• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺11

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
மாறனின் அன்பில் மூழ்கி திளைத்த எழிலுக்கு வாழ்வே வரமாகி போனது..வாழ்வின் எந்த துயரையும் தாங்கும் வல்லமையை அவளுக்குள் நிரப்பியிருந்தது மாறனின் பரிசுத்தமான காதல்..சொக்கநாதன் கண்களில் படாமல் சாதுர்யமாக நாட்களை கடத்தினாள் எழில்..அதனால் சொக்க நாதனும் இரத்த அழுத்தம் ஏறாமல் நடமாடினார்..எழிலுக்குதான் சொக்கநாதன் வீட்டுக்குள் இருக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் திகில் நிமிடங்களாய் கழிந்தன....அன்னத்தின் ஒவ்வொரு மணித்துளியும் பேரப்பிள்ளைகளுடன் சொர்க்கமாக கழிந்தது..மாறன் அவனின் நண்பர்களையும் ஊரையும் ஓயாது சுற்றி வந்து, தாய் மண்ணை பிரிந்த பத்து வருட ஏக்கத்தை தணித்து கொண்டான்..

அன்று காலை வீட்டுக்குள் வந்த மாறன், நேராக தன்னறைக்கு சென்றான்..எழில் அவ்விடம் இல்லை...பிறகு கீழே இறங்கி வந்தவன், எழில்,....எழில்......என்று சத்தமாக அழைக்க புழக்கடையில் இருந்து ஓடி வந்தாள் எழில்..அவள் முகம் கண்டதும் சிரிப்பு தானாய் ஒட்டி கொண்டது மாறனின் முகத்தில்.

எழில்.....உடனே கிளம்பு..நாம வெளியே போறோம்............உற்சாகமாக சொன்னான் மாறன்..

எதுக்கு? எதுக்கு இப்போ போகணும்?..தீபாவளி முடிஞ்சி தானே போறேன்னு சொன்ன?.........பதறினாள் அன்னம்..

அம்மா, நான் பெங்களூர் போகலமா, எழிலையும் பிள்ளைங்களையும் கூட்டிட்டு வெளியே போயிட்டு வந்துடுறேன்..........சொன்னான் மாறன்.

வெளியே, எங்கே............கேட்டாள் எழில்..

சற்றே யோசித்து மாறன் சொன்னான்,

ம்ம்.. ம்ம்....கோயிலுக்கு..ஊருக்கு வந்ததில இருந்து நீ வீட்டுக்குள்ளேயேதானே இருக்க..அதான் கோயிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு நினைச்சேன்.......என்று...
தயங்கி நின்றாள் எழில்..

ஏய், என்ன அசையாமல் நிக்கிற?...போ போய் புறப்படு........மாறன் சொல்ல பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மாடி ஏறினாள் எழில்..

நம்ம ஊரு சிவன் கோயிலுக்கு தானே போறீக..நம்ம எழில் கையால துர்கை அம்மன் சன்னதியில் நெய் தீபம் போட சொல்லுயா..குடும்பத்துல இருக்கிற கிரகம் எல்லாம் சரியாயிடும்...............அன்னம் சொல்ல,

அவ்வளவுதானே..போட்டுட்டா போச்சி..............சொன்னான் மாறன்..

சில மணித்துளிகளில் எழில் குழந்தைகளுடன் புறப்பட்டு வந்தாள்..அதற்குள் ரஹீமும் காருடன் வந்திருந்தான்..கார் தன் பயணத்தை மேற்கொண்டது..

சற்று தூர பயணத்துக்கு பிறகு, எழில் கேட்டாள்,

நாம எங்கே போறோம்?..இது கோயிலுக்கு போற வழி இல்லையே............என்று.

பேசாம இரு எழில்..உனக்கு பிடிச்ச இடத்துக்கு போறோம்..........

எனக்கு பிடிச்ச இடமா..........என்று எழில் ஆரம்பிக்கும் முன், மாறன் சொன்னான்..

நான் சொன்னா கேட்பியா?.......

கேட்பேன்.............

அப்போ, கார் நிக்கிற வரைக்கும் பேசக் கூடாது............என்றான் மாறன்..

அமைதியாகவே அமர்ந்திருந்தாள் எழில்..கார் ஒரு ஆட்டுப்பட்டிக்கு அருகில் வந்து தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது..பட்டிக்குள் துள்ளும் ஆடுகளை கண்ட எழில் அமுதமாய் சிரித்தாள்..அமுதனும் ஆனந்தியும் ஆடுகளை வியப்பாய் பார்த்து துள்ளி குதித்தனர்..

ஆட்டு பட்டியிலிருந்து சற்று தொலைவில் இருந்தன அந்த இரண்டு வீடுகள்..அதில் ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்தாள் தாயம்மா (எழிலின் தாய்)..சற்றே தூரத்தில் நின்ற காருக்கு அருகில் நின்ற எழிலை உடனே அடையாளம் கண்டு கொண்டாள் தாயம்மா...

எழிலரசி............என்று அலறியபடி ஓடி வந்தாள் தாயம்மா,..தாயம்மாவை சற்றும் எதிர்பார்க்காத எழில் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..

அம்மா..........என்று உதடுகள் முணுமுணுக்க கண்கள் குளமாக தேங்கியது..அந்த தள்ளாடும் வயதில் மூச்சிறைக்க ஓடி வந்த தாயம்மா எழிலை கட்டிக் கொண்டாள்..எழிலும் தாயை அணைத்து தாய்மை வாசனை நுகர்ந்தாள்..நடப்பதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் குழந்தைகள்..நிம்மதி புன்னகை உதிர்த்து நின்றான் மாறன்..சந்தோஷம் கொண்டான் ரஹீம்..

அந்நேரம் பழைய TVS எக்ஸல்லில் புல்லுக்கட்டுடன் வந்தார் முருகேசன் (எழிலின் தந்தை)...எக்சலின் இயக்கத்தை சாவியை திருகி நிறுத்தியவர் அங்கு கண்ட காட்சியை கண்டு தடுமாறி போனார்...தன் பாசத்துக்கு துரோகம் செய்த மகள் மீது வெறுப்பும், தன் குடும்ப மானத்தை சிதைத்த மருமகன் மீது கோபமும் ஒரு சேர அவரை ஆட்கொண்டது...எதுவும் பேசாமல் வீட்டுக்குள் சென்று விட்டார்..

அடுத்த வீட்டில் இருந்து வெளியே வந்தாள் பெண்ணொருத்தி...அவளை பார்த்ததும் எழில் யூகித்து கொண்டாள்..இவள் தன் தமையன் கோபாலின் மனைவியாக இருக்க வேண்டும் என்று..

வா, எழில் வீட்டுக்குள்ள வா...........என்று எழிலை அழைத்த தாயம்மா, ஆடுகளை வியப்பாக பார்த்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து பின் கேள்வியாக எழில் முகம் பார்க்க ஆம் என்று தலையசைத்தாள் எழில்..

உடனே இரு பிள்ளைகளையும் உச்சி முகர்ந்து ஆசிர்வதித்தாள் தாயம்மா..

யார் அத்தை இது?.............அந்த இளம்பெண் கேட்டாள்..ஆம் அவள் எழிலின் அண்ணன் கோபாலின் மனைவி..

இந்தா, தேவயானை...இது நம்ம எழில்..இவங்க ரெண்டு பேரும் என் பேரப்புள்ளைங்க..............சந்தோஷம் நிறைந்து வழிந்தது தாயம்மாவின் குரலில்..

அப்படியா, வா எழில்,. வாங்க அண்ணா.........மரியாதை நிமித்தம் அழைத்தாள் தேவயானை..

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பைக்கில் தன் இரு குழந்தைகளுடன் வந்தான் கோபால்..கோபாலுக்கு இரு ஆண்பிள்ளைகள்..

எழில்,..எப்போ வந்த?..நல்லா இருக்கியா?...............என்று கேட்ட கோபால்,

வாங்க அத்தான்,..வேலை எல்லாம் எப்படி போகுது?...............மிக சாதாரணமாக நலம் விசாரித்தான் கோபால்..வியந்து பார்த்தாள் எழில்..அதே வியப்பு தாயம்மாவின் முகத்திலும்...

என்ன எழில் அப்படி பார்க்குற?..அத்தான் என்கிட்ட பேசுவாக..ரஹீம் அண்ணன் சொல்லி பேசியிருக்கேன்..........கோபால் சொல்ல மாறனை முறைத்தாள் எழில்..

அத்தான்கிட்ட கோபப்படாதே எழில்..நான்தான் நாங்க பேசிக்குற விஷயத்தை உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்..அத்தான் உன்கிட்ட சொன்னா நீ அம்மாகிட்ட சொல்வ..அம்மா அப்பாகிட்ட உளறினா அவருகிட்ட யார் வாங்கி கட்டிக்கிறது?..அதான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்....ஆமா அப்பா எங்கே................நிலைமை சொல்லி தகப்பனை தேடி உரை முடித்தான் கோபால்..

உள்ளே வா எழில், வாங்க தம்பி............மகளுடன் மருமகனையும் வீட்டிற்குள் அழைத்தாள் தாயம்மா..

அம்மா,......அப்பா......என்று தாயின் கைபிடித்து தயங்கி நின்றாள் எழில்..

எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம் எழில்............சொல்லி கோபால் முன்னே நடக்க மற்றவர் பின்னால் நடந்தனர்..

வீட்டுக்குள் ஆட்கள் வரும் அரவம் கேட்டதும் இதுவரை கண்களில் வழிந்து கொண்டிருந்த நீரை வேக வேகமாக துடைத்து கொண்டு திசை மாறாமல் முதுகு காட்டி நின்றார் முருகேசன்..

ஐயா, என்னய்யா இது பத்து வருஷம் கழிச்சு வந்திருக்கிற பிள்ளை மேல என்ன கோபம்..பாருங்கய்யா உங்க பேர புள்ளைங்க முகத்தை பாருங்க...................பாசத்தின் நிறம் காட்டி முருகேசனை சமாதானம் செய்ய முயன்றான் ரஹீம்..

தகப்பன் நியாயத்தையும் கோபத்தையும் புரிந்து வைத்திருந்த கோபால் அமைதியாகவே நின்றான்..தந்தைக்கு தெரியாமல் அடிக்கடி தங்கை நலன் தெரிந்து கொண்டவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..இந்த வயதான காலத்தில் தகப்பன் தன்னிடம் கோபம் கொண்டு சங்கடப்படுவதை அவன் விரும்பவில்லை...

செருப்பால அடிச்சி அவமானப்படுத்திட்டு போயிட்டு பத்து வருஷம் கழிச்சி வருவாக...அவமானத்தை துடைச்சு போட்டுட்டு நான் மானங்கெட்டு போய் பேசணுமா?..பெத்தவனை ஏமாத்தி ஊர் முன்னாடி கேவலப்படுத்திட்டு இந்தா, இவந்தேன் வேணும்ன்னு போனவ இப்போ எந்த முகத்தை வச்சிகிட்டு இங்கே வந்திருக்கா.........கோபமாக கொதித்தார் முருகேசன்..

இம்புட்டு வருஷம் கழிச்சி வந்துருக்கிற புள்ளைய ஏன் வந்தேன்னு கேட்குறீகளே...அவ நம்ம புள்ளதானே..அவ ஒரு தப்பு பண்ணா மன்னிக்க கூடாதா?...........மகளுக்காக கணவனிடம் கெஞ்சினாள் தாயம்மா..

இந்தா நீ பெத்தவ, பெத்த பாசம் உனக்கு மகளை வெறுக்க முடியல..நீ பேசிக்க..விருந்து வச்சி கொண்டாடு..என்கிட்ட எதுவும் கேட்காதே.. சொல்லிபுட்டேன்................பெத்த பாசத்துக்கும் வீம்புக்கும் இடையில் சிக்கி பரிதவித்த முருகேசன் வீட்டை விட்டு வெளியேற முனைந்தார்..அவரின் குறுக்கே நின்று தடுத்தான் மாறன்..மாறனை வெறிப்பார்வை பார்த்தார் முருகேசன்..

மாமா..........என்று மாறன் அழைக்க,

இப்படி என்னை கூப்பிட உனக்கு வெட்கமா இல்லையா?............கத்தினார் முருகேசன்..

நீ என் புள்ள மனசை கெடுத்து இழுத்துட்டு ஒடுன பாவத்துக்கு, என் வீட்டையும் நான் உசுரா வளர்த்த ஆடுகளையும் தீ வச்சி பொசுக்குனாரு அந்த பெரிய மனுஷன்..அதோட விட்டாரா?..அந்த ஊர்ல ஒரு ஓரமா இருந்துகூட பொழைக்க விடாம ஊரை விட்டே துரத்துனாக...பொழைப்பு கெட்டு, மானங்கெட்டு, வாழ்ந்த ஊரை விட்டு நாய் படாத பாடு பட்டு இந்த ஊருக்கு வந்து சேர்ந்தோம்...நாங்க சாதியில் குறைஞ்சவங்கதான்யா...வாழுற வாழ்க்கையிலேயும் வைக்கிற பாசத்திலேயும் எந்த விதத்தில குறைஞ்சி போயிட்டோம்..உன்னை பெரியவரு மொவன்னு நம்பி என் மந்தைக்குள்ள விட்டதுக்கு என் புள்ளைய எனக்கு தெரியாம ராவோட ராவா இழுத்துட்டு ஓடுவியா?.. மனுஷனா நீ ...................முருகேசன் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க அழுது வெடித்தாள் எழில்..வெட்கிதான் போனான் மாறன்.. தாயம்மா அழுது மருங்கினாள்...

முருகேசன் முன் கை கூப்பி நின்றான் மாறன்..

தப்புதான்..நான் எழிலை ஊரறிய கல்யாணம் பண்ணிக்கணும்ன்னுதான் ஆசைப்பட்டேன்..சூழ்நிலை என்னை குற்றவாளி ஆக்கிடுச்சி..என்னை மன்னிச்சிடுங்க.................மாப்பிள்ளை கர்வத்தை விட்டு கொடுத்து தகப்பன் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரினான் மாறன்...தன் கணவனின் நிலை கண்டு துடித்து போனாள் எழில்..தந்தை ஒருவர் முன் கை கூப்பி நிற்பதை கண்டு முகம் வாடி போனான் அமுதன்..புரியாமல் விழித்தாள் ஆனந்தி..

நான் பத்து வருஷமா பட்ட ரணம் நீ கேட்கிற ஒரு மன்னிப்பில சரியாயிடுமா?..இத்தனை வருஷம் என் புள்ளய பிரிஞ்சி நான் பட்ட வேதனை நீ பேசுற நாடக வசனத்துல சரியாயிடுமா?..இப்போ என்ன திட்டம் போட்டு வந்திருக்க...என் குலத்தை வேரறுக்க திட்டம் போட்டு உங்க அப்பா உன்னை அனுப்பி வச்சாகளா?................உலர்ந்த குரலில் முருகேசன் கேட்க உடைந்து போனான் மாறன்..

ஐயா,..நீங்க புரிஞ்சிக்காம பேசுறீங்க..நீங்க நினைக்கிற மாதிரி அன்னிக்கு ராத்திரி...............என்று ரஹீம் ஆரம்பிக்க,

டேய், ரஹீம்...........என்று அழைத்த மாறன் வேண்டாம் என்பது போல் தலையாட்டினான்..

இல்ல மாறா,...நம்மை சுத்தி இருக்கிறவங்க நன்மைக்காக ஒரு உண்மைய மறைக்கிறதும் தப்பில்ல அதே நன்மைக்காக உண்மைய சொல்றதும் தப்பில்ல..அன்னிக்கு உயிர்பலிகளை தடுக்க உண்மையை மறைச்சதில தப்பு இல்லன்னா இன்னிக்கு உறவை காப்பாத்த உண்மையை உடைச்சு சொல்றதிலயும் தப்பில்லை.........என்று கூறிய ரஹீம்,

முருகேசனிடம் சொன்னான்,

ஐயா,..நீங்க நினைக்கிற மாதிரி அன்னிக்கு ராத்திரி மாறன் எழிலை இழுத்துட்டு ஓடுறதுக்காக உங்க வீட்டுக்கு வரல..மாறன் எழிலை உண்மையா காதலிச்சான்..அப்பாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எழில் பிடிவாதமா இருந்துச்சி..அதனால்தான் மாறன், தான் எழிலை காதலிச்ச விஷயத்தை வீட்ல சொல்லி சொக்கநாதன் சார்கிட்ட சம்மதம் கேட்டான்..ஆனால் சொக்கநாதன் சார் உங்க வீட்டை கொளுத்த ஆள் அனுப்புவார்ன்னு மாறன் நினைக்கல..விஷயம் தெரிஞ்சதும் உங்க குடும்பத்தை காப்பாத்ததான் மாறன் ஓடிவந்தான்..நீங்க யாரும் வீட்ல இல்லாம, எழில் மட்டும் தனியா இருந்ததால அவ உயிரை காப்பாத்த அவளை வீட்ல இருந்து கூட்டிட்டு போயிட்டான்...............என்று சொன்ன ரஹீம், அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மீனாம்பிகை..I.A.S கூறிய ஆலோசனை பற்றியும் அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்தும் விளக்கி சொன்னான்..

அதுமட்டும் இல்ல ஐயா,..உங்களை சொக்கநாதன் சார் தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி ஊரை விட்டு துரத்தின போது, மாறன்தான், இந்த ஊர்ல இருக்கிற எங்க ஃப்ரெண்ட் லிங்கேசன் மூலமா இந்த இடத்தில நீங்க தங்கிக்க ஏற்பாடு பண்ணான்..நீங்க ஆட்டு பட்டி ஆரம்பிக்க பணம் வேணும்ன்னு கேட்டபோது ஆஃபீஸ்ல லோன் போட்டு பணம் கொடுத்ததும் மாறன்தான்..மாசாமாசம் நீங்க கொடுக்கிற வட்டி பணத்தை கூட உங்க பேர்லதான் மாறன் சொல்லி நான் பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்.............என்று சொல்லி பேங்க் பாஸ்புக்கை முருகேசன் முன் நீட்டினான் ரஹீம்..அசையாமல் தலை குனிந்து நின்றான் மாறன்..

விக்கித்து நின்றார் முருகேசன்...என்ன சொல்வார்?..வார்த்தைகள் வரவில்லை..அமைதியாக வெளியேறி அந்த பெரிய ஆட்டு பட்டி அருகே போய் நின்று கொண்டார்...

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள அந்த வயதான தன்மான சிங்கத்தை அணுகி பேச யாருக்கும் தைரியம் வரவில்லை..

ரஹீம் அமுதனிடம் சொன்னான்,
அமுதா,..அவரு தான் உங்க அம்மாவோட அப்பா, உனக்கு தாத்தா..போ அவரை தாத்தான்னு கூப்பிடு..............

உடனே முருகேசன் அருகில் சென்றான் அமுதன்..

எக்ஸ்கியூஸ்மி..........என்று ஆங்கிலத்தில் மழலை மொழி உரைக்க திரும்பினார் முருகேசன்..

உங்களை பத்தி அம்மா நிறைய சொல்லியிருக்காங்க..நீங்க ரொம்ப நல்ல அப்பாவாம்...அப்படின்னா நீங்க நல்லா தாத்தாவாகவும் இருப்பீங்க...ஒருத்தர் செய்த தப்பை உணர்ந்து சாரி கேட்டா அவங்களை மன்னிச்சி ஃப்ரெண்ட் ஆக்கிக்கிறதுதான் குட் ஹேபிட்..எங்க அப்பா ஏதாவது தப்பு செஞ்சிருந்தா அவரை எனக்காக மன்னிச்சி ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க தாத்தா பிளீஸ்..எங்க அப்பாவும் ரொம்ப நல்ல அப்பதான் தாத்தா............என்று அமுதன் சொல்ல, முருகேசனின் விழிகளுக்குள் அவர் ஒளித்து வைத்திருந்த நீர் தடை உடைத்து பொங்கி வந்தது..பேரனை தூக்கி முகம் முழுதும் முத்தமிட்டு தன் பத்து வருட தவத்தை முடித்து கொண்டார் முருகேசன்..மீண்டும் ரஹீமின் தூண்டுதலில் முருகேசன் அருகில் வந்தாள் ஆனந்தி...ஆசை பேத்தியை ஆசைதீர கொஞ்சினார் முருகேசன்..
அதன் பிறகே கண்ணில் நீருடன் தயங்கிய படி அவரின் அருகில் வந்தாள் எழில்..

அப்பா..........என்ற அழைப்பில் மகளின் தலையை அன்னிச்சையாக வருடியது முருகேசனின் கை..நெகிழ்ந்து மகிழ்ந்தது குடும்பம்...எழில் மாறனின் அன்றைய நாள் முருகேசன் இல்லத்தில் கழிந்தது..எழில் முகத்தில் ஆனந்தம் கண்டு மகிழ்ந்தான் மாறன்.. அமுதனும் ஆனந்தியும் கோபாலின் குழந்தைகளுடன் அறிமுகம் செய்து கொண்டு ஆட்டுப்பட்டியின் ஆடுகளின் துள்ளலுடன் விளையாடி மகிழ்ந்தனர்..

முதன் முறையாக மாமனார் வீட்டில் விருந்து உண்டு மகிழ்ந்தான் மாறன்..தன் மகிழ்வை அவ்வப்போது கண்கள் வழி காதல் மனைவிக்கு கடத்தவும் மாறன் தவறவில்லை..சந்தோஷித்து கழித்த அழகிய தருணங்களை தன் ஃபோனில் கிளுக்கி கொண்டான் ரஹீம்...

இதற்கிடையில் புவனா உதவியுடன் அன்னம் இருமுறை எழில் போனுக்கு அழைத்து பேசிவிட்டாள்...தன் மகள் மாமியாருடன் ஃபோனில் நட்புடன் உரையாடுவது கண்டு மகிழ்ந்தாள் தாயம்மா..

மதிய உணவுக்கு பிறகு, தன் எக்ஸல்லில் வெளியே சென்ற முருகேசன் சில மணித்துளிகளுக்கு பின் வீட்டுக்கு வந்தார்..வந்தவர் எழிலை அழைத்து சொன்னார்,

எழிலரசி,..உனக்கு, மருமகனுக்கு, பிள்ளைகளுக்கு எல்லோருக்கும் தீபாவளிக்கு துணி வாங்கிட்டு வந்துருக்கேன்..இந்த வேஷ்டி சட்டை மருமகனுக்கு பிடிக்குமா பாரு..............என்று.

எதுக்குப்பா..வீணா செலவு பண்றீக..அவுக எங்க எல்லோருக்கும் தீபாவளிக்கு புதுசு எடுத்துருக்காங்க.............எழில் சொல்ல,

இருக்கட்டுமே, உன் கல்யாணத்துக்கு நாங்க எதுவும் செய்யல..உன் கல்யாணத்துக்கு பிறகு நீ அப்பா வீட்டுக்கு வந்துருக்கிற முதல் தீபாவளி..நான் புது துணி வாங்கி கொடுத்து மருமகன் வாங்கிகிட்டாதேன் எனக்கு சந்தோஷம்..இந்தா எழிலரசி, விலையான துணி எடுக்க அப்பா கையில் காசு இல்ல..மருமகனுக்கு இது பிடிக்குமான்னு கேட்டு சொல்லு கழுத................செல்லமாக முருகேசன் மகளிடம் சொல்ல,

நீங்க வாங்கி கொடுத்து எனக்கு பிடிக்காம போகுமா மாமா.........என்று உரைத்து மாமனார் மனதை குளிர்வித்தான் மாறன்...மாமனாரும் மருமகனும் ராசியாகிவிட மகிழ்ச்சி இரட்டிப்பாகி போனது அனைவருக்கும்.....

~~~~~~~~~~~~~~~

மாமனார் வீட்டின் அன்பான சூழலில்
இருந்து வெளியே வர மாலை நேரம் ஆகி போனது மாறனுக்கு..மாறனின் சொல்படி மாறனின் குடும்பத்தை சிவன் கோயில் வாசலில் இறக்கி விட்டான் ரஹீம்..

சரிடா நீ கிளம்பு.............சொன்னான் மாறன்..

டேய் வீட்டுக்கு நடந்தா போவ?..நீ போயிட்டு வா..நான் வெயிட் பண்றேன்.............ரஹீம்..

இல்லடா,..ஊருக்குள்ள இருக்கிற வீட்டுக்கு போக கார் வேணுமா?..நாங்க நடந்தே போயிடுவோம்..கோயில்ல அம்மா விளக்கேத்த சொல்லியிருக்காங்க..டைம் ஆகும்..நீ கிளம்பு..போற வழியில எழில் அப்பா வாங்கி கொடுத்த டிரஸ் எல்லாம் அம்மாட்ட கொடுத்துட்டு போயிடு............கட்டாயப்படுத்தி நண்பனை அனுப்பினான் மாறன்..

அது அழகிய கட்டடக்கலையுடன் அமைந்த சிவன் கோவில்..பழமை வாய்ந்த கோயிலின் கட்டிடம் கருங்கற்களால் அமைந்திருந்தது..மூல தெய்வமாக வீற்றிருந்தார் சொக்கநாதர், அவரின் மனையாள் சுந்தரேஸ்வரி....சொக்க நாதரின் கருவறைக்கு இடப்புறம் சுந்தரேஸ்வரி தன் கருவறைக்குள் நிற்க, அவளின் இடப்புறம் அமைந்திருந்தது துர்கை அம்மன் சன்னதி...

அம்மன் சன்னதியில் எழில் விளக்கேற்றிகொண்டிருக்க, குழந்தைகளை இரு கைகளிலும் பிடித்தபடி கோயிலை வலம் வந்தான் மாறன்..மாறன் கோயிலில் இடப்புறம் வழியாக சுற்றி வலப்புறமாக உலகாளும் சொக்கநாதர் சந்நிதிக்கு வரும் போது, கோயிலின் முன் வாசல் வழியாக உலகாளும் சொக்கநாதர் சந்நிதிக்கு வந்தார் மாறனின் தந்தை சொக்கநாதர்..கோயில் பற்றி கதைகள் பல உண்டு...அந்த கதைகளை பிள்ளைகளிடம் பேசிக் கொண்டே மாறன் வர எதிரில் வந்தார் சொக்கநாதன்...தகப்பனை கண்டு கொண்டான் மாறன்.. அங்காளி பங்காளிகளுடன் விவாதித்து வந்த ஊர் சாதி பற்றிய தீவிர விவாதம், மகனை தகப்பனின் கண்ணில் இருந்து மறைத்தது..

மாறன் தகப்பனை மட்டும் இன்றி அவர் நடந்து வரும் வழியில் சிந்தியிருந்த விளக்கெண்ணெயையும் தெளிவாக கண்டு கொண்டான்..இன்னும் இரண்டே எட்டுகளில் புதிதாக பாதிக்கப்பட்ட அந்த மார்பில்ஸ் தரையில் சிந்தியிருந்த எண்ணெயில் சொக்கநாதன் கால் வைத்து விடுவார் என்பதை கணித்த மாறனின் கால்கள் ஓட ஆயத்தமானது..

சொக்க நாதன் எண்ணெயில் கால் வைத்து வழுக்கவும்,
அப்பா..............என்று அழைத்தபடி மாறன் ஓடி வந்து அவரை பிடிக்கவும் சரியாக இருந்தது...மாறனின் கைப்பிடிக்குள் சிக்குண்டார் சொக்கநாதன்...பலவருடங்களுக்கு பிறகு தன்னுயிரில் உதித்த மகன் அப்பா என்றழைக்க, மகனின் கண்களை நேர்க்கோட்டில் சந்தித்தார் சொக்கநாதன்...

பத்து வருடங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் பார்த்த மகனின் முகத்தை, அதன் பிறகு இன்றுதான் தெளிவாக நேருக்கு நேர் காண்கிறார்...உள்ளுக்குள் இரத்தமும் சதையும் இதயமும் ஆழமாய் தன் மகனின் ஸ்பரிசத்தை உணர, உலகாளும் சொக்கநாதன் சந்நிதியில் ஸ்தம்பித்து நின்றார் மாறனின் தகப்பன் சொக்கநாதன்....

தொடரும்......
சாதியை வென்று
மனிதம் காக்கும் பாசப்
போராட்டம்.........


ஆண் பெண் பேதமின்றி
அனைத்து மனிதனையும்

ஆடு மாடு கோழி என்று
அனைத்து உயிரையும்

பொதுவாய் இணைக்கும்
பாச உணர்வுக்கு

பாரில் சாதி இல்லை
பார்த்து தெளிவாய் மனிதா......

சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை...