• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺13

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
அன்று இரவு சொக்க நாதன் வெகுநேரம் தூங்காமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார்..மாறனின் நினைவும் பஞ்சாயத்தார் பேசிய வார்த்தைகளும் மாறி மாறி வந்து மூளைக்குள் அலை மோதியது..மகன் மேல் கொண்ட பாசமும் சாதி மேல் கொண்ட பற்றும் உள்ளத்தில் போராடியது..சில மணி நேர யோசனைக்கு பின் இறுதியில் ஜாதியே வென்றது..பத்து வருடங்களுக்கு முன் செய்ய தவறியதை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்...

மாறன், தன் தகப்பன், தன் மனைவியை மருமகளாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என்று நிம்மதி கொண்டான்..அப்பாவின் மன மாற்றம் உண்மையெனில் தன் பிறந்த மண்ணிலேயே மீதி வாழ்வை கழித்து விடலாம் என்று அங்கலாய்த்தான்..ஆனாலும் மூளையின் ஒரு மூலையில் சாதி பற்று ஆட்கொண்ட, மனித உள்ளத்தை நம்பாதே என்னும் குரல் ஒலித்து கொண்டிருந்தது..

எழில் சொக்கநாதன் வீட்டுக்குள் இருக்கும் நேரத்தில் அவர் கண்ணில் படாமல், தன்னை மறைத்து கொண்டாள்..அதே நேரம் மாமனார் தன்னை மரியாதையாக நடத்துவதாக மாறனை நம்ப வைத்தாள்..மாறனும் சொக்க நாதனும் ஒருசேர வீட்டில் இருக்கும் போதுதான் எழிலுக்கு சோதனையான நேரம்..அந்நேரத்தில் மருமகளுக்கு பக்க துணையாக இருந்து நிலைமையை சமாளித்து வந்தாள் அன்னம்..இவ்வாறாக காலம் கலகம் இன்றி கடந்து, தீபாவளி நன்னாளும் வந்தது..

அன்னம் தன் பேரப் பிள்ளைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புத்துடை அணிவித்து மகிழ்ந்தாள்..ஊரில் தீபாவளி கொண்டாட்டத்தின் விளையாட்டு போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெற்றன..

காலையில் மிக சீக்கிரமாகவே சமையல் வேலையை முடித்து விட்ட அன்னம் தன் பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விளையாட்டு போட்டிகளை காண்பிக்க சென்று விட்டாள்..மாறனும் வெகுநேரம் விளையாட்டு போட்டிகளை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..அங்கு தாயை பிள்ளைகளுடன் கண்டவன், எழில் தனியாக வீட்டில் இருப்பதை கணித்து வீட்டுக்கு கிளம்பினான்.. எழிலையும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு...

எழில் வழக்கம்போல் தன்னறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்..ஏதோ ஒரு ஆர்வத்தில் வீட்டுக்குள் நுழைந்த மாறன் தன் செருப்பை வாசலில் கழட்டி போடவும் மறந்து விட்டான்...நேராக தன்னறைக்கு சென்றான்..அங்கு படுக்கையை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள் எழில்..ஊரே தீபாவளி கொண்டாட்டத்தில் இருந்ததால் வேலைக்காரர்களும் வீட்டில் இல்லை...

எல்லோரும் விளையாட்டு மைதானத்தில் குழுமி இருந்தனர்..பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷ முகமாக மைதானத்தில் நின்ற அன்னத்திடம் ஓடி வந்தான் பாண்டி..

என்னம்மா இங்கே நிக்குறீக.. ஐயா வீட்டுக்கு போயிட்டாக..சீக்கிரம் போங்க..உங்களை வீட்ல கணலைன்னா காச்சு மூச்சுண்ணு கத்த ஆரம்பிச்சுருவாக ...........பாண்டி சொல்ல பதறினாள் அன்னம்...எழில் சொக்கநாதன் கண்ணில் பட்டால் பிரச்சினையாகுமே என்ற பயம், காலின் விசையை கூட்ட, பிள்ளைகளை இரு கைகளிலும் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்..

வீட்டில்,

ஏய் எழில்..ஊரே விளையாட்டு போட்டி பார்த்துட்டு இருக்கு.. நீ மட்டும் இங்கே தனியா என்ன பண்ணிட்டு இருக்க...வா,.. ஃபங்க்க்ஷன் பார்க்க போகலாம்............எழிலை அழைத்தான் மாறன்..

இல்லங்க, எனக்கு மூடு இல்ல..இங்கே நிறைய வேலை இருக்கு..நாம நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்ல...துணி எல்லாம் பேக் பண்ண வேண்டாமா?.............எழில் கேட்க, அமைதியானான் மாறன்..கட்டிலில் அமர்ந்து யோசனையில் மூழ்கினான்..

என்ன ஆச்சி?..என் மாறன் முகம் ஏன் இப்படி வாடி போச்சி.............கேட்டு அவனின் முகத்தை கையால் உயர்த்தி பார்த்தாள் எழில்..அவன் முகத்தில் தோன்றிய உணர்வை அவளால் கண்டறிய முடியவில்லை..

என்ன ஆச்சிங்க?...........

ரெண்டு நாளா மனசே சரியில்ல எழிலு..மனசு தடுமாறுது..அம்மா இங்கே இருக்க சொல்லி கட்டாயப் படுத்தும் போது கூட நான் தடுமாறல எழிலு..ஆனா அப்பா மாறிட்டாருன்னு நினைக்கும் போது சொந்த ஊர்ல வாழணும்ங்கிற என் ஆசை எனக்கு அதிகமாகுது...இங்கேயே நம்ம மண்ணிலேயே இருந்திட மாட்டோமான்னு மனசு கிடந்து தவிக்குது..இன்னொரு பக்கம் அப்பாவை முழுசா நம்பவும் முடியல...தவிக்கிறேன் எழில்.............சொன்னவன் வாடி இருந்தான்..

என்னால தானே எல்லாம், நான் உங்க வாழ்க்கையில் வராம இருந்திருந்தா நீங்க உங்க வீட்டை, நம்ம ஊரை பிரிஞ்சி கஷ்டப்பட வேண்டிய நிலைமை உருவாகி இருக்காதுல்ல.............எழில் சொல்ல,

ஆரம்பிச்சிட்டியா.. இதுக்குதான் உன்கிட்ட நான் எதுவும் சொல்றதில்ல..விடு, அதை இதை யோசிக்காம டிரஸ் எடுத்து வை..நான் பெங்களூருக்கு டிக்கட் போட சொல்றேன்........என்றவன் எழுந்து வெளியேற முயற்சிக்க, அவனின் கைபிடித்து தடுத்தாள் எழில்...

உங்களுக்கு இங்கே இருக்கிறதுதான் சந்தோஷம்னா நாம இங்கேயே இருக்கலாம்...........என்றாள்..

இல்ல எழிலு..அப்பா ஒரு நேரம் போல, ஒரு நேரம் இருக்க மாட்டாக..மறுபடியும் பழைய மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாகன்னா அப்புறம் யாருக்கும் நிம்மதியில்லாம போயிடும்..இப்போ என்ன, இனி முன்ன மாதிரி பகையா இருக்காது..தினம் தினம் அம்மாட்ட பேசிக்கலாம்...தீபாவளி, பொங்கல்ன்னா ஊருக்கு வந்துட்டு போகலாம்..அப்பா இன்னும் நல்ல விதமாக மாறிட்டாகன்னா அம்மா சொன்ன மாதிரி மதுரைக்கு டிரான்ஸ்வர் வாங்கிட்டு வந்துடுவோம்..மதுரை டவுனுக்குள்ள ஒரு வீடு அரேஞ்ச் பண்ணி தங்கிக்கலாம்..அடிக்கடி அம்மாவை பார்த்துக்கலாம்..இப்போ பெங்களூருக்கு டிக்கட் போடுறேன்...............என்று அவளுக்கு சொல்லி தன்னை சமாதானம் செய்து கொண்டான் மாறன்..

சாதி மனிதன் தாய் மண்ணின் மீது கொண்ட அழகிய பற்றையும் வாழவிடாமல் அழிக்கிறதே!......

அவனின் கன்னங்கள் பற்றி கேட்டாள்,

நிஜமாதானே சொல்றீங்க, இதுல உங்களுக்கு வருத்தம் இல்லையே........

இல்ல,.. பிராமிஸ்............சொன்னவன் அவளது தலையில் தன் தலையால் முட்டி, மூக்கொடு மூக்கு உரசி சிரித்தான்..சிரிப்பை வரவழைத்தது கொண்டாள் எழில்..

அப்போது கீழே

அன்னம்,.....அன்னம்,.........சொக்க நாதனின் உரத்த குரல் கேட்டது..

அப்பா வந்துருக்காருன்னு நினைக்கிறேன்..அம்மா வீட்ல இல்ல..................மாறன் எழிலிடம் சொல்லும் போதே, மீண்டும் சத்தம் கேட்டது..

ஏய் அன்னம் எங்கேடி போய் தொலைஞ்ச?...........கேட்டவர் இரும ஆரம்பித்தார்..

ஏய் அன்னம், தண்ணி கொண்டு வாடி,...............என்றவரின் இருமல் சத்தம் அதிகமானது..அன்னத்தை வீட்டின் அறைகளில் தேடியவாறே அழைத்தார்..

ஏய்... கெளரி,.....அன்னம்,......எல்லாம் எங்கேதேன் போய் தொலைஞ்சீங்க?...............என்றவர் இன்னும் வேகமாக இருமினார்....சுற்றும் முற்றும் பார்த்தவரின் கண்ணில் பட்டது அந்த மண்பானை...அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அன்னத்தின் அன்றாட பழக்கம்...அதிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்து தன் இருமலை தணித்து கொண்டார்..வெயில் களைப்பு அந்த வயதான உடலை சோர்வாக்க நாற்காலியில் அமர்ந்தார் சொக்கநாதன்..

எழில்,...அம்மா வீட்ல இல்ல,...அப்பா ரொம்ப இருமுறாரு...போ, அவருக்கு தண்ணி கொடுத்துட்டு வா............மாறன் சொல்ல திரு திருவென விழித்தாள் எழில்...

போ எழில்..........அவன் அழுத்தி சொல்ல வேறு வழியின்றி மாடியிலிருந்து இறங்கினாள்..இப்போதே கைகள் சற்று நடுங்க ஆரம்பித்து விட்டது எழிலுக்கு...கீழே இறங்கி சமையலறை புகுந்தவளை சொக்கநாதன் கவனிக்காமல் இல்லை..அமைதியாக இருந்தார்..

சமையலறையின் உள்ளே சென்றவள் கையில் நீருடன் வெளிவந்தாள்...மிகுந்த பயத்துடன் தண்ணீர் டம்ளரை சொக்கநாதனிடம் நீட்டினாள்..

அவளின் முகத்தை ஆழமாக பார்த்த சொக்க நாதன்
அங்கே வை............என்று சொல்லி கண் காட்ட அருகில் இருந்த ஸ்டூலில் (stool) அதை வைத்தவள், விட்டால் போதும் என்று நகர எத்தனிக்கும் போது,

இந்தா புள்ள.............அழைத்தார் சொக்கநாதன்..நின்று திரும்பினாள்...

வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட சொக்க நாதன்,
"இந்தா புள்ள, நீ என் வீட்டுக்குள்ள கூட வர தகுதியில்லாதவ..அது உனக்கே தெரியும்..உன்னாலதேன் நான் இம்புட்டு வருஷம் என் மொவனை பிரிஞ்சி இருந்தேன்..இந்தா, என் பொஞ்சாதி பைத்தியக்காரி மாதிரி பிள்ளை பித்து பிடிச்சி படுத்த படுக்கையா கெடந்தா..இந்த வயசான காலத்துல எங்களை இன்னும் கஷ்டபடுத்தணும்ன்னு நீ ஆசைப்படுறியா?..என்னய விடு, என் பொஞ்சாதி, மறுபடியும் மொவனை பிரிஞ்சி நோவுல படுத்து ஏங்கியே சாகணுமா?..................என்று...அவரின் திடீர் கேள்வி எழிலை தடுமாற செய்தது..ஏற்கனவே எழிலுக்குள் இருந்த குற்ற உணர்வை தூண்டுவது போன்ற கேள்விகள்... பதிலின்றி விக்கித்து நின்றது எழில் மட்டும் அல்ல, கீழே நடக்கும் உரையாடலில் கவனம் வைத்து கேட்டுக் கொண்டிருக்கும் மாறனும் தான்..

சொக்கநாதன் தொடர்ந்தார்,

இந்தா பாரு புள்ள, போதும் இம்புட்டு வருஷமா நீ என் குடும்பத்துக்கு செஞ்ச அநியாயம் போதும்..என் புள்ளைய என்கிட்ட திருப்பி கொடுத்துடு..............என்று அவர் சொல்ல அதிர்ச்சியானது எழிலின் முகம்..தகப்பன் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் மாறன்...

நீ என் மொவனை கட்டிகிட்டது இந்த சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டுதானே..எம்புட்டு பணம் வேணும் கேளு, இல்ல எம்புட்டு நிலம் வேணுமோ கேளு, நான் உனக்கு கொடுத்துடுறேன்..நீ உன் புள்ளைகளை கூட்டிட்டு என் மொவனை விட்டு போயிடு.............என்று சொக்க நாதன் சொல்ல, உள்ளுக்குள் நொறுங்கி போனாள் எழில்...இரு நாட்களாக நெஞ்சில் தேங்கி நின்ற சந்தோஷமும், தாய் பூமி மேல் துளிர்த்த ஆசையும் பாதரசம் வடிவது போல் சட்டென வடிந்து போனது மாறனின் இதயத்தில்..சற்றே தடுமாறித்தான் போனான்..

பயம் மறந்து பதட்டம் ஆட்கொண்டது எழிலை..உள்ளுக்குள் தோன்றிய பாச உணர்வை கொன்று புதைத்து விட்ட சாதி வெறியனாக நின்றிருந்தார் சொக்கநாதன்..

என்ன புள்ள, அசையாமல் நிக்கிற..உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?..இந்த சொத்தை ஆண்டு அனுபவிக்கணும்ங்குற ஆசையிலதானே சிங்கம் மாதிரி இருந்த என் மொவனை மயக்கி வளைச்சி போட்டுகிட்ட...இந்தா இம்புட்டு வருஷம் என் மொவன் ஆசையை தீர்த்து வச்சதுக்கு என்ன கூலியோ அதை வாங்கிட்டு நீ பெத்ததுகளையும் கூட்டிட்டு போயிடு..................அமிலமாய் வார்த்தைகளை சொக்க நாதன் அள்ளி கொட்ட,

அப்பாஆஆ..........என்ற அலறலுடன் வந்த மாறன் மாடியில் அலங்காரமாக வீற்றிருந்த அந்த பூஜாடியையும் அதன் தாங்கியையும் (stand) காலால் உதைக்க, அவையிரண்டும் மாடிப்படியில் உருண்டு கீழ் தளத்தில் சொக்கநாதன் காலடியில் வந்து விழுந்து உடைந்தது...பதறினாள் எழில்..

அப்போது சரியாக பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் அன்னம்..விரு விருவென மாடியில் இருந்து இறங்கி வந்த மாறன்,

என்ன மனுஷன் நீங்க?.., பெத்த பொண்ணு மாதிரி நினைக்க வேண்டிய மருமொவகிட்ட இப்படியா கேவலமா பேசுவீக.......சத்தம் கூட்டி கொதித்தான் மாறன்..

யாருலே..யாரு எனக்கு மருமொவ, இவளா? இந்த கீழ் சாதியில் பொறந்தவளா?..என் உசிரு இந்த உடம்புல ஒட்டிக்கிட்டு இருக்கிற வரைக்கும் இவளை நான் என் மருமொவளா ஏத்துக்கிட மாட்டேன்...முறையா தாலி கட்டி வர்றவளுக்கு பேர்தான்லே பொஞ்சாதி,..இவ உனக்கு வைப்பாட்டி...............என்று சொக்க நாதன் சொல்ல,

போதும் நிறுத்துங்க...இன்னொரு வார்த்தை பேசுனீக நான் கொலைகாரன் ஆயிடுவேன்.............குரல் உயர்த்தி கர்ஜனை செய்தான் இளமாறன்...நிலைமை கைமீறி போனதை உணர்ந்த அன்னம் செய்வதறியாது திகைத்து போனாள்..பிள்ளைகள் பயத்தில் அன்னத்தை இறுக கட்டிக் கொண்டனர்..

நீ யார் முன்னால நின்னு பேசுறன்னு தெரியுதால,...நான் சொக்கநாதன்..............திமிர்ந்து ஆங்காரமாய் ஒலித்தது கிழட்டு சிங்கத்தின் குரல்...

தெரியும்....சாதி வெறி பிடிச்சி மனிதத்தன்மையை இழந்துட்டு நிக்கிற ஒரு பெரிய மனுஷன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்னு நல்லா தெரியும்............ஆவேசமாய் கத்தினான் மாறன்..

கேவலம் இந்த கேடு கேட்ட சிறுக்கிக்காக பெத்த அப்பனையே எதிர்க்க துணிஞ்சி ட்டியா?..அந்த அளவுக்கு உன்னை மயக்கி வச்சிருக்காளா இந்த அவிசாரி(விபச்சாரி).................என்று கூசாமல் சொக்க நாதன் பேச அருகில் இருந்த நாற்காலியை தூக்கி எறிந்தான் மாறன்..அது தூள் தூளாய் நொறுங்கியது...காதுகளை மூடிக் கொண்டாள் அன்னம்...கண்ணீரில் கரைந்து உடைந்தாள் எழில்..

என்னலே பொறவாசல் வழியா வந்த சிறுக்கிக்காக ரொம்பதேன் திமிறிகிட்டு நிக்கிற..அவன் உன்னய மயக்கி தாலி வாங்கினது உன் மேல இருந்த பாசத்துல இல்ல..இந்த சொத்து மேல இருந்த ஆசையில..என் சாதி கெளவரத்தை கெடுத்த இந்த அவிசாரிக்கு.............என்று சொக்க நாதன் முடிக்கும் முன்,

போதும்............என்று வீடே அதிரும் படி அலறினான் மாறன்...அவன் அலறலில் பேச்சை நிறுத்தினார் சொக்கநாதன்...

சாதி சாதி சாதி.....வேண்டாம்..மனுஷனை மனுஷனா வாழவிடாம மிருகமா, கொலைகாரனா மாத்துற இந்த பாழா போன சாதி எனக்கு வேண்டாம்..மனுஷத்தன்மையோட குரல்வளையை நெறிச்சி கொல்ற இந்த சாதி அழிஞ்சி போகட்டும்.......அலறி உரைத்தான் மாறன்..

என்ன சொன்னீக?..எழில் என்னை மயக்குனாளா?...இல்ல,.. நான்தான் அவ பின்னால நாயா சுத்துனேன்..வேண்டாம் வேண்டாம்னு ஒதுங்கி போனவளை விடாம துரத்தினேன்..காட்டிகிட்டா உன்னைத்தான் கட்டிக்குவேன் இல்ல உசுரை விட்டுருவேன்னு கைநரம்பை அறுத்துகிட்டேன்...............மாறன் சொல்ல ஆச்சரியமாக பார்த்தார் சொக்கநாதன்..வியந்து போனாள் அன்னம்..மாறனின் இந்த காதல் கதை பெற்றோர் அறியாதது அல்லவா!......

பெத்தவங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவளை, யாருக்கும் தெரியாமல் நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குனதே நீங்கதேன்...........மாறன் அழுத்தி சொல்ல புரியாமல் பார்த்தார் சொக்கநாதன்..

அன்னிக்கு நீங்க எழில் குடும்பத்தை கொளுத்த ஆள் அனுப்பாம இருந்திருந்தா நான் இவளை கூட்டிட்டு அர்த்த ராத்தரியில் ஓட வேண்டிய அவசியம் வந்திருக்காது..அன்னிக்கும் உங்க கையில போலீஸ் விலங்கு மாட்டிட கூடாதுன்னுதேன் என் எழில் என்னய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா................
ஆத்திரத்தில் நடந்த கதையை கொட்டி தீர்க்க,

என்னலே புதுசு புதுசா கதை விடுறியா??....சாதி கெட்ட பயலே,...இந்த கீழ் சாதிக்காரிக்காக தவம் கெடந்தேன்னு சொல்ல உனக்கு அசிங்கமா இல்லியாலே... உசுருக்கு சமம்லே சாதி...அந்த சாதிய விட்டு கொடுத்துட்டு வாழுறதை விட சாவுறதே மேல்..என் நிழலை கூட தொட தகுதியில்லாத இந்த கீழ் சாதி பொறப்பு இரக்கப்பட்டு நான் உயிர் வாழ வேண்டிய அவசியமே இல்லலே..இவ போட்ட உயிர் பிச்சையில் வாழுறதை விட செத்து போறதே சந்தோஷம்லே..............சொல்லிக் கொண்டே தூணின் மேற்கூரையில் இருந்த அரிவாளை கையில் எடுத்த சொக்க நாதன் தன் கழுத்தை காவு கொடுக்க துணிந்தார்..தந்தையின் கைபிடித்து தடுத்தான் மாறன்..அரிவாள் இருந்த அவரின் கையை அழுத்தி பிடித்தபடி மாறன் சொன்னான்,

நீங்க ஏன் சாகணும்..தப்பு பண்ணது நான்தேன்..வேற சாதின்னு தெரிஞ்சும் எழிலை துரத்தி துரத்தி காதலிச்சது நான்தேன்...அப்படி நான் செய்யலன்னா நீங்க எழில் குடும்பத்தை கொல்ல ஆள் அனுப்பியிருக்க மாட்டீக..இத்தனை வருஷம் நீங்க பட்ட அவமானத்துக்கு எல்லாம் காரணமும் நான்தேன்..உங்க சாதிய கெடுத்தவன் நான்தேன்..உங்க சாதிய காப்பத்தணும்ன்னா சாக வேண்டியவனும் நான்தேன்...உங்க சாதிய காப்பாத்த உங்க மொவனை நீங்களே வெட்டி கொன்னுடுங்க............ஆவேசமாக பேசி தந்தையின் கையை விடுவித்து எதிர் நின்றான் மாறன்..

கொதித்தது சொக்க நாதனின் இரத்தம்...சாதி என்னும் பேய் பிடிக்க அரக்கனாகி போனார்..

உண்மைதேன் என் சாதிய கெடுத்தவன் நீ,...என் சாதியை அழிக்க பிறந்தவன் நீ...நீ உசுரோட இருந்தா என் சாதி செத்து போகும்............சொல்லிக் கொண்டே சொக்கநாதன் மகனை வெட்ட அரிவாளை ஓங்கவும் இமைப்பொழுதில் புயலென மாறன் முன் வந்து நின்று சொக்கநாதனை எதிர் கொண்டாள் எழிலரசி...ஓங்கிய அரிவாள் அந்தரத்தில் நின்று போனது..சொக்கநாதனின் காலிலேயே விழுந்து விட்டாள் அன்னம்..அன்னம் சொக்கநாதனின் முகத்தை தன் கண்ணீர் வழி பார்க்க, சொக்கநாதனோ, எழிலின் முகம் பார்த்து நின்றார்..

தன் வலது கையால் எழிலின் வலதுகையை மாறன் பிடித்து இழுத்தும் அவனின் இழுப்பு விசைக்கு சற்றும் அசைந்து கொடுக்காது பூமித் தாயின் தலையில் அழுந்த கால் ஊன்றி நின்றாள் எழில்..
எழிலின் கண்களில் கண்ணீர் இல்லாமல் இல்லை..உயிர்களின் கண்ணீர் நிறமற்றது என்பது அனைவரும் அறிந்ததே...ஆனால் இன்று எழிலின் கண்ணீர் சிவப்பு நிறமாய் சொக்கநாதன் கண்களுக்கு காட்சி அளித்தது..ஆவேசம் கொண்டிருந்த அவளின் கண்களில் துர்கை அம்மன் கையேந்தும் தீ பிழம்பு ஒளிர்ந்தது போல் ஒரு பிரம்மை சொக்கநாதனை திக்கு முக்காட செய்தது...இதுவரை கற்சிலையில் கண்ட காளியம்மன் நேரில் நின்றது போல் உணர்ந்து உறைந்தார் சொக்கநாதன்..

என்னுயிர் மன்னவனின் உயிர் தீண்டும் முன் என்னுயிர் தீண்டுவாய் என்று சொக்கநாதன் தூக்கிய ஆயுதத்தின் முன் அருள் வந்தவளாக ஆவேசம் கொண்டு நின்றாள் எழில்..மதுரை எரித்த கண்ணகியின் மற்றொரு அவதாரமாய் சாதி எனும் மதம் பிடித்த தன் மாமன் முன் நின்றிருந்த மாறனின் மனையாளின் கண்கள் எரிமலை குழம்பை வெடித்து சிதற ஆயத்தமாக இருந்தது..அவளது ஆவேசமான சுட்டெரிக்கும் பார்வையில் உள்ளுக்குள் நிலை தடுமாறி போனார் சொக்கநாதன்..

சாதி என்ன சாதி?..உத்தமிகளின் உத்தம குணம் என்ன,... சாதியால் வருவதா?..இதோ இங்கு கணவன் உயிர் காக்க மரணத்தை எதிர்கொண்டு நிற்கிறாளே தமிழகத்து கண்ணகி இவளின் குணத்தை சாதியால் மதிப்பிட இயலுமா?..உலகாளும் காளியாய் காட்சி தரும் இவளின் சாதி கீழ் சாதி என்று உரைப்பாயா?................ சொக்கநாதரிடம் இடித்துரைத்தது அவரது உள்ளம்...உறைந்து போனார்..

நான் என்ன செய்ய துணிஞ்சிட்டேன்..என் உயிர்ல பொறந்த என் புள்ளைய நான் கொல்ல துணிஞ்சிட்டேனே............பதறியது சொக்கநாதனின் உள்ளம்...

ஒரு நொடி ஊறிய சாதி வெறி, என் விந்தில் விளைந்து என்னுயிரின் நகலாய் நிற்கும் என் மகனையே கொல்ல என்னை தூண்டிவிட்டதே!...என் வாழ்வுக்கு ஆதாரமான சந்ததியை அழித்து விட்டு சாதியை காப்பாற்றி நான் என்ன செய்ய போகிறேன்?.................... சாட்டையால் அடித்தது சொக்கநாதனின் ஆழ்மனம்..தடுமாறி அரிவாளை கீழே போட்டு சற்றே பின் வாங்கி நின்றார்..
அவருக்கு தெரியாமலே உருகி கரைய ஆரம்பித்தது அவரின் சாதி வெறி..இன்னும் எழில் கண்களில் தெரியும் ஆவேசத்தில் இருந்து அவர் பார்வையை விலக்க வில்லை..எழில் கண்களில் ஆவேசம் இன்னும் தணியவும் இல்லை..இந்த கண்ணகியின் ஆவேச பார்வை நெருப்பில் பொசுங்கிதான் போனது சாதி.... எழிலின் கண்களை நேருக்கு நேர் பார்க்க திராணி அற்றவராக அவ்விடம் விட்டு வெளியேறினார் சொக்கநாதன்...அன்னம் எழிலின் முகம் பார்த்து உறைந்து போனாள்..

உத்தமியின் கோபத்தில் அணுவும் அசையாது நின்று போனது...

தொடரும்......
மனிதத்தின் வெற்றியும்
சாதியின் வீழ்ச்சியும்...


என் தேசத்து உத்தமிகளின்
சாதியை வரையறுக்கும்
வல்லமை
இப்புவிவாழ் மானிடனுக்கு
உண்டோ....

சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை