• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺 7

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
மாறனின் வீட்டில், ராஜவேலு, மாறன் மற்றும் எழில் முன் அமர்ந்திருந்தான்..சூழ்நிலை தெரியாத குழந்தைகள் சந்தோஷமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்..

என்ன அண்ணே நான் இம்புட்டு சொல்லிட்டு இருக்கேன்..நீங்க இன்னும் யோசிச்சிட்டு இருக்கீக..அங்க பெரியாத்தா உங்களை நினைச்சி ஏங்கி படுத்த படுக்கையாக இருக்காக..நான் இன்னும் ரெண்டு நாள்ல தீபாவளி லீவுக்கு ஊருக்கு போறேன்..உங்களுக்கு, அண்ணிக்கு, பிள்ளைகளுக்கு எல்லாம் சேர்த்து டிக்கட் போட்றவா..........கேட்டான் வேலு..
அமைதியாகவே இருந்தான் மாறன்..

இப்படியே அமைதியா இருந்தா எப்படிண்ணே............ வேலு..

நான் இப்போ ஊருக்கு வந்தா எங்க அப்பாவை சமாளிக்கிறது யாருலே?...அவுக தாம் தூம்ன்னுல கிடந்து குதிப்பாக................மாறன் சொல்ல,

நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல அண்ணே..பெரியப்பா இப்போ ரொம்ப மாறிட்டாக.............என்றான் வேலு..

ஏலேய், எனக்கு ஊர்ல என்ன நடக்குதுன்னு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?..போன வாரம் அரசன்கோயில் பஞ்சாயத்துல கூட என் பையன் செத்து பத்து வருஷம் ஆச்சுன்னு சொல்லியிருக்காக..............என்று மாறன் சொன்னதுதான் தாமதம், நெஞ்சில் கைவைத்து எழில் இழுத்து விட்ட ஏக்க மூச்சு இருவர் காதிலும் புயல் ஒலியாய் ஒலித்தது.. மாறனும் வேலுவும் எழில் முகம் பார்க்க, அவள் கண்கள் கண்ணீரை தத்தெடுத்து இருந்தன..

உங்களுக்கு எப்படி அண்ணே தெரியும்...........கேட்டான் வேலு..

நட்புக்கும் ஜாதி கிடையாதுலே.......சொன்னான் மாறன்..

பெரியாத்தாவை பத்தி நினைச்சி பாருங்க அண்ணே........... வேலு சொல்ல, முகம் சற்றே வாடி போனது மாறனுக்கு...

டிக்கட் போட்டுடவா அண்ணே........ வேலு கேட்க,

முதல்ல புவனாவுக்கு ஃபோனை போடு...............சொன்னான் மாறன்..

எதுக்குண்ணே.........

போடுறா.........மாறன் சொல்ல புவனாவுக்கு ஃபோன் செய்து, மாறன் கையில் கொடுத்தான் வேலு..

அண்ணே.........புவனா அழைக்க,

புவனா........நான் மாறன்..எனக்கு அம்மாவை பார்க்கணும்.............சொன்னான் மாறன்..

அவ்வளவு தானே உடனே கிளம்பி ஊருக்கு வந்துடுங்க அண்ணா........சொன்னாள் புவனா..

என்ன கிண்டலா?..எங்க வீட்டுக்கு போய் வீடியோ கால் போட்டு அம்மாட்ட கொடு..நான் பேசணும்..............மாறன் சொல்ல,

ஏன் அண்ணா, எங்க பேச்சில நம்பிக்கை இல்லையா.. நேரில் பார்த்தா தான் நம்புவீங்களா..........புவனா கேட்டாள்..

ஆமா, நம்பிக்கை இல்லை.........மாறன் சொல்ல, அதிர்ந்தாள் புவனா..

இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணா..எங்க மேல நம்பிக்கை இல்லை, சரி... பெரியாத்தா மேல கூடவா நம்பிக்கை இல்லை.............புவனா கேட்டாள்..

எங்க அம்மா அப்பாவிதான்..ஆனா இப்போ அவக உங்க பாட்டி கூட இல்ல சேர்ந்திருக்காக........மாறன் சொன்னதுதான் தாமதம், புவனா கையில் இருந்த ஃபோனை பறித்தாள் பாட்டி...

ஏலேய், உங்க அம்மா என்ன வாயில விரலை வச்சா கடிக்க தெரியாத பச்ச புள்ளையா?..அவளை நாங்க கெடுத்துபுட்டோமோ..இந்தேரு என்னய வம்புக்கு இழுக்குற சோலி வச்சிகிடாதே சொல்லிபுட்டேன், ஆமா............... பொறிந்து தள்ளினாள் பாட்டி..

திருதிருவென விழித்தான் மாறன்...

இந்தாடி புவனா, போடி, இந்த ஃபோனை கொண்டு போய், அந்த ஆளை நேரில் காட்டுற காலை போட்டு, உங்க அண்ணனுக்கு அவன் ஆத்தாளை காட்டு (வீடியோ காலை தான் பாட்டி அவங்க ஸ்டைல்ல சொல்றாங்க)...........சொல்லி ஃபோனை புவனா கையில் கொடுத்து சென்றாள் பாட்டி..

~~~~~~~~~~~~~~~~~~

சொக்கநாதன் வீட்டிற்குள் புவனா நுழையும் போது, உள்ளிருந்து வெளியே வந்தாள் ராஜேஸ்வரி..(கதையின் தொடக்க பகுதியில் வந்த கதாபாத்திரம்)

தன் சேலை முந்தானையில் எதையோ மறைத்து கொண்டு செல்ல முயன்ற, ராஜேஸ்வரி புவனாவை பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள்..

ராஜி மதனீ.............. ராகத்தோடு அழைத்தாள் புவனா..

அசடு வழிந்தாள் ராஜி.

மடியில என்ன திருடி கொண்டு போறீக?............கேட்டாள் புவனா..

திருடியா?.....ஏய் புவனா யாரை பார்த்து திருடின்னு சொன்ன?..இது எங்க மாமன் வீடு இங்கே இருந்து ஒரு பிடி அரிசி எடுத்தா அதுக்கு பேரு திருட்டா?...................குரல் உயர்த்தினாள் ராஜி..

ம்ம்..நீங்க எடுத்துட்டு போறது உங்க மாமனுக்கு தெரியுமா?..அவுக கிட்ட சொல்லிட்டீகளா?..........புவனா கேட்க,

இந்தா, என் மாமன் வீட்ல சொல்லிட்டுதேன் எடுக்கணும்ன்னு இல்ல...இங்கே எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.............சொல்லிய ராஜி புவனாவை இடித்து தள்ளிக் கொண்டு சென்றாள்..அப்போது வெளியே இருந்து உள்ளே வந்தாள் அந்த வீட்டின் சமையல்கார அம்மா கெளரி..

என்ன கெளரி அக்கா, இந்த ராஜி வீட்டுக்குள்ள புகுந்து , இஷ்டத்துக்கு கையில் கிடைச்சதை எடுத்துட்டு போகுது............புவனா கேட்க,

என்னை என்னம்மா செய்ய சொல்ற..நான் சாதாரண சமையல்காரி..அவகிட்ட கேட்டா இது என் மாமன் வீடு, நீ உன் சோலியை பாருன்னு சொல்லுவா..அவுக சொந்தக்காரவுக..நான் இதுல தலையிட முடியுமா...........சலித்துக் கொண்டாள் கெளரி..

சரி பெரியாத்தா சாப்பிட்டுச்சா?.............புவனா..

எங்கே?... படுத்த படுக்கையாக கிடக்கு..இனிதேன் எழுப்பி ஏதாச்சும் கொடுக்கணும்... சரிக்கா, நீங்க சாப்பாடு எடுத்துட்டு வாங்க..நான் பெரியாத்தாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு சேலை மாத்திடுறேன்.............புவனா சொல்ல தட்டில் இரண்டு இட்லிகளை வைத்து புவனாவிடம் கொடுத்தாள் கெளரி..

இட்லியுடன் அன்னம் படுத்திருந்த அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் புவனா..

பெரியாத்தா.....எழுந்திரி பெரியாத்தா...கதவை பூட்டியாச்சி...........என்று புவனா சொன்னதும், தன் இரு கைகளால் இடுப்பை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள் அன்னம்..

படுத்தே கிடந்து இடுப்பெல்லாம் நோவுதுடி................மிக சோர்வான குரலில் சொன்னாள் அன்னம்..

ம்ம்...உன் புள்ளை வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை இருக்குல்ல..அப்போ இந்த இடுப்பு வலியை பொறுத்துக்க..............புவனா..

அடி போடி, அந்த பயலை பெத்து போடும் போது கூட இம்புட்டு வலிக்கலடி..............சொன்னாள் அன்னம்..

வயசாயிடுச்சில்ல பெரியாத்தா, அதான்....இந்த ராஜி வீட்டுக்குள்ள வரது போறதெல்லாம் உன் கண்ணுல படுதா இல்லையா..............

எல்லாம் கவனிச்சிட்டு தாண்டி இருக்கேன்..நான் செத்தேன்னு வை, இவ ஒருத்தியே என் வூட்டை கொள்ளையடிச்சிட்டு போயிருவா....................சொன்னாள் அன்னம்..

சரி, இந்தா பெரியாத்தா, இந்த இட்லியை சாப்பிடு, மாறன் அண்ணன் உன்கிட்ட வீடியோ கால் பேசணும்னு சொல்லிச்சு..சாப்பிட்டுட்டு பேசலாம்............என்று புவனா சொல்ல,

என் புள்ளை என்னை தேடுனானா?..இட்லி கிடக்குதுடி...முதல்ல ஃபோனை போடு..என் புள்ளைகிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு..............ஆசையோடு கேட்டாள் அன்னம்..

கொல்லப்பொறேன் உன்னய.....நீ மயக்கத்திலே கிடக்கிறன்னு அண்ணன் கிட்ட சொல்லியிருக்கோம்..நீயே எல்லாத்தையும் சொதப்பிருவ போலிருக்கு....................புவனா சொல்ல,

பாவம்டி என் புள்ளை...எனக்கு என்ன ஆச்சோன்னு பயந்துட்டு இருப்பான்.....................

இந்தா பெரியாத்தா உனக்கு மாறன் அண்ணன் வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை இருக்கா இல்லையா?............புவனா கேட்க,

இருக்கு..........பாவமாய் சொன்னாள் அன்னம்..

அப்படின்னா பெரியப்பாகிட்ட என்ன டிராமா பண்ணியோ அதை அப்படியே, மாறன் அண்ணன் முன்னால பண்ணு...இந்தேரு பெரியாத்தா, இப்போ நீ பண்ற பர்ஃபார்மன்ஸ்ல அண்ணன் பெங்களூரே வேண்டாம்னு அடுத்த வண்டியில இங்கே ஓடி வரணும்............புவனா சொன்னாள்..

சொல்லிட்ட இல்ல, இப்போ பாரு இந்த அன்னத்தோட திறமைய... போடுறி ஃபோனை...............உற்சாகமாய் சொன்னாள் அன்னம்..

மாறன் வீட்டில் டிப்பாயின் மேல் இருந்த ஃபோனையே பார்த்துக்கொண்டிருந்தனர் மாறனும் வேலுவும்..மாறன் முகத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தாள் எழில்.

ஃபோன் சிணுங்கியது...உடனே ஆன் செய்தான் மாறன்... எதிர்த்திரையில் புவனா அன்னத்தின் அருகே அமர்ந்திருந்தாள்..கண் மூடி படுத்திருந்த அன்னத்தை தன் தோளோடு தூக்கி உட்கார வைத்த புவனா,

பெரியாத்தா,.....இங்கே பாரு, மாறன் அண்ணன் உன்கிட்ட பேசணுமாம்..பாரு பெரியாத்தா...........என்று கூறினாள்..

தாயின் சோர்வான மங்கி போன முகத்தை பார்த்த மாறன் சற்றே தளர்ந்தான்..

அம்மா, அம்மா,..என்னை பாரும்மா,............என்ற மாறனின் குரல் கேட்ட அன்னம், லேசாக கண்விழித்தாள்..

மாறா.... எய்யா மாறா...வந்துட்டியாய்யா இந்த அம்மாவை பார்க்க வந்துட்டியா...மாறா.....அம்மாவை அனாதை பொணமாக்கிராதேய்யா.....உன் கையால எனக்கு கொள்ளி வச்சிரு சாமி.......மாறா, மாறா...................என்று சத்தமாக பேசியபடியே ஃபோனை பிடிக்க முயற்சித்து தோற்று போன அன்னம் மீண்டும் மயங்கி கட்டிலில் சரிந்தாள்..ஆஸ்கார் விருதுக்கு நடித்தாள் அன்னம்..

பிறகு, அன்னத்தின் நடிப்பை பார்த்து எழில் கூட பயந்து அழ தொடங்கிவிட்டால் என்றால் அன்னத்தின் நடிப்பு திறமைக்கு வேறு சாட்சி வேண்டுமா என்ன?..பாவம் வேலுதான் வந்த சிரிப்பை அடக்க படாத பாடு பட்டான்..

அம்மா...அம்மா.....என்னாச்சி புவனா..........உணர்ச்சி பெருக்கில் சத்தமிட்டான் மாறன்..

ஒண்ணும் இல்ல அண்ணா..இது வழக்கமாக நடக்கிறதுதான்...இன்னிக்கி உன்னை பார்த்துச்சில்ல..அதான் கொஞ்சம் எமோஷன் ஆயி மயங்கிடுச்சி............... அன்னத்துக்கு இணையாக நடித்தாள் புவனா..

முகம் வாடி சோர்ந்தே போனான் மாறன்..

அண்ணே டிக்கட் போட்டுறவா.......கேட்டான் வேலு..

இன்னிக்கி நைட் டிரெயினுக்கே டிக்கட் போட்டுடு.........சொன்னான் மாறன்..

நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் கூட முடியல அண்ணே..எனக்கு லீவு கிடைக்காது...........வேலு சொல்ல,

நான் மேனேஜ்மென்ட் கிட்ட பேசிக்குறேன்..நீ இன்னிக்கே டிக்கட்டை போடுடா..........சொன்னான் மாறன்..

ஓகே..........சொல்லி சந்தோஷமாக சென்றான் வேலு..

ஏய், புவனா நான் நாளைக்கு ஈவினிங் வந்துடுவேன்..அதுவரை அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ......... ஃபோனில் இருந்த புவனா விடம் சொன்னான் மாறன்..சந்தோஷமாக போனை கட் செய்தாள் புவனா..

சட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றாள் அன்னம்...அவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினாள் புவனா..

எங்கே போற பெரியாத்தா..........

என் புள்ள வர்றாண்டி..அவனுக்கு பிடிச்ச அதிரசம், சீடை எல்லாம் செய்யணும்..வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணனும்..பேர புள்ளைகளுக்கு விளையாட்டு சாமான் வாங்கணும்..இன்னைக்கே வெடைக்கோழியா பிடிச்சி போட்டாதானே நாளைக்கு புள்ளைங்க வந்தவுடனே குழம்பு வைக்க முடியும்..எல்லாம் கவனிக்க வேணாமா...............மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள் அன்னம்...

கொன்னே போட்டுருவேன்... வெடைக்கோழி அடிச்சி கொழம்பு வச்சி உம் மொவனுக்கு ஊத்துற வரைக்கும் பெரியப்பா பார்த்துட்டு சும்மா இருப்பாகளா?..............முக்கியமான கேள்வியை கேட்டாள் புவனா..

சட்டென படுக்கையில் அமர்ந்து விட்டாள் அன்னம்..

ஆமாடி, இதை நான் மறந்தே போயிட்டேனே..............

ம்ம்...அண்ணன் கிளம்பிடுச்சி....அதுக்குள்ள அடுத்த டிராமாவை போட்டு பெரியப்பனை மடக்கணும்..என்ன பண்ணனும்ன்னு ஞாபகம் இருக்குல்ல............கேட்டாள் புவனா..

அடியேய், என் புள்ள ஊர்ல இருந்து கிளம்பிட்டான்ல..இன்னிக்கி பாரு அந்த மனுஷனை என்ன பண்றேன்னு............சேலை முந்தானையை உதறி இடுப்பில் சொருகி கொண்டாள் அன்னம்..

அங்கு எழில் சமையல் அறையில் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்..அவளருகில் வந்து அவளை தன்புறம் திருப்பினான் மாறன்..தலை குனிந்து நின்றாள் எழில்..அவளின் நாடியில் கைவைத்து தன் முகத்தை பார்க்கும் படி செய்தான் மாறன்..அவள் கண்களில் இன்னும் நீர் நிற்கவில்லை..

இதுக்குதான் உன்கிட்ட நான் எதுவும் சொல்றதில்லை..எங்க அப்பா பத்து வருஷமா இப்படித்தான் சொல்லிட்டு இருக்காக..நான் என்ன செத்தா போயிட்டேன்.............மெல்லிய குரலில் மாறன் கேட்க,

இன்னும் அதிகமாக நீர் பெருகியது எழில் கண்களில்... விசும்ப ஆரம்பித்தாள்..

இங்கே பாரு, இப்படி அழுதுட்டு இருந்த, அப்புறம் எனக்கு கோபம் வந்துடும்..சொல்லிட்டேன்.........மிரட்டி அவளது அழுகையை கட்டுப்படுத்த முயன்றான் மாறன்..

எல்லாம் என்னாலதான்..நான் வளர்த்த ஆடுகள் செத்த அன்னிக்கே நானும் செத்துருக்கணும்..நான் உயிரோட இருக்கிறதால்தான் எல்லாருக்கும் கஷ்டம்...............எழில் சொல்லி முடிக்கும் முன் அவளை அடிக்க கை ஓங்கிய மாறன், ஓங்கிய கையை அந்தரத்தில் நிறுத்தி சொன்னான்,

என்ன பேச்சு பேசுற எழில், உன்னை இழக்குறதுக்குதான் நான் இம்புட்டு கஷ்டப்பட்டேனா..இனி இப்படி பேசுன அறைஞ்சிருவேன்........என்று..

நான் பேசுனா இம்புட்டு கோபப் படுறீங்க,..நீங்க மட்டும் அப்படி பேசலாமா............விசும்பலின் வழி கேட்டாள் எழில்..

அவள் முகம் பார்த்து நெகிழ்ச்சியுடன் சிரித்து,
அவளை தன் நெஞ்சோடு அணைத்து இறுக கட்டி கொண்டான் மாறன்.. தன் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருமாறு தன் இஷ்ட தெய்வத்தை மனதிற்குள் வேண்டியபடியே மாறனை தன் பலம் கொண்ட மட்டும் இறுக கட்டிக்கொண்டாள் எழில்..

~~~~~~~~~~~~~~~~

இரவு வேளை வீட்டுக்கு வந்தார் சொக்கநாதன்..இப்போதெல்லாம் வீட்டுக்கு வரவே பிடிப்பதில்லை அவருக்கு..ஒரே சூனியமாக காட்சியளிக்கிறது வீடு.

வீட்டிற்குள்ளே வந்தவர் அன்னம் படுத்திருந்த அறைக்கு சென்று பார்த்தார்..அன்னம் நிம்மதியாய் தூங்கி கொண்டிருந்தாள்...சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்..

சொக்கர் தானாகவே சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்..திடீரென்று ஹாலில் ஏதோ கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டது..வேகமாக எழுந்து ஓடி வந்தவர் அதிர்ந்து போனார்.. அலங்காரத்துக்கு வைக்கப்பட்டிருந்த பூஜாடி ஒன்று கீழே விழுந்து உடைந்திருந்தது..அன்னம் தடுமாறி வந்ததில் தட்டுப்பட்டு உடைந்திருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டார் சொக்கநாதன்..

அங்கே அன்னம் தனியாக நின்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்..
பயந்தே விட்டார் சொக்கநாதன்..அருகில் சென்று அன்னம் பேசுவதை கூர்ந்து கேட்டார்..

எய்யா..மாறா உனக்கு பிடிச்ச கோழிக் குழம்பு சாப்புடுய்யா........என்று கூறிக் கொண்டே எதிரில் யாரோ நிற்பது போல் , ஊட்டி விடுவது போல் சைகை செய்து கொண்டிருந்தாள் அன்னம்..

என்னய்யா இது? வயசு பையன் நல்லா சாப்பிட வேண்டாமா?..சாப்பிடு ராசா..............சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள் அன்னம்..இதில் முந்தானையால் எதிரில் நிற்பவன் முகத்தை துடைப்பத்தை போல் சைகை செய்தது தான் நடிப்பின் உச்சம்..

அந்நேரம் சரியாக போட்ட திட்டப்படி வீட்டுக்குள் வந்தாள் மாரியம்மா பாட்டி..

அன்னத்தின் நடிப்பு தொடர்ந்தது..விக்கித்து நின்றார் சொக்கர்..என்ன செய்ய முடியும்? மனைவி இவ்வாறு தனியாக புலம்புவது வெளியே தெரிந்தால் பெரிய வீட்டம்மாவுக்கு பைத்தியம் என்று ஊரெல்லாம் பேச ஆரம்பித்து விடும்..பிறகு, பஞ்சாயத்து பேசும் பெரிய மனிதன் சொக்கநாதன் வெளியே தலை காட்டுவது எவ்வாறு?..... ஒன்றும் புரியவில்லை..அதிர்ந்து நின்றார்..

ஏலேய்,... என்னலே இது?.. அட பாவி பையலே,...என் மொவளை பைத்தியக்காரியாவே ஆக்கிட்டியா?..........சற்று சத்தமாக கேட்டாள் பாட்டி..

அய்யோ அத்தை சத்தம் போடாதீக..ஊர்க்கார பயலுக காதுல விழுந்தா மானமே போயிரும்...........கெஞ்சினார் சொக்க நாதன்..

அதுக்காக இதை எம்புட்டு நாளு மத்தவங்களுக்கு தெரியாம மறைக்க முடியும்...இந்தா பகல்லயும் இவ இப்படித்தானே புலம்புவா...........பாட்டி சொல்ல, தலை சுற்றியது சொக்கநாதனுக்கு...

அங்கே புலம்பி கொண்டிருந்த அன்னம், திடீரென்று
"நீங்க எப்போ வந்தீக?........என்றாள் கணவனிடம்..பதில் சொல்லவில்லை சொக்கநாதன்..

அட சித்தி நீ எப்போ வந்த? வா சித்தி... நம்ம மாறனுக்கு பிடிக்கும்ன்னு கோழி குழம்பு வச்சேன்...ஒரு வாய் சாப்பிட்டு போ.. இரு சித்தி எடுத்தாரேன்(எடுத்து வருகிறேன்)...............என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் அன்னம்..

அங்கிருந்த நாற்காலியில் சோர்ந்து அமர்ந்து விட்டார் சொக்கநாதன்..பாட்டி சிரிப்பை அடக்கிக் கொள்ள பட்ட பாடு அவளுக்கே தெரியும்...

சமையலறையை விட்டு வெளியே வந்த அன்னம், சாப்பாட்டு தட்டை சொக்க நாதனிடம் நீட்டினாள்..அவர் தட்டை கையில் பிடிக்கும் சமயம், சாப்பாட்டு தட்டை பொத்தென்று கீழே போட்டாள் அன்னம்..

அய்யோ, சித்தி என் புள்ள மாறன் இங்கேதானே நின்னுகிட்டு இருந்தான்..அதுக்குள்ள எங்கிட்டு போனான்...நீ பார்த்தியா.....மாறா...மாறா........... கேட்டுக் கொண்டே வீட்டு வாசலுக்கு ஓட இருந்த அன்னத்தை பிடித்தார் சொக்கநாதன்....

மாறா மாறா.......என்று கத்திக் கொண்டே சொக்க நாதன் தோளில் சாய்ந்து மயங்கினாள் அன்னம்..அன்னத்தை கைத்தாங்கலாக அறையில் படுக்க வைத்தார் சொக்கநாதன்...

பிறகு பாட்டியிடம் கேட்டார்,
இப்போ என்ன பண்றது அத்தை.........என்று..

நான் என்னலே பண்ண முடியும்...நீ மனசு வச்சா உன் பொஞ்சாதியை (பொண்டாட்டியை)காப்பாத்திகிடலாம்...நீதேன் மனசு வைக்க மாட்டியே...அவ கதி அவ்வளவுதேன்...இந்த காலம் போன கடைசில நீ கேட்க நாதியத்து கிடக்கணும்ன்னு உன் தலையில எழுதியிருந்தா அதை நான் மாத்தவா முடியும்............பெருமூச்சு விட்டாள் பாட்டி..

இந்தா அத்தை, சும்மா புதிர் போடாம விஷயத்த சொல்லு...............

புதிரும் இல்ல போட்டியும் இல்ல, பெத்த புள்ளைய நேரில் பார்த்தா உன் பொஞ்சாதிக்கு எல்லாம் தானா சரியா போகும்.. இல்லன்னு வை, இப்படியே பொலம்பி பொலம்பியே உசுர விட்டுருவா.. பொறவு உன் இஷ்டம்........பேசி முடித்த பாட்டி சொக்கநாதன் முகத்தை கூர்ந்து கவனித்தாள்..

பலமான யோசனைக்கு பின் கேட்டார் சொக்கநாதன்..

இதை தவிர வேறு வழியே இல்லையா?..............

இதை தவிர அந்த அய்யனார் சாமியே நேரில வந்தாலும் உன் பொஞ்சாதிய காப்பாத்த முடியாது.................சொல்லி முடித்துக் கொண்டாள் பாட்டி..

வெகு நேரம் யோசனையில் மூழ்கி சொக்கநாதன் அமைதியாக இருந்தார்..

மெல்லிய குரலில் பாட்டி கேட்டாள்,
"என் பேரன் கூட பெங்களூர்லதேன் இருக்கான்..ஒரு ஃபோன் போட்டா விசயத்த சொல்லி மாறனை கூட்டியாந்துருவான்...நீ என்ன சொல்ற சொக்கநாதா?",..............என்று..

மீண்டும் வெகுநேர யோசனைக்கு பின்,

ம்ம்....சரி, வந்து பார்த்துட்டு போக சொல்லு...ஆனால் அவன் மட்டும்தேன் வரணும்..அந்த சின்ன சாதியில பொறந்த ஜென்மம் இங்கே வரக்கூடாது.....................

ம்ஹும்...உன்னை திருத்த முடியாது....நீ எக்கேடோ கெட்டு போ...இனி என்கிட்ட யோசனை கேட்காதே.........சொல்லி வேகமாக வெளியேற முயன்ற பாட்டியை,

சரி.............என்று சத்தமாக சொல்லி நிறுத்தினார் சொக்கநாதன்..நின்று திரும்பினாள் பாட்டி..

வந்து பார்த்துட்டு போக சொல்லு.. பார்த்தோமா போனமான்னு இருக்கணும்...இதை காரணமா வச்சிகிட்டு என்கிட்ட ஒட்டிகிடலாம்ன்னு மட்டும் நினைக்க கூடாதுன்னு அந்த பையகிட்ட உறுதியா சொல்லிபுடு..ஆமா..............என்று கூறியவர் வேகமாக எழுந்து வீட்டை விட்டு வெளியேற வாசல் படியில் கால் வைக்கும் போது, பாட்டி சொன்னாள்,

இந்தேரு சொக்கநாதா, நான் அந்த புள்ளைகளை வர சொல்றேன்..வந்த பிள்ளைக வந்துட்டு போற வரைக்கும் நீ தப்பான வார்த்தை எதுவும் பேசக் கூடாது,.. சொல்லிபுட்டேன், நினைவு இருக்கட்டும்...........என்று..

எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறினார் சொக்கநாதன்..அவர் தலை கண்ணில் இருந்து மறைந்தது தான் தாமதம், படுத்திருந்த அன்னம் ஓடி வந்து மாரியம்மா பாட்டியை கட்டிக் கொண்டாள்..

சித்தி...நீ மட்டும் இப்போ என் புள்ளயை வர வைக்காம இருந்திருந்தால் நான் நெசமாவே பைத்தியக்காரி ஆகியிருப்பேன்.........கண்ணீர் மல்க கூறினாள் அன்னம்..

அட கூறு கெட்டவளே, பத்து வருஷம் கழிச்சி புள்ள வீட்டுக்கு வாரான்..அவன் கல்யாணத்துக்கு பொறவு இதுதேன் அவன் உன்கூட கொண்டாட போற முதல் தீபாவளி..சந்தோஷமா இருப்பியா? கண்ணை கசக்கிட்டு இருக்க?..போ புள்ள நல்லபடியா வீடு வந்து சேரணும்ன்னு வேண்டிகிட்டு நம்ம குலசாமிக்கு காசு முடிஞ்சு வை............பாட்டி சொல்ல சந்தோஷ முகமாய் பூஜை அறைக்கு சென்றாள் அன்னம்...அங்கு அவர்களின் குல தெய்வமும் இன்முகமாய் சிரித்து நின்றது.....

அன்னத்தின் சந்தோஷம்
தீப ஒளியாய் சுடர் விடும்
தொடரும்.......

சாதி சாதி சாதி என்று
சாதீ வெறி கொளுத்தி
ஊர் எரிக்கும்
உறவு எரிக்கும்
உயிர் எரிக்கும் மானிடா

உயிர் பிரிந்த
உன் உடலை சுட்டெரிக்கும்
உன்னத நெருப்புக்கு
உண்மையில் சாதி இல்லை
தெரியுமோ?..........

சக்தி.......