• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சன்பிஃளவர் இன்-8

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
அத்தியாயம்-8

சென்னை. சர்வ வசதிகளும் நிறைந்த அந்த வில்லாவில் மாலை நேரம் விளக்குக் கூட போடாமல் கிடந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ரீனா. நேற்றிலிருந்து அவளுக்கு ஓய்வில்லை. விளக்குகளை ஒளிர சோபாவில் அமர்ந்திருந்தனர் வில்லியம் மற்றும் ஜெபமேரி. கேதரீனின் பெற்றோர்கள்.

ரீனாவைப் பார்த்ததும் ஜெபமேரி எழுந்து நின்றார்.

“ரீனா என்னை கேத்திகிட்ட கூட்டிட்டுப் போமா. நான் அவளைப் பார்க்கனும்.” அவர் முகம் முழுக்க அழுது வீங்கி இருக்க குரலே கேவலாகத்தான் ஒலித்தது.

“ஜெபிமா.. கேத்திக்கு டைம் கொடு.”
வில்லியமின் விழிகளிலும் சோகம் பரவிக் கிடந்தது.

“அம்மா.. சாரிம்மா. நான் எங்க நீங்க எல்லாரும் அவளை மறுபடியும் கன்வின்ஸ் பண்ணி வச்சுருவீங்க. அவளும் உங்களுக்காக ஜோசப்பை கல்யாணம் செய்வாள்னு பயந்துட்டேன். கடைசியிலே அவளே எங்காவது போகனும்னு கேட்டாள். அதான் அனுப்பிவச்சுட்டேன்.”

நேற்று நடந்தது மூவருக்குமே மனதில் வந்து சென்றது.

கேதரீனை பேருந்தில் ஏற்றிவிட்ட பின்னர் ரீனா விரைந்து தேவாலயத்திற்குச் சென்றாள். அங்கு அனைவருமே கேதரீனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.

வில்லியம் ரீனாவைப் பார்த்ததும், “ரீனா கேத்தி எங்க? என்னாச்சு? கார் பிரச்சினையும் சரியாகிடுச்சுனு சொன்னாங்க” என்று கேட்டார்.

“அங்கிள் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க.”

“என்ன ரீனா பேசற? கேத்தி எங்க?”
வில்லியம் முகத்தில் கோபம் வெளிப்பட்டது.

“இதைப் பாருங்க அங்கிள்.”

கைப்பேசியை பதட்டத்துடன் வாங்கிப் பார்த்த வில்லியம்ஸ் முகத்தில் கலவரம்.

“கர்த்தாவே..” என நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்.
அப்போது ஜோசப்பின் அப்பாவும் என்னவென்று விசாரிக்க அருகில் வந்தார்.

“இரண்டு மாசமாவே கேதரீன் முகமே சரியில்லை. ஆனால் இங்க பாருங்க உங்க பையன் செஞ்சு வச்சுருக்க வேலையை. இந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது.”
ஜோசப்பின் தந்தைக்குமே இது அதிர்ச்சிதான்.

புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவர் மனம் உடைந்து போனார் என்றுதான் கூறலாம். தன் கணவர் மற்றும் சம்பந்தியின் முகம் சரியில்லை என அருகில் வந்த ஜெபராணியும் விஷயம் அறிந்து நொந்து போனார். ஜெபராணி பெண்ணுக்கு இப்படி நடந்துவிட்டது என அழ ஆரம்பித்துவிட்டார்.
தேவலாயத்தில் சிரித்தப்படி நின்று கொண்டிருந்தான் ஜோசப்.

திருச்சபையின் பிஷப் திருமண பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே சென்ற ரீனா அவரிடம் திருமணம் நடக்காது என்ற உண்மையைக் காதில் கூறிவிட்டு அவரிடம் இருந்து மைக்கை வாங்கிக் கொண்டாள்.

“திருச்சபையில் கூடியுள்ள அனைவருக்கும் வணக்கம். என் தோழியின் திருமணத்திற்காக வருகை புரிந்த அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திருமணம் இனிமேல் நடைபெறாது.”

இதுவரை புன்னகைத்தப்படியே ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜோசப்பின் முகம் மாறியது.

“ரீனா..”

“ஒரு சீட்டரையும், லூசரையும் கல்யாணம் செய்ய என்னோட பிரண்டுக்கு விருப்பம் இல்லை. எதிர்பாராத செயலுக்கு திருச்சபையிடம் மன்னிப்பை வேண்டுகிறேன்.”


ரீனா அருகில் அழகாக வைக்கப்பட்டிருந்த பூங்கொத்தை எடுத்து ஜோசப்பின் முகத்தில் தூக்கி அடித்து விட்டு வெளியேறிவிட்டாள்.

சபையில் இருந்த அனைவரும் அதிர்ந்தாலும், அடுத்தடுத்து தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.


ரீனா வெளியே வரும் போது ஜெபராணி மயங்கி விழுந்திருக்க, உடனடியாக தேவலாயத்தில் நிறுத்தி இருந்த தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை விரைந்தாள். தோழியான ரீனாவுக்கு இவ்வளவு இடமா என்றால் அப்படித்தான். ரீனா வில்லியமுக்கும் இன்னொரு பெண் போல. கேதரீனுடன் நகமும், சதையுமாக இருப்பவள், அதோடு அவள் ஒரு தானாக தொழில் முனைபவள் அவள் சொல் அம்பலத்தில் எப்போதும் ஏறும்.

அன்று இரவு முழுக்க மருத்துவமனையில் இருக்க காலை கண் விழித்தார் ஜெபராணி. வில்லியம் மனைவியைப் பார்ப்பதாக இல்லை மகளைத் தேடுவதாக என யோசிக்க, ரீனா அவரை அமைதிப்படுத்தினாள்.

கேதரீன் தன் தந்தைக்கு கைப்பேசியில் தான் போகும் தகவலை அனுப்பிவிட்டுத்தான் சென்றிருந்தாள். அன்று முழுக்க ஜெபராணியை அமைதிப்படுத்துவதிலேயே கழிய, ரீனா அலுவலகத்தில் ஒரு அவசர வேலை அங்கு சென்று விட்டு இரவு உணவை வாங்கி வந்திருந்தாள்.

அப்போதுதான் ஜெபராணி மகளைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டார்.

“கேத்தியே வருவா அம்மா. நீங்க அழாதீங்க. அவ இப்ப ரொம்ப பத்திரமான இடத்தில் இருக்காள்.”

“என் கேத்தி பிறந்தப்போ என் அம்மா கூட என்னை சந்தேகமாகப் பார்த்தாங்க ரீனா. ஆனால் கேத்தி அப்படியே வில்லியம் சாயல். அப்பவும் என்னைப் பத்தி தப்பாப் பேசுனவங்க இருக்காங்க. ஆனால் என்னோட வில்லியம் எப்பவும் எனக்குத் துணையாக இருந்தாரு. கேத்தியால் கொஞ்சம் வெயிலடிச்சா கூட தாங்க முடியாது. வெயில்ல கண்ணு முழிக்க முடியாது. அவ ஸ்கின் கலரால் அவளைக் கிண்டல் அடிச்சாங்க. பிரண்ட்ஸ் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டா. அதனால் தான் அவளை ஊட்டியில் படிக்க வச்சோம். அப்படி வளர்த்த என் பொண்ணை ஒரு வுமனைசருக்கு கல்யாணம் செஞ்சு வைக்க கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன். என் கேத்தி எப்படி எல்லாம் அழுதுட்டு இருக்கோளோ? ”

அவர் ரீனாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே அழ வில்லியமின் கைப்பேசி அடித்தது. அந்த கைப்பேசி அழைப்பில் புறப்பட்டு சன்ஃபிளவர் இன்னுக்கு வந்து சேர்ந்திருந்தனர் மூவரும்.


கேதரீன் ஓடிச் சென்று தாயையும், தந்தையும் அணைத்துக் கொண்டவளுக்கு விழிகளில் கண்ணீர் பெருகியது.

“சாரிம்மா.. சாரிப்பா.. என்னால் உங்களுக்கு கஷ்டம்.”

“மன்னிச்சுரு கேத்திம்மா. பிரண்டு வீட்டில் கொடுத்தால் உன்னை நல்லாப் பார்த்துக்குவாங்கனு நினைச்சேன். ஜோசப் பத்தி முன்னாடியே தெரிஞ்சுருந்தால் நாங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருப்போம்.”

“என்னால் உங்களுக்கு அவமானம்.”

தன் மகளின் குனிந்திருந்த தலையை நிமிர்த்திய வில்லியம், “என் பொண்ணு என்னைக்கும் அவமானம் கிடையாது. எனக்கு ஜீசஸ் கொடுத்த பரிசு. உன்னை விட எதுவும் பெரிசு கிடையாது கேத்தி.”

கேத்தி கண்ணீர் விட்டபடியே தந்தையை மீண்டும் அணைத்துக் கொண்டாள். நடப்பதைப் பார்த்தப்படி சூர்யா, நீல்ஸ், சாய் மற்றும் ரீனாவும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் கொஞ்சம் அமைதி அடைந்ததும், சூர்யா அவர்கள் அருகில் வந்தான்.

“ஹாய் ஐம் டாக்டர். சூர்யபிரகாஷ். நேத்து கால் பண்ணது நான்தான்.”

“தேங்க்ஸ் மை சன். ரீனா கேத்தி இருக்கற இடத்தை சொல்ல ரொம்ப யோசிச்சாள். நீங்களே கூப்பிட்டீங்க.”

“கேதரீன் உங்களை மீட் பண்ணால் ரொம்ப சீக்கிரமாக மூவ் ஆன் ஆகிருவாங்கனு தோணுச்சு. அதான் வர வச்சேன். எல்லாரும் டைனிங்க் ஹாலில் சாப்பிடலாம்.”

அப்போது ரீனாவுக்கு ஒரு அழைப்பு வர, “நீங்க எல்லாரும் உள்ள போங்க. ஒரு இம்பார்ட்டண்ட் கால். பேசிட்டு ஜாயின் பண்ணிக்கிறேன்.” என பொதுவாகப் பார்த்து கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் ரீனா.

நீல்ஸ்ம், சாயும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
ரீனாவைத் தவிர அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். கேதரீனுக்கு அன்னையும், தந்தையும் ஊட்டி விட அவளும் ஆனந்தக் கண்ணீருடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

சூர்யாவை அடிக்கடி பார்த்துக் கொண்டே உண்டாள் கேதரீன். பின் ரீனாவும் சாப்பிட இணைந்து கொள்ள நேரம் சென்றது.
ரீனாவுக்கு அவசர வேலை வந்து விட வில்லியமும், ஜெபராணியும் சூர்யாவுடன் பேசி விட்டு கிளம்பினர்.

கேத்தியிடம், “நீ எவ்வளவு நாள் வேணாலும் இருந்துட்டு வாமா. உனக்கும் சேஞ்சாக இருக்கும்.” என பெற்றோர்கள் இருவரும் சொல்லிவிட்டு சென்று விட ரீனாவிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள் கேதரீன்.

ரீனாவையும் அணைத்துக் கொண்டாள் கேதரீன்.
“ரீனா தேங்க்ஸ். நீ மட்டும் அப்படி ஒரு முடிவு எடுக்கலைனா நான் அந்த ஜோசப்பைக் கல்யாணம் செஞ்சுட்டு இருப்பேன். அவன் இது மட்டுமில்லை. கொஞ்ச நாளாவே என்னை எல்லாத்திலும் மட்டம் தட்டிட்டே இருந்தான். நிறைய தடவை உனக்கு வெள்ளைத் தோலு மட்டும் தான். வெளிநாட்டுப் பொண்ணுக மாதிரி அறிவோ, நடத்தையோ கிடையாது திட்டி இருக்கான். நான் எங்கிட்டதான் குறையோனு நினைச்சேன். எல்லாமே சரியாகிடும்னு நம்புனேன். பட் இப்படி அவன் செய்வானு தெரியலை.”

“எங்கிட்ட ஏன் சொல்லலை கேதரீன்? அவனை சும்மாவே விட்ருக்கக் கூடாது.”

“நீ கண்டிப்பாக சும்மா இருக்க மாட்டேனு தெரியும். அதான்..”

“உன்னை இங்க அனுப்பி வச்சுட்டேன். ஆனால் எனக்குமே அம்மா, அப்பாவை எப்படி சமாளிக்கப் போறேனு பயம்தான். ஆனாலும் ஜோசப்கிட்ட உன்னை விட மாட்டேன். உன்னை அனுப்புனது சரியானு குழப்பம். உன்னோட அப்பா, அம்மாகிட்ட முதலில் பேசி இருக்கலாம்னு தோணுச்சு. உனக்கு இங்க இருக்க பிடிக்கலைனா வேற இடத்துக்கு வேணாலும் கூட்டிட்டுப் போறேன்.”

“ரீனா நான் கேட்டதால் நீ என்னை அங்கிருந்து இங்க வர ஹெல்ஃப் பண்ண. ஜோசப்கிட்ட இருந்து என்னை நீ காப்பாத்தி இருக்க. அவன் கூட இருந்திருந்தால் நிச்சயம் நான் சந்தோஷமாக இருந்திருக்க மாட்டேன். நீ என்னை கரக்டான இடத்தில் சேர்த்திருக்க. நான் பத்து நாள் கழிச்சு வரேன். அப்பா, அம்மாவை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோ. நீ எனக்கு எப்பவும் நல்லது மட்டும்தான் செஞ்சுருக்க. நான் கேட்காமலேயே என்னைப் புரிஞ்சுகிட்டு நடந்துருக்க. யாருமே என் கூட பிரண்ட் ஆகலை. நீ மட்டும்தான் எனக்கு முதலில் பிரண்ட் ஆன. இப்ப வரைக்கும் கூட இருக்க. தேங்க்ஸ்.”

தோழிகள் இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர்.

“தேங்க்ஸ் எல்லாம் சொல்லாத கேட்.”

இருவரும் பேசி முடித்த பிறகு கேதரீன் தன் பெற்றோருக்கும், தோழிக்கும் விடை கொடுத்து அனுப்பினாள். நீல்ஸ்ம், சாயும் அதுவரை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவர்கள் கேத்தியுடன் சேர்ந்து கொண்டனர்.

“கேத்தி நீ போயிடுவேனு நினைச்சேன்.”
சாய் கவலையுடன் கூறினான்.

“இல்லைடா. இன்னும் ஒன்பது நாள் இந்த சன்ஃபிளவர் இன்னில் நாம செய்ய வேண்டிய சம்பவம் நிறைய இருக்கு. அதவிட்டு எப்படி போவேன் சாய்?” என்றாள் கேதரீன்.

“அப்படி சொல்லு கேத்தி. இது நம்ம வாழ்க்கையிலேயே பெஸ்டான பத்து நாளாக இருக்கப் போகுது. இது நமக்கான டைம்.” என நீல்ஸ் கையை முன்னால் நீட்ட, மற்ற இருவரும் தங்கள் கையை வைத்து உறுதி பூண்டனர்.

சூர்யாவும், வாசீமும் தூரத்தில் நின்று மூவரின் செய்கையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“சூர்யா இன்னும் ஒன்பது நாள் இவங்க அலப்பறையில் சன்ஃபிளவர் இன் தாங்குமா?”

“உன்னையே தாங்குச்சாம். அப்புறம் என்ன?”

“டேய்.. என்னோட கேத்தி அப்பா, அம்மா வந்தாங்களாம். நீ ஏன் சொல்லவே இல்லை. அவங்கிட்ட நான் பிரவுனி பாயிண்ட்ஸ் வாங்கி இருப்பேன்ல.”


வாசீம் கேதரீனையே பார்த்துக் கொண்டு பேச, சூர்யாவும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அடுத்த ஒன்பது நாட்கள் என்னென்ன அலப்பறைகள் செய்யக் காத்திருக்காங்களோ 🤣🤣
 
  • Love
Reactions: MK4

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
அடுத்த ஒன்பது நாட்கள் என்னென்ன அலப்பறைகள் செய்யக் காத்திருக்காங்களோ 🤣
Thank you♥️