• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 21

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 21

"என்ன தெரியும்? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மிஸ்டர் வசீகரன்?" ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது ஜேபிக்கு.

" எதனையும் எதிர்த்துப் போராடும் உத்வேகம். எந்தச் சூழ்நிலையிலும் பதட்டப்படாத மனோ பக்குவம். சட்டென்று யோசிக்கும் திறன், என்ன நடந்தாலும் துவண்டு போகாத திடம் வாய்ந்த உள்ளம்.

கேலி பேசும் உலகத்தை, ஒற்றைப் பார்வை எனும் உளி கொண்டு தகர்ப்பவள் நீ! நீ அஞ்சுவதும் இல்லை! யாரிடமும் கெஞ்சுவதுமில்லை!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உன்னிடம் நெருங்க முடியும். வாழ்க்கையில் நீ சலிப்படைந்ததும் இல்லை. சோர்வடைந்ததும் இல்லை.

உயிர் கொடுத்த அன்னையை விட உரு கொடுத்த தந்தையை நேசிப்பவள் நீ!

ஊனில் உயிரோடு நட்பினை கலந்தவள் நீ. பாலின பேதமை இல்லை என்றாலும் ஆண் இனத்தை, மதில் எல்லையில் நிறுத்தி இருப்பவள் நீ! தன்னிடம் இருக்கும் பொம்மைகள் தான் உலகம் என நினைக்கும் மழலை நீ!

திறமை இருக்கும், கர்வம் இருக்காது. அழகு இருக்கும் அலட்டல் இருக்காது. சுயம் தொலைக்காத இந்த குணங்கள் தான் என் ஜேபியின் அடையாளங்கள்.

ஆனால் என் முன்னே நிற்கும் இந்த ஜேபி... யாரையும் நெருங்க விடாமல் அடர் கருமை நிறம் பூசி தன்னைத்தானே மறைத்துக்கொண்டு நிற்கும் இந்த ஜேபி நிச்சயம் எனது ஜேபி கிடையாது" என்றான் வசீகரன் வேக மூச்சுக்களுடன்.

தன்னை ஆழ்ந்து புரிந்து கொண்ட உள்ளத்தின் வார்த்தைகளில் கண்கள் கலங்க ஆரம்பித்தது ஜேபிக்கு.

யாரிடமும் தோற்க விரும்பாதவள் அவனிடமா தோற்பாள்? தலையினை சிலிப்பிக் கொண்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

" நான் நாலு பேர் சேர்ந்து என்னை... என்று சொன்னதும் நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்திருந்தால் என்னை அப்படி பார்த்திருப்பீர்கள்?. உங்கள் பார்வையின் அர்த்தம் எனக்கு புரியாமல் போகுமோ?" கோபத்தின் வேகம் குறையாமல் கேட்டாள் ஜேபி.

" நடுநிசியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், நட்ட நடு ரோட்டில், காயங்களுடன், என்னை நாலு பேர் என்று முடித்தால் வேறு என்ன நினைக்கத் தோன்றும் ஜேபி? அப்படிப் பார்ப்பதால் தவறு என்ன இருக்கிறது? உன் பாதுகாப்பிற்கு நான் தானே முதல் பொறுப்பு. தவறு நடந்திருந்தால், அதனை சரி செய்யும் கடமையும் எனக்கு தானே இருக்கிறது" என்றான் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில்.

" தவறா? ஆம் தவறுதான். பெண் என்றாலே குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு மட்டுமே உரித்தானவள் என்கிற பிற்போக்குத்தனமான அறிவுரையைச் சொல்லி அவளின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறித்துக்கொள்ளும் ஆணாதிக்கக் குடும்ப அமைப்பு தவறுதான்.

பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றம் சொல்வதும் உடைகளைக் காரணம் காட்டுவதுமான விசித்திரத் தீர்வுகளே விஷமிகளின் முட்டுச்சந்து மூளையில் உதயமாகின்றதே அது தவறுதான்!

பெண்களைச் சீண்டுவோரைப் பொது இடத்தில் வைத்துப் பெண்களே தண்டனை கொடுக்காமல் இருக்கிறார்களே அது தவறுதான்!

பாலியல் வன்முறை வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது மனச்சாட்சி இல்லாத வக்கீல்கள் இந்த வழக்கினை ஏற்று குற்றவாளிகளுக்காக வாதாடுகிறார்களே அது தவறுதான்.

ஆண்கள் பின்னிய சிலந்தி வலையில் பிறந்ததிலிருந்து, இறுதிவரை பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப் பிழைத்து ஓடிக்கொண்டிருக்கிறோமே இதுவும் தவறுதான்... " என்றாள் அவனை சவால் பார்வை பார்த்து.

" ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாய் என்னுடன் வாதித்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களவன் என்பதை மறந்து" என்றான் சோர்வடைந்த குரலில்.

தன்னிடம் என்றுமே கண்ணியமாக நடந்து கொள்பவனிடம் இதற்கு மேல் வாதிட்டு என்ன செய்ய என்று நினைத்தவளும் ஓர் பெருமூச்சுடன் அமைதியானாள்.

" உனக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது ஜேபி. என்னுடன் மருத்துவமனைக்கு வாருங்கள்" என்று அழைத்தான்.

" வெளி காயத்திற்கு மருந்திட்டிடலாம் மிஸ்டர் வசீகரன். ரணமான தழும்பை மீண்டும் மீண்டும் கீறி விட்டு, அமிலம் ஊற்றினால் நானும் என்ன செய்ய முடியும்? " என்றாள் கண்களில் வலியுடன்.

" கதவு பெரிது தான் ஆனால் அதனை பூட்டி இருக்கும் பூட்டு சிறியது. பூட்டு பெரியது தான் ஆனால் அதனை திறக்கும் சாவி சிறியது. எப்பொழுதும் ஒரு பெரிய பிரச்சனையின் தீர்வு சிறியதாகவே இருக்கும். உன்னுடைய தீர்வினை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்றான்.

" எனக்கு என்ன நடந்தது என்று நீங்கள் கேட்கவே இல்லை"

" என்ன நடந்தாலும், நான் உன்னவன். நீங்கள் என்னவள். அதில் எந்த மாறுதலும் இல்லை"

வலிகள் சுமந்த ஜேபியின் விழிகள் ஒளியால் நிறைய ஆரம்பித்தது.

" என்னைக் காலம் முழுவதும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். இப்பொழுது நாம் மருத்துவமனைக்குச் செல்லலாம்" என்றான்.

" மருத்துவமனைக்கு செல்லத்தான் வேண்டும். எனக்காக இல்லை. அவர்களுக்காக! ஏனென்றால் இந்த ரத்தம் என்னுடையது அல்ல. அவர்களுடையது" என்று ஒரு திசையினை நோக்கி விரலை சுட்டிக்காட்டினாள்.

ரத்தம் தோய்ந்த முகத்துடன் இருவர் மயங்கி சரிந்து இருந்ததைக் கண்டதும், நடந்ததை வசீகரனால் எளிதாக யூகிக்க முடிந்தது.

கோபத்துடன் அவர்களை தாக்குவதற்கு ஓரெட்டு முன்னேறி வந்ததும், " வேண்டாம் வசீ! அவர்கள் சுயநினைவை இழக்கும் வரை அடித்தாகி விட்டது. இனி உங்கள் ஓரடியில் அவர்கள் மேலோகம் செல்வது உறுதி" என்றாள் லேசான புன்னகையைச் சிந்திய படி.

அந்தக் கயவர்கள் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தாலும், ஜேபியின் மனநிலையை சீராக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு,
" அடடா என் மனைவியின் வீர தீரப்பிரதாபங்களை நான் பார்க்காமல் விட்டு விட்டேனே!" என்றான் சூழ்நிலையை இலகுவாக்கும் நோக்குடன்.

" ஓ தாராளமாக இப்பொழுதும் பார்க்கலாம் மிஸ்டர் வசீகரன்" என்றாள் கைமுஷ்டியை மடக்கிக் கொண்டு.

" எங்க ஜேபி அம்மணி இஸ் பேக். அம்மாடி! அந்த மாதிரி கேஸை நீங்கள் அடிக்க வேண்டும். இந்த பாஸை நீங்கள் அணைக்க வேண்டும்" என்றான் சின்னச் சிரிப்புடன்.

" இல்லை என் மிஸ்டர் வசீகரன்" இன்னும் என் கைகள் துருதுருவென இருக்கின்றனவே!" என்றவர் தன் கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து தலைக்கு மேலே நெட்டி முறித்தாள்.

" அதற்கு என்னங்க அம்மணி! நீங்கள் வளர்க்கும் அடிமைகளை வரச் சொன்னால் போயிற்று! ஒவ்வொருத்தனும் இருக்கும் தினுசுக்கு நீங்கள் ஒரு வாரம் வைத்து அடித்தாலும் நன்றாகத் தாங்குவார்கள்" என்றான்.

" உங்களுக்கு ஒரு பூசையை போட்டால் தான் சரி வருவீர்கள் வசீகரன்" என்றாள்.

" ராத்திரி நேரத்து பூஜையா அம்மணி? " கண்களில் கேலி கலந்தாடக் கேட்டான்.

" இப்பொழுதும் ராத்திரிதான். பூஜையை போட்டு விடலாமா? " என்றவள் அவனை அடிப்பது போல் கைகளை ஓங்கினாள்.

அவளின் மலர்க் கரங்களை தன் நெஞ்சோடு பதித்துக் கொண்டு, "இந்தக் கரங்கள் என்னை காதலோடு அணைக்கும் நாள் எதுவோ? " என்றான் ஆசையும் ஏக்கமும் கலந்து.

அதுவரை அவன் மீது மறைந்திருந்த கோபம் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது அவளுக்கு.

" போதும் மிஸ்டர் உங்கள் நடிப்பு! வீட்டிற்கும் வராமல், அலுவலகத்திலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்படி நடு ரோட்டில் வசனங்கள் பேசினால், நாங்கள் நம்பி விடுவோமா?" என்றாள்.

" நமது வேலை எவ்வளவு முக்கியமான வேலை என்று உங்களுக்கு நிச்சயம் தெரியும் அம்மணி. மிஸ்டர் வசீகரனின் வெற்றி மிஸஸ் வசீகரனுக்கு தானே!" என்றான்.

" போதும் வசீகரன் நான் ஏற்கனவே குளிரில் தான் நிற்கிறேன். கூடை ஐஸை தலையில் வைக்க வேண்டாம்" என்றாள்.

இவர்கள் இருவரும் வீட்டிற்கு இன்னும் திரும்பாமல் இருக்கும் காரணத்தினால் கிருஷ்ணா வசீகரனுக்கு அழைப்பு விடுத்தான்.

கிருஷ்ணாவிற்கு தாங்கள் இருக்கும் இடத்தைச் சொல்லி உடனடியாக வரும்படி சொன்னான் வசீகரன்.

சிறிது நேரத்தில் கிருஷ்ணாவும் யாதவும் வர, ஜேபியை யாதவுடன் காரில் செல்லுமாறு சொல்லிவிட்டு, கிருஷ்ணாவை ஜேபியின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறினான்.

கிருஷ்ணா, வசீகரன் தங்களோடு வரவில்லையா? என்று கேட்க அவர்களுக்கு ஜேபியையும் ஜேபிக்கு பின்னால் சற்று இருளில் கீழே கிடந்தவர்களையும் மாறி மாறி காட்டி கண் ஜாடை செய்தான்.

சடுதியில் நடந்ததை கணித்தவர்கள் அவர்களை அடித்து துவைக்கும் நோக்குடன் முன்னேற, வசீகரன் தலையசைத்து அவர்களைத் தடுத்து, ஜேபியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி கூறினான்.

அவர்கள் சென்றதும் வசீகரன் முகத்தில் அதுவரை தவிழ்ந்திருந்த மென்மை மாறி வன்மை குடி புகுந்தது. அலைபேசியின் வழியே காவல் நிலையத்திற்கு அழைப்பெடுத்தான்.

மறுநாள் செய்தித்தாளில், சாலையில் அடிபட்டுக் குற்றுயிராய் கிடந்த இருவரை அரசு மருத்துவமனையில் வசீகரன் சேர்த்ததாகத் தகவல் வெளியாகிறது.

செய்தித்தாளில் இந்தச் செய்தியைப் படித்ததும் ஜேபி வசீகரன் முன் வந்து நின்றாள்.
வெகு நாள் கழித்து கிடைத்த ஓய்வில் கண்ணயர்ந்து கொண்டிருந்த வசீகரனை, முரட்டுத்தனமாக உலுக்கி எழுப்பினாள்.

" என்னங்க அம்மணி!" என்றவனின் குரலில் தூக்கம் வழிந்து ஓடியது.

" நாம் உடனே காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் மிஸ்டர் வசீகரன்!"' என்றாள் அதிகாரமாக.

"ஏன்?"

" என்ன ஏன்? அவர்கள் மீது விபத்து வழக்கா பதிவு செய்ய வேண்டும்? அவர்கள் மீது பாலியல் அத்துமீறலுக்கான வழக்கை நாம் பதிவு செய்தே ஆக வேண்டும்" என்றாள் அழுத்தமான குரலில்.

" இல்லை அம்மணி. அது சரி வராது. கோர்ட் கேஸ் என்று அலையும் போது உங்களைக் கேள்விகள் எனும் ஆயுதத்தால் குத்திக் கிழிப்பார்கள். அதிகபட்சமாக அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்குமா? அதைவிட அதிகமான தண்டனையை நான் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தருவேன் அம்மணி" என்றான் தீவிரத்துடன்.

" இல்லை மிஸ்டர் வசீகரன்! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது பெண், கோர்ட்டில் வாக்குமூலம் ‌கொடுத்து விடக்கூடாது என்பதற்காக அவரது நாக்கை துண்டித்த கொடூர செயல் நடந்தது இந்த நாட்டில் தான் . பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண் அதை தன்னளவிலோ, குடும்பத்தின் வரையிலோ மறைத்துக் கொண்டால் பிரச்னையில்லை. அதுவே அவளுக்கு நிகழ்ந்ததை வெளியுலகிற்கு சொன்னால், இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக துணிந்து நின்றால், சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டு நியாயம் வேண்டினால் அவள் சந்திப்பது மேலும் மேலும் கொடுமைகளை மட்டுமே.

பாலியல் வன்முறையைத் தாண்டி அந்தப் பெண்ணின் உடல்மீது அவர்கள் காட்டும் வக்கிரம் நம் எல்லோரையும் திகைக்க வைக்கிறது.
உண்மையில் பெண்ணின் மரணம்கூட அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்த வக்கிரத்தை வெறும் ஆணாதிக்கம் என்கிற வரையறைக்குள் சுருக்கி விட்டுப் போக முடியாது.

பெண்களுக்குத் தற்காப்புக் கலை, தனிமனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு, குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் போன்றவற்றைப் பலரும் தீர்வுகளாகச் சொல்லியிருந்தார்கள்.
ஆபாசங்கள் மலிந்து கிடக்கும் சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் பெண்கள் மீதான வன்முறைக்கு முக்கியக் காரணம் என்று கூறும் இந்தச் சமூகம்.

பெண்களைத் தெய்வமாக மதிக்கும் கலாச்சாரம் நம்முடையது என வெளியில் சொல்லிக்கொண்டு, யாரும் பார்க்காத நிலையில் பெண்களை மிகக் கீழ்த்தரமாக நடத்தும் வெற்று கலாச்சாரப் பெருமை எதற்கு?

பெண்ணைத் தெய்வமாகப் பார்ப்பதற்கு முன், முதலில் உயிருள்ள மனுஷியாகப் பார்க்குமா இந்தச் சமூகம்?

உண்மையில், பள்ளிக்கும், கல்லூரிக்கும், வேலைக்கும், நீதிகேட்டு காவல்நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் செல்லும் பெண்கள் நிச்சயம் பத்திரமாக வீடு திரும்புவார்கள் என நம் அரசால் உறுதிமொழி கொடுக்க முடியுமா?

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொன்னால் அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று நினைக்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவராய் இருப்பது எனக்கு மிகவும் வேதனையைத் தருகிறது வசீகரன்" என்றாள் நம்பிக்கை பறிபோன குரலில்.

"அப்படி இல்லை..." என்று வசீகரன் ஆரம்பிக்கும் முன் அவனைத் தடுத்து, " தீர்வுகள் இல்லாமல் தீர்ப்பளித்து விட்டீர்கள்! வானம் சுருங்கினால் பறவையினால் பறக்க முடியாது. ஆனால் நான் சற்று வித்தியாசமானவள் வசீகரன். என் புதிய வானத்தை நிச்சயம் தேடுவேன் " என்றவள் விறுவிறுவென அறையினை விட்டு வெளியேறினாள்.

எப்பொழுதும் போல் ஜேபியின் ஆளுமையும் தைரியமும் அவனை வசீகரித்தது.

சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் வரை ஓய மாட்டாள் என்றுணர்ந்த வசீகரன், அவளுடைய நண்பர் பட்டாளத்திற்கு அழைப்பெடுத்து, விஷயத்தை தெளிவாக விளக்கி, அவளுடன் இருக்குமாறு அன்புக் கட்டளையிட்டான். எல்லா உதவிகளையும் தானே செய்வதாகவும், இப்பொழுது ஜேபியிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் கூறினான்.

வெகு நாட்கள் கழித்து, அவளுக்கு கவிதை அனுப்ப ஆரம்பித்தான்.

" தூரங்கள் தெரிவதில்லை

என் துயிலில் நீ இருப்பதால்...

துக்கங்களும் தெரிவதில்லை
என் காதலை நீ மறுப்பதால்..."


-ஜேகே

' என் காதலை உங்களிடம் சொல்லி சரணடையும் நாளுக்காக காத்திருக்கிறேன் அம்மணி' என்று மனதோடு மருகி விட்டு அலுவலகத்திற்கு விரைந்து கிளம்பினான்.

குறுஞ்செய்தியைப் படித்ததும் காதல் என்ற எழுத்தோடு அவளது மனம் அவளைக் கேட்காமலேயே, வசீகரனை இணைத்துப் பொருத்தியது. தன்னைக் காணவில்லை என்றதும் அவன் பதைப்பதைப்போடு துடித்துக் கொண்டு ஓடி வந்தாலும், அவள் மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் இன்னும் ஏதோ ஒன்றை அவனிடம் எதிர்பார்த்தது.

வசீகரன் தன்னைத் தேட வேண்டும் என்ற வைராக்கியம் மனதோடு கொழுந்து விட்டு எரிய, தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பினாள்.

"முகவரி தெரியாத கவிதையே...
உந்தன் வார்த்தைகள் தென்றலாய் என்னை வருடியது நிஜம்.
உந்தன் வார்த்தைகளை என்றுமே சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் எப்பொழுதும் நான்.
நட்பாய் ஒரு விண்ணப்பம்!
முரணாயிருக்கும் ஒருவனுக்காக கோபக்கவிதை எழுதித்தர முடியுமா? அவன் மீது கோபம் இருக்கிறது. எழுத்தில் வடிக்கும் போது அந்தக் கோபம் கரைந்து விடுகிறது.
நட்புக்காக ப்ளீஸ் ஜேகே!"

என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

குறுஞ்செய்தியைப் படித்த வசீகரனின் முகம் ஆயிரம் ஜாலங்களை வாரி இறைத்தது.

சிறகுகள் நீளும்...

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஜேபியின் வெற்றிக்கு வசிகரனும் உறுதுணையாய் 😎😎😎