• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺14

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
மாறனின் அறையில் தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள் எழில்..பயந்து போன குழந்தைகள் எழிலை ஒட்டி அமர்ந்திருந்தனர்...துணிகளை தன் சூட்கேசில் அடுக்கி கொண்டிருந்தான் மாறன்..எல்லா பொருட்களையும் எடுத்து பேக் செய்து முடித்தவன், மனைவியின் கைபிடித்து,

எழுந்துரு எழில் போகலாம்............என்றான்.. அனிச்சையாக எழுந்தவள் மாறனை கட்டிக் கொண்டாள்..அவன் மார்பு கண்ணீரால் நனைந்து போனது..

எல்லாத்தையும் என்கிட்ட மறைச்சிட்டு இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க?...........சற்றே கோபத்துடன் தான் கேட்டான்..

எங்க நினப்பு இருந்திருந்தா என் தலைய வெட்டிக்கன்னு அப்படி போய் நின்னுருப்பீங்களா..உங்களை விட்டா எங்களுக்கு யார்..............என்று சொல்லும் போதே உதடுகள் துடிக்க அழுது விட்டாள் எழில்..அவள் கேள்வியில் கலங்கிதான் போனான் மாறன்..அவளை இறுக அணைத்துக் கொண்டான்..குழந்தைகள் பெரியோரை இறுக பற்றிக் கொண்டனர்...

வாசலில் காருடன் வந்து நின்றான் ரஹீம்..ஹாலில் சோர்ந்து சோகமாக அமர்ந்திருந்தாள் அன்னம்..மனைவி குழந்தைகளுடன் கலங்கி போன முகத்துடன் மாடியில் இருந்து இறங்கி வந்த மாறனின் முகம் பார்த்து தவித்து போனாள் அன்னம்..தாயின் முன்னால் வந்து நின்றான் மாறன்..எதுவும் பேசவில்லை...

கண்கள் குளமாகி போனது அன்னத்துக்கு..

என்னை மன்னிச்சிடு சாமி..எங்கேயோ நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்த உன்னை கூட்டியாந்து உன் நிம்மதியை கெடுத்துட்டேன்..இந்த மனுஷன் இம்புட்டு வெறி பிடிச்சவகளா இருப்பாகன்னு நான் கற்பனை கூட பண்ணி பார்க்கலையா..போ சாமி..எங்கேயாவது போய் தீர்க்க ஆயுசோட நீ நிம்மதியா வாழ்ந்தா அது போதும்..இந்த அம்மா செத்துட்டான்னு கேள்விபட்டா கொள்ளி வைக்க கூட இந்த ஊருக்கு வந்துடாதே...இந்த சாதி வெறி பிடிச்ச மனுஷன் இருக்கிற ஊருக்கு வந்துடாதே.......சொன்ன அன்னத்தின் கண்கள் ஈரமாவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..

உடம்பை பார்த்துக்கோங்கம்மா..நான் போய் கால் பண்ணி பேசுறேன்..............கனத்த இதயத்துடன் தாயிடம் விடை பெற்று கிளம்பிய மாறன் வாசலை தாண்டும் சமயம் ஓடி வந்தான் பாண்டி..பாண்டியின் முகத்தில் இருந்த பதட்டம் அனைவரின் முகத்திலும் படர்ந்தது..

அம்மா, ஐயாவை நாம கோயிலுக்கு நேந்து விட்டுருந்த காளை குத்தி தூக்கி எறிஞ்சிடுச்சி..குடலை குத்தி சரிச்சிடுச்சி..பலமான அடி..நம்ம பயலுக மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்கானுக.....................என்று பாண்டி மூச்சிறைக்க சொல்லி முடிக்க, நெஞ்சில் அடித்து கொண்டே,

அய்யோ.........என்று அலறியபடி ஓடினாள் அன்னம்..மாறன் கையிலிருந்த சூட்கேசை கீழே போட்டான்..எழில் அதிர்ந்தாள்..ரஹீம் திகைத்தான்....

~~~~~~~~~~~~~~~~~

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்,
I.C.U வார்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள் அன்னம்...சற்று தொலைவில் கையில் குழந்தைகளை பிடித்து கொண்டு நின்றிருந்தாள் எழில்..இன்னும் சற்று தொலைவில் அதிருப்தியான முகத்துடன் நின்றிருந்தான் மாறன்..உடன் நின்றிருந்தான் ரஹீம்..

சில மணித்துளிகளுக்கு பிறகு வெளியே வந்தார் டாக்டர்..
"இங்கே பாருங்கம்மா, பெரியவருக்கு அடி பலமா பட்டிருக்கு,..நிறைய இரத்தம் போயிருக்கு..உடனடியா ஆப்பரேஷன் பண்ணணும்...வயசானவரு, ஆப்பரேஷனை தாங்கிக்கிற பலம் உடம்பில இருக்குமா தெரியல..நாங்க எங்களால முடிஞ்சதை டிரை பண்றோம்..இப்போ அவருக்கு உடனடியாக பிளட் தேவைப்படுது....அவர் பிளட் குரூப் ஏ.பி நெகட்டிவ்..இது ரொம்ப ரேர் குரூப்..உங்க ஃபேமிலில யாருக்காவது ஏ.பி நெகட்டிவ் பிளட் குரூப் இருந்தா நமக்கு வேலை ஈஸி..வெளியே டிரை பண்றதுன்னா இந்த பிளட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்..நேரத்தை கடத்த கடத்த அவர் உயிருக்குதான் ஆபத்து.................என்று டாக்டர் சொல்லி முடிக்க, எழில் நிமிர்ந்து பார்த்தாள்..மாறன் எழிலை பார்த்தான்..

என் பிளட் குரூப்பும் ஏ.பி நெகட்டிவ்தான்...........சொன்னாள் எழில்..

வேண்டாம் எழில்,..நீ அவருக்கு பிளட் கொடுக்க கூடாது.............வேக வேகமாக சொன்னான் மாறன்..ஏன் என்பது போல் பார்த்தாள் எழில்..

உன் கையால தண்ணி வாங்கி குடிக்கவே யோசிச்சவகளுக்கு நீ ஏன் பிளட் கொடுக்கணும் எழில்..அப்படியே நீ பிளட் கொடுத்து உயிர் பிழைச்சாலும், நீதான் பிளட் கொடுத்தேன்னு தெரிஞ்சா அதுக்கும் கிடந்து குதிப்பாக................ சொன்னவனின் முகத்தில் கோபம் இன்னும் தீரவில்லை..

இதையெல்லாம் பேசிட்டு இருக்கிற நேரமா இது?..அங்கே அவுக உயிருக்கு போராடிட்டு இருக்காக..........எழில் சொல்ல,

அரை மணி நேரத்துக்கு முன்னாடி உன் புருஷனை கொல்ல அருவா தூக்கினவகளுக்கு நீ பிளட் கொடுக்க போறியா எழில்...........கேட்டான் மாறன்..

நான் இப்போ அவுகளுக்கு பிளட் கொடுக்காம இருந்தா, அப்புறம் அவுகளுக்கும் நமக்கும் என்னங்க வித்தியாசம்?..நான் மனுஷங்க எல்லோரும் ஒரே சாதின்னு வாழ்ந்து காட்டிட்டு இருக்கிற, இளமாறனோட பொண்டாட்டி...ஒரு மனுசன் உயிரை காப்பாத்த முடிஞ்சும், சாகட்டும்ன்னு வன்மமா இருந்தா உங்க பொண்டாட்டியா இருக்குறதுல என்னங்க பெருமை இருக்கு................ சலனமின்றி எழில் கேட்க, அசையவில்லை மாறன்..

நான் பிளட் கொடுத்துடுறேன்...நான்தான் கொடுத்தேன்னு அவுககிட்ட யாரும் சொல்ல வேண்டாம்..............சொல்லி எழில் அன்னத்தின் முகம் பார்க்க, அன்னம் எழிலை பார்த்து கை கூப்பி வணங்கி நின்றாள்..தாயை பார்த்து கண்களில் நீர் கோர்த்தான் மாறன்..

எழில் இரத்த தானம் செய்ய, சொக்க நாதனுக்கு நன்முறையில் ஆப்பரேஷன் முடிந்தது...இரத்தம் கொடுத்து முடித்து I.C.U வார்டில் இருந்து வெளியே வந்தாள் எழில்..ஆப்பரேஷன் முடிந்து ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்தார் டாக்டர்..

அம்மா, உங்க வீட்டுக்காரர் பிழைச்சிகிட்டாரு..சரியான நேரத்துல உங்க மருமகள் கொடுத்த இரத்தம் தான் அவரை காப்பாத்தியிருக்கு...இன்னும் ரெண்டு மணி நேரத்தில கண் முழிச்சிடுவாரு................என்று டாக்டர் சொல்லி சென்ற பிறகே நிம்மதி அடைந்தாள் அன்னம்...

சரி எழில், கிளம்பு போகலாம்...........
உடனே சொன்னான் மாறன்..எழில் மறுக்க வில்லை..ஏக்கமாக பார்த்தாள் அன்னம்..

போயிட்டு வர்றேன் அத்தை..அடிக்கடி ஃபோன் பண்றேன்..........சொன்னாள் எழில்..

போய் நல்லா இருங்க...இந்த ஊருக்கு வராதீக..பிள்ளைகளை நல்லா பார்த்துக்க தாயி..என் புள்ளையையும் பார்த்துக்க எழில்................சொல்லும் போதே அன்னத்தின் கண்களில் கண்ணீர் கொட்டியது...

தாயிடம் கண்ணீருடன் பிரியா விடை பெற்று பெங்களூர் புறப்பட்டான் மாறன்..

~~~~~~~~~~~~~~~~

ஆப்பரேஷன் முடிந்த பிறகு சொக்கநாதன் தேறி வர கிட்ட தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது...கணவனை மருத்துவ மனையில் இருந்து அழைத்து வந்த பிறகு, மிகவும் சிரத்தை எடுத்து அவரை கவனித்து கொண்டாள் அன்னம்..

சொக்கநாதனுக்கு சாப்பாடு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, உடை மாற்றி விடுவது என்று ஆரம்பித்து இயற்கை உபாதைகளுக்கு உதவி செய்வது வரை, ஒரு தாய் தன் கை குழந்தைக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் முகம் சுழிக்காமல் செய்தாள் அன்னம்..அன்னத்தின் கவனிப்பில் நன்றாகவே தேறி வந்தார் சொக்கநாதன்...

காலங்கள் உருண்டோடியது...இதோ மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது...

அன்று காலையில் கண்விழித்த சொக்கநாதன் குளித்து விட்டு வந்தார்...அவருக்கு தேவையான உடைகளை ஆயத்தமாக இஸ்திரி போட்டு எடுத்து வைத்திருந்தாள் அன்னம்..சாப்பிட உட்கார்ந்தார் சொக்கநாதன்..அவர் வரும் முன்னரே இட்லியும் சாம்பாரும் எடுத்து வைத்திருந்தாள் அன்னம்...சாப்பிட்டார்..கண்களை வீடு முழுதும் சுழல விட்டார்...அன்னத்தின் தரிசனம் அவருக்கு கிடைக்கவில்லை..

இப்போதெல்லாம் சொக்கநாதனின் விடியல் இப்படித்தான் இருக்கிறது...ஒரு மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் குறைவின்றி செய்து விடுவாள் அன்னம்...ஆனால் அவருக்கு பெரும்பாலும் முக தரிசனம் தருவதில்லை..விழித்து சிரித்திருக்கும் அன்னத்தின் முகத்தை சொக்கநாதன் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிறது..அவள் தூங்குகையில் ஏக்கமாக பார்த்து விட்டு நகர்வார்..

அது மட்டுமல்ல,..சொக்கநாதர் அன்னத்தின் குரல் கேட்டு மூன்று வருடங்கள் ஆகிறது..எப்போதாவது வீட்டுக்குள் நுழையும் போது பெங்களூரில் இருக்கும் மகனிடம் ஃபோனில் அன்னம் உரையாடுவது கேட்கும்..அதுவும் அவர் வருவது தெரிந்தவுடன் ஃபோனை கட் செய்து விட்டு காணாமல் போய்விடுவாள் அன்னம்..இப்படித்தான் சொக்கநாதன் வருவது தெரிந்தாலே எங்காவது ஓடி ஒளிந்து கொள்கிறாள் அன்னம்..

மாறன் அன்னத்துக்கு ஃபோன் வாங்கி அனுப்பியிருந்தான்..புவனா உதவியுடன் ஃபோனை இயக்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டாள் அன்னம்..அவள் மகனுடன் ஃபோனில் உரையாடுவதை சொக்க நாதன் அறியாமல் இல்லை..ஆனால் முன்பு போல் கோபம் கொள்வதில்லை..தனக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கும் அன்னத்திடம் கோபம் கொள்ள அவருக்கு தைரியமும் இல்லை..கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்..

மருத்துவமனையில் இருந்து வந்து, குணமான பிறகு, ஆரம்பத்தில் அன்னத்திடம் தாமாகவே சென்று பலமுறை பேசி பார்த்தார்..பலன் இல்லை...ஒட்டி வைத்த இதழ்களை பிரிக்கவே இல்லை அன்னம்..

ஒரு நாள் அன்னத்தை பேச வைக்க தன் கோபத்தை கூட பிரயோகம் செய்து பார்த்தார்,...அன்று அன்னம் உரைத்த பதில் இன்றும் சொக்கநாதன் காதுகளில் ஒலித்தது கொண்டிருக்கிறது... சொக்கநாதன் கடைசியாக அன்னத்தின் குரலை கேட்டது அன்றுதான்..அதுவும் அவருக்கான பதிலை கெளரியிடம்தான் கூறினாள் அன்னம்..

இந்தா கெளரி,..நான் இப்படித்தான் இருப்பேன்..என்னால இந்த மனுஷன்கிட்ட பேச முடியாது..நான் பெத்த புள்ளைய கொலை பண்ண பார்த்த மனுஷன்கிட்ட எனக்கு என்ன பேச்சு?..நான் இப்படி இருக்கிறது அவுகளுக்கு புடிக்கலைன்னா என் புள்ளைய வெட்ட தூக்கின அருவா, இந்தா கூரை மோட்டுலதேன் இருக்கு...அதை எடுத்து என்னய வெட்டி போட்டுட்டு அவுக சாதிய காப்பாத்திகிட சொல்லு...............என்று அன்னம் கூறிய வார்த்தைகள் ஒவ்வொரு நொடியும் சொக்கநாதனின் நினைவில் நீங்காமல் நிற்கிறது..

இப்போதெல்லாம் வீட்டுக்குள் வந்தாலே நிசப்தம், நிசப்தம், நிசப்தம்...தனிமையும் அமைதியும் வாழ்வின் ஒரு பாகமாக இருந்தால் அந்த அமைதியும், தனிமையும் சொர்க்கம்..அதே தனிமையும், அமைதியுமே வாழ்க்கை ஆகிவிட்டால் அந்த வாழ்வு நரகம் அல்லவா..

அந்த நரகத்துக்குள் தான் மூன்று வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சொக்கநாதன்..இப்போதெல்லாம் ஊர் பஞ்சாயத்துகளில் கூட அவர் பங்கெடுத்து கொள்வதில்லை என்பது கேள்வி... கேள்விப்பட்டாலும் அன்னம் கணவனை நம்பவோ அவருக்கு அவள் பிறப்பித்த தண்டனை உத்தரவை திரும்ப பெறவோ தயாராய் இல்லை..

பங்காளிகளிடமும் முன்பு போல் நட்பு இல்லையாம்...இரண்டு நாட்களுக்கு முன்பு மாரியம்மா பாட்டி வந்து அனனத்திடம் சொல்லி சென்றாள்..எனினும் அன்னம் சொக்கநாதனிடம் மனமிரங்க தயாராய் இல்லை..

அன்று இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த சொக்கநாதன், முதலில் படுக்கை அறைக்கு சென்று பார்க்க அன்னம் தூங்கி கொண்டிருந்தாள்..வாசல் திறந்திருக்கும் போதே நித்திரையில் மூழ்கி இருந்தாள்..வீட்டில் இருக்கும் செல்வத்தை யார் தூக்கி சென்றால் எனக்கென்ன?, யாருக்காக இந்த செல்வத்தை நான் பாதுகாக்க வேண்டும்? என்பது அன்னத்தின் எண்ணம்..அதை சொக்கநாதனும் அறியாமல் இல்லை..

தூங்கி கொண்டிருக்கும் மனைவியின் முகத்தை பார்த்து, பெருமூச்சு விட்டவர், சாப்பிடும் இடத்துக்கு வந்தார்..வழக்கம் போல் சாப்பாடு தயாராக இருந்தது..ஏனோ சாப்பிட பிடிக்கவில்லை..மாடிப்படி ஏறி, மாறனின் அறையை திறந்தார்...அந்த அறையின் கட்டில் அழகாக ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது..அன்னம் பிள்ளைகளுக்காக வாங்கி வைத்த பொம்மைகளும், அந்த ஆடும் மரக்குதிரையும், இன்னும் சில இலவம்பஞ்சு பொம்மைகளும் அந்த அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன..

அலமாரியை திறந்தார்..பிள்ளைகள் விளையாடிவிட்டு போட்டு சென்ற சிறு சிறு விளையாட்டு பொருட்கள், பேனா, ஸ்கெட்ச் போன்றவை அதற்குள் இருந்தன..வாஞ்சையாய் அவைகளை தடவி கொடுத்தார்..அதில் ஒரு ஓவியம் வரையப்பட்ட நோட்டும் இருந்தது..அதை எடுத்து புரட்டினார்..அது ஆனந்தி வரைந்து வைத்த ஓவியங்கள்...மான், மயில், கொக்கு, காகம் என்று ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு ஓவியம்..இறுதியாக ஒரு பக்கத்தில் இருந்த அந்த ஓவியத்தை பார்த்த சொக்கநாதன் கண்கள் கலங்கினார்..விழி நீர் வெள்ளமென அணை உடைத்தது..

அந்த ஓவியத்தில், அம்மாவும் ,அப்பாவும் நடுவில் நின்று கொண்டிருக்க,அம்மாவின் வலது புறம் ஆண் குழந்தையும் அவனின் வலது புறம் முடி வெளுத்த பாட்டியும் இருக்க, அப்பாவுக்கு இடது புறம் பெண் குழந்தையும் அவளின் இடது புறம் முடியுடன் முறுக்கு மீசையும் வெளுத்த தாத்தாவும் இருந்தனர்..அந்த ஓவியத்தை நெஞ்சோடு அணைத்தபடி வெடித்து அழுதார் சொக்கநாதன்..

அழுது கொண்டிருந்த சொக்கநாதனின் நினைவுகளை தட்டியது, அன்று I.C.U வார்டில் இருந்த போது அங்கிருந்த செவிலிப் பெண்கள் பேசிய வார்த்தைகள்...

ஆப்பரேஷன் முடிந்து I.C.U வார்டுக்கு வந்த சொக்கநாதன் கண்விழித்து பார்த்த போது அருகில் எவரும் இல்லை..தூரத்தில் இரு செவிலி பெண்களின் உருவம் மட்டும் மங்கலாக தெரிந்தது..மாட்டின் கொம்பு குத்தி கிழித்த வயிற்றில் போட்டிருந்த தையல் வெகுவாக வலித்தது..வலியினூடே அந்த செவிலி பெண்களின் பேச்சுக்கு காது கொடுத்தார் சொக்கநாதன்..

அப்போது அங்கு இருந்த செவிலி பெண்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டது மிகத்தெளிவாக சொக்கநாதரின் காதுகளில் விழுந்தது..

பெண்களில் ஒருத்தி சொன்னாள் யாருடி, எட்டாம் நம்பர் பெட்டில் புதுசா வந்திருக்கிற பேஷண்ட்..........

வாடி,.. இப்போதான் வந்தியா?........

ஆமாண்டி கொஞ்சம் லேட் ஆயிடுச்சி........

எட்டாம் நம்பர் பெட்டா??...அவரு காட்டூர் கோயில் தர்மகர்த்தாவாம்..இன்னைக்கு தேதிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரராம்..ரொம்ப வீம்பு பிடிச்ச மனுஷன் போலிருக்கு..மனுஷனுக்கு ஒரே புள்ளையாம்..பையன் ஜாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டதால பையனை ஒதுக்கி வச்சிருக்காராம்... ஆனால் எவ்வளவு சொத்து இருந்து என்ன பண்ண?..வீம்பு இருந்து என்ன பண்ண?..இப்போ சாவுக்கு போராடும்போது அந்த சொத்து வந்து காப்பாத்திச்சா?... இல்ல,;அவரோட வீம்புதான் காப்பாத்திச்சா? அவரு எந்த மருமகளை கீழ்ஜாதின்னு ஒதுக்கி வச்சாரோ அந்த மருமகள் ரத்தம் கொடுத்துதான் மனுஷன் உயிர் பிழைச்சிருக்காரு..............என்று சொன்னாள் அடுத்தவள்..

என்னடி பெரிய பணம், காசு, ஆணவம்,சாதி, மதம் ....கஷ்டத்தில் இருக்கிற சக மனுஷனுக்கு கை கொடுக்குறவங்க தான் மேல்ஜாதி,...இந்த விஷயம் கூட தெரியாம, மனுஷன் வாழ்க்கையை தன்னோட வெட்டி வீம்பால கெடுத்துக்கிறான், பார்த்தியா?.............சொல்லி பெருமூச்சு விட்டாள் அந்த முதல் செவிலி பெண்..

அவளின் பேச்சை கேட்ட சொக்க நாதனின் கண்களில் நீர்க்கோடுகள் உருவாகின...அந்த நீர்க் கோடுகள் இன்னும் அழியவில்லை..

இதோ மாறனின் அறையின் ஓவியத்தை நெஞ்சோடு அணைத்தபடி நின்றிருக்கும் சொக்கநாதனின் கண்களில், மூன்று வருடங்களுக்கு பிறகும் நிற்காது வழிந்து கொண்டிருக்கின்றன அதே நீர்க் கோடுகள்...

ஆனால் அவரின் இந்த நீர்க்கோடுகளை புரிந்து கொள்ள, அவரருகில் எவரும் இல்லை என்பதுதான் கொடுமை..

~~~~~~~~~~~~~~~~

இன்னும் சில நாட்கள் கழிந்து விட தீபாவளிக்கு இன்னும் மூன்று தினங்களே இருந்தன..

இப்போது சொக்கநாதன் வீட்டுக்கு வரும் சமயம் என்பதை அறிந்த அன்னம், புழக்கடையில் போய் நின்று கொண்டாள்.. கீழ்ஜாதிக்காரர்கள் என்று சொக்கநாதன் ஒதுக்கி வைத்திருக்கும் மனிதர்கள் புழங்கும் இடம் என்பதால் பெரும்பாலும் அவர் புழக்கடைப்பக்கம் வருவதில்லை..அதனால் அன்னம் அவர் வரும் சமயங்களில் இங்கு வந்து விடுவது, கடந்த ஒரு வருடமாக வழக்கமாகி போனது..

கோழிகளுக்கு இரை போட்டு விட்டு அவைகள் இரை கொத்தி தின்னும் அழகை அமைதியாக ரசித்து கொண்டிருந்த அன்னம்,

,அன்னம்,..........என்ற சொக்கநாதர் குரல் கேட்டு அவரின் திசை திரும்பாமல், தான் பார்த்து நின்ற திசையிலேயே நடக்க ஆரம்பித்தாள்...

அன்னம்,..நான் பெங்களூர் போறேன்............சொக்க நாதன் சொல்ல சட்டென்று திரும்பினாள் அன்னம்..

ஆமா...நான் என் புள்ளைய பார்க்க பெங்களூர் போறேன் அன்னம்................மிக மெல்லிய குரலில் சொன்னார் சொக்க நாதன்..

ஏன் என் புள்ள இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உயிரோட இருக்கிறது கூட உங்களுக்கு பிடிக்கலையா?............என்று வெடித்த அன்னம்,

உங்களை கும்பிட்டு கேட்டுக்குறேன்...என் புள்ளைய விட்டுருங்க...அவனை உசுரோட வாழ விடுங்க..இப்போ நான் ஏதோ உசிரோடவாது சுத்திக்கிட்டு இருக்கேன்..நீங்க ஊரை விட்டு வெளியே போனீக, நான் என் உசுரையே விட்டுருவேன்..........மூன்று வருடங்களுக்கு பிறகு பேசினாள் அன்னம்..அவளின் வார்த்தைகளில் இருந்த கோபம் வலித்தாலும், மூன்று வருடங்களுக்கு பிறகு தன் மனைவியின் குரல் கேட்டு உள்ளூற சந்தோஷம் கொண்டார் சொக்கநாதன்..

இல்ல அன்னம்..நான் தப்பு பண்ணிட்டேன்...ஏதோ ஒரு கோபம் கண்ணை மறைக்க, நான் அப்படி நடந்துகிட்டேன்..நான் மாறிட்டேன் அன்னம்..ஒரே ஒரு தடவை என் மருமொவளை பார்த்து அவகிட்ட மன்னிப்பு கேட்டா போதும்...அதுக்குதேன் பெங்களூர் போறேன்.................தாழ்ந்த குரலில் சொக்க நாதன் சொல்ல,

இல்ல, பொய் சொல்றீக..ஏதேதோ பொய் சொல்லி என் புள்ளைய கொல்ல திட்டம் போடுறீகளா?..நான் விடமாட்டேன்..நான் உசுரோட இருக்கிற வரைக்கும் என் புள்ளைய தொட கூட உங்களை விடமாட்டேன்..............பயந்து பதறினாலும் கோபம் குறையாமல் பேசினாள் அன்னம்...

இல்ல அன்னம் நான் உண்மையாதேன் சொல்றேன்..எனக்கு இந்த ஊர் வேணாம்..இந்த வீடு, சொத்து எதுவும் வேணாம்..என் புள்ளைய கொல்ல ஆயுதம் தூக்க வச்ச இந்த கொலைகார சாதியும் வேணாம்.. நான் செத்த பொறவு என் மொவன் அவன் கையால என் உடம்புக்கு வைக்கிற நெருப்பு வேணும்,..என் பேரன் என் சாவுக்கு நெய் பந்தம் பிடிக்கணும்... சாவுற காலத்துல என் பொஞ்சாதி பேசுற ஆறுதல் வார்த்தை வேணும்..போதும் அன்னம்...இதுக்கு மேல என்னை தண்டிக்காதே...............என்றவர் அன்னத்தை கை கூப்பி நின்றார்...அவரின் பேச்சை கேட்டு அதிர்ந்தாள் அன்னம்..என்றாலும் நம்ப மனம் வரவில்லை...

இல்ல, நம்ப மாட்டேன்,.. நடிக்குறீக..............என்றாள்..

என்னை நம்பு அன்னம்..........என்று கூறியவர் கண்ணீர் மல்க மனைவியின் காலில் விழ, சட்டென பதறி பின்னால் விலகினாள் அன்னம்...

அய்யோ என்ன பண்றீக???.எழுந்திருங்க............. என்றவள் பதறி உடனே குனிந்து தன் கணவனை தூக்கி நிறுத்தினாள்...

அவரின் முகம் பார்த்த அன்னத்தின் கண்கள் நீரை கொட்டின..தன் மகனுக்காகவும், மனைவிக்காகவும் ஏங்கி தவித்த சொக்க நாதனும் அழுது கரை சேர்ந்தார்.....புத்திர பாசம் வென்றது...

தொடரும்.......
சாதியை கொன்று தீர்த்த
புத்திர பாசம்......


முதுமையில் மனைவி
மொழியில் பெறும்
ஆறுதலை
தருமா சாதி???

தள்ளாடும் வயதில்
தன்னை தாங்கும்
தன் தலைமகன்
தரும் தைரியத்தை
தருமா சாதி????

சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை
 
Top