• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 8

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 8

தன்னை நேர் எதிராய் பார்த்து பேசும் அந்த சுட்டு விழிகள் தன்னை கட்டிப் போடுவதை உணர்ந்தவன், மெலிதாக தலையசைத்து, கீழ் உதட்டை மடித்துக் கடித்து, கண்களை மூடித் திறந்து, தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.

அவளின் எதிர்வினையை தெரிந்து கொள்ளும் ஆவல் அலையாய் நெஞ்சில் முட்டி மோத, பெருவிரல் கொண்டு மீசையின் நுனியை லேசாக தடவிக் கொண்டே, "எப்படி?" என்ற கேள்வியை, ஒற்றைப் புருவம் உயர்த்தி, கண்களில் கேட்டான்,

சங்கமித்ரா சற்றும் தயங்காமல் தன் வலக்கையை, சுவற்றின் பக்கம் கொண்டு சென்று மோத, தங்க நிற மணப்பெண் கண்ணாடி வளையல்கள் சுவற்றில் மோதி உடைந்து தெறித்தது. தெறித்த ஒரு துண்டை வலது கையிலேயே பிடித்தவள், தன் இடது கையை உயர்த்தி, மெலிதாக கோடு இழுக்க ஆரம்பித்தாள்.

" உன்னை நானே காயப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீயே உன்னை காயப்படுத்திக் கொள்கிறாயா? சபாஷ்! எனக்கு ஒரு வேலை மிச்சம்" என்றான் எந்தவித அதிர்வுமின்றி.

சங்கமித்ராவோ மீண்டும் மீண்டும் ஏற்படுத்திய காயத்திலேயே மீண்டும் கோடு இழுக்க, துளிர்த ரத்தம் உதிர ஆரம்பித்தது.

ஆராவின் காலடியில் அவளின் ரத்தத்துளிகள் புள்ளிகள் இட்டு கோலம் வரைய ஆரம்பித்தது.

" போதும் உன் விளையாட்டை நிறுத்து சங்கமித்ரா. எனக்கு தூக்கம் வருகிறது" என்று கூறிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"ஒரு நிமிடம்..." குரல் தந்த அழுத்தத்தில் திரும்பிப் பார்த்தான். உதிர்ந்து கொண்டிருந்த ரத்தத் துளிகள் ஒழுகி ஓட ஆரம்பித்தது அவள் கைகளிலிருந்து.

"உண்ணும் உணவை பிச்சை பெற்று தான் உண்ண வேண்டும் என்றால், இந்த மித்... சங்கமித்ரா தன் சுயத்தை இழந்து விடுவாள். என் சுயம் தொலைந்த பிறகு நான் உயிரோடு இருந்தாலும் நான் உயிரற்றவளே.

என் குருதி வற்றினாலும் என் உறுதியை நான் கைவிட மாட்டேன். இந்த இடத்திலிருந்து நான் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும் என்றால், என் நிமிர்வை திமிர் என்று குற்றம் சாட்டிய உங்கள் கைகள் உணவை அள்ளித் தர வேண்டும்.

நான் உணவை யாசகம் கேட்க இந்த வீட்டின் வேலைக்காரி அல்ல. சகல உரிமையான உங்கள் மனைவி என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் " என்றாள் கம்பீரக் குரலில்.

"வாட் அ ஜோக். நீ சவால் விட்டதும், என்னை கொஞ்சி,கெஞ்சி மசிய வைப்பாய் என்று நான் எதிர்பார்த்தால், சின்னப்பிள்ளை மாதிரி கையை கீறிக் கொண்டு நிற்கிறாய். உன் நினைப்பு எப்பொழுதும் பலிக்கப் போவதில்லை. என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்றான்.

அறைக்குத் திரும்பியவனை அலைபேசி அழைத்தது. அலைபேசியில் தன் பாட்டியின் பெயர் ஒளிந்ததும் மலர்ந்த முகத்துடன், அழைப்பை ஏற்று பேசினான்.

"ஹாய் ஹனி..."

"ஆரா. எப்படி இருக்கிறாய்?"

" என்ன ஹனி வாய்ஸ் ரொம்ப டல் அடிக்குதே" என்றான் யோசனையாக.

"வீட்டு பொது அலைபேசியை வேலைக்காரர்கள்தான் எடுக்கிறார்கள். வேலைக்காரர்கள் சொல்லி வீட்டுக்காரி அழைப்பு எடுப்பதா? எனக்கு சங்கமித்ராவுடன் தனியாக பேச வேண்டும். நீ சங்கமித்ராவுக்கு புது அலைபேசி ஒன்று வாங்கித்தா" என்றார் கட்டளைக் குரலில்.

"பச்..." என்று அலுத்துக் கொண்டான்.

" ஆரா நான் என் கணவனை இழந்து, விதியால் தோற்றுப் போனேன். என் மகன் மருமகளை இழந்து மீண்டும் அதே விதியால் தோற்கடிக்கப்பட்டேன். சங்கமித்ரா உடனான உன் திருமண வாழ்வு தோற்றுப் போனால், உன் திருமண பந்தத்தை இணைத்து வைத்த நான் முற்றிலுமாக தோற்றுப் போவேன்.
என்னை தோற்றுப் போக விடுவாயா ஆரா? உன் பாட்டி தோற்றுப் போவேனா?" என்றார் தன் பேரன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை பகடைக்காயாய் உருட்டி.

"நெவெர் " அவனை அறியாமல் வார்த்தைகள் வேகமாக வெளி வந்தது.

" ஆரா. இன்று சங்கமித்ராவை சஷ்டி விரதம் இருக்கச் சொன்னேன் . பாலும், பழமும் கொடுத்து விரதத்தை முடித்து வைக்க வேண்டும். அதற்காகத்தான் உன்னை பல முறை அழைத்திருந்தேன். ஏனோ உனக்கு அழைப்பு செல்லவே இல்லை. இப்பொழுதுதான் இணைப்பு கிடைத்தது.

நான் இருந்தால் என் கையாலேயே கொடுத்து விரதத்தை முடித்து வைத்திருப்பேன். நான் அங்கு இல்லாததால் நீ அவளுக்கு பாலும் பழமும் கொடுத்து விரதத்தை முடித்து வை " என்றார்.

"ஓ... சரி... வேலைக்காரர்களிடம் சொல்லியிருக்கலாமே" என்றான்.

"அந்த வேலைக்காரி தான், நீ சங்கமித்ராவுக்கு உணவு எதுவும் கொடுக்கக் கூடாது என்று கட்டளை இட்டு இருப்பதாகக் கூறினாள்"

"ஓ... தகவல்கள் வேகமாக இறக்கை முளைத்து பறந்து செல்கின்றனவே. ஹனி, இன்று அந்த ஆண்டவன் அவளுக்கு படி அளக்கவில்லை போல" என்றான் ஏளனச் சிரிப்புடன்.

"அவளை உனக்குத் திருமணம் செய்து வைத்ததற்கு தண்டனையாய், நீ அவளுக்கு கொடுத்த தண்டனையை, நானும் ஏற்றுக் கொள்கிறேன். சங்கமித்ராவிற்கு நீ அளித்த தண்டனையை திரும்பப் பெறும் வரை, நானும் உணவை உண்ண மாட்டேன் " தள்ளாத வயதிலும் தளர்வில்லாமல் அந்தக் குரல் ஒலித்தது.

அந்தக் குரலின் அதிர்வுக்கும், அன்பிற்கும் என்றும் கட்டுப்படும் ஆராவமுதன், "ரைட். என்னை உங்கள் வார்த்தையால் ஒவ்வொரு முறையும் கட்டி போடுகிறீர்கள். ஒருமுறை மீறி விட்டால் மறுமுறை மீறுவது மிகவும் சுலபம். அவள் விஷயத்தில் உங்கள் குறுக்கீடு இனி இருந்தால், ஏழு கடல் ஏழு மலை தாண்டி மறைத்து வைத்து விடுவேன் அவளை" என்று அலைபேசியை துண்டித்து விட்டான் உள்ளடக்கிய கோபத்துடன்.

' உன் புதையலை நீ தான் ஒளித்து வைத்து, பாதுகாத்து, காப்பாற்ற வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டார் தேனம்மா.

'கீழே செல்வோமா? வேண்டாமா?' என்று தன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவன், தன் பாட்டி சொல்லுக்கு கட்டுப்பட்டு, உஷ்ணப் பெருமூச்சுடன் கீழ் இறங்கி வந்தான்.

விளக்குகள் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. சங்கமித்ரா நின்றிருந்த ஜன்னலின் அருகே நடந்து வந்தவன் காலில் ஏதோ பிசுபிசுப்பாய் தட்டுப்படவும் யோசனையுடன் விளக்கை எரியச் செய்தான்.

உடலில் இருந்து ரத்தம் வெளியேறி, தரையில் அரை மயக்க நிலையில் படுத்திருந்தாள் சங்கமித்ரா.

அனைத்தையும் அசால்டாக கடந்து வந்தவன் விழி மூடி இருந்தவளின் இமைகளுக்கு நேராக, தன் விரல்களை தேய்த்து சொடுக்கிட்டான்.

" என்ன பரலோகத்திற்கு பாதி வழியில் சென்று கொண்டிருக்கிறாயா? " என்றான் நக்கல் குரலில்.

விழி அசையாது படுத்திருந்த அவளின் இதழ் கடையோரம் மட்டும் ஏளனச் சிரிப்பாய் லேசாக சுருங்கியது.

" வேலைக்காரர்கள் மூலம் தகவல்களை பாட்டிக்கு சேர்த்து பக்கா பிளான் செய்துவிட்டு, என் கையால் உனக்கு உணவு தரும் படி அவரை ஏற்றி விட்டு, ஒன்றும் அறியாத பிள்ளை போல் என்னிடம் சவால் விடுகிறாயா? " என்றான்.

மெல்ல கண் திறந்து பார்த்தவள், தன் சக்தி எல்லாம் ஒன்று திரட்டி, "என் பக்கம் நான் யாரையும் கூட்டு சேர்ப்பதில்லை. எனக்காக நானே போராடுவேன்.

இதோ என் கைகளில் ஒழுகி ஓடுவது உயிர் அல்ல. நீங்கள் சொன்ன அதே திமிர்! என் திமிர்!" என்று தன் கைகளை அவன் முகத்திற்கு நேராக நீட்டிப் பேசினாள்.

அவள் கைகளை நீட்டிப் பேசிய வேகத்தில் லேசாக காய்ந்திருந்த ரத்தப் படலம், அவள் கைகள் தந்த அதிர்வால் ரத்த நாளங்களில் இருந்து ரத்தத்தை அவன் முகத்தில் விசிறி அடித்தது.

அவன் முகத்தில் தெறித்த ரத்தத் துளிகள், நிலைமை கைமீறிச் செல்வதை அவனுக்கு உணர்த்தியது. இதுவரை அவளது செயல்களை எல்லாம் நாடகம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், நிதர்சனத்தை உள்வாங்க ஆரம்பித்தான்.

அவள் உயிர் தத்தளித்துக் கொண்டிருப்பதுதான் உண்மை என்று உணர்ந்தவன், வீட்டின் பின்புறம் சென்று, "நல்லான்..." என்று சப்தமாக குரல் எழுப்பினான்.

வேலைக்காரன் நல்லான் மற்றும் அவன் மனைவி நாயகி அவர்கள் தங்கி இருந்த சிறு வீட்டில், விளக்கை ஒளிரச் செய்து, கதவைத் திறந்து வேகமாக ஓடி வந்து அவன் முன்னே நின்றனர்.

" ஜோடிப்புறாக்கள் இன்று தூது சென்றது போலவே! இனி ஒரு முறை இங்கிருந்து தகவல்கள் பாட்டிக்குச் சென்றால் தூது செல்வதற்கு இறக்கை இருக்காது. ஜாக்கிரதை " என்றான்.

நல்லான் அவன் மனைவி நாயகியை முறைத்துப் பார்த்தான். அவன் பார்வையினை உணர்ந்து கொண்ட நாயகி, "பாட்டிதான்..." என்று இழுத்தாள்.

ஆராவின் முறைப்பில் பயந்து கொண்டு, "சாரி சார். இனிமே இது மாதிரி நடக்காது" என்றாள் தலை குனிந்த படி.

" நல்லான், நீ இப்பொழுது அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். டிரைவரை அழைத்து காரை எடுக்கச் சொல் " என்று கட்டளையிட்டான்.

அவன் வார்த்தைகளை நிறைவேற்ற காற்றாய் பறந்தான் நல்லான்.

கையை பிசைந்து கொண்டிருந்த நாயகியை பார்த்து, "அவளுக்கு ஒரு கிளாஸ் பால் கொண்டு போய் கொடு" என்றான் எங்கோ பார்த்தபடி.
அலறியடித்துக் கொண்டு நாயகி சமையலறை நோக்கி ஓடினாள். இதமான சூட்டில் பாலை எடுத்து வந்து, சங்கமித்ராவை நெருங்கினாள்.

பிசுபிசுத்த ரத்தத்தின் நடுவில் தரையில் தலை வீழ, கண்மூடி படுத்திருந்தவளைக் கண்டு உள்ளம் பதறினாள்.

அருகில் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு நிமிர்ந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்த ஆராவின் கண்ணசைவில், மெல்ல அவள் அருகில் வந்தாள்.
"மேடம்..." என்று பிசிறு தட்டிய குரலில் அழைத்தாள்.

"ம்..." என்று கண்ணைத் திறந்தாள்.

" இந்தப் பாலை குடியுங்கள்"

மறுப்பாக சங்கமித்ரா தலையசைத்தாள்.

மனதில் எழுந்த பயத்துடன் கண்களை நிமிர்த்தி ஆராவை பார்த்தாள் நாயகி.
அவன் முறைத்த முறைப்பில், சங்கமித்ராவின் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் வம்பாக பாலை புகட்ட ஆரம்பித்தாள்.

சங்கமித்ராவோ தன் வாயில் புகட்டிய பாலை எல்லாம் அருகில் துப்பினாள்.

நல்லான் அவளைத் தூக்க அருகில் வந்து, அவள் தோள்களில் தன் கைகளை வைக்கப் போக, அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆராவின் மனம் ஏனோ எரிச்சல் பட ஆரம்பித்தது.

"நல்லான்... போதும். நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் இருவரும் செல்லலாம்" என்றான்.

நாயகி அவனைத் தாண்டி செல்லும்போது அவள் கையில் இருந்த பால் குவளையை தன் கைக்கு மாற்றிக் கொண்டான்.

இருவரும் சென்று விட்டதை உறுதி செய்து கொண்டு, தன் அலைபேசியை எடுத்து சிவாவுக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹலோ... யாரு?" என்றான் சிவா தூக்கத்தில்.

"ஆரா..."

" என்னடா இந்நேரத்தில் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றான் சற்றே தூக்கம் கலைந்து.

"டேய்... குல்கர்னி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் தயாராக இரு. நான் இப்பொழுது அவளை கூட்டிக்கொண்டு அங்கே வருகிறேன் "

" டேய் என்னடா செய்யுது? அந்தப் பிள்ளையை என்னடா செய்த? " சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது சிவாவுக்கு.

" சூசைட் அட்டெம்ப்ட்"

"ஆ..."

" நான் அவளை அங்கு கூட்டி வந்ததும் நீ அவளை பார்த்துக்கொள்" என்றான் மெத்தனமாக.

"டேய்..." என்று சிவா கதறிய கதறல் ஆராவிற்கு கேட்காமல் போனது. ஏனென்றால் அழைப்பு துண்டிக்கப்பட்டு சில வினாடிகள் ஆனது.

சங்கமித்ராவின் அருகில் வந்தவன், பால் குவளையை அவள் புறம் நீட்டி, எங்கோ பார்த்தபடி, "ம்..." என்றான்.

தரையில் தலை சாய்த்தபடியே, கண்களை மெல்ல மலர்த்தியவள், மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

வைராக்கியம் கொண்ட பெண்ணோ, கை நீட்டவில்லை.

"ஏய்..." அவளின் மறுப்பு அவன் கோபத்தை தூண்டி விட்டது.

" நீ என்ன பெரிய உலக அழகியோ? மகாராணியோ?" என்றான் சினம் மிகுந்த குரலில்.
தலையசைப்புடன் அவளது உதடுகள் மெல்லமாய் அசைந்தது.

காயம் படாத வலது கையோ காற்றில் சுட்டுவிரலை சுழற்றியது.

"என்ன?" என்றான் எரிச்சலுடன்.

" அதற்கும் மேல்... நான் "

"நீ..."

" மிஸஸ் ஆராவமுதன்" என்றாள் தேய்ந்த குரலிலும் கம்பீரமாய்.

" வார்த்தையில் வளைக்கத் தெரிந்த கைகாரி தான் நீ!" என்று நக்கலாக உரைத்தாலும், அந்த ஆறடி ஆண்மகன் தரையில் குத்து காலிட்டு அவளின் கைகளைப் பற்றி தன் மீது சாய்த்தான்.

கவிழ்ந்து விழும் நெற்றியை தன் கை கொண்டு நிமிர்த்தி தன் மீது சாய்க்க, அவன் விரல்களில் பட்டிருந்த உதிரம், அவள் நெற்றியில் திலகமாய் ஒளிர்ந்தது.

" என் பாட்டி பெயரில் இன்று நீ, உயிர் பிழைக்கிறாய். உன் சவாலுக்காகவெல்லாம் நான் இறங்கி வர மாட்டேன். இந்தா... " என்று பிடித்தம் இல்லாமல் பால் குவளையை அவள் வாயில் சரித்தான்.

மயக்கத்தில் இருந்தவள் மந்தகாசப் புன்னகையுடன் அருந்தத் தொடங்கினாள்.

அவள் எழும்பி நடப்பது சிரமம் என்பதை உணர்ந்தவன், சினத்தால் எழுந்த வேக மூச்சுக்களை உள்ளடக்கிக் கொண்டு, ' எல்லாம் எனது பாட்டிக்காக!' என்று தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, அவளை சுமந்தவாறே தரையில் இருந்து எழுந்து நின்றான்.

காரின் பின் இருக்கையில் அவளை கிடைத்தி விட்டு காரை எடுத்துக்கொண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு விரைந்தான்.

அங்கு வரவேற்புறையில் காத்திருந்த சிவா, பதட்டத்துடன் வந்து ஸ்ட்ரெச்சரில் அவளை ஏற்றினான். செவிலியர் ஒருவர் வந்து, "பேஷண்ட் நேம் என்ன? " என்று கேட்க, சிவா தன் வாயை திறப்பதற்குள், " மிஸஸ் ஆராவமுதன்" என்றாள் அசதியிலும் ஆளுமையாக.

தன் புருவங்களை விரல்களால் தேய்த்துக் கொண்டே, " திமிர்! இம்மியளவும் குறையாத திமிர்! " என்றான் பற்களிடையே வார்த்தைகளை கடித்து துப்பியபடி.

நிமிடத்திற்கு நிமிடம் கோபம் வெறியாய் மாற அந்த இடத்தை விட்டு அகன்று, தன் காரை அசுர வேகத்தில் செலுத்த ஆரம்பித்தான்.

மருத்துவமனையில் தனக்கான சிகிச்சையை தொடங்க விடவில்லை சங்கமித்ரா.

'ஏன்?' என்று புரியாமல் சிவா அவளை கேள்வியோடு பார்த்தான்.

" அவர் வரவேண்டும்... " முனங்கலாய் ஒலித்தது அவள் குரல்.

' என்ன சிங்கப்பூர்ல கூப்பிட்டாக... அமெரிக்கால கூப்பிட்டாக... என் கிரகம் இந்த கரகாட்ட கும்பல மாட்டிக்கிட்டேன்...' சிவாவின் மனம் தன் நிலையை எண்ணி, தன்னைத் தானே கேலி செய்தது.

" சார் சீக்கிரம் இவங்க ஹஸ்பண்டை வரச் சொல்லுங்க. கையில காயம் ஆழமா இருக்கு. தையல் போட வேண்டும் " என்று செவிலியர் இவனை விரட்டினார்.

தன் அலைபேசியில் ஆராவுக்கு அழைப்பு விடுத்தான். இரண்டு மூன்று முறை அழைப்பு சென்ற பிறகு, அழைப்பை ஏற்றான் ஆரா.

"ஆரா..."

"சொல்லு"

" அந்த பொண்ணு சிகிச்சையை ஏற்காமல் தடுத்துக் கொண்டே இருக்கிறாள். நீ தான் வர வேண்டுமாம். மருத்துவமனையில் உன்னை விரைந்து வரச் சொல்லுகிறார்கள் " என்று வேகமாக சொல்லி முடித்தான் சிவா.

"முடியாது"

" டேய் என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? அந்த பொண்ணு உன் பெயரை சொல்லிவிட்டது. ஏதாவது பிரச்சனை என்று வந்தால் உன் பெயர் தான் வெளிவரும். 'மனைவியை கொல்ல முயன்ற கணவன்' என்று மும்பை பத்திரிக்கையில், தலைப்புச் செய்தியாக கொட்டை எழுத்தில் வரப்போகிறது.

"ஐ டோன்ட் கேர்"
வெடித்தான் ஆரா.

" டேய் ப்ளீஸ் டா. அவளுக்காக வேண்டாம். எனக்காக வா" என்றான் சிவா நண்பனின் நலனை கருத்தில் கொண்டு.

' ஆடும் பரமபதத்தில் தன் உறவுகளையே ஏணியாய் வைத்து தன்னை முந்திச் செல்பவளை, இப்பொழுது ஏற விட்டுவிட்டு, ராஜநாகமாய் கொத்தி ஆரம்பித்த இடத்திற்கு தள்ள வேண்டும்' என்று மனம் சுமந்த வன்மத்துடன் மருத்துவமனைக்கு காரை புழுதி பறக்க ஒடித்து திருப்பினான்.

மருத்துவமனைக்குள் நுழைந்து, அவசர சிகிச்சை பிரிவிக்குள் நுழைந்தான். கைகளை இறுக்கி மூடி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தவள், ஆராவை கண்டவுடன், கைக்கு தையலிட, தன் இடக்கையை நீட்டி விரித்தாள்.

செவிலியர் மயக்க மருந்தை அவள் கைகளில் ஏற்ற வர, "தேவையில்லை. என்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியும்" என்றாள்.

"ஷ்... ஷ்...' என்று ஒவ்வொரு தையலுக்கும் சிவா சத்தம் எழுப்ப, அவனை வெளியே நிற்கச் செய்தனர் மருத்துவக் குழுவினர்.

வலது கையில் ஒரு விரல் நீட்டி ஆராவை தன் அருகே வரச் சொன்னாள் சங்கமித்ரா.
அவன் நின்ற இடத்தில் அசையாது இருக்க, அதனைக் கண்ட செவிலியர், "சார். உங்களை மேடம் கூப்பிடுறாங்க " என்றார்.

அவன் முகத்தில் எந்த மாற்றமும், யாருக்கும் தெரியவில்லை. அவன் நுனிமூக்கின் பளபளப்பில் அவன், தன் கோபத்தை அடக்குவதை அறிந்து கொண்டாள் அவள்.

அவன் அருகே வந்ததும், "இதுவரை தோல்விகள் மட்டுமே கண்ட எனக்கு கிடைத்த முதல் வெற்றி நீங்கள்!" என்று மெதுவான குரலில் உரைத்துவிட்டு கண்மூடினாள், இங்கு ஒருவன் ருத்ர மூர்த்தியாய் நெற்றிக்கண்ணை திறந்தது அறியாமல்.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
மித்ரா தன்னை மித்திரை என்று அறிமுகபடுத்தாததன் நோக்கம் என்னவோ 🤔🤔🤔

ஆரா உன்னை இப்படி பார்க்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, ஆஹா சபாஷ் மித்திரா :cool::cool::cool:

என்ன இது தான் முதல் வெற்றியா :oops::oops::oops:
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சகி 😲😲😲😲😲😲😲சங்கமித்ரா ஆராவை silent ஆ படுத்துறாளே 😄😄😄😄😄😄
அலைகளின் ஆர்ப்பரிப்பை விட ஆழ்கடலின் அழுத்தமே ஆபத்தானது நட்பே.
உற்சாகப்படுத்தும் தங்கள் உன்னத அன்பிற்கு நன்றிகள் 🙏🙏🙏
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மித்ரா தன்னை மித்திரை என்று அறிமுகபடுத்தாததன் நோக்கம் என்னவோ 🤔🤔🤔

ஆரா உன்னை இப்படி பார்க்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, ஆஹா சபாஷ் மித்திரா :cool::cool::cool:

என்ன இது தான் முதல் வெற்றியா :oops::oops::oops:
அவன் அவளை தலைவி என்று எண்ணாமல் தலைவலி என்று நினைக்க, அவளோ அவனின் தலைவிதியாய் அமைந்தாள்.
பாசம் காட்டும் தங்கள் நேசத்திற்கு நன்றிகள் நட்பே🙏🙏🙏🙏