அத்தியாயம்-10
சாயின் புகைப்படத்தின் முன் அமர்ந்திருந்தனர் கேதரீனும், நீல்ஸ்ம்.
அவன் இறந்து மூன்று நாட்களாகி இருந்தது. சாய் சிவனேஷ் மூளையில் அறுவைச் சிகிச்சை கொண்டும் நீக்க இயலாத கட்டி இருந்தது. அவன் உயிருக்கு மருத்துவர் கொடுத்திருந்த கெடு ஆறு மாதங்கள். அதற்காகத்தான் அவன் சன்ஃபிளவர் இன்னுக்கு வந்திருந்தான். அங்கிருந்து சென்றாலும் நண்பர்கள் மூவரும் தினமும் அலைபேசி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சந்தித்தும் கொண்டனர்.
நீல்ஸூம், கேத்தியும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தனர். சாய் அவன் உடல் நிலையைப் பற்றி அவர்களிடம் கூறியதே இல்லை. அவன் இறுதியாக அவர்கள் இருவருக்கும் வீடியோ செய்தி ஒன்றை விட்டுச் சென்றிருந்தான்.
“கேத்தி, நீல்ஸ் நாம மூணு பேரும் ஒரே ஏஜ்குருப் கிடையாது. ஆனால் உங்ககிட்ட இருந்த மாதிரி நான் ரொம்ப கம்பர்ட்டா இருந்ததே இல்லை. என்னைப் பத்தி மறைச்சது தப்புதான். ஆனால் என்னால் நீங்க இரண்டு பேரும் சோகமாக இருக்கறது பிடிக்கலை. நான் உங்க கூட இருக்கும் போதுதான் அதிகமாகச் சிரிச்சேன். என்னோட வாழ்க்கையில் பெஸ்ட் நாட்கள் அந்த பத்து நாட்கள்தான். நீல்ஸ் நீ உனக்குனு ஒரு ஐடிண்டியை உருவாக்கிக்கோ.
உன்னோட டேலண்ட்டை நீ வெளிய கொண்டுவா. கேத்தி நீயும் சூர்யா அண்ணாகிட்ட சீக்கிரம் போ. என்னை பாருங்க. வாழ்க்கை ரொம்ப சின்னது. அதனால் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி சந்தோஷமாக வாழுங்க.
நம்ம சி என் எஸ் கேங்க் எப்பவும் ஜமாய்க்கனும். எனக்காக அழ வேண்டாம். நான் நிம்மதியாகத்தான் போறேன். என்னோட அப்பா, அம்மாவை முடிஞ்சால் வந்து அப்பப்ப பார்த்துக்கோங்க. கேத்தி உனக்கு நான் ஒரு அழகாக ஒரு வெட்டிங்க் டிரஸ் டிசைன் செஞ்சுருக்கேன். நீல்ஸ் உனக்கு ஒரு ஆக்சரியும், சேரியும். லவ் யூ போத். ”
அவன் ஒரு கையை முன்னாடி புன்னகையுடன் அவர்கள் எப்போதும் உறுதி மொழி எடுக்க நீட்டுவது போல் நீட்ட அந்த வீடியோ முடிவடைந்தது.
கேதரீனும், நீல்ஸூம் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுதனர்.
***
ஒரு வருடத்திற்குப் பின்,
“ரீனா கரக்ட் டையத்திற்கு வந்தறேன். போனை வைடி.”
உறக்கத்தில் இருந்து எழுந்தவள் அவசர கதியில் கிளம்பினாள். அன்று ஒரு நாள் மட்டும் எப்படியோ உறங்கிவிட்டாள். கிளம்பி பார்க்கிங்க் சென்றவள், ரீனாவின் காரில் ஏறினாள்.
“கேட்?”
“சரி சரிடி முறைக்காத. இப்ப தலை சீவறேன். இரு.”
“நீல்ஸ் டென்சனாகிடுவாங்க.”
காரை வேகமாக செலுத்தினாள் ரீனா. நீல்ஸ் தன்னை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கும் குடும்பத்தினரிடம் இருந்து வெளியே வந்து, தனக்கு நன்றாக வரும் ஆரி வேலைப்பாட்டை ஒரு கடையில் சேர்ந்து செய்ய ஆரம்பித்தார். அத்தோடு பெண்கள் முன்னேற்றத்தினைப் பற்றிப் பேச ஒரு யூ டியூப் சேனல், இன்ஸ்டாகிராமில் வலம் வர ஒரு வருடத்தில் அவருக்கு கணிசமாக மக்கள் தொடர்ந்தனர்.
இன்று அவர் எழுதிய, ‘உருவமிலா விலங்கு’ என்ற புத்தக வெளியீட்டு விழா.
அதற்குத்தான் இரு தோழிகளும் சென்று கொண்டிருக்கின்றனர். ஒரு வழியாக அந்த அரங்கத்தை அடைய காத்திருக்கும் இடத்தில் நீல்ஸ் அமர்ந்திருந்தார்.
ஒரு பூங்கொத்தோடு வந்த தோழிகள் இருவரும் அவரை அணைத்துக் கொண்டனர்.
“நீல்ஸ் அழகாக இருக்க.”
அன்று அவர் அணிந்திருந்தது சாய் அவருக்கு டிசைன் செய்து கொடுத்த புடவையும், அணிகலனும் தான்.
புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில், ‘சாயுக்கும், சன்ஃபிளவர் இன்னும், கேத்திக்கும், ரீனாவுக்கும் அர்ப்பணிக்கிறேன்’ என புத்தகத்தை அர்பணித்திருந்தார்.
இரண்டாம் பக்க விஷயம் கேத்திக்கு இன்னும் தெரியாது. மேடையில் பேசும் போது நீல்ஸ் கூறிவிட கேதரீனுக்கு கண்ணீரே வந்துவிட்டது.
விழா சிறப்பாக முடிந்தது.
இரண்டு பெண்களும் புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருந்தனர்.
***
தனக்கு எதிரே இருக்கும் பார்சலைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தான் சூர்யா. அவனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக மாதம் தோறும் ஒரு காய வைத்த ரோஸ்மேரி இலைகள் அடங்கிய பார்சல் ஒன்று வரும். கடந்த இரு மாதங்களாக வரவில்லை. இந்த தடவை இரண்டாக வந்திருந்தது.
அதை அனுப்பியது யாரென்றும் அவன் அறிவான். முதல் பார்சலில் வழக்கம் போல் இருக்க, இரண்டாவதில் நீல்ஸ் எழுதிய புத்தகம் இருந்தது.
அதை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் வாசீம்.
“என்ன சூர்யா இரண்டு மாசமாக முகத்தை தொங்க போட்டுட்டு சுத்திட்டு இருந்த. இப்ப இரண்டு பார்சல் வந்ததும் பல்ஃப் போட்ட மாதிரி மூஞ்சு இருக்கு.”
“சும்மா இருடா.”
“நீயும் கேதரீனும் அப்படியே காதல் கோட்டை தேவயாணி, அஜீத். லெட்டர் மாதிரி பார்சல் அனுப்பி விடுவாங்களாம் அவங்க. இவரு இங்க ஃபீல் பண்ணுவாராம். காதல்ல டைமிங்க் முக்கியம்டா. கேத்திய தேடிப் போனா போக மாட்டாராம். மேடமும் வரமாட்டாங்களாம். உங்கிட்ட கேத்தி காதலை சொல்லிட்டா. நீ ஒரு வார்த்தை பேசி இருக்கியா? தேடிப் போ.”
சூர்யா வாசீமை முறைக்க அவன் விசில் அடித்தப்படி வெளியே சென்றுவிட்டான்.
***
கேதரீன் அன்று கல்லூரிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போது மாலை ரீனா ஒரு இடத்திற்குச் செல்லும் படி செய்தி அனுப்பி இருந்தாள். கேதரீன் இப்போது முதுகலை உளவியல் படித்துக் கொண்டிருக்கிறாள். அத்தோடு லைஃப் கோச் ஆகும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தாள்.
‘இந்த ரீனா இப்ப இந்த பீச் ஹவுஸூக்கு எதுக்கு வர சொல்றா?’ என யோசித்தப்படியே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். நன்றாக இருட்டி விட்டிருந்தது.
அந்த இடம் முழுக்க சூரிய காந்தி மலர்களால் பாதைபோல் வடிவமைக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டிருந்தது. ஒரே ஒரு ஸ்பாட் லைட் மட்டும் தெரிய அதில் ரோஜா மலர்க் கொத்துக்கோடு நின்று கொண்டிருந்தான் சூர்யா.
கேதரீன் சில விநாடிகள் உறைந்து நின்றாள். பிறகென்ன ஓடி வந்தவள் சூர்யாவை அணைத்துக் கொண்டவள் அவன் முழுக்க முத்தமிட்டாள்.
“சூர்யா நீ எனக்காக வந்தியா? ஏன் தீடிர்னு?”
பூங்கொத்தை கீழே விட்டவன் கேதரீன் முகத்தை இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான்.
“லிட்டில் ரோஸ். ஐ லவ்டு யூ பிரம் தி பர்ஸ்ட் மொமண்ட். லவ்ட் அட் பர்ஸ்ட் சைட். உன்னை இவ்வளவு நாள் காக்க வச்சுதுக்கு சாரி.”
சூர்யா முகத்தில் அவளுக்காகக் கொட்டிக் கிடக்கும் காதலை அன்றுதான் பார்க்கிறாள் கேதரீன்.
“எனக்கு அப்பவே ஒரு சந்தேகம். நீ என்னை லிட்டில் ரோஸ்னு கூப்பிடறதே வித்தியாசமாக ஃபீல் ஆகும். ஆனால் கொஞ்சம் கூட முகத்தில் காட்டுனதே இல்லை நீ.” அவன் புஜத்தில் லேசாகக் குத்தினாள்.
“உன்னை அங்கிருந்து அனுப்பவே எனக்கு இஷ்டம் இல்லை. எவ்வளவு கஷ்டமாக இருந்துச்சு தெரியுமா?”
“நீ என்னோட சூர்யாதானா? இவ்வளவு ஓப்பனாப் பேசற.”
அதற்குப் பதில் அவளைத் தூக்கியவன் இதழில் ஒன்று முத்தத்தை இட, கேதரீனின் சித்தம் மயங்கியது.
“நீ கேட்டு நான் செய்யாதது இது ஒன்னுதான்.” மேலும் முத்தத்தைத் தொடர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து அவளை இறக்கிவிட்டவன், ஒரு மோதிரத்தை எடுத்து நீட்டியபடி மண்டியிட்டு அமர்ந்தான்.
“வில் யூ மேரி மீ.”
“யெஸ்.”
மோதிரத்தை வாங்கி அணிந்தவள் மேலும் சூர்யா எழவும் மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
“ஆனால் ஸ்டடீஸ் முடிச்சதும், அப்புறம் லைஃப் கோச் ஆனதும்தான் கல்யாணம் பண்ணிப்பேன். சன்ஃபிளவர் இன்னுக்குப் பக்கத்தில் ரோஸ்மேரி இன் ஆரம்பிப்பேன்.”
“ஒகே. நீ எது வேணாலும் ஆரம்பிச்சுகோ.”
இருவரும் கைபிடித்தப்படி பீச்சில் நடக்க ஆரம்பித்தனர். அந்த அழகான தருணங்கள் என்றென்றும் மறக்க முடியாத ஒன்றாகி விட்டிருந்தது.
ஒரு வருடம் கழித்து, சன்ஃபிளவர் இன்னின் அருகில் ரோஸ்மேரி இன் என்று ஒரு அழகிய வீடு இருந்தது. அதில் லைஃப் கோச்சிங்க் வொர்க் ஷாப் நடத்திக் கொண்டிருந்தாள் கேதரீன்.
சூர்யா அவள் ஆசைபட்ட படி கட்டிக் கொடுத்திருந்தான்.
வொர்க் ஷாப் முடிய சூர்யா அவளுக்காகக் காத்திருந்தான்.
அவன் கையில் மூன்று ரோஜா மலர்கள் இருந்தது.
“எனக்கு சன்ஃபிளவர் வேணும் சூர்யா.”
“வா போலாம்.”
இருவரும் கைகளை இணைத்தபடி நடக்க ஆரம்பித்தனர். ரோஸி அவர்கள் பின்னால் தொடர்ந்தது.
சூரிய காந்திச் செடிகளில் மலரொன்றை பறித்துத் தந்தான் சூர்யா. சுற்றி முற்றிலும் பார்த்த கேதரீன் அவன் இதழில் சட்டென்று ஒரு முத்தம் வைத்தாள்.
சூர்யா கேதரீன் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கி இருக்க, விரைவில் திருமணமும் நடக்கப் போகிறது. இருவரும் கைபிடித்தப்படி சூரிய காந்தி மலர்த்தோட்டத்தின் ஓரப் பாதையில் நடக்க அலெக்சி வேகமாக ஓடி வந்தது.
இப்போதெல்லாம் கேதரீன் அலெக்சியின் தோழியாகி விட்டிருக்க, சூர்யாவைவிட அவள் கையில்தான் இருக்கிறாள்.
அலெக்சி வந்ததும் கேதரீன் ஏறி அமர, சூர்யாவும் ஏறி அமர்ந்தான். அலெக்சி மெல்ல நடை போட ஆரம்பித்தது. பின்னே ரோசி தொடர்ந்து. இந்த இரண்டும் அவர்கள் காதல் சின்னங்களாயிற்றே. உடனே அதன் மேலே இருக்கும் இருவரின் காதலும்தான்.
சன்பிஃளவர் இன்னில் கேதரீன் மற்றும் சூர்யா கதை இனிதே நிறைவுற்றது. படித்த அனைவருக்கும் நன்றிகள்.
இந்தப் போட்டிக்கு முதலில் டைம் டிராவல் , பள்ளியில் கிரைம் திரில்லர் இப்படி எல்லாம் யோசித்துவிட்டு வழக்கமான பாணியை விட்டு போட்டிக் கதையில் இது போன்று எழுதினால் நிச்சயம் பலரைச் சேரும் வாய்ப்புகள் உண்டு. மனதில் இருக்கும் காயங்கள் எளிதில் ஆறுவது இல்லை. இதில் கொடுத்திருக்கும் JPMR,EMPTY CHAIR, YOGA, JOURNALING, POSITIVE Affirmations பயன்பாட்டில் இருப்பவை. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்.
மனதளவில், உடலளவில் யாருக்கும் கஷ்டம் இருந்தாலும் உங்களால் மீள முடியும். அதே போல் நீங்கள் நினைத்தால் இப்போது கூட உங்களுக்குப் பிடித்ததை செய்ய முடியும்.
உங்களுக்கு நீங்கள் தான் மிகப்பெரிய தடை. உங்கள் மனதில் இருக்கும் தளைகளை களைந்து விட்டு, புதிய அத்தியாயத்தை எழுதுங்கள். It's never too late to live for yourself.