• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 19

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 19

ஐவிரல்களையும் இறுக்கமாக மூடியிருந்த அவளின் கைகளை தன் கைகளோடு பிணைத்துக் கொண்டு, ஒவ்வொரு விரலாக பூவின் மடல் திறப்பது போல் திறந்தான்.

தவறு செய்யும் குழந்தையின் மனோபாவத்துடன் ஜேபியின் விழிகள் பரிதவிப்புடன் வசீகரனைப் பார்த்தது.

" நந்தவனத்தின் நடுவில் நின்று கொண்டு மலர்களின் சுகந்தத்தை சுவாசிக்க மாட்டேன் என்று மூச்சை அடக்கி உயிர் வதைப்படுவதற்கு பதிலாக, காற்றில் கைகளை விரித்து, தலையினைப் பின்னே சரித்து, இமைகளை மூடி, நறுமணத்தை நாசியில் நிறைத்துப் பாருங்கள் அம்மணி!

அப்பொழுது வாழ்வின் பொருள் புரியும். நிறைவு தெரியும் " என்றான் அவளின் கலக்கத்தை போக்கும் நோக்குடன்.

"இல்லை... இது சரி வராது. என்னால் ஒரு சராசரி சாமானிய மனைவியாய் உங்களிடம் நடந்து கொள்ள முடியாது. மலர்களின் நறுமணம் எல்லோருக்கும் உகந்தது அல்ல. சிலருக்கு அது ஒவ்வாமையைத் தரும். புரிந்து கொள்ளுங்கள் வசீகரன்" என்றாள்
.

" சரிங்க அம்மணி. உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாய் நிற்கிறீர்களா? " என்றான் வசீகரன் தீர்க்கமான குரலில்.

" சர்வ நிச்சயமாக!" என்றாள் ஜேபியும் உறுதியான குரலில்.

" உங்கள் முடிவில் நீங்கள் உறுதியாக இருக்கும்போது எனது முயற்சியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன? உங்களுடனான எனது வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இந்த ஒரு வருட காலத்தை என் காதல் காலமாக நான் கொண்டாடித் தீர்த்தால், நீங்கள் கவலைப்பட வேண்டிய கட்டாயம் என்ன?


உங்களுடைய அடையாளத்தை, சுயமரியாதையை, விட்டுத் தராத வரை இந்த பந்தத்தில் உங்களுக்கு பிரச்சனை இல்லை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.
நீங்கள் கூறிய நிபந்தனையில் எனது காதல் பற்றி நீங்கள் எந்த இடத்திலும் அடிக்கோடு இடவில்லை. ஆகவே எனது காதல் பற்றி நீங்கள் கவலைப்படவும் தேவையில்லை. என் காதல்! என் விருப்பம்!

என் காதல் செலவிற்கு, உங்கள் காதல் வரவானால், அது நம் காதலின் மகத்தான வெற்றி!" என்று தன் மனதை புரிய வைக்கும் நோக்கத்துடன் தெளிவாக எடுத்துரைத்தான் வசீகரன்.

" வசீகரன்! உங்கள் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. மரியாதை இருக்கிறது. ஆனால் காதல் இருக்கிறதா? இந்த நொடி வரை இல்லை. என் தந்தையின் விருப்பத்திற்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு நான் சம்மதித்தேன். இத்தனை உண்மைகளைத் தெரிந்தும், நம் திருமணத்தை நிலை நிறுத்த நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் என்னை மிகவும் பாதிக்கிறது. ப்ளீஸ் வசீகரன்... நடந்தவற்றிற்கெல்லாம் ஓர்முற்றுப் புள்ளி வைத்து விட்டு நாம் நண்பர்களாக இருக்கலாமே!" என்றாள் முடிவான குரலில்.


" ஆக, உங்கள் உலகத்தில் கணவனாக எனக்கு அனுமதி இல்லை. அப்படித்தானே அம்மணி?"

அவனை விலக்கவும் முடியாமல், சேர்க்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனதுடன் தலையசைத்தாள் ஜேபி.

"வெல்! உங்களுக்கு நான் நண்பனாகவே இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் என்றைக்கும் நீங்கள் எனக்கு மனைவி தான். அந்த உரிமையை இந்த வசீகரன் எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டான்" என்றான் உறுதியான குரலில்.

" இல்லை வசீகரன் நாம் நண்பர்களாகவே... " என்றவளை இடைமறித்து, "நண்பர்களாக வாழ்வதற்கு நீங்கள் ஏன் கழுத்தில் இந்த அடையாளத்தை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? " என்றவனின் கைவிரல் அவள் கழுத்தோடு உறவாடிக் கொண்டிருந்த தாலிச்சரடைச் சுட்டிக்காட்டியது .

நினைவிற்கும், நிதர்சனத்திற்கும் இடையே அவள் மனம் ஊசலாட ஆரம்பித்தது.

மேலும் அவள் மன அழுத்தத்தை அதிகரிக்காமல், தன் வாதத்தை நிறுத்திக் கொண்டான் வசீகரன்.

" எப்படி நீங்கள் உங்கள் முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லையோ, அதே போல் நானும் என் முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லை. குட் நைட்!" என்றவன் சிரித்துக்கொண்டே கட்டிலில் படுத்து உறங்க முற்பட்டான்.

செய்து வைத்த சிலை போல் யோசனையில் அசையாது நின்றாள் ஜேபி.

" அம்மணி இப்ப நீங்க தூங்க வரலைனா, ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடினாலும் கொண்டாடி விடுவேன்!" என்றான் இமைகளை மூடிக்கொண்டே.

" ஹான்... என்ன? " என்ற அழுத்தமான ஜேபியின் குரலுக்கு,

" இல்ல நான் ஃபர்ஸ்ட் தூங்கிட்டேன். நீங்க தூங்க வரலையான்னு கேட்டேன்" என்றான் வசீகரன்.

"அது " என்றவளின் உதட்டின் கடையோரம் புன்முறுவல் பூத்தது.

ஏனோ ஜேபியால் வசீகரனை வெறுக்க முடியவில்லை. சிறுவயது ரணத்தின் தழும்பு அவனை நெருங்கவிடவும் இல்லை. இதமாகவும், இரும்பாகவும், தனது மனம் லேசாகி, கனத்துப் போவதை உணர்ந்தவள் ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் சரிந்தாள் உறக்கத்தைத் தேடி.

இருவரின் முகங்களும் எதிரெதிர் திசை பார்க்க, முதுகுகள் ஒவ்வொன்றும் நலம் விசாரிக்க கட்டிலில் துயில் கொள்ள முற்பட்டனர் இருவரும்.

ஜேபியின் அதிர்ந்த முகமே வசீகரனின் கண்ணிற்குள் நிழலாட, தனது தகிக்கும் நிலவை குளிர்விக்கும் எண்ணத்துடன் அலைபேசியை எடுத்து, கவிதை அனுப்ப ஆரம்பித்தான்.

விழிக்கு இமை பாரமாய் இருக்க, வராத தூக்கத்தை அவளும் விடாமல் துரத்த, தன் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்த இசை கேட்டதும், அகக்கண்ணும் புறக்கண்ணும் ஒரு சேர விழித்து, தனக்கு வந்த குறுஞ்செய்தியை வாசித்தாள் கண்களில் ஆர்வம் மின்னும் வண்ணத்துடன்.

" என் காதல் கடலே!
கரையாய் இருந்து உனைத் தொட நான் நினைக்க,

உன் அலை கரத்தால் நீ எனை விலக்க,
நீயும் விடுவதாயில்லை...
நானும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை..."

- ஜேகே

காதல்... காதல்... காதல்... எங்கு காணினும் காதலே!. 'என்னைப் பார்த்தால் எல்லோருக்கும் எப்படித் தான் தெரியுமோ?' என்று மனதோடு கோபப்பட்டவள், " இவ்விடம் காதல் ஸ்டாக் இல்லை... " என்று பதில் செய்தி அனுப்பிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்.

தனக்கு வந்த பதில் செய்தியை பார்த்துவிட்டு வசீகரன் மௌனச் சிரிப்புடன் நித்திரை கொள்ள ஆரம்பித்தான்.

வாழ்வின் அடுத்த நொடி தேடி அவள் ஓட, வாழ்வின் இந்த நொடியை அனுபவிக்க அவன் வழி தேட, இரவுப் பொழுதும் இதமாய் தேய்ந்தது.

வசீகரன் எட்டிப் பார்ப்பதும் ஜேபி திட்டிப் பார்ப்பதும் என பொழுதுகள் வேகமாக உருண்டோடின.

மங்கி பிரதர்ஸ் ஜேபியின் வீட்டிற்கு காலையில் வந்து, அவர்களோடு உணவு உண்டுவிட்டு மீண்டும் அவர்களோடு அலுவலகத்திற்கு கிளம்புவதே வழக்கமாக இருந்தது. அன்றைய காலைப் பொழுதில் அனைவரும் உணவு மேசையில் அமர்ந்திருந்தனர்.

சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்த தனது அலைபேசியை எடுத்தான் வசீகரன். அலைபேசி அணைத்து வைத்திருப்பதைக் கண்டு யோசனையுடன் அதனை ஆராய்ந்தான்.

எவ்வளவு முயற்சி செய்தும் அவனது அலைபேசி வேலை செய்யாததைக் கண்டு சிறு வியப்புடன் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான்.

" என்ன பாஸ் செல்போனை வச்சு இவ்வளவு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க!" என்று இட்லியை சட்டினியில் குளிப்பாட்டிக் கொண்டே கேட்டான் கிருஷ்.

" அது இல்லடா கிருஷ்ணா! அவருடைய கேர்ள் பிரண்டுகிட்ட இருந்து போன் வந்திருக்கும். நம்ம முன்னாடி எல்லாம் எப்படி பேசுவது என்று வெட்கப்பட்டு கொண்டு போனை எடுக்காதது போல் சீன் போட்டு வருகிறார் நம்ம தலைவர். அப்படித்தானே பாஸ்!" என்று கண் சிமிட்டினான் யாதவ்.

கேர்ள் ஃப்ரெண்ட் என்றதும், சட்டென்று ஒரு வினாடி ஜேபியின் புருவங்கள் உயர்ந்ததை மது மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

" ஹே கைஸ்! காலையிலிருந்து சார்ஜ் போட்டேன். செல்போன் தானாகவே ஸ்விட்ச் ஆஃப் ஆகி உள்ளது. பவர் ஆன் செய்தால், செல்போன் வேலை செய்ய மறுக்கிறது. ஒரே மாயமாக இருக்கிறது. நேற்று இரவு கூட நன்றாக வேலை செய்ததே!" என்று கீழ் உதடு மடித்து நெற்றியில் ஒற்றை விரலால் கோடிழுத்தபடி யோசித்தான் வசீகரன்.

" அம்மா நீங்கள் தானே மாப்பிள்ளையின் செல்போனை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்" என்று அன்னம்மாளைப் பார்த்துக் கேட்டார் பெருமாள்.

அனைவரின் கண்களும் அன்னம்மாளின் பக்கம் திரும்ப, "ஆமாம். ரொம்ப நேரம் சார்ஜ் போட்டா செல்போன் சூடாகி விடும் இல்ல" என்று அனைவர் முன்பும் தன் கேள்வியை வைத்தார் அன்னம்மாள்.

" ரைஸா செல்லோ! அதுக்கு நீங்க என்னடா செஞ்சீங்க? " என்றான் கிருஷ்.

" காலையிலிருந்து ரொம்ப நேரமாக உங்க செல்போன் சார்ஜில் இருந்தது மாப்சன். உங்க செல்போன் பாழாகி போய்விடக்கூடாது என்று தான் இதை கழட்டி விட்டேன்" என்று அவன் செல்போனின் பேட்டரியை உணவு மேசையில் அனைவர் முன்பும் வைத்தார் அன்னம்மாள்.

" ஊருக்கு உங்களை மாதிரி ஒரு விஞ்ஞானி, ஆல் இன் ஆல் அழகு ராணி இருந்தா போதும் பேபி! நம்ம நாடு எங்கேயோ போய்விடும் " என்றான் யாதவ்.

" பாவமான கணக்கு பாடத்தை விட, எனக்கு எப்பவும் அறிவியல் பாடம்தான் பிடிக்கும்" என்று கெத்தாகச் சொன்னார் அன்னம்மாள்.

கிருஷ்ணா மேஜைக்கு அடியில் எவ்வளவு அழுத்தமாக கையைப் பிடித்தும் அதனை புரிந்து கொள்ளாமல்,
" அது ஏன் கணக்கு மட்டும் ரொம்ப பாவம்? " நிஜமாகவே புரியாமல் கேட்டான் யாதவ்.

' போச்சுடா! இவன் கேட்ட கேள்வில இப்ப ஏடாகூடமா பதில் வெடிக்க போகுது. உடம்ப இரும்பா வச்சுக்கோடா கைப்புள்ள' என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டான் கிருஷ்.

" கணக்கு ஃபுல்லா நிறைய பிராப்ளமா இருக்கு. அப்போ அது பாவமான பாடம் தானே!" என்று கண்களைச் சிமிட்டினார் அன்னம்மாள்.

" பியூட்டி! உங்கள் பேத்திக்கு இவ்வளவு அறிவு எங்கிருந்து வந்தது என்று இப்போது எனக்குப் புரிந்து விட்டது" என்று நமட்டுச் சிரிப்புடன் ஜேபியைப் பார்த்து கண்ணடித்து விட்டு எழுந்து சென்றான் வசீகரன்.

"கர்.... உங்களால சும்மாவே இருக்க முடியாதா பாட்டி" வசீகரன் தன்னைக் கேலி பேசிய கோபத்தைத் தன் பாட்டியின் மீது காட்டினாள் ஜேபி.

" ஏம்மா ஜேபி நீ கொஞ்ச நேரம் சும்மா இருமா. விஞ்ஞானி அடுத்த ப்ராஜெக்டை ஸ்டார்ட் செய்வதற்குள் நாம் எல்லோரும் எஸ்கேப் ஆகி விடலாம்" என்ற மது, மற்றவர்களையும் இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

வெளிநாட்டுடன் ஒப்பந்தமான புது வித ஆட்டோமேட்டிக் இமேஜ் எடிட்டிங் ஆப்பை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வசீகரனின் 'கரன் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் மிகவும் தீவிரமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

வசீகரனின் தொழில் முன்னேற்றத்தில் இந்த ஆப் அவனுக்கு ஒரு சவாலாக இருந்தது. இதுவரை தான் சம்பாதித்த அனைத்து செல்வங்களையும் திரட்டி அதனை முதலீடாக்கி புதிய மென்பொருள் தயாரிக்கும் திட்டத்தில் தன்னை முழுமூச்சாய் ஈடுபடுத்தி, இரவு பகல் என அலுவலகத்திலேயே குடியிருந்தான்.

மங்கி பிரதர்ஸ் உடன் வீடு திரும்பும் ஜேபிக்கு, வசீகரன் இல்லாத அந்த அறை சிறு தனிமையைத் தந்தது. ஒரு வருடம் காலம் கழித்து இதுதானே நிரந்தரம் என்று முதலில் நினைத்த ஜேபிக்கு நாட்கள் வாரங்களாய் நகர, வசீகரனின் சீண்டல்களும், கிண்டல்களும், அவனுடனான அமைதியான இரவுகளும் இல்லாமல் ஏக்கங்கள் பூக்க ஆரம்பித்தன.

மனதை ரம்யமாக்கும் கவிதை வரிகளும் வராமல் வாழ்க்கை வறண்டது போல் ஓர் உணர்வைத் தந்தது அவளுக்கு.

பாயும் வெள்ளம் போல் அவன் பால் சாயும் மனதிற்கு நித்தம் நித்தம் அணைக்கட்ட முயன்றாள்.

எப்பொழுதும் அவளுடன் இருக்கும் அவளது குடும்பமும் நண்பர்களும் இருந்தாலும் கூட வசீகரனுக்கென ஒரு வெற்றிடம் மனதில் உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை.

நட்பைத் தாண்டி ஊடுருவும் இந்த உறவின் அடுத்த நிலையை மனதிற்குள்ளேயே புதைக்க ஆரம்பித்தாள். தான் புதைத்தது கல் என்று அவள் நினைக்க அதுவோ காதல் விதையாய் உருமாற ஆரம்பித்தது அவள் அறியாமல்.

அலுவலகத்தில் எந்நேரமும் தொழில்நுட்ப இன்ஜினியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வசீகரனை பார்ப்பதே அரிதாக இருந்தது ஜேபிக்கு.

உணவு இடைவேளையின் போது, "ஹேய்! என்னவாம் உங்க பாஸ்க்கு? ஆள் கண்ணிலேயே படக் காணோம்?" ஒற்றைப் புருவம் உயர்த்தி கிருஷ்ணாவிடம் கேட்டாள் ஜேபி.

" சீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம்! அவள் ஈச்சம்பாயை கட்டிக்கிட்டு எதிரே வந்தாளாம்! என்ற கதையாக அல்லவா இருக்கிறது நீ சொல்வது.
நாங்களே வசீ பாஸ்ஸ பாக்க முடியலன்னு ஏக்கத்துல உன்கிட்ட கேட்கலாம்னு இருந்தா, நீ எங்க கிட்ட கேக்குற. பாஸுக்கு நீ பொண்டாட்டியா? இல்ல நாங்க பொண்டாட்டியா?" என்று கிருஷ் அவளை கிண்டல் செய்ய, அனைவரும் சிரித்தனர்.

"உன்னை..." என்று ஜேபி கிருஷ்ணாவின் முதுகில் நாலு அடி போட்டாலும், அடி மனதில் வசீகரனைப் பற்றிய எண்ணங்கள் மேல் எழுந்து கொண்டே வந்தன.

திருமணமான நாளிலிருந்து, தன் மீது அன்பை மட்டுமே பொழிந்த கணவன், திடீரென்று தன்னை தள்ளி நிற்கச் செய்ததை ஆரம்பத்தில் எளிதாக கடந்தவளுக்கு இப்பொழுது ஆத்திரம் வந்தது,

மனதோடு வாதம் எதிர்வாதம் செய்து பார்த்தவள், தன் மனம் சொன்னதற்கிணங்க, விறுவிறுவென வசீகரனின் கலந்தாய்வு கூடத்திற்குள் நுழைந்தாள்.

தொடு திரையில், செயலியின் முக்கிய செயல்பாடுகளை விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரெனக் கதவு திறந்த சத்தத்தைக் கேட்டு, யாரென்று திரும்பி பாராமலேயே வந்தவரை சிறிது சலிப்புடன் வெளியே செல்லுமாறு சைகை காட்டினான்.

முகம் கருத்து வெளியே திரும்பியவளின் மனதிற்குள், அவனை தன்னை நோக்கி திரும்பச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் உதித்தது.

சிறகுகள் நீளும்...

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அம்மணிக்கு வசீயை காணாமல் ஏக்கமா😃😃😃