• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 5 #திரமிசு

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
" உணவு வகைகள் எல்லாமே அருமையாக உள்ளன மித்ரா. ஆனால் இந்த உயர்தர உணவுகள் நீங்கள் கொடுத்திருக்கும் மெனுவில் குறைந்த விலையில் உள்ள எனவே எப்படி மூலப் பொருட்களில் ஏதேனும்..." என்று இழுத்தான் தினேஷ்.

"சேச்சே அப்படியெல்லாம் இல்லை மிஸ்டர் தினேஷ். என்னுடைய ரகசியம் மிகவும் சாதாரணமானது. நீங்கள் பார்த்தீர்களா அளவில் சற்றே குறைவாக இருக்கும். அதாவது பொதுவாக இந்த வகை உணவுகள் 200 கிராம் வைத்து விற்பார்கள் என்றால் நான் 100 கிராம் முடித்து விடுவேன். அப்படி இருக்கும்போது குறைந்த விலையில் பலவகை உணவுகளை முயன்று பார்க்கும் வசதி வந்து விடுகிறது அல்லவா? விலையும் குறைவாக இருப்பதால் முயன்றுதான் பார்ப்போமே என்று வாங்குவார்கள். ஒரு முறை வாங்கி சாப்பிட்டு விட்டால் மீண்டும் மீண்டும் தூண்டும் சுவை. இதுதான் என் வெற்றியின் தற்போதைய ரகசியம். இதையே மேலும் வளர்த்து ஒரு பேக்கரி போல் வைக்கலாம் என்று எண்ணத்தில் இருந்தேன். நான் தனியாக அதை ஆரம்பிப்பதை விட உங்களது விடுதியில் வைத்தேன் என்றால் சுலபமாக நிறைய வாடிக்கையாளர்களை பிடிக்கலாம் என்று தோன்றியது. அதனாலயே விண்ணப்பித்தேன். இதோ இந்த அளவுக்கு வந்து இருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று விளக்கம் தந்தாள் மித்ரா.

"அது சரி நல்ல உத்தி தான். உங்கள் உணவின் சுவைக்கு தான் எங்கள் நிறுவனத்திலேயே ஜீவா என்று ஒரு அடிமையை பிடித்திருக்கிறீர்களே! அப்படியே எல்லோரையும் அடிமைப்படுத்தி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். இது எல்லாம் சரிதான் மித்ரா. ஆனால் உங்கள் தொழிலில் இன்னொருவர் பங்குதாரராக இருக்கிறார் என்று பார்த்தேனே." மெல்ல தனக்குத் தேவையான விவரங்களை போட்டு வாங்க பார்த்தான் தினேஷ் .

ஒரு கணம் தயங்கிய மித்ரா "ஆம் ருத்ரன் என்று இருக்கும். அவர் எனது கணவன் தான். தற்போது இந்தியாவில் இல்லை. லண்டனில் இருக்கிறார். அவர் வெறும் இதில் ஸ்லீப்பிங் பார்ட்னர் தான். தொழில் எண்ணம் எல்லாமே என்னுடையதுதான். அவரது தலையீடு இதில் பெரிதும் இருக்காது. ஆனால் தனியாக நான் மட்டும் செய்கிறேன் என்றால் நன்றாக இல்லை என்று அவரது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். ஒரு வித பாதுகாப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் தான் ஒரு பெண் தனியாக தொழில் செய்கிறாள் என்றால் எத்தனை எத்தனை துன்பங்கள் சந்திக்க நேரிடும் என்று தொழில் செய்யும் உங்களுக்கு தெரியாதா?" கேள்வியுடன் முடித்தாள் மித்ரா.

உண்மைதான். திவ்யாவும் இதைப்பற்றி பலதும் சொல்லியிருக்கிறாள் தான். எந்த ஒரு துறையிலும் பெண்கள் சாதிப்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆண்கள் சந்திக்கும் கஷ்டங்களை விட பல நூறு மடங்கு இன்னல்களையும் தடங்கல்களையும் தாண்டி தான் அவர்கள் சாதிக்க வேண்டும். என்னதான் குடும்பத்தினரின் துணை இருந்தாலும் வெளியுலகம் இன்னும் முழுமையாக பெண்களை தொழிலிலோ மற்ற இடங்களிலோ ஏற்றுக்கொள்ளவில்லை தான். அதையும் மீறி ஒரு பெண் சாதித்து விட்டால் அதற்கு பின்னே கணவனோ தந்தையோ இருக்கிறார் என்று தான் பேசப்படும். இந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டது போல் இருந்தது மித்ராவின் பேச்சு. இதுவரை வரவே அவள் எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்ந்ததோ? பரவாயில்லை. ஓரளவு வதசி படைத்த கணவனின் துணை இருந்தும் தன் காலில் நிற்க தானே சாதிக்க எண்ணுகிறாள் அதுவே பெரிய விஷயம்தான். மனதினுள் தன் மனம் கவர்ந்தவளை பாராட்டிக் கொண்டான் தினேஷ்.

"நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் ஒரு தொழில் என்று எடுத்துக் கொண்டால் நாங்கள் அதில் இருக்கும் அனைத்து பங்குதாரர்களையும் சந்தித்து விட்டு தான் முடிவு செய்வோம். உங்கள் கணவனின் எண் அல்லது அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்குமா?" என்று மேலும் துருவினான். அப்படி என்ன அந்த ருத்திரனிடம் இருக்கிறது என்று இவள் அவனை தேர்ந்தெடுத்தாள்? இவனுக்கு தெரிந்து கொண்டே ஆக வேண்டும். ருத்ரனுடன் பேசி அவனிடம் ஏதேனும் சிறு குறையேனும் கண்டு விடத் தான் துடித்தான் தினேஷ்.

"ஓ கண்டிப்பாக பேசலாம் ஆனால் இப்போது அங்கே நேரம் காலை 6:00 மணியாக இருக்கும் நான் எதற்கும் அவரிடம் பேசிப் பார்த்துவிட்டு சொல்கிறேன் எனக்கு இரண்டு நிமிடங்கள் தாருங்கள்" என்று உறுதி அளித்தாள் மித்ரா.

அவளது குரலில் இருந்த உறுதி தினேஷுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது. இவ்வளவு உறுதியுடன் அவள் பேசுகிறாள் என்றால் அவள் என்ன கேட்டாலும் எப்போது கேட்டாலும் செய்ய தயாராக இருக்கும் கணவன் தான் ருத்ரன் என்று தானே அர்த்தம்? அப்படியானால் அவர்கள் சந்தோஷமாக வாழும் கணவன் மனைவி தானே? அவர்களுக்குள் சிறு பிணக்கு இருந்தாலும் இந்த உறுதி அவளுக்கு இருக்குமா? சே சே என்ன இது? அவளது திருமண வாழ்வில் பிரச்சனை இருக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்? அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தானே எண்ணம் இருக்க வேண்டும். என்ன துர்புத்தி! எல்லாம் இந்த மித்ராவை சந்தித்த பிறகுதான். இதுவரை அடுத்தவருக்கு கஷ்டம் இருக்க வேண்டும் என்று மூளை யோசித்ததே இல்லை. இப்போதும் மூளை யோசிக்கவில்லை. மனம் தான் யோசிக்கிறது. இல்லை இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. அவள் என்றுமே எப்போதுமே சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் மட்டுமே வாழ வேண்டும்.

ருத்ரனுடன் பேசி விட்டு திரும்பி வந்த மித்ரா, ருத்ரன் அப்போதே வீடியோ காலில் பேச தயாராக இருப்பதாக சொன்னாள்.

வீடியோ காலில் வந்த ருத்ரனின் வெளித்தோற்றத்தில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை மாநிறம் ஓரளவு உயரம் மித்ராவிற்கு ஏற்ற தோற்றம் அவனது வெளித்தோற்றத்தில் குறை காண முடியவில்லை தினேஷால்.

சரி பேசிப் பார்ப்போம்.

"மார்னிங் ருத்ரன். உங்கள் விடியற்காலை துக்கத்தை கலைத்து விட்டோமோ?" என்று புன்னகையுடன் தொடங்கினான்.

"குட் டே தினேஷ். அப்படியெல்லாம் இல்லை மித்ராவிற்காக எப்போதுமே என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன். சொல்லுங்கள் உங்களுக்கு என்னிடம் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?"

"நீங்கள் லண்டனில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

"இங்கே ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறேன்."

"ஓ அப்படியா? எந்த பல்கலைக்கழகம்? எனது அண்ணியும் சிறிது நாட்களுக்கு முன் வரை ஒரு பல்கலைக்கழகத்தில் தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பெயர் திவ்யா"

"திவ்யா என்றால் திவ்யா விஜயா?" என்று கேட்டான் ருத்ரன்.

"ஆமாம் அவர்கள் தான். உங்களுக்கு அவர்களை தெரியுமா?"

"தெரியும். நான் அவர்கள் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யவில்லை என்றாலும் அவர்களது லெக்ச்சர்களுக்கு சென்றிருக்கிறேன். அதே துறை என்பதால் எனக்கு அதில் மிகுந்த ஆர்வம். மிகவும் திறமை சாலி. பாவம் இன்னும் ஏதேதோ சாதித்து இருப்பார்கள். தங்கள் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாக கேள்விப்பட்டேனே? அவன் உங்களிடம் தான் இருக்கிறானா?" என்று வருத்தம் நிறைந்த குரலில் கேட்டான் ருத்ரன்.

"ஆமாம். குட்டி ஆதவன் எங்களுடன் தான் இருக்கிறான். நானும் அம்மாவும் தான் அவனைப் பார்த்துக் கொள்கிறோம்."

"கஷ்டம் தான்" என்று சொல்லி சில கணங்கள் மௌனம் சாதித்தான் ருத்ரன்.

எல்லாருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. சூழ்நிலையின் கனம் உணர்ந்து அமைதி காத்தனர்.

அப்படியே அமைதியாக இருக்க முடியாது. அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி பேசத் தானே வேண்டும். துக்கம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலானதால் சற்றே தெளிந்திருந்த தினேஷ் தொழில் பேச்சை மீண்டும் தொடங்கினான்.

"ருத்ரன் இங்கே பீனிக்ஸ் தொழில் உங்களுக்கு 30 சதவீத பங்கு இருப்பதாக பார்த்தேன். அப்படியானால் பெரிய முடிவுகளில் உங்கள் தலையீடு இருக்கத்தான் செய்யும். உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை பற்றிய எண்ணம் என்ன?" என்று கேட்டான் தினேஷ்.

"இதோ பாருங்கள் தினேஷ். இந்த தொழிலை பொறுத்தவரையில் இது முழுக்க முழுக்க மித்ராவினுடையது. அந்த 30 சதவீதம் கூட ஒரு விதத்தில் அவளுக்கு பாதுகாப்பாகத்தான் என் பெயரில் இருக்கின்றன. மற்றபடி எண்ணம் முடிவுகள் அனைத்துமே மித்ரா தான். என்னுடைய தலையீடு எந்த நிலையிலும் எங்கேயுமே இருக்காது. மித்ரா இங்கே கையெழுத்திடு என்று சொன்னால் அது வெற்று காகிதமாக இருந்தாலும் கையெழுத்திட நான் தயார். இன்று மட்டும் இல்லை என்றுமே தான். அவள் எடுக்கும் முடிவுகள் மீது எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. அதனால் நீங்கள் எந்த விதத்திலும் கவலைப்பட தேவையில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தை பற்றி மித்ரா நேற்றே என்னிடம் பேசினாள். அவளுக்கு தொழிலில் அடுத்த நிலை செல்லும் வாய்ப்பாகத்தான் நான் இதை பார்க்கிறேன். அதே நேரம் அவளுக்கு பாதகமாக எதுவும் இருந்து விடக் கூடாது என்று எனது நண்பன் ஒரு வக்கீல் அவனிடம் நீங்கள் சரி என்று சொன்னால் ஒப்பந்தத்தை காட்டி அவனது ஒபினியனையும் வாங்கி விடுகிறேன். என்ன இருந்தாலும் தொழில் இல்லையா? எல்லாவற்றிலும் சரியாக இருந்தாக வேண்டுமே?"

ருத்ரன் பேசியதில் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியவில்லை தினேஷால். மிகவும் சரியாகத்தான் பேசுகிறான். எல்லாவிதத்திலும் மித்ராவிற்கு ஆமாம் சாமி போடும் ஒரு ஆசாமி. ஆனாலும் ஏதோ உறுத்தியது தினேஷிற்கு. இவ்வளவு இணக்கமாக இருக்கும் இருவர் ஏன் பிரிந்து இருக்கின்றனர்? அவன் லண்டனிலும் இவள் சென்னையிலும் இருக்க வேண்டிய காரணம் என்ன? அவன் சொல்வதைப் பார்த்தால் அங்கே அவனுக்கு ஓரளவுக்கு நல்ல வருமானமும் இவளது வீசா ஸ்பான்சர் செய்யும் அளவிற்கு நிலையான ஒரு வேலையும் இருக்கின்றன. அப்படி இருக்கையில் இவள் தனியாக சென்னையில் தொழில் தொடங்கி நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதே தொழிலை அவள் லண்டனிலும் செய்யலாமே? எதற்காக இந்த பிரிவுm இதற்கு பின்னே ஏதோ கதை இருப்பதாக தோன்றியது தினேஷிற்கு. அது உண்மையா அல்லது தினேஷின் ஆசை கொண்ட மனதின் கற்பனையா?

மனதில் தோன்றிய கேள்விகளை மறைத்துக் கொண்டு தேர்ந்த தொழிலாளனாக பேசினான் தினேஷ்.

"அது சரிதான் மிஸ்டர் ருத்ரன். இன்று மேலும் இரண்டு தொழில் நிறுவனங்களுடன் எனக்கு சந்திப்புகள் இருக்கின்றன. அவற்றை முடித்துவிட்டு யாரை தேர்வு செய்கிறோமோ அவர்களிடம் எங்களது ஒப்பந்தத்தின் சரத்துகளை ஒப்படைத்து விடுவோம். அவர்களுக்கும் அது சரிப்பட்டு வந்தால் தான் அடுத்த நிலைக்கு செல்லும். நான் இதைப் பற்றி மேலும் மித்ராவிடம் பேசி விடுகிறேன். அவங்க அவர்கள் உங்களுக்கு சொல்லி விடுவார்கள் இல்லையா?"

"சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. இருந்தாலும் நான் இதைப் பற்றி மித்ராவிடம் பேசிக் கொள்கிறேன் தினேஷ். தங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தாங்களும் மித்ராவும் சேர்ந்து தொழில் செய்து மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்" ருத்ரனின் பேச்சு மித்ராவிற்கு அந்த ஒப்பந்தம் சென்று விடும் என்ற உறுதி இருந்தது. அது அவன் மித்ராவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காட்டியது.

புன்னகையுடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த மித்ரா "அது சரி அத்தான். அவர் ஒன்றும் எனக்கே ஒப்பந்தத்தை தந்து விட்டதாக சொல்லவில்லை. நீங்களாக கற்பனை செய்து பேசாதீர்கள். நான் இன்று இரவு உங்களிடம் பேசுகிறேன்" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டாள்.

அத்தானா??? உள்ளுக்குள் புகைந்தது தினேஷிற்கு.
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பேசுனதுலயே தினேஷுக்கு பிடிக்காத வார்த்தை அத்தான் 🤣🤣🤣

புகையிது புகையிது அதுவும் எரிச்சலோட 🤣🤣

பாவம் அவனும் எவ்வளவோ கன்ட்ரோல் பண்றான் தான் ஆனாலும் பாவம் 🤣🤣

காதல்ல விழுந்தாலே இப்படித்தான் மோனே தினேஷா 😍😍
 

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
பேசுனதுலயே தினேஷுக்கு பிடிக்காத வார்த்தை அத்தான் 🤣🤣🤣

புகையிது புகையிது அதுவும் எரிச்சலோட 🤣🤣

பாவம் அவனும் எவ்வளவோ கன்ட்ரோல் பண்றான் தான் ஆனாலும் பாவம் 🤣🤣

காதல்ல விழுந்தாலே இப்படித்தான் மோனே தினேஷா 😍😍
பாவம் தான் இல்லையா