• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 03

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
46
35
18
Dindigul
காற்று - 03

மதுரை கமிஷ்னர் அலுவலகம், மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அந்த இரவு நேரத்திலும், ஆட்களின் நடமாட்டத்தில் அலுவலகம் பகல் போலத்தான் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இரவு நேர ரோந்துப்படைகள் தங்களது வேலைகளுக்காக கிளம்பிய வண்ணம் இருக்க, “ரவி இன்னைக்கு நீங்க ஜிஎச், கோரிபாளையம் லைன். ஆனந்த் நீங்க ஒத்தக்கடை” என ஒவ்வொருவருக்கும் அவர்களது டியுட்டி செட்யூலை சொல்லிக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.

இன்றைக்கு மதுரையின் அனைத்து காவல்நிலையத்திலும் உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் அனைவரையும் நடு இரவில் மீட்டிங்க் என்று வர சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்கு தன் மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சாமிண்ணா.. இப்போ எதுக்கு இந்த எமெஜென்சி மீட்டிங்க், எங்களை வரச்சொல்லிட்டு சார் இன்னும் வரல..” என வெற்றி ஆரம்பிக்க,

“எனக்கும் தெரியாது சார். ஆன் த வேன்னு மட்டும் மெசேஜ் போட்டுருக்கார்..” என்றுவிட்டு பழனிச்சாமி மீண்டும் வேலையைப் பார்க்க,

“இந்த ஏகன் சார்க்கு முதல்ல ஒரு பொண்ணைப் பார்க்குறோம், நம்ம செலவுலயே கல்யாணத்தையும் முடிக்கிறோம். அப்போதான் நாம நிம்மதியா தூங்க முடியும், மனுஷன் ராக்கோழி மாதிரி நைட் மட்டும்தான் டியூட்டி அலார்ட் பன்றார்..” என மற்றொரு எஸ்ஐயான அன்பு புலம்ப,

“கண்டிப்பா மச்சி, நாம கூட பரவால்லடா. இந்த ஆதவ் பையனைப் பார். கல்யாணம் முடிஞ்சு மூனு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள லீவை கேன்சல் பண்ணி டியுட்டிக்கு வர வெச்சிட்டார். பாவம் பையனுக்கு மத்தது நடந்ததோ, இல்லையோ” என வெற்றி கிண்டலில் இறங்க,

“ஸார், என்னை ஏன்..” என பாவமாக ஆதவ் இழுக்க,

“சும்மா இருடா புது மாப்பிள்ளை உன்னை வச்சுத்தான் ஏகன் சார மடக்கனும். அவர் பாக்கும் போது அப்படியே பாவமா முழிக்கனும் சரியா..?” என அன்புவும் கலாய்க்க, மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

“ஸார்.. இன்னைக்கு நானா” என ஆதவ் பாவமாக முழித்துக் கொண்டு நின்றான்.

“பொண்ணை நான் பார்த்துக்குறேன், கல்யாண செலவை மட்டும் நீங்க பாருங்க..” என்ற கனீர் குரல் கேட்டு எல்லோரும் அட்டேன்சன் பொஷிசனில் நிற்க, அழுத்தமான காலடிச் சத்தத்துடன், கையில் தன் மொபலை சுழற்றியபடி, பார்வையால் அந்தக் கட்டிடத்தையும் வளாகத்தையும் கூர்மையாக அளந்தபடி, கம்பீரமாக நடந்து வந்து அவர்களுக்கு எதிரில் நின்றான் அனேகன்.

“சாமிண்ணா முடிஞ்சதா? அந்த ஃபைல் கட்டை எடுத்துட்டு வாங்க.” என அவருக்கு கூறிவிட்டு, “அப்புறம் ஆதவ்..” என அவனிடம் பார்வையைத் திருப்ப ‘வை மீ’ என பாவமாகப் பார்த்து வைத்தான் பச்சைப் பிள்ளையாக.

“எல்லாருக்கும் உன் மேல அக்கறை சக்கரையா பொங்குதே, அவ்வளவு பாசமா உன்மேல..” அன்பையும் வெற்றியையும் பார்த்துக் கொண்டே கேட்டான் அனேகன்.

அந்தப் பார்வையில் இருந்த சிரிப்பில் ‘டேய் ஏன்டா.. நான் பாட்டுக்கு சிவனேன்னு தானடா’ இருந்தேன் என லுக்கில் ஆதவ் நெளிந்து கொண்டே நிற்க,

“சரி சொல்லு, எல்லாருக்கும் உன் லைஃபை நினைச்சு கவலையோ கவலை. அதனால அதை முதல்ல கிளியர் பண்ணிடலாம். சொல்லு மத்தது எல்லாம்..” என சிரித்துக்கொண்டே இழுக்க,

“ஸார்.. ஸார் நான் பாவம் என்னை விட்டுடுங்க..” எனத் தடாலடியாக அவன் காலில் விழுந்துவிட்டான் ஆதவ்.

“டேய் டேய் என்னடா இவன்..” என அனேகன் சிரித்துக்கொண்டே துள்ளி அடுத்தப்பக்கம் நிற்க,

“அட அப்ரசண்டி..” என்ற வெற்றி அவனைத் தூக்கி நிறுத்திவிட்டு, “உன்னையெல்லாம் எவன்டா டிபார்ட்மென்ட்ல எடுத்தது. இஞ்சினியரிங் முடிச்சமா, ஒரு ஐடி கம்பெனில சேர்ந்தமா, நாலு ஃபிகரா சைட்டடிச்சமா, அப்படியே எஸ்ஸாகி ஆன்சைட் போனோமான்னு இல்லாம, இங்க வந்து எங்களுக்கு என்டெர்டைமென்ட் கொடுத்துட்டு இருக்க..” என நீளமாக பேச,

“விடு மச்சி.. பையன் போக போக சரியாயிடுவான், நாம எல்லாம் இருக்கும் போது விட்டுருவோமா.?” என அன்புவும் கூட்டு சேர, அனேகனும் சிரித்துக்கொண்டே “ச்சில் மேன்..” என ஆதவின் தோளைத் தட்டிவிட்டு பழனிச்சாமி கொண்டு வந்து கொடுத்த கோப்புகளை கையில் வாங்கினான்.

அதுவரை இருந்த இலகுத்தன்மை போய் முகத்தில் கடினமும், வார்த்தைகளில் தீவிரமும் குடிகொண்டது அனேகனுக்கு.

“கைஸ்.. லாஸ்ட் யேர் நம்ம டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு கேஸ் சிபிஐ கைக்கு மாறிச்சு. இப்போ எகைன் அந்த கேஸ் நம்மக்கிட்டயே வந்துருக்கு. அந்த கேஸ் டீடைல்ஸ் சாமிண்ணா உங்களுக்குத் தருவார். யார் யாருக்கு என்ன என்ன வொர்க் ஷெட்யூல்னு எல்லாம் அந்த ஃபைல்லயே இருக்கு. டென் டேய்ஸ்ல இந்த கேஸை முடிச்சிக் கொடுத்துடலாம்னு நான் கமிஷனர்க்கு நம்பிக்கை கொடுத்துருக்கேன்.”

“அதனால உங்க பெர்சனல் ஒர்க் எல்லாம் ஓரம் கட்டிட்டு கொஞ்சம் இந்த வேலையில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கு டவுட்ஸ் இருந்தா சாமிண்ணாக்கிட்ட கேளுங்க. அன்ட் ரொம்ப முக்கியம் இது உங்களுக்குள்ள மட்டும்தான். உங்க ஸ்டேஷன்ல இருக்குற யாருக்கும் கூட தெரியக்கூடாது.” என்றவன்,

“ஓக்கே கைஸ் பை..” எனக் கிளம்பிவிட, “ஷப்பா” என பெருமூச்சு விட்டனர் அனைவரும்.

“சாமிண்ணா எல்லாம் தெரிஞ்சும், நாங்க கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க” என அனைவரும் அவரை முறைக்க, சிரித்துக்கொண்டே அவர்களுக்கான ஃபைலை கொடுத்துவிட்டு நகர்ந்தவரைப் பிடித்த வெற்றி, “சாமிண்ணா பாண்டி மீனா மேடமோட ஃபைலும் கொடுத்துடுங்க, வாங்கிட்டு வரச்சொன்னாங்க.” என ஃபைலுக்காக கையை நீட்ட

“சார் பாண்டி மீனா மேடமோட ஃபைல் மார்னிங்க் வந்து அவங்களே வாங்கிக்கிறேன்னுதான் சொன்னாங்க. முக்கியமா நீங்க கேட்டா கண்டிப்பா கொடுத்து விடக்கூடாதுன்னு சொன்னாங்க…” என்று சிரித்துக்கொண்டே போய்விட,

“இதுக்குத்தான் ஒரே டிபார்ட்மென்ட்ல புருசனும் பொண்டாட்டியும் வேலை பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க. இதுல மேடம் சீனியர் வேற..” என வெற்றியை அன்பு கலாய்க்க,

“இவளை” என பல்லைக்கடித்த வெற்றி “எப்படியெல்லாம் மானத்தை வாங்குறா” என நொந்து கொண்டே, “எல்லாம் என் நேரம், நீயெல்லாம் சிரிக்கிற மாதிரி இருக்கு..” எனப் புலம்ப, அவனைக்கண்டு சிரித்தபடியே எல்லோரும் கிளம்ப, அதுவரை இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அனேகனும் தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஜீப் மீண்டும் மருத்துவமனையை நோக்கி முன்னே செல்ல, எண்ணங்கள் மட்டும் பின்னோக்கி சென்றது. எந்த ஒரு வார்த்தை அவள் வாயிலிருந்து வராது என கர்வம் கொண்டிருந்தானோ, அந்த வார்த்தையை எல்லோர் முன்னமும் கூறி அவனை மொத்தமாக சிதைத்துவிட்டு, யாருமே வேண்டாம் என்று இங்கிருந்து மொத்தமாக போய்விட்டிருந்தாள் அவள்.

‘சின்னத்தான் எனக்கு வேண்டாம்’ அவளிடமிருந்து வந்த இந்த வார்த்தை, அவளது நிராகரிப்பு இப்போது நினைத்தாலும், நெஞ்சை கத்தியால் கீறியது போல் வலித்தது. நான்கு வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது நடந்தது போல அவளது நிராகரிப்பு அதே வலியைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நான்கு வருடத்திலும் அவளைப் போலவே அந்த குடும்பத்தில் இருந்து அவனுமே ஒதுங்கியிருந்தான். அவள் இல்லாத அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல், போலிஸ் குவார்ட்டஸில் அவனுக்கென ஒதுக்கியிருந்த குடியிருப்புக்கு வந்துவிட்டான்.

இதில் இடையில் ஒரு வருடம் கடலூரில் மாற்றலாகி, மீண்டும் மதுரைக்கே வந்திருந்தான். அவளை ஒதுக்கிய வீட்டினரை அவனும் ஒதுக்கியிருந்தான்.

எல்லோரும் அவள் விசயத்தில் சுயநலமாகத்தான் நடந்து கொண்டார்கள் இல்லையென்று மறுக்க முடியாதுதான், ஆனால் அதற்காக என்னை வேண்டாம் என்பாளா.? ஹ்ம்ம் வேண்டாம் என்று என்னை விட்டு இருந்துவிடுவாளா?

இருந்துவிட்டாளே.! இந்த நான்கு வருடமாக தனியாக இருந்துவிட்டாளே.! என்னை எதிர்பார்க்காமல், தேடாமல் இருந்துவிட்டாளே.! இயலாமையில் ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான்.

வலி! வலி! நெஞ்சமெல்லாம் தாங்க முடியாத வலி!, அவளைக் கொன்றுவிடும் அளவுக்கு கோபமும், தனித்து பரிதவித்து போனாளே என்று அவள் மீது பரிதாபமும் தோன்ற இருதலைக் கொள்ளியாய் தவித்து போனான் ஏகன்.

அதற்குமேல் மனதை நிலைப்படுத்தி வண்டியயை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. ஜீப்பை ஓரங்கட்டி ஸ்டியரிங்கில் தலையை சாய்த்தவனின் மனதில் அழையா விருந்தாளியாக வந்தமர்ந்தாள் அவனவள்.

‘சின்னத்தானுக்கு என்னாச்சு..’ என்றபடியே அவன் தலையைக் கோத, ‘வந்துட்டியா அம்மாடீ, எங்க போயிட்ட என்னைவிட்டு? நான் உனக்கு வேண்டாமா.? என்னை விட்டுப் போயிட்டியா.?’ என தவித்து புலம்ப,

‘நான் இங்கேதானே அத்தான் இருக்கேன், நான் விட்டாலும், நீங்க என்னை விடமாட்டீங்கன்னு எனக்குத் தெரியுமே, அதனாலத்தான் நான் போனேன், நீங்க என்னைத் தேடி வருவீங்கன்னு எனக்குத் தெரியுமே’ என அவன் மூக்கைப் பிடித்து ஆட்ட,

‘ம்ம் என் அம்மாடி இல்லாம என்னால இருக்க முடியலையே, உனக்கு நான் வேணுமா வேண்டாமா எல்லாம் எனக்குத் தெரியல அம்மாடி, எனக்கு நீ வேணும், நீ மட்டும்தான் வேணும் அம்மாடீ’ என புலம்பிக்கொண்டே இருந்தவனின் மொபைல் அடிக்க, சட்டென்று தன் நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவன் போனைப் பார்க்க, அது தர்ஷினி என காட்டியது.

அதில் கடுப்பானவன், ‘இவளுக்கு வேலையே இருக்காதா?’ எனச் சலித்தபடியே, “வந்துட்டு இருக்கேன் தர்ஷினி, சும்மா கால் பண்ணாத” எனப் பல்லைக் கடித்துக் கூறியவனுக்கு, அதுவரை இருந்த நிதானம் இப்போது சுத்தாமாக போயிருந்தது.


அவள் வேண்டாம் என்று போனால், நான் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா.? ஹான்.. என்னோடு தான் அவள் வாழ்க்கை, அதை யாராலும் மாற்ற முடியாது. இதில் யார் வருத்தப்பட்டாலும் எனக்கு ஒரு பிரச்சைனையும் இல்லை. ஏன் அவளுக்கே விருப்பம் இல்லையென்றாலும் எனக்கு ஒன்றும் இல்லை.

என்னுடன் தான் அவள் இருக்க வேண்டும். இந்தமுறை அவளை மீண்டும் மும்பைக்கு அனுப்பும் எண்ணமே இல்லை அவனுக்கு. அப்படியே போக வேண்டும் என்றாலும் தன் மனைவியாகத்தான் போக வேண்டும் என்று ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டான்.

இனியும் அவள் போக்கில் விட்டால், ‘எனக்கு யாரும் இல்லை, என் அக்கா வாழ்க்கை தான் முக்கியம், என்னால் குடும்பம் பிரிய வேண்டாம்’ என பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருப்பாள். இந்தமுறை அதற்கு வாய்ப்பே கொடுக்ககூடாது என மனதுக்குள் பலவாறு முடிவெடுத்தவன் ஜீப்பை மருத்துவமனை வளாகத்துக்குள் விட்டான்.

*

இங்கு வீட்டில் பெரியவரின் அருகில் மிகவும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார் பிரகாஷ்.

“அப்பா அமர் சொல்றது தான் சரி, தர்ஷினிக்கும் ஏகனுக்கும் முன்னமே ஒத்துவராது. இதுல ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்துவைத்தா கண்டிப்பா சேர்ந்து வாழ மாட்டாங்க. அதுலயும் ஏகன் மனசுல ஆதிம்மா இருக்கும் போது இந்த மாதிரி நாம நினைக்கிறதே தப்பு..” என்ற மகனை கூர்மையாகப் பார்த்தார் பெரியவர்.

அந்த பார்வையின் பொருள் உணர்ந்தவருக்கு குற்ற உணர்வு கொன்று குவித்தது.

“அந்த நேரம் எனக்கு புனிதா சொன்னதுதான் சரின்னு பட்டுதுப்பா. ஏற்கனவே நாம பேசித்தானே வச்சிருந்தோம், ரெண்டு வீட்டுல இருந்தும் ஒரு பொண்ணு அக்கா எடுக்கனும்னு. அப்போ அது மாறவும்” எனத் தடுமாற,

“முடிஞ்சதைப் பத்தி பேச வேண்டாம் பிரகாஷ். இனியாச்சும் உன் அண்ணன் அண்ணி ஆத்மா சாந்தியடையிற மாதிரி ஏதாவது பண்ணு..” என்றவருக்கு குரல் உடைந்தது.

“அப்பா..” என பெரியவரின் கைகளைப் பிடித்த பிரகஷுக்கும் வேதனைதான்.

“எங்க நிலமை யாருக்குமே வரக்கூடாது தம்பி, பெத்தவங்க இருந்து பிள்ளைங்கள தூக்கி கொடுக்குறது எல்லாம் சாபம். நாங்க எந்த காலத்துலயோ செஞ்ச பாவம். அதான் என் புள்ளைங்கள கொண்டு போயிடுச்சு..” என்றவருக்கு என்ன முயன்றும் விழிகளில் நீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை.

“அப்பா அன்னைக்கு ஏதோ புத்திக்கெட்டத்தனமா நடந்துக்கிட்டேன். அதுக்காக நிறைய நிறைய வருத்தப்பட்டாச்சு. நான் இல்லாம போய் என் பிள்ளைங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா, என் அண்ணன் இப்படி ஒருநாளும் நடந்திருக்கமாட்டார். இந்த குற்றவுணர்ச்சியை எப்படித்தான் போக்க போறேனோ தெரியல, இதுக்கெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு கட்டிரலாம்ப்பா. நீங்க கண்டதையும் யோசிக்காம படுங்க, நாளைக்கு ஹாஸ்பிடல் போகனும்..” என்றவர் பெரியவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் விட்டார்.

பின் ஒரு முடிவு எடுத்தவராக, தான் நினைத்ததை எல்லாம் ஒரு மெசேஜாக டைப் செய்து முக்கியமான ஒரு நபருக்கு அனுப்பிவிட்டு, அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்க போனார்.

*******
“அக்கா இன்னும் ஏன் அதையே பேசிட்டு இருக்க, நான் இப்போ நல்லாத்தான் இருக்கேன். இனி அடிக்கடி இங்க வருவேன். நம்ம தம்பி பாப்பா பிறக்கும் போது நானும் உன்கூடவே இருப்பேன். சும்மா ஃபீல் பண்ணிட்டே இருக்கக்கூடாது. அப்போ பெரியத்தான் என்ன நினைப்பாங்க. என்னதான் நான் நல்லா பார்த்துக்கிட்டாலும் அவளுக்கு இது எதுவும் பிடிக்கலன்னுதானே தோணும்..” என வந்ததில் இருந்து பலமுறை சொல்லி சமாதானம் செய்தாலும், ஆராவின் மனம் சமாதானமே ஆகவில்லை.

‘இனி இங்கேதான் இருக்க வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள் தங்கையிடம்.

“ஆராக்கா.. போதும் இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்ல. இந்த டைம்ல அழறதே தப்பு. இதுல நீ இப்படி தேம்பி தேம்பி அழுதுட்டு இருக்க, சொன்னா கேட்கமாட்ட. நான் போய் பெரியத்தான கூப்பிட்டு வர்ரேன்.” என தர்ஷன் பயம் காட்ட,

“நானே வந்துட்டேன்” என உள்ளே வந்த அமரன், தன் மனைவியை கூர்மையாகப் பார்க்க, “இல்லத்தான் அது சும்மா, ஆதியைப் பார்க்கவும்..” என வழிந்து கொண்டிருந்த கண்ணீரை ஆராதனா துடைக்க,

“ம்ம சரி வா தூங்கலாம். அவளுக்கும் டையர்டா இருக்கும். ரெஸ்ட் எடுக்கட்டும்..” என ஆதிராவைக் காட்டி, அடுத்து எதுவும் பேசவிடாமல் மனைவியை அழைத்துக்கொண்டு போய்விட்டான்.

“இந்த ஆராக்கவுக்கு அத்தான் தான் சரியான ஆளு..” எனச் சிரித்த தர்ஷன், “அக்கா நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா, நான் பால் கொண்டு வரேன். இன்னைக்கு நானும் இங்கதான் படுப்பேன்..” எனவும்,

“தர்ஷ் அதெல்லாம் வேண்டாம்டா, நான் இருந்துக்குவேன்” என சமாளிக்க, “தேவையே இல்லை. இன்னைக்கு மட்டும் நான் இங்கதான் இருப்பேன். நாளைக்கு உனக்கு வேற ஆளு துணைக்கு வருவாங்க.. இப்போ நான் பால் கொண்டு வர்ரேன்.” என அவளை பேசவிடாமல் சென்றுவிட்டான் தர்ஷன்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த அறைக்குள் வருகிறாள். பல ஞாபகங்கள், பல நினைவுகள். பெற்றவர்களின் நினைவு. இந்த வீட்டில் துள்ளித் திரிந்த காலங்கள். இளவரசியாக சிறகை விரித்து பறந்த தருணங்கள், அனேகனின் நினைவு, அவன் காதல் சொன்ன தருணம், அவனின் முதல் முத்தம்.’ சட்டென்று அப்படியே அமர்ந்தவள் முகத்தை மூடிக்கொண்டாள்.

‘அத்தான்.. அத்தான் வேனும் எனக்கு’ என சிறுபிள்ளையாக அழுத மனதுக்கு நிதர்ஷனத்தை உணர்த்த முடியவில்லை. அவனுக்கு அவள் இல்லை என்று நான்கு வருடத்திற்கு முன்பே உனர்த்தியிருந்தார்கள் இந்த வீட்டில் உள்ளவர்கள். மூளைக்கு புரிந்தது, மனதுக்குப் புரியவில்லை.

இங்கு இருந்தால் தன் மனதுக்கு கடிவாளமிட முடியாது. முடியவே முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தன் மனம் இங்குள்ளவர்களுக்கு தெரிந்துவிட்டால், அதன்பிறகு தன்னால் இங்கு எப்போதுமே வரமுடியாது, யாரையும் பார்க்கவும் முடியாது.

அவன் தன்னுடைய அத்தான் அல்ல, தர்ஷினிக்கு கணவனாகப் போகிறவன். அவனை தன் மனதால் கூட நினைக்கக்கூடாது என தனக்குள்ளே சொல்லிக்கொண்டவளுக்கு, அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

இந்த மனம் ஒரு விந்தையானது. எதை வெறுக்க, மறக்க, ஒதுக்க நினைக்கிறோமோ, அதையேதான் விரும்பித் தொலைக்கும். ஆதிராவிற்கும் அதே நிலைதான். மனம் குழம்பித் தவித்தது.

குழப்பத்தை தீர்க்க, தீர்வுடன் அவளின் அத்தான் காத்திருப்பானா.?

காற்று வீசட்டும் சூறாவளியாக.!
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
455
156
43
Dindugal
ஓ மை காட்..
உணர்ச்சி பெருக்கான எபி..
ரெண்டு பேருக்க்குள்ளயும் அவ்வளவு லவ்..
ஆனாலும் விதி இப்படி பிரிச்சு வச்சிடுச்சே..
ஏகன் சரி செஞ்சிடுவான்.
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
46
35
18
Dindigul
ஓ மை காட்..
உணர்ச்சி பெருக்கான எபி..
ரெண்டு பேருக்க்குள்ளயும் அவ்வளவு லவ்..
ஆனாலும் விதி இப்படி பிரிச்சு வச்சிடுச்சே..
ஏகன் சரி செஞ்சிடுவான்.
மிக்க நன்றி சிஸ்
 

Pavithra Shanmugam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
21
11
3
Erode
ஹாஹா... ஆதவ் நீ ரொம்ப பாவம் பா. இப்படி க்லாய்க்குறாங்க, சிரிச்சிட்டே படிச்சேன்
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
66
37
18
Tirupur
வெற்றி, அன்பு & ஆதவ் நல்ல கலகலப்பான டீம் 🤩
பாவம் தான் ஏகனும், ஆராவும்...😢