• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 8

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
தினேஷிற்கு மித்ரா அவனை திட்டவும் மனதே கேட்கவில்லை. அவன் மீது அவள் கோபமாக இருப்பது பெரிதல்ல. ஆனால் மேலும் மேலும் ருத்திரனிடம் ஏமாந்து கொண்டிருக்கிறாளே என்பதுதான் அவனது மிகப்பெரிய வருத்தமே. என்ன செய்வது? இதற்கு நேரிலேயே மித்ராவை சந்தித்து விளக்கம் அளித்து விடலாம் என்று கிளம்பினான். மருத்துவமனைக்கு சென்றால் அங்கே ருத்ரனை டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள்.

மித்ராவின் இல்லத்திற்கு கிளம்பி சென்றான் தினேஷ். மித்ராவின் வீடு ஒரு குடியிருப்பில் இருந்தது அந்த குடியிருப்பினில் சிறியதாக பல வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு தனித்தனி வீடுகளாக கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் தனி காம்பவுண்டும் இருந்தது. பாதுகாப்பான இடம்தான். அந்த குடியிருப்பின் உள்ளே அனைத்து வசதிகளும் உள்ளடங்கி இருந்தன. அந்தக் குடியிருப்பில் மித்ராவின் வீட்டின் அருகில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு அவள் வீட்டின் கதவை திறக்கப் போனவன் பார்த்த காட்சியில் மனம் கொதித்தது.

மித்ராவின் காரில் இருந்து இறங்கிய ருத்ரனை கை தாங்கலாக மித்ரா அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று கொண்டிருந்தாள். கூச்சமே இல்லாமல் அவளை அணைத்தபடி சென்று கொண்டிருந்தான் ருத்ரன். இவனுக்கு மித்ரா கேட்கிறதா? ஏமாற்றுக்காரன்!!!! இதை ஏன் மித்ரா புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாள்? இருக்கட்டும் இப்போது போய் எல்லாவற்றையும் மித்ராவிடம் சொல்லிவிடலாம் என்று உறுதியுடன் உள்ளே நுழைந்தான் தினேஷ்.

கதவு திறந்து தினேஷ் உள்ளே வருவதை கவனித்த மித்ராவும் ருத்ரனும் வாசலிலேயே நின்றனர். மித்ராவின் தீ பார்வை தினேஷை எரித்தது.

ருத்ரன் சமாதானமாக ஏதோ மித்ராவின் காதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் மித்ரா அதை சட்டையே செய்யவில்லை.

" என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து இருப்பீர்கள்? என் அத்தானை அடித்து விட்டு என் வீட்டிற்க்கே வந்து விடுவீர்களா? வேண்டாம்!!! போதும் நிறுத்தி விடுங்கள்!!! உங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!!!! நான் இப்போது இன்றே அந்த ஒப்பந்தத்தை முறித்து விடவும் தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அத்தானை வீட்டில் விட்டுவிட்டு ஒப்பந்தம் முடிவிற்கான சரத்துகளை தேடி வக்கீலை பார்க்கத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். உங்களுடைய சங்காத்தமே வேண்டாம்" என்று அடிக்குரலில் சீறினாள் மித்ரா.


"மித்ரா தயவு செய்து நான் சொல்ல வருவதை கேளுங்கள் இப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்." என்று வேண்டுதலோடு தொடங்கினான் தினேஷ்.

" நீங்கள் இந்த அளவிற்கு பார்க்கும் அளவிற்கு அவர் நல்லவர் ஒன்றுமில்லை. அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்களே என் செயலை நியாயமானது என்று சொல்லுவீர்கள்." என்றான் தன்னிலை விளக்கமாக.

" அவர் எப்படிப்பட்டவராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் மிஸ்டர் தினேஷ். அது எனக்கும் அவருக்கும் உண்டான விஷயம். அதில் மூன்றாம் மனிதர் நீங்கள் யார் தலையிடுவதற்கு?" தயவு தாட்சண்யம் இன்றி அவனை தூர நிறுத்தி கேள்வி கேட்டாள் மித்ரா மூன்றாம் மனிதனா? நானா???? என் மனதில் உனக்கான இடம் தெரிந்தால் என்ன செய்வாய் மித்ரா என்று எண்ணிக் கொண்டான் தினேஷ்.

" மித்ரா நான் சொல்ல வருவதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள். ருத்ரனுக்கு லண்டனில்..." என்று மீண்டும் ஆரம்பித்தான் தினேஷ்.

கையை நீட்டி காண்பித்து தடுத்தாள் மித்ரா "போதும் தினேஷ். என் அத்தான் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியும். நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ள புதிதாக எதுவுமே இல்லை இன்றும் இல்லை என்றுமே இருக்காது என்னிடம் மறைத்து அவருக்கு என்று எந்த ஒரு ரகசியமும் இல்லை அதனால் புதிதாக எதையாவது சொல்லி எங்களுக்குள் பிரச்சனை செய்து அதில் குளிர்காய முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் சொல்ல நினைப்பது எதுவாக இருந்தாலும் எனக்குத் தெரியாமல் இல்லை. எல்லாமே எனக்கும் தெரியும்." என்று பட்டென்று சொன்ன மித்ராவை அதிர்ந்து போய் பார்த்தான் தினேஷ்.

" என்னது???? தெரியுமா? தெரிந்தும் நீங்கள் எப்படி???" என்று தடுமாறினான் தினேஷ்.

"எப்படி என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் சொல்கிறேன் நான் எப்படி என்ன என்பது என்னோடு. எனக்கும் இவருக்குமான உறவு எங்களோடு. நீங்கள் யாரோ மூன்றே மாதம் முன் எங்களுக்கு அறிமுகமானவர். நீங்கள் தேவையில்லாமல் எங்கள் வீட்டு விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். இத்தோடு நிறுத்தி விடுங்கள். நாளை நான் வக்கீலுடன் உங்களை சந்திக்கிறேன்." என்றாள் தீர்த்து விட்ட குரலில்.

அதுவரை அமைதி காத்த ருத்தரன் தடுத்தான் "மித்ரா அவசரப்பட்டு எந்தவிதமான முடிவையும் எடுக்கக் கூடாது. இப்போது நீ இருக்கும் மனநிலையில் எந்த பெரிய முடிவையும் எடுக்காதே. இருக்கட்டும் விஷயத்தை ஆறப் போடுவோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்வதற்கான விவரம் இல்லை. தொழில். பொறுமையாக தான் செயல்பட வேண்டும். அதுதான் அவரிடம் சொல்லிவிட்டாயே. சொந்த விஷயத்தில் தலை இட வேண்டாம் என்று. அவர் ஏன் இனி தலையிட போகிறார். விட்டுவிடு தொழிலை தொழிலாக இருவருமே பாருங்கள். இப்போது உள்ளே செல்லலாம்." என்று மித்ராவை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றான் ருத்ரன்.

ஏமாந்து நின்றது தினேஷ் தான். ஆஹா என்ன நல்லவன் மாதிரி பேசி செல்கிறான். ஆனால் அவன் சரி என்று தானே மித்ரா சொல்கிறாள். என்ன மாதிரி பெண் இவள் அவன் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்கவில்லை. அதற்கு மேல் தெரியும் என்று வேறு சொல்கிறாள்.

ஒரு பெண் எதை எதையோ சகித்துக் கொள்வாள். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை எப்படி சகித்துக் கொள்கிறாள்? அப்படி என்ன ருத்ரன் அவளை மயக்கி வைத்திருக்கிறான்? ருத்திரனிடம் இருக்கும் பணம் அவளை மயக்கியதா? அப்படி இருந்தால் தனியாக ஏன் தொழில் செய்யப் போகிறாள்? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்குமா?

மித்ரா மீது அதுவரை தினேஷுக்கு இருந்த மதிப்பு மொத்தமாக கீழிறங்கியது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் ஒரு பெண்ணையா நான் விரும்பினேன்? வேண்டாம்!!! மித்ராவும் வேண்டாம்!!! இந்த ருத்ரனும் வேண்டாம்!!! இவர்கள் சங்காத்தமே வேண்டாம். என்ன ஆது குட்டி தான் கொஞ்சம் மித்ராவை தேடுவான். பரவாயில்லை. அவன் வாழ்க்கையில் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். இந்த மூன்று மாத பரிச்சயம் உண்டான மித்ரா ஒரு பொருட்டா. அவளையும் மறந்து விட்டு வாழப் பழகிக் கொள்வான் குழந்தை. மனம் வெறுத்துப் போய் அங்கிருந்து கிளம்பினான் தினேஷ்.

இப்படியே சில நாட்கள் சென்றன கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் ருத்ரன் அவனை சந்திக்க காத்திருப்பதாக வந்து சொல்லி சென்றான் ஜீவா.

ருத்ரன் இப்போது இங்கே எதற்கு வந்திருக்கிறான்? புதிதாக என்ன பிரச்சனை செய்யப் போகிறான்?

அது தான் கணவன் மனைவி விவரம் இனி தனக்கு தேவையில்லை என்று இந்த ஒரு வாரமாக தினேஷ் ஒதுங்கி இருக்கிறானே. என்னதான் அவன் அதுவரை பார்த்து பழகி இருந்த மித்ராவிற்கும் அன்று பேசிய மித்ராவிற்கும் ஒரு ஒட்டாத தன்மை இருந்தது என்று உள்உணர்வு இருந்தாலும் விலகி தானே இருக்கிறான்!!!

மித்ரா சொன்னது போல் அவளுக்கு அவன் மூன்றாம் மனிதன் தானே அந்த மூன்றாம் மனிதன் என்ற சொல் முள் போல் தைத்தது தினேஷை. என்ன வலித்தாலும் அது உண்மை தானே. இவன் மனம் அவள் மீது படர்ந்து இருந்தாலும் அவள் அவனை ஒரு நண்பனாக கூட பார்த்ததாக தெரியவில்லையே. வெறும் தொழில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஒரு நபராக தானே பார்த்திருக்கிறாள். அவன் முதலில் எண்ணியது போல நட்புக்கரம் கூட இல்லாமல் நின்று விட்டோமே. என்ன மருகி என்ன பயன்? மித்ரா முழுக்க முழுக்க ருத்திரனும் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நட்பென்ன தொழில ஒப்பந்தம் மிஞ்சியதே பெரியதாக கருத வேண்டும்.

மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் ருத்ரனை வரவேற்ற தினேஷின் முகத்தில் எந்த ஒரு முக பாவனை இன்றி கல் போல் தான் இருந்தது.

"உட்காருங்கள் ருத்ரன். எதைப் பற்றி பேச இங்கே வந்திருக்கிறீர்கள்? ஒருவேளை மித்ராவை ஏமாற்றுவது போல என்னையும் எதிலாவது சிக்க வைத்து ஏமாற்றலாம் என்ற எண்ணம் இருக்கிறதா?" என்று நக்கலாக கேட்டான் தினேஷ்.

" மித்ராவை நான் ஏமாற்றுவேன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு என்ன உறுதி தினேஷ்? எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?" என்று குரலில் சிறிதும் பிசிறு என்று தவறு செய்த உணர்வும் இன்றி கேட்டான் ருத்ரன்.

"பின்னே இந்தியாவில் ஒருத்தியை திருமணம் செய்து அவளை இங்கே விட்டுவிட்டு லண்டனில் வேறு ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் ஏமாற்றுக்காரராக இல்லாமல் வேறு எப்படி இருப்பார்?" அழுத்தம் திருத்தமாக கேட்டான் தினேஷ்.

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை தினேஷ். நீங்கள் சொல்வது விவரம். எனக்கு லண்டனில் குடும்பம் இருப்பதைப் பற்றி நாம் சென்ற வாரமே பேசிவிட்டோம். நான் அதை எதையுமே மறைக்கவில்லை மறுக்கவும் இல்லை. எனக்கு அங்கே ஒரு குடும்பம் இருக்கிறது தான். இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள் கேரல் கிரண் என்று. நான் கேட்ட கேள்வி அதைப் பற்றி அல்ல. நான் இதில் மித்ராவை இங்கே ஏமாற்றியிருக்கிரேன்?" இன்று மீண்டும் குழப்பினான் ருத்ரன்.

"இதையேதான் அன்றும் சொன்னீர்கள் திரும்பத் திரும்ப சொல்வதால் நீங்கள் செய்வது எதுவும் நியாயமாகி விடாத ருத்ரன். உங்களுக்கு என்ன பைத்தியமா? இருதாரம் கொள்வது தவறு. சட்டப்படி குற்றம். இந்தியாவிலும் சரி நீங்கள் வசிக்கும் லண்டனிலும் சரி அதை எந்த சட்டமும் ஆதரிக்காது. இப்படி சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலை செய்து கொண்டு எந்த தைரியத்தில் இப்படி நான் எங்கே என் மனைவியை ஏமாற்றினேன் என்று கேட்கிறீர்கள்" கோபம் கொப்பளிக்கும் குரலில் கேட்டான் தினேஷ்.

"நீங்கள் சொல்வது சரிதான் தினேஷ் இருதாரம் கொள்வது தவறுதான். ஆனால் எனக்கு ஒரு மனைவிதான் அது இந்த ஜென்மத்தில் ரேச்சல் தான். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் பல்கலைக்கழகத்தில் படிக்க சென்ற முதல் நாள் சந்தித்து நொடியில் இருந்து எண்ணத்தில் கூட நான் என்றுமே ரேச்சலுக்கு துரோகம் நினைத்தது கூட இல்லை. இது என் பிள்ளைகள் கேரல் கிரணின் மீது சத்தியம். மித்ரா என் மனைவியே இல்லை." என்னது இது? என்ன புது குழப்பம்?
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
என்னடா இது புதுக்குழப்பம் 🤔

அப்போ மித்ரா யாரு 🧐 அவளோட கண்ணுல தெரியற வலிக்கு காரணம் என்ன 🧐
 

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அடுத்த எபி பதில் சொல்லுது பாருங்க