• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺5

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
தாய்மையின் தாக்கத்தை தாள முடியாமல் தடுமாறி நின்றான் மாறன்..தாயின் கண்ணீரும் அவளின் நியாயமான கேள்வியும், கேள்விக்குள் பொதிந்து கிடந்த ஆதங்கமும் ஆதங்கத்தை உருவாக்கிய பாசமும் மாறனின் நெஞ்சை ரணமாய் தைத்தது..

தகப்பன் வீசிய தீப்பிழம்பை மிக துணிச்சலாக தாங்கி (சா)தீயை தகர்த்தெறிந்த மாறனின் இதயம் தாய் வீசும் பாசமிகு வார்த்தைகளை தாங்க முடியாமல், புயலில் சிக்குண்ட கோழி இறகாய் தள்ளாடி சாய்ந்தது..கண்கள் கொட்டிய அழுகையை கட்டுப்படுத்த முடியாமலும், தாய் முன் அழ விரும்பாமலும், தன் தலையை உதறி திருப்பியவன், ஃபோனை எழிலிடம் நீட்டினான்..

எழிலின் நிலையோ இன்னும் மோசம்.."தாயிடம் இருந்து மகனை பிரித்து விட்டோமோ", என்ற குற்ற உணர்ச்சி பய உணர்வாய் அடிவயிற்றில் பாரமாகி போக சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றாள்..

தவிர்க்க முடியாமல் ஃபோனை கையில் வாங்கியவள், அன்னத்தின் முகம் பார்த்து பேச தயங்கி நின்றாள்..அன்னத்திற்கும் எழிலிடம் பேச்சை ஆரம்பிக்கும் புள்ளியை தேர்ந்தெடுக்க இயலவில்லை...

அன்னத்தின் அருகில் நின்ற புவனா,
பேசு பெரியாத்தா ஃபோனை போட்டுட்டு பேசாம நிக்கிற.......... அன்னத்திடம் சொன்னவள், எழிலிடம் கேட்டாள்,
எப்படி இருக்கீங்க அண்ணி?.........

ம்ம்..நல்லா இருக்கேன்..............எழில் சொன்னாள்..

இந்தா பெரியாத்தா பேசுறியா?..ஃபோனை கட் பண்ணவா?...........புவனா கேட்க,

ஏய்..போடி அங்கிட்டு..பெரிய மனுசியாட்டம் மிரட்டுற..என்ன பேசணும்ன்னு எனக்கு தெரியும்.............என்று புவனாவின் கையில் இருந்து ஃபோனை பறித்துக் கொண்டாள் அன்னம்..

பார்த்தியா...உன் வேலை முடிஞ்சதும் என்னை விரட்டுறல்ல..இரு இரு உன்னய வச்சிக்குறேன்.............சொல்லி சற்று விலகி நின்றாள் புவனா...நடப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே மாட்டுக்கு கழனி காட்டிக் கொண்டிருந்தாள் மாரியம்மா பாட்டி..

ஃபோனில் மருமகளிடம், அன்னம்,
"எழிலு நல்லா இருக்கியா புள்ள?",............கேட்டாள்..

மிகுந்த தயக்கத்துடன் எழில் சொன்னாள்,
"நல்லா இருக்கேன் பெரிய வீட்டம்மா..........என்று..சட்டென திரும்பி எழிலை முறைத்தான் மாறன்...எழில் அவனை கவனிக்கவில்லை...அவளின் கவனம் முழுதும் ஃபோன் திரையில் அல்லவா இருக்கிறது.. எழிலுக்கோ அன்னம் தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்வாளா? என்பதில் சந்தேகம், பயம்..

அய்யய்யே....என்ன அண்ணி இது, பெரிய வீட்டம்மாவா?.. இவுக உங்களுக்கு அத்தை, அத்தைன்னு கூப்பிடுங்க.................மீண்டும் ஃபோன் திரையில் தலை நீட்டி சொன்னாள் புவனா..

இந்தா....நீ என் புள்ள கட்டுன தாலிய தாங்குனவ..என் வம்சத்துக்கு வாரிசை கொடுத்தவ..மரியாதையா என்னய அத்தைன்னு கூப்பிடு...இல்ல மாமரத்துல கட்டி வச்சி தோல உரிச்சிப்புடுவேன்..................அன்னம் சொல்ல கண்ணீரும் தித்திப்பாய் மாறி போனது எழிலுக்கு..மாறனுக்கு பொங்கி வந்தது சிரிப்பு..கண்ணீர் காற்றோடு கரைய சத்தமின்றி வாய்விட்டு சிரித்தே விட்டான்..

அன்னம் தொடர்ந்தாள்,

ஆமா நீ என் புள்ளைக்கு வேளா வேளைக்கு சரியா ஆக்கி போடுறியா? இல்லையா?..அவன் ஆளே மெலிஞ்சி
மூங்கில் குச்சியாட்டம் இருக்கான்..இந்த புள்ளைகளும் கோழி இறகாட்டம் இல்ல இருக்கு.. அவுகள சரியா கவனிக்கிறியா இல்லையா?..................படபடவென்று அன்னம் பேச எச்சில் விழுங்கினாள் எழில்..ரசித்தான் மாறன்..

இந்தா நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன்..நீ என்ன புள்ள பேசாம நிக்கிற...அம்புட்டு மிதப்பா?...இப்போ பதில் சொல்றியா இல்லையா?.............அன்னம் கேட்க,


ம்ம்,...கவனிச்சிக்கிறேன்...........என்று மெல்லிய குரலில் சொன்னாள் எழில்..சிரித்தான் மாறன்..

வாரா வாரம், புதனும் சனியும் பிள்ளைகளுக்கு எண்ணெய் வச்சி குளிப்பாட்டுறியா?...அந்த பைய குளிக்கிறானா?...............அன்னம் கேட்க,

இதெல்லாம் உனக்கே நியாயமா தெரியுதா பெரியாத்தா...குளிக்கிறதெல்லாமா விசாரிப்ப.................கேட்டாள் புவனா..

அடியேய்.....நீ போய் மாட்டுக்கு தண்ணி காட்டுடி...பெரியவக பேசுற இடத்தில உனக்கு என்ன சோலி...........புவனாவை விரட்டினாள் அன்னம்..

இரு இரு 2gb நெட்டும் முடியட்டும், வச்சிக்கிறேன் உன்னய?...........சொல்லி விட்டு போனாள் புவனா..

இந்தா..நான் பக்கத்துல இல்லைன்னு மிதப்பில இருக்கலாம்ன்னு நினைக்காத....இன்னிக்கி அந்த பயலுக்கு பொறந்த நாளுன்னு உனக்கு நினவு இருக்கா இல்லியா?.............. எழிலிடம் அன்னம் கேட்க,

ம்ம்....இருக்கு..............சொன்னாள் எழில்..

அப்படின்னா நாளையோட உனக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து வருசம் முடியுது, நினவு இருக்குல்ல..........அன்னம் கேட்க,

ம்ம்.......நினவு இருக்கு............

ஏண்டி,..நினவு இருந்துமா இப்படி விட்டத்தை பார்த்து உட்கார்ந்துட்டு இருக்க...நல்ல நாளும் பொழுதும விடியகாத்தால முழிச்சு தெளிச்சி குடும்பத்தோட கோயிலுக்கு போனோமா?...கறி எடுத்து சமைச்சி பிள்ளைகளுக்கு ஆக்கி போட்டாமான்னு இல்லாம யார் வீட்லயோ விசேஷங்கிற மாதிரி இருக்க.........எங்கே அந்த பைய, அவன்கிட்ட ஃபோனை கொடு.....................அன்னம் சொல்ல, புரியாமல் விழித்தாள் எழில்..பெரிய பையனா சின்ன பையனா என்பதில் சந்தேகம் அவளுக்கு..

அடியேய்....உன் புருசன்கிட்ட ஃபோனை கொடுடி............. அதிகாரமாக அன்னம் சொல்ல, பாவமாய் மாறனிடம் ஃபோனை நீட்டினாள் எழில்..

போனை கையில் வாங்கியவனின் வாயிலிருந்து சிந்தியது ஒற்றை வார்த்தை,
அம்மா..............

எலேய்...நல்ல நாளுமா இப்படி இருந்தா எப்படிலே?..நீ இதையெல்லாம் கேட்கமாட்டியா....என்னலே குடும்பம் நடத்துற?......................அன்னம் கேட்க,

அம்மா, ம்மா, ம்மா..... போதும்மா...அவள் என்னை நல்லாதான் பார்த்துக்குறா..நான் நல்லா இருக்கேன்..உனக்கு தெரியுமா? நான் ஊர்ல இருந்து வந்த பிறகு எக்ஸ்ட்ரா 20 கிலோ வெயிட் போட்டுருக்கேன்........என்று மாறன் சொல்ல,

ஏலேய்,.....சத்தமாக பேசாதலே..கண்ணு பட்டுற போகுது...கிலோ கணக்கெல்லாமா பார்த்திட்டு இருப்ப...அறிவு கெட்ட பயலே...........

சோஃபாவில் அமர்ந்து, சற்று விலகி நின்ற எழிலை அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டு, பிள்ளைகள் இருவரையும் மடியில் உட்கார வைத்துக் கொண்ட மாறன், தன் குடும்பத்தை திரையில் நிரப்பி எதிரில் இருந்த தாயின் பிம்பத்திடம் கேட்டான்,

இப்போ சொல்லும்மா, உன் புள்ள எப்படி இருக்கான்?.............என்று...

ஆனந்தம் கண்கள் வழியாகவும் வெளிப்படும் என்பதை உணர்ந்தாள் அன்னம்..திரையில் தெரிந்த மகனின் குடும்பத்தை நெட்டி முறித்து முத்தமிட்டாள்..

ஏய், எழில் வூட்ல உப்பு, வத்தல் இருக்குல்ல..தடவி அடுப்பில போடு............அன்னம் சொல்ல திரு திருவென விழித்தாள் எழில்..அந்த பெங்களூர் மாநகரின் அடுக்கு மாடி குடியிருப்பில் விறகு அடுப்பை எங்கு தேடுவாள் அவள்..மாறன் எழிலின் காதுக்குள் சொன்னான்,

ஏய், சரின்னு தலையாட்டிடு.........என்று..

அவளும் சரி...........என்றாள்..

சரின்னா.............அன்னம் கேட்க, புரியவில்லை எழிலுக்கு..

சரி............என்று மீண்டும் சொன்னாள் தயங்கியபடி..

சரின்னா,. நான் என்ன ஆடா மாடா? நான் யாருடி உனக்கு?..சரி அத்தைன்னு சொன்னா வாய்க்குள்ள இருக்கிற முத்து உதிர்ந்துருமோ?.........அதட்டலாய் கேட்டாள் அன்னம்..

சரி அத்தை..........பாவமாய் சொன்னாள் எழில்..இப்போது பாட்டியின் உரையாடல் பிள்ளைகளுக்கு சற்று புரிய ஆரம்பித்திருந்தது..

பாட்டி,..ஏன் சும்மா சும்மா அம்மாவை திட்டுறீங்க...அம்மா பாவம்...........சொன்னாள் ஆனந்தி..

வாடி என் வெல்லக்கட்டி, அம்மாவுக்கு நல்லாதேன் வக்காலத்து வாங்குற.. நான் உனக்கு பாட்டி இல்ல....அப்பத்தா... ஏலேய்,. இதெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கிறது இல்லையா............மகனிடம் கேட்டாள் அன்னம்..

நீதானேம்மா சொல்லி கொடுக்கணும்...............சொன்னான் மாறன்..

இந்தா...அடுத்த வண்டியில பிள்ளைகளை கூட்டியாந்து என்கிட்ட வுடு..நான் எப்படி வளர்க்கிறேன்னு மட்டும் பாரு.................அன்னம் சொல்ல சிரித்தான் மாறன்..தாய் அங்கு சுற்றி இங்கு சுற்றி, அவள் வர நினைத்த புள்ளிக்கு வந்துவிட்டதை உணர்ந்து அழகாய் சிரித்தான்..

ஏன்மா...நீங்க சரியா சாப்பிடுறீங்களா இல்லையா?...ஏன் இப்படி இருக்கீங்க?..உடம்பை பார்த்துக்கோங்கம்மா............ லாவகமாய் பேச்சை மாற்றினான் மாறன்..

ஏலேய், நான் உனக்கு அம்மாலேய்... எங்கிட்டயே உன் வார்த்தை சாலத்தை (ஜாலத்தை) காட்டுறியா?.. புள்ளைகளை கூட்டிட்டு வீட்டுக்கு வாலேன்னு சொன்னா, பெரிய மனுஷன், பேச்சை மாத்துறிகளோ..............பதில் பேசி மகனை மடக்கினாள் அன்னம்..சிரித்தான் மாறன்..

ம்ம்....இந்த அம்மாவுக்கு கடைசி காரியம் செய்யவாவது ஊருக்கு வருவல்ல..................குரல் தாழ்த்தி அன்னம் சொல்ல, முகம் வாடி போனது மாறனுக்கு..மாறனின் வாடிய முகம் பார்த்த எழில்,

ஏன் அத்தை இப்படி பேசி அவரை கஷ்டப்படுத்துறீங்க...பாவம் அவரு முகமே வாடி போச்சி...நீங்க இன்னும் நூறு வருஷம் ஆரோக்கியமா இருப்பீங்க..இப்படியெல்லாம் பேசாதீங்க..................என்று வேகமாக பேசி முடிக்க,

ஆத்தீ.......புருஷன் முகம் வாடுனா பொறுத்துகிட மாட்டியளோ........... ஏலேய்... சிரிச்சிருலே...இல்ல, இவ என்னை அடிச்சாலும் அடிச்சிபுடுவா...........அன்னம் சொல்ல மீண்டும் சிரித்தான் மாறன்..வெட்கம் பூத்தாள் எழில்..

சரி...........நிதமும் இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணா உன்கிட்ட பேசலாம்ல......... மாறனிடம் அன்னம் கேட்க,

ஹான்.....நான் காலேஜ் போக வேண்டாமா?...............சிணுங்கினாள் புவனா.

அம்மா, நானும் ஆஃபிஸ் போகணும்ல............மாறன்..

அப்போ இனிமேல் பேசமுடியாதா?............சிறு குழந்தையாய் கேட்டாள் அன்னம்..

அண்ணி உங்க ஃபோன் நம்பர் கொடுங்க..நீங்க வீட்ல தானே இருப்பீங்க..நான் ஃப்ரீயா இருக்கும் போது கூப்பிடுறேன்.................புவனா சொல்ல,

சரி புவனா, ஆனால் நானும் காலேஜ்ல இருக்கும் போது ஃபோன் அட்டென்ட் பண்ண முடியாது..ஈவினிங் வீட்டுக்கு வந்த பிறகு கூப்பிடு............என்றாள் எழில்..

ஏண்டி நீ இன்னுமா படிக்கிற?.........அன்னம் கேட்க,

இல்லை அத்தை, நான் காலேஜ்ல இங்கிலீஷ் லெக்சரரா இருக்கேன்............என்றாள் எழில்..

என்னடி சொல்ற............புரியாமல் கேட்டாள் அன்னம்..

அம்மா, என் பொண்டாட்டி காலேஜ்ல வாத்தியாரம்மா.........சொன்னான் மாறன்..

ஏலேய்...அறிவு கெட்ட பயலே...உன்னால உன் பொண்டாட்டி பிள்ளைக்கு சம்பாதிக்க முடியாதாலே..அவள் எதுக்குல வேலைக்கு போகணும்..இதுல உனக்கு பெருமை வேறயா..........கேட்க பதில் சொல்லாமல் விழித்தான் மாறன்..தொடர்ந்தாள் அன்னம்,

"அதான் புள்ள துரும்பா இளைச்சி போய் கிடக்கு..வேலைக்கு போயிட்டு வந்து வீட்டு வேலை பார்த்து, புள்ளைங்கள பார்த்து, முரட்டு பைய உன்னையும் பார்த்துக்கணுமா..........என்று அன்னம் கேட்க, சொல்வதறியாது விழித்தான் மாறன்..மாறனின் தர்மசங்கடம் அறிந்து எழில்,

அவர் என்னை வேலைக்கு போக சொல்லல அத்தை..நான்தான் ஆசைப்பட்டு போறேன்.............வீட்டின் பொருளாதார சூழ்நிலை உணர்ந்து பேசினாள் எழில்..

உன் புருஷனை நீ விட்டு கொடுப்பியா?...என்னவோ ஆத்தா, உடம்பை பார்த்துக்க...........பெருமூச்சுடன் சொன்னாள் அன்னம்..

சில மணித்துளிகள் தொடர்ந்தது அவர்களின் உரையாடல்...பத்து வருட ஏக்கம் இரண்டு ஜிபி காற்றலைக்குள் அடங்கிவிடுமா என்ன?..காற்றலை காலாவதி ஆகிப்போனது..ஃபோன் கம்பனி சட்டென அழைப்பை துண்டித்தது..துடித்து போனாள் அன்னம்,

ஏய் புள்ள புவனா.....ஃபோன் நின்னு போச்சுடி..................பதறினாள் அன்னம்..

பொறவு........காத்தால எட்டு மணிக்கு பேச ஆரம்பிச்சவ,..பதினொரு மணி ஆவுது...நெட் காசு காலியாயிருக்கும்.நீ உன் மொவன்கிட்ட ஓவரா கொஞ்சும் போதே எனக்கு தெரியும், இப்படித்தான் பண்ணுவேன்னு.................2ஜிபி காலியானதில் நொந்து பேசினாள் புவனா..

சட்டென ஃபோனில் ஒலித்தது ரிசார்ஜ் நோட்டிஃபிகேஷன் ஒலி..அதை தொடர்ந்து ஒலித்தது மாறனின் காணொளி அழைப்பு.. ஆன் செய்தாள் புவனா..இப்போது பிள்ளைகள் விளையாட சென்றுவிட, மாறனும் எழிலும் எதிர்திரையில் தெரிந்தனர்..

மாறன் சொன்னான்,
ஏய் புவனா, ஃபோன்க்கு ரிச்சார்ஜ் பண்ணனும்ன்னா என்கிட்ட சொல்லு....நான் பண்றேன்.........என்று..

தேங்க்ஸ் அண்ணா......என்றவள் ஃபோனை அன்னத்திடம் கொடுக்க மீண்டும் உரையாடல் தொடர்ந்தது..

~~~~~~~~~~~~~~~

அது அரசங்குடி அய்யனார் கோயில் மண்டபம்.. அங்கு பஞ்சாயத்து கூடியிருந்தது.. கதிரவனின் மகன் மருது வேற்று ஜாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டதால் அவனை ஊரின் சகல உரிமைகளில் இருந்தும் விலக்கி வைக்க வேண்டும் என்று ஊர் சார்பில் பஞ்சாயத்து கூடியிருந்தது..தலைமை தாங்கிய மூவரில் ஒருவராக இருந்தார் சொக்கநாதன்..

கூட்டத்தில் நின்ற ஒருவன் சொன்னான்,
அய்யா இந்த மருது, சென்னைக்கு வேலைக்கு போன இடத்தில வேற்று ஜாதி பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டியாந்துருக்கான்..இனியும் அவனை நம்ம ஊர் வகையில சேர்த்துகிட்டா நம்ம சாதி கட்டுப்பாடே அழிஞ்சி போகும்...இவனை ஊர்ல இருந்து விலக்கி வைக்கணும்.........என்று..

இதோ பாருங்க நாங்க தலைமுறை தலைமுறையாக இந்த ஊர்ல வாழ்ந்துட்டு இருக்கோம்..எனக்கு நினவு தெரிஞ்ச நாள் முதலே இந்த ஊர் நல்லது கெட்டதுல, நான் முன்னாடி நின்னு நடத்திருக்கேன்.. அப்படியெல்லாம் யாரும் எங்களை ஊரை விட்டு விலக்கி வச்சிட முடியாது...............தன் மகனுக்காக வாதாடினார் கதிரவன்..

உன்னை யாருய்யா விலக்க போறாங்க?.. உன் மொவனை தானே விலக்குறோம்............கூட்டத்தில் இருந்து எழுந்தது குரல்..

ஏலேய்...என்னை விலக்குனா என்ன?.. என் மொவனை விலக்குனா என்னலே..ரெண்டும் ஒண்ணுதேன்.............திமிர்ந்தார் கதிரவன்..

இங்க பாரு கதிரவா...என்னதான் இருந்தாலும் நம்ம சாதி இரத்தத்தோட வேற சாதி ரத்தம் கலக்குறதை எங்களால ஏத்துக்க முடியாது...........என்றார் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் சொக்கநாதன் அருகில் பணக்கார தோரணையுடன் அமர்ந்திருந்த ஒரு பெரியவர்..அவரும் தலைவரில் ஒருவர்..

நீ வாரத்துல நாலு ராத்திரி, பக்கத்து ஊர் சரோசா விடுதிக்கு போயி சல்லாபம் பண்ணிட்டு வர்றியே..அந்த பொண்ணுங்க என்ன சாதின்னு தெரிஞ்சுதான் போறியா...............கூட்டத்தில் இருந்து எழுந்தது குரல்..ஆனால் பேசியது யார் என்பது தெரியவில்லை.. கூடியிருந்தவர் அனைவரும் சிரித்தனர்..

ஏலேய் எவன்ல அது? எவனா இருந்தாலும் என் முன்னால வந்து பேசுல................ எகிறினார் அந்த வெள்ளை வேட்டிக்காரர்..

நான் முன்னால வந்து பேசுனா மட்டும் நீ கற்புக்கரசனாயிருவியா?..சரிதான் மூடிட்டு உட்காருயா...............பேசியது அதே குரல்..மீண்டும் சிரித்தது கூட்டம்..

ஏலேய்.. எவன் பேசினதுன்னு மட்டும் தெரிஞ்சது தூக்கி போட்டு மிதிச்சிருவேன்ல............மீண்டும் கொதித்தார் வெள்ளை வேட்டிக்காரர்..

நீ இப்போ மூடிட்டு உட்காருறியா?..இல்ல சரோசாவை பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வரவா?........
மீண்டும் அதே குரல், கேட்டதுதான் தாமதம் சப்தநாடியும் ஒடுங்கி அமர்ந்தார் வெள்ளை வேட்டிக்காரர்..

இதோ பாருலே கதிரவா....இப்போ கூட ஒண்ணும் பெருசா நடந்துடல...உன் மொவன் கூட்டிட்டு வந்த பொண்ணை எங்கேயிருந்து கூட்டிட்டு வந்தானோ அங்கேயே கொண்டு போய் விட சொல்லு.. ஊரோட ஒத்து போறதுதான் உன் மொவனுக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது............என்றார் சொக்கநாதன் அருகில் இருந்த வயதான முதியவர் ஒருவர்..அவரே இரண்டாவது தலைவர்..

என்னய்யா பேசுறீக... பொம்பள புள்ளைய பெத்த தகப்பன் மாதிரி பேசுங்க..என் மருமொவ பொண்ணு என் மொவனை நம்பி சொந்த ஊரு சாதி சனம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கா..அவளை கைவிடுறது பாவம்யா...................பாவத்துக்கு அஞ்சி பேசினார் கதிரவன்..

பாவ புண்ணியம் பார்த்தா சாதிய காப்பாத்த முடியாது கதிரவா.. நமக்கு சாதிதேன் முக்கியம்..அதுக்காக எதை வேணும்னா பலி கொடுக்கலாம்...........என்றார் அந்த இரண்டாம் தலைவர்..

எந்த காலத்திலய்யா இருக்குறீக?..இது இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டு..அவன் அவன் செவ்வாய் கிரகத்தில் குடியிருக்க வழி இருக்கான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்.. நீங்க மனுசனையும், மனுசத்தன்மையையும் பலி கொடுத்துட்டு வெறும் அடையாளமா இருக்கிற சாதிய காப்பாத்தணும்ன்னு பேசுறீக..மனுஷன் குடும்பமா, கூட்டமா, ஒற்றுமையா இருக்குறதுக்குதான்யா சாதி, மதம் என்கிற அமைப்பெல்லாம் உருவாச்சி.. மனுஷங்களை கூட்டம் கூட்டமாக கொன்னுட்டு, குடும்பத்தையும் ஒற்றுமையையும் இழந்துட்டு வெறும் சாதிய மட்டும் காப்பாத்தி எந்த சுடுகாட்டைய்யா ஆள போறீக..............சவுக்கால் அடித்தது போல் உடைத்து பேசினான் கூட்டத்தில் இருந்த படித்த இளைஞன் ஒருவன்..

இதுக்குதான்யா படிச்ச பையலுகளையே பஞ்சாயத்துல பேசவிடக் கூடாதுன்னு சொல்றது..எதையாவது பேசி எல்லாரையும் குழப்பி விட்ருவானுக........சொன்னார் அந்த இரண்டாம் தலைவர்..

ஹான்.. வாழப்போற இவிங்க பேசாம, நாளைக்கு சாகப்போற டெட்பாடி நீ பேசி என்னத்தையா கிழிக்க போற?...........கூட்டத்தில் இருந்து மீண்டும் எழுந்தது அதே குரல்..

ஏலேய்....பேசுறது எவன்னு மரியாதையா சொல்லிபுடு, இல்ல..........அந்த இரண்டாம் தலைவர் சொல்லி முடிக்கும் முன்,

இல்லனா, என்னயா கிழிப்ப?....நீ நிதம் நிதம் உன் தென்னந்தோப்பு மோட்டார் ரூமுக்குள்ள சீரழிக்கிற பொண்ணுங்களோட சாதியை நான் பட்டியல் போடுறேன் பாக்குறியா.............மீண்டும் மீண்டும் அதே குரல்..அடங்கி ஒடுங்கினார் இரண்டாம் தலைவர்..

ஏலய்.. எவன்ல அது, நேரில பேச தைரியம் இல்லாம கூட்டத்துக்குள்ள பதுங்கி இருக்கிறவன்..பஞ்சாயத்துக்கு ஒரு மரியாதை இல்லியாலே..இப்போ நான் பேசுறேன்..என்னை பத்தி பேசுங்கலே பார்ப்போம்............எழுந்து நின்று கத்தினார் சொக்கநாதன்...அமைதி ஆனது கூட்டம்..

கதிரவா....உன் புள்ளைய ஊருக்குள்ள உரிமை உள்ளவனாக சேர்த்துகிட்டா சாதி கட்டுப்பாடு அழிஞ்சு போகும்..நம்ம தாத்தன் பாட்டன் காலத்துல இருந்து கடைபிடிக்குற சாதியை விட்டு கொடுக்க முடியாது...உனக்கு உன் மொவன் வேணுமா?, இல்ல இந்த ஊர் வேணுமான்னு முடிவு பண்ணிக்க..............வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் பேசி முடித்தார் சொக்கநாதன்..

இத்தனை நாள் இந்த ஊருக்காக வாழ்ந்துட்டு இருக்கிற எனக்கு இந்த ஊர் கொடுக்கிற பரிசு இதுதான்னா அதை நான் ஏத்துக்குறேன்...எனக்கு என் மொவன்தேன் முக்கியம்..இனி இந்த ஊர் என்ன முடிவு பண்ணுதோ பண்ணட்டும்............என்றார் கதிரவன்..

கதிரவா....... ஊரோட ஒத்து வாழனும்யா..கடைசி காலத்துல சொந்த ஊர்லயே அகதியாக வாழப் போறியா..........கதிரவன் மேல் இரக்கம் கொண்ட ஒரு பெரிய மனிதர் பேசினார் .

அதுக்காக என் உயிர்ல பொறந்த என் மொவனை என்னால விட்டு கொடுக்க முடியாதுய்யா..நாளைக்கே நான் செத்தா அவன் கையால கொள்ளி வச்சாதேன் என் நெஞ்சு வேகும்...இம்புட்டு ஏன்யா, இங்கே பஞ்சாயத்து பேசுறாரே , பெரியமனுஷன் சொக்க நாதன், அவர் மகனும் சாதி கலப்பு கல்யாணம் பண்ணவன்தானே...நாளைக்கே அவன் தன் குடும்பத்தோட வந்தா இவரு ஏத்துக்காம தொரத்தி விட்டுருவாரோ..இவருக்கே ஏதாவது ஆனால், அவன் நெருப்பு வைக்காம இவர் நெஞ்சுதான் ஆறுமா?..என்னய்யா சாதி, பாசமும் பந்தமும்தான்யா பெருசு...............என்று கதிரவன் பேச,

யாரை பார்த்து என்ன பேச்சு பேசுற..பத்து வருஷத்துக்கு முன்னாடியே என் மொவன் செத்துட்டான்..செத்தவன் எப்படியா திரும்பி வருவான்................ஆவேசமாய் கத்தினார் சொக்க நாதன்..

அப்படியெல்லாம் என் மொவனை உயிரோட தலைமுழுக என்னால முடியாது..நீங்க செய்றதை செய்ங்க............சொல்லிவிட்டு தன் மகனை கைபிடித்து இழுத்து சென்றார் கதிரவன்..

ஆவேசம் தணியாதவராக கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சொக்கநாதன்..

~~~~~~~~~~~~~~~~~~

மாரியம்மா பாட்டி வீட்டில், மகனிடம் பேசிய களைப்பு நீங்க சாதத்துடன் மீன் குழம்பு சேர்த்து சாப்பிட்டு கொண்டிருந்தாள் அன்னம்..

குழம்பு ஊற்றிக் கொண்டே மாரியம்மா பாட்டி கேட்டாள்,

என்னடி, மொவன் கிட்ட பேசுன சந்தோஷம் முகத்தில கொஞ்சம் கூட இல்ல..முகமே இருண்டு கிடக்கு............

என்னத்த சந்தோஷப்பட சித்தி..இங்கே என்கிட்ட ஆயிரம் பேர் சம்பளம் வாங்குறான்..தினமும் ஊருக்கே சோறாக்கி போடுற அளவுக்கு சொத்து இருக்கு..என் புள்ள பாஷை தெரியாத ஊர்ல எவன்கிட்டயோ கைகட்டி ஊழியம் செய்றான்..அவன் கஷ்டத்தை குறைக்க என் மருமொவளும் வேலைக்கு போய் கஷ்டப்படுறா..இம்புட்டு கஷ்டத்திலேயும் ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்குறாங்களா பார்த்தியா?.............கவலையிலும் மகனுக்கு கிடைத்த நல்வாழ்வு குறித்து பெருமிதம் கொண்டாள் அன்னம்..

எழில் புள்ளையோட இந்த நல்ல குணத்துக்குதேன் சாமி அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கு...........மனதால் ஆசி வழங்கினாள் பாட்டி..

பெருமூச்சு மீண்டும் மீண்டும் முட்டி மோதியது அன்னத்தின் நாசியில்..

ஏண்டி, இப்படி ஏங்குற..அதான் உன் புள்ளைகிட்ட பேசிட்டல்ல..மெல்ல சாதுர்யமாக பேசி அவனை ஊருக்கு வரசொல்லி உன் பக்கத்திலேயே வச்சிக்க...................பாட்டி..

எங்கே சித்தி.... பிடிவாதத்துல அப்பனை போலவே இருக்கான்..இப்போ பேசும் போது கூட பிடி கொடுத்து பேசுறானா பார்த்தியா?....இந்த மனுசனும் கொஞ்ச நஞ்சம் பேச்சா பேசிருக்காக..அந்த ரஹீம் கலெக்டர் ஆஃபிஸ்ல நடந்ததை சொன்ன போது என் ஈரக்கொலையே நடுங்கி போச்சி.. என் புள்ளைக்கும் அதெல்லாம் சுளுவா(சுலபமாக) மறந்துருமா என்ன?...............சொல்லி மீண்டும் பெருமூச்சை இழுத்து விட்டாள் அன்னம்..

இந்தாடி...இப்படியே பெருமூச்சு விட்டுக்கிட்டு இருந்தா ஒரு கதையும் நடக்காது.. ஆம்பிளைங்க பிடிவாதத்துக்கு பயந்துகிட்டு இருந்தால், பொம்பளைங்க எதையும் சாதிக்க முடியாது.. நீ இப்படியே ஒண்ணும் செய்யாம பெருமூச்சு விட்டுட்டு இருந்தன்னு வை, உன் புருசன் கூட சுத்திக்கிட்டு இருக்கானுகளே, அங்காளி பங்காளி பையலுக, நீயும் உன் புருசனும் செத்த பிறகு உங்களுக்கு கொள்ளிய வச்சிபுட்டு, உன் மொவனுக்கு எதுவும் இல்லாம சொத்து மொத்தத்தையும் கொள்ளையடிச்சிட்டு போயிருவானுக..சூதானமா இருந்துக்க, சொல்லிபுட்டேன் ஆமா............ சலித்துக் கொண்டாள் பாட்டி..

புரியாமல் விழித்தாள் அன்னம்..

அடியேய்...என்னடி அப்படி முழிக்குற..உன் புருசன் கூட சுத்துற பயலுகள பத்தி உனக்கு தெரியாது..நிதம் ஒரு சாதி பஞ்சாயத்துன்னு கூட்டிட்டு போய், அந்த மடப்பையலுக்கு உன் மொவன் நினப்பே வராம செஞ்சிட்டு இருக்கானுக..இன்னிக்கி கூட அரசங்கோயில் பஞ்சாயத்துக்கு போயிருக்கிறதா கேள்வி.............பாட்டி சொல்ல,

அவுக தேங்காய் வெட்டுக்கு போறதா இல்ல சொன்னாக...........சொன்னாள் அன்னம்..

அவன் என்னிக்கிடி உன்கிட்ட உண்மை பேசியிருக்கான்..இந்தாரு நான் சொல்றதை கேளு,..ஏதாவது தகடுதித்தம் பண்ணி மாறனை ஊருக்கு வர வைக்கிற வழிய பாரு..இல்ல,.. இந்த பயலுக உன் குலத்தையே இந்த ஊருக்குள்ள வரவிடாம பண்ணிருவானுக............பாட்டி பயமுறுத்த,

இப்போ என்ன பண்ணலாம் சித்தி.............கேட்டாள் அன்னம்...

அன்னத்தின் காதில் ரகசியம் சொன்னாள் பாட்டி....

இது சரியா வருமா சித்தி?........கேட்டாள் அன்னம்..

துணிஞ்சி இறங்கு..அய்யனார் சாமி சத்தியத்துக்குதேன் துணை நிற்கும்..சாதிக்கு இல்ல.............தைரியம் தந்தாள் வாழ்ந்து தெளிந்த பாட்டி...


தெய்வம் குலம் காக்கும்
தாய்மை குலத்தை
செழிப்பாக்கும்..
தொடரும்.....


சாதி வெறி கொண்டு
(ஜ)சனம் கொல்லும்
சண்டாள மானிடா

சத்தியம் காக்கும்
சாதி சனம் காக்கும்
சாமிக்கு சாதி இல்லை
தெரியுமோ............

சக்தி........