• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 20

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 20

சங்கமித்ரா தான் தேர்ந்தெடுத்த துறையில் நன்றாகப் படித்து முடித்து, தனித்து நின்றாள்.

தனக்கான வேலை வாய்ப்புகளை ஆதிஷ் இருக்கும் அந்த நரகத்தில் தேடாமல், வெளிநாடுகளில் தேடி வந்தாள். நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் போது, தன் அன்னையை அழைத்துக்கொண்டு வானில் சுதந்திரப் பறவையாய் பறக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வலுவாக வளர்ந்து கொண்டே வந்தது.

தக்க இடத்தில் தான் சேர்ந்த பின், தன் காமாத்திபுர பெண்களுக்கான கல்வியை வெளிநாட்டில் தொடர உதவும் உதவித்தொகைகளை, வெளிநாட்டு அறக்கட்டளைகள் மூலம் பெறுவதற்கான வாய்ப்புக்களையும் தேடி வந்தாள்.

கள்ளிக்காட்டில் மலர்ந்த ரோஜா செடிகளை, வேறு புத்தம் புதிய நிலத்தில் பதியம் போடத் துடித்தாள். அவர்கள் அனைவரின் கறைகளைப் போக்க தன்னிரு கைகள் மட்டும் போதாது என்று அறிந்தவள், உதவும் உதவி கரங்களை உத்வேகத்துடன் தேடினாள்.

வெளியில் பார்க்க அசைந்து செல்லும் அழகான நதி போல் அமைதியாக சென்ற சங்கமித்ரா, உள்ளுக்குள் மனச்சுழலுக்குள் சிக்கித் தவித்தாள்.

ஆதிஷ் எனும் வேடன் அவர்களுக்கு விரித்திருந்த வலையை அவன் அறியாமலேயே சிறிது சிறிதாக கத்தரிக்க முயற்சித்தாள். எல்லாம் தயாரான பின் தன் தாயிடம் மகிழ்வோடு சொல்லும் தருணத்திற்காக தழும்பும் மனதுடன் காத்திருந்தாள்.

சுமித்திரை வேலைக்குச் செல்லாமல் சில வார காலமாக வீட்டிலேயே இருப்பதைக் கவனித்த சோனா, " என்ன சுஷ்மி! எப்பொழுதும் மூன்று முதல் ஐந்து நாட்களில் முடிந்து விடுமே. இப்பொழுது மட்டும் ஏன் இத்தனை நாட்கள்?" என்று சந்தேகமாகப் பார்த்தாள்.

"இல்லை சோனா! உடல் வலியில் காய்ச்சல் ஏற்பட்டு விட்டது. சரியாகிவிடும் " என்று மழுப்பலாக பதில் சொன்னாள் சுமித்திரை.

" விஷயம் ஆதிஷ் கவனத்திற்கு செல்லும் முன், நீ கவனமாக இரு!. உனக்கு முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள். உனக்கு ஈடான ஒன்றைத்தான் நீ கைவசம் வைத்திருக்கிறாயே" என்று மறைமுகமாக இல்லாமல், நேரடியாகவே எச்சரித்து சென்றாள் சோனா.

வியர்த்து வழிந்தது சுமித்திரைக்கு. அதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க பயமாக இருக்கவே, தன் தாயைத் தேடி ஓடினாள் சுமித்திரை.

ஆர்ப்பரிக்கும் கடல் முன் அமைதியாக மணலில் கால்களை கட்டி அமர்ந்திருந்தாள் சுமித்திரை. தன் நாட்கள் எண்ணப்படுவதை உறுதி செய்திருந்தவள், இந்த விஷயம் ஆதிஷ்க்கு தெரிந்தால் அடுத்த நொடி தன்னை இல்லாமல் செய்து விடுவான் என்பதை அறிந்திருந்தாள்.

அவளுடைய மரணம் அவளுக்கு விடுதலை தான். ஆனால் தான் இதுவரை யாருக்காக இவ்வளவு துயரைத் தாங்கினோமோ அந்த சங்கமித்ராவை, தன் மரணம் தான் வீழ்ந்த அதே படுகுழியில் தள்ளி விடக்கூடாது என்பதில் வைராக்கியமாய் இருந்தாள்.

மெதுவாக மணலில் இருந்து எழுந்து நின்று கடல் அலையை நோக்கி எட்டு வைத்தாள். தன் காலடியில் உரசிய கடல் நீரை கைகளில் அள்ளி, அலைகடல் ஆர்ப்பரிக்கும் நீலக்கடலை தன் அன்னையாய் பாவித்து உதவி செய்யும் படி வேண்டினாள்.

தன் உயிருக்கு கெடு விதிக்கப்பட்ட அந்த ஒரு வாரமாக மனக்குழப்பத்தில் சரியாக உண்ணாமல், வெயிலில் நின்ற சுமித்திரை கண்கள் சொருக, கடல் நீரோடு விழ ஆரம்பித்தாள்.

" அம்மாடி!" என்ற தமிழ் பாசக் குரல் அவள் செவியை அடைந்து, அவள் கண் திறக்கும் முன் தேனம்மா பாட்டி சுமித்திரையை கீழே விழாமல் தாங்கி இருந்தார்.

குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி, சோர்ந்த அவள் முகத்தை கூர்ந்து நோக்கினார்.

" நீ நம்ம ஊரு பக்க பொண்ணு மாதிரி இருக்க! உன் பேர் என்னம்மா? உன் ஊர் எது?" என்று ஆர்வத்துடன் அன்பாய் கேட்டார்.

' என் பெயர் சுமித்திரை. என் ஊர் கன்னிராஜபுரம்" என்று வெகு நாட்கள் தன் ஞாபகத்தில் மறைந்திருந்த தன் ஊரின் நினைவில் மகிழ்ந்து உரைத்தாள்.

" அட நம்ம தெற்கத்தி பொண்ணு. என் சொந்த ஊர் கூட உங்கள் ஊரின் அருகில் இருக்கும் சாயல்குடி தான். என் கணவரின் ஊர் வேம்பார். பிழைப்புக்காக மதுரை பக்கம் வந்தோம்" என்று சந்தோஷமாகக் கூறினார் தேனம்மா.

சுமித்திரை அமைதியாக இருப்பதை பார்த்து பேச்சை வளர்ப்பதற்காக, "என் கண் சிகிச்சைக்காக, என் பேரன் வற்புறுத்தி என்னை மும்பை அழைத்து வந்து விட்டான். என்னை மதுரைக்கு அழைத்துப் போ என்று கூறினாலும் அதோ இதோ என்று என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான்.

என் மகனும் மருமகளும் ஒரு விபத்தில் ஒரே நாளில் இறந்து விட அவர்களின் நினைவு தினமான இன்று, அவர்களின் ஆத்மா சாந்தியடைய கடற்கரையில் திதி கொடுக்க வந்தேன்.

அவர்கள் இல்லாமல் தவிக்கும் என் பேரனுக்கு ஒரு வழி காட்டு என்று அவர்களை வேண்டிக் கொண்டே திரும்ப, மயங்கி விழப் போகும் உன்னை பார்த்து விட்டேன்" என்று தான் வந்த கதையை சுருக்கமாக கூறி முடித்தார் தேனம்மா.

அவர்களின் ஊர் பக்கம் என்றதும் தன் சொந்த பந்தங்களை விசாரிக்க சுமித்திரையின் நா துடித்தது. குற்ற உணர்வோ அவளை கூனிக் குறுக வைத்தது.

அவளின் தவிப்பை உணர்ந்த தேனம்மா, அவளை அமைதிப்படுத்தும் நோக்கில் அருகில் இருந்த கோவிலுக்குச் செல்ல அவளை அழைத்தார்.

'இதுவரை உதவாத அந்த தெய்வம் இனிமேலா தனக்கு உதவப் போகிறது' என்று கோவிலுக்கு வர மறுத்தாள் சுமித்திரை.

"உன்னைப் பெற்ற தாய் சொன்னால் மறுப்பாயா?" என்ற ஒரே கேள்வியில் தேனம்மாவின் பின் கோவிலுக்குள் நுழைந்தாள் சுமித்திரை.

வெகு நாட்கள் கழித்து கோவிலுக்குள் நுழைந்ததும், கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது சுமித்திரைக்கு.

தேனம்மா அவளின் கையைப் பிடித்து ஒரு மரத்தின் அடியில் இருந்த இருக்கையில் அமரச் செய்து, அவளைத் தன் மடியோடு சாய்த்து தட்டிக் கொடுத்தார் அவளின் துன்பத்தை தாங்க இயலாமல்.


வெகு நாட்கள் கழித்து தாய்மடி கண்ட சுமித்திரை உடைந்து அழ ஆரம்பித்தாள். " உன் மனதில் அடைத்திருக்கும் துயரத்தை எல்லாம் இந்தக் கோவிலில் கொட்டி விடு சுமித்திரை " என்று அவளுக்கு ஆறுதல் அளித்தார் தேனம்மா.

தன் வாழ்க்கை முடிவை நோக்கிச் செல்லும் நேரம், தன் மகளுக்கு ஏதாவது ஒரு வழிவகை செய்ய வேண்டும் என்று நினைத்த சுமித்திரை, தன்னைப் பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தேனம்மாவின் கைகள் அந்தரத்தில் நின்று, அதிர்ச்சியில் அவர் கண்கள் வான் நோக்கி நிலைத்து நின்றது.


தன் பாரத்தை, சொற்களால் கொட்டியதும் சற்று ஆசுவாசமடைந்த சுமித்திரை நிமிர்ந்து அமர்ந்தாள். " என் கதை கேட்ட பிறகு என்னை பார்க்கும் போது உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதா? " என்றாள் சுமித்திரை பாவமாய்.

" தினம் தினம் தற்கொலை செய்து கொள்ளும், உன்னைப் பார்க்க பரிதாபமாகத்தான் உள்ளது சுமித்திரை " என்றார் கனிவாக.

" என் முடிவு எனக்கு நெருங்கி விட்டது என்று தெரியும் அம்மா. என் இறப்புக்குப் பின் நிச்சயம் மித்திரையை என் சொந்த ஊரான கன்னிராஜபுரத்தில் சுமித்திரையின் மகளாக அனுப்பி வைப்பேன். வேரோடு நான் இங்கே வந்து விட்டாலும், என் விதையை நான் பிறந்த மண் என்றும் வெறுக்காது.

என் மித்திரை! எனக்கு மட்டுமே தெரிந்த மித்திரை! நான் உருவாக்கிய மித்திரை! சாதாரணப் பெண் இல்லை அம்மா. அவளின் இயல்பை எல்லாம் கட்டி வைத்து இறுக்கி வைத்துள்ளேன்.

அவளை அவளுக்காகவே ஏற்றுக்கொள்ளும் ஒருவனை நீங்கள் கண்டுபிடித்து தருவீர்களா?

வேசியின் மகள் என்று அவளை இந்த உலகம் ஒதுக்காமல் காப்பாற்றுவீர்களா?

ஏனோ இதுவரை யாரிடமும் கேட்கத் தோன்றாத உணர்வு உங்களைப் பார்த்ததும் கேட்கத் தோன்றி விட்டது. தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா. என் மகளைக் காப்பாற்ற என்னால் ஆன கடைசி முயற்சி.

அந்தக் கயவனின் கண்களில் இருந்து என் மகளை காப்பாற்ற என் பிறந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் உறுதியாய் இருக்கிறேன். நிச்சயம் இதுவரை தான் பார்த்திராத அந்த ஊருக்கு எனது மகள் சென்றிருப்பாள் என்று அவன் நினைக்க மாட்டான்.

இப்பொழுதே உங்களுடன் அனுப்பி வைத்தால் நிச்சயம் அவன் கண்டுபிடித்து விடுவான். அவன் கண்களை ஏமாற்றி அனுப்பி வைக்க வேண்டும்.

என்னால் உணர்வுகள் அழிக்கப்பட்ட எனது மகளின் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டுங்கள்! இதை உங்களிடம் யாசகமாய் கேட்கிறேன்" என்று தேனம்மாவின் முன் தன் இரு கைகள் ஏந்தி நின்றாள்.

நீட்டிய அவள் கரங்களை தன் மார்போடு பற்றிக்கொண்ட தேனம்மா, " இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை சுமித்திரை. என் பேரனிடம் சொன்னால் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுவான். நான் வேண்டுமானால் முயற்சி செய்யவா? " என்றார்.

" அந்தக் கொடூரனைப் பற்றி உங்களுக்குத் தெரியாது அம்மா. தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிவான். சங்கமித்ராவின் எதிர்கால வாழ்வை நாசமாக்கி விடுவான்.

அவனுடைய அச்சுறுத்தலோடு இந்த மும்பையில் நிச்சயம் அவனை எதிர்த்து வாழ முடியாது. கண்ணுக்குத் தெரியாத வகையில் அவன் கண்காணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

முதலில் அவன் கண் பார்வையில் இருந்து மறைந்து, பின் அவன் கவனத்தில் இருந்து குறைந்து என் மகளை நான் காப்பாற்ற வேண்டும்.

எல்லோரும் பூவாய் தன் மகளை வளர்ப்பார்கள். நான் பாறையாய் மாற்றி வைத்திருக்கிறேன். அவள் இளகாவிட்டாலும், இறுக்கம் தளர்ந்து வாழும் வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க எனக்கு உதவி செய்யுங்கள்.

வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வாள் என் மகள். அதற்கு அவளை தயார்படுத்துவது என் பொறுப்பு. ஒருவேளை, நிலைமை கைமீதும் பட்சத்தில் நீங்கள் என் சங்கமித்ராவை, "மித்திரை" என்று அழைக்கும் ஓர் வார்த்தையில் உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுவாள்.

அவள் எங்கள் ஊருக்கு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. கன்னிராஜபுரத்தில் சுமித்திரையின் மகளை தேடுவதில் உங்களுக்கு சிரமம் இருக்காது.

சங்கமித்ராவை இந்த மும்பையில் இருந்து எங்கள் ஊருக்கு அனுப்புவது தான் என் முதல் வேலை. என் மீது ஆணையிட்டு நான் கூறும்போது என் மகள் நிச்சயம் அதனை மறுக்க மாட்டாள்.

என் மகளைக் காப்பாற்ற உதவி செய்யும் உங்களை எந்தப் பிறவியிலும் மறக்க மாட்டேன்" என்று மடைதிறந்த வெள்ளம் போல் தன் மனதில் இருப்பதை கொட்டித் தீர்த்தாள் சுமித்திரை.

"நிச்சயம் சுமித்திரை. உனக்கு ஒன்றும் ஆகாது. நீயும் உன் மகளோடு உன் சொந்த ஊருக்கு கிளம்பி வரலாமே. உனக்கான வைத்தியத்தை அங்கிருந்து பார்த்துக் கொள்ளலாமே " என்று யோசனை தந்தார் தேனம்மா.

"என்னை பணயமாய் வைத்து என் மகளை எளிதில் அடக்கி விடுவான். இந்த பூமிக்கு நான் வந்த யாத்திரை முடியும் நேரம் வந்து விட்டது. என் யாத்திரையின் முடிவிலாவது என் மகளின் வாழ்க்கைப் பயணம் இனிதே ஆரம்பிக்கட்டும். என் தாயின் உருவாய் எதிரில் நிற்கும் உங்கள் வழிகாட்டுதலில் அவள் வாழ்வு சிறக்கட்டும்" என்று என்றும் இல்லாத நிம்மதியுடன் புன்னகை பூத்தாள் சுமித்திரை.

" உன் மகளின் வாழ்க்கைத் தொடக்கத்தை இனிதே ஆரம்பித்து வைக்கிறேன். இது இந்த கடவுளின் சன்னிதானத்தில் உனக்கு நான் தரும் உறுதி. உன் மகளின் வாழ்க்கை தொடக்கத்தை சிந்திக்கும் நீ உன் முடிவையும் தேடிக் கொள்கிறாயே என்பதுதான் என் வருத்தம். என்னுடன் வருகிறாயா உன்னை சிறந்த மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கலாம்" என்றார்.

" என் பாதை திரும்பிச் செல்ல முடியாத தூரத்தில் சென்று விட்டது. என்னை விட்டு விடுங்கள். மகளின் வாழ்க்கையை மட்டும் மீட்டுத் தாருங்கள் அம்மா " என்றாள் சுமித்திரை உறுதியான குரலில்.

தேனம்மா ஆறுதலாய் அவள் தலையில் கைகளை வைத்து தன் உறுதியை உறுதி செய்தார்.

பின் அவரவர் பாதைகளில் திரும்பி நடக்க, சுமித்திரையின் மனமோ லேசானது. தேனம்மாவின் மனமோ கனத்துப் போனது.

தன் வீட்டிற்கு வந்ததும் தேனம்மா முதல் வேலையாக தன் ஊரில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து, கன்னிராஜபுரத்தில் சுமித்திரையின் மகள் வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மலர்ந்த முகத்துடன் வீட்டில் வளைய வந்த சுமித்திரையைக் கண்டு ஆனந்தப்பட்டாள் சங்கமித்ரா. கண்களில் யோசனையுடன் அளவிட்டாள் சோனா.

அன்று மாலையே சங்கமித்ரா வீட்டில் இல்லாத போது ஆதிஷ் உள்ளே வந்தான். எப்பொழுதும் அச்சத்துடன் நோக்கும் சுமித்திரை அமைதியாக நோக்குவதைக் கண்டு யோசனையை தத்தெடுத்தான்.


பின் தன் தோள்களை அலட்சியமாய் குலுக்கி, " நாளை வரும் வாகனத்தில் ஒன்று நீ வரவேண்டும். இல்லை உனக்கு பதிலாக... " என்று ஆதிஷ் முடிக்கும் முன், "இல்லை நாளை கண்டிப்பாக வாகனத்தில் ஏறி இருப்பேன் " என்று நிதானமாக பதில் உரைத்தாள் சுமித்திரை.

தாடையை தடவிக் கொண்டு யோசித்த ஆதிஷ், சோனாவை பார்க்க அவள் தலை வேகமாக அசைந்தது. தலையசைத்தபடியே வெளியேறினான் ஆதிஷ்.

ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்திற்கு வரைபடத்தை கணிப்பொறியில் வடிவமைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சங்கமித்ரா.


என்றும் இல்லாத திருநாளாய் சுமித்திரை சங்கமித்ராவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, கையில் எடுத்து வந்த உணவை தன் கையால் ஊட்டி விட்டாள்.

" இதோ இருளாக வானம் இருந்தாலும், தூரத்தில் தேடும்போது ஓர் சிறு புள்ளியாய் விண்மீன் மறைந்திருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இருளாய் காட்சியளித்து மிரட்டினாலும், சிறு ஒளி எங்காவது ஒளிந்திருக்கும். நீ அதைத் தேடு மித்திரை! உன்னால் நிச்சயம் அதை கண்டுபிடிக்க முடியும்.

அடுத்த அடி எடுத்து வைக்க நீ இடம் தேடும்போது, "கன்னிராஜபுரம் " என்ற ஊரில் தான் உன் காலடித் தடம் பதிய வேண்டும். அங்கே உனக்கு பாசம் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு இருக்கும் மித்திரை" என்றாள் சுமித்திரை.

தன் தாய் கூறிய விதத்தில் அது அவரின் சொந்த ஊர் என்று அறிந்து கொண்ட சங்கமித்ரா, 'இதை தன்னிடம் கூறுவதற்கான அவசியம் என்ன?' என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவளின் நினைவை மாற்றும் பொருட்டு, " உன் சலங்கையின் ஒலியை கேட்க வேண்டும் போல் உள்ளது. எனக்காக, என் உறக்கத்திற்காக ஓர் நடனம் ஆடு மித்திரை " என்றாள்.


தாயின் ஆசையில் அனைத்தும் அடியோடு மறந்து போக, மொட்டை மாடி இருளில், அந்தக் குளிரில் காற்றோடு ஜதி சேர்த்தது அவள் சலங்கை.

தான் இத்தனை நாள் பட்ட ரணம் எல்லாம் கரைவதைப் போல் உணர்ந்த சுமித்திரை தன் மகளை தாவி அணைத்து உச்சி முகர்ந்தாள்.

சங்கமித்ராவின் மனதில் ஏதோ நெருடலாய் பட, தன் தாயை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள்.
" ஒன்றுமில்லை கண்ணா! வீட்டிலேயே இருப்பதால் உன் நினைவு மட்டுமே இருக்கிறது" என்று சமாளித்தாள் சுமித்திரை.

தான் வரைந்த கட்டிட மாதிரியை, வேறு கோணத்தில் மாற்றி வரைய முயன்றாள் சங்கமித்ரா. வெகு நேரம் கழித்து வேலை முடிந்ததும் தங்கள் அறைக்குள் நுழைந்தவள் தன் தாயைக் காணாது தேடினாள்.

அந்த வீட்டில் தங்கள் புழங்கும் சொற்ப இடத்தில் தேடியும் தன் தாய் கிடைக்காமல், வாசல் கதவை பார்த்தாள். தாழிட்டு மூடிய வாசல் கதவு, தன் தாய் வீட்டிற்குள் இருப்பதையே அறிவுறுத்தியது.


மெல்ல கனத்த தன் பாதங்களை நகர்த்தி, தங்கள் அறையோடு இணைந்து இருந்த, தன்னை தன் தாய் பூட்டி வைக்கும் அந்த இருட்டு அறையைத் திறந்தாள்.

திறந்த அறையின் வெளிச்சத்தில் இருந்து கசிந்த ஒளி, இருட்டு அறையில் பாய, கண்ணெதிரே தெரிந்த தன் தாயின் பாதங்களைக் கண்டு, வெளிச்சுவற்றில் அப்படியே சரசரவென தன் முதுகுத் தேய தரையில் அமர்ந்தாள்.

" அம்மா பாவம்! " அவள் இதழ்கள் சத்தம் இல்லாமல் அசைந்தது. கண்களோ ஒளியை வேண்டாமல், சட்டென்று மூடி இருளை அணைத்துக் கொண்டது.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அச்சோ சுமித்திரைக்கு என்னவானது 🥺🥺🥺

ஓ தேனம்மா இப்படித்தான் மித்ராவின் வாழ்வின் உள்ளே வந்தார்களா 😯😯😯
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அச்சோ சுமித்திரைக்கு என்னவானது 🥺🥺🥺

ஓ தேனம்மா இப்படித்தான் மித்ராவின் வாழ்வின் உள்ளே வந்தார்களா 😯😯😯
சுமித்திரை அத்தியாயம் தனக்குத்தானே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது.
அவள் மனதில் காயமாய் இருந்தால் ஆற்றலாம்.... வடுவாய் மாறி இருந்தால்...
ஆதரவுக்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏
 
  • Love
Reactions: Shimoni

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
713
81
63
Coimbatore
பாவம் சுமித்ரா சரியாக விசாரிக்காமல் அவளை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.