அத்தியாயம் - 2
ப்ரியமானவர்களின்நினைவுகள் ப்ரியமாக
இருக்கிறதோ இல்லையோ..?
பிரியாமல் இருந்து விடுகிறது
இதயத்தில்…!
காரில் இருந்த இருவரது முகமும் உர்ரென்று இருந்தது. அரவிந்தின் கோபத்தில் கார் பறந்தது.
காரின் வேகத்தைப் பார்த்துப் பயந்தவள், “எதுக்கு இவ்ளோ ஸ்பீடா போற, எனக்கு பயமாயிருக்கு, அர்வி…! நீ இன்னும் உன்னோட லைசென்சையும் ரெனிவல் பண்ணல, எதாச்சும் விபரீதமா ஆச்சு, உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது…” என்று அவள் சொல்லச் சொல்ல, அவனது வேகம் அதிகமானதே தவிர குறைய வில்லை.
அரவிந்தின் வேகத்தைப் பார்த்து பயந்தவள், “டேய் உனக்கு ஒரு தடவை சொன்னாப் புரியாதா? எருமை! மெதுவாப் போடா…!” என்றதும், பட்டென வேகத்தைக் குறைத்து, சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினான்.
அந்தச் செயலில் அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவன் முகம் இறுகியிருப்பதை உணர்ந்து, ‘ஐயோ! ஓவரா பேசிட்டோமோ? இவன் ஏடாகூடமா எதையாவது பேசப் போறான்..
கடவுளே…! காப்பாத்து.’ என்று எச்சிலை விழுங்கிய படி பதட்டத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வெல்… உன்கிட்ட பேசனும் எனக்கு, நானே யோசிச்சு பொறுமையா உன்னை ஹேன்டில் பண்ணனும்னு நினைச்சேன். பட், உன்னோட இந்த கிறுக்குத்தனம் எல்லாம் பார்த்தா, என்னோட பொறுமையே எருமை ஏறி செவ்வாய் கிரகத்துக்குப் போயிடும் போல. சோ, இப்பவே உன் கிட்ட பேசிடுறது நல்லது. இனி ஒரு சந்தர்ப்பம் நாம தனியா பேசக் கிடைக்குமோ கிடைக்காதோ… என்ன நான் சொல்றது, சரிதானே…?” என்றான் வில்லன் ரேஞ்சில்.
“ஆங்… என்ன… என்ன பேசப் போற, எதுவா இருந்தாலும் வீட்டுல போய் பேசிக்கலாம், இப்போ நீ காரை எடு…” பதட்டத்தில் பெண்.
“ஆஹா… புரிஞ்சிடுச்சு போலயே, என் ராட்சசிக்கு… ம்ம்… அப்போ இப்பவே பேசிடுவோம்… சொல்லு, உன் கிட்ட நான் லவ் சொல்லி எத்தனை வருஷம் ஆச்சு…?” அமைதியாக ஆரம்பித்தான், அரவிந்த்.
“…..” அமைதி பெண்ணிடம்
“ம்ம்… சொல்லுமா ஸ்ருதி தேவி சொல்லு…” கொஞ்சம் கிண்டல் தொனியில் ஒலிக்க,
“…..” இப்போதும் அதே அமைதி அவளிடம்.
“ஹேய்! இப்போ சொல்றியா, இல்லையா…” அமைதியும், கிண்டலும் சற்று மாறி, இறுகிய குரலில் அவன் குரல்.
“…..” இப்போதும் பேரமைதி பெண்ணிடம்.
“நீ சொல்ல மாட்ட!” அதட்டலாக மாறிவிட்டது குரல்.
“ஓகே வெல்! தென், நீ சொல்லாம இந்தக் கார் இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகராது!” ஜன்னல் எல்லாவற்றையும் ஏற்றி விட்டு, ஏசியை ஆன் செய்து சீட்டில் நன்றாக சாய்ந்து விட்டிருந்தான்… கை தானாக ‘எஃப் எம்’ ஐ ஆன் செய்திருந்தது.
“வணக்கம்! இது கோடை பண்பலை 100.8. நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது காதல் கலட்டா…” என ஆர்பார்ட்டமாய் ஒரு பெண் தொகுப்பாளினி பேசிக் கொண்டிருந்தாள்.
தொடர்ந்து, “காதல் சொல்லும் காதலன்/காதலி அலட்சியப்படுத்தும் காதலி/காதலனைப் பற்றி, தங்கள் அபிப்ராயங்களை நீங்கள் சொல்லலாம். அதற்கு முன், காதலுக்காக, காதலர் களுக்காக இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த வசீகரா எனும் படத்தில் இருந்து ஒரு அருமையானப் பாடல்” என்று கூறி, அந்தப் பாடலை ஒலிக்க விட்டாள்.
‘ஒரு தடவை சொல்வாயா… உன்னை எனக்கு பிடிக்கும் என்று..’ எனத் தொடங்கிய பாடலை, தானும் சேர்ந்து ஹம் செய்த படியே கண்களை மூடியிருந்தான், அரவிந்த்.
ஸ்ருதிக்குத் தான் அய்யோ என்றிருந்தது. நேரம் காலம் தெரியாம இந்த எப் எம் வேற, என்று தலையிலடித்துக் கொண்டாள்…
‘வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே, ஒரு தடவை…’
“அர்வி…” மெதுவாய் ஆரம்பித்தாள் ஸ்ருதி.
“….” இப்போது அரவிந்திடம் அமைதி.
“அர்வி ப்ளீஸ்…” கெஞ்சல் குரலில் பெண்.
சீட்டில் சாய்ந்தபடியே பார்வையை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்.
விழிகளில் தவிப்புடன், கையைப் பிசைந்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்த, அந்தப் பாவனையில் சட்டென்று பார்வையை தழைத்தவள், “பைவ் யேர்ஸ் ஆச்சு” முணுமுணுப்போடு சொல்ல,
“ம்ம் கேட்கல, சத்தமா சொல்லு…” என்றான் குரலில் பழைய குறும்பு எட்டிப் பார்த்ததோ…! அதை உணர்ந்தவள்,
“பைவ் இயேர்ஸ், பாஞ்ச் சால், அஞ்சு வருஷமாச்சு…” கடுப்பாய் கத்தியவளை, கூர்ந்து நோக்கியவன்,
“ம்ம்… பைவ் இயேர்ஸ்… இந்த பைவ் இயேர்ஸ் நீ ஓகே சொல்லாம, எனக்கு எப்படி போயிருக்கும் நீயே சொல்லேன்” என்றான் குரலில் வலியோடு.
‘அட உலகை ரசிக்க வேண்டும், நான் உன் போன்ற பெண்ணோடு’ என்று ஹரிஹரனின் குரலில் பண்பலையில் அடுத்து ஒலித்த பாடலை நிறுத்தியவன், அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
“ம்ம் பதினைஞ்சு வயசு பொண்ணுக் கிட்ட லவ் சொல்லும் போது அந்த அறிவு இருந்திருக்கனும்.” என்றாள் அவளும் எரிச்சலாய்…
அவளையே ஆழ்ந்து பார்த்தவன், ஒரு பெரு மூச்சை விட்டு, “ம்ம்… இல்லை தான், அப்போ உன் மேல இருந்த காதல் என் அறிவை மறைச்சுடுச்சு… நீ மட்டும் அந்த செம்பட்டைத் தலையனோட சேர்ந்து,
என்னைக் கிண்டல் பண்ணாம இருந்திருந்தா, நான் தான் முக்கியம்னு அவன் கிட்ட சொல்லியிருந்தா, நான் ஏன் உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்கப் போறேன்…”
“அவன் கூட சேர்ந்துட்டு என்னை இன்சல்ட் செய்யவும், அவன் உன்னை கேரிங்கா பார்க்கவும் ஒரு பயம். அதான் நீ என்னை விட்டுப் போயிடக் கூடாது. நான் தான் உனக்கு எல்லாமுமா இருக்கனும்னு நினைச்சு, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க பயந்து தான், அந்த வயசுல உனக்குப் புரியுமா, புரியாதான்னு கூடத் தெரியாம, உன்கிட்ட வந்து அந்த மாதிரி லவ்வை சொன்னேன்…” என்றபடியே அவளது நடுங்கிய கரங்களை தனது கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டான்.
நடுக்கம் மெல்லக் குறைய, “நீ சொல்லிட்டு போனதும் எனக்கு பெரிய ஷாக், அப்போ தான் விஷ்ணு வந்தான். என்னன்னு விசாரிக்கும் போது உன்னைக் காட்டிக் கொடுக்கத் தோனல, ஒன்னுமே சொல்லாமப் போயிட்டேன்.
நைட் முழுதும் தூங்கவே இல்ல. அடுத்த நாள் நீயும் சிவாவும் ஹாஸ்டல் போயிட்டீங்க, எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருந்துச்சு…”
“ஏன், என் கிட்ட சொல்லாம போயிட்டன்னு தோனுச்சு, ஒருவேளை என் மேல கோபமா, அதனால் பிடிக்காம என்னைப் பார்க்காம போயிட்டியோன்னு நினைச்சேன்… உன் மேல கோபம் அதிகமாச்சு, அதான் அதுக்கப்புறம் விஷ்ணு கூட சேர்ந்து உன்னை வெறுப்பு ஏத்தினேன். ஆனா, அவன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட், நீ என்னை லவ் பன்றதை அவன் கண்டுப்பிடிச்சுட்டான். நீ அவனையும் முறைச்சிட்டே இருப்பியா, அதான், அவனும் என் கூட சேர்ந்து உன்னை வெறுப்பேத்தினான்…” என அவளும் அன்றைய சம்பவத்தை நினைவு கூற,
“சோ… உங்க போதைக்கு என்னை ஊறுகாயா ஆக்கியிருக்கீங்க ரெண்டு பேரும், அப்படித்தான…!” என்றபடி இன்னும் நெருங்கியிருந்தான் அவளிடம்.
“இப்போ எதுக்கு இவ்வளவு பக்கம் வர, நான் இன்னும் உனக்கு ஓகே சொல்லல….” என்றாள் கதவை ஒட்டிக் கொண்டு.
“அப்போ சீக்கிரம் ஓகே சொல்லு…” என அவள் முகத்தைக் கையில் ஏந்தி விழிகளில் பார்வையை பதித்தான் ஆழமாக.
அவன் பார்வையில் திணறியவள், “என்ன இப்படியெல்லாம் பண்ற…” என முணுமுணுக்க,
“எப்படி பண்றேன்… இப்படியா பண்றேன்…” என அவளது நெற்றியில் இதழ் பதிக்க, அவள் அதிர்ந்து நோக்க, “இல்லை இப்படி பண்றேனா….” என கன்னங்களில் அடுத்தடுத்து தன் தாக்குதலைத் தொடர்ந்தான்.
அவனது தாக்குதலில் முதலில் அதிர்ந்தவள் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவனிடம் மயங்கி முத்தத்தில் மூழ்கிப் போயிருந்தாள். பல நிமிடங்கள் கழிந்த இருவரது மோன நிலையையும், அரவிந்தின் போன் அடித்து கலைக்க, வேகமாய் அரவிந்தை தள்ளிவிட்டவள்,
ஜன்னல் புறம் திரும்பி தன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு மூச்சுக்களை ஆழமாய் எடுத்து விட்டாள்.
ஸ்ருதியின் செயலில் முதலில் திகைத்தவன், பின் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, அடித்து ஓய்ந்த செல்லை எடுக்க, அது மறுபடியும் ஒலித்தது. திரையில் சிவா என்றிருக்க, எடுத்து ஹலோ சொல்லும் முன்னே, சிவா சொன்ன செய்தியில், அரவிந்தின் முகம் பயத்தைக் காட்டியது.
“சசி இன்னும் எவ்வளவு நேரம் இந்த அருவியவே பார்த்துட்டு இருப்ப… என்ன சொல்லனுமோ, அதைச் சீக்கிரம் சொல்லு…” சிவா.
“சொல்லனும்… நிறைய சொல்லனும்… ஆனா, எப்படி ஆரம்பிக்க, தெரியல. இதை உங்ககிட்ட சொல்ல எனக்குப் பயமா இருக்கு.. நீங்க என்னைத் தப்பா நினைச்சிடக் கூடாதே…” – சஷ்டி
“எதுக்கு இவ்வளவு தயக்கம். நான் உன்னை தப்பா எடுத்துக்கவே மாட்டேன்.. நீ பயப்படாம சொல்லு..”
“ம்ம்...” என்று ஆழமூச்செடுத்தவள், நேரே சிவாவிடம் சென்று, அவனின் முகத்தை இருகைகளிலும் ஏந்தி, கண்ணை நேர் கொண்டு பார்த்தபடியே, “ஐ லவ் யூ, சிவா..! லவ் யூ சோமச்..!” என்று கூறிய படியே, அவனது இதழில் தன் இதழைப் பொருத்தினாள்.
சஷ்டியின் ஒவ்வொரு செயலையும் வியப்பு மாறாமல் பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் “ஐ லவ் யூ..” என்றபடியே முத்தம் கொடுக்கவும், அந்த முத்தத்தில் திளைக்க வேண்டும் என்பதையும் மீறி, அவனுக்குள் பயம் துளிர் விட ஆரம்பித்தது.
‘இது தான் நினைத்தது போல மிகச் சிறிய விஷயம் இல்லையோ? ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறாள்’ என அவன் யோசிக்கும் முன்னே, அவனை விட்டு நகர்ந்தவள்,
“என்னோட காதல் பொய்யில்லை, சிவா, இது இப்போ ஆரம்பிச்ச காதல் இல்லை,
எப்போ நீங்க ஸ்ருதியோட எங்க காலேஜுக்கு வந்தீங்களோ, அப்போ ஆரம்பிச்சது.” என தன் மனதில் இருந்த பெரிய உண்மையை, அவனிடம் ஒத்துக் கொண்டாள், சஷ்டிகா.
ஸ்ருதியை காலேஜில் விடும் போது என்றால், மூன்று வருடங்களுக்கு முன்பா, அப்போதிருந்தேவா, வியப்பும் மகிழ்ச்சியும் ஒரு சேர, அவளையே பார்த்தான்.
அவளுக்கு அப்படி ஒன்றும் இல்லை போல, மீண்டும் அருவியில் பார்வையைப் பதித்தவள், “எனக்கு ஒரு அக்கா இருக்கா, அவ பேரு ஷ்ரவந்தி.”
அந்தப் பெயரைக் கேட்டதும், சிவாவின் முகம் பல உணர்ச்சிகளைக் காட்டியது.
“அவ இருக்கா, ஆனா இல்லை.” என்று விரக்தியாக கூறியபடி, அவன் முகத்தைப் பார்த்தாள். அவனுக்கும் சிலது புரிவது போலத் தோன்றியது.
“இருக்கா, ஆனா இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம், எனக்குப் புரியல!
உன்னோட அம்மா கூட இருக்காங்க தானே!” என்றான் யோசனையாக.
“ம்ம்… இருக்காங்க. ஏதோ இருக்காங்க..” குரல் முழுவதும் விரக்தி அவளிடம்.
“ப்ளீஸ் சசி, ஆதி முதல் அந்தம் வரை முழுசா உன்னைப் பத்தி, என்கிட்ட எதையும் மறைக்காமச் சொல்லு. நீ சொன்னாத்தான் எனக்கும் தெரியும். உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாகும். ப்ளீஸ்..” என்றான் அவளை நெருங்கி, தனக்குள் கொண்டு வந்து.
“ஆமாம், சொல்லனும், எல்லாதையும் சொல்லனும் உங்ககிட்ட சொல்லிட்டா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்றவள் தன் குடும்பத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாள்.
ராஜவேலு - பத்மா இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். ராஜ வேலுவிற்கு பூனேவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசியர் வேலை. பத்மா இல்லத்தரசி… இவர்களுக்கு ‘ஷ்ரவந்தி – சஷ்டிகா’ என்ற இரு பெண் குழந்தைகள். மூத்தவள் ஷ்ரவந்தி, இளையவள் சஷ்டிகா…!
பறவை தன் சிறகை விரித்துப் பறப்பது போல், அழகாய் நகர்ந்தது அவர்களது வாழ்க்கை… ஷ்ரவந்தி தன் கல்லூரிப் படிப்பை, அவள் தந்தை பணியாற்றும் அதே கல்லூரியில் படித்தாள். தன் பெண்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று அவர்களை உயிராய் நினைத்து வந்தனர். சஷ்டிகாவும் தன் பள்ளிப் படிப்பை முடிக்க, அவள் பெங்களூரில் தான் சேருவேன் என்று அடம்பிடிக்க, வேறு வழியின்றி, மூவரும் சேர்ந்தே வந்து அவளைக் கல்லூரியில் சேர்த்து விட்டுச் சென்றனர்.
அந்தக் கல்லூரியில் தான், ஸ்ருதி சஷ்டிகாவிற்குத் தோழியானது. முதல் வருடம் மிகவும் அழகாகச் சென்றது. சீனியர்களின் ராகிங் ஒரு புறம் வருத்தம் என்றாலும், காலப் போக்கில் அவர்களும் தோழமையாகப் பழக, அந்தக் கல்லூரி மிகவும் பிடித்து விட்டது சஷ்டிக்கு.
அப்போது காவிரி நீர் பிரச்சனை உண்டான நேரம், கல்லூரி எல்லாம் விடுமுறை என்று அறிவித்து விட, யாரிடமும் தெரிவிக்காமல் பூனே சென்றாள்.
அங்கு சென்ற போது அவள் கண்ட காட்சி, இப்போது நினைத்தாலும் அவள் உயிரைக் கசக்கியது.