• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமர்ப்பணம் 11

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
“நீ என்னடா இப்படியெல்லாம் திட்டம் போட்டு வச்சிருக்கிற? இதெல்லாம் நடக்கும்னு வேற நம்பிட்டு இருந்தியா?”என்று அவனிடம் கேட்க,

அதற்கு வீரபத்திரனோ,”ஆமாடா! இது கண்டிப்பாக நடக்கும், நடக்கனும்னு நம்புனேன். இப்பவும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு! நான் எங்க ஐயனைக் கூட்டிட்டுப் போய்த் தங்கபுஷ்பத்தைப் பொண்ணுக் கேட்கப் போறேன்!”என்று மற்றொரு குண்டைத் தூக்கி நண்பனின் தலையில் போட,

“டேய்! இதுக்கு மேலே நீ சொல்றதை எல்லாம் கேட்க எனக்குத் தெம்பு இல்லடா! இதை எல்லாத்தையும் மறந்துட்டு வேற சோலியைப் பார்க்கிற வழியைப் பாரு!”என்று அவனுக்கு எச்சரிக்கை அறிவுரை வழங்கினான் சித்தன்.

“போடா! அப்படியெல்லாம் அவளை சுளுவா விட்ற முடியாது! நான் சொன்னதைச் செய்வேன்”என்று அவனிடம் உறுதியாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான் வீரபத்திரன்.

அவனது பேச்சில் கலவரமடைந்த சித்தனோ, தன் தந்தையிட சென்று நண்பனின் சூளுரையைப் பற்றிக் கூற,

“அவன் என்னப் பண்ணாலும் அதுக்கான பலனையும், விளைவையும் அவன் தானே அனுபவிக்கப் போறான்? அப்பறம் என்ன? விடு. அவன் என்னமோ செய்யட்டும்”என்று மகனிடம் தெரிவித்து அவனை அமைதயா இருக்கும் படி சொல்லி விட்டார் வேங்கையன்.

ஆனால் சித்தனிடம் பேசி விட்டுத் தன் ஆதர்ச நண்பனான சிலம்பனிடம் அனைத்தையும் ஒப்புவித்து விட்டு,”இப்போ சொல்லுடா. நான் அந்தப் பொண்ணைப் பொண்ணுக் கேட்டுப் போகலாமா? வேண்டாமா?”என்று அவனிடம் யோசனை கேட்டான் வீரபத்திரன்.

அவனது வார்த்தைகளில் இருந்த உறுதி சிலம்பனைச் சிந்திக்க வைத்தது.

ஆகவே,” ஆனால் அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பத்தி ஒன்னுமே தெரியாதே! நீங்க ரெண்டு பேரும் சந்திச்சப்போ கூட அவ உன் மேல் கோபம் தான் பட்ருக்கா. அப்படி இருக்கும் போது அவ எப்படி உன்னைக் கட்டிக்க சம்மதிப்பா?”எனக் கேட்டான்.

வீரபத்திரன்,“அதெல்லாம் நான் அவளைச் சம்மதிக்க வச்சிடுவேன்டா”என்றான் தீர்க்கமாக,

“ம்ம். நீ இவ்ளோ நம்பிக்கையா இருக்கும் போது இனிமேல் நான் என்ன மறுப்பு சொல்லப் போறேன். இது உன் மனசுக்கு சரின்னுப் பட்டால் தயங்காமல் செய் வீரா”என்று நண்பனுக்குச் சாதகமான பதிலை அளித்தான் சிலம்பன்.

“நன்றிடா” என்று அவனிடம் உளமார கூறி விட்டு, உடனேயே தன்னுடைய தந்தையிடம் சென்று,”நாம நாளைக்கே அந்த ஊருக்குப் போய்த் தங்கபுஷ்பத்தைப் பொண்ணுக் கேட்கனும்ப்பா. அதுக்குத் தயாரா இருங்க”என்று உறுதியாக உரைத்தான் வீரபத்திரன்.

அதைக் கேட்டு அதிர்ச்சியும், கடுங்கோபமும் ஒருங்கே வந்து விட,”நீ ஏன்டா திரும்பத், திரும்ப இப்படிய பேசிட்டு இருக்கிற? உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா? நீ அங்கே செஞ்சி வச்சிட்டு வந்திருக்கிற வேலையால் அந்த ஊரில் யார் மூஞ்சிலேயும் நம்மால் முழிக்க முடியாது! இதுல பொண்ணுக் கேட்டு வேறப் போகனுமா? அதெல்லாம் என்னால் எங்கேயும் வர முடியாது!”என அவனைச் சத்தமிட்டார் தர்மராஜ்.

“நீங்க என் கூட வந்து தான் ஆகனும்ப்பா! இல்லைன்னா நான் என்னப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”என்றவனின் உரத்தக் குரலைக் கேட்டு அங்கே வந்து சேர்ந்தனர் முனீஸ்வரி மற்றும் ஈஸ்வரி.

“வரலைன்னா என்னடா பண்ணுவ?”என்று தானும் அவனிடம் சரிக்குச் சமமாக நின்று வாதிட்டார்.

“என்னங்க நடக்குது இங்க? நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க?”என்று கணவரிடம் விசாரித்தார் முனீஸ்வரி.

அதற்கு அவரோ, அவரிடம் வீரபத்திரனின் எண்ணப் போக்கைப் பற்றிய முழுமையான தகவலைத் தெரிவித்தார் தர்மராஜ்.

அதைக் கேட்டதும் அந்த தாய் மற்றும் மகளுடைய முகங்களில் ஈயாடவில்லை. தாங்கள் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

“என்னங்க இது கூத்து? உங்க பையன் சொல்றது எப்படி நடக்கும்?”என்றவரைச் சிவந்த விழிகளுடன் முறைத்தவனோ,

“அதெல்லாம் நடக்கும். உங்களை யாரும் இந்த விஷயத்தில் பஞ்சாயத்துப் பண்ணக் கூப்பிடலை!”என்று அவரது முகத்தில் அடித்தாற் போல் கூறினான் வீரபத்திரன்.

“டேய்! அவங்க உன்னோட சின்னம்மா! ஞாபகம் இருக்கட்டும்!”என்று அவனை அதட்டினார் தர்மராஜ்.

“இருந்துட்டுப் போகட்டும்ப்பா. முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க”என்று தன் விஷயத்திலேயே தெளிவாக இருந்தான்.

“அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்ல? இந்த விஷயத்தை அப்படியே விட்ரு”என்று அவனிடம் கடுமையாக உரைக்க,

“அப்படியாப்பா? அப்போ என் பேரில் இருக்கிற தாத்தா சொத்தை எல்லாம் நான் ஏதாவது கோயிலுக்கு எழுதி வச்சிடவா?”என்றதும் தன் நெஞ்சில் கை வைத்துப் பதறிய முனீஸ்வரியோ,

“ஐயோ! அப்படி எதுவும் செஞ்சிடாதே ப்பா! உங்க தாத்தா உனக்கு ஆசை, ஆசையாக எழுதிக் கொடுத்த சொத்தை எல்லாம் அனுபவிக்காமல் ஒரேயடியாக கோயிலுக்கு எழுதி வச்சா அது அவரை அவமதிக்கிறா மாதிரி ஆகாதா? அதனால் யோசிச்சுப், பொறுமையாக முடிவெடு”என்றவரிடம்,

“அந்தச் சொத்து மேல் உங்களுக்கு அக்கறை இருந்தா நீங்க அவரைச் சமாதானப்படுத்திப் பொண்ணுப் பார்க்க வரச் சொல்லுங்களேன்!”எனச் சவால் விட்டான் வீரபத்திரன்.

“அவ்வளவு தான? இவர் கிட்டே பேசி இதுக்கு ஒத்துக்க வைக்கிறது என்னோட பொறுப்பு! சரியா?”என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே,

“ஏய்! என்னடி பேசுற? இவன் பூச்சாண்டி காட்டுறதுக்கு எல்லாம் நான் போய் அசிங்கப்பட்டுட்டு வர முடியாது!”என்று மனைவியிடம் கத்தினார் தர்மராஜ்.

“அப்பா!”என்று பிடிவாதமாக அழைத்தவனை சட்டை செய்யாமல் அங்கேயிருந்து அகன்று தன் அறைக்குள் போய் விட்டார்.

வீரபத்திரன்,“இப்போ என்ன சொல்றீங்க? அவர் நாளைக்கு என் கூட வரலைன்னா நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!”என்றுரைத்து விட்டுத் தானும் சென்று விட,

“ம்மா! நீங்க அப்பாவைச் சமாதானப்படுத்தப் போறீங்களா?”எனத் தாயிடம் வினவினாள் ஈஸ்வரி.

“ஆமாடி! வேற என்ன செய்றது? எல்லாம் நம்ம தலையெழுத்து!”என்றவரைப் புரியாமல் பார்த்தவளிடம்,

“அந்த வீரபத்திரனோட சொத்து நமக்கு வேணும். அதுக்காக நான் இதைச் செஞ்சி தான் ஆகனும்”என்றுரைக்க,

“அண்ணனோட சொத்து நமக்கு எதுக்கும்மா? அது அவரோட அம்மாவோட அப்பா அவர் பேரில் எழுதி வச்சது! அதை எப்படி நாம சொந்தம் கொண்டாட முடியும்? அது நமக்கு வேண்டாம்மா”என்று கூறிய மகளைப் பார்வையால் எரித்துப் பொசுக்க,

ஆனால் அவளோ,”நீ அதை எப்படி முடிவு பண்ணலாம்? அந்தச் சொத்தை அடைய நான் எவ்வளவு திட்டம் போட்டு வச்சிருக்கேன் தெரியுமா? நீ பேசாமல் போய் உன் வேலையைப் பாரு. நான் உடனே உங்கப்பா கிட்டே போய்ப் பேசனும்”என்று அவளை அதட்டி அறைக்கு அனுப்பி வைத்து விட்டுக் கணவரிடம் சென்றார் முனீஸ்வரி.

“என்னங்க!”என்று தொடங்கி மனைவியைக் கை நீட்டித் தடுத்த தர்மராஜோ,”நீ அவனுக்காக எங்கிட்ட வக்காலத்து வாங்கிப் பேசாத முனீசு! அங்கே நடந்த எல்லாத்தையும் உன் கிட்ட சொன்னேன் தானே? அதுக்கப்புறமும் நான் அந்த ஊருக்கு எப்படி போய்ப் பொண்ணுக் கேட்பேன்னு நீயே சொல்லு?”எனக் கேட்டார்.

“அது முடியாது தான்ங்க. ஆனால் உங்கப் பையன் அந்த ஊர்ப் பொண்ணு மேலே ஆசைப்பட்டுட்டானே? அதனால் மயன் ஆசையை நிறைவேத்துறது தானே பெத்தவரோட கடமை? அப்படி யோசிச்சு அவங்கூடப் போங்களேன்”என்று அவரிடம் கெஞ்சினார்.

“அப்படி என்ன அவனுக்கு அந்த எழவு காதல் வேண்டிக் கெடக்கு? எனக்குச் சத்தியமாகப் புரியலை முனீசு”என்று கோபமாக உரைக்க,

“அது தான் எனக்கும் புரியலைங்க. ஆனால் அவன் அந்தப் பொண்ணைக் கட்டிக்க விருப்பப்பட்றான்! அதைச் செஞ்சி வைங்க. ஏற்கனவே தாயில்லாத பையனை நான் கொடுமைப்படுத்துறேன், அவனைக் கண்டுக்க மாட்டேங்குறேன்னு ஊருல இருக்கவங்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க. இதில் அவனோட ஆசையை நாம நிறைவேத்தலைன்னா அப்பறம் எல்லாரும் என்னை வார்த்தையால் தூத்த ஆரம்பிச்சுடுவாங்க!”என்று அழுது நாடகம் ஆடினார் முனீஸ்வரி.

“சரிம்மா. நான் நாளைக்கு அவங்கூடப் போயிட்டு வர்றேன்”என்று மனைவியிடம் ஒப்புதல் அளித்து விட்டார் தர்மராஜ்.

அதைக் கேட்டு மகிழ்ந்து போய், அவருடைய சம்மதத்தை வீரபத்திரனிடம் தெரிவித்து விட,

அவனோ,“ம்ஹ்ம்! நீங்க பலே கில்லாடி தான்!”என அவரை வெளிப்படையாகவே மெச்சினான்.

“ஹிஹி! நன்றிப்பா. நீ உன் சொத்தைக் கோவிலுக்கு எல்லாம் எழுதி வச்சிட மாட்ட தான?”என்று அவனிடம் சந்தேகமாக வினவினார் முனீஸ்வரி.

“ம்ஹூம். மாட்டேன். இப்போ சந்தோஷமா? போங்க”என்று அவரை அனுப்பி வைத்து விட்டுச் சிலம்பனை அழைத்து மறுநாள் தங்கபுஷ்பத்தைப் பெண் கேட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறி விட்டு யோசனையில் ஆழ்ந்தான் வீரபத்திரன்.

இங்கோ தங்கபுஷ்பத்தை தனது மகனுக்குப் பரிசம் போட்டு விட்டு வரத் தேவையான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்து கொண்டு இருந்தார் சற்குணம்.

“அந்தக் கருவாச்சிக்கு இவ்வளவு விலையில் நெக்லஸ் எல்லாம் தேவையாம்மா? நீங்க எதுக்கு அவளுக்காக இப்படி செலவு செய்றீங்க?”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டான் ராஜன்.

“அவளுக்காக எல்லாம் நான் இதைச் செய்யலைடா. நான் இந்த நெக்லஸை எங்க அண்ணன், அண்ணிக்காகத் தான் வாங்குனேன்! ஏன்னா இப்படி ஏதாவது வாங்கிட்டுப் போனா தான் அவங்க நம்மளை நம்பி உனக்குத் தங்கபுஷ்பத்தைக் கல்யாணம் செஞ்சி வைப்பாங்க! புரியுதா?”

“ஓஹோ! இப்போ புரியுதும்மா”எனத் தாய்க்கு ஒத்து ஊதினான்.

“உங்கம்மா என்ன செஞ்சாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்டா. அதனால் தான் நான் அவ கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். என்னை மாதிரியே நீயும் அமைதியாக இரு”என்று மகனுக்கு அறிவுறுத்தினார் வளையாபதி.

அதற்கு,“சரிப்பா” என்றுரைத்தான் ராஜன்.

தனக்கும், ராஜனுக்கும் பரிசம் போடுவதற்காக அத்தை சற்குணம் தன் குடும்பத்துடன் நாளையே தங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்பதை பெற்றோரின் மூலம் அறிந்து கொண்டு, அந்த வைபவத்திற்கு அணிந்து கொள்ளப் போகும் சேலையைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு அதையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கபுஷ்பம்.

அதைக் கவனித்து விட்டு,”என்னடி அந்தச் சேலையில் தூக்குப் போட்டுக்கலாமான்னு யோசிக்கிறியா?”என்று அவளிடம் ஆங்காரமாக வினவினார் வள்ளி.

“ஆமாம்மா. அதுக்கு என்ன இப்போ?” என்றாள் விட்டேற்றியாக.

“அப்படி மட்டும் செஞ்சி பாரு! உன்னைச் சாக விடாமல் காப்பாத்தி ராஜனுக்குக் கட்டி வைப்போம். அதுக்கப்புறம் நீ அங்கே போய் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ!”என அவளை மிரட்டி விட்டுச் சென்று விட,

அதில் தன் இயலாமையை எண்ணி வருந்திக் கண்ணீர் வடித்தாள் தங்கபுஷ்பம்.

- தொடரும்