• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..10

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
தன்னை மறந்து அருண்மொழி நித்திரையில் ஆழ்ந்திருக்க, வானதிக்குத் தான் பெரும் சங்கடமாகப் போய் விட்டது.

அவனது தலையைக் கோதி விட அனிச்சையாக எழுந்த அவளது கரம், சட்டென்று அந்தரத்தில் தொங்க, அவளது காதுகளில் அந்தக் குரல் ஒலித்தது.

"நீ வாழ்வு இழந்தவள் தானே.."
என்ற அந்தக் குரல் மாற்றி மாற்றி ஒலிக்க, காதுகளை இறுகப் பொத்திக் கொண்டு, கண்களில் இருந்து கண்ணீர் வடிய
"நோஓஓ.."
எனக் கத்தியவள், அவனை உதறித் தள்ளி விட்டு எழுந்து வெளியே ஓடி விட்டாள்.

அவள் மடியில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தவன், அவளது திடீர் செயலில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டு குழந்தைகளைப் பார்க்க, அவர்களும் நடந்தது என்னவென்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தார்கள்.

வேகமாக ஓடி வந்த வானதி நேராகத் தனது அறையினுள் புகுந்து கொள்ள, அதைப் பார்த்த கனகலக்சுமி அவளது செய்கையில் பதறிப் போய் அவளிடம் ஓடி வந்தார்.

"பிள்ளை.. என்ன பிள்ளை நடந்தது ஏன் இப்புடி அழுது கொண்டு ஓடியாறாய்.. ஆரும் ஏதும் சொன்னவையோ.."

"இல்லை ஒண்டும் இல்லை.."

"என்ன ஒண்டும் இல்லை.. உன்ரை முகத்தைப் பாத்தாலே தெரியுதே என்னவோ நடந்திருக்குதெண்டு.."
என்று கொண்டே அவளது முகத்தை அவர் நிமிர்த்த, சட்டென்று அவரைக் கட்டிக் கொண்டு அவரது வயிற்றில் முகத்தைப் பொத்திக் கதறி அழத் தொடங்கினாள் வானதி.

அவள் அப்படி உடைந்து அழுவாள் எனக் கனகலக்சுமி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. எத்தனை காலமாகத் தன் சோகங்களைத் தனியே சுமந்திருப்பாளோ தெரியவில்லை, அவற்றுக்கு எல்லாம் சேர்த்து அவள் அழுது முடிக்கட்டும் என்பது போல, அமைதியாக அவளது தலைமுடியைக் கோதிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் கனகலக்சுமி.

சில நிமிடங்களில் வானதியின் கதறல் லேசாக மட்டுப்படத் தொடங்கவே, லேசான விம்மல் மட்டுமே அவளிடம் இருந்து வந்தது.

அவளின் முகத்தைத் தனது புடவைத் தலைப்பால் துடைத்து விட்டவர், அவளது முகத்தை நிமிர்த்தித் தன்னைப் பார்க்க வைத்தார்.

"சொல்லு பிள்ளை.. உன்ரை வாழ்க்கையில நடந்த அத்தினை விசியத்தையும் என்னட்டை எண்டாலும் சொல்லு.. நீ வந்த நாள் தொட்டு நானும் பாக்கிறன்.. உன்ரை வாழ்க்கையில என்ன நடந்தது எண்டு முழுசாச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நீ மனசுக்குள்ள போட்டு உளப்பிக் கொண்டு இருக்கிறாய்.. இனியாவது அது எல்லாத்தையும் சொல்லு.. நீ என்னை எப்புடி நினைக்கிறியோ எனக்குத் தெரியாது ஆனா நான் உன்னை நான் சுமந்து பெத்த மிகளாத் தான் பாக்கிறன்.. அதனால உரிமையாக் கேக்கிறன் பிள்ளை மனசைத் திறந்து எல்லாத்தையும் கொட்டீடு.. என்னைத் தாண்டி எந்த விசியமும் வெளியால போகாது.."
என்றபடி வானதியின் கன்னம் தொட, அவரது கரம் பற்றித் தன்னருகே அமர வைத்து, அவரது மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

இத்தனை நாளும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத தன் இறந்தகாலத்தை மனம் விட்டு அவரிடம் சொல்லத் தொடங்கினாள்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்தேறிய சம்பவங்களையும் தான் கடந்து வந்த சிறு வயதுப் பொழுதுகளையும் அன்று நடந்தது போல வானதி சொல்ல, கனத்த இதயத்தோடு கனகலக்சுமி அதைக் கேட்கத் தொடங்கினார்.

யாழ்நகரில் நல்லூர் கந்தசுவாமி கோயில் பின் வீதியில், குறிப்பிட்டளவு தூரத்தில் அமையப் பெற்றிருந்த சில வரிசையான வீடுகளில் நான்காவதாக இருந்த வீட்டில் விஷேசக் களை லேசாகப் படர்ந்திருந்தது.

உடுத்தியிருந்த பச்சை வண்ணத் தாவணியை இழுத்துச் செருகியபடி பம்பரம் போலச் சுழன்று வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் இருபத்தைந்து வயதுப் பாவை வானதி.

அன்று அவளது ஒரேயொரு அன்பான உறவுக்காரியான அக்காள் வெண்ணிலாவுக்குத் திருமணம்.

வயது முப்பதைத் தாண்டி விட்டாளே இன்னமுமா அவளுக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்று, அறிந்தவர் தெரிந்தவர் எல்லாம் கேட்கத் தொடங்கியதால், வேறு வழியில்லாமல் போனால் போகட்டும் என்று அவசர கதியில் முடிவான திருமணம் இது.

வெண்ணிலாவின் முகத்தில் மருந்துக்குக் கூட மகிழ்ச்சி இருக்கவில்லை. கொலு பொம்மை போல உடுத்தி விட்ட பட்டுப் புடவையில் அசையாமல் மணமேடையில் வீற்றிருந்தாள்.

அவளது திருமணத்தால் மகிழ்ந்த ஒரே ஜீவன் வானதி மட்டும் தான், அனைத்து வேலைகளையும் புன்னகை முகம் மாறாமல், இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள். அவளைத் தவிரவும் அங்கு வேலைகள் செய்வதற்கும் ஆட்கள் யாரும் முன் வர மாட்டார்கள் என்பதுவும் ஒரு காரணம்.

வானதியும் வெண்ணிலாவும் ஒரு வயிற்றில் பிறவாத அக்கா தங்கச்சி, வானதியின் ஒன்று விட்ட சகோதரி தான் வெண்ணிலா.

இருவரது பெற்றோர்களும் சிறு வயதிலேயே எதிர்பாராத விபத்தால் மரணத்தைத் தழுவியிருந்த சமயத்தில், வானதியின் வயது மூன்று வெண்ணிலாவின் வயது எட்டு, மரண வீட்டில் தன் தங்கையை இடுப்பில் வைத்துக் கொண்டு அழுதபடி நின்றவளை ஆற்றவோ தேற்றவோ யாரும் முன் வரவில்லை என்பது தான் கொடுமையின் உச்சகட்டம்.

எங்கே ஆறுதல் சொல்லப் போனால், தங்களுடன் ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என எல்லோரும் ஆளாளுக்குக் கழன்று போய் விட, இறுதியில் ஒன்று விட்ட சித்தப்பா ஒருவரே இருவரையும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் என முன் வந்திருந்தார்.

அவர் உயிரோடு இருந்த பதினொரு வருடங்கள் வரையில் தாய் தந்தை இல்லை என்கிற குறை தவிர, வேறு எதுவிதமான குறையும் இல்லாமல் தான் வானதியும் வெண்ணிலாவும் அந்த வீட்டில் வலம் வந்தார்கள்.

அவர் இறந்து எட்டு முடிவதற்குள்ளாகவே தாங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல ஜீவனின் நிழலில் இத்தனை நாளும் பாதுகாப்பாக இருந்திருக்கிறோம் என்பதை, இருவரும் நினைத்து நினைத்து ஏங்கும் அளவுக்கு அந்த வீட்டில் உள்ளவர்கள் நடந்து கொள்வதை அவர்கள் உணர்ந்தார்கள்.

வானதியையும் வெண்ணிலாவையும் தவிர அந்த வீட்டில் ஐந்து நபர்கள், சித்தி மஞ்சுளா அவரது தம்பி மனோகரன் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள்.

ஒரு கட்டத்தில் உங்கள் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என மஞ்சுளா இரண்டு பெண்களையும் அம்போவென விட்டு விட, அப்போது தான் வெண்ணிலா வேலை தேடத் தொடங்கினாள்.

அவர்களின் ஒன்று விட்ட சித்தப்பா செல்வம், இரு பெண்களுக்கும் கல்விச் செல்வத்தை அடையும் பாதையைத் தாராளமாகக் காட்டி விட்டே தனது இறுதி யாத்திரையை ஆரம்பித்து இருந்ததால், இருவரும் இறந்து போன தங்கள் சிற்றப்பனுக்கு மானசீகமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

படித்து முடித்து விட்டு வீட்டு வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருந்த பெண், முதன் முதலாக வேலை தேடிக் கொண்டு வெளியே தனியே அலைய, அவளுக்கு அப்போதைக்கு ஒரு சூப்பர்மாக்கெட்டில் தான் வேலை கிடைத்தது.

தங்கையின் மீதிப் படிப்பு முக்கியம் என்பதால், உடனே எதையும் யோசிக்காமல் அந்த வேலைக்குப் போகத் தொடங்கி விட்டாள் வெண்ணிலா.

வானதிக்குத் தான் தன் அக்காள் தனக்காகப் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்குப் போகாமல், கையில் அகப்பட்ட வேலைக்குப் போவது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.

"அக்காச்சி.. நீ உந்த வேலைக்குப் போறது எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கேல்லை.."

"ஏன்டி பிள்ளை.. இந்த வேலைக்கு என்ன குறைச்சல்.."

"வேலைக்கு ஒரு குறைச்சலும் இல்லை.. ஆனா நீ படிச்ச படிப்பு என்ன செய்யிற வேலை என்ன.."

"எங்கடை நாட்டுல இப்போதைக்குப் படிச்ச படிப்புக்குத் தான் வேலை வேணும் எண்டு கொண்டு நிண்டால் நானும் நீயும் சோத்துக்குச் சிங்கி அடிக்க வேண்டியது தான் தெரியுமோ.. அதனால கிடைச்ச வேலையைச் சந்தோஷமாச் செய்தாக் கையில காசு வாறதோட.. நாங்கள் ஆரிட்டையும் கையேந்தி நிக்க வேண்டிய நிலையும் வராதடி பிள்ளை.."

"அக்காச்சி இருந்தாலுமடி.."

"இஞ்சை பார் பிள்ளை.. நீ அக்காவை நினைச்சுக் கவலைப் படுறதை விட்டிட்டு.. உன்ரை படிப்பை முதல்ல பாரு சரியோ.. நீ சந்தோஷமா இருந்தாலே எனக்குக் காணும்.. எனக்கு இருக்கிற ஒரே ஒரு சொத்தே நீ தான்டி.."
என்ற வெண்ணிலாவைத் தாவி அணைத்துக் கொண்ட வானதி
"என்னோட கூடிப் பிறந்த அக்காவா இருந்தால் கூட.. எனக்காக இவ்வளவு தூரம் இறங்கி யோசிச்சிருப்பாளோ தெரியேல்லையடி அக்கா.."
எனக் கண்கள் கலங்க, அவள் கன்னம் தட்டிய வெண்ணிலாவுக்கு அப்போது வயது பத்தொன்பது.

வீட்டில் அவர்கள் இருவரையும் மற்ற ஐவரும் சம்பளம் இல்லாத வேலைக்காரர்களாகவே நடத்த, வானதிக்காக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்த வெண்ணிலா ஒரு இறக்கை இல்லாத தேவதை என்றால் அது மிகையில்லை.

அப்படியே காலமும் காலில் சில்லுப் பூட்டிக் கொண்டு ஓட, வருடங்கள் பத்து வேகமாக ஓடி ஒளிந்து கொண்டது.

வெண்ணிலா வாட்டசாட்டமான பெண்ணாகித் தனது இருபத்தொன்பது வயதில் வந்து நிற்க, சித்தி மஞ்சுளாவின் தம்பி மனோகரனின் சீண்டல்களுக்கும் வெண்ணிலா முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டுகளும் அந்த வீட்டில் மெல்ல மெல்ல அரங்கேறத் தொடங்க, ஒரு நாள் அவனைப் பிடித்து வானதி விளாசி விட்டாள்.

வெண்ணிலா சாதுவான பெண், எந்தக் கவலையையும் யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். தன் உயிரான தங்கை வானதியிடமே அவள் தன் கஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை.

வானதி தான் தமக்கையின் முகம் பார்த்து, அவளது கஷ்டங்களைப் பாதியும் ஊகித்துக் கொள்வது.

அன்றும் ஒருநாள் அப்படித் தான் நடு இரவில் வீடே தூங்கி விட்ட நேரம், வீட்டின் பின் வாசலில் அமர்ந்து வெண்ணிலா சத்தமே இன்றி அழுது கொண்டிருக்க, அவளை அந்த வானத்து வெண்ணிலா வேடிக்கை பார்த்தபடி வலம் வந்து கொண்டிருந்தது.

சமையலறையில் வழமையாகத் தூங்கும் இடத்தில் படுத்திருந்த வானதிக்கு லேசாக முழிப்புத் தட்டவே, அக்காளைக் காணாமல் எழுந்து அமர்ந்து விட்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே கரைய, மெல்ல எழுந்து வெளியே வந்தவளுக்கு, சத்தமில்லாமல் குலுங்கி அழுது கொண்டிருந்த வெண்ணிலாவின் பின் பக்கத் தோற்றமே கண்ணில் பட்டது.

ஓசைப்படாமல் போய் அவளருகில் மெல்ல அமர்ந்து கொண்டவள், நாடியில் கை வைத்தபடி தமக்கையையே பார்க்கத் தொடங்கினாள்.

தன்னை மறந்து அழுது கொண்டிருந்த வெண்ணிலாவுக்கு, சில நொடிகளிலேயே சுற்றுப்புறம் மெல்ல விளங்க, பக்கத்தில் இருந்த தங்கையை நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள்.

தான் அழுததை மறைக்க முடியாமல் அவள் திருதிருவென முழிக்க, வானதியோ தமக்கையின் கண்களையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

தங்கையின் பார்வையிலேயே அவளிடம் பதில் சொல்ல முடியாமல் தப்ப முடியாது என உணர்ந்த வெண்ணிலா, மனோகரனின் சீண்டல்களைப் பற்றி மெல்ல ஒரு வார்த்தை சொன்னது தான் தாமதம்,
நடு இரவு என்று கூடப் பாராமல் தூங்கிக் கொண்டிருந்த மனோகரனைக் கட்டையொன்றால் விளாசி விட்டாள் வானதி.

அவளது அடியை எதிர்பாராத மனோகரன் எழ முடியாமல் கீழே உருண்டு கொண்டு, அவளது அடியைத் தடுக்க முயல, அவளோ அவனை விடுவதாக இல்லை.

இத்தனை வருடங்களில் அவன் பிரயோகித்த மனம் நோகும் பேச்சுக்களுக்கு எல்லாம் சேர்த்து வைத்து, அவள் அடி பின்னி எடுத்து விட்டாள்.

அவன் போட்ட சத்தத்தில் பக்கத்து வீட்டு நபர்களும் அவர்கள் வீட்டுக்கு முன்னால் கூடி விட, மஞ்சுளாவால் வானதியை எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது.

அதற்கான இன்னுமொரு காரணம் மனோகரன் பக்கத்து வீடுகளில் இருந்த பெண் பிள்ளைகளிடமும் தனது கை வரிசையைக் காட்டியிருந்ததால், பக்கத்து வீட்டு நபர்களது அத்தனை ஆதரவும் வானதிக்கே கிடைத்தது தான்.

பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது போல, மனோகரனது அத்தனை தகாத ஆட்டங்களுக்கும் அன்றே வானதியால் ஒரு முடிவு வந்திருந்தது.