• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..15

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
கடலின் மேல் ஆடியசைந்து சென்று கொண்டிருந்த அந்தப் படகில், சனநெருக்கம் அதிகமாக இருக்கவே, அருண்மொழியின் சட்டையை இறுக்கப் பிடித்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தாள் வானதி.

அவனும் எங்கே தான் சற்று நகர்ந்தாலும் அவள் கஷ்டப்படுவாளோ என்கிற ரீதியில், கிட்டத்தட்ட அவளைப் பாதி அணைத்தபடி நின்றிருக்க, வானதியோ அவனின் தோள் வழியே லேசாகத் தெரிந்த கடல் நீரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

அன்று பௌர்ணமி தினம் என்பதால் சிங்களப் பிரதேசத்தில் இருந்து சாரி சாரியாக மக்கள் கூட்டம் நாக விகாரையைத் தரிசிக்க வந்த வண்ணம் இருந்ததால், அனுமாரின் வால் போல மக்களின் கூட்டம் நீண்டு கொண்டே போனது.

அரச பேருந்தில் வந்து இறங்கிய போது கண்ட ஜனத் திரளில், ஏன்டா இன்று இங்கு வந்தோம் என்கிற நிலை வானதிக்குத் தோன்றி விட, அதை அப்படியே அருண்மொழியிடம் ஒப்புவித்தாள்.

"அருண்.. அங்க பாருங்கோவன் சனத்தை.."

"ம்ம் பாக்கிறேன்.."

"வாங்கோவன் திரும்பிப் போயிடலாம்.."

"திரும்பிப் போகவோ இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்தம்.."

"உதுக்குள்ள போய்.. லைன்ல நிண்டு படகுல ஏறுறது எண்டால் நாக்குத் தள்ளீருமே.."

"அதெல்லாம் தள்ளாது.. ஒரு வேளை தள்ளினாலும் உள்ள எடுத்து விட நான் இருக்கிறன் நீ வா.."

"அது தானே உங்களிட்டைக் கதைச்சு சாதிக்க முடியுமே.. நீங்கள் வைச்சது தான் எப்பவுமே சட்டம்.."

"இப்ப நான் அப்புடி என்ன சட்டம் வைச்சனான்.. இண்டைக்குப் பௌர்ணமி நாள் என்றதால நிறைய ஆட்கள் வருவினம்னு உனக்கும் தெரியும் தானே.."

"ம்ம் தெரியும் தான்.."

"பிறகென்ன வா.. இப்புடிப் போய்க் கும்பிட்டால் தான் அம்மன் வரம் தருவா.."

"இதென்ன புதுசா இருக்கு.."

"இந்த நாள் நிறைய ஆட்கள் வருவினம்.. நிறைய பூஜைகள் நடக்கும்.. நிறைய பேரு நிறைய வரங்கள் கேட்பினம்.. சோ அம்மன் நல்ல பிஸியா இருப்பா.. பிஸியான நேரத்துல யார் எவர்னு பாக்காமல் சும்மா டக்கு டக்குனு வரத்தைத் தூக்கிக் குடுத்திருவா.."

"என்ரை தெய்வமே இப்ப என்ன அடம் பிடிக்காமல் கோவில் வரோணும் அப்புடி தானே.. நடவுங்கோ வாரன்.. என்ன டிசைனா விளக்கம் சொல்லுது பாரன்.."

"நீ சமத்தா வந்தால் நான் ஏன் டிசைனா விளக்கம் சொல்லப் போறேன் சொல்லு.."
என்று கொண்டு வானதியின் கரம் பற்றியவன் அந்தக் கூட்டத்தில் மெல்ல நடந்து போய், வரிசையின் தொங்கலில் நின்று கொண்டான்.

சில நிமிடங்கள் அப்படியும் இப்படியும் வேடிக்கை பார்த்தபடி கரையவே, முன் வரிசையின் நீளத்தை மெல்ல எட்டிப் பார்த்த வானதி உண்மையிலும் திகைத்துத் தான் போனாள்.

"அருண்.. அங்க பாருங்களேன் நீளத்தை.."

"நீ கொஞ்சம் திரும்பிப் பின்னாடி பாரு.."

"ஆத்தி என்ன இது.. நான் நினைச்சேன் நாங்கள் தான் கடைசி ஆக்கள் எண்டு.. இதென்ன திரும்பிப் பாத்தா அனுமார்ரை வாலு மாதிரி நீண்டு கொண்டே போகுது.."

"ம்ம்ம்.. நல்ல வேளை வெள்ளன வந்தம்.."

"வெள்ளன வந்தும் என்ன பிரயோஜனம்.. எங்க நிக்கிறம் எண்டு பாருங்கோவன்.."

"இல்லை வானம் வெள்ளன வந்தது தான் நல்லம்.. இல்லாட்டிக்கு இந்த நீளத்துல நிண்டு போய் போர்ட் ஏறுறதுக்குள்ள.. வெயில் உச்சி மண்டையைப் பிளந்திடும்.."

"குடை பிடிச்சுக் கொண்டு நிண்டிருப்பம்.."

"உன்ரை குடையைக் காத்துச் சுழட்டி எடுத்துக் கொண்டு போயிருக்கும்.."

"ஓம் என்ன.."
என்றவளை யாரோ இடித்து ஓரங் கட்ட, அவள் வேகமாகப் போய் அருண்மொழியோடு மோதிக் கொண்டு நின்றாள்.

சன நெரிசலில் அவள் விழுந்து வைக்காமல், அவளை அணைவாகப் பிடித்துக் கொண்டவன் படகில் ஏறும் வரை எதுவுமே பேசவில்லை. அவனது கைவளைவில் நின்றவளுக்கும் எதையுமே பேச முடியவில்லை.

இடையிடையே தன் தோள்களில் அழுத்தமாகப் பதிந்திருந்த அவனது கரத்தைப் பார்த்தவளுக்கு, உள்ளூர இனம் புரியாத சந்தோசம் ஒன்று உருவாகத் தான் செய்தது.

படகில் ஏறிய பின்னர் கூட, அவன் அவளை அணைப்பில் இருந்து விலக்கவில்லை. அவன் அணைப்புக்குள் நின்றபடியே கடல் நீரையும், தொலைவில் தெரிந்த கோபுரத்தையும் இரசித்தவளுக்கு அன்றைய நாள் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருவழியாக அத்தனை சன நெரிசலையும் தாண்டி வந்து, கோவிலைத் தரிசனம் செய்து விட்டு, அந்த வளாகத்தில் இருந்த மர நிழலில் அமர்ந்து கொண்டதும் வானதியின் விழிகள் கோவிலின் கோபுரத்தைத் தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டன.

இந்தக் கோவிலுக்கு வர வேண்டும் என்பது எத்தனை வருடக் கனவு, அந்தக் கனவு இப்போது தான் ஈடேறியிருக்கிறது. சிறு வயதில் ஒரு நாள் பள்ளியில் இருந்து சுற்றுலாவுக்கு அழைத்து வந்த போது வந்து பார்த்த கோவில், இப்போது எவ்வளவு மாறி விட்டது. அவளது பார்வையும் சிந்தனையும் கோவிலைச் சுற்றி இருக்க, பக்கத்தில் இருந்தவனின் பார்வையும் சிந்தனையும் வானதியிடம் மட்டுமே இருந்தது.

"வானதி.."

"ம்ம்.."

"உன் கிட்டே ஒரு விசயம் பேசணும்னு சொன்னேனே.."

"ம்ம்.."

"என்ன ஏதுனு கேட்க மாட்டியோ.."

"நீங்களே சொல்லுவீங்கள் எண்டு தான் பேசாமல் இருந்தனான்.. சொல்லுங்கோ என்ன விசயம்.."

"எனக்கு சுத்தி வளைச்சுப் பேச வராது வானம்.. அதனால நேரடியாவே கேட்கிறேன்.. நாம வெடிங் செய்துக்கலாமா.."
என்று அருண்மொழி சட்டென்று கேட்டே விட, காதுகள் அவன் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், பார்வை கோபரத்திலேயே இருக்க, வேகமாகத் திரும்பி அவன் முகம் பார்த்தாள் அவள்.

அவன் முகத்தில் விளையாட்டோ குறும்போ மருந்துக்குக் கூட இருக்கவில்லை.

இவன் என்ன சொல்கிறான், உண்மையாகத் தான் கேட்கிறானா, அல்லது என் காதுகளில் ஏதும் தவறாக விழுந்து விட்டதா எனக் குழம்பிப் போனாள்.

"அருண்.. இப்போ என்ன கேட்டனீங்கள்.. எனக்குச் சரியாக் கேக்கேல்லை எண்டு நினைக்கிறன்.."

"இல்லை உனக்கு கேட்டது சரி தான்.. ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளலாமானு கேட்டேன்.."

"..........."

"என்ன வானம் பதிலையே காணோம்.. ஒரு வேளை உனக்கு இதுல விருப்பம் இல்லையோ.. இல்லாட்டிக்கு பரவாயில்லை இல்லைனே சொல்லீடு.. நான் உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன்.."

"அது வந்து.."

"நீ தாராளமா டைம் எடுத்து யோசி.. யோசிச்சிட்டு சொல்லு.. ஒரு ரெண்டு நாள்ல சொன்னால் போதும்.."

"திடீரெண்டு என்ன இது.. ஏன் இப்புடித் தோணிச்சு உங்களுக்கு.."

"திடீர்னு எல்லாம் தோணலை.. உன்னைப் பாத்துப் பழகின மூணாவது நாளே வாழ்ந்தால் அது உன்கூட மட்டும் தான் என்ற அளவுக்கு தோணிச்சுது.."

"மூணாவது நாளேவா.."

"ஆமா.."

"ஏன்.."

"ஏன்னா என்ன சொல்றது.. என்னமோ தெரியலை உன்னை முதல் தடவை பாத்த உடனயே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுது.."

"ஓ.. பாத்த உடன பிடிச்சுப் போற அளவுக்கு நான் ஒண்டும் அவ்வளவு பேரழகி கூடக் கிடையாதே.."

"குட் ஜோக்.. அழகு என்றது வந்து அவரவர் மனசையும் பார்வையையும் பொறுத்தது வானம்.. அதோட ஒருத்தரை பாத்த உடன பிடிச்சுப் போறதுக்கு முக லட்சணம் தேவையில்லை.. லேசான ஒரு புன்னகையே போதும்.."

"ஓ.."

"ம்ம்.."

"உங்களோட இனத்துலயே ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கட்டிக்கலாமே.."

"கட்டிக்கலாம் தான்.. ஆனா எனக்குத் தான் உன்னைப் பிடிச்சுப் போச்சுதே.."

"ஓஹோ.. அப்போ முடிவே செய்தாச்சா.."

"யெஸ்.."

"உங்களுக்கு என்னைப் பிடிச்சது மாதிரி.. எனக்கும் உங்களைப் பிடிக்கோணும் எல்லோ.."

"கண்டிப்பாப் பிடிக்கோணும்.."

"ஒரு வேளை எனக்கு உங்களைப் பிடிக்காமல் போனால்.."

"பிடிக்கும் வரை காத்திருப்பேன்.."

"காத்திருந்தும் பிரயோசனம் இல்லாட்டிக்கு.."

"காலம் எப்ப வேணா எப்புடி வேணாலும் மாறலாம்.. இன்னைக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கலாம்.. நாளைக்கு பிடிக்காதது இன்னைக்கு பிடிச்சதா இருந்திருக்கலாம்.. எப்பவுமே பிடிக்கவே பிடிக்காதுனு நினைச்சது எப்போவாது பிடிக்கலாம்.. எப்போதுமே வெறுக்காதுனு நினைச்சது இப்பவே வெறுக்கலாம்.."

"என்ரை ஆத்தாடி.. உங்கடை விளக்கமும் நீங்களும் தலையைச் சுத்துது.. வாங்கோ போவம்.."

"அப்போ நான் கேட்டதுக்கு பதில்.."

"நீங்கள் தானே தாராளமா டைம் எடுத்து யோசி.. யோசிச்சிட்டுச் சொல்லுனு சொன்னீங்கள்.."

"ஆமா சொன்னேன்.."

"எனக்கும் நிறைய டைம் தேவை.."

"சரி எடுத்துக்கோ.."
என்றவன் அதன் பின்னர் அவளிடம் எதையும் பேசவில்லை, அவளாலும் முன்பு போல் அவனோடு கலகலப்பாகப் பேச முடியவில்லை.

இருவரும் அமைதியாகவே மீண்டும் கோவிலை வலம் வந்து தங்களது தரிசனத்தை முடித்துக் கொண்டார்கள்.

வானதிக்கும் அருண்மொழியை மிகவும் பிடிக்கும், ஆனால் அவனைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் அவனாக வந்து பேசும் வரை அவளுக்கு வரவேயில்லை. அந்தத் திருமணப் பேச்சை அவன் எடுத்ததும் அவளது மனதில் ஆயிரம் கேள்விகள்.

இது சரியாக வருமா? அம்மா என்ன நினைப்பார்கள்? அவனின் தோற்றம் அழகு எங்கே நான் எங்கே? அவனின் வசதி வாய்ப்புகளோடு ஒப்பிடுகையில் எனக்கென்று சொந்தமாக ஒரு குடிசையாவது இருக்கிறதா? ஒரு வேளை என் மீது இரக்கப் பட்டுத் தான் திருமணம் செய்யக் கேட்கிறானா? இந்தத் திருமண விசயம் தெரிந்தால் மஞ்சுளாம்மா அடுத்து என்ன மாதிரியான நாடகத்தை அரங்கேற்றுவார்? என அவளது மனதினுள் கேள்விகளாகவே ஓடிக் கொண்டிருந்ததே தவிர, ஒன்றுக்குமே அவளிடம் விடை இருக்கவில்லை.

மீண்டும் வரிசையில் நின்று, படகு ஏறும் இடம் செல்லும் நேரத்தில், தன்னிச்சையாக அருண்மொழியின் கரம் வானதியின் கரத்தைப் பற்றிக் கொண்டது.

அவளுமே அவனின் கரத்தை விலக்காமல் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். ஒரு நொடி அவள் கரத்தையும் அவள் முகத்தையும் பார்த்தவன் பார்வையைத் திருப்பிக் கொண்டு விட்டான்.

அருண்மொழி தான் ஆசைப்பட்டதை உடனே அடைந்தே தீர வேண்டும் என்கிற குணம் இருக்கும் ஒரு ஆண்மகன். அந்தக் குணம் அவனிடம் இருப்பது மிக மிக நெருக்கமான நபர்களுக்கு மட்டுமே தான் தெரியும். முதன் முதலாக அவன் தள்ளி நின்று வானதியின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதே பெரிய விசயம் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை.

ஒரு வேளை வானதி, நீ எனக்கு வேண்டாம் என்று எடுத்தெறிந்து பேசியிருந்தால், அவளைத் தூக்கிச் சென்று தாலி கட்டியிருப்பான். ஆனால் ஏனோ தெரியவில்லை அவனுக்கு அவளை எள்ளளவு கூடக் காயப் படுத்தத் தோன்றவில்லை. அதோடு அவளும் எடுத்தெறிந்து பேசவில்லை. அதனாலோ என்னவோ அவளது பதிலுக்காக அந்த நிமிடத்தில் இருந்து காத்திருக்கத் தொடங்கி விட்டான் அருண்மொழி.

படகில் ஏறிப் பயணம் செய்யத் தொடங்கியதில் இருந்து, வீடு நோக்கிப் பயணம் செய்த நேரம் வரை வானதி யோசனையிலேயே மூழ்கியிருந்தாள். அதன் பலன் ஏன் இந்தத் திருமணத்தைச் செய்து கொள்ளக் கூடாது என்கிற கேள்வி அவளுள் மெல்ல அரும்பத் தொடங்கியிருந்தது.

அம்மாவின் குணத்துக்கு அவர்கள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்ளக் கூடும், மஞ்சுளாம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் ஏன் அழகான ஒரு வாழ்க்கையை இழக்க வேண்டும், அருணை விடவா என்னை யாரும் நேசித்துப் பாசமாகப் பார்த்து விட முடியும் என அவளுள் வேக வேகமாக பதில்கள் உருவாகவே, வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது அருண்மொழியைத் திருமணம் செய்து கொள்வோம் என்கிற முடிவான முடிவுக்கு வந்திருந்தாள் வானதி.