• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..2

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
மேகக் கூட்டம் இல்லாத வானத்தில், கொடுங்கோல் அரசன் போலச் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரிய வெளிச்சத்தை, நிலத்தில் பட விடாமல் தடுக்க, அடர்ந்து வளர்ந்திருந்த பெரு விருட்சங்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்க, தன் கடுங் கதிர்களால் அந்த மரங்களை ஊடறுத்துத் தரையை வேக வைத்துக் கொண்டிருந்தான் பங்குனி மாதத்துக் கதிரவன்.

இந்தா முடியுது அந்தா முடியுது என எட்டி எட்டிப் பார்க்க, அனுமார் வால் போல அந்தத் தார்ச் சாலை நீண்டு கொண்டே போனதே தவிர முடிந்தபாடாய்க் கணவில்லை. சாலையின் நீளத்தைக் கண்டு வானதியும் மலைத்துத் தான் போனாள்.

நடக்கத் தொடங்கினால் விடிய விடிய நடந்து கொண்டிருக்க வேண்டியது தான் எனப் பெரியவர் சொன்னது எத்தனை உண்மை என்பது அவளுக்கு அப்போது தான் புரிந்தது.

வாகனத்தின் முன்னால் இருந்தபடியே தலையை மட்டும் திருப்பி அவளோடு பேசத் தொடங்கினார் அவர்.

"என்னம்மாச்சி எந்த இடம் நீ.. இங்கினை வந்து எப்புடி மாட்டுப் பட்டனீ.."

"நான் கிளிநொச்சி ஐயா.. வீட்டுத் தரகர் ஒராளிட்டை வீடு பாக்கச் சொன்னான்.. அவர் தான் வீடு காட்டுறன் எண்டு கூட்டி வந்து இங்கினை விட்டிட்டுப் போயிட்டார்.."

"உன்னையப் பாத்தாப் படிச்ச பிள்ளை மாதிரிக் கிடக்குது.. இப்புடிப் பொறுப்பில்லாமல் பதில் சொல்லுறியே.. கிளிநொச்சியில இருந்து வீடு தேடி எவனையோ நம்பி இங்க அநுராதபுரம் வரை வந்திருக்கிறாய்.. துணைக்கு ஒருத்தனும் இல்லாமல்.."

"என்ரை நிலமை அப்புடியாப் போச்சுது ஐயா.."

"உன்ரை நிலமை எப்புடி இருந்தாலும்.. நீ தனியாளா இவ்வளவு தூரம் வந்தது பிழை தான் அம்மாச்சி.."

"ம்ம்.."

"நாடு ரொம்பக் கெட்டுப் போய்க் கிடக்குது.. இதயத்துல ஈரம் உள்ளவனை ரவுண்டு கட்டித் தேட வேண்டிய காலமாப் போச்சுது.. ரெண்டு குழந்தையளை வேறை தூக்கிக் கொண்டு வெளுக்கிட்டிருக்கிறியே தைரியமான பிள்ளை தான்.."

"..............."

"ஏதவோ மனசுக்குள்ள போட்டு மறுகுற மாதிரிக் கிடக்குது.. அதுக்கு முதல் ஒரு நல்ல சாப்பாட்டுக் கடையாப் பாத்து நிப்பாட்டோணும்.."
என்று கொண்டே அவர் வாகன சாரதியின் முதுகில் ஒரு தட்டுத் தட்ட, சர்ரென்று போய் ஒரு சைவ உணவகத்தின் முன்னால் வாகனம் நின்று கொண்டது.

"எனக்கு ஒண்டும் வேண்டாம் ஐயா.."

"உனக்கு வேண்டாமல் இருக்கலாம் அம்மாச்சி.. ஆனால் அந்தப் பிஞ்சிகள்டை வகிறு கருகிப் போயிடும் ஆத்தா.. பசிச்சுப் போன வகித்துக்குச் சோறு போடாமல் அனுப்புற அளவுக்கு இன்னும் மோசமாகேல்லை இந்த இடம்.. இறங்கம்மாச்சி.."
என்று கொண்டே மீண்டும் குட்டிப் பெண்ணைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டார் பெரியவர்.

அவர் முன்னால் நடக்க, சங்கடத்தோடு மகனைப் பிடித்துக் கொண்டு பின்னால் போனாள் வானதி.

பெரியவருக்குப் பழக்கப் பட்ட கடைபோலும் அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

ஒருத்தன் ஓடோடி வந்து வாங்கு மேசையைத் தன் சட்டையால் துடைக்க,
"ஏதடா இல்லாத தூசைத் தட்டுறவன்.."
என்று கொண்டு அமர்ந்த பெரியவரை நோக்கிக் கடை முதலாளியே ஓடி வந்தான்.

"வாங்கோய்யா வெள்ளைத்தேவரைய்யா வாங்கோ.. நீங்கள் வந்தால் தான் எங்கடை கடைக்கே ஒரு சுபீட்சம்.."

"போதுமடா சாமி உன்ரை புளுகு.. முதல்ல வாய்க்கு ருசியா எதையாவது நல்லதாப் பாத்துக் கொண்டுவா.."

"இந்தா இப்பக் கொண்டு வாறன் ஐயா.. பிள்ளை ஆரய்யா புதுசாக் கிடக்குது.."

"ரொம்ப முக்கியம் உனக்கிப்ப.. சாப்பாட்டைக் கொண்டாடா வெளக்கெண்ணை.."
என்று அவர் முடிக்கவும், அந்த மேசை உணவால் நிரம்பவும் சரியாக இருந்தது.

ஒன்றும் வேண்டாம் என்று சொன்னவளுக்கு உணவைப் பார்த்த போது தான், வயிற்றுக்குள் புகைவண்டி ஒன்று புகை விட்டுக் கொண்டு ஓடுவதையே உணர முடிந்தது.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் உணவை உண்ணத் தொடங்கியவளுக்கு, இரண்டு மூன்று கிண்ணங்கள் காலியான பின்னே சுற்றுப் புறம் புரிந்தது.

மெல்லத் தலை நிமிர்ந்து பார்த்தவளையே ஆதுரத்துடன் பார்த்தபடி இருந்தவர்
"வகித்துக்கு மட்டும் வஞ்சகம் செய்யவே கூடாது ஆச்சி.. சாப்பிடு நல்லாச் சாப்பிடு அப்பத் தான் உடம்போட சேத்து மனசுக்கும் தெம்பு வரும்.."
என்று சொல்லிக் கொண்டே ராஜேந்திரனுக்கு இரண்டு இடியப்பங்களை எடுத்து வைத்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து மெல்லச் சிணுங்கியபடி வானதியின் மகள் யாழ்மொழி கண்களைத் திறந்து அந்தப் புதியவரைப் பார்த்தாள்.

அவரைப் பார்த்ததும் மிரண்டு போய்க் கத்தாமல், அவரது கத்தை மீசையைப் பிடித்திழுத்து விளையாடத் தொடங்கினாள் அவள்.

அவரும் பெருமையாகத் தனது மீசையை நீவி விட்டபடி
"பத்தைக் கணக்கா மீசை வளத்ததுக்கு இப்பத் தான் ஒரு பலன் கிடைச்சிருக்குது.. குட்டிச் சிங்காரிக்கு என்ரை மீசை பிடிச்சுக் கொண்டுதே.."
என்றும் சந்தோஷப் பட்டுக் கொண்டே
"அடேய்.. நல்ல பசும் பாலை இளஞ் சூடா ஆத்திக் கொண்டு வாருங்கோடா.. பவுணுக்குப் பசிக்க வெளுக்கிடப் போகுது.."
என்றும் கத்தி விட்டு யாழ்மொழிக்கு நன்றாகத் தன் மீசை எட்டும் படி அவளை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டார்.

அவரையும் அவரோடு ஒன்றிப் போன மகளையுமே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

யாழ்மொழி வானதியைத் தவிர யாருடனும் ஒட்டாத ரகம், அண்ணன் ராஜேந்திரனோடு கூட அவ்வளவாகச் சேர மாட்டாள். அவன் தான் 'நானிந்தை உசிரு' என்று அவளுக்குப் பின்னாலேயே அலைவான்.

அப்படிப் பட்ட சின்னவள் யார் எவர் என்று கூடத் தெரியாத ஒரு மனிதரோடு ஒட்டிக் கொண்டு நிற்கிறாள் என்றால் உண்மையிலும் அவர் பாசமான பண்பான மனிதராகத் தானே இருக்க வேண்டும் என அவளது ஆழ் மனது சொல்லியது.

வெள்ளைத்தேவரும் கையில் கிடந்த குவளைப் பசுப்பாலை மெல்ல ஊதி ஊதி யாழ்மொழியின் குட்டி வாயில் பருக்க, அதன் ருசியில் சப்புக்கொட்டிக் கொண்டு குடிக்கத் தொடங்கினாள் அந்தச் சின்னச் சிட்டு.

குழந்தைக்குப் பாலைப் பருக்கிக் கொண்டே மீண்டும் வானதியிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் வெள்ளைத்தேவர். அவருக்கு அவளை அப்படியே நட்டாற்றில் விட்டுப் போகக் கொஞ்சங் கூட மனதே இல்லை. அதோடு வானதியின் முகம் பார்த்த கணமே அவளுக்கு ஏதோ பெரிய இக்கட்டு என்பதை அவரால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

"அம்மாச்சி.. அடுத்தது என்ன செய்யிறதா உத்தேசம்.."

"அது தான் யோசிக்கிறன் ஐயா.."

"எனக்கும் உன்னைய இப்புடியே விட்டிட்டுப் போக மனசைக் காணேல்லை.. அதோட இந்தச் சின்னப் பவுணைக் கூடவே தூக்கிக் கொண்டு சுத்தோணும் போலக் கிடக்குது.. நீ வேறை வாயைத் திறந்து ஒண்டும் சொல்லாமைக்கு மனசுக்குள்ளயே மறுகிறாய்.. ஒண்டு செய்வம்.. என்ரை வீட்டோட சேத்து ஒரு பண்ணை வீடு கிடக்குது.. நீ பேசாமல் பிள்ளையளோட வந்து அங்க இரு.. உனக்குத் தோதுப்படேக்குள்ள அடுத்தது என்ன செய்யலாம் எண்டு யோசிப்பம்.."

".................."

"என்னம்மாச்சி.. இன்னும் என்னில நம்பிக்கை வரேல்லையோ.. பயப்பிடாத பிள்ளை நீ என்ரை மகள் வயசில இருக்கிறாய் நான் மனசால கூட உனக்குக் கெடுதல் நெய்க்க மாட்டன்.."

"அச்சோ அப்புடி எல்லாம் இல்லை ஐயா.. இந்தக் காலத்துல இப்புடியும் ஒரு நல்ல மனிஷரைக் காணுவன் எண்டு நான் கொஞ்சங் கூட நெய்க்கேலை.. அது தான் அப்புடியே பேச்சு வராமல் நிண்டிட்டன்.. என்ரை குலசாமி வைரவர் என்னை ஒரேசாவாக் கை விடேல்லை எண்டு நினைக்கிறன்.."

"குலசாமிக்கு வடைமாலை சாத்திப் பிறகு படையலைப் போடுவம்.. இப்ப வெளிக்கிடுங்கோ நடு வெய்யிலுக்கு முந்தி வீட்டை போவம்.."

"ஐயா.."

"ஓமாச்சி இப்ப என்ன குழப்பம்.."

"அங்கினை உங்கடை வீட்டுல ஒருத்தரும் ஒண்டும் சொல்ல மாட்டினமோ.."

"அங்க இருக்கிறதே நானும் என்ரை பெஞ்சாதியும் தான்.. என்னை விட அவள் தான் உங்களைக் கண்டதும் துள்ளிக் குதிச்சு வரவேப்பாள்.. அதனால கண்டதையும் நெய்ச்சுக் குழம்பாமல் வெளுக்கிடு பிள்ளை.."
என்று கொண்டு யாழ்மொழியைத் தூக்கி மீண்டும் தோளில் போட்டுக் கொண்டவர், மறு கையால் ராஜேந்திரனை இறுகப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்க, தாயாட்டுக்குப் பின்னால் போகும் ஆட்டுக்குட்டி மாதிரி வெள்ளைத்தேவர் பின்னால் வானதி போகத் தொடங்கினாள்.

அவளது நிலமைக்கு அவளால் அவரோடு போவதைத் தவிரவும் வேறு வழியில்லை. அந்த நல்ல மனிதரின் உதவியையும் தான் பெற்றுக் கொள்ளுவோமே என்று தான் அவளது மனதும் சொல்லிக் கொண்டது.

அவர்கள் அந்தக் கடையை விட்டு அப்பால் போகவும், கடை முதலாளியும் அவரது தம்பியும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"தேவரைய்யா கடைசி வரைக்கும் அந்தப் பிள்ளை ஆரெண்டே சொல்லேல்லையே அண்ணாச்சி.."

"அவர் கூட்டிக் கொண்டு போறதைப் பாத்தா ஆரவோ வேண்டப்பட்ட ஆள் போலத் தான் கிடக்குது.."

"அடப் போங்கோண்ணாச்சி நீங்கள் வேறை.. அவர்டை குணத்துக்குத் தெருவால போறவன் வாறவன் கூடத்தான் அவருக்கு வேண்டப்பட்ட ஆக்கள்.."

"அதுவும் சரி தான்.. எவ்வளவு நல்ல குணம் படைச்ச மனுஷன் எண்டாலும் கடவுள் ஒரு பிள்ளையைக் குடுக்காமல் விட்டிட்டானே.."

"அதை நினைச்சு அவர் ஒரு நாள் கூட நொந்து போய்க் கிடந்ததே இல்லை அண்ணாச்சி.."

"அவர் நொந்து போய்க் கிடந்தால் பிறகு சின்னத்தேவருக்குப் பிடிக்காதெல்லோ.."

"ஓம் ஓம்.. என்னத்தைச் சொன்னாலும் தேவரய்யாக்குப் பெத்த பிள்ளையள் எண்டு இருந்திருந்தாக் கூட சின்னத்தேவர் போல அக்கறையாப் பாத்துக் கொண்டிருப்பினமோ எண்டுறது ஐமிச்சம் தான் அண்ணாச்சி.."

"அதுலயும் கொதி பிடிச்ச குணம் சின்னத்தேவருக்கு.. ஆர் பேச்சும் கேக்காத ரகம்.. ஆனாத் தேவரய்யா ஒரு வார்த்தை சொன்னாப் போதும் உடனே கர்ச்சிக்கிற சிங்கம் அப்புடியே அடங்கிப் போயிடும்.."
என்று கொண்டே அவர்கள் தங்கள் வேலையைக் கவனிக்கத் தொடங்கவும், வெள்ளைத்தேவரின் வாகனம் அவரது வீடு நோக்கி விரையத் தொடங்கியது.

ஆடம்பரம் இல்லாத அளவான அம்சமான பாரம்பரியம் மிக்க ஒரு ஓட்டு வீட்டின் முன்னால், வாகனம் மெல்ல நிற்கவும்
"என்ரை மனுசிக்கு இப்புடி ஜீப்புகள் எல்லாம் உள்ள வந்தால் ஆகாது.. உடன கத்தத் தொடங்கீடுவாள்.. அவளோட என்னத்துக்கு வம்பு எண்டிட்டு நானும் வாகனங்களை உள்ளாறக் கொண்டு போறதில்லை.. நீ உள்ள வா ஆச்சி.."
என்று கொண்டே தன் குழந்தைகளோடு வீட்டு வளவினுள் நுழைந்த வெள்ளைத்தேவரைத் தொடர்ந்து அந்த இடத்தை இரசித்துப் பார்த்தபடி தானும் நுழைந்தாள் வானதி.

சற்று மணி நேரங்களுக்கு முன்னால் யாரேனும் அவளிடம் வந்து, இன்னும் சில மணி நேரத்துக்குப் பிறகு நீ சுற்றுப்புறத்தை இரசிக்கும் மனநிலையில் இருப்பாய் என்று சொல்லியிருந்தால் அவள் வாய்விட்டுத் தான் சிரித்திருப்பாள்.

அந்தளவிற்கு அவளது மனதும் உடலும் ரணமாகிப் போயிருந்தது. ஆனால் எந்த நேரத்தில் வெள்ளைத்தேவரைப் பார்த்தாளோ அப்போதே அவளது கெட்ட நேரம் எல்லாம் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியே போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளைத்தேவரின் வீட்டு வளவினுள் காலடி எடுத்து வைத்த கணமே, காடு மேடெல்லாம் கடந்து வீடு வந்ததொரு உணர்வு அவளுள் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டிருந்தது.

வெள்ளைக் காகிதம் போல இருந்த அவளது வாழ்வில் வானவில் வர்ணங்கள் தெளிக்கப் போகும் அந்த அழகிய தருணங்கள் இனித் தான் உருவாகப் போகிறது என்பதை அறியாமல், ஒளியிழந்து போய்க் கிடந்த முகம் மெல்லப் பிரகாசிக்க, நடைபாதையோரம் பூத்துக் கிடந்த செவ்வந்திப் பூக்களை வருடிக் கொடுத்தபடி நடையை எட்டிப் போடத் தொடங்கினாள் வானதி.