• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமர்ப்பணம் 10

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
தன் கன்னத்தைக் கையால் பொத்திக் கொண்டு,”அடிங்கப்பா! என்னை உங்க கையாலேயே அடிச்சுக் கொன்னுடுங்க! அந்த ராஜனைக் கட்டிக்கிறதுக்குப் பதிலாக உங்க கையால் அடி வாங்கி சாகுறதே மேல்!”என்றவளிடம்,

“ஏன் சொல்ல மாட்டே! உனக்கு உடம்பு பூராவும் திமிரு ஏறிக் கெடக்கு! உன்னை வீட்டில் ஒரு வேலையும் செய்ய விடாமல் பதமாக வளர்த்து வச்சா இப்படித் தான் வாய் பேசிட்டுத் திரியுவ! உன்னையெல்லாம் சின்னதுல இருந்தே அடிச்சு வளர்த்து இருக்கனும்!”என்று அவளிடம் கோபமாக மொழிந்தார்.

“அப்பா! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! அவனைக் கல்யாணம் செய்துக்க எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை! தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சுக்கோங்க!”என்று அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டாள் தங்கபுஷ்பம்.

“இப்படியே உன் விருப்பத்துக்கு விட்டதால் தான் நீ ஆடுகாலி மாதிரி திரிஞ்சிட்டு இருக்கிற! உனக்கு ஒரு கால் கட்டுப் போட்டா தான் வழிக்கு வருவ!”என்ற அன்னையிடம்,

“என்னை ரூமுக்குள்ளே கட்டிக் கூடப் போடுங்கம்மா! ஆனால் அவனுக்கு மட்டும் என்னைக் கட்டிக் குடுக்காதீங்க!”என்று அவரிடமும் கெஞ்சினாள்.

“ஏய்! நீ இதுக்கு மேல் ஏதாவது பேசுன! உன்னைப் பொலி போட்ருவேன்! உன் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிட்டு இருக்காத!”என்று அவளிடம் சொன்னவரோ,

“வள்ளி! நீ இவளைக் கூட்டிட்டுப் போய் ரூமில் விட்டுட்டு வா. நான் சற்குணத்துக்குப் போனு செஞ்சிப் பரிசம் போட வரச் சொல்றேன்!”என்று மகளைப் பார்வையால் எரித்து விட்டுத் தனது செல்பேசியை எடுக்கப் போனார் காளிமுத்து.

“அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லுங்கம்மா!”என்று இறைஞ்சியவளது அழுகையையும், அரற்றலையும் பொருட்படுத்தாமல் மகளை இழுத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்று, மெத்தையில் உட்கார வைத்து,

“இங்காருடி! நீ இனிமேல் நாங்க சொல்றதை மட்டும் தான் கேட்கனும். கல்யாணம் ஆகப் போறப் பொண்ணு. நீ இன்னைக்கு இருந்து இந்த வீட்டை விட்டு வெளியே போக கூடாது. உன் தோழிங்கன்னு யாரும் உன் கூடப் பேசனும்னு இங்கே வரவும் கூடாது! உனக்குக் கல்யாணம் முடிச்சு வச்சு அனுப்புற வரைக்கும் எங்க சொல்படி தான் நீ நடந்துக்கனும். சரியா? அப்படி ஏதாவது தற்கொலைக்கு முயற்சிப் பண்ணுனன்னு வச்சுக்கோ! உனக்கு முன்னாடி நாங்க எங்க உசிரை மாய்ச்சுப்போம். பார்த்துக்கிடு!”என்று மிரட்டி விட்டு வெளியேறினார் வள்ளி.

அதைக் கேட்டுத் துவண்டு உடல் தளர்ந்து போய் பித்துப் பிடித்தாற் போன்று அமர்ந்து விட்டாள் தங்கபுஷ்பம்.

இனிமேல் தனது தலையெழுத்து அந்த ராஜனுடன் தானா? என்பதை எண்ணுகையில் அவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

இந்த இக்கட்டிலிருந்து மீளும் வழி தெரியாமல் உடைந்து போய் விட்டாள் தங்கபுஷ்பம்.

இதே நேரத்தில் தங்களது ஊரை அடைந்த தர்மராஜூம், வீரபத்திரனும் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே,”வாங்க!”என அவர்களை வரவேற்று,”என்ன நெலம் வாங்குற வேலை சுளுவா முடிஞ்சிருச்சா?”என்று வினவினார் முனீஸ்வரி.

தர்மராஜ்,“ம்ம். முடிஞ்சது”என்றவரின் குரலில் சுரத்தே இல்லாததைக் கவனித்து அவரைக் குழப்பத்துடன் பார்த்து விட்டு, ஓரக்கண்ணால் வீரபத்திரனை ஆராய, அவனது முகமோ கோபத்தில் இருண்டு போயிருந்தது.

அதைக் கண்டதும் அவர்களிடம் வேறெதுவும் கேட்காமல் அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார் முனீஸ்வரி.

அதை வாங்கிப் பருகிய தர்மராஜிடம்,”சாப்பாடு எடுத்து வைக்கவாங்க?”எனக் கேட்க,

“இல்லை வேண்டாம். நான் அறைக்குப் போய் ஓய்வெடுக்குறேன்”என்று கூறி மகனை ஒரு பார்த்து விட்டுச் செல்ல,

அதில ஒன்றும் விளங்காமல் நின்றிருந்தார் முனீஸ்வரி.

அவரது முகத்தைக் கூடப் பார்க்காமல் தன்னறைக்குப் போய் விட்டான் வீரபத்திரன்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகுத் தன் அறையில் இருந்து வெளியேறிய ஈஸ்வரியிடம்,”நீ என்னடி ஆடி, அசைஞ்சு இப்போ வர்ற? உன் அப்பாவும், வீரபத்திரனும் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தாங்க”என்றுரைத்தார் அவளது தாய்.

“அப்படியாம்மா? அப்பா என்னை எங்கேன்னு கேட்கலையா?”என்றாள்.

“ம்ஹூம். உங்கப்பா மூஞ்சியே சரியில்லை. ரொம்ப கடுகடுன்னு இருந்துச்சு. அந்த வீரபத்திரனோட மூஞ்சியைப் பார்க்க சகிக்கலை. அந்தளவுக்கு இருண்டு போயிருந்துச்சு! அந்த ஊருல அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு தெரியலை. ரெண்டு பேரும் இஞ்சி தின்ன குரங்குங்க மாதிரி இருந்தாங்க. உங்கப்பா சாப்பாடு வேண்டாம்னு போயாச்சு”எனப் பதிலளிக்க,

“அச்சோ! என்னம்மா இப்படி சொல்றீங்க? அப்பா பசி தாங்க மாட்டாரு. அண்ணா வாயைத் திறந்து சாப்பாடு போடுங்கன்னுக் கேட்கவே மாட்டாரு. நாமளும் அப்படியே விட்டுட்டா அதுக்கப்புறம் அவர் எவ்வளவு நாளைக்கு வேணும்னாலும் சாப்பிடாமலேயே இருந்துருவார். அதனால் நான் அவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துட்டுப் போறேன்”என்றவளிடம்,

“என்னமோ பண்ணு. போ”என்று கூறி விட்டுச் சென்றார் முனீஸ்வரி.

உடனே சமையலறைக்குச் சென்று ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டுத் தன் தந்தையின் அறைக்குப் போய்,“அப்பா!”என்று தந்தையை அழைத்தாள் ஈஸ்வரி.

அதில் கவனம் கலைந்த தர்மராஜோ,”என்னம்மா?”எனக் கேட்க,

“சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன். சாப்பிடுங்க”என்று அவரிடம் கனிவாக கூறினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்மா. நீ இதை எடுத்துட்டுப் போயிரு”என்று மறுத்து விட,

“நீங்க பசி தாங்க மாட்டீங்க தானே? எனக்காக சாப்பிடுங்க”என்று அவரிடம் கெஞ்சினாள் ஈஸ்வரி.

அதில் மனம் கரைந்து போய் அந்த தட்டை வாங்கி மகளுக்காக உணவருந்தினார் தர்மராஜ்.

அதேபோல் மற்றொரு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு வீரபத்திரனின் அறைவாயிலின் முன் தயக்கத்துடன் நின்றாள்.

தந்தையின் அறைக்குள் உரிமையாக சென்றவளுக்குத் தமையனின் அறைக்குள் நுழைவதற்கு அவ்வளவு பயமாக இருந்தது.

ஏனெனில் அவள் வீரபத்திரனுடைய அனுமதியின்றி ஒரு நாளும் அவனது அறைக்குள் நுழைந்தது இல்லை.

மிகுந்த தயக்கத்துடன்,”அண்ணா”என்று குரலை எழுப்பி விட்டுக் காத்திருந்தாள் ஈஸ்வரி.

உடனேயே உள்ளேயிருந்து பதில் வரவில்லை. ஆனாலும் மீண்டுமொரு முறை முயற்சித்துப் பார்க்கும் வகையில்,”வீராண்ணா”என்க,

“என்ன?”என்ற குரல் வந்ததும்,

“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் அண்ணா”என்றாள் பயத்துடன்.

சில நொடிகள் அமைதிக்குப் பிறகு,“உள்ளே வா”என அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதைக கேட்டதும், இதயம் தடதடக்க அவ்வறைக்குள் சென்றாள்.

அவளைப் பார்த்ததும், தனது முகத்தைச் சீராக வைத்துக் கொண்டான் வீரபத்திரன்.

“சாப்பிடுங்க அண்ணா” என அவனிடம் தட்டை நீட்டினாள் ஈஸ்வரி.

அதை வாங்கிக் கொண்டவனோ,”நன்றி. நான் சாப்பிட்டுக்கிறேன். நீ போ”என்று கூறி அவளை அனுப்பி விட,

வெளியே வந்த ஈஸ்வரியோ,”நல்லவேளை அண்ணா என்னைத் திட்டலை”என்று சொல்லிக் கொண்டே தன் அறைக்குப் போய் விட்டாள்.

அவள் கொடுத்து விட்டுப் போன உணவைச் சாப்பிட்டான் வீரபத்திரன்.

அதே மாதிரி, தன்னுடைய உணவையும் உண்டு முடித்த தர்மராஜிடம் வந்த முனீஸ்வரியோ,”ஏங்க! அப்படி என்ன தான் ஆச்சு அந்த ஊருல? நீங்களும், வீரபத்திரனும் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க?”எனக் கேட்டார்.

“சொல்றேன்”என்று அவ்வூரில் நடந்தவற்றை மனைவியிடம் விவரித்தார்.

அதில் ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்தவரோ,”என்னங்க உங்க மயன் இப்படி பண்ணிட்டு வந்திருக்கான்? நம்ம மானம், மரியாதையே போயிடுச்சே! இனிமேல் அந்த ஊரில் நாம எப்படி போக்குவரத்து வச்சுக்கிறது? அது மட்டுமில்லாமல் அந்த ஊர்ப் பொண்ணை வேற கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு அலையுறான்! இதெல்லாம் நமக்கு நல்லதுக்கு இல்லங்க. நீங்க உடனே அவனைக் கண்டிச்சுப் புத்தி சொல்லுங்க”என்று அவரிடம் கறாராக உரைக்க,

“அதைத் தான் நானும் செஞ்சேன். ஆனால் அவன் எம்பேச்சையே கேட்க மாட்டேங்குறான்! பிடிவாதமாக இருக்கான்”எனச் சலித்துக் கொண்டார் தர்மராஜ்.

“அதெல்லாம் அவனை உங்க வழிக்குக் கொண்டு வந்துடலாம். ஆனால் நீங்க தான் அதைச் செய்ய மாட்டீங்க! அவனோட விருப்பத்துக்கு ஆட விட்டுப் பார்த்துட இருக்கீங்க! இது எங்கே போய் முடியப் போகுதோ! நாளப் பின்னே, அவன் அந்த ஊரில் ஏதாவது பிரச்சினை பண்ணிட்டு வந்தா அது நம்மப் பொண்ணு தலையிலேயும் தான் விடியும். அப்பறம் ஈஸ்வரியை ஒரு பயலும் கட்டிக்க மாட்டான். பார்த்துக்கிடுங்க!”என்றதும்,

“நீ உன் வாயை வச்சிட்டுச் சும்மா இரு! அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது!”என அவரை அதட்ட,

“க்கும்! இப்படியே என் வாயை அடைங்க! அவனை எதுவும் சொல்லிடாதீங்க!”என்று பொருமினார் முனீஸ்வரி.

ஆனால் இங்குத் தன் அறையில் இருந்த வீரபத்திரனின் செல்பேசி ஒலி எழுப்பியது.

அதை எடுத்துப் பார்த்தவனோ, தன்னுடைய நண்பன் தான் அழைக்கிறான் என்பதை அறிந்ததும் அதை ஏற்றுக் காதில் வைக்க,

“டேய் வீரா! என்னடா இப்படி பண்ணிட்டுப் போயிட்ட?”என்று எடுத்ததுமே புலம்பித் தள்ளினான் சித்தன்.

“ப்ச்! ஏன்டா புலம்புற?”

“ஏன் கேட்க மாட்ட! நீ அந்தச் செவ்வழகி விஷயத்தில் பண்ணுன கூத்தைத் தான் கேள்விப்பட்டேனே! ஏன்டா உனக்கு இந்த வேலை?”என்றவனிடம்,

“அந்த வேலையைத் தான் நீங்க பண்ணலையே! அதான் நான் செய்ய வேண்டியதாகப் போயிடுச்சு. அதுவும் இன்னும் நான் அதை முழுசாகப் பண்ணாம விட்டுட்டேன். அந்த சிலநேசன் இன்னும் உயிரோடத் தானே இருக்கான்!”என்று கூறிப் பற்களை நறநறத்தான் வீரபத்திரன்.

“அவனைக் கொன்னுட்டு நீ செயிலுக்குப் போகப் போறியா என்ன? புத்திக் கெட்டவனே! உன்னை மாதிரியே தான் அந்த தங்கபுஷ்பமும் எகிறிட்டு இருந்துச்சு. அதுக்கு அதோட அத்தைப் பையன் கூடப் பரிசம் போடப் போறாங்க! இனிமேல் அந்தப் புள்ளையோட நிலைமையையும் சொல்றதுக்கு இல்லை!”என்றுரைத்தான் சித்தன்.

அதைக் கேட்டு,“என்னடா சொல்ற?”என்று அதிர்ச்சியாக வினவ,

“ஆமாம். வேற என்னச் செய்வாக? அந்தப் பெண்ணோட வாயை அடைக்க இதைத் தான் பண்ணுவாக!”என்றான்.

அதில் சில கணங்கள் தனது தலையைப் பிடித்துக் கொண்டான் வீரபத்திரன்.

தங்கபுஷ்பத்தை உருட்டி, மிரட்டி விட்டு வள்ளியும், காளிமுத்துவும் கையோடு சற்குணத்திற்கு அழைத்து தங்கள் மகளிற்குப் பரிசம் போட வருவதற்கான தேதியைச் சீக்கிரமாக குறித்து விடச் சொல்லி அறிவுறுத்தி விட்டார்கள்.

அதை அறிந்து கொண்ட வேங்கையனோ தன் மகனிடம் சொல்லி இனிமேல் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று வீரபத்திரனிடம் வலியுறுத்துமாறு கூறியிருந்தார்.

நண்பனுக்கு அழைப்பு விடுத்து ஓய்ந்து போய் இருந்த சித்தனோ மீண்டுமொரு முறை வீரபத்திரனுக்கு அழைப்பு விடுத்துப் பார்க்க எண்ணித் தான் இப்போது அழைத்திருக்கிறான்.

“டேய் வீரா! இருக்கியா?”எனக் கத்தியவனிடம்,

தனக்கு நேர்ந்த பேரதிர்ச்சியைத் தாங்க இயலாமல்,”இருக்கேன்டா. ஆனா கூடிய சீக்கிரம் போய் சேர்ந்துடுவேன் போல!”என்று விரக்தியுடன் கூறினான் வீரபத்திரன்.

“அடேய்! என்னடா பேசுற? வாயை உடைச்சுடுவேன் பார்த்துக்கோ!”என்று அவனை அதட்டவும்,

“பின்னே என்னடா? நான் அந்த தங்கபுஷ்பத்தைக் கட்டிக்க ஆசைப்பட்றேன்னு உனக்குத் தெரியும் தான? அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்கன்றதைக் கேட்டுட்டு உயிரோட இருப்பேன்னு நினைக்கிறியா?”என்றவனோ, தங்கபுஷ்பத்தைக் கைப்பிடிக்க என்னவெல்லாம் திட்டம் வகுத்து வைத்திருந்தான் என்பதையும் அவனிடம் விவரித்து முடித்தான்.

அதைக் கேட்டு ஆயாசமாக இருந்தது சித்தனுக்கு.

- தொடரும்