• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்ல்மார்க்ஸ் ஓர் அசுரன்❤️‍🔥

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
கார்ல்மார்க்ஸ் என்பவர் யார்?" என்று கேட்டால் குழந்தை கூட சொல்லும் "அவர் ஒரு கம்யூனிஸ்ட்" என்று. கம்யூனிஸ்ட் என்றால் பொதுவுடைமை வாதி.
உலக மக்கள் எல்லாரும் ஒன்றே, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமநிலை வேண்டும்" என்ற தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் பேசிய தோழர் கார்ல்மார்க்ஸ்ஸின் தத்துவம் இந்திய தேசத்துக்கு பொருந்தாத தத்துவம் என்றும் அவரது தத்துவம் இந்தியாவை சிதைத்து விட்டது என்றும், ஒருவன் சொல்வானேயானால், அவன் பொதுவுடைமைக்கு எதிரி என்பதில் ஐயமில்லை.

பொதுவுடைமைக்கு எதிரி என்றால் அவன் ஏகாதிபத்தியத்தின் அடிமை.
கார்லமார்க்ஸ் இந்தியாவின் அரசியல் குறித்து எழுதியவை அனைத்துமே, மிகத் துல்லியமாக, இந்திய சமூகத்துக்கு பொருந்தும்" என்று நான் சொன்னால் நீ என்ன கம்யூனிஸ்ட்டா?" என்று கேட்பார்கள்.
பெருமைக்குரிய கம்யூனிச குழுவில் ஒரு அங்கமாக இருக்க எனக்கு தகுதி இருக்குமானால், நான் மனித உயிராக வாழ தகுதியுடையவள் என்று பெருமை கொள்வேன்.
இந்தியாவை பற்றி கார்ல்மார்க்ஸ கணித்து எழுதியவை பலவும் ஏற்கனவே, இந்திய அரசியல் வரலாற்று பக்கங்களில் மிகத் துல்லியமாக எழுதப்பட்டு விட்டன.
இந்தியா பற்றி 1853 ஆம் ஆண்டு, கார்ல்மார்க்ஸ் எழுதிய கட்டுரையில்,
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் நாச செயல்களை கண்டித்ததோடு, பிரிட்டிஷ் அரசு தன்னையறியாமலே இந்திய மக்களை ஒன்றுபடுத்தி, கிளர்த்தெழ தூண்டுகிறது என்றும் புரட்சி உருவாகும் என்றும் கூறியிருந்தார்.
அன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான சிப்பாய்க் கலகம் வெடித்தது. மார்க்சின் வார்த்தை மெய்த்தது.
இந்தியா பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் இருப்பதாக மார்க்ஸ் குறிப்பிட்டார்.
1.பிரிட்டனில் முதலாளித்துவ ஆட்சி தூக்கி எறியப்பட்டு தொழிலாளி வர்க்க ஆட்சி உருவாக வேண்டும்.

2.இந்தியர்கள் தமது வலிமையை பெருக்கி, ஒன்றுபட்டு பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை முழுமையாக தூக்கி எறிய வேண்டும்.

மார்க்ஸ் கூறிய இரண்டாவது வழியில் தான் நம் இந்திய தேசம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டது” என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே மர்க்ஸ்ஸின் தொலைநோக்கு பார்வை, என்பது இந்திய நாட்டு சோதிடனின் எதிர்கால கணிப்பை விட மிகவும் துல்லியமானது என்பேன்.
இந்தியச் சமூகம், தன்னுடைய ஆதி பூர்வீக நாட்களில் பொதுவுடைமை சமூகமாகத்தான் இருந்தது. அதாவது விளை நிலங்கள் அவ்விடத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது.
நிலத்தில் பயிரிட்டு, விளைச்சல் அறுவடை ஆனதும் ஊர் மக்கள் அனைவரும் சரிசமமாக பங்கிட்டு கொள்வர். இதுதான் நிலப் பொதுவுடைமை சமூகம்.
பண்டமாற்று முறை பொதுவுடைமை சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கியது.
பண்டமாற்று முறையில் உப்பும் சர்க்கரையும், பாலும் அரிசியும், வெண்ணெயும் வேர்க்கடலையும் ஒரே மதிப்பை பெறும்.
இத்தகைய பொதுவுடைமை சமூகத்தில் உருவான இந்திய குடிகளை, பொதுவுடமை சித்தாந்தவாதியின் தத்துவம் சிதைத்து விடுமா? எத்தனை வேடிக்கையான வாதம் இது?
மனித உழைப்பை கார்ல் மார்க்ஸ் இரண்டு விதமாக பிரிக்கிறார்.
1.உடல் உழைப்பு, 2. மூளை உழைப்பு
மூளை உழைப்பு இந்தியச் சமுதாயத்தில் மதிப்புடையதாக கருதப்படுவதோடு, மூளை உழைப்புக்கான ஊதியம், உடல் உழைப்புக்கான ஊதியத்தை விட அதிகமாக இருக்கிறது என்று சொன்ன மார்க்ஸ், சமூகக்கட்டமைப்பில் உடல் உழைப்பின் சுரண்டல் குறித்தும் சுட்டிக் காட்டுகிறார்.
எடுத்துக்காட்டாக ஒரே தொழிற்சாலையில் கணிணியில் வேலை செய்பவனுக்கு கிடைக்கும் மரியாதையும் ஊதிய சதவிகிதமும், ஒரு தொழிலாளிக்கு கிடைப்பதில்லை.
அதிலும் சாதியப் படிநிலையில் மேல் தட்டில் இருப்பவர்கள் மூளை உழைப்பிலும், கீழ் படிநிலையில் இருப்பவர்கள் உடல் உழைப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்று சொல்லும் கார்ல்மார்க்ஸ்ஸின் தத்துவம் இந்திய சமூகத்துக்கு பொருந்தாது என்று சொல்வது எத்தனை பெரிய மூடத்தனம்?.
ஜெர்மனியில் பிறந்த மாமேதை இந்தியாவின் நாடித்துடிப்பை இத்தனை துல்லியமாக அறிந்து வைத்திருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்தியச் சமுதாயம் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மதத்தால் மட்டும் பிளவு பட்டிருக்கவில்லை என்றும் இந்துக்களிலேயே பிரிவினைகள் உண்டு என்றும் எழுதிய மார்க்ஸ், இந்து சமுதாய அமைப்பு, பிளவுபட்டு வணிக வர்க்கம், கீழ்நிலை வர்க்கங்கள், தீண்டத்தகாதவர்கள் என்று பிரிந்து கிடப்பதாகவும் கூறினார்.
மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுவது இந்திய சமுதாயத்தின் சாதியக் கட்டமைப்பைத்தான் என்ற உண்மையினை உலக அரங்கில், நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வெட்கப்படுவதால் தான், நம் தமிழகத்தின் இன்றைய ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், மார்க்ஸிய சிந்தனை இந்தியாவை சிதைத்து விட்டதாக கூறுகிறார்.
பிறப்பின் அடிப்படையில் உயர்ச்சி தாழ்ச்சி உண்டென்றும், அதுவே கடவுளின் கட்டளை என்றும் பேசும் தலையில் பிறந்த வர்க்கதினருக்கு கார்ல்மார்க்ஸ்ஸின் பொதுவுடைமை தத்துவத்தை ஏற்கும் பக்குவம் இருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவில் மனிதனை விட பசு உயர்வாக மதிக்கப்படுகிறது. இந்தியாவில் கொழுத்த பசுக்களையும் நலிந்த எலும்பு தள்ளிய மனிதனையும் ஒரே இடத்தில் காணமுடியும் என்று சொன்ன மார்க்ஸ்,
பசுக்களை தெய்வமாக வணங்கி விட்டு மனிதனை வர்க்க பேதத்தால் சித்திரவதை செய்யும் தேசம் முன்னேற வழியில்லை” என்றும் குறிப்பிடுகிறார்.
தன் வரலாற்றை மதத்தை கொண்டு எழுதும் தேசம் இந்தியா” என்று விமர்சிக்கிறார்.
காதலர் தினத்தன்று பசுவை கட்டிப்பிடித்து காதல் கொள்ள அறிவுரை வழங்கியவர்களுக்கு, கார்ல்மார்க்ஸ்ஸின் மனிதநேயமிக்க வரிகள் பெரும் அசுரனாகத்தான் தெரியும்.
இந்திய நாட்டின் பூர்வீகக்குடிகளை அசுரனாக சித்தரித்தவர்கள், இந்திய பூர்வ குடிகளின் நன்மை பற்றி சிந்தித்த பொதுவுடைமை வாதியை அசுரனாக சித்தரிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை..

யார் எப்படி சித்தரித்தாலும் மார்க்சிசம் பாசிசத்துக்கும் நாசிசத்துக்கும் எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அசுரன் தான்.

அசுரன் வெல்லும் காலம் தொலைவில் இல்லை.....


சக்தி மீனா........
 
  • Love
Reactions: Vimala Ashokan