• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமர்ப்பணம் 9

kkp12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
89
11
43
Tamilnadu
“அடியேய் புஷ்பம்! நில்லுடி!”என்று கூக்குரலிட்டவாறே அவள் பின்னால் ஓடினாள் லோகேஸ்வரி.

“அந்தப் புள்ள சொன்னதும் நியாயம் தானுங்க! நாங்க தான் எங்க பொண்ணைக் கொன்னுட்டோம்! அவகிட்ட இந்த வெளங்காதவன் தப்பா நடந்துக்கிட்ட அப்போவே இவனை வெட்டிட்டு செயிலுக்குப் போயிருக்கனும்! அதை விட்டுட்டு இவனையே கட்டிக்க சொல்லி அவளைக் கொடுமைப்படுத்தி இருக்கக் கூடாது!”என்று தலையிலடித்துக் கொண்டு கதறினார் செவ்வழகியின் தந்தை சிவஞானம்.

“என்ன மாமா பேச்செல்லாம் ஒரே தினுசா இருக்கு! உம் பொண்ணு நாண்டுக்கிட்டு செத்ததுக்கு நான் காரணம்னு சொல்லிட்டு இருக்கிறவ! நான் என்னப் பண்ணேன்? அவளைத் தொட்டுட்டு அப்படியே விட்டுடலையே? தாலி கட்டுறேன்னு தானே சொன்னேன்? அந்தக் கூறில்லாம அவ நாண்டுக்கிட்டா நான் என்னத்தப் பண்ணுவேன்?”என்ற சிவநேசனின் நெஞ்சில் தன் காலைப் பதித்துக் கீழே தள்ளினான் வீரபத்திரன்.

“ஆஆஆ…!”என்று அலறிச் சாய்ந்தவனை எழ விடாமல் மீண்டும் மீண்டும் மிதிக்க,

“டேய் வீரா! என்ன காரியம்டா பண்ணிட்டு இருக்கிற? அவனை விடுடா!”என்று அவனைப் பிடித்து இழுக்கப் பார்த்தார் தர்மராஜ்.

“என்னை விடுங்கப்பா! இவனை இன்னைக்குக் கொல்லாம விட மாட்டேன்!”என அவரது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயல,

“ஏய் யாருடா அது வெளியூர்க்காரன் எங்கூருக்காரனைப் போட்டு அடிக்கிறது? கேட்க ஆளில்லைன்னு நினைப்பா?”என்று அந்த ஊர் மக்கள் சிலர் ஒன்று கூடி வீரபத்திரனிடம் இருந்து சிவநேசனைக் காப்பாற்றித் தங்களிடம் இருத்திக் கொண்டனர்.

அநஅத விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கே வந்த பஞ்சாயத்து தலைவரோ,“ஏப்பா தர்மராசு! அசலூர்க்காரன் உன்னை இந்த ஊருல நிலம் வாங்க விட்டதுக்குக் காரணமே நீ உங்க ஊருல பெரிய தலைக்கட்டு, எங்களை மாதிரியே பஞ்சாயத்து தலைவரா இருக்கன்னு தான்! அதைச் சாதகமாக எடுத்துக்கிட்டு உம் பையன் இப்படி பண்றது ரொம்ப தப்புப்பா! நீங்க உடனே ஊரை விட்டுப் போங்க! இல்லைன்னா, இனிமேல் நீங்க இந்த ஊருல போக்குவரத்தும் வச்சுக்கக் கூடாதுன்னுத் தடை போட்ருவோம் பார்த்துக்கிடு!”என்று கறாராக மொழிந்தார்.

அதைக் கேட்டதும்,”எம் பையனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேனுங்க ஐயா!”என்று கை கூப்பிச் சொல்லி விட்டு,

“அப்பா! என்னை விடுங்க! அவனைக் கொல்லாம விட மாட்டேன்!”என்று திமிறிய மகனை இழுத்துக் கொண்டுப் பேருந்து நிலையத்திற்குச் சென்றார் தர்மராஜ்.

“சரி, ஆக வேண்டிய வேலையைப் பாருங்க”என்ற பஞ்சாயத்து தலைவரோ,

சிவநேசனிடம்,”டேய்! நீ இனிமேல் செவ்வழகியைப் பெத்தவங்க மூஞ்சில முழிக்கக் கூடாது! சரியா?”என்று கட்டளையிட்டு விட்டு அனைவரையும் கலைந்து போகச் சொன்னார்.

இங்கே அந்தப் பெண்ணைப் பெற்றவர்களோ தங்களது மகளைப் பார்த்துப், பார்த்து அழுது கரைந்தனர்.

அதன்பின், செவ்வழகியின் ஈமக்கிரியைக்கான வேலைகளில் இறங்கி விட,

இங்கோ ஆத்தங்கரையில் அமர்ந்திருந்த தோழியிடம்,”என்னடி அப்படி ஒரு அபசகுனமான வார்த்தையைச் சொல்லிட்டு வந்திருக்கிறவ? எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சு தெரியுமா?”என்று கலங்கிப் போய்க் கூறினாள் லோகேஸ்வரி.

அதற்குத் தங்கபுஷ்பமோ,”வேற என்னடி சொல்ல சொல்ற என்னிய? எங்கம்மா பேசினதைக் கேட்ட தானே நீ? இனி வீட்டுக்குப் போனதும் எங்கப்பா கிட்ட வத்தி வச்சி எனக்கு அடி வாங்கித் தரும்!”என்று அலுத்துக் கொண்டாள்.

“அது தெரிஞ்சது தான? பொட்டச்சிங்க நம்ம சொல்லு எடுபடுமா இங்க? ஏதோ இவனுக தான் இந்த ஊரையே உருவாக்குன மாதிரி ஆட்றானுங்க!”என்று கரித்துக் கொட்ட,

“நாம எதுவும் சொல்லாமல், எதுத்துப் பேசாமல் இருக்கப் போய் தான் ஆட்றானுங்கடி!”என்றவளோ,

“சரி. நான் வீட்டுக்குப் போறேன். இல்லைன்னா எங்கய்யன் என்னிய ஆள் வச்சித் தேட ஆரம்பிச்சிடும்”என்று அவளிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்குப் போனாள் தங்கபுஷ்பம்.

அங்கே வாசலிலேயே உட்கார்ந்து இருந்த வள்ளியோ மகளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து,”ஏன்டி ஊருக்குள்ளே நடக்கிற எல்லா பஞ்சாயத்துக்கும் வந்து கரைச்சல் கொடுக்கிற? உன்னால் வாயை வச்சிட்டு சும்மாவே இருக்க முடியாதா? அப்படி என்னப் பொட்டச்சிக்குக் கொழுப்பு வேண்டிக் கிடக்கு?”என்று அவளைக் கன்னம், கன்னமாக அறைந்து தள்ளினார்.

அதை வாங்கிக் கொண்டுக் கண்களில் கண்ணீர் உகுத்தாளே தவிர, தன்னுடைய வாயைத் திறந்து கத்திக் கதறி வலியை வெளிப்படுத்தவில்லை தங்கபுஷ்பம்.

கல்லை முழுங்கியவள் போல அமைதியாக இருந்தாள். அவளை அடித்து, அடித்து வள்ளியின் கைகளில் தான் வலி எடுத்தது.

அங்கே வந்த காளிமுத்துவோ,“ஏய் என்னடி பண்ற? அவளை விடு!”என்று அவரிடமிருந்து மகளைக் காப்பாற்றித் தன் பக்கம் நிறுத்திக் கொண்டார்.

“இவ அங்கே பேசின பேச்சைக் கேட்டீங்க தான? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் அப்படியெல்லாம் பேசிட்டு வந்திருப்பா? இவளைக் கொஞ்சமாவது தட்டி வைக்கனும்!”என்று ஆங்காரத்துடன் உரைத்தார் வள்ளி.

“ப்ச்! கல்யாணம் ஆகப் போறப் பொண்ணை இப்படி போட்டு அடிச்சா என்ன அர்த்தம்மா?”என்றதும், விலுக்கென்று நிமிர்ந்து தந்தையைப் பார்த்தாள் தங்கபுஷ்பம்.

அவள் இதைச் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

“அப்பா என்ன சொல்றீங்க? எனக்குக் கல்யாணமா? யார் கூட?”என்றவளிடம்,

“வேற யாராக இருக்கும்னு நினைக்கிற? எல்லாம் என் தங்கச்சி மவன் ராஜன் கூடத் தான் உனக்குக் கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறோம்”என்று கூறி அவளது தலையில் இடியை இறக்கினார் காளிமுத்து.

அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தவளோ அதைத் தாங்க இயலாமல் அந்தக் கணமே மூர்ச்சையாகி விட்டிருந்தாள் தங்கபுஷ்பம்.

“என்னங்க மயங்கிட்டா! இவளைப் பிடிங்க”என்று பதைபதைத்த வள்ளியோ, கணவனின் உதவியுடன்
மகளைக் கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து விட்டு, வெளியே வந்ததும்,”ஏங்க அவ கிட்ட கல்யாணத்தைப் பத்தி சொன்னீங்க? நீங்க தானே ஆற, அமர சொல்லிப் புரிய வைக்கனும்னு எனக்குப் பாடம் எடுத்தீங்க? நீங்க இப்படி பண்ணிட்டாங்களே?”என்று ஆதங்கத்துடன் வினவினார்.

“என்ன வேற என்ன செய்யச் சொல்ற? ஒரு வேகத்துல உண்மையைச் சொல்லிட்டேன்! இப்படி போற எடத்துல எல்லாம் ஏதாவது ஒரு கிறுக்குத்தனம் பண்ணி வைக்கிறா! இனிமேல் இவளை நம்ம சமாளிக்க முடியாது! இவளுக்கு உடனே கல்யாணம் செஞ்சி வச்சிரனும். அப்போ தான் நமக்கு நிம்மதியாக இருக்கும்”என அவரிடம் மொழிந்தார் காளிமுத்து.

“அப்போ உங்க தங்கச்சி கிட்டே உடனே பேசி குடும்பத்தோட எப்போ பரிசம் போட வர்றாங்கன்னு கேளுங்க”என்றவரிடம்,

“முதல்ல புஷ்பம் கண்ணு முழிக்கட்டும். அப்பறம் அவ கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு பொறவு சற்குணத்துக்கிட்டே பேசுவோம்”என்ற கணவரின் பேச்சை ஆமோதித்தார் வள்ளி.

பேருந்தின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த வீரபத்திரனுக்கு உள்ளக் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை.

சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனிடம்,”உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கிற வீரா? நாம நம்ம ஊருல எவ்வளவு பெரிய ஆளுங்க? இங்கே இவனுங்க இப்படி துரத்தி விட்ற அளவுக்கா நடந்துக்குவ? இவனுங்க என்னத்தையோ பண்ணிட்டுப் போறானுங்க! அதெல்லாம் நமக்கு எதுக்கு? உனக்கு எத்தனை தூரம் படிச்சுப், படிச்சு சொன்னேன்? காது கொடுத்துக் கேட்டியா? இப்போ பாரு. மானம், மரியாதையைக் காத்துல பறக்க விட்டுட்டு வந்திருக்கோம்!”என்று அவனைத் திட்டினார் தர்மராஜ்.

அவரது வார்த்தைகள் அவனது செவிகளுக்குள் விழவே இல்லை.

அவனுக்கு அந்தச் செவ்வழகிக்கு நேர்ந்த அநியாயம் மற்றும் தங்கபுஷ்பத்தின் வெறுப்பு மிகுந்த சொற்கள் தான் தலையில் ஓடிக் கொண்டிருந்தது.

“டேய்! உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்!” என அவனை உசுப்பினார் தர்மராஜ்.

“நீங்க இப்போ எங்கிட்ட என்னப் பேசினாலும் எனக்குப் புரியாதுப்பா! அதனால் என்னைக் கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க விடுங்க!”என்று இருக்கையில் சாய்ந்து கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான் வீரபத்திரன்.

“ச்சே!” என்று அலுத்துப் போய் அமர்ந்து விட்டார் அவனது தந்தை.

வேங்கையன்,”உன் நண்பனும், அவனோட அப்பாவும் ஊருக்குப் பஸ்ஸூ ஏறிட்டாங்களாம். உங்கிட்ட சொன்னாகளா?”என்று மகனிடம் விசாரித்தார்.

அதற்குச் சித்தனோ,”என்னப்பா சொல்றீங்க? அவன் எங்கிட்ட எதுவுமே சொல்லலையே! அந்தச் செவ்வழகி செத்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நானே இப்போ தான் வயலில் இருந்து வர்றேன்”என்றுரைத்தான் சித்தன்.

“செவ்வழகியோட பொணத்து முன்னாடி தான் அவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்துச்சு”என்று அவனிடமும், மனைவியிடமும் விஷயத்தைப் பகிர்ந்தார் வேங்கையன்.

“ஐயோ! அவ எதுக்கு இப்படி ஒரு முடிவைத் தேடிக்கிட்டா?”என்று செவ்வழகிக்காக வருத்தப்பட்டார் கற்பகம்.

“இவ்வளவு நடந்திருக்காப்பா? இப்போவே வீராவுக்குப் போனைப் போட்டுக் கேட்குறேன்!”என்றவாறே தனது பட்டன் செல்லில் நண்பனுக்கு அழைப்பு விடுத்தான் சித்தன்.

ஆனால் அதை எடுக்கும் நிலையில் இல்லாததால் அது அடித்து ஓயட்டும் என்று தங்களது ஊரை அடையும் வரைக் கண்களைத் திறக்கவே இல்லை வீரபத்திரன்.

சில மணி நேரங்களுக்குப் பிறகுத் தனது இமைகளைப் பிரித்து எடுத்து, அவள் மயக்கம் போட்டு விழுவதற்கு முன்பு நடந்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டவளோ,

தனது தாவணி முனையை இழுத்துச் சேலை மடிப்பில் சொருகிக் கொண்டு தன் பெற்றோரின் முன் ஆவேசமாக வந்து நின்றாள் தங்கபுஷ்பம்.

“என்னடி உன்னைப் பார்த்தால் சண்டைக்குத் தயாராக வந்து நிக்குறவ மாதிரி இருக்கு?”என்று கிண்டலாக கேட்டார் வள்ளி.

“ஆமாம்மா. சண்டை போடத் தான் வந்திருக்கேன்”என அவரிடம் தீர்க்கமாகப் பதிலளித்தாள் மகள்.

“ஆஹான்! என்னத்துக்குச் சண்டை போடப் போற?”என்றவரை முறைத்து விட்டு,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க சொன்னது உண்மையாப்பா?”என்று தந்தையிடம் வினவினாள் தங்கபுஷ்பம்.

“ஆமாம்மா. நான் சொன்ன எல்லாமே உண்மை தான். அடுத்து வர்ற முகூர்த்தத்தில் உனக்கும், ராஜனுக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கப் போறோம்!”என்று நிதானமாக உரைத்தார் காளிமுத்து.

“அவ எப்படிப்பட்டவன்னு உங்களுக்குத் தெரியும் தானேப்பா? அப்பறமும் அவனுக்கு என்னைக் கட்டிக் குடுக்கனும்னு எப்படி முடிவு எடுத்தீங்க?”என்று கேட்டு அழுதவளைப் பாவம் பார்க்காமல்,

“அவனுக்கு என்னக் குறை? அவன் எந்தங்கசச்சிப் பையன் தான? அவனை நான் சின்ன வயசுல இருந்து பார்த்துட்டு இருக்கேன்! அவனைப் பத்தி எனக்குத் தெரியாதா?”என்று கூறவும்,

“அவனைப் பத்தி உங்களுக்கு முழுசா தெரியாததால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கீங்க”என்றாள் தங்கபுஷ்பம்.

“ஓஹ்! அப்போ எங்களை விட உனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியுமோ?” என்ற தாயிடம்,

“நல்லா தெரியும்மா. அவன் ஒரு பொம்பளைப் பொறுக்கி!”என்றவளின் கன்னத்தில் காளிமுத்துவின் கரம் இடியாக இறங்கியது.

- தொடரும்