• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காவல் -2

Raja Sri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2024
6
2
3
Sattur, Virudhunagar District
நகரத்திற்கு வெளியே அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் காலை வேலைக்குரிய பரபரப்பு எதுவும் இல்லாமல் சாந்தமாகவே இருந்தது.

அப்போது தான் எழுந்து குளித்து விட்டு வெளியே வந்தார் அந்த வீட்டின் எஜமானி அம்மாள் ரேவதி.அவர் வந்ததை பார்த்ததும் வேலை ஆள் அவர் எப்போதும் குடிக்கும் பதத்தில் காபி கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவர், அங்கிருந்த பூஜை அறையை நோக்கி சென்றார்.

அங்கு புகைப்பட சட்டத்திற்குள் இருக்கும் தன் கணவன் பலராமனை சிறிது நேரம் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார் ரேவதி.அவர் உதடுகள் மட்டும் தான் சிரிப்பை சிந்தியது. உள்ளம் கண்ணீர் விட்டு கதறியது, அந்த வலி அவர் கண்ணில் அப்பட்டமாக தெரிய அவரை பார்த்த அந்த வீட்டின் வேலையாட்களால் கவலை கொள்ள மட்டுமே முடிந்தது.இருந்தும் அதை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருந்தனர்.

பலராமன் மிலிட்டரியில் உயர் அதிகாரியாக இருந்தவர்.இரண்டு வருடத்திற்கு முன்பு தான் ஒரு விபத்தில் உயிர் இழந்தார்.வருடத்தில் பாதி நாட்கள் நாட்டை காக்க சென்று விடுவதால் அவர் தன் மனைவியை தைரியமாக இருக்க கற்றுத் தந்திருந்தார். எனவே தான் இன்று அவர் கண்ணில் கண்ணீர் இல்லாமல் வலியும் உதட்டில் புன்னகையும் இருக்கிறது.ரேவதி -பலராமனுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் விக்ரம ஆதித்தியன் இரண்டாவது மஞ்சரி.அவரது ஆசையெல்லாம் தன் மகன் ஒரு நல்ல காவல் அதிகாரியாக நாட்டுக்கு சேவை செய்த வண்ணம் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே. அதை அவரது மகன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான். அதை பார்க்க தான் அவர் இல்லை.

மஞ்சரிக்கு திருமணம் ஆகி அவள் கணவன் வீட்டில் இருக்கிறாள். விக்ரமின் ஒரே நண்பனான முகிலனுக்கு அவளை பிடித்து விட தன் நண்பனிடம் தயக்கமாக அவன் தங்கையை விரும்புவதை பற்றி கூறினான்.முதலில் திகைத்த விக்ரம் பின் அவனுக்கே அவளை திருமணமும் செய்து வைத்து விட்டான். இப்போது அவள் கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து கொண்டிருக்கிறாள். இது முகிலனது ஆசை. தன் மனைவி தனது காசில் படிக்க வேண்டும் என்று படிக்க வைக்கிறான். அவளும் தலையெழுத்தே என்று சென்று வந்து கொண்டிருக்கிறாள்.

சிறிது நேரம் தன்னவனையே இமைக்காமல் பார்த்த ரேவதி பின் விளக்கேற்றி கும்பிட்டு விட்டு கூடத்திற்கு வந்தார். இவர் கூடத்திற்கு வரவும் அவரது அன்பு மகன் ஜாகிங் முடிந்து வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.

"குட் மார்னிங் ஆதி" என்று சிரிப்புடன் தன் கவலைகளை மறைத்து மகனுக்கு காலை வணக்கம் கூறினார் ரேவதி.

அந்த வணக்கத்தை உதட்டுக்கே வலிக்குமோ என்ற புன்னகையுடன் தலை அசைத்து ஏற்றவன் பதிலுக்கு "குட் மார்னிங் மா" என்றான் ரேவதி பலராமனின் அன்பு மகன் விக்ரம ஆதித்யன்.

"இன்னைக்கு மஞ்சு இங்க வரதா சொல்லிருந்தா பா.... கொஞ்சம் முகில் கிட்ட கால் பண்ணி கேளு" என்று கூற,

"ஏன் மா நேத்து அவள் காலேஜ்க்கு வரலையா" என்று யோசனையுடன் கேட்டான் விக்ரம்.

"இல்ல ஆதி அவளுக்கு ஸ்டடி லீவ் விட்டுருக்காங்க... நேற்று நான் கால் பண்ணேன்... தூங்கிட்டேன் மா நாளைக்கு வீட்டுக்கு வரேன்னு சொன்னா... அதனால் தான் கேட்கிறேன்" என்று கூறினார்.

"ம்ம்ம் சரி மா... முகில் இங்க வரேன்னு சொன்னான்... அப்போ அவளையும் சேர்த்து கூட்டிட்டு வருவான்னு நினைக்கிறேன்" என்று யோசனையுடன் கூறினான் ஆதி.

"ம்ம்ம் சரி" என்றவர் பின் "ஆதி..."என்று தயக்கமாக அழைத்தார். அவரது அழைப்பிலேயே அவர் என்ன கூற போகிறார் என்பதை புரிந்து கொண்டவன் "அம்மா... உங்களுக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல.... இனிமேல் என்னோட கல்யாணம்னு பேச்சை எடுக்காதீங்க" என்று கூறி விட்டு விறு விறுவென தன் அறைக்கு சென்று விட்டான்.

"இவன இனி என்னால திருத்த முடியாது அவனா... எப்போ மாறுரானோ அப்போ தான் மாத்த முடியும்... இவனையும் திருத்த ஏதாவது ஒரு மகராசி வந்தா நல்லா இருக்கும்" என்று ஒரு மனம் நினைக்க "எதுக்கு அவளையும் உன் மகன் திட்டியே வீட்டை விட்டு ஓட வெச்சிருவான்" என்று மற்றொரு மனம் கூற அதுவும் சரி தான் என்று பெருமூச்சு விட்டவர் இருந்தும் அவனுக்கு எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றார்.

அவரது புலம்பல்களுக்கு காரணம் ஆனவனோ குளித்து தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் ஒரு காவல்துறை அதிகாரி. தந்தையின் ஆசையின் படி ஐ.பி.எஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று அருகில் சென்னை நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளான்.

யாரையும் தன் ஒற்றை பார்வையிலேயே தள்ளி நிறுத்தி விடுவான். சரியான கோபக்காரன், அவன் பார்க்கும் வேலைக்கு அது தேவை தான் இருந்தாலும் அளவுக்கு மீறி கோபம் வரும் அதே போல் பாசக்காரனும் கூட அவனுக்கு பிடித்தவர்களிடம் மட்டும்.ஊருக்கே விக்ரமாக இருப்பவன் தன் தாய்க்கு மட்டும் செல்லமாக ஆதியாக உள்ளான்.

அவ்வளவு எளிதாக தன் அருகில் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டான் அவனது நண்பன் முகிலனை மற்றும் இன்னும் சிலரை தவிர. மற்ற அனைவரையும் தன் ஒற்றை பார்வையில் எடை போட்டு தள்ளியே நிறுத்தி விடுவான்.அவன் பார்வையே மற்றவர்களிடம் 'என்னை நெருங்க நினைக்காதே' என்பதை சொல்லாமல் சொல்லி விடும்.

வேகமாக கிளம்பி கீழே வந்த விக்ரம் தன் தாய் எடுத்து வைத்திருந்த உணவை உண்டு விட்டு கிளம்ப ஆயத்தமாக,

"டேய் ஆதி அம்மாவை காலேஜ்ல விட்டுரு டா ப்ளீஸ்" என்று கெஞ்சினார் ரேவதி.ஒரு நிமிடம் நின்று திரும்பி தன் தாயை பார்த்தவன் பின் இடது கையில் கட்டியிருந்த பாஸ்ட்ராக் (fastrack) வகையை சேர்ந்த கைக் கடிகாரத்தை பார்த்து விட்டு,

"சரி வாங்க மா... அந்த பக்கம் ரைடு போனும்ன்னு நெனச்சிட்டே இருந்தேன் உங்கள விட்டுட்டு அப்படியே அங்க ரைடு முடிச்சிட்டு ஸ்டேஷன் போறேன்" என்று அவன் கூறியதும் ரேவதிக்கு திக்கென்றானது.

"ஏதே இவன் ரைடு வரானா... இது மட்டும் எங்க காலேஜ் ஸ்டாப்க்கு தெரிஞ்சது அவளோ தான்... பைன் போட்டே மனுசன சாவடிப்பன்... அதாவது பரவா இல்லை...இவன் செஞ்சி வெச்சிட்டு போற வேலைக்கு எல்லாம் நான் இல்ல அவளுக கிட்ட பேச்சு வாங்கணும்" என்று நினைத்தவர்,

"இல்ல ஆதி நீ போ... நான் ஆட்டோல போய்க்கிறேன்" என்று அவனை வர விடாமல் செய்ய பார்க்க அவனோ,

"அதெல்லாம் முடியாது வாங்க மா" என்று அவரை அழைத்துக் கொண்டு முன்னே செல்ல, அவரோ தலையில் அடித்துக் கொண்டே பின்னே சென்றார்.

ரேவதி, ஆதியின் கீழ் உள்ள பகுதியில் ஒரு கல்லூரியில் வரலாற்று துரையின் ஆசிரியராக உள்ளார். அவர் பயந்ததற்கு காரணம் ரைடு என்று இவன் அந்த பக்கம் வந்து விட்டால் நான்கு நாட்கள் கல்லூரியே கதி கலங்கி விடும். லைசென்ஸ், ஆர். சி புக், இன்சூரன்ஸ், இவையனைத்தியும் விட ஹெல்மெட் உள்ளதா என்று அனைத்தையும் சோதித்து விடுவான். அப்படி ஏதாவது ஒன்று இல்லை என்றால் கூட பைன் தான் யார் எவர் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. இதில் ரேவதியே இரண்டு முறை பைன் கட்டி உள்ளதால் அதன் பிறகு கடுப்பாகி அவர் வண்டி ஓட்டுவதையே நிறுத்தி விட்டார்.

வெளியே அவனுக்காக நின்றிருந்த ஜீபில் ஏரியவன் ஓட்டுனரிடம் "அண்ணா... நம்ம ஆட்களை ****** இங்க வர சொல்லுங்க... இன்னைக்கு நமக்கு அங்க தான் டூட்டி" என்க அதிலேயே புரிந்து கொண்டார் அந்த ஓட்டுனர் இன்று ஒரு சம்பவம் உள்ளது என்பதை.

பின் தாயை கொண்டு வந்து அவரது கல்லூரியில் விட்டவன், "அம்மா பிரின்சிபல்ட்ட சொல்லுங்க...சாயங்காலம் இங்க ரைடு இருக்கு... ஏதோ கஞ்சா வரதா கேள்வி பட்டேன்... அதனால மறக்காம சொல்லுங்க... யாரும் வெளியே போக கூடாது" என்று கூறி விட்டு சென்று விட்டான்.

அவன் செல்லும் திசையையே ஒரு நிமிடம் வரை நின்று பார்த்தவர், பின் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு அவன் சொல்லியது போல் தலைமை ஆசிரியரிடம் கூறி விட்டு தனது துறையை நோக்கி சென்றார் ரேவதி.

இது இங்கு அடிக்கடி நிகழும் நிகழ்வு தான் என்பதால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

தாயை இறக்கி விட்டு நேராக வந்து நான்கு வழி சாலைகள் பிரிந்து செல்லும் இடத்திற்கு கொஞ்சம் முன்பு இருந்த ஒரு மரத்தின் கீழே வண்டியை நிறுத்த சொல்லியவன் அதன் பின் அவன் மட்டும் உள்ளே அமர்ந்திருக்க மற்றவர்கள் போவோர் வருவோரிடம் ஹெல்மெட் உள்ளதா என்பதை சோதிக்க ஆரம்பித்தனர்.

அவன் பார்த்துக் கொண்டே இருக்க இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் கான்ஸ்டபிளிடம் ஏதோ தகறாறு செய்துக் கொண்டிருக்க அதை பார்த்தவன் வண்டியில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் என்ன வென்று கேட்டு அந்த மாணவர்களை திட்டிக் கொண்டிருந்தான்.

அவனது எதிரி ஒருவன் அனுப்பிய ஆள் எப்போது அவன் வெளியே வருவான் அவனை போடலாம் என்று காத்திருக்க விக்ரம் வெளியே வந்ததும் அவனை தாக்க அறிவாளுடன் வந்தான் அவன்.

அப்போது தான் நம் நாயகி இனியா அவனை பார்த்தது. அவர்களை திட்டி அனுப்பி விட்டு திரும்பியவன் கையில் வந்து வாட்டர் பாட்டில் அடிக்க திரும்பி அது வந்த திசையை பார்க்க, கல்லூரி பேருந்தில் இருந்த பெண் அவனை பார்த்து பின்னே என்பது போல் சைகை செய்தாள். அவளது கண்களுக்கு கட்டுப்பட்டு திரும்ப தன்னை நோக்கி வரும் கத்தியை கண்டு சுதாரித்தவன் பட்டென்று அவன் வயிற்றில் எட்டி ஒரு மிதி மிதிக்க அவன் சுருண்டு விழுந்து விட்டான்.

விக்ரம் திரும்பி பார்ப்பதற்குள் அந்த பேருந்து நகர்ந்து விட, அந்த கண்கள் அவன் மனதில் பதிந்து போயின.அந்த கல்லூரி பேருந்தில் இருந்த பெயரை வைத்து அவள் தன் அம்மாவின் கல்லூரியில் தான் படிக்கிறாள் என்று மட்டும் தெரிந்து கொண்டவன் அவளை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றான் விக்ரம ஆதித்தன்.

- காதலிக்க வருவான்💐