• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே.. 1

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
மஞ்சள் நிறப் பூக்களை மலர விட்டு நின்றிருந்த தேமா மரங்களுக்கு மத்தியில், செவ்வண்ணப் பூச்சுப் பூசப்பட்டிருந்த புத்தபகவான் ஏகாந்தமாக நின்றிருந்தார்.

அவருக்கு அருகில் சற்றுத் தள்ளிக் கிடந்த கல்லாசனத்தில் அமர்ந்து, அவரின் தோற்றத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

கலங்கிப் போய் இருந்த விழிகளில் நீர் முத்துக்கள் விழவோ வேண்டாமோ என்பது போல லேசாக எட்டிப் பார்க்க, கண்களை இறுக மூடி விழிநீருக்கு அணை போட்டுக் கொண்டாள் அவள்.

எவ்வளவு நேரம் தான் அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை, அவளது கன்னத்தைப் பிஞ்சு விரல்கள் தீண்டவும் சிலிர்த்துப் போய்க் கண்களைத் திறந்து கொண்டாள்.

அவளுக்கு முன்னால் முளைத்திருந்த பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தான் அவளின் மகன் ராஜேந்திரன்.

"என்ன கண்ணன்.."
என அவள் சுற்றுப்புறம் உணர்ந்து கேட்க,
உதட்டைப் பிதுக்கி
"அம்மாச்சி.. உசிருக்கு காலு நோவிது.."
என மழலை மணம் மாறாத குரலில் சொன்னவனையே பார்த்தவள் வேகமாக எழுந்து கொண்டாள்.

மகன் உசிரு என்று சொல்வது மகளை, அப்போது தான் அவளுக்கு மகளின் நினைவே வந்தது. வேகமாகப் பார்வையைச் சுழல விட்டவளின் பார்வை வட்டத்துக்குள், சற்றே தள்ளிக் கிடந்த கல்லொன்றைப் பிடித்துக் கொண்டு குந்தியிருந்த சின்னஞ் சிறு உருவம் விழுந்தது.

வேகமாக ஓடிச் சென்று மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டவள், மகனை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

இரண்டு குழந்தைகளோடு இன்னும் எவ்வளவு நேரம் தான் காத்திருக்க வேண்டுமோ என்கிற எண்ணம் அவளுக்கு மெல்ல மெல்லச் சோர்வைக் கொடுக்கத் தொடங்கவே, அவளையும் அறியாமல் பெருமூச்சு ஒன்று வந்தது.

வானதி மட்டும் தனியாளாக இருந்திருந்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருக்கத் தயார் தான், ஆனால் இரண்டு வயது மகளோடும் நான்கு வயது மகனோடும் அவளால் எவ்வளவு நேரம் தான் வெளியே வேகாத வெயிலில் காத்திருக்க முடியும்.

பங்குனி மாத வெயில் காலை ஒன்பது மணிக்கே சூடு பறக்கக் கொளுத்தத் தொடங்கியிருந்த நேரம் அது, வியர்வை பூத்திருந்த முகத்தைப் புறங்கையால் துடைத்தபடி, எதேச்சையாகக் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தவளது சோர்வை, அந்தக் கடிகாரம் பதினொரு மணி என்று காட்டி இன்னும் கூட்டியது தான் மிச்சம்.

தாயோடு சாய்ந்திருந்த ராஜேந்திரன், வயிற்றை மெல்லப் பிடித்துக் கொண்டு தாயின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும், அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவளுக்கு உயிர்நதி கலங்கிப் போனது.

குழந்தைகளுக்கு உண்பதற்கு கொடுப்பதற்குக் கூட அவளிடம் அந்த நேரத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.

"என் சிவனே என் சிவனே.. என்ன பாவத்தைச் செஞ்சனோ.."
எனத் தனக்குள் முனகிக் கொண்டே நிமிர்ந்தவளின் பார்வையில் சற்றுத் தள்ளி நின்றிருந்த அந்த ஜம்பு மரம் விழவே, கடவுளைக் கண்ட பக்தை மாதிரி அதில் கிடந்த கனிகளைப் பறித்து மகனுக்கு உண்ணக் கொடுத்தாள்.

அந்த வெயிலுக்கு அந்த ஜம்புக் காய்கள் தேவாமிர்தம் போல அவனுக்கு இனித்தது போலும், அதை உண்டு விட்டுத் தாயோடு மீண்டும் சாய்ந்து கொண்டான்.

இடுப்பில் இருந்த மகள் யாழ்மொழி எந்தத் தொந்தரவும் இல்லாமல், தாயின் தோளில் தலை வைத்து ஒய்யாரமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே வானதிக்கு மலைப்பைக் கொடுக்க, மகளின் அந்தத் தூக்கம் மட்டுமே அவளுக்கு அப்போதைக்கு ஆறுதலைக் கொடுத்தது. மகள் எழுந்து பசியில் அழத் தொடங்குவதற்கு முன்பு அவள் வந்த வேலையை முடித்து விட வேண்டும்.

புடவை முந்தானையை இழுத்து மகளைப் போர்த்தியவள், மகனின் தலையை மெல்ல வருடிக் கொடுக்க, நிதானமாக நடந்து வந்தான் அவளை அத்தனை நேரம் காக்க வைத்து விட்டுப் போன வீட்டுத் தரகர்.

"என்னண்ணா.. இவ்வளவு நேரம் இருக்க வைச்சிட்டியளே.."

"காரியம் ஆகோணும் எண்டால் காத்திருக்கத் தானே வேணும் பிள்ளை.."

"அதுக்காக இவ்வளவு நேரமாண்ணா.. ஏழு மணிக்கு வந்தனான் மணி பதினொண்டரை ஆகுது.."

"நான் என்ன செய்யிறது பிள்ளை.. அங்கயும் இடங்களும் இல்லை.. அது தான் ஒவ்வொரு இடமாப் பாத்து வர நேரமாச்சு.."

"சரி இப்பவாச்சும் கிடைச்சிதோ.."

"எங்க பிள்ளை ஒரு இடமும் கிடைக்கேல்லை.. நீ வேறை இடத்தைப் பாக்க வேண்டியது தான்.."

"என்னண்ணா உப்பிடிச் சொல்லுறியள்.. ரெண்டு குழந்தையளை வைச்சுக் கொண்டு நான் இனி வேறை எங்க போய் இடம் பாக்கிறது.."

"அது உன்ரை பிரச்சினை பிள்ளை.. நீ குடுத்த காசுக்கு என்னால முடிஞ்ச வரை மினக்கெட்டிட்டன்.. உன்ரை அதிஷ்டம் ஒரு வீடும் கிடைக்கேல்லை.."
என்று கொண்டே அந்த வீட்டுத் தரகர் தன் மோட்டார் வாகனத்தை உயிர்ப்பிக்க, என்ன மனிதன் இவன் என்பது போல அவனை முறைக்க மட்டுமே வானதியால் முடிந்தது.

இருக்கட்டும் என்றைக்காவது ஒரு நாள் இவனுக்குப் பதில் சொல்லும் காலம் வராமலா போகும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், என மனதினுள் எண்ணிக் கொண்டவளுக்கு, அது வரை தான் உயிரோடு இருப்பேனா என்கிற கேள்விதான் பூதாகரமாக வந்து நின்றது.

உடனேயே, இல்லை இருக்க வேண்டும் என் குழந்தைகளுக்காக என்றாலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவளது மனதில் ஆழப் பதிந்தது.

மகளை அணைத்துக் கொண்டு, மகனை வலது கையில் பிடித்துக் கொண்டு, பக்கத்தில் கிடந்த ஒரேயொரு தோல்பையை எடுத்துத் தோளில் கொழுவிக் கொண்டு, அந்தத் தார்ச் சாலையில் வேகாத வெயிலில் நடக்கத் தொடங்கினாள் வானதி.

குழந்தைகள் இருவருக்கும் தாயின் முந்தானை கூடாரமாகிப் போக, அவளுக்கு அந்த வானம் மட்டுமே அந்த நேரம் கூடாரமாகிப் போனது.

எவ்வளவு நேரம் தான் தன்னந்தனியே குழந்தைகளோடு அந்தச் சாலையில் நடந்திருப்பாளோ தெரியவில்லை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு பேருந்து கூட வருவது போலத் தெரியவில்லை.

யாரோ உயர்ந்த உள்ளம் படைத்த மனிதக் கடவுள் நட்டு வைத்துப் போன, ஒரு பெயர் தெரியாத பெரிய விருட்சத்தின் கீழே கிடந்த கல்லில், மெல்ல அமர்ந்து கொண்டவளுக்கு, இப்போது மனவலியை விடவும் கால்வலி தான் மோசமாக இருந்தது.

மகளை மடியில் கிடத்தி விட்டு, மகனை அருகில் அமர்த்தி விட்டு, கால்களை மெல்லப் பிடித்துக் கொண்டவள், மரத்தோடு மெல்லச் சாய்ந்து கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள, தாயின் முகத்தை எட்டி ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் ராஜேந்திரன்.

சுணங்கிப் போய் இருந்த தாயின் முகம் அவனுக்கு என்னத்தைச் சொல்லியதோ, அதுவரை தன் கால்சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஜம்புக்காய்கள் மூன்றையும் எடுத்து, தாயின் கைகளில் திணித்து விட்டு, கீழே அமர்ந்து தாயின் கால்களைப் பிடித்து விடத் தொடங்கினான்.

வராதே வராதே நீ வர நான் விடவே மாட்டேன் என்பது போல, இறுகப் பொத்தி வைத்திருந்த விழிநீர் குபுக்கென்று விழிகள் கடந்து கன்னம் தொட்டு மார்பை நனைக்கத் தொடங்கியது அவளுக்கு.

மகன் நிமிர்வதற்குள் சட்டென்று முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டவள்,
"பசிக்குதோ கண்ணன்.."
என்று, எங்கே அவன் ஆமாம் என்று சொல்லி விடுவானோ என்கிற உயிரை உருக்கும் பயத்தோடு கேட்டு வைக்க, அவளை அதற்கு மேலும் கஷ்டப் படுத்த விரும்பாத விதி, மகனின் பதிலில் இல்லை என்று வரவே மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் வானதி.

சிறுகுடலைப் பெருங் குடல் தின்னும் அளவுக்குப் பசியில் இருந்தவளுக்கு, மகன் கொடுத்த ஜம்புக்காய்கள் யானைப் பசிக்கு ஒற்றைச் சோளத்தட்டைக் கணக்காகத் தான் இருந்தது.

கொலைப் பசியில் இருக்கும் தன் வயிற்றுக்குள் அந்தக் காய்கள் போவதை விட, மகன் பசி என்று கேட்கும் போது அவனுக்குக் கொடுக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அந்தக் காய்களைத் தன் தோல்ப்பைக்குள் பத்திரப் படுத்திக் கொண்டவளைக் கடந்து அதி வேகமாக ஒரு வாகனம் தாண்டிப் போனது.

அது போன வேகத்தில் கிளம்பிய புழுதி அவளது கண்களைப் பதம் பார்க்கவே, கண்களைக் கசக்கிக் கொண்டவள் முன்னால் அந்த வாகனம் மீண்டும் வந்து நிற்கவே, அவளுக்குப் பக்கென்றாகிப் போனது.

ஆள் நடமாட்டமே இல்லாத அந்தத் தார்ச் சாலையில், கொளுத்தும் வெயிலில் அவள் உதவி என்று கத்தினால் என்ன ஏது என்று கேட்க ஒரு ஈ காக்கை கூட இல்லாத நேரம் அது.

வாகனத்தில் இருப்பவர்கள் யாரோ எவரோ என்ன காரணத்துக்காக வேகமாகப் போன வாகனம் மீண்டும் திரும்பி வர வேண்டும், ஒரு வேளை குழந்தைகளைக் கடத்தும் வாகனமோ, இல்லாது போனால் தன்னைத் தான் ஏதும் செய்து விடுவார்களோ என்று ஒரு நிமிடத்துக்குள் ஓராயிரம் யோசனைகள் சூழ அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.

அவளை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு, அந்தக் கறுப்பு வாகனத்தில் இருந்து வெள்ளை வேட்டியும் சட்டையுமாக ஒரு பெரியவர் இறங்கினார்.

அவரது தோற்றத்துக்கும் உடையின் நேர்த்திக்கும் அவரைப் பெரியவர் என்று தான் சொல்ல வேண்டும். அவரது தோற்றத்துக்கு ஒரு எழுபது வயது மதிப்பிடலாம் போல இருந்து.

வாகனத்தை விட்டு இறங்கியவரும் பெரிய மனிதர் போலத் தான் நடந்து கொண்டார்.

"மன்னிச்சுக் கொள்ளு அம்மாச்சி.. உவன் உப்புடித் தான் கண்மண் தெரியாமல் ஜீப்பை ஓட்டுவான் விளங்காத பயல்.. கண்ணுக்குள்ள புழுதி பறந்திருக்கும் என்ன.. கண்ணைக் கசக்காமல் இந்தத் தண்ணியை ஊத்திக் கழுவம்மாச்சி.."
என்று கொண்டே கையோடு வைத்திருந்த தண்ணீர்ப் போத்தலை அவளிடம் நீட்டினார் அவர்.

அவரையே பார்த்திருந்தவளுக்கு ஏனோ தெரியவில்லை முதல் பார்வையிலேயே ஒரு விதமான நேர்மறையான எண்ணம் சட்டென்று தோன்றி விடவே, அவளையும் அறியாமல் அவளது வலது கை அவரிடம் தண்ணீர்ப் போத்தலை வாங்கிக் கொண்டது.

"அம்மாச்சி.. இந்த இடத்துக்குப் புதுசோ.. இந்த இடத்துல அவ்வளவா ஆக்கள் நடமாட்டம் இருக்கிறதே இல்லை.. குழந்தைப் பிள்ளையளோட தனியா இங்க இருக்கிறியளே.. ஆரும் வரோணுமோ இல்லாட்டிக்கு எங்கயும் போகோணுமோ.."

"ஓம் ஐயா.. இந்த இடத்துக்குப் புதுசு தான்.‌. இதால பஸ் ஏதும் வருமோ எண்டு பாத்துக் கொண்டு இருக்கிறன்.."

"அடப் பாவத்த.. என்ன பிள்ளை நீ.. இந்தப் பாதையால பஸ் ஒண்டும் வராது பிள்ளை.. முதல் நீ எழும்பி வா.. நான் போற பாதையில டவுனில விட்டிட்டுப் போறன்.. அப்பவும் யோசிச்சனான்.. ஆரடா இது இந்தப் பாதையில இருக்கிறது.. ஊருக்குப் புது ஆளாத் தான் இருக்கும் எண்டு.‌."

"உங்களுக்கு என்னத்துக்கு கஷ்டம் குடுத்துக் கொண்டு.. நான் நடந்தே போயிடுவன் ஐயா.."

"விளங்காமக் கதைக்காத பிள்ளை.. உன்ரை முகத்தைப் பாத்தா சாப்பிட்டுக் கன நேரம் மாதிரிக் கிடக்குது.. இங்க இருந்து நீ நடக்க வெளுக்கிட்டா விடிய விடிய நடந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.. உன்னைப் பாத்தா எனக்கு மகள் மாதிரி.. நம்பி ஏறு பிள்ளை.. உன்னை இப்புடியே விட்டிட்டுப் போனால் அங்க வீட்டை போனாப் பிறகு பச்சைத் தண்ணி கூட இறங்காது.. முதல் எழும்பு பிள்ளை.."
என்றவர் அவளது மடியில் கிடந்த குழந்தையைக் கவனமாகத் தூக்கிக் கொண்டார்.

அதுவரை பார்த்த நபர்கள் எல்லோருமே அவளுக்கு ஏதோ ஒரு வகையில் தொந்தரவையும் துன்பத்தையும் கொடுத்தவர்களாக இருக்க, முதன் முதலாக அவரது முகம் பார்த்து உதவ வந்த அந்தப் பெரியவர் அவளுக்கு ஆபத்பாந்தவனாகத் தான் தெரிந்தார்.

அவர் மேல் தன்னை அறியாமல் வந்த நம்பிக்கையில் குழந்தைகளோடு அவரது வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள் வானதி.

அவளையும் அவளது குழந்தைகளையும் சுமந்தபடி அவளது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது அந்த வாகனம்.
 

Attachments

  • eiWE25869271.jpg
    eiWE25869271.jpg
    38.9 KB · Views: 14