• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 29

ஆரா பெருகிய உணர்ச்சிகளை அடக்கும் வழி அறியாது, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க நின்றான்.

சங்கமித்ரா அமைதியாக நிற்க, அவளின் இதழ்கள் மட்டும் அமுதன் ஊட்டிய அமுதத்தினால் மெல்ல அசைந்தது.

'அசையும் அவள் இதழ்களை அசையாது செய்!" என்று அவன் உள்ளம் ஆணையிட்டது. மீண்டும் ஆசையாக நெருங்கியவனை சங்கமித்ராவின் அழுத்தப் பார்வை தடுத்து நிறுத்தியது.

"நாவின் நடுவில் சர்க்கரை இருந்தும் அதனை சுவைக்க முடியாத கொடுமை... ம்... ரைட்... மேடம் அலுவலகத்திற்கு என்னோடு வருகிற உத்தேசம் இருக்கிறதா? இல்லையா?" என்றான் ஆரா தன் கீழ் உதட்டை பெருவிரலால் வருடியபடி.

பேச்சின்றி அவனுடன் அலுவலகம் செல்ல காரில் ஏறினாள். ஆராவின் பார்வைகள் தன் மீது அழுத்தமாக படிவதை உணர்ந்த சங்கமித்ரா, "எதிர் வினை இல்லாத காதல் எதிர்காலம் அற்றது..." என்றாள்.

காரை எடுப்பதற்காக சாவியை துவாரத்திற்குள் நுழைத்தவனின் கை அப்படியே நின்றது. "என் காதலுக்கு எதிர்காலம் இல்லையா? " அதிர்ந்து சிரிக்க ஆரம்பித்தான் ஆரா.

" உண்மைதானே? " என்றாள்.

" சரி மித்ரா, உன் உண்மையை பொய் என்று நிரூபித்துக் காட்டுகிறேன். இந்த காருக்குள் இப்பொழுது என்ன நடந்தாலும், எனக்கு என்ன ஆனாலும், நீ என்னை தீண்டக் கூடாது. காரைத்திறந்து நீ சென்று கொண்டே இருக்கலாம்... உனக்கு என்னிடம் காதல் இல்லாத பட்சத்தில். ஆனால்... " என்றான்.

" நானாக உங்களைத் தீண்டுவதா? நான் சங்கமித்ரா!" என்றாள் உள்ளம் கொண்ட துணிவோடு.

"சரி" என்று கார் சீட்டோடு தலை சாய்ந்து அமர்ந்தவன், மூச்சை நன்றாக உள் இழுத்துக் கொண்டான். ஒரு நிமிடம் கடந்த பிறகும், ஆரா மூச்சை வெளிவிடவில்லை. அடுத்த நிமிடமும் கடக்க சங்கமித்ராவின் முகத்தில் சிறிது பதற்றம் தோன்றியது.

நன்கு யோகப் பயிற்சி பெற்றவர்களுக்கு அதிகபட்சம் இரண்டு, மூன்று நிமிடங்கள் மட்டுமே மூச்சை அடக்க முடியும். யோகா வகுப்பில் கேட்டறிந்த தகவல்கள் எண்ணங்களில் ஒளிர்ந்தது.

மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையக் குறைய, கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து மூளை பாதிப்படையலாம்.

ஆரா போன்ற சாதாரண, பயிற்சி இல்லாத மனிதன், மூச்சை அடக்குவது ஆபத்தில் முடியும் என்று அவளது அறிவு அவளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்தது. மூன்றாவது நிமிடத்தில் ஆராவின் கைகள் ஸ்டியரிங் வீலை இறுக்கிப்பிடித்தது. கண்கள் மூடிக்கொண்டன. கால்கள் தரை நோக்கி அழுந்தின. கண் இமை ஓரம் சுருங்க ஆரம்பித்தது.

" ஆரா போதும் விளையாட்டு நிறுத்துங்கள்!" பதட்டத்துடன் கத்த ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் அவனை இளக வைக்கும் வார்த்தையான 'அமுதா'வை பலமுறை உச்சரித்தும் பார்த்து விட்டாள். ஆனால் பலன் இல்லை.

இனியும் நொடிகள் தாமதித்தால் கூட, அந்த அழுத்தக்காரன் உலகை விட்டுப் பிரிந்து விடுவான் என்பதை உணர்ந்து கொண்டவள், அவன் தோள்களைப் பற்றி உலுக்க ஆரம்பித்தாள்.

அந்தக் காதல் தீவிரவாதி, இன்னும் நெஞ்சை உள்ளே இழுத்துக் கொண்டே சென்றான். இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று உணர்ந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தாள்.

மூச்சுப் பேச்சின்றி அப்படியே தலை சரிந்தவனை தன் மடியேந்திக் கொண்டாள். "அமுதா... அமுதா..." பலமுறை அரற்றியும் அவனிடம் பதில் ஏதுமில்லை.

இரு உள்ளங்கைகளையும் சேர்த்துக்கொண்டு அவன் நெஞ்சில் குத்தினாள். நடுங்கும் உள்ளத்தோடு அவனின் சுவாசத்தை சோதிப்பதற்காக தன் நாசியை அவன் நாசியருகே கொண்டு சென்றாள்.

நிசப்தத்தை உணர்ந்தவள், நிதர்சனத்தை உணர்ந்து துடிக்க ஆரம்பித்தாள். 'உன்னை தீண்ட மாட்டேன்' என்று உறுதி எடுத்த அந்த உதடுகள் தன் இணையிடம் சேர்ந்து தன் உயிர்க் காற்றை உள்ளே அனுப்பியது.

ஆரம்பித்தது மட்டுமே அவள் இதழாக இருக்க, அந்த நீண்ட முத்தத்தை முடித்து வைத்தது என்னவோ ஆராவின் இதழ்கள் தான். "ஹே... மித்ரா பயந்து விட்டாயா? நீ படித்த யோகா வகுப்பில் நான் உனக்கு மாஸ்டர். சும்மா சொல்லக்கூடாது மித்ரா, உன் எதிர்வினை செம... ஒவ்வொரு முறையும் உன்னை ஜெயிப்பது ராஜ போதை தான்" என்றான் ஆரா மித்ராவின் மடியில் படுத்துக்கொண்டு, அவளைப் பார்த்தபடி.

'எல்லாமே என்னை ஜெயிப்பதற்காகத்தானா?' என்று நினைத்தவள் அமைதியாக பார்வையை எங்கோ வெறித்துப் பார்த்தாள். பொங்கிய ஏதோ ஒரு உணர்வு வடிந்து விட்டதைப் போல் உணர்ந்தாள். அந்த உணர்விற்கு காதல் என்று உருவம் கொடுக்க அவள் விரும்பவில்லை.

"ஹே... மித்ரா!" என்று அவள் கைகளை குலுக்கினான். அவள் பயந்து போய் அதிர்ந்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டவன், "ரிலாக்ஸ் பேபி! நீ சங்கமித்ராவாக தோற்று விட்டாய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? சங்கமித்ராவை யாராலும் தோற்கடிக்க முடியாது. சங்கமித்ரா தொலைந்து எத்தனையோ நாள் ஆகிவிட்டது. இப்பொழுது என்னிடம் தோற்றது மிஸஸ்.ஆராவமுதன். உன்னிடம் நான் தோற்கும் அந்த நாளிற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மித்ரா " என்றவன் அவள் கை வளையல்களை முத்தமிட்டுக் கொண்டாடினான்.

"கிளம்பலாம்" என்றாள்.

"சரி" என்றவன் அவள் மடியில் இருந்து எழுந்து காரை கிளப்பினான்.

ஆரா மூச்சடக்கிய அந்த நிமிடங்கள், தான் மூச்சற்றுப் போனதை அனுபவித்தவள், தன்னுள் எழுந்த மாற்றத்தில் நிலை தடுமாறினாள். தன் உடலும், மனமும் அவன் செயலுக்கும், சொல்லுக்கும் பதில் தருவதில் பேச்சிழந்து ஊமை ஆனாள். நிரந்தரம் இல்லாத இந்த நேசம், பாசம் தனக்கு வேண்டாம் என்று தன்னைச் சுற்றி வேலி போட்டுக் கொண்டாள்.

சலசலத்து ஓடும் ஆறு அழகு என்றால், அமைதியாய் பயணிக்கும் நதியும் ஓர் அழகு. யோசனையில் அமைதியாய் வரும் சங்கமித்ராவை அணு அணுவாய் ரசிக்க ஆரம்பித்தான் ஆரா உரிமையுடன். வெளிக் காற்றின் குளிர்பதம், கார் ஜன்னல் தாண்டி, அவன் மீது மோதினாலும், சங்கமித்ரா தந்த வெம்மைக் காற்றில், உடல் சூடேறி, ஒரு வித இன்ப அவஸ்தையுடன் பயணித்தான்.

'உனக்கு என்றுமே நிரந்தரமான அன்பு கிடைக்காது. கிடைத்தாலும் அது நிலைக்காது" என்று சங்கமித்ராவின் மனம், மனனம் செய்ததைச் சொல்லி அவளை சமன் செய்தது.


அலுவலக அறையில் ஆராவின் குறிப்புகளை சங்கமித்ரா குறித்துக் கொண்டிருக்கும் போது, அறைக் கதவை பட்டென்று திறந்து உள்ளே வந்தான் ஆதிஷ். அவன் பின்னே ஓடி வந்த அலுவலகப் பணியாளன், "சார் நான் எவ்வளவு தடுத்தும், உள்ளே ஓடி வந்து விட்டார். சாரி சார்" என்றான் பணிவாக.

கண்களால் அவனை வெளியே போகுமாறு அறிவுறுத்தினான் ஆரா. அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாக ஒரு காலின் மேல் மற்றொரு காலை போட்டு நிமிர்ந்து அமர்ந்தான். ஆதிஷ் உள்ளே நுழைந்ததும், புருவங்கள் இடுங்க ஆராவை பார்த்தாள் சங்கமித்ரா.

" ஒரு முக்கியமான வழக்கிற்கு இன்று தீர்ப்பு எழுத வேண்டி இருக்கிறது மித்ரா. உனக்கு விருப்பம் இருந்தால்... " என்று நாற்காலியில் அமர்ந்தபடியே தனது வலது உள்ளங்கையை படு ஸ்டைலாக உயர்த்திக் காட்டினான்.

ஆதிஷை பார்த்துக் கொண்டே எழுந்து வந்த சங்கமித்ரா ஆராவின் கரத்தோடு தன் கரத்தையும் கோர்த்து நிமிர்ந்து நின்றாள்.

"ஹேய்... யாருடா நீ! கேவலம் ஒரு விபச்சாரி பெற்ற மகளை, திருமணம் முடித்துக் கொண்டு, அவளுக்காக, என்னை பழி வாங்குகிறாயா?" என்ற ஆதிஷின் முகம் கோபத்தில் அகோரமாய் தெரிந்தது.

விரைக்கத் தொடங்கிய சங்கமித்ராவின் கைக்கு அழுத்தம் தந்து நிலைப்படுத்தினான்,

" உன்னால் ஊர் அறியச் சொல்ல முடியுமாடா இவளின் பிறப்பைப் பற்றி... " என்ற ஆதிஷ் இழிவாய் இளித்தான்.


நாற்காலியில் அமர்ந்தபடியே, "கட்டிய மனைவியின் கற்பை சந்தையில் விற்றுத் தின்று பிழைப்பு நடத்திய உன்னை விட, உடலை விற்று பிழைப்பு நடத்தும் அவர்கள் எவ்வளவோ மேல். என்னது நான் உன்னை பழி வாங்கினேனா? ச்சூ... மகளின் கழுத்தில் கத்தியை வைத்து, தாயை கட்டிலில் தள்ளிய உனக்கு எனது சிறிய அன்பளிப்பு" என்று தன் தோள்களைக் குலுக்கினான் ஆரா.

அப்பொழுதுதான் சங்கமித்ரா ஆதிஷை உற்று நோக்கினாள். எப்பொழுதும் நேர்த்தியாய் மிடுக்குடன் இருப்பவன், உடலெங்கும் கன்றிச் சிவந்த புண்களுடன், அவ்வப்போது அருவருப்பாய் அதை சொரிந்து கொண்டிருக்க, 'நீயா?' என்பதைப் போல் ஆராவை பார்த்தாள்.

" இதில் என்ன சந்தேகம் மித்ரா? சாட்சாத் நானே தான். சாருக்கு டீன் ஏஜ் பையனைப் போல் ஆக வேண்டுமாம். கதிரியக்க சிகிச்சை எடுத்து, தோல் புற்றுநோயை பரிசாக பெற்றுக் கொண்டுள்ளார். என் மித்ராவிற்கு அளவில்லா துன்பத்தையும், துயரத்தையும் பரிசாக கொடுத்ததற்கு, என்னால் முடிந்த சிறிய பரிசு" என்றான் குரலில் போலிப் பணிவை கொண்டு வந்து.

" என் மனைவி காமத்திபுராவில் பிறந்தால் என்ன? பவித்திரமான சுடரை எந்தப் பக்கம் பிடித்தாலும் அது மேல் நோக்கியே எரியும். அவள் அன்னையை நீ சாக்கடையில் தள்ளி இருந்தாலும், தங்கத்தின் மதிப்பு என்றுமே எந்த இடத்திலுமே குறைவதில்லை. ஆனால் உன்னைப் போன்ற பித்தளைக்கு பாலிஷ் போட்டால், என்றாவது ஒரு நாள் பல்லை இளித்து விடுமே" என்றான்.

அவளுக்கான, அவனின் செய்கைகளில், எப்பொழுதும் கண்களில் நன்றியுணர்வை தேக்கி இருக்கும் சங்கமித்ராவின் விழிகள், இன்று லேசாக காதல் வர்ணம் பூசிக்கொள்ள ஆரம்பித்தது.

அடங்காத கோபத்துடன் ஆராவை தாக்குவதற்காக, ஆதிஷ் முன்னே வந்தான். என்ன நடந்தது என்று சுதாரிக்கும் முன்பே தரையில் விழுந்து கிடந்தான். இணைந்த இரு கரங்களும் சேர்ந்து தன்னை தள்ளிவிட்டதில், சங்கமித்ராவின் காலடியில் விழுந்து அவமானப்பட்டான்.

கை சொடுக்கும் ஒலி கேட்க தலையை நிமிர்ந்து பார்த்தான் ஆதிஷ். " இனியும் உன் பார்வையோ, பேச்சோ, செயலோ, என் மனைவியின் பக்கம் திரும்பினால், ஆராவின் மிரட்டலான மறு உருவத்தைப் பார்ப்பாய்" என்றான்.

" மித்ரா இப்பொழுது உன் மனதில் தோன்றும் தண்டனையை இவனுக்கு கொடு" என்றான் கட்டளையாக.

தன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் ஆதிஷை, ஒரு புழுவைப் பார்ப்பதை போல் பார்த்தாள். முகத்தில் தோன்றிய அருவருப்புடன் தன் கால்களை அவனிடமிருந்து வேகமாக பின்னோக்கி இழுத்துக் கொண்டாள். 'ச்சீ... போ...' என்பதைப் போல் பார்த்தவளின் விழிப் பார்வையில் பாதி உயிர் மரித்தான் ஆதிஷ்.

" ஐயோ பாவம். உனக்கு பாவ மன்னிப்பு கூட கொடுத்து வைக்கவில்லை. இனி என் கண்முன் வந்து விடாதே. அடடா... ஒன்றை உனக்குச் சொல்ல மறந்து விட்டேன். உன் நாட்கள் வேகமாக எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. புற்றுநோய் ஆரம்பித்த கட்டத்திலேயே, இறுதிக்கட்டத்தையும் நெருங்கி விட்டாயாம். அதிர்ஷ்டசாலி தான். உன் வங்கிக் கணக்கு வேறு மாயமாக மறைந்து விட்டதாம். உன் பிடியில் இருந்த பெண்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டு விட்டார்களாம்" என்றவன் சொல்லச் சொல்ல கூடை நிறைய பூக்களை சங்கமித்ராவின் தலையில் கொட்டும் உணர்வில் பூரித்தாள் .

"டேய்..." என்று ஆதிஷ் சிலிர்த்துக்கொண்டு எழ, சட்டென்று மேஜை மீது இருந்த ஒரு பேனாவின் மூடியைக் கழட்டி அதன் கூர்மைப் பக்கத்தை ஆதிஷின் தொண்டை குழிக்குள் வைத்து அழுத்தினாள் சங்கமித்ரா.

பயத்தில் எச்சிலை விழுங்கியபடி, கண்களை அகட்டி விரித்து உருட்டினான் ஆதிஷ்.
" மித்ரா! ஒரு மரணத்திற்கே மரணத்தை பரிசளிக்கிறாயே அடடே ஆச்சரியக்குறி!" என்று தன் கைகளைத் தட்டி அவளை பாராட்டினான்.

" உன்னால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தத் துணிவு ஒரு நொடி வந்திருந்தால், அவர்களின் வாழ்க்கை திசை மாறி இருக்குமே. இன்னும் ஒரு அழுத்தம் கொடுத்தால் மொத்த பேனாவும் உன் தொண்டை குழிக்குள் இறங்கி விடும்.

எனக்கு உன்னுடைய இறப்பு வேண்டாம். எனக்கு என்னுடைய அன்னையுடனான வாழ்வு வேண்டும். உன்னால் அதை திருப்பித் தர முடியுமா? ஒவ்வொரு இருளிலும் என் அன்னை தகித்ததைப் போல் நீ துடிக்க வேண்டும். துடிக்க வைப்பேன்.... " என்றவள் கண்ணிமைக்கும் நேரத்தில் பேனாவின் கூர் முனையினால் ஆதிஷின் இரு கண்களையும் குத்தி குருடாக்கினாள்.

அதீத வலியில் அந்த அரக்கனும் கத்திக் கொண்டு அந்த அறை முழுவதும் சுற்றினான் கண்களில் வழிந்த உதிரத்துடன்.

அதைக் கூட அறியாமல் எதிரில் ஆதிஷ் இருப்பதைப் போல் காற்றைக் குத்திக் கொண்டே இருந்தாள். அடக்கப்பட்ட அவளது மன வலிகள், அந்தக் கொடூரனுக்கு அளித்த தண்டனையில் வெளி வந்து கொண்டிருப்பதை உணர்ந்த ஆரா, பணியாளர்களை அழைத்து ஆதிஷை வெளியேற்றும் படி உத்தரவிட்டான். அலறியவனின் வாயைப் பொத்தி, அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.

எந்த இருளை தன் அன்னைக்கு பரிசளித்தானோ, அதே இருளை தானும் அவனுக்கு அளித்ததில், வதம் செய்த காளியின் ஆங்காரத்தோடு, கையில் சூலத்திற்கு பதில், பேனாவை ஏந்தி மூச்சு வாங்க நின்றிருந்தாள் சங்கமித்ரா.

அவள் அருகில் வந்த ஆரா கையில் இருந்த பேனாவைப் பிடுங்கி எறிந்தான். ஆராவின் தொடுகையோ, அணைப்போ எதுவும் அவளை அமைதிப் படுத்தவில்லை. வருடக் கணக்கில் அடக்கி இருந்த மகிழ்ச்சியோடு ஆங்காரமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

" மித்ரா... மித்ரா... மித்ரா... " என்ற ஆராவின் குரலுக்கு எந்த எதிர்வினையும் இல்லை. உச்சகட்ட மன அழுத்தத்தில் மித்ராவின் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது. கண்கள் சொருக மயங்கி ஆராவின் கைகளில் விழுந்தாள்.

முதன்முறையாக ஆராவின் மனதில் பய அலைகள் எழும்ப ஆரம்பித்தது. பயத்தில் செய்வதறியாது அவளை தன் மார்பில் போட்டு இறுக்க அணைத்துக் கொண்டான்.

ஆராவின் இதயம் துடிக்கும் ஓசை, சங்கமித்ராவின் செவிப்பறையில் அதிர்ந்து விழ, இமைக்குள் கருவிழிகள் அசைய ஆரம்பித்தது.

"மித்ராம்மா... உன்னை அழ வைப்பேன், என்னிடம் விழ வைப்பேன், என் காதலை உன்னில் எழ வைப்பேன் என்று வீம்பு பிடித்த நான் இன்று உன்னிடம் மொத்தமாக சரணடைந்து விட்டேன். என்னை விட்டுவிட்டு போய் விடாதே! நீ என் அ... அம்... அம்மா...." என்று வாய்விட்டு கத்தினான் அந்த அறை அதிர.

விழிகள் மூடி இருந்தாலும், அவனின் வார்த்தைகள் செவியில் விழுந்து கொண்டே இருந்தது சங்கமித்ராவுக்கு. ஆராவின், 'தான்' என்ற கர்வம் சரியச்சரிய, சங்கமித்ராவிற்குள் அவன் காதல் கர்வமாய் வந்து அமர்ந்தது.

"டேய் அமுதா..." என்றாள் மெல்ல இமைகள் விரித்து.

"ஹான்..." என்று ஆனந்த அதிர்ச்சியில் சங்கமித்ராவை பார்த்தான்.

"எனக்கு... எனக்கு..." தயக்கம் அறியாத அவளின் இதழ்கள் தயக்கத்துடன் நின்றது.

"என்னடா?" என்றான் பரிவாக.

" எனக்கு உன்னுடன் உயிரில் கலந்து, காதல் வாழ்வு வாழ வேண்டும். ஆனால் என்னால் முடியாதே" என்று வழி தெரியா மழலை போல் விழித்தாள்.

"முடியும் மித்ரா. நிச்சயம் நமக்கான வாழ்வு விடியும். என் மேல் நம்பிக்கை உள்ளதா?" என்று தன் உள்ளங்கையை அவள் முன் நீட்டினான்.

தன்னை விழுங்கும் அவன் கண்களை பார்த்துக்கொண்டே தன் கரத்தை அவன் கரத்தோடு இணைத்தாள். அவள் நம்பிக்கைக்கு அடையாளமாய் முத்த அச்சாரத்தை அவள் கரத்தில் பதித்தான்.

அதன் பின் நாட்கள் வெகுவேகமாக உருண்டோடின. சங்கமித்ராவை கவுன்சிலிங்க்கு கூட்டிச் சென்றான். அவள் மனதை இறுக்கிய பனிக்கட்டிகள் எல்லாம் இளகி உருகி ஓட, அவளது உள்ளம் வெண்மேகமாய் மிதக்க ஆரம்பித்தது.

இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உணர்வு உண்டாக ஆரம்பித்தது. ஆராவின் மனது புரிந்திருந்தாலும், உறவின் அடுத்த கட்ட நிலைக்கு இயல்பாய் செல்ல சங்கமித்ராவால் முடியவில்லை. பொய்யாக நடந்து, ஆராவையும் ஏமாற்றி, தன்னையும் ஏமாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை.



ஒருநாள் தன்னுடன் அலுவலகத்திற்கு கிளம்பிய சங்கமித்ராவை, மதியம் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்று கூறிவிட்டு ஆரா மட்டும் அலுவலகத்திற்குச் சென்றான். மதியம் அலுவலகம் வருவதற்கு காரை அனுப்பி வைத்தான்.

உள்ளே நுழைந்தவளை ஆரா தன் கரத்தோடு சேர்த்துக் கொண்டு, மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான்.

" மித்ரா... மித்து... மித்தக்கா..." என்று பலவகையான குரல்கள் சேர்ந்து ஒலிக்க, குரல்கள் வந்த திசையை நோக்கி தன் தலையை திருப்பினாள்.

சுவாசிக்கவும் மறந்து, ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
பிடிவாதக்காரியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பருகின்றதே 😜😜😜

ஆதிஷிற்கான தண்டனை தான், மித்ராவின் மன அழுத்தத்தின் மருந்தோ 😯😯😯

காதலை யாசிக்கின்றாள், ஆனால் அவளுக்கு அதை செயற்படுத்த தெரியவில்லையாம் 🤣🤣🤣

பல்வேறு குரல்கள் யாராக இருக்கும் 🤔🤔🤔
 

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
பிடிவாதக்காரியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பருகின்றதே 😜😜😜

ஆதிஷிற்கான தண்டனை தான், மித்ராவின் மன அழுத்தத்தின் மருந்தோ 😯😯😯

காதலை யாசிக்கின்றாள், ஆனால் அவளுக்கு அதை செயற்படுத்த தெரியவில்லையாம் 🤣🤣🤣

பல்வேறு குரல்கள் யாராக இருக்கும் 🤔🤔🤔
என் ஆத்மார்த்த நட்பே...
நான் புள்ளிகள் வைத்து கோலம் வரைந்தால்..
என்னில் வர்ணங்கள் தீட்டி அழகு படுத்தும் நட்பின் அன்பிற்கு நன்றிகள் என்றென்றும்🙏🙏🙏
 
Top