• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺8

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
பெங்களூரில் இருந்து புறப்பட்ட மாறன் குடும்பமும், ராஜவேலுவும் ஊர் வந்து சேர அடுத்தநாள் மாலை ஆகிவிட்டது..ஊருக்குள் காரில் வந்து, வீட்டு வாசலில் மாறன் குடும்பம் இறங்கியதும், அந்த ஊரே வீட்டு வாசலில் கூடிவிட்டது..

பத்து வருட வைராக்கியத்தை சொக்கநாதன் விட்டுக் கொடுத்து விடுவாரா?..மகனை ஏற்றுக் கொள்வாரா?..... கேள்விகளுடன் சிலர்..
சொக்க நாதன் மகனை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.., எனவே இன்று ஒரு தரமான சம்பவம் காத்திருக்கிறது..அதை நேரில் பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் சிலர்..
எந்த கருத்து கணிப்பும் இன்றி ஏதோ திரில்லர் சஸ்பென்ஸ் காட்சியை காணும் உணர்வுடன் சிலர்..மொத்தத்தில் அடுத்த வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்க்கும் கூட்டம் ஒன்று சொக்கநாதன் வீட்டு வாசலில் கூடியது..

வாசலில் இறங்கிய மாறனை தொடர்ந்து எழிலும் குழந்தைகளும் இறங்கினர்..உடன் ராஜவேலுவும்..

யாரு மாறனா?..அம்மா சாக கிடந்தாதேன் ஊர் மண்ணை மிதிக்கணும்ன்னு தவம் கெடந்தியா?.............கேள்விக் கணையை ஆரம்பித்து வைத்தார் அந்த எழுபது வயதான பெரியவர்..

எய்யா..... உன்னைய காணாம இந்த பத்து வருஷமா உங்க அம்மா பட்ட பாட்டை என்னன்னு சொல்லுவேன்.. மொவராசி மொவன் முகத்தை கண்குளிர பார்க்க கொடுத்து வைக்காம போயிருவாளோன்னு பதறிகிட்டு கெடந்தேன்..போயா உன் ஆத்தாளை போய் பாரு..அவளை நிம்மதியா வழியனுப்பி வை.............. அன்னத்துக்கு முடிவுரையே எழுதி விட்டாள் அந்த அறுபது வயது அழகிய கிழவி..

மாறன் குரல் வளையை முட்டி அடைத்தது மரணபயம்...மரணம் தன்னை தீண்டுவதை காட்டிலும் தன்னை சேர்ந்தவர்களை தீண்டுவதே மிகவும் கொடுமை..

வீட்டிற்குள் செல்லவே பயந்து நின்றான் மாறன்...நோயில் விழுந்து மரண படுக்கையில் கிடக்கும் தாய் முகம் காண தைரியம் இல்லை அவனிடம்..

சொக்கநாதனும் வீட்டுக்குள் தான் உட்கார்ந்திருந்தார்..ஆனால் வாயை திறக்கவில்லை....

எழில் தோளில் கைபோட்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க மாறன் முனைந்த போது,

அத்தை..................என்று அதிர்ந்து அழைத்தார் சொக்கநாதன்.. நின்று விட்டான் மாறன்..

அங்கே அன்னத்தின் அருகில் நின்ற மாரியம்மா பாட்டி அரக்க பறக்க ஓடி வந்தாள்..

இந்தேரு அத்தை, உள்ளே சாக கெடக்குறவளுக்காகதேன் அவ மொவனை வீட்டுக்குள்ள வர விடுறேன்..அவனை மட்டும் உள்ளே வந்து பார்த்துட்டு போக சொல்லு..வேற எந்த கழுதைக்கும் என் வீட்டுக்குள்ள வர தகுதியில்லை.................பிடிவாதம் இன்னும் குறையவில்லை என்று ஊருக்கு எடுத்துரைத்தார் சொக்கநாதன்..

அசருவானா மாறன்?..மீண்டும் எழிலுடன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டான்..எழிலில் மறுப்பு சைகையை அவன் சற்றும் சட்டை செய்யவில்லை...

தனக்கு எதிரில் இருந்த மர நாற்காலியை எட்டி உதைத்து தள்ளினார் சொக்கநாதன்..

இந்தா அத்தை, நான் சொல்றது காதுல விழலியா?..கண்ட கண்ட கீழ் சாதி நிழலெல்லாம் என் வீட்டுக்குள்ள விழக்கூடாது..சொல்லி வை................தெருவுக்கே ஒலிப்பெருக்கி இன்றி கேட்கும் படி கத்தினார் சொக்கநாதன்..

நீங்க போய் பார்த்துட்டு வாங்க..நான் இங்கேயே நிக்கிறேன்.............சொன்னாள் எழில்..

இந்தா எழில், நீ என் பொண்டாட்டி, உன்னை இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்ல இங்கே யாருக்கும் உரிமை இல்ல..............மாறன் மனைவியிடம் சொல்ல,

இது என் வீடு...இந்த வீட்டுக்குள்ள யார் வரணும் வரக்கூடாதுன்னு நான்தான் முடிவு பண்ணுவேன்..வந்திருக்கிற என் பொஞ்சாதியோட விருந்தாளிகிட்ட சொல்லு அத்தை.................வயதானாலும் நெஞ்சுரம் குறையவில்லை..திமிர்ந்தார் சொக்கநாதன்..

ஏலே, எதுக்குல இப்படி தொண்டைய கீறி கிழிக்குற?..அவுக வந்து பார்த்துட்டு போயிற போறாக..உன்கூட இருந்து குடும்பமா நடத்த போறாக....................சமாதானம் சொல்லி பார்த்தாள் பாட்டி..

இந்தா இந்த சவடால் பேச்செல்லாம் வேணாம்..அவனை மட்டும் வீட்டுக்குள்ள வந்து பார்த்துட்டு போக சொல்லு..மத்ததுக இந்த வீட்டு வாசப்படி மிதிக்க கூடாது...........உரக்க சொல்லி திமிர்ந்த சொக்க நாதனின் பார்வையை ஆணவம் உயர்த்தியது..அதனால் அவரால் பூமியில் நடக்கும் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை காண முடியவில்லை..

மேலோர் மேலே பேசிக் கொண்டிருக்க, கீழே விதையில் பூத்துதித்த செடி தன் தாய்மர நிழல் தேடி வந்தது..

சொக்கநாதனின் பார்வை, மேல் நோக்கி இருக்க, அமுதன்(மாறனின் மகன்) வீட்டுக்குள் வந்து, அவரது காலுக்கு அருகில் நின்றான்..எழிலும் மாறனும் கூட அமுதன் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை..சொக்கநாதனின் இடுப்பை தாண்டி வளர்ந்து நின்ற அமுதன் அவரின் அருகில் வந்து, அவர் கை பிடித்து இழுத்தான்..தொடு உணர்வால் திரும்பிய சொக்க நாதன் தலை தாழ்த்தி பார்க்க, அவர் ஜாடையில் பிசகின்றி நின்றிருந்தான் அமுதன்..

ஹேய், ஓல்ட் மேன், உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?..ஒரு வயசானவங்க உடம்பு சரியில்லாம படுத்துருக்காங்க..இப்படி கத்தி அவங்களை டிஸ்டர்ப் பண்றீங்க.............கைவிரல் நீட்டி பேசினான் அமுதன்..

கண்கள் சுருக்கி வியப்பாய் பார்த்தார் சொக்கநாதன்..பயந்தே விட்டாள் எழில்..தன் மகனை மாமனார் அடித்து விடுவாரோ என்ற பயம் அவளுக்கு..ஆனந்தி சொக்கநாதனின் குரல் தந்த பயத்தில் தாயை அப்பிக் கொண்டாள்..நிகழ்வை பார்த்த வேலு அமுதனின் அருகில் ஓடி வந்து நின்றான்..

லேய்........பொடிப் பயலே, யார்லே நீ..நேரம் காலம் தெரியாம வந்து வியாக்கியாணம் பேசுற?..............அமுதனிடம்கேட்டார் சொக்க நாதன்..

ஓ மை காட், வாட் ய ஸ்டிரேஞ்ச் சிட்டுவேஷன்...........என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் அமுதன்..

என்னலே சொல்றான் இவன்?..........வேலுவிடம் கேட்டார் சொக்க நாதன்..

டேய் சும்மா இருடா.......அமுதனை அடக்கினான் வேலு..

நீங்க சும்மா இருங்க சித்தப்பா..நீங்க ஒரு இன்னோசன்ட்..உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...........வேலுவிடம் சொன்னவன், சொக்கநாதனிடம் சொன்னான்,

என் விதியை நொந்துகிட்டேன் ஓல்ட் மேன்.................

இந்த சின்ன வயசிலேயே விதியை நொந்துக்குற அளவுக்கு உனக்கு என்னலே கஷ்டம் வந்துடுச்சி..............கேட்டார் சொக்கநாதன்..

என் சொந்த தாத்தாவே என்னை நீ யாருன்னு கேட்குறாரு..நான் விதியை நொந்துக்காமல் என்ன செய்றது?................சாலித்துக் கொண்டே அந்த சின்னஞ்சிறு பாலகன் கேட்க,
அதிர்ந்து போனார் சொக்கநாதன்..வாசலில் நிற்கும் மகனையும் வீட்டுக்குள் நிற்கும் பேரனையும் மாறி மாறி பார்த்தார்..

நான் என்ன சொல்றேன்னு புரியலையா?..நான் அமுதன்,
எங்க அப்பா பேரு இளமாறன்,
அஸ் பெர் தி ரூல்ஸ் மிஸ்டர்.சொக்கநாதன், நீங்க என்னோட தாத்தா.................சொல்லி இடுப்பில் கைவைத்து நின்றான் அமுதன்..

யாருக்கு யாருல தாத்தா..என் புள்ளையே செத்து போயிட்டான்...எங்கே இருந்து வந்தான் பேரன்...போல வெளியே...............அலறினார் சொக்கநாதர்..எழில் கண்கள் பொங்க ஆரம்பித்தது..

ஸ்டாப் இட் ஓல்ட் மேன்,, இப்படி கத்துனா பயந்துடுவேன்னு நினச்சீங்களா..இன்னொரு தடவை எங்க அப்பா செத்து போயிட்டார்ன்னு சொன்னீங்க, அண்ட் தென் ஐ வில் நாட் கிவ் யூ ரெஸ்பக்ட்.. பி கேர்ஃபுள்.........பதிலுக்கு பேசினான் அமுதன்..

இது என் வீடு வெளியே போல............விரட்டினார் சொக்கநாதன்..

முடியாது...போக மாட்டேன்....என்ன பண்ணுவீங்க.............எதிர்த்து திமிர்ந்தான் அமுதன்..

டேய் ஏண்டா இப்படி பண்ற..............அமுதனிடம் கேட்டான் வேலு..

இந்த ஓல்ட் மேன் ரொம்ப ஓவரா பேசுறாரு சித்தப்பா... யூ நோ(you know), எங்க அப்பா ஸ்கூலுக்கு வந்தால், என் ஸ்கூல் பிரின்சிபால் கூட எழுந்து நின்னு ஹேன்ட் ஷேக் பண்ணி மரியாதை கொடுத்து பேசுவாரு...பட் இவரு எங்க அப்பாவை வாசல்ல நிக்க வச்சி மேன்னர்ஸ் இல்லாம கத்துறாரு..இட்ஸ் ய கிரேட் இன்சல்ட் டூ மி.. நான் இவரை ரெண்டுல ஒண்ணு கேட்காம விடப்போறதில்ல.........கூறிய அமுதன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தே விட்டான்..

அப்படி பேசுல சிங்ககுட்டி,..........என்று மனதிற்குள் அமுதனை மெச்சிக் கொண்டாள் பாட்டி..

பார்த்தியா அத்தை, இவன் அம்மா புள்ளை வளர்த்து வச்சிருக்கிற லட்சணத்தை,..பெரியவங்களை மரியாதை இல்லாம பேசுறோம்ன்னு கொஞ்சமாவது அச்சம் இருக்கா பார்த்தியா?................இப்போதும் மருமகள் மீதுள்ள வன்மமே வெளிப்பட்டது..

லுக் ஓல்ட் மேன், பெரியவங்க சின்னவங்கன்னு இந்த அமுதன் பார்க்கமாட்டான்..நல்லவங்க கெட்டவங்கன்னுதான் பார்ப்பான்..தப்பு செய்றது யாரா இருந்தாலும் இந்த அமுதன் கேட்காம விடமாட்டான்..அண்ட் ஒன் மோர் திங்க் எங்க அம்மா ஒண்ணும் என்னை வளர்க்கல, நானே வளர்ந்துகிட்டேன்.................பதிலுக்கு பதில் சொல்லி அடித்தான் அமுதன்.. பத்து வயது மாறன் சொக்க நாதனின் கண்முன் ஒரு நொடி தோன்றி மறைந்தான்... தடுமாறிதான் போனார் மனிதர்..

வாசலில் நின்ற எழில் மாறனிடம் சொன்னாள்,

அமுதனை கூப்பிடுங்க பிளீஸ்.........

டேய், அமுதா இங்கே வாடா..............கூப்பிட்டான் மாறன்..

நோ ப்பா..இந்த ஓல்ட் மேன் எதுக்கு உங்களை இன்சல்ட் பண்ணாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும்.................என்று மாறனிடம் சொன்ன அமுதன் சொக்கநாதனிடம் சொன்னான்,

சொல்லுங்க ஓல்ட் மேன்..எங்க அப்பாவை எதுக்கு இப்படி கத்துறீங்க..அவரு என்ன தப்பு பண்ணாரு............. கேட்டு உறுதியாய் அமர்ந்திருந்தான் அமுதன்..அவனை முறைத்து நின்றார் சொக்கநாதன்..

சொல்லுங்க..எங்க அப்பா என்ன தப்பு பண்ணாரு..................

அவன் பண்ண தப்பை சொன்னா என்னாலே பண்ணுவ?..........
சொக்க நாதன்..

அவரு நிஜமாவே தப்பு பண்ணியிருந்தால் நாங்க இங்கேயிருந்து போயிடுறோம்..பட் அதுக்கு சான்ஸ் இல்ல..ஏன்னா எங்க அப்பா எப்பவும் தப்பு பண்ண மாட்டாரு............நம்பிக்கை கொண்டான் அமுதன்..

பெத்த அப்பன் எனக்கு தெரியாமல், உங்க அப்பன் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பில்லியாலே.............கேட்டார் சொக்கநாதன்..

எங்க அப்பா அம்மாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்ககிட்ட சொல்லலியா..சொல்லாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டாரா........கேட்டான் அமுதன்..

சொன்னான்...ஆனால் எப்போ எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேனோ அப்போவே, அவளை விட்டுட வேண்டியதுதானே..என்னை மீறி போனது தப்பில்லையாலே?...........

ஏன், எங்க அம்மாவுக்கு என்ன குறை...ஏன் எங்க அம்மாவை பிடிக்கலைன்னு சொன்னீங்க.... யூ நோ இந்த உலகத்திலேயே பெஸ்ட் அப்பா அம்மா உன் அப்பா அம்மாதான்னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க..............

என்னதான் இருந்தாலும் அவ என் கொல்லைப்புறத்துல நின்னு வாங்கி தின்ன கீழ் சாதிக்காரனுக்கு பொறந்தவதானேலே............. கொதித்தார் சொக்கநாதன்..

வாட்...இவரு என்ன சொல்றாரு சித்தப்பா..ஐ கான்ட் அண்டர்ஸ்டேண்ட்.............. வேலுவிடம் கேட்டான் அமுதன்..

திருதிருவென விழித்தான் வேலு..

ஏன்ல இப்படி பேய் முழி முழிக்குற?....புள்ளைக தெரிஞ்சிக்க வேண்டிய விஷயத்தை தெரிஞ்சிக்க வேண்டிய நேரத்துல தெரிஞ்சிகிட்டுதேன் ஆகணும்.. இந்தேரு ராசா உங்க அம்மாவும், அப்பாவும் வேற வேற சாதி..அதுதேன் உன் தாத்தனுக்கு உங்க அம்மாவை பிடிக்கலை................பிள்ளைக்கும் புரியும் மொழியில் சொன்னாள் பாட்டி..

சாதி.....வாட் சாதி...சாதின்னா என்ன?............கேட்டது அந்த இளந்தளிர்..
புரிய வைக்க இங்கு எவர்க்கேனும் தெம்பு உண்டோ..ஸ்தம்பித்து நின்றார் சொக்கநாதன்...

சாதின்னா என்ன?.....சொல்லுங்க............. சத்தமாக கேட்டான் உலகத்தின் ஊழல் படியாத இளஞ்சிறுவன் அமுதன்..

ஏலேய், ஒரு மனுசன் பிறந்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறதுல இருந்து, செத்தா சுடுகாட்டுல புதைக்கிற வரைக்கும் சாதி வேணும்ல................ஜாதியின் மகத்துவம் சொன்னார் சொக்கநாதன்....

ஸ்கூல்ல படிக்க அறிவுதான் வேணும், செத்தா R.I.P பண்ண சொந்தக்காரங்கதான் வேணும்..இடையில அது என்ன ஜாதி.............புரியாமல் கேட்டான் அமுதன்..பதில் பேச முடியாமல் திணறினார் சொக்கநாதன்..

சோ, ஏதோ யாருக்கும் புரியாத காரணத்தை சொல்லி எங்க அம்மாவை ரிஜக்ட் பண்ணியிருக்கீங்க...அதான் எங்க அப்பா உங்க வீட்டுக்கு வராம பெங்களூர்லயே இருந்துட்டாரு..ஓகே, ஃபைன், எங்க அப்பா மேல எந்த தப்பும் இல்ல...நாங்க இங்கேயிருந்து போக மாட்டோம்.. வி வாண்ட் டூ சீ அப்பத்தா..யூ கீப் கொயட்.............சொன்ன அமுதன் நாற்காலியில் இருந்து இறங்கி சென்று தந்தையின் கைபிடித்து உள்ளே இழுத்து வந்தான்..

சிலையாகி போனார் சொக்கநாதன்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகனை உதறி தள்ளிவிட்டார்...மகனின் உதிரத்தில் உதித்த இந்த சிறு மொட்டை என்ன செய்வார்...ஓங்கும் அரிவாளும் அவன் பூமுகம் பார்த்து வெட்ட மாட்டேன் என்று அடம்பிடிக்குமே....வீசும் சாதீ தீயும் அவனின் பிஞ்சு முகம் பார்த்து இரங்கி தன்னை தானே பொசுக்கி கொள்ளுமே.. அரிவாளுக்கும் நெருப்புக்கும் உருவாகும் இரக்கம் சொக்கநாதன் மனதில் உருவாகுமா??

இன்னும் எழில் வாசலில் தான் நின்றிருந்தாள்..

அப்பா...நீங்க போய் அப்பத்தாவை பாருங்க..நான் அம்மாவை கூட்டிட்டு வரேன்..இந்த ஓல்ட் மேன் என்ன பன்றாருன்னு பார்த்துடலாம்.........சொன்ன அமுதன் எழில் கையை பிடித்து இழுக்க, தயங்கினாள் எழில்..

கம் ஆன் மா, உள்ளே வாங்க.........என்று சொல்லி அமுதன் எழிலையும் ஆனந்தியையும் வீட்டுக்குள் இழுத்து வர, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் சொக்கநாதன்..

என்ன வேடிக்கை பார்த்தாச்சா?..அடுத்த தெருவுல புருஷன் பொண்டாட்டி தகராறு நடக்குதாம்..போங்க அதையும் போய் வேடிக்கை பாருங்க.................வேடிக்கை பார்த்தவர்களை அப்புறப் படுத்தினான் வேலு..

அன்னம் படுத்திருந்த அறைக்குள் நுழைந்த மாறன், தாயின் அருகில் சென்று,

அம்மா,...... அம்மா ......கண்ணை திறந்து பாருங்கம்மா, நான் மாறன் வந்துருக்கேன்...........என்றான் பதட்டத்தோடு..

அன்னம் நடிப்பில் அசத்தினாள்...மெதுவாக கண்விழித்தவள்
மாறா........என்று சத்தமிட்ட படி மகனை அணைத்து கொண்டாள்..உச்சி முகர்ந்து தாய்ப் பாசம் சொரிந்தாள்...நெடுங்காலம் காணா தாய் நிழல் கண்டு நெகிழ்ந்தான் மாறன்..

எழிலின் அருகில் நின்ற இரு குழந்தைகளையும் தன்னருகில் அழைத்து அமர்த்தி கொண்ட அன்னம் சற்று சோர்வாகவே காட்டிக் கொண்டாள் ...கண்களின் நீரின் வழியே பாசம் பரிமாறிக் கொண்டனர்..

இரவுக்கு தேவையான உணவை மாரியம்மா பாட்டியும், புவனாவும் சமைத்து பரிமாறினர்..வெகுநேரம் பசியில் இருந்த குழந்தைகள் கலப்படம் இல்லாத அந்த கிராமத்து இயற்கை உணவை ருசித்து சாப்பிட்டனர்.. வேலுவும் புவனாவும் குழந்தைகளுடன் திருப்தியாக உண்டனர்..

அன்னம் நடிப்பை இன்னும் முடிக்காமல் படுக்கையில் தான் இருந்தாள்..உடனே துள்ளி குதித்து ஓடினால் சந்தேகம் உருவாகுமே...தாயின் இயலாமை கண்ட மாறன் சாப்பிட மனமின்றி இருக்க, கணவன் நிலை கண்டு எழில் சாப்பிடவில்லை..

ஒரு வாய் சாப்பிடு மாறா..இந்தா பாரு, நீ சாப்பிடலன்னு எழிலும் சாப்பிட மாட்டேங்குறா...........சொன்னாள் பாட்டி..

முதல்ல அம்மாவுக்கு கொடுங்க பாட்டி..அப்புறம் நான் சாப்புடுறேன்.............சொன்னான் மாறன்..

அம்மாதானே, உன் கையால கொடுத்தா சாப்பிட போறா..............என்று கூறிய பாட்டி தட்டில் சாதம், சாம்பாருடன் வெண்டைக்காய் பொரியல் வைத்து மாறன் கையில் கொடுத்தாள்.. அன்னத்துக்கு ஊட்டி விட்டான் மாறன்..

இந்தா எழிலு, இதை நீ சாப்பிடு,..மாறன் அன்னம் சாப்பிட்ட பொறவு சாப்பிடுவான்.............சொல்லி ஒரு தட்டு சாதத்தை எழில் கையில் திணித்தாள் பாட்டி..

கையில் சாப்பாட்டை வாங்கி கொண்ட எழில், சோற்றை பிசைந்து, ஒரு கவளம் சோற்றை மாறனின் வாய்க்கு நேராக நீட்டினாள்...எழிலையே பார்த்தாள் அன்னம்..

ஏய், நீ சாப்பிடு எழில்..நான் சாப்பிடுவேன்...............சொன்னான் மாறன்..

நீங்க நேத்து காலையில் சாப்பிட்டது..உங்களுக்கு பசியிருக்கும்ன்னு எனக்கு தெரியும்...முதலில் நீங்க சாப்பிடுங்க..............சொல்லிக் கொண்டே மாறனின் வாய்க்குள் அந்த சோற்று கவளத்தை திணித்தாள் எழில்...அன்னத்தின் கண்களில் நீர் பெருகியது...நெகிழ்ந்து போனாள்..

பிறகென்ன, மாறனுக்கு எழில் சோறு ஊட்ட, மாறன் அன்னத்துக்கு ஊட்டினான்...தாய்க்கு சோறு ஊட்டி முடித்த மாறன்,

இன்னும் கொஞ்சம் சாப்பாடு வைங்க பாட்டி.............கேட்டு வாங்கி கொண்டவன், அதனை பிசைந்து அந்த சோற்று கவளத்தை எழிலின் வாய்க்கு முன்னால் நீட்டினான்..சற்றே உறைந்து போனாள் எழில்..

நீயும் தான் நேத்து காலையில இருந்து சாப்பிடலை..வாயை திற...............சொன்னான் மாறன்..

கொடுங்க, நானே சாப்பிடுறேன்.......... நாணம் மெருகேற சொன்னாள் எழில்..

அட, எனக்கு நீ ஊட்டலாம்..உனக்கு நான் ஊட்ட கூடாதா,..வாயை திற எழில்...............சொன்னவன் வாய்க்குள் சாப்பாட்டை திணிக்க, பாட்டியும் அன்னமும் சிரித்துக் கொண்டனர்..

குழந்தைகள் அன்னத்தின் கட்டிலிலேயே தூங்கி போக, மாறன் தாய்க்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்த தாயையே பார்த்திருந்தான்..அருகில் கிடந்த பெஞ்சில் அமர்ந்திருந்த எழில் களைப்பின் மிகுதியால் தூங்கி போனாள்..வெகு நேரத்துக்கு பிறகு மாறனும் உட்கார்ந்தபடியே தூங்கினான்...

எல்லோரும் தூங்கிய பிறகு கண்விழித்து எழுந்து அமர்ந்தாள், தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அன்னம்..எழுந்தவள் கண்களில் நீர் பெருக, மாறனின் தலையை வருடினாள்..அருகில் கிடந்த மகனின் நகல்களை உச்சி முகர்ந்து எழும்ப, அதிர்ந்தாள் அன்னம்..கண் விழித்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் எழில்..

பெரிய வீட்டம்மா,..............என்று முணுமுணுத்தது எழிலின் வாய்..மெல்ல எழுந்த அன்னம், மாறனை தொடாது கட்டிலில் இருந்து இறங்கி வந்தாள்..

பெரிய வீட்டம்மா, நீங்க,......உங்களுக்கு உடம்புக்கு..........திக்கி திணறி நின்றாள் எழில்..

உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னது பொய்யா?..................கேட்ட எழிலின் வாயை சட்டென்று பொத்தினாள் அன்னம்..

இந்தாடி, மெல்ல பேசுடி..இந்த பைய காதுல விழுந்தா இப்போவே போறேன்னு ஒத்தை கால்ல நிப்பான்..இந்தா எழிலு என் புள்ளைய வர வைக்க எனக்கு வேற வழி தெரியல..அவன் கிட்ட சொல்லிபுடாதடி...வர்ற தீபாவளி வரைக்குமாச்சும் அவனை என்கூட இருக்க விடுடி..................மிக மெல்லிய குரலில் மருமகளிடம் கெஞ்சினாள் அன்னம்..

சற்றும் அசைவின்றி உட்கார்ந்து கட்டிலில் சரிந்து கிடந்த மாறனின் கண்கள், திறந்து கண்ணீரில் நனைந்திருந்தன..அவர்கள் பேசுவதை சத்தமின்றி கேட்டுக் கொண்டிருந்தான்..

என்னடி, நான் பேசிட்டே இருக்கேன்..நீ எதுவும் சொல்ல மாட்டேங்குற...அவன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லுடி..............கெஞ்சிய குரலில் கேட்டாள் அன்னம்..

இல்ல பெரிய வீட்டம்மா, நான் இதுவரை அவங்ககிட்ட பொய் சொன்னதே இல்ல...அதான்..............என்று இழுத்தாள் எழில்..

இந்தா, உன்னைய யாருடி பொய் சொல்ல சொன்னாங்க..உண்மைய மட்டும் சொல்லாம வாயை மூடிட்டு இரு போதும்..............சொன்னாள் அன்னம்..

இல்ல பெரிய வீட்டம்மா.............என்று எழில் பேச ஆரம்பிக்கும் முன்,

இந்தாடி, இன்னொரு தடவை பெரிய வீட்டாம்மான்னு சொன்ன தோலை உரிச்சிபுடுவேன்..நான் உனக்கு அத்தை...அதுமட்டும் இல்ல, என் புள்ளைகிட்ட என்னை பத்தி வாயை திறக்க கூடாது,..மீறி வாயை திறந்த பிச்சிபுடுவேன், புரியுதா?................ மிரட்டினாள் அன்னம்,..
மிரண்டாள் எழில்..சிரித்தான் மாறன்...

மாறனின் புன்னகை
மாறாமல் எழிலுடன்
தொடரும்.........

அன்புக்கு சாதி இல்லை
அறிவுக்கு சாதி இல்லை
ஆசை காதலுக்கு சாதி இல்லை

புன்னகைக்கு சாதி இல்லை
பூக்களுக்கு சாதி இல்லை
பூமிக்கும் சாதி இல்லை

மடமை கொண்ட
மனிதனுக்கு மட்டும்
ஏன் இந்த சாதி வெறி???.....

சக்தி............