்பன் மாதிரி வந்துறாத என்று அவரோடு ஒப்பிட்டுச் சொல்கிறார்களே என்கிற ஆத்திரம். செந்தூரனும் அவ்வாறு சொல்லும் போது அவன் மீதும் கோவம்.

இருவருக்குள்ளும் அந்த வயதிற்கே உரித்தான் சிறுபிள்ளை சண்டையில் ஆரம்பித்து இருவர் மனதிலும் கோவமாக மாறி விட்டது. அதன் பிறகு விஷயம் வகுப்பு ஆசிரியர் வரைக்கும் சென்று அவர் வந்து இருவரையும் பிரித்து விட்டு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்.


தொடரும்..
 
Top