• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதனை பெண் - செ.இன்பமுத்துராஜ்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
589
375
63
Tamil Nadu, India
உலகின் ஒட்டுமொத்த முன்னணி ஊடகங்களின் ஒலி வாங்கிகள் அவள் முன் குவிந்திருந்தன. சுருண்ட கூந்தல் கன்னத்தில் உரச, பளிரென மின்னும் அவள் முகத்தில் அப்படியொரு சோகம். ஒட்டிய கன்னமும், தளர்ந்த தேகமுமாக ஊடகங்களின் முன் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. ஒரு தேக்கரண்டியில் தேனை காட்டியவாறு வாய்விட்டு அழுதாள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியாவோடு ஒன்றிணைய மறுத்த மாநிலங்கள் சில. அதிலொன்று மணிப்பூர். இழுத்துப் பிடித்து இந்தியோவோடு ஒட்டி வைத்தார்கள். விளைவாக தன்னிச்சையான எதிர் குழுக்கள் உருவானது. அக்குழுக்கள் ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்தவே, 1958-இல் அங்குள்ள இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரத்தை உருவாக்கினார்கள். அதாவது எந்த நீதிமன்ற விசாரணையும் இன்றி எவரையும் கைது செய்யலாம் எவரையும் சுட்டு வீழ்த்தலாம்.
சற்றே உயரே சென்று பார்த்தால் வெறும் பச்சை மரங்கள் மட்டுமே தெரியும் அந்த சோலை தேசத்தில் வெந்தனல் போல் பற்றி எரிந்தது அக்கிரமங்கள். அழகிய பெண்கள் அப்பட்டமாக வண்புணர்வுக்கு ஆளானார்கள். தேனீர் கடை, பேருந்து நிறுத்தங்களில் செவனே என நின்றிருந்தவர்கள் எந்த காரணமுமின்றி சுடப்பட்டனர்.
ஒரு நாள் ஒரு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பத்து பேர் திடீரென சுட்டுக்கொல்லப்பட்டனர். அவள் அங்குதான் நின்றிருந்தாள். தன் கண்முன்னே மடிந்த அந்த ஆன்மாக்கள்தான் அவளை உசுப்பியதோ என்னவோ, அடுத்த நாளே போராட்டத்தை தொடர்ந்தாள். இந்தியாவின் வெற்றிகண்ட போராட்டம் என்பது தன்னை வருத்திக்கொள்வது. அவளும் அதைதான் கையிலெடுத்தாள். ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம். மூன்று நாட்களில் காவல்துறை கைது செய்தது. உணவளிக்க எவ்வளவோ பிரயத்தணங்களை புகுத்தியது, வதைத்தது. அவள் வாய் திறக்கவே இல்லை. உடல் நலிந்து மருத்துவமனையிலேயே ஓர் அறையில் அடைத்தது. அவள் நாசித்துளை வழியாக ஒரு குழாய் பொருத்தி அதன் மூலம் திரவ உணவை செலுத்தினார்கள். உயிர் வாழத்தேவையான கலோரிகளை கணக்கிட்டு செலுத்தினார்கள்.
அவள் கண்ணாடியில் முகம் பார்த்ததில்லை. நகவெட்டியினால் அவள் நகங்கள் வெட்டப்பட்டதில்லை. வளர்ந்த நகங்களை ஒரு கையிலிருந்து மறு கையே அகற்றுகிறது. கால்களில் உள்ள நகங்களை பற்றி கவலையில்லை. அதை காவல்துறையினரே சிதைத்திருந்தனர். தனித்த அறை. ஓரிரு செவிலியர்கள். ஒரு மருத்துவர், அவள் அறையை, வராண்டாவை, மருத்துவமனையை சுற்றிலும் காவலாளிகள். பச்சைத் துணி போர்த்திய அந்த மெத்தை, நாற்புற சுவர்கள். புத்தகங்கள் இவ்வளவுதான் அவள் அன்றாடம் பார்க்கும் காட்சிகள். உடல் நலிந்து அவளுக்கு மாதவிடாய் சுழற்சியே நின்றுபோனது.
எவரேனும் அவளை சந்திக்க வேண்டுமாயின் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து உரிமை கோர வேண்டும். அதெல்லாம் எட்டாக்கணி. 26 வயதான இளம்பெண்ணாக உள்ளே நுழைந்தாள். வயது ஏறிக்கொண்டே போனது. உடல் நலிந்துகொண்ட போனது. மக்கள் அவளை கொண்டாடத் துவங்கினர். மணிப்பூரின் தேவதை என்றார்கள், சிலர் தெய்வம் என்றும் சொன்னார்கள். உலகமே வியந்தது. ஆங்கிலோ இண்டியன் ஒருவர் அவள் போராட்ட குணம் அறிந்து கடிதம் எழுதினார். இவளும் பதில் எழுதினாள். இப்படியாக நீடித்து அது காதல் பூத்து நின்றது. 2000-ம் ஆண்டு போராட்டத்தை துவங்கிய அவள் 2016-ம் ஆண்டு போராட்டத்தை முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார். காந்தியின் உண்ணா நோம்பிற்கு வெள்ளையன் அளித்த மதிப்பை இந்த பெண்மணிக்கு ஏனோ இந்தியா அளிக்கவில்லை. உலகமே திரும்பியது.

ஊடகக் குவியலின் முன்னே நின்று உருகி அழுதாள். முன்னே நின்றிருந்த சில ஊடகவியலாளர்களும், அதை பார்த்த மக்களும் அழத்தான் செய்தார்கள். ஒரு துளி தேனை தன் நாவில் ஊற்றினாள். 16 ஆண்டுகள் நீரைக் கூட சந்திக்காத நாவினால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு கசப்பாக தெரிந்தது தீஞ்சுவை தேன். கதறினாள்.

இனி என் போராட்ட வடிவங்களை மாற்றிக்கொள்கிறேன் என கூறி தேர்தலை சந்தித்தாள். எதிர்கட்சியினரிடமும் சென்று வாக்கு கேட்டாள். தேர்தல் மூலம் மக்கள் வெறும் 90 பேர் அவளுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மொத்த இந்தியாவுமே உச்சுகொட்டியது. தேர்தல் என்பது வேறு அது ஒரு ஏமாற்றுக்கலை என முன்னணி எழுத்தாளர்கள் எழுதினார்கள். சொந்த மக்களே வெறுங்கையை வீசியதில் நொந்து போனார். தன்னை தெய்வமென கொண்டாடிய மக்களின் மனங்கள் தேர்தலுக்கு தான் உகந்தவள் இல்லை என்பதை சொல்லியிருக்கிறார்கள் என புரிந்துகொண்டாள். மணிப்பூரின் மாசற்ற மங்கை, தமிழ்மண் கொடைக்கானலில் வைத்து தன் காதலரை திருமணம் செய்துகொண்டாள். ஒரு குழந்தையோடு வாழ்கிறார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் "இந்த வாழ்கை மணிப்பூர் மக்களுக்கானது. என் போராட்டம் ஏதோ ஒரு வடிவில் அம்மக்களை காக்கும். இது எனக்கான காலமல்ல. ஒருநாள் வரும் அப்போது மீண்டும் நான் மணிப்பூரின் விடுதலையை எட்டுவேன்" என்று முடித்தார்.

உலகில் இதுவரை 16 ஆண்டு பச்சைத் தண்ணீர் நாவில் படாத போராட்டத்தை எவரும் நடத்தியதில்லை. மணிப்பூரின் இதயம், இரும்பு, முகம், முகவரி, பெருமை என எல்லாமே அவள்தான். தேனீர் பருகும் நேரம் தவறினால் கோபம் கொப்பளிக்கிற சக மனிதர்களின் மத்தியில் பதினாறு ஆண்டுகள் வறண்ட நாவைக்கொண்டு வாழ்வதெல்லாம் எப்போதேனும் வரும் பிரளயம் போல. பெண்தான். ஆனாலும் அவள் பெரும் பிரளயம். 'ஐரோம் ஷர்மிளா' என்பது அவள் பெயர்.
 
  • Like
Reactions: Vimala Ashokan