• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிங்கிள் பேரன்ட் - எண்ணம் - சாய் செந்தில்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
எண்ணம்

"என்னங்க… விஷயம் தெரியுமா…?" அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த ரவி, வீட்டுக்குள் நுழையும் முன்னே பரபரத்தாள் விமலா.

"சொல்லுமா… என்னத்த கண்டுபிடிச்ச…?" சின்ன குழந்தையிடம் கேட்கும் அப்பா போல தனது மனைவி ஆர்வத்தை குறைக்காமல் கேட்டான் ரவி.

"இன்னைக்கு நம்ம பொண்ணு ஸ்கூல் விட்டு வந்த போது, எதிர் வீட்டு பொண்ணும் கூட வந்தாள். 'அவங்க அப்பா வரல...வீடு பூட்டி இருக்கு'ன்னு இங்க தான் நம்ம பொண்ணு கூட விளையாடிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் முன்னாடி தான் அவங்க அப்பா வந்து கூட்டிட்டு போனாரு. அந்த குழந்தை, கைக்குழந்தையாக இருக்கும்போது அவங்க அம்மா இறந்துட்டாங்கலாம். இவ்வளவு நாளா அந்த குழந்தை அவங்க பாட்டி வீட்லதான் வளர்ந்துச்சாம். இப்பதான் கொஞ்ச நாளாய் அப்பாவும் பொண்ணும் ஒன்றாக இருக்கிறார்களாம். இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு…?" என்று வினவினாள் விமலா.

"இது மட்டுமல்ல, இன்னமும் தெரியும். அந்தப் பொண்ணோட அம்மா ஏன் இறந்தாங்க தெரியுமா…? என்று பதிலுக்கு வினவினான் ரவி.

"தெரியலைங்க…," என்றாள் விமலா.

"அந்தப் பெண்ணோட அம்மாவை கொலை செய்துட்டாங்க…," என்றான் ரவி.

"அப்படியாங்க…!" என்றாள் விமலா ஆச்சரியத்தை முகத்தில் தேக்கி.

"அதுமட்டுமல்ல, கொலை செய்தது யார் என்று தெரியுமா…? வினவினான் ரவி.

"தெரியலையே… யாருங்க கொலை செய்தது…?" வினவினாள் விமலா.

"அந்தப் பொண்ணோட அப்பாவேதான்…," என்றான் ரவி.

ஆச்சரியத்தில் உறைந்தே போனாள் விமலா.

"அந்த பொம்பள கேரக்டர் சரியில்ல… பார்க்கக் கூடாத நிலையில் பார்த்துட்டாரு… கொலை செய்ய வேண்டியதாயிற்று…," என்றான் ரவி

"ஆளைப் பார்த்தால் ரொம்ப நல்லவரா தெரிகிறாரே…?" என்றாள் விமலா.

"என்னம்மா பண்றது…? சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒருத்தரை குற்றவாளி ஆக்குவது…," என்றான் பெருமூச்சுடன் ரவி.

"இதை ஏன் இத்தனை நாளா சொல்லல…?" என்று கேட்டாள் விமலா.

"முன்னாடியே சொல்லியிருந்தால், நீ அவரைப் பார்க்கும் போதெல்லாம் தப்பானவராகவே தெரிந்து இருப்பார். ஆனா இப்ப நீயே அவரை நல்லவர் என்று சொல்கிறாயே…," என்றான் ரவி.

ரவி சொல்வது சரிதான் என்பதுபோல் தலையசைத்தாள் விமலா.


  • சாய் செந்தில்,
சங்கராபுரம்.