• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺2

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
பெங்களூர்,
அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் தன் வீட்டு சமையலறையில் டைனிங் டேபிளில் அமர்ந்து வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தான் இளமாறன்..

ரெண்டு வெங்காயம் வெட்டுறதுக்கு இவ்வளவு நேரமா?..கொடுங்க...........என்றபடி அவன் வெட்டி வைத்த வெங்காயத்தை வாங்கி அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் கொட்டி கிளறினாள் எழிலரசி...அவளை பின்னால் சென்று கட்டிக் கொண்டான் இளமாறன்..

இப்போ என்ன வேணும் என் மாறனுக்கு..........கேட்டாள் எழில்..

என் செல்ல எழில் கையால ஒரு கிளாஸ் காஃபி.........சொன்னான் அவன்..

சட்டென அவனை விலக்கி விட்டவள்,
"அந்த ஃப்ளாஸ்க்ல இருக்கு, எடுத்து குடிங்க",...........என்றாள்..சோகமான முகத்துடன் அவன் கிளாசை எடுத்து வைக்க,
"உடனே முகத்தை ஏன் இப்படி வச்சுக்குறீங்க..விலகுங்க",......... என்றவள் தன் கையால் அவனுக்கு காஃபி ஊற்றி கொடுத்தாள்..இன்னும் மாறனின் முகம் மலர்வதாய் இல்லை..

என்ன பிரச்சினை?..முகம் ஏன் இப்படி இருக்கு?...........அதிகாரமாக கேட்டாள் அவள்..

இப்போலாம் நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்கிற எழில்..என்கூட டைம் ஸ்பெண்ட் பன்றதே இல்ல...........என்று வருந்தினான் மாறன்..

தலையில் அடித்துக் கொண்டாள்..
ஆரம்பிச்சுட்டீங்களா?...இன்னும் அரை மணி நேரத்தில ஸ்கூல் வேன் வந்துடும்..அதுக்குள்ள நான் சமைச்சி முடிக்க வேணாமா?..உங்களை கொஞ்சிகிட்டே இருந்தா பசங்களை யாரு ரெடி பண்றது.............என்று எழில் கேட்க,

பசங்க இன்னும் ரெடி ஆகலியா?........கேட்டான் மாறன்..

ரெண்டு பேரையும் எழுப்பி குளிக்க சொல்லிட்டு வந்தேன்..என்ன பண்றாங்கன்னு போய் பாருங்க......என்றாள் எழில்..

கையில் காஃபியுடன் மாறன் பிள்ளைகளின் அறைக்கு சென்று பார்க்க,
ஒரு ஸ்கூல் யூனிஃபார்ம் சட்டையை மாறனின் இளங்கொழுந்துகள் இருவரும் அவரவர் திசையில் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்( கயிறு இழுப்பது போல்)..

ஏய் ஆனந்தி, விடுடி இது என் யூனிஃபார்ம்..........என்றான் அந்த சிறுவன், இளமாறன், எழிலரசியின் மூத்த மகன்..

உனக்கு கண்ணு தெரியாதாடா..உன் யூனிஃபார்ம் அங்கே இருக்கு..இது என்னோடது..விடுடா அமுக்குணி........என்றாள் அந்த சிறுமி, இளமாறன், எழிலரசியின் இளைய மகள்..

ஏய், என் பேரு அமுதன்,..இன்னொரு தடவை அமுக்கினின்னு சொன்ன, கொன்னுடுவேன்...........என்றான் அமுதன்..

டேய் டேய் டேய், விடுடா என்று ஓடி வந்த மாறன், குழந்தைகளின் கையில் இருந்த சட்டையை பறித்து அதன் அளவுக்குறியீட்டு எண்ணை (size) பார்த்து,
டேய் அமுதன், இது தங்கச்சியோட சட்டைடா...........என்று சொல்ல,
ஆனந்தி அமுதனை பார்த்து அழகுக் காட்டினாள்..ஆனந்தியின் முடியை பிடித்து இழுத்தான் அமுதன்...அழுதாள் ஆனந்தி..அமுதனின் கையில் லேசாக தட்டி, தன் ஆனந்த மகளை கையில் அள்ளிக் கொண்டான் மாறன்...

பின் இரு பிள்ளைகளையும் சமாதானம் செய்து பள்ளிக்கு செல்ல தயார் செய்தான்..அதற்குள் சமையலை முடித்து பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு புத்தகப்பை, சாப்பாட்டுப்பை இவற்றையும் எழிலரசி தயார் செய்து முடிக்கும் முன் பள்ளி வாகனமும் வந்து நின்றது..வேக வேகமாக குழந்தைகளை வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டிற்குள் வந்த தன் இல்லாளை இடைவளைத்து தன்வசம் இழுத்துக் கொண்டான் மாறன்..

இப்போ என்ன வேணும் மாறனுக்கு.......கேட்டாள்..

பசங்க ஸ்கூல் போயாச்சி..இனி எழில் மாறனை கொஞ்சலாமே.........குறும்பான புன்னகையுடன் சொன்னான்..

ம்ம்..இன்னும் அரை மணி நேரத்துல மாறன் ஆஃபீஸ்ல இருக்கணும்..எழில் காலேஜ்ல இருக்கணும்..கொஞ்சிகிட்டே இருந்தா எப்படி புறப்படுறது.............எழில்..
எழில் கல்லூரி ஆங்கில பேராசிரியை..

லீவ் போட்டுறலாமா, சினிமாவுக்கு போகலாம்........சொன்னான் மாறன்..

"அய்யோ........லாஸ் ஆஃப் பே ஆயிடும்..அடுத்த மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்..ஞாபகம் இருக்குல்ல,.....கிளம்புங்க",........... என்று அவள் சொல்ல, இருவரும் வேகவேகமாக கிளம்பி வெளியேற, அவன் வாயில் கதவை திறக்கும் போது, அவனின் கைபிடித்து நிறுத்தினாள் எழில்..

என்ன என்பது போல் பார்த்தான் அவன்..

"ஈவினிங் சீக்கிரம் வந்து, சீக்கிரம் சமையல் முடிச்சி, பசங்களை தூங்க வச்சிடுறேன்..ரொம்ப நேரம் பேசலாம்..ஓகேவா",..........என்று அவள் கூற, சூரிய பிழம்பாய் முகம் மலர்ந்தான் மாறன்..அவனின் கன்னம் கிள்ளி,
ஐ லவ் யூ மாறா.......என்று அவள் சொல்ல,
அவள் நெற்றியில் முத்தமிட்டு,
ஐ லவ் யூ எழில்.......என்றான் அவன்..இருவரும் வேகமாக தத்தம் அலுவலகத்திற்கு கிளம்பினர்...

மாலை கூறியது போல் சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தாள் எழில்...குழந்தைகளை படிக்க வைத்து, சாப்பிட வைத்து தூங்க வைத்தாள்...இரவு மாறன் வீட்டுக்கு வரும் வேளையில் மாறனிடம் இருந்து வந்தது ஃபோன் கால்...அழைப்பை பார்த்ததும் புரிந்து கொண்டாள் எழில்,

போனை எடுத்து காதில் வைத்தவள்,
என்ன இன்னிக்கும் ஒ.டியா?........என்று கேட்க,

சாரி எழில், டுவெல்லோ கிளாக் வந்துடுவேன்.........என்றான் மாறன்..

ஓகே...பைக் ஓட்டும் போது கவனமா இருக்கணும்.............என்று எழில் கூற,

ஓகே..மை டியர்.......என்று கூறி போனை வைத்தான் மாறன்...

தனிமை எழிலின் மனதை காலம் கடந்து இழுத்துச் சென்றது...

இளமாறன்.......இவனை அவள் சந்தித்த முதல்நாள் எது?...நினைவு கூர்ந்தது எழிலின் இதயம்...

எழிலரசியும் இளமாறனும் ஒரே பள்ளியில் படித்தார்கள்...மாறன் எழிலை விட மூன்று வயது பெரியவன்..எழில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில் மாறனுடன் ஒன்றாக கலைநிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டபோது உருவான நட்பு...அன்று அது நட்புதான்...தொடர்ந்தது நட்பு..அந்த நட்பு மாறனின் மனதில் எந்த புள்ளியில் காதலாக மலர்ந்தது என்பது இன்றும் எழிலுக்கு விடை தெரியாத கேள்வி...

பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் பி.பி.ஏ சேர்ந்தவன், அடிக்கடி எழிலை பார்க்க வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்..பள்ளிக்கும், விடுமுறை நாட்களில் எழிலின் தந்தை வைத்திருக்கும் ஆட்டுப்ப்பட்டிக்கும் மாறன் அவளை காண வருவதுண்டு..வரும்போதெல்லாம் அவளுடைய படிப்பைதான் விசாரிப்பான்...
"நல்லா படிக்கணும் எழிலு...நீ படிச்சி உன்னை சேர்ந்தவங்களுக்கு உதாரணமாக இருக்கணும்",.....என்பதே பெரும்பாலும் அவளிடம் அவன் பேசும் வார்த்தைகள்..எழிலும் மாறன் தன்னிடம் நட்பை வெளிப்படுத்துவதாகவே எண்ணியிருந்தாள்..

பள்ளிப் படிப்பை முடித்த எழிலுக்கு அரசு வழங்கிய மெரிட் ஸ்காலர்ஷிப் மூலம் சென்னை அரசு கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம்(english literature) படிப்புக்கு இடம் கிடைக்க, விடுதியில் தங்கி படிக்க தயாரானாள்..எத்தனையோ பெரிய கல்லூரிகளில் படிக்க வாய்ப்பும் வசதியும் இருந்தும் எழிலரசி சேர்ந்த அரசு கல்லூரியில் மாறனும் வந்து சேர்ந்தது தனக்காகத்தான் என்று அவள் அப்போது அறியவில்லை..

திடீரென்று ஓர்நாள் தன் காதலை அவன் வெளிப்படுத்த, அதிர்ச்சியில் நடுநடுங்கி போனாள் கன்னிப்பாவை..அவனுக்கும் அவளுக்கும் இடையேயான அந்தஸ்து வேறுபாட்டை கூறி அவனின் காதலை தட்டிக் கழித்தாள்...அவன் விடுவதாயில்லை...

உன் மனசு என் மேல அளவுகடந்த அன்பு வச்சிருக்கு..நான் உன்கிட்ட கேக்குறது அந்த அன்பான மனசை மட்டும்தான்...நடுவில இந்த சமுதாய பிரிவினைக்கெல்லாம் வேலை இல்லை............என்று மாறன் கூறிய போது,

உங்க மேல எனக்கு எந்த அன்பும் இல்லை.........என்று எழிலின் வாய் உதிர்த்த வார்த்தைகள், பொய்யானவை என்பதை உடனே அவளுக்கு புரிய வைத்தான் மாறன்..

மாறன் கைநரம்பை கத்தியால் அறுத்துக் கொண்ட போது, அவனை விட அதிக வேதனை அடைந்தது எழில்தான்..பதறி துடித்து, உடன் இருந்த நண்பனுடன் மருத்துவமனை செல்ல வற்புறுத்திய போது,

"நீயும் என்னை காதலிக்கிற எழில்..அதை உன் வாயால சொல்ற வரைக்கும் நான் இங்கேயிருந்து எங்கும் வரமாட்டேன்",.........என்று கூறி அந்த ஆள் நடமாட்டம் இல்லாத பீச்சின் சிமெண்ட் பெஞ்சில், கையில் ரத்தம் வழிய அந்த பிடிவாதக்காரன் அமர்ந்திருந்த போது, கண்களில் குளம் பொங்க, நடுநடுங்கி போனாள் எழில்..உடன் இருந்த நண்பனின் பேச்சையும் கேட்க மறுத்துவிட்டான் மாறன்..இறுதியாக அவனை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்ற துடித்துடிப்பில்,

"நானும் உங்களை லவ் பண்றேன்.. ஐ லவ் யூ...இப்போ ஹாஸ்பிட்டலுக்கு போங்க பிளீஸ்",......என்ற வார்த்தைகளை உதிர்த்த பிறகே சிகிச்சை செய்து கொண்டான் மாறன்..

அதன் பிறகு அவனை சந்திக்கும் சந்தர்ப்பங்களை எழில் தவிர்ப்பதும் அவளை விரட்டி தேடி மாறன் சந்திப்பதும் தொடர்ந்தது..இடியையும் தாங்கி எதிர்த்து நிற்கும் இதயம் கூட அன்பெனும் ஆயுதம் கொண்டு தாக்கினால் தகர்ந்து விடும்..மாறன் எழிலை வீழ்த்த பயன்படுத்துவதும் அதே ஆயுதத்தை தான்..

"உன் உயிர் காக்க மட்டுமே ஐ லவ் யூ என்ற பதத்தை உதிர்த்தேன்",........என்ற வார்த்தைகளை சொல்ல முயற்சித்து பலமுறை தோற்று போனாள் எழில்..இல்லை தன் அன்பால் தோற்கடித்தான் மாறன்..இருவரின் கல்லூரி படிப்பும் வெற்றிகரமாக முடிந்த பிறகும் எழிலை தேடிவந்து சந்திப்பதை மாறன் நிறுத்தவில்லை..

அன்று பரந்து விரிந்த ஆட்டுமந்தைக்கு நடுவே, மாறன் தன்னை சந்தித்ததை நினைவு கூர்ந்தது கைப்பிடிக்குள் அடங்கிவிடும் எழிலின் சின்னஞ்சிறு இதயம்..

அன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அந்த மாமரத்து நிழலில் அமர்ந்து, அப்துல் கலாமின் அக்கினி சிறகுகள் புத்தகத்தின் ஆங்கில பதிப்பாக்கத்தை (wings of fire) படித்துக் கொண்டிருந்தாள் எழிலரசி..அப்போது தூரத்தில் மாறன் வருவது தெரிந்ததும் மரத்தின் பின்னால் சென்று மறைந்து கொண்டாள்...அவன் தன்னை தேடித்தான் வருகிறான் என்பதை அவள் அறியாமல் இல்லை..

ஆடுகளை பார்த்து அவள் இவ்விடம் தான் எங்கோ இருக்க வேண்டும் என்பதை கணித்து அவளை தேடி வந்த மாறன், கண்களை சுழலவிட்டு நாற்புறமும் அவளை தேடினான்..தேடி அலைந்தவனின் கண்களில் பட்டது அக்கினி சிறகுகள்..

மரத்தின் பின்னால் இருந்து வெளியே தலைநீட்டியது எழிலின் தாவணி கீற்று..அவளின் தாவணி வாசத்தின் தடம் பார்த்து அவள் அருகில் மாறன் செல்ல, திடுக்கிட்டாள் எழில்...

ஏய்..என்னை பார்த்ததும் ஏன் மறைஞ்சிகிட்ட?.............மாறன்..

நான் எத்தனை தடவை சொல்றது..என்னை பார்க்க வராதீங்கன்னு.....இப்போ எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க...........எழில்..

புருஷன் பொண்டாட்டியை தேடி எதுக்கு வருவான்?..எல்லாம் அவமேல் இருக்கிற பாசம்தான்.............குறும்புடன் சொன்னான் மாறன்..

பொண்டாட்டியா?..ஏது?...ஊரறிய தாலி கட்டுன மாதிரில்ல பேசுறீங்க.............நிதர்சனத்தை புரியவைக்க முயற்சி செய்தாள் எழில்..

நான் என்ன கட்ட மாட்டேன்னா சொல்றேன்?..நீதான் என்கூட வரமாட்டேன்னு அடம்பிடிக்குற..இப்போ ஓகே சொல்லு...நம்ம ஊர் கோயில்ல வச்சி தாலி கட்டுறேன்..எவன் வந்து தடுக்குறான்னு பார்க்கிறேன்..............வீர வசனம் பேசினான் மாறன்..

ஆத்தீ.....ஊருக்குள்ள கலவரத்தை உருவாக்காம விட மாட்டீங்க போல் இருக்கே..நாம இப்படி பேசிட்டு இருக்கிறதை எங்க அப்பன் பார்த்தா என்னை வெட்டி இந்த மரத்துக்கு உரமா போட்டுருவாக.............பயத்தில் மிரண்டாள் எழில்..

ஓஹோ...அம்புட்டு தைரியம் இருக்கா உங்க அப்பனுக்கு..என்னை மீறி என் பொண்டாட்டிய வெட்டிப்புடுவாரோ.. நான் உசுரோட இருக்கிற வரைக்கும் உன் உசுரை எவனும் தொடமுடியாது எழில்...ஏன்னா உன் உசுரை என் உசுருக்குள்ள பூட்டி வச்சிருக்கேன்",.................."பாதுகாக்க நானிருக்கிறேன்" என்று தைரியம் கொடுக்க முயற்சித்தான் அவன்..

எங்க அப்பனை விடுங்க..ஊருக்குள்ள சமாச்சாரம் தெரிஞ்சா எங்க குடும்பமே இந்த ஊர்ல வாழமுடியாது..உங்க சாதி பெரிய மனுசங்களுக்கு தெரிஞ்சா எங்களை வீட்டோட வச்சி கொளுத்திப்புடுவாக..................சாதி செய்யும் சதிகளை விவரித்தாள் அவள்..

ஏய் நாம என்ன தேச துரோகமா செய்யுறோம்...காதல் ஒண்ணும் தேசிய குத்தமில்ல..ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறதுக்கு உண்மையான பாசம்தான் வேணும்...இதுல சாதி எங்கேயிருந்து வருது..எழிலு,....... சாதிங்கிறது வெறும் அடையாளம்...என்னய கட்டிக்கிட்ட பிறகும் உனக்கு ஆடு மேய்க்க பிடிச்சா நீ அதையே செய்....உன் சாதி பழக்கம்தான் உனக்கு பிடிக்கும்ன்னா அப்படியே இரு..எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருப்பேன்..ஆனா நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுவோம்..நமக்குள்ள அழகான காதல் இருக்கும்................மனிதம் கொண்ட வாழ்வின் தத்துவம் சொன்னான் மாறன்..

கோயில் தர்மகர்த்தா சொக்கநாதன் புள்ள மாதிரியா பேசுறீக?..ஏதோ புரட்சிக்காரன் மாதிரியில்ல பேசுறீக...............சலித்துக் கொண்டாள் எழில்..

மனுஷன் மனுஷனா வாழணும்ன்னு நினைக்கிறதுக்கு பேரு புரட்சியா?..........உண்மையின் தத்துவம் கூறி அவளின் வாயடைத்தான் மாறன்....

எழிலின் நினைவுகள்
எழிலாய் ஆரம்பித்து
தீப்பொறியாய் தொடரும்......

சக்தி......