கானல் - 3
காலையில் கண்விழித்தவளோ, தான் கணவன் அணைப்பில் உறங்கி கொண்டிருப்பதை கண்டு புன்னகைத்தவள் கணவனை விட்டு விலக மனமில்லாமல், அவன் மார்பில் சாய்ந்தவாறே பார்த்து கொண்டிருந்தாள்.
என்ன தான் கணவன் சிடு சிடுவென்று கடிந்து கொண்டே இருந்தாலும், சில நேரங்களில் அவனுக்கே தெரியாமல் அவள் மீது வரும் காதலால் எப்பொழுதாவது அவளை அணைப்பது உண்டு.
அதுவும், அவளிடம் வெளிப்படையாக காட்ட தெரியாதவன், இதே அவள் உணர்வால் என்பதை அறிந்தும், சில நேரங்களில் உறங்கும் போது அவளை அணைத்து கொள்வான்.
கணவனின் சின்ன சின்ன அணைப்பே பெண்ணவளுக்கும் போதுமானதாக இருக்க, அவனின் செயல் கோபம் மாமியாரின் வார்த்தைகள், இவை அனைத்திலும் காயப்
பட்டாலும் அவனின் சிறு சிறு அணைப்பில் தன் மீது இருக்கும் காதலை உணர்ந்தவள், அவனுக்காகவே அனைத்தையும் பொறுத்து கொண்டே பத்து வருடங்கள் கடந்துவிட்டாள்.
இன்று விடுமுறை என்பதால் வழக்கத்தை விட, சிறிது தாமதமாக கண் விழித்தவன் தன் மார்பில் கண்கள் மூடி தலை சாய்ந்திருக்கும் மனைவியை தன்னிடமிருந்து விலக்க எண்ணி, தன் கரம் கொண்டு மெதுவாக அவள் தலையை நகர்த்த, அவன் செயலில் சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்களை திறந்தவளோ "என்ன இதெல்லாம்.." என்பது போல் பார்த்து கொண்டிருக்க, அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவன்,
"என்ன பாக்குற.. உன்ன ஒன்னும் ஆசையாலாம் கட்டி பிடிக்கல.. ஏதோ தூக்கத்துல உருண்டு வந்திருப்பேன்" என்று கூறியவன், அவள் முகம் பாராமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் சென்றதும் கணவனின் செயலை நினைத்து சத்தமாக சிரித்தவளோ, அவன் வரும் வரை திறன்பேசியை பார்த்தவாறு அமர்ந்திருக்க, குளியல் அறையிலிருந்து வெளியே வந்தவனோ அவளை காணாமலே அறையைவிட்டு செல்ல, அதை கவனித்த பெண்ணவளோ புன்னகைத்தவாறே குளியல் அறைக்குள் புகுந்தாள்.
குளித்து தயாராகி வெளியே வந்தவள் சமையல் அறைக்குள் சென்று மேகலையுடன் இணைந்து கொண்டாள்.
இப்போது மேகலையோ "இன்னைக்கு என்ன ஸ்பெஷல்.. எதாவது விஷேசமா"
"இல்லயே சாதாரண நாள் தான்.. ஏன் கேக்குற"
"இல்லயே... இன்னைக்கு கொஞ்சம் ஃபேஸ் பிரைட்டா இருக்கீங்களே.. என்ன விஷயம்"
அதைக் கேட்டதும், இரவெல்லாம் கணவன் அணைப்பில் உறங்கியதை நினைத்து பெண்ணவளுக்கு வெக்கம் எட்டி பார்க்க, மேகலை இருப்பதால் கட்டுப்படுத்திக் கொள்ள, மேகலையோ "உங்ககிட்ட தான கேட்டுட்டு இருக்கேன்.. கனவு லோகத்துக்கு போயிட்டீங்களா.. என்ன"
கனவு என்று சொன்னதுமே முகம் வாடிய வித்யாவோ "ஒன்னும் இல்ல மேகல.. எப்போதும் போல தான் இருக்கேன்"
"இல்லையே.. ஏதோ இருக்கு"
அவள் இதற்குமேல் விடமாட்டாள் என்பதை உணர்ந்து "இன்னைக்கு சண்டேனால கொஞ்சம் நல்ல தூக்கம்.. அதுனால பிரைட்டா தெரியுறேன் போல"
என்று கூறி சமாளிக்க,
அதைக் கேட்டு பதிலுக்கு தலையசைத்தவள் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.
சமையலை முடித்து அனைவருக்கும் பரிமாறிவிட்டு அவர்கள் சாப்பிடதும், தானும் சாப்பிட்டுவிட்டு மீதி வேலையை முடித்தவள், தன் அறைக்குள் நுழைந்து வழக்கம் போல் அன்னையின் புகைப்படத்தை பார்த்தவாறு பேசி கொண்டிருந்தவளின் கண்கள் அவளை மீறியும் கலங்க,
அதே நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு புகைப்படத்தை ஓரமாக வைத்து எழுந்தவளோ, கண்களை அழுத்தி துடைத்துவிட்டு கதவை திறக்க, வாசலில் நின்ற மேகலையோ "என்ன அக்கா.. இன்னும் ரெடியாகமா இருக்கீங்க"
அதைக் கேட்டு கேள்வியாக, அவளை நோக்கியவளோ "எங்க.."
"எங்கயா.. நேத்து தான சொன்னேன்.. அப்பாவ பாக்க போவோம்ன்னு.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா"
"இல்ல வேண்டாம்.. எப்படியும் அத்த விட மாட்டாங்க.. நீங்க போயிட்டு வாங்க.. எதுக்கு தேவையில்லாம பிரச்சன பண்ணிகிட்டு"
"அதெல்லாம் ஒரு பிராப்ளமும் வராது.. நீங்க ரெடியாகுங்க அத்தைகிட்ட நான் பேசிக்கிறேன்.. சொல்றேன்ல போங்க போங்க" என்று அவளை தள்ளியவாறே அறைக்குள் நுழைந்தவள், அவளை தயாராக கூறிவிட்டு படுக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு, ஏதோ தோன்ற தலைவாரி கொண்டிருந்த வித்யாவின் அருகில் வந்தவளோ "அக்கா.. நேத்து நீங்க ரேஷ்மாகிட்ட அவ ஸ்கூல்ல பரதம் டீச்சரா ஜாயின் பண்ண ஓகே சொல்லிட்டீங்களாமே.. அப்படியா"
"விடாம கேட்டுட்டே இருந்தா.. அதான் அவ மனசு கஷ்டபட கூடாதுன்னு வீட்டுல கேட்டுட்டு சொல்லுறேன்னு சொல்லி சமாளிச்சேன்"
"அதான.. நான் கூட நீங்க மனசு மாறிட்டீங்களோன்னு நினைச்சேன்... இன்னைக்கு நைட் கண்டிப்பா நீங்க மாமாகிட்ட பேசுறீங்க அப்படியில்லனா நான் பேசுவேன்.. சீக்கிரம் ரெடியாகி வாங்க கீழ வையிட் பண்றேன்" என்று கூறி அங்கிருந்து சென்றாள்.
அவள் கூறியது போல் தயாராகி கீழே சென்றவளோ மேகலையுடன் மாமியாரை காண சென்றாள்.
மருமகள்கள் இருவரும் ஒன்றாக வந்திருப்பதை கண்டு, அவர்கள் கூறுவதற்கு முன்னே பேச தொடங்கியவரோ "என்னங்கடி.. அக்காவும் தங்கச்சியும் இப்படி அள்ளி மினுக்கிட்டு.. எங்க ஊர் சுத்த கிளம்பிட்டீங்க"
அதில் கடுப்பான மேகலையோ கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு "ரெண்டு பேரும்.. எங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடுறோம்"
"லீவ் நேரத்துல கூட வீட்டுல இருக்க மாட்டியா.. உனக்கு எங்கேயாவது ஊர் சுத்திட்டே இருக்கணும்ல.. நீ தான் என்னோட பேச கேக்காம.. உன் இஷ்டத்துக்கு திரியுறேனா.. அவளையும் ஏன்டி கெடுக்குற"
தான் கூறியதை கேட்டு முறைப்பவளை கண்டவர் "என்னடி முறைப்பு.. போ போ ஒழுங்கா இன்னைக்காவது வீட்டுல இருந்து பிள்ளைல கவனி"
"பசங்கலயும் கூட்டிட்டு தான் போறோம்.. அவங்களும் தாத்தா பாட்டிய பாக்க ஆசைப்படுவாங்க தான.."
"சொல்லிட்டே இருக்கேன்.. குறுக்க குறுக்க பேசிட்டு இருக்க.. ஒழுங்கா போய் வேலைய பாருங்கடி.. வந்துட்டாலுங்க அப்பா வீட்டுக்கு போறேன் ஆத்தா வீட்டுக்கு போறேன்னு" என்று கூறி கொண்டிருக்க,
அம்மாவிடம் சொல்லிட்டுவிட்டு வரேன் என்று சென்றவர்கள் இன்னும் வராமல் இருக்க, அவர்களை அழைக்க வந்தவன் "ரெண்டு பேருக்கும் அம்மாகிட்ட சொல்லிட்டு வர இவ்வளவு நேரமா.. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது" என்று கூறி முடிக்கவும், அவனின் திறன்பேசி அலற, அழைப்பை ஏற்றவனோ "ஹலோ சொல்லுங்க சார்"
மறுமுனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல், இவன் பேசுவதை மட்டும் மூவரும் கவனித்து கொண்டிருக்க, அவனோ "ஓ அந்த மாமியார் கொடும கேஸ் பத்தி கேக்குறீங்களா.. அத ஏன் சார் கேக்குறீங்க.. அந்த பொண்ணு மாமியார் கொடுமை தாங்காம கேஸ் கொடுக்க வர, பின்னாலயே அவங்க மாமியாரும் வந்து வெளியே இடம்ன்னு கூட பாக்காம அராஷகம் பண்ணிட்டு இருந்தாங்க.. அப்புறம், நான் தான் மருமகள வெளியே நிக்க வச்சி.. மாமியார் கிட்ட கவுன்சலிங் கொடுத்துட்டு.. இங்க பாருங்க நான் இவ்வளவு சொல்லியும் நான் மாமியாரு இப்படி தான் இருப்பேன்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க.. இப்படிலாம் பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்.. அப்புறம் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்னு சொன்னேன்.. அவங்களும் இனி இப்படி நடக்காதுன்னு சொல்லிட்டு போனாங்க.. வார்ன் பண்ணிருக்கேன் கேக்கலன்னா லாடம் கட்டிற வேண்டிய தான்" என்று அவன் கூறிக் கொண்டிருக்க,
அதைக் கேட்டு பயந்த நாகவள்ளியோ எச்சியை கூட்டி விழுங்கியவாறே மகனையை நோக்கி கொண்டிருக்க, அவரின் செயலை கண்டு உதடு மடித்து சிரித்த மேகலையோ "அக்கா.. அத்தைய பாருங்க மாமியார் கொடுமை கேஸ்ன்னு சொன்னதும் அரண்டு போய் நிக்குறாங்க.. பாத்தீங்களா" என்று அவள் காதுபட கூற,
வித்யாவோ சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் கையில் தட்டியவளோ "ஏய் சும்மா இரு.. கேட்டுற போகுது" என்க,
இப்போது அழைப்பை துண்டித்த ராஜனோ "என் மூஞ்சையே பாத்தது போதும்.. வாங்க கிளம்பலாம்" என்று கூறி அன்னையிடம் திரும்பியவனோ "அம்மா.. நானும் அவங்ககூட போயிட்டு வாரேன்"
அதற்கு பதில் பேசாதவரோ சரி என்றவாறு தலையசைக்க மேகலையோ "அத்த என்னாச்சி பேன் இருந்தும்.. இப்படி வேர்த்து இருக்கு.. ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிடலாம் வாங்க" என்று நக்கல் செய்ய,
அதைக் கேட்டு தன் முகத்தை தொட்டு பார்த்தவரோ "அது ரொம்ப நேரம் உக்காந்து இருக்கனா.. முதுகு வலில மூச்சு வாங்கி வேர்க்குது படுத்தா சரியாகிடும்" என்று சமாளிக்க,
வித்யாவோ "அத்தை.. அப்போ நானும் போயிட்டு வரேன்"
"சரி சரி.. போனோம் வந்தோம்ன்னு சீக்கிரம் வர வழிய பாருங்க" என்க
அதற்கு சம்மதமாக தலையசைத்து விடை பெற்றவர்களா, முதலில் வித்யாவின் தந்தையை பார்த்துவிட்டு மேகலையின் வீட்டிற்கும் சென்றுவிட்டு, மாலையே தங்களின் வீடு திரும்பிய பெண்களோ இரவு உணவு தயாரிக்க தொடங்கினர்.