• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 9

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
"என்ன சொல்கிறீர்கள் ருத்ரன்? மித்ரா உங்கள் மனைவி இல்லையா? உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லையா? அப்புறம் ஏன் மித்ரா உங்கள் பெயரை கணவன் என்று சொல்லிக் கொள்கிறாள்? என்னதான் நடக்கிறது இங்கே? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது!!!!" என்று தலையை பிடித்துக் கொள்ளும் நிலையில் சொன்னான் தினேஷ் .


"உங்களுக்கு முதலில் இருந்து சொன்னால்தான் புரியும் தினேஷ். ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு கேள்வி. நான் கேட்க வேண்டும்."

"நீங்கள் என்னை கேட்கிறீர்களா??? சரி கேளுங்கள். என்ன கேள்வி?"

" உங்களுக்கு ஏன் மித்ரா மீது இவ்வளவு அக்கறை? என்னைப் பற்றி விசாரித்து வண்டனில் இருந்து விவரங்கள் சேகரித்து வந்து என்னை அடித்து துவைக்கும் அளவிற்கு மித்ரா அப்படி என்ன உங்களுக்கு முக்கியம்?"

தினேஷ் இதை எதிர்பார்க்கவில்லை சற்றே அதிறந்து இருந்தான். இதற்கு என்ன பதில் சொல்வது? நான் உன் மனைவியை விரும்புகிறேன் என்றா? கேட்கவே நாராசமாக இல்லை!!! ஆனால் அதை வேறு எந்த விதத்திலும் சொல்லவும் முடியாது. தினேஷ் தயங்கினான்.

" தயங்காமல் உண்மையை சொல்லுங்கள் தினேஷ். அதில் எந்த பாதகமும் இல்லை. இங்கே எல்லாருக்கும் நன்மை பயக்கும் விதமாக ஒரு பதில் இருக்குமா என்று தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று ஊக்கினான் ருத்ரன்.

தயங்காமல் சொல்வதா? இவன் புரிந்து தான் பேசுகிறானா? கிட்டத்தட்ட அவன் கேள்வி என் மனைவியை விரும்பினால் நல்லது என்பது போல... என்னடா குடும்பம் இது!!! மனைவி என்னவென்றால் என் கணவனுக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியும் தெரிந்தும் நான் அவனை போற்றுவேன் என்கிறாள். கணவனும் நீ என் மனைவியை விரும்பினால் உங்கள் எதிர்காலத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற ரீதியில் பேசுகிறான். சரியான பைத்தியக்கார கூட்டமாக இருக்குமோ தெரியாமல் வந்து சிக்கிக் கொண்டோமோ என்று தினேஷின் யோசனை சென்றது.

"தினேஷ் உங்களுக்கு சொல்ல தயக்கம் வரும். நானே கேட்கிறேன் நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் மித்ராவை விரும்புகிறீர்களா? அப்படி விரும்பிகிறீர்கள் என்றால் அவளை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறீர்களா?"

இதற்கு பதிலளிக்காமல் ருத்ரனை கூர்ப் பார்வை பார்த்தான் தினேஷ்.

"உங்களால் இப்போது இதற்கு பதில் சொல்ல முடியாதில்லையா? நான் முழுமையாக எங்கள் கதையை சொல்லுகிறேன். அதற்குப்பின் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு சரிதான்." என்ற ருத்ரன் அவர்கள் கடந்தகால கதையை சொல்ல ஆரம்பித்தான்.

"என் அம்மாவும் மித்ராவின் தந்தையும் உடன் பிறந்தவர்கள். என் தந்தை சிறு வயதிலேயே காலம் ஆகிவிட்டதால் அம்மா மாமா வீட்டிற்கு வந்து விட்டார். நாங்கள் இளம் பிராயத்தில் இருந்து நானும் மித்ரா ஒன்றாக வளர்ந்தவர்கள்.
இயல்பிலேயே மித்ரா மிகவும் பொறுமைசாலி பொறுப்புணர்ச்சி மிக்க பெண். எங்கள் வீட்டை பொறுத்தவரையில் அத்தை ராஜ்ஜியம் தான். ஆனால் அவர்கள் நல்லவர்கள் எனக்கு எந்த விதத்திலும் எந்த கஷ்டமும் என்றுமே இருந்ததில்லை. மித்ராவிற்கு 10 வயது இருந்த போது தவறிவிட்டார்கள். அதன் பின் என் அம்மாவும் மித்ராவின் அப்பாவும் தான். இரண்டு பெரியவர்களுக்கும் எப்போதுமே எனக்கும் மித்ராவிற்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால் அப்படி ஒரு எண்ணம் எனக்கோ மித்ராவுக்கோ என்றுமே இருந்ததில்லை. எனக்கு எப்போதுமே வெளிநாட்டு மோகம் தான். முயன்று படித்து லண்டன் சென்றேன். நான் லண்டனில் இருந்த நேரம் மாறி மாறி அம்மாவும் மாமாவும் உடல்நிலை பிரட்ட நலிவுற்றார்கள். அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டது மித்ரா தான். அவள் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போதே வீட்டுப் பொறுப்புகள் மொத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலை. அம்மா படுத்த படுக்கையாக இருந்தார். எனக்கு லண்டனில் நான் சேர்ந்திருந்த படிப்பை விட்டு விட்டு வர முடியாத நிலை. அப்படியே வாய்ப்பு இருந்தாலும் வந்திருப்பேனோ என்னவோ அப்போது நான் மிகவும் சுயநலம் மிக்கவனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கு இந்தியாவோ அதிலிருந்த அம்மா மாமாவோ ஒரு பொருட்டாகவே இல்லை. இந்த நிலையில் அம்மாவின் கடைசி காலம் என்று சொல்லி என்னை இந்தியா வர வைத்தார்கள். இங்கே வந்து பார்த்தபோது எனக்கும் மித்ரா விற்கும் திருமண ஏற்பாடுகளை தொடங்கி விட்டிருந்தனர். நான் முற்றிலும் அதை மறுத்தேன். முதலில் எனக்கு மித்ராவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சுத்தமாக இல்லை. அதற்கு மேல் எனக்கு அப்போதே ரேச்செலுடன் பரிச்சையம் ஏற்பட்டு நாங்கள் லிவ்விங் டுகெதர் இல் இருக்கத் தொடங்கி இருந்தோம். ஆனால் இதில் எதைப் பெரியவர்களிடம் சொல்வது? எதை சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. நேரடியாக மித்ராவிடம் தான் சென்றேன். அவளிடம் என் நிலையை விளக்கி இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விடும்படி கூறினேன். மித்ரா சிறிது நாட்கள் யோசித்தாள். யோசித்துப் பின் என்னிடம் பேச வேண்டும் என்றாள். அவள் சொன்ன யோசனையில் தான் எனக்கும் மித்ராவிற்கும். பெயருக்காக ஒரு திருமணம் நடந்தது அந்தப் பெயருக்காக திருமணம் நடக்கிறது என்பது அங்கே ரேச்சலுக்கும் தெரியும். ரேச்சலுடன் பேசி விவரங்களை சொல்லி ஒப்புதல் வாங்கியதே மித்ரா தான். பெயருக்காக நடந்த இந்த திருமணத்திற்கு பிறகு நான் லண்டனுக்கு சென்று விட்டேன். இங்கே மொத்தமாக அம்மாவிற்கு செய்ய வேண்டியது மாமாவிற்கு செய்ய வேண்டியது என்று மாறி மாறி கடமைகள் மித்ராவை விழுங்கிக் கொண்டன. இதனிடையே இந்த பேக்கிங் தோழிலுக்கான பயிற்சிகளையும் மித்ரா மேற்கொண்டாள் அவளுக்கு ஒரு பெரிய பேஸ்ட்ரி செப் ஆக வேண்டும் என்பதே கனவு. அந்த கனவில் நான் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்திருந்தேன். இதற்கு இடையில் பெரியவர்களின் நச்சரிப்பில் அவளுக்கு லண்டன் வரவேண்டிய கட்டாயமும். அப்படி அவள் லண்டன் வரவேண்டும் என்றால் கணவன் என்று என் பெயரை பதிவு செய்தால் தான் முடியும். அதற்காகவே எங்கள் திருமணத்தை பெயருக்காக ஊருக்காக செய்த திருமணத்தை பதிவு செய்தோம். அதற்குப்பின் சமயம் பார்த்து மித்ரா லண்டன் வந்தாள். அவள் வந்த நேரம் ரேச்சலுக்கு நிறைமாதம். மித்ராவும் அவளும் அத்தனை நாட்களில் மிகுந்த நெருங்கிய தோழிகளாகி விட்டிருந்தனர். கிட்டத்தட்ட தினமும் பேசிக்கொள்வார்கள். மித்ரா தான் அருகே இருந்து ரேச்சலுக்கு பிரசவ நேரத்தில் உதவினாள்
பிரசவ அறையில் இருந்த அந்த சில மணி நேரங்கள் தான் என் வேலை. வீட்டிற்கு ரேச்சலை அழைத்து வந்தபின் முழுக்க முழுக்க மித்ரா தான். ரேச்சலுக்கு நம்ம ஊர் பத்திய சாப்பாடுகள் அனைத்தும் செய்து அவள் உடல் நலம் தேற உதவினாள். கேரலையும் பார்த்துக் கொண்டாள். மூன்று மாதங்கள் போன வேகமே தெரியாமல் போன பின் மீண்டும் இந்தியா வந்தாள் இந்தியா வந்தபின் சில மாதங்களிலேயே தவறிவிட்டார் அவள் தந்தை.

அது தொடர்பான அனைத்து வேலைகளையும் தனியாளாக நின்று செய்து முடித்தாள் மித்ரா. அங்கே கைக்குழந்தையுடன் இருந்த ரேச்சலை என்னால் நான்கு நாட்களுக்கு மேல் விட்டு வர முடியவில்லை. எனவே முக்கியமான சம்பிரதாயத்திற்கு மட்டும் வந்து விட்டு நான் மீண்டும் லண்டன் திரும்பி விட்டேன். அதற்குப் பின்னும் உடல் நல குறைவிலிருந்த என் அம்மாவை பராமரித்ததும் மித்ரா தான். மூன்று ஆண்டுகள் கழித்து கிரண் பிறந்த போது என்னை பார்க்கும் சாக்கில் லண்டன் வந்து எங்களுக்கு மூன்று மாதங்கள் உதவினால் மித்ரா. இந்த முறை அவள் உதவிகளை மதிக்கும் விதத்தில் ரேச்சலின் வற்புறுத்தலில் கிரனுக்கு அவள்தான் பெயரிட்டாள். கிரண் என்றால் சூரியன் என்று அர்த்தம். எங்கள் வாழ்வில் வெளிச்சம் தர வந்த சூரியன் என்ற அர்த்தத்தில் அவனது பெயரை முடிவு செய்தாள் மித்ரா. சென்ற ஆண்டுதான் என் அம்மாவும் தவறினார். அம்மாவிற்காக அவர்களது காரியத்திற்காக சென்னை வந்த நான் வேறுமையாக உணர்ந்த மித்ராவை அழைத்துக் கொண்டு லண்டன் திரும்பி விட்டேன். இங்கே அவளது தொழிலை சில மாத காலம் வேறு ஒருவரிடம் பொறுப்புகளை கொடுத்துவிட்டு வருமாறு ஏற்பாடு செய்துவிட்டு மித்ராவும் வந்து விட்டாள். அங்கிருந்தேதான் உங்கள் ஒப்பந்தத்திற்கான விண்ணப்பங்களை அவள் பூர்த்தி செய்து சமர்ப்பித்தாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எங்களுடன் லண்டனில் இருந்தபின் இப்போதுதான் சில மாதங்களுக்கு முன் இந்தியா திரும்பி வந்தாள் மித்ரா. இந்த முறை எங்கள் திருமணம் பற்றி கவலை கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில் மித்ராவை மேலும் இந்த பந்தத்தில் பிடித்து வைக்க கூடாது என்று ரேச்சல் வற்புறுத்தியதால் எனக்கும் மித்ராவிற்கும் விவாகரத்திற்காக ஏற்பாடுகள் செய்யத்தான் வந்தேன். கூடவே உங்கள் ஒப்பந்தம் சம்பந்தமாக திறப்பு விழாவும் வரவே சரி எல்லாவற்றிலும் அவளுக்கு துணை இருக்குமே என்று தான் வந்தேன். இது எல்லாவற்றிலும் ஒரு விதத்தில் ஏற்றுக்கொண்ட ரேச்சலுக்கும் அதுதான் நியாயம் செய்வதாக இருக்கும். எங்கள் விவாகரத்து இங்கே முடிவான பின் தான் லண்டனில் எனக்கும் ரேச்சலுக்கும் ஊரறிய திருமணம் நடக்க வேண்டும். என்னதான் அந்த நாட்டில் திருமணம் என்பது கட்டாயம் இல்லை என்றாலும் மனதளவில் நெருங்கி விட்ட எங்களுக்கு முக்கியமாக ரேச்சலுக்கு இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அந்த இடத்தில் நான் கொடுத்து வைத்தவன் தான். என் மாமன் மகளான மித்ராவும் சரி என்னை விரும்பி என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ரேச்சலும் சரி என் நிலையை புரிந்து கொண்டு நடந்து கொண்டிருக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் தினேஷ் நீங்கள் மித்ராவை விரும்புகிறீர்களா? எங்கள் மித்ரா தங்கம் தினேஷ் அவள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்."

கூர்மையாக ருத்ரனை பார்த்தான் தினேஷ்.

" நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சொன்ன மொத்தத்திலும் மித்ராவிற்கான லாபம் தான் என்ன? இது மொத்தத்தையும் தனக்கான எந்த ஒரு லாபமும் இல்லாமல் அவள் செய்தாள் என்கிறீர்களா இல்லையே என்னதான் அவள் நல்லவள் தியாகி என்றாலும் இது அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த அளவிற்கு அவள் சென்று இருக்கிறாள் என்றால் உங்கள் மீது அவ்வளவு பிரியமா? அப்படியே இருந்தாலும் அது அவளோடு. இது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள ரேச்சலுக்கு கட்டாயம் என்ன? நீங்கள் எப்படி இவ்வளவு சுயநலமாக உங்கள் வாழ்க்கை என்று மட்டும் யோசிக்கிறீர்கள்? இல்லையே ஏதோ இருக்கிறது." என்று சரியான பாயிண்ட்டை பிடித்து கேட்டான் தினேஷ் .

"சரிதான் நீங்கள் தொழில் சக்கரவர்த்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது. இதை நான் சொல்லாமல் விட்ட ஒரு விஷயத்தை பிடித்து விட்டீர்கள். அதைப் பற்றி உங்களிடம் சொல்லும் முன்னே உங்களது எண்ணம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று முயன்று பார்த்தேன். இருக்கட்டும். இதையும் தெரிந்து கொண்டே உங்கள் மனதில் இருப்பதை சொல்லுங்கள். மித்ரா என்னை திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் அவள் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டதற்கான காரணம் இதுதான். மித்ரா 13 வயது இருக்கும் போதே பூப்பெய்தி விட்டாள். அதற்கு பின் அவளுக்கு உடல் நிலையில் எந்த ஒரு தொந்தரவும் இருந்ததில்லை. ஆனால் 17 வயதில் ஏதோ ஒரு உடல் பாதை என்று மருத்துவரிடம் சென்ற போது தான் தெரிந்தது அவளுக்கு primary ovary insufficiency என்று. அது கிட்டத்தட்ட அந்த இளம் வயதிலேயே மெனோபாஸ் வருவதற்கு சமமானது. அப்போது தான் உயிருக்கு போராடி மருத்துவமனையில் இருந்து வந்திருந்த என் அம்மா அடுத்தடுத்து அடிகளை வாங்கி மனதளவிலும் உடலளவிலும் நொந்து இருந்த அவள் அப்பா என்று யாரிடம் போய் சொல்வாள் இதைப் பற்றி? யாரிடமும் அந்தப் பெண் சொல்லவில்லை தானாக முடிவு செய்து மருத்துவர் ஆலோசனைப்படி அந்த நிலையை மனதாலும் உடலாலும் எதிர்கொண்டு கடந்தால். இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று என் அம்மாவிற்கும் மாமாவிற்கும் தெரியாது. கல்லூரி முதல் ஆண்டு சுற்றுலா என்று பொய் சொல்லிவிட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து உடலை தேற்றிக்கொண்டு வீட்டுப் பொறுப்புகளை வந்து ஏற்றுக் கொண்டாள் மித்ரா. உடல் நலிவுட்டிருந்த என் அம்மாவிற்கு இதை உணரும் அளவிற்கு சுற்றுச்சூழ்நிலை மீது அக்கறை இல்லை. அவள் அப்பாவிற்கும் எதுவும் புரிந்ததும் இல்லை. தனியாகவே சமாளித்தாள் மித்ரா. மிகுந்த மன தைரியம் உடையவள் அவள். இந்த விவரத்தை என்னிடம் கூட அவள் திருமண பேச்சு எடுத்த போது தான் சொன்னாள். சொல்லிவிட்டு அவள் கூறியது ஒன்றுதான். அத்தான் எனக்கு திருமண வயது வந்து விட்டது. உங்களுடன் இல்லாவிட்டாலும் வேறு யாருடனாவது திருமண பேச்சு எடுப்பார்கள் தான் .நான் இந்த விவரத்தை யாரிடம் சென்று என்னவென்று சொல்வேன்? என்னால் இயலாது. அதனால் தயவு கூர்ந்து எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்கள், பெயருக்காக என் கழுத்தில் தாலி கட்டி விட்டு நீங்கள் சென்று விடுங்கள். உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் என்றுமே கேட்க மாட்டேன். இங்கு இதற்குப் பிரதிபலனாக நான் உங்கள் அம்மாவை பார்த்துக் கொள்வேன். இத்தனை நாள் அண்ணன் மகளாக செய்ததை இனி மருமகளாக செய்கிறேன். அவர்களுக்கும் திருப்தியான நிம்மதியான கடைசி காலம் அமையட்டும். அவர்களுக்கு எந்த குறையும் இன்றி கடைசி காலம் வரை துணையாக இருப்பேன். தயவு செய்து எனக்காக இந்த உதவியை செய்யுங்கள் அத்தான். உங்கள் ரேச்சலிடமும் நானே பேசுகிறேன். விவரம் புரிந்தால் அவர்கள் எனக்கு உதவ தயாராக இருக்கக்கூடும் என்று சொன்ன மித்ரா அத்தோடு நிறுத்தாமல் ரேச்சலிடமும் பேசினாள். விவரம் அறிந்த ரேச்சலுக்கு மித்ராவின் நிலையை பார்த்து மிகவும் பரிதாபம்தான். ரேச்சலின் ஒப்புதலுடன் தான் எங்கள் திருமணம் நடந்தது. அதற்கு பின் நடந்தது உங்களிடம் சொல்லி விட்டேன்." என்று முடித்த ருத்ரன் இதற்கு மேல் பேச வேண்டியது உன் கடமை என்பது போல் அமைதியாக இருந்தான்.

"எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது ருத்ரன்" என்று தினேஷ் சொல்லவும் ருத்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.இப்போது குழம்புவது அவனது முறையாகியது.

" என்ன சொல்கிறீர்கள் தினேஷ்? நிம்மதியாக இருக்கிறதா? மித்ராவின் நிலையை கண்டா?"

" இல்லை இல்லை அப்படி இல்லை அவள் நிலையை கண்டெல்லாம் எனக்கு நிம்மதியாக இல்லை. வருத்தம் தான் வலி தான். பாவம் என்னவள் இந்த சிறிய வயதில் எத்தனை துன்பங்களை தாங்கிக் கொண்டு இருந்திருக்கிறாள் அதுவும் தன்னந்தனியாக. ஆனால் இந்த சில மாதங்கள் நான் விரும்பிய மித்ராவின் மனதில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணமே எவ்வளவு கசந்தது தெரியுமா. என் தரு உங்களை திருமணம் செய்து கொண்டது ஏதோ ஒரு கட்டாயத்தின் பெயரில் தான். உங்கள் பால் அவள் மனம் செல்லவே இல்லை. அது போதும் எனக்கு. இனி அவளிடம் பேசி அவளை கவர்ந்து அவள் மனதைக் கவர்ந்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது என் பொறுப்பு. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அவளுக்கு நீங்கள் கொடுக்க வந்த டைவர்ஸை கொடுத்துவிட்டு லண்டனுக்கு நடையை கட்டுங்கள். மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று சொன்ன தினேஷின் குரலில் ஒரு தனி உற்சாகம் இருந்தது.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
🤣🤣🤣 பொறாமை கொண்ட நெஞ்சம் அமைதி அடைந்த சந்தோஷம் தினேஷுக்கு 🤩

இத்தனை ரகளை செஞ்ச தினேஷ் மித்ராகிட்ட எப்படி சம்மதம் வாங்கப் போறானோ 🧐

அவன் பாடு கஷ்டம் தான் 🤣🤣
 

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அவ்வளவு சுலபமா கிடைத்துவிடும்?????