கானல் - 2
அம்மாவின் புகைப்படத்தை வைத்து பார்த்தவாறு சிறிது நேரம் புலம்பி அழுது கொண்டிருந்தவள், அப்படியே அன்னையின் படத்தை கட்டிப்
பிடித்தவாறே உறங்கியும் போனாள்.
இதே நேரம், அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்ப்பதற்காகவே வெளியே வந்த மாமியாரோ, தன் மருமகளை தேடி சமையல் அறைக்குள் சென்றவர், அவள் இல்லை என்பதை உணர்ந்து, மாடியேறி வந்து, அவள் அறை கதவை தட்ட, ஆழ்ந்த உறகத்தில் இருந்தவளுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை போலும், கதவை தொடர்ந்து தட்டிக் கொண்டிருந்தவருக்கு அவள் இன்னும் கதவை திறக்காததில் கோவம் வர, பொறுமை இழந்தவரோ கதவை வேகமாக தட்ட தொடங்கினார்.
கதவு உடையும் அளவு வந்த சத்தத்தை கேட்டு பதறி எழுந்தவளோ "அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே.. அத்தை வேற திட்டுவாங்களே" என்று பயந்தவாறே கதவை திறக்க,
அவளை கண்ட மாமியாரோ "என்னடி பண்ணிட்டு இருக்க.. எவ்வளவு நேரம் கதவு தட்டுறேன் திறக்க இவ்வளவு நேரமா.."
"சாரி அத்தை.. தூங்கிட்டேன்"
"அப்படி என்ன வேலைய கிழிச்சிட்டன்னு தூக்கம் வேண்டி கிடக்கு.. எந்நேரம்ன்னு தூங்கிட்டே இரு.. வீடு நல்லா உருபடும்.. ஆமா.. நீ நிஜமாலே தூங்கிட்டியா.. இல்ல கிழவி கொஞ்சம் நேரம் தட்டட்டும்ன்னு வேணும்ன்னே திறக்காம இருந்தியா"
அதைக் கேட்டு தன்னை நோக்கியவளை கண்டவர் "என்ன பார்க்குற.. நீ கண்டிப்பா அப்படி நினைச்சாலும் நினைச்சிருப்ப.. இதுல உன் தங்கச்சிகாரி, நான் தான் உன்ன கொடுமை பண்றதா நினைப்பா... இவ்வளவு வயசாகியும் உங்ககிட்ட வந்த அசிங்க படுறேன்ல எல்லாம் என் தலையெழுத்து" என்று தலையில் அடித்தவாறே,
"ஏன்டி.. உனக்கு கொஞ்சமும் அறிவில்ல.. வயசானவ மாடியேறி வந்து இவ்வளவு நேரம் நிக்கிறேனே கால் வலிக்குமென்னு, அத்த உள்ள வந்து உக்காருங்க கால் வலிக்க போகுது அப்படின்னு சொல்ற பழக்கம் கூடவா இல்ல.. ஏதோ பிச்சகாரி மாதிரி வாசலையே நிக்க வச்சி புலம்ப விட்டுட்டு இருக்க.. அது சரி மரியாத தெரிஞ்சவளா இருந்தா.. இப்படி சொல்லிருப்ப ஊட்ட வேண்டிய இடத்தில தான் ஊட்டலயே.. என் மகன் தான் பாவம் உன்ன எப்படி கட்டி மெய்க்கிறான்னு தெரியல.." என்று புலம்ப,
அதைக் கேட்டு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டவளோ "உள்ள வந்து உக்காருங்க அத்தை" என்று கூறி வழிவிட்டு நிற்க,
"ம்க்கும்.. உன்கிட்ட எல்லாம் கேட்டு வாங்கணும்ன்னு என் தலைல எழுதி இருக்கு பாத்தியா.. இந்த கொடுமைய எங்க போய் சொல்ல" என்று கூறியவாறே அவளின் அறைக்குள் நுழைந்தவரோ படுக்கையில் அமர்ந்து கொண்டு,
"ஏய் மாடியேறி வந்ததுல காலு வலிக்குது தைலம் இருந்தா எடுத்து தேச்சி விடு"
அதைக் கேட்டு தன்னிடம் இருக்கும் கால் வலி மருந்தை எடுத்து வந்தவளோ மாமியாரின் காலின் கீழ் அமர்ந்து, அவர் காலில் அம்மருந்தை நன்கு தடவி பிடித்துவிட்டாள்.
சிறிதும் நேரம், அவர் கால்களை பிடித்து அமர்ந்திருந்தவளை கண்டவர் போதும் என்று கூறி பிடிப்பதை நிறுத்த சொல்ல, அவர் காலை விட்டு விலகியவளோ,
"அத்தை குடிக்க எதுவும் வேணும்மா"
"ம்.. தல வலிக்குது சூடா காபி போட்டு கொண்டா"
அதைக் கேட்டவளோ வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்து அவருக்கான தேனீரை தாயார் செய்து எடுத்து கொண்டு தன் மாமியாரை காண, தன் அறைக்குள் சென்றவள் அவரிடம் தேனீரை நீட்ட,
அவள் கொடுத்ததை கையில் வாங்கியவரோ "சமையல் ஒன்னு தான் உருப்படியா பண்ற.. மத்தபடி ஒருவேளைக்கும் லாயிக்கு இல்ல" என்று திட்டியவாறே தேனீரை குடித்து கொண்டிருக்க,
அப்போது வீட்டிற்குள் "வித்யாமா.." என்று அழைத்தவாறே ஒருவர் நுழைய,
அவரின் குரல் கேட்டு முகம் மலர்ந்தவளோ "அப்பா" என்றவாறே அறையிலிருந்து படியேறங்கி தந்தையின் முன்னே வந்து "வாங்க அப்பா.. எப்படி இருக்கீங்க"
"நான் நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க.. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க"
"எல்லாரும் நல்லா இருக்கோம்ப்பா.. இப்படி வந்து உக்காருங்க" என்று அவர் கைப்பிடித்து கூட்டி வந்து சோஃபாவில் அமர வைத்துவிட்டு அருகில் அமர்ந்தவளோ "இப்போ கால் வலிலாம் எப்படிப்பா இருக்கு அப்பா" என்று கேட்டவளின் கண்கள் கலங்க,
தன் மகளின் அழுகை கண்டு பதறியவரோ "அப்பாக்கு.. ஒன்னும் இல்லைடா.. நீ அழாத அப்பா ரொம்ப நல்லா இருக்கேன்" என்று கூறி, அவள் கண்ணீரை துடைத்து விட,
"அப்பா.. நீங்க தனியா கஷ்டபடுறத பாத்துட்டு.. ஒரு மகளா என்னால உதவ முடியலன்னு நினைக்கும் போது மனசு வலிக்குதுப்பா"
"அப்பாக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. அடிக்கடி மேகலையும் ராஜன் மாப்பிள்ளையும் என்ன வந்து பாத்துட்டு தான் போறாங்க.. அது மட்டுமில்லமா அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போது கூட.. ராஜன் மாப்பிள்ள தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் செலவு பண்ணி.. என்ன பாத்துகிட்டார்"
"தெரியும்ப்பா மேகல சொன்னா.. அவங்க ரெண்டு பேரும் எனக்காக கவலபட்டு சப்போட் பன்றதால தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்"
"அப்புறம் என்ன... எதையும் நினைச்சி மனச குழப்பிக்காம.. நீ சந்தோஷமா இருந்தாலே எனக்கும் சந்தோஷம்"
"சரிப்பா இருங்க.. உங்களுக்கு குடிக்க சூடா டீ போட்டு கொண்டு வாரேன்" என்று கூறி, சமையல் அறைக்குள் சென்று தன் தந்தைக்கு பிடித்தமான இஞ்சி தேனீரை போட்டு எடுத்து வந்து அவரிடம் நீட்ட,
அதன் வாசனையை நுகர்ந்தவரோ "ரொம்ப நாள் ஆச்சு.. என் மக கையாள இஞ்சி டீ குடிச்சு" என்று கூறியவாறு அவளிடமிருந்த தேனீரை வாங்கி ஒரு மிடர் குடித்தவர் "என் மக போடுற இஞ்சி டீயோட டேஸ்ட்டே தனி தான்" என்று கூறி கொண்டிருக்க, படியிறங்கி வந்த நாகவள்ளியை (வித்யா மாமியார்) கண்டவரோ எழுந்து நின்று "வாங்க சம்பந்தி... எப்படி இருக்கீங்க"
"இருக்கேன் இருக்கேன்.. போன வாரம் உங்களுக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு கால் வலின்னு வித்யா சொல்லிட்டு இருந்தா.. இப்போ எப்படி வந்தீங்க.. அதுக்குள்ள சரியா போச்சா என்ன"
"ஆமா... சம்பந்தி இப்போ பரவாயில்ல"
"சந்தோஷம்.. என்ன விஷயமா வந்தீங்க"
"இந்த வழியா வேலையா வந்தேன்.. அப்படியே வித்யா பாத்துட்டு வீட்டுல எல்லாரையும் பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்"
"இதையே சொல்லி தான் அடிக்கடி வரீங்க.. பாக்குறவங்க உங்கள தான் தப்பா பேசுவாங்க வீட்டில நல்லா ரெஸ்ட் எடுங்க... இல்லன்னா போன கால் வலி திரும்ப வந்திட போகுது"
"புரியுது சம்பந்தி.. இனி அடிக்கடி வர மாட்டேன்.. கவபடாதீங்க"
"ம் புரிஞ்சா சரி.. அப்புறம் குழந்தை இருக்கிற வீட்டுக்கு வரும் போது இப்படி தான் கை வீசிட்டு வருறதா.. நான் சொல்லி தான் தெரியணும்ன்னு இல்ல.. பசங்க வந்து எதுவும் வாங்கிட்டு வரலயான்னு கேட்டா.. உங்க மனசு கஷ்டபட கூடாதுன்னு தான் சொல்லுறேன் தப்பா நினைச்சிக்காதீங்க"
"இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு சம்பந்தி... உண்மைய தான சொல்லுறீங்க... நான் தான் வேலையா வந்ததுல வாங்க மறந்துட்டேன்.. அடுத்த தடவ இப்படி நடக்காது"
"சரி.. இப்போலாம் உங்க பொண்ணு ஒருவேளையும் ஒழுங்கா செய்றதே இல்ல.. வர வர சோம்பேறியா எப்போ தூங்க நேரம் கிடைக்குதுன்னு தூங்குறதுலயே திரியுறா.. அப்படியே வந்ததுக்கு உங்க பிள்ளைக்கு புத்திமதி சொல்லிட்டு கிளம்புங்க.. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று கூறி, அவர் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
அவர் வரும் போதெல்லாம் மகளை பற்றி தேடி கண்டுபிடித்தாவது குறை கூறுவார் என்பதை உணர்ந்தவருக்கு, இது புதிதல்ல என்பதால் அவர் பேச்சை பொருட்படுத்தாமல் விட்டு விடுவார்.
இப்போது, அவளின் தந்தையோ "சரிமா அப்போ நான் கிளம்புறேன்.. மாப்பிளைய கேட்டாதா சொல்லு"
"சரிப்பா.. அப்புறம் அத்தை பேசின எதையும் மனசுல வச்சிக்காதீங்க"
"வரும் போதெல்லாம் கேக்குறது தான பழகி போயிடுச்சு.. அத விடு ஒருநாள் பசங்கள கூட்டிட்டு வீட்டுக்கு வாமா" என்று கூறிவிட்டு அங்கிருந்து விடை பெற்றார்.
இப்படியே நேரங்கள் கடக்க, மதியம் சாப்பாடை முடித்து குழந்தைகளுக்கு தின்பண்டம் எதாவது செய்து கொடுக்க எண்ணி, அதையும் செய்துவிட்டு இதனால் சேர்ந்த பாத்திரத்தையும் கழுவிவிட்டு பசங்களின் அறைக்கு தின்பண்டத்துடன் வந்தவளை கண்ட, குழந்தைகளும் விளையாடுவதை விட்டுட்டு "அம்மா.." என்று அவளை சுற்றி கொள்ள,
அவளோ "ஸ்நாக்ஸ் வேணும்ன்னா.. சமத்து பிள்ளைங்களா அவங்க அவங்க ஹோம் வொர்க் பண்ணீங்கன்னா தருவேன்.. இல்லன்னா ரெண்டு பேருக்கும் ஸ்நாக்ஸ் இல்லை.. எப்படி வசதி"
தின்பண்டதிற்கு ஆசைபட்டு வேறு வழியின்றி தங்களின் பாட புத்தகத்துடன் எழுத அமர, அவர்களை கண்டு புன்னகைத்தவளோ "ரேஷ்மா உனக்கு ஏதோ புராஜக்ட் கொடுத்ததா அம்மா சொன்னா.. என்னன்னு காட்டு அம்மா வரும் போது திங்ஸ் வாங்கிட்டு வந்துருவா.. டேய் பிரவீன் உனக்கும் புராஜக்ட் இருந்தா சொல்லு.. உனக்கும் சேத்து வாங்க சொல்லிடலாம்" என்று கூறி இருவரின் வீட்டு பாட புத்தகத்தை வாங்கி பார்த்தவாறே வாங்க வேண்டிய பொருளை எல்லாம் ஒரு தாளில் எழுதியவளோ, பகிரி மூலம் மேகலைக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினாள்.
சிறிது நேரம், இப்படியே அவர்கள் தின்பண்டம் சாப்பிட்டவாறு வீட்டு பாடங்களை வித்யாவின் உதவி மற்றும் உரையாடலுடன் எழுதி கொண்டிருக்க, ரேஷ்மாவோ "அம்மா.."
"என்ன டா.."
"எங்க ஸ்கூல்ல டிரெடிஷ்னல் கிளாஸ்லாம் கொண்டு வந்திருக்காங்க.. நான் கூட பரதநாட்டியம் சேந்திருக்கேன்.. ஆனா.." என்று இழுக்க,
"சூப்பர்டா நல்ல விஷயம் தான.. இதுக்கு எதுக்கு டல்லாகுற"
"டெய்லி ஈவ்னிங் ஒன் ஹவர் கிளாஸ் இருக்கும்.. நல்லா தான் இருக்கு.. ஆனா எனக்கு தான் சரியா ஆட வர மாட்டிக்கு.. எல்லாரும் செகண்ட் ஸ்டேஜ் போயிட்டாங்க.. நான் தான் ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கேன்.. மேம் கூட இங்க போடுற ஸ்டெப்ஸ வீட்டுலயும் கொஞ்சம் பிராக்டீஸ் பண்ண சொன்னாங்க.. நேத்து கூட அம்மாகிட்ட ஆடி காட்டினேன்.. நல்லா தான் ஆடுற.. ஆனா எனக்கு பரதம் தெரியாது.. நீ வித்யா அம்மாகிட்ட ஆடிக்காட்டு.. அவங்க சொல்லி தருவாங்கன்
னு சொன்னாங்க"
"அவ்வளவு தான.. நீ இப்போ ஆடி காட்டு.. எப்படி இருக்குன்னு அம்மா சொல்லுறேன்"
இதை கேட்டு பெண்ணவளும் தன் அன்னையின் முன் ஆடி காட்டினாள்.