• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 20

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 20

தன் வீட்டிற்கு வந்த ஜேபி மிகுந்த யோசனையுடன் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டே இருந்தாள். மனமானது அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல், கட்டவிழ்ந்த குதிரை போல் காற்றின் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது.

தனது பேத்தியின் நடவடிக்கையில் வித்தியாசம் இருப்பதை பார்த்த அன்னம்மாள் அவள் முன்பு வந்து சொடுக்கிட்டு, " ஒய் வாக்கிங்? நோ டாக்கிங்? டெல்... டெல்... டெல்... " என்றார்.

"பச்..." என்று சலிப்படைந்த படி அவரைச் சுற்றிச் சென்றாள் ஜேபி.

எப்பொழுதும் தன் பாட்டியை வம்பிழுக்கும் ஜேபி அமைதியாக அவரைக் கடந்து செல்வதைப் பார்த்த பெருமாள், " பாப்பா நம் வீட்டு தோட்டத்தைச் சுற்றி நாம் நடந்து வரலாமா? " என்று கேட்டார்.

"ம்..." என்று தலையசைத்துக் கொண்டே அவரோடு தோட்டத்தைச் சுற்றிய ஜேபியிடம், " உன் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் விஷயம் தான் என்னடாமா? " என்றார் பெருமாள் பரிவாக.

பொய் சொல்ல வராத ஜேபிக்கு, உண்மையைச் சொல்வதில் தயக்கம் மேலிட, "அப்பா..." என்றாள் உள்ளே சென்ற குரலில்.

"எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்ளும் என் மகள் காணாமல் போய் விட்டாளே!" ஜேபியின் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே.

" அப்பா ப்ளீஸ்! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. சரி! நான் உங்களிடம் ஒன்று கேட்பேன். என்ன? எதற்கு? யார்? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் உங்களுக்குப் பதில் சொல்ல முடியுமா? " என்றாள்.

" நீ கேளுடா பாப்பா! பதில் தெரிந்தால் தெரியும் என்று சொல்லப்போகிறேன். தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லப் போகிறேன்" என்றார்.

" ஒருவரை ஒருவர் நன்கு அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் மனக்கசப்பு ஏன் வருகிறது? " என்றாள்.

' அவரவர் இடத்தில் இருந்து யோசிக்காமல் இருப்பது. அன்பை சரியான இடத்தில் சரியான நேரத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பது. எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது. நீ பெரிதா? நான் பெரிதா? என்ற எண்ணத்தில் மேலோங்கி இருப்பது... என சொல்லிக் கொண்டே போகலாம் பாப்பா " என்றார்.

" இருக்கலாம் ஆனால்... பொங்கி வந்த வெள்ளம் போல் இருக்கும் அன்பு திடீரென்று வறண்டு வற்றிப்போக என்ன காரணம் இருக்கலாம் அப்பா? " தனது அனைத்து கேள்விகளுக்கும், குழப்பத்திற்கும் விடை தன் தந்தையிடமே இருக்கும் என்ற உறுதியுடன் ஆர்வம் பொங்கக் கேட்டாள் ஜேபி.

" நீ நீயாக இரு. நான் நீயாக மாறிவிடுகிறேன் என்று இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்தாலே போதும் பாப்பா, அவர்கள் உறவு என்றும் எப்போதும் பலப்படும்" என்றார்.

" ஒருவருக்காக நாம் மாறினால், நம் அடையாளம் தொலைந்து போகாதா? " தான் மாற முடியாது என்ற தொனியில் ஜேபி கேட்டாள்.

தன் மகள் கேட்கும் கேள்விகள் நிச்சயம் அவள் நண்பர்களுக்காக இல்லை என்பதை புரிந்து கொண்ட பெருமாள், அவை அனைத்தும் வசீகரனுக்காக என்பதை தெளிவாக அறிந்துகொண்டு, தன் குரலை செருமிக் கொண்டே, " ஓர் உன்னதமான உறவுக்காக மாறுவது என்பது மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர. முயற்சியாக இருக்கக் கூடாது. அந்த உறவினை மகிழ்ச்சி அடையச் செய்து நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அது உன் அடையாளத்திற்கு அணிகலன்களாக இருக்குமே தவிர, கை விலங்காய் என்றும் கட்டிப் போடாது." என்றவர் மகளைப் பார்த்துக் கொண்டே,

" அந்த உறவு கணவன் மனைவி உறவாக இருந்தால்... " என்று பெருமாள் கூறியதும்,


ஜேபியின் முன் நெற்றித் தசைகள் இறுகி, இமைகள் அகல விரிய ஆரம்பித்தது.


அதை கவனிக்காத மாதிரி பெருமாள் தொடர்ந்தார். "கணவன் மனைவி உறவு என்றும் ஆனந்தத்துடன் நிலைக்க தேவையான ஒன்று, ரகசியம். அதுவும் பரம ரகசியம். கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை இருவரும் மிக மிக ரகசியமாகக் கண்டுபிடித்தால், அவர்கள் வாழ்வும் ரசிக்கும் விதமாக மாறும்" என்றார் சிரித்துக் கொண்டே.

" அது என்ன ரகசியம்? " என்று ஆர்வம் பொங்கக் கேட்ட ஜேபி தன் தளிர் நாக்கை சட்டென்று உதட்டோரம் கடித்துக் கொண்டாள்.

"ஹா... ஹா... ம்ஹூம்... அது பரம ரகசியம். அவரவர் ரகசியத்தை அவரவர் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்றவர் தன் மகள் விரைவில் கண்டுபிடித்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் முன்னேறினார்.

தன் தந்தை சென்றவுடன் தான் இருந்த இடத்திலேயே அசையாது நின்று, ' தனக்கும் வசீகரனுக்குமான ரகசியம் என்ன?' யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் அறைக்குள் நுழைந்து தன் பொக்கிஷப் பெட்டியைத் திறந்து, அதனுள் இருக்கும் வசீகரனின் உருவச் சிலையை எடுத்தாள்.

" என்ன மிஸ்டர் வசீகரன்? நீங்களாக தேடி வந்தீர்கள். என் நிபந்தனைகளுக்கெல்லாம் தலையாட்டி விட்டு, துணையாக மாறினீர்கள். அளவுக்கு அதிகமான அன்பு காட்டினீர்கள். என் காதல்! என் விருப்பம்! என்று போராடினீர்கள். எனக்காக உங்கள் வீட்டை விட்டு வந்து, உங்களிடம் என்னை தனித்துவமாக உணர வைத்தீர்கள்.

அப்படி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய இந்த ஜெயலட்சுமி பெருமாளை ஒரே நொடியில் தரையிலும் போட்டு விட்டீர்களே! ச்சோ... ச்சோ.. தப்பு செய்து விட்டீர்களே வசீகரன்!" என்றவள் தன் வலது ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்றாய் சேர்த்து,

" நேற்று வரை உங்களை இத்துணை அளவு பிடித்திருந்தது. என்னை உதாசீனம் செய்த நொடியில் இருந்து உங்கள் மீது வானளவு கோபம் மட்டுமே இப்பொழுது எஞ்சி இருக்கிறது.

நான் உணர்ந்த வலியை உங்களையும் உணரச் செய்வேன். அதீத அன்பும், அதீத உதாசினமும் என்ன செய்யும் என்பதை உங்களுக்கு நிச்சயம் காட்டுவேன். என்னை சீண்டாத வரை உங்களுக்கு பாதகம் இல்லை. ஆனால் சீண்டி விட்டீர்களே மிஸ்டர் வசீகரன்! இந்த ஜேபி யார் என்பதை இனி காணுங்கள்!

ரொம்ப ஆட்டம் காட்டினால் தண்ணீரில் கரைத்து விடுவேன் ஜாக்கிரதை!" என்று தான் வடித்த சிலையிடம் உரையாடினாள் ஜேபி.

இரவு நெருங்கிய வேளையில் வசீகரன் இன்றும் வீடு திரும்பாததைக் கண்டவள் முகத்தில் ஏளனப் புன்னகை பூத்தது.

அலுவலகத்திலும் வீட்டிலும் அவனைக் காணாது, எப்படியாவது வசீகரனை தன்னைப் பார்க்க வரச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

அலைபேசியை கையில் எடுப்பதும், கீழே வைப்பதுமாக பல முயற்சிகள் செய்தாள். இறுதியாக அவளின் விரல்கள் தயக்கத்துடன், "ஹாய் வசீ.." என்ற குறுஞ்செய்தியை அனுப்பியது.

அரை மணி நேரம் கடந்தும் தான் அனுப்பிய குறுஞ்செய்தியை அவன் வாசிக்காததைக் கண்ட ஜேபிக்கு கோபம் உச்சியில் நடனமாட ஆரம்பித்தது.

நேரில் அவன் அலுவலகத்திற்கே சென்று பார்த்து விடலாம் என்று நினைத்த ஜேபி, கீழே வந்து தன் தந்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பலாமென்று அவர் அறையின் அருகில் வந்த போது, மருந்துகளின் உதவியால் அவர் உறங்கி இருப்பதைக் கண்டவள், சத்தம் இல்லாமல் அவர் அறையின் கதவைச் சாத்திவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ஒரு முடிவோடு.

இருண்ட வானத்தில் ஒளிர்ந்த நிலவு அவளுக்குத் துணையாய் உடன் வர, தன் இரு சக்கர வாகனத்தில் வேகம் கூட்டி, ஆள் அரவமற்ற சாலையில் பயணிக்க ஆரம்பித்தாள்.

அவள் பாதையில் பாதி தூரத்தை அடைந்ததும் வண்டியில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் தன் இயக்கத்தை நிறுத்தியது அந்த இருசக்கர வாகனம்.

கோபமான மனநிலையில் பெட்ரோல் இருக்கிறதா? இல்லையா? என்று சோதிக்காத தன் மடத்தனத்தை எண்ணி நொந்தாள் அந்த நொடியில்.
தன் நண்பர்களுக்கு அழைக்கலாம் என்று நினைத்தால், வசீகரனைத் தேடி தான் சென்று கொண்டிருப்பதை அவர்கள் அறிந்தால் தன்னைக் கேலி செய்வார்கள் என்று அந்த எண்ணத்தை விட்டு விட்டாள்.

தன் கடைசி முயற்சியாக வசீகரனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். நீண்ட நேரம் அழைத்து ஓய்ந்தது அலைபேசி.

செய்வதற்கு ஒன்றுமற்ற நிலையில் வண்டியை, சாலையில் தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

நேரம் செல்லச் செல்ல, சாலை விளக்கில் தெரியும் அவள் நிழலோடு, வேறு சில நிழல்களும் தொடர ஆரம்பித்தது.

வெளிநாட்டு நிறுவனத்துடன் காணொளியில் உரையாடிவிட்டு, உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளின் இமைகளைச் சிமிட்டி, கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்து, சாவகாசமாய் சைலன்ட்டில் போட்டு வைத்திருந்த தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

ஜேபியிடம் இருந்து வந்த மிஸ்டு காலைப் பார்த்து, இன்பமாய் அதிர்ந்தான். " பாருடா அம்மணி நம்மை நல்லா தேடி இருக்காங்க!" என்று சிரித்துக் கொண்டே அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை படித்தவனின் காதல் மனது இறக்கை கட்டி பறந்தது.

" விரும்பிச் சென்றால் விலகிச் செல்வதும், விலகிச் சென்றால் விரும்பி வருவதும், பெண் குணமோ!" என்றவன் வெகு நாள் சோர்விற்கு பிறகு புத்துணர்வாய் உணர்ந்தான்.

மீண்டும் மீண்டும் ஜேபிக்கு அழைப்பு எடுத்தான். சிக்னல் சரிவர கிடைக்காத காரணத்தினால் அவன் அழைப்பு அவளுக்கு எட்டவில்லை.

மனதிற்குள் அலாரம் அடிக்க, ஜேபியின் வீட்டிற்கு அழைப்பு விடுத்தான். ஜேபி வீட்டில் இல்லாததையும், அவளுடைய இருசக்கர வாகனமும் இல்லாததையும் பெருமாள் தெரிவித்தார்.

ஜேபி தனது நண்பர்களை காணச் சென்றிருக்கலாம் என்று பெருமாளை சமாதானப்படுத்திய வசீகரன், மங்கி பிரதர்ஸ்க்கு தனித்தனியாக அழைப்பு விடுத்தான். அவர்களுக்கும் எந்த செய்தியும் தெரியாத காரணத்தினால் சிறிது பதற்றம் தொற்றிக் கொண்டது வசீகரனுக்கு.

நடுநிசி காணொளி அழைப்புகளை தற்காலிகமாக பார்த்துக் கொள்ளுமாறு தன் உதவியாளனுக்கு கட்டளையிட்டு விட்டு, தனது காரினை எடுத்துக்கொண்டு ஜேபியைத் தேடி புறப்பட்டான் வசீகரன்.

சாலைகளில் அவனது கண்கள் இருட்டினைத் துலாவி தன் தலைவியைத் தேடியது. முதன் முதலாகத் தன் மனைவி தன்னைத் தேடியது தந்த இன்பத்தில், அவளைக் காணவில்லை என்ற துன்பமும் கலந்து அவனை ஆட்டுவித்தது.

சிறிது தூரத்தில் ஆள் அரவமற்ற சந்தின் முனையில், ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது பெண் ஒருத்தி கவிழ்ந்து படுத்திருப்பதைக் கண்டு மனம் துணுக்குற்று அருகில் சென்றான்.

அருகில் செல்லச் செல்ல அது ஜேபி என்று தெரிந்ததும் அவன் கார் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. அவளுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததும் தன் அலைபேசியில் விடாது அழைப்பெடுத்துக் கொண்டிருந்த மதுவிற்கு, தான் ஜேபியைக் கண்டுவிட்டதாகவும், அவளை அழைத்து வருவதாகவும் அவசர அவசரமாக கூறிவிட்டு அழைப்பினைத் துண்டித்தான்.

"ஹேய் ஜேபி..." என்று சப்தமிட்டுக்கொண்டே, அவள் அருகில் சென்றவன் அவள் தோளினைத் தொட்டான்.

அவன் அவளைத் தொட்ட மாத்திரத்தில் ஜேபியின் கரம் வலிமையாக அவனைத் தள்ளி விட்டது. சாலையில் சமநிலை தடுமாறியவன், சடுதியில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நின்றான்.

" என்னங்க அம்மணி? " என்று வண்டியின் முகப்பில் குனிந்து கொண்டிருந்த அவள் தலையினை தொட்டு நிமிர்த்தப் பார்த்தான்.

ஒருவித வீம்புடன் உடம்பினை இறுக்கி எந்தவித அசைவும் தராமல் இருந்தாள். அவளைத் தொட்ட தன் கரம் பிசுபிசுவென இருப்பதை உணர்ந்த வசீகரன், விளக்கு ஒளியில் தன் கையினை பார்க்க அது ஜேபியின் இரத்தம் என உணர்ந்தவன் பதைப்பதைத்தான்.
" என்னடா? " என்று கேட்டவன் அவளின் மறுப்புகளைப் பொறுப்பெடுத்தாமல் அவள் முகத்தினை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.

பெரிய போராட்டத்திற்கு உள்ளான அவளின் தோற்றம் அவனின் பதட்டத்தை அதிகரித்தது. " உங்களுக்கு ஒன்னும் இல்லையே அம்மணி? என்ன நடந்தது? " என்று அவள் நலத்தினை அறியும் நோக்கில் கேட்டான்.

ஜேபியின் முகம் நெருப்பு ஜுவாலை போல் ஜொலிக்க ஆரம்பித்தது. சட்டென முகத்தில் ஒரு கேலி புன்னகையை வரவழைத்துக் கொண்டு, " அது ஒன்னும் இல்லை மிஸ்டர் வசீகரன்! ஒரு நாலு பேர் சேர்ந்து என்னை.... " என்று வார்த்தைகளை முடிக்காமல் கொக்கியிட்டு நிறுத்தினாள்.

"வாட்?" என்று அதிர்ந்தவன் கண்களால் அவளை ஆராய்ந்தான்.

" வாவ்! உங்களுக்கு பார்த்தவுடன் கற்பு இருக்கிறதா? போய்விட்டதா என்று தெரிந்து விடுமோ? சூப்பர் வசீகரன் " என்று இரு கரம் சேர்த்து கைதட்டி பாராட்டுவது போல் அவனை இகழ்ந்தாள்.

" முட்டாள் மாதிரி பேசாதீங்க அம்மணி! நாய் கடித்து விட்டால் நாம் செத்தா போய் விடுகிறோம்? ஊசி போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போவதில்லையா? உங்களுக்கு அவசரச் சிகிச்சை எதுவும் தேவைப்படுமோ? என்றுதான் ஆராய்ந்தேன்" என்றான் காரசாரமாக.

" இப்பொழுது என்ன வசீகரன்? எனது மானம் போய்விட்டதே என்று உங்களுக்கு ரொம்ப கவலையாக இருக்குமே!" எள்ளல் துளிர்த்தது அவள் குரலில்.

" மானம் என்பது நாம் வாழும் வாழ்க்கை முறைமை தான்! அதில் நீங்கள் சொக்கத்தங்கம் அம்மணி! உங்களை யாரும் ஒரு குறை சொல்ல முடியாது " என்றவன் அவளை அமைதிப்படுத்துவதற்காக அவள் அருகில் வர முனைந்தான்.

ஐவிரல் கொண்டு அவனைத் தடுத்து, "உங்கள் மனைவி தங்கமா? தகரமா? என்று உரசிப் பார்த்து விட்டார்களே! உங்களுக்கு இப்பொழுது அருவருப்பு தோன்றுமே! ஆண்கள் அனைவருக்கும் அப்படி தோன்றுவது தானே இயல்பு" என்றாள் விரக்தி புன்னகையைச் சிந்தி.

சட்டென்று வசீகரனின் தோள்கள் உயர்ந்து, உடல் விரைப்புற்று நிமிர்ந்தது
" இது நான் பார்த்த ஜேபி இல்லை... இது என் ஜேபி இல்லை " அழுத்தமாய் வந்தது வசீகரனின் வார்த்தைகள்.

சிறகுகள் நீளும்...


 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஜேபி ஏதும் நாடகம் செய்கின்றாளா?🧐🧐🧐