• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

சீசன் (2) அசுரனின் குறிஞ்சி மலரே..24

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
வானதியின் பார்வையிலேயே தான் சொல்ல வருவது அவளுக்கு புரியவில்லை என்பதை, ஜனகன் புரிந்து கொண்டான்.

"நீ யோசிக்கிற மாதிரி அவ்வளவு குழப்பம் எல்லாம் இல்லை தங்கச்சி.. ஒரு பொண்ணோட மனசை இன்னொரு பொண்ணு தான் அறிவா என்டுறது மாதிரி தான் கதை.. அவவோட நீ கதைச்சு அவவோட மனசை எனக்குச் சொல்லு.."

"ஓ அப்புடியோ விஷயம்.."

"அது தான் விஷயம்.."

"சரி அண்ணா.. உங்களுக்காக இதைக் கூடச் செய்ய மாட்டேனா.."

"அந்த நம்பிக்கையில தான் தங்கச்சி உன்னட்டை வந்தனான்.. எனக்கு இதை வேறை யாரிட்டையும் சொல்ல வேணும் எண்டு தொணவே இல்லை.. என்னவோ தெரியேல்லை உன்னட்டைச் சொல்லுவம் எண்டு தோணிச்சுது.."

"அந்தளவுக்கு நான் உங்களுக்கு ஒரு நல்ல தங்கச்சியா இருக்கிறன் எண்டுறதை நினைக்கும் போது எனக்குச் சந்தோஷமா இருக்குது அண்ணா.."

"எனக்கு கூட உன்னை மாதிரி ஒரு தங்கச்சி கிடைச்சது அவ்வளவு நிம்மதி.."

"சரி உங்கடை ஆளை எப்போ எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறதா உத்தேசம்.."

"அது தான் தங்கச்சி உள்ளதிலேயே பெரிய பிரச்சினை.. அவள் சரியான அமைதி சாந்தமான பொண்ணு சாதுவான பொண்ணு.. அவ வாயில இருந்து ஒரு வார்த்தையை வர வைக்கிறதுக்குள்ள நமக்குத் தலை நரைச்சிடும் தங்கச்சி.. ஆனா நான் உன்னைத் தான் மலை போல நம்பி வந்து இருக்கிறன்.. ஏன் எண்டு சொல்லு பார்ப்போம்.."

"ஏன் அண்ணா.."

"ஆனானப் பட்ட எங்கடை பாஸையே அப்பப்ப சிரிக்க வைக்கிறியே.. என்னோட ஆளெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இருக்காதுன்னு நினைக்கிறேன்.."

"அடப் போங்கோண்ணோ நீங்கள் வேறை.."

"உண்மை தான் தங்கச்சி.. எங்கடை பாஸ் சிரிச்சு நான் பாத்ததே இல்லை.. நீ வந்தாப் பிறகு உன்னால தான் அவர் சிரிக்கிறாரு.. அது அதிசயம் தானே.."

"அதிசயம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. உங்கடை ஆளை எப்போ காட்டப் போறீங்கள்.."

"இண்டைக்கு பின்னேரம் போவமோ.."

"சரி அண்ணா.."
என வானதி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அருண்மொழியின் அந்தப் பெரிய வீட்டுக்குள் ஒரு கார் நுழைந்தது.

"இரு தங்கச்சி வாரன்.. பாஸிந்தை சொந்தக்காரர் வந்திட்டினம்.."

"ஓ.."

"நான் போய் அவையைக் கவனிச்சிட்டு வாறன்.. நாங்கள் பின்னேரம் போவம்.."

"சரி அண்ணா.. நீங்கள் போங்கோ.."
என்றபடி அப்படியே அமர்ந்து விட்டாள் வானதி.

காரில் இருந்து இறங்குபவர்கள் யார் என்பது அவளது பார்வை வட்டத்துக்குள் அப்படியே தெரிந்தது.

ஒரு நொடி அவளது பார்வை காரில் இருந்து இறங்கிய இருவர் மீதும் விழுந்து நகர்ந்து, மீண்டும் அவர்கள் மீது நிலை குத்தி நின்றது.

இந்த முகங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே என அவள் நினைக்கும் போதே, அவளது நினைவு அடுக்குகளில் அவர்கள் பற்றிய எண்ணங்கள் சடுதியில் வந்து அமர்ந்து கொண்டது.

'இவர்கள் இப்போது இங்கே எதற்கு வந்தார்கள் என்ற எண்ணம் தோன்றிய உடனேயே இவர்கள் அருண்மொழியின் சொந்தக்காரர் அல்லவோ.. இங்கே வரத் தானே செய்வார்கள் என்ற எண்ணமும் தோன்றியது.. அதோடு தான் அருண்மொழியைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த பெண் அல்லவா இவள்..'
என்றும் தன்னுள் எண்ணிக் கொண்டாள்.

அதே நேரத்தில் வானதியைத் தேடிக்கொண்டு கனகலட்சுமி வந்து சேர்ந்தார்.

"என்னடி பிள்ளை.. இதுல இருந்து என்ன யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய்.."

"ஒண்டுமில்லை அம்மா சும்மா தான் இருக்கிறன்.. லேசாத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு.. அதுதான் காத்து வாங்க வந்தனான்.."

"தலையிடியோ உள்ள வா ஏதாவது ஆத்தித் தாரன் குடிக்க.."

"அதெல்லாம் வேண்டாம் அம்மா இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. உங்கடை ராசாவத் தேடிக் கொண்டு ஆரவோ அவர்டை சொந்தக்காரர் வந்திருக்கிறினமாமே.. நீங்கள் அவையள வரவேற்கப் போகேல்லையோ.."

"அதுகள் ரெண்டையும் இப்ப வரவேற்காதது தான் குறை.."

"ஏன் அம்மா உங்களுக்கு அவையளைப் பிடிக்காதோ.."

"எனக்கு மட்டும் இல்லைப் பிள்ளை உன்ரை அப்பருக்கும் அவையளைப் பிடிக்காது.."

"ஏனம்மா.. அம்புஜமம்மா இருந்த காலத்திலயும் இவையளைத் தனக்கு பிடிக்காது எண்டு தான் சொன்னவா.. இப்ப நீங்களும் அப்படித்தான் சொல்லுறியள்.."

"ஓம் பிள்ளை.. அதுகள் சொத்துப்பத்துக்குக் குடுக்கிற மதிப்பு மரியாதையை மனுஷருக்குக் குடுக்கிறதே இல்லை.. ஏதவோ தாங்கள் அம்பானி பரம்பரை மாதிரியும் மற்றவையள் ஆண்டிப் பரம்பரை மாதிரியும் ஓவரா கூத்துக் காட்டுங்கள்.. அப்ப எனக்கு அதுகளைக் கண்டாலே ஆகாது.. பிறகும் என்ன செய்றது என்ரை ராசாந்தை சொந்தக்காரராப் போயிட்டினம் எண்டிட்டு கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு.. அதுகள் செய்ற அலப்பறையளைச் சகிச்சுக் கொள்ளுவன் அவ்வளவு தான்.."

"ஓ.."

"சரி சரி நீ எழும்பி உள்ளுக்க வா.. பிறகு உன்னை அதுகள் கண்டுதுகள் எண்டால் கண்ணாலயே சூனியம் வச்சிடுங்கள்.. முதல்ல ஓடிப்போய் யாழியையும் ராஜனையும் தூக்கிக்கொண்டு ஓடி வரோனும்.. குழந்தையளில மட்டும் அதுகள்டை கண் படவே கூடாது.. பிறகு உன்ரை அப்பா என்னை உண்டில்லை எண்டு செய்திடுவாரு.."
என்று கொண்டே, குழந்தைகளை அழைத்து வர வேக வேகமாக அருண்மொழியின் வீடு நோக்கி போனார் கனகலட்சுமி.

அவர் போன திக்கையே பார்த்த வண்ணம் வானதி மெல்ல பெருமூச்சு விடும் போதே, போன வேகத்தில் திரும்பி வந்த கனகலட்சுமி
"பிள்ளை.. இன்னும் ஒண்டு சொல்ல மறந்துட்டன்.. இப்ப வர்ற ஞாயிற்றுக்கிழமை எங்கட ராசாந்த அம்மாக்கும் அப்பாக்கும் முதலாவது திதி.. அதுக்குத்தான் தாங்கள் அவையள் ரெண்டு பேரிலயும் சரியான மதிப்பு வைச்சிருக்கிறம் எண்டதை காட்டுறதுக்கு ஒரு கிழமைக்கு முதலே ஓடோடி வந்திருக்கினம் அந்த ரெண்டு கருக்கு மட்டையளும்.."
என்று சொல்லிவிட்டு போனார்.

இப்பொழுது வானதிக்கு நிஜமாகவே தலை விண்விண்ணென்று வலிக்கத் தொடங்கி விட்டிருந்தது.

என்ன முயன்றும் தன் அம்புஜமம்மாவின் நினைவையும் விக்டர் ஐயாவின் நினைவையும் அவளால் மறக்க முடியவில்லை.

அவளது வாழ்வில் வந்து போன அருமையான மனிதர்கள் அவர்கள் இருவரும், அவர்களுக்காக அவர்களுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்கிற பயத்தில் தானே அவள் அருண்மொழியை விட்டு வேறு திருமணம் செய்து கொண்டதே, அதோடு அந்த நல்ல மனிதர்களுக்கு முதலாம் ஆண்டு திவசம் இன்னும் ஒரு கிழமைக்குள் வரப் போகிறது என்ற எண்ணமே அவளது மனது ரணமாகிப் போகக் காரணமாகி விட்டது.

வானதி அப்படியே அசைவற்றுப் போய் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க, போன வேகத்தில் குழந்தைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு அவளை நோக்கி வந்து சேர்ந்தார் கனகம்.

"ராசா.. பிள்ளையள் அங்கயே இருக்கட்டும் எண்டு தான் சொன்னது.. நான் தான் உங்கடை சொந்தக்காரர் வந்து இருக்கினம் எண்டு சொல்லிப் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு வந்திட்டன்.. நீ எழும்பி வா பிள்ளை.. நான் போன நேரம் தொட்டு அப்புடியே இருக்கிறாய்.."
என்று கொண்டே வானதியின் கரத்தைப் பிடிக்க, அவரோடு சேர்ந்து உள்ளே வந்த வானதிக்கு, தன் போக்கில் சில விஷயங்களைச் சொன்னார் கனகம்.

"இப்ப வந்திருக்குதே அந்தக் கேமவர்ஷினி எண்டுற பன்னாடை அதுக்கு ராசாவைக் கலியாணம் கட்டி.. அவரிந்தை சொத்துப்பத்தெல்லாத்தையும் சுருட்டோணும் எண்டு சரியான ஒரு வெறி.. ராசாவுக்கு இந்தச் சங்கதி தெரியுமோ தெரியாதோ எண்டு எனக்குத் தெரியேல்லை.. ஆனாத் தன்ரை தாயிந்தை ஒரே ஒரு சொந்தம் எண்டதால.. அவையை மட்டும் வீட்டுக்க வர விடுவார்.."

"அப்ப அந்தப் பிள்ளையைக் கட்ட அவருக்கு விருப்பம் இல்லையோ.."

"இல்லை எண்டு தான் நினைக்கிறன் பிள்ளை.. ஆனாலும் இந்தப் பொண்ணு வந்தாலே எனக்கு ஒரே கலக்கமாப் போயிடும்.. ஏன் சொல்லு பாப்பம்.."

"ஏன் அம்மா.."

"அந்த மாயக்காரி ஏதாவது மாய மந்திரம் போட்டு எங்டை ராசாவை மயக்கிக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிடுவாளோ எண்டுற பயம் எனக்கு எப்பவுமே இருக்குது.. இப்ப கூட என்ன திட்டம் போட்டுக்கொண்டு இங்க வந்துச்சுதுகளோ எண்டு தெரியேல்லை.."
என்று கொண்டே கனகம் பிள்ளைகளோடு தன்னறைக்குப் போய் விட்டார்.

அவர் போனதும் தனது அறையின் படுக்கையில் மெல்ல சாய்ந்து கொண்ட வானதிக்கு இருப்பே கொள்ளவில்லை.

அருண்மொழியை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு வேகமே அவளுக்கு அந்த நொடியே வந்துவிட்டது. ஆனால் இந்த நேரத்தில் அவனை எப்படிப் பார்ப்பது என்ற தயக்கமும் கூடவே வர, கண்களை மூடித் தனது மனதை அமைதிப் படுத்த முயன்றவளோ, முடிவில் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.

தூங்கிக் கொண்டிருந்தவளின் தூக்கத்தை கெடுப்பது போல அவளது அறையின் கதவு சடார் என திறந்து கொண்டது, இந்த நேரத்தில் யார் தன்னிடம் வந்தது என்ற எண்ணத்தில் எழுந்து பார்த்தவளோ அறை வாயிலில் நின்றவனைப் பார்த்ததும் திகைத்துப் போனாள்.

நீல விழிகள் அவளையே ஊடுருவ நிதானமாக அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் அருள்மொழிவர்மன்.

அவளுக்கு அருகில் வந்ததும், மிக மிக நெருக்கமாக அவளுக்கு அருகில் அவளை உரசியபடி அமர்ந்து கொண்டவன், தன்னைக் கண்டதும் அவள் எழ முயற்சிக்கிறாள் என்பதைக் கண்டு தன் இரு கரம் கொண்டு அவளை இறுகப் பற்றிக் கொண்டான்.

இப்போது அவனது நீலவிழிகளும் அவளது கருவிழிகளும் ஒன்றை ஒன்று கௌவிக் கொள்ள, வானதியின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் அருண்மொழி.

அந்த இதழ் முத்தத்தில் திகைத்துப் போய், அவனை வேகமாகத் தள்ளி விட்டவள் வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டாள்.

எழுந்து அமர்ந்து சுற்றுப்புறத்தை பார்த்தவளுக்கு அப்போதுதான் உரைத்தது தான் கண்டது கனவு என்பது, நாணத்தால் முகம் சூடேறிச் சிவக்க தன்னை அறியாமல் முகத்தை மெல்ல மூடிக்கொண்டவள், மனதோடு தன் அருண்மொழியை இறுக அணைத்துக் கொண்டாள்.

அப்போது தான் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக ஒரு விஷயம் புரிந்து போனது. தானோ அருண்மொழியோ சந்தோஷமாகவோ நிம்மதியாகவோ இருக்க வேண்டும் என்றால், அதற்கு இருவருமே ஒன்றாக வாழ்ந்தால் மட்டுமே அது முடியும் என்பது.

வேகமாக எழுந்தவள், தன் அலுமாரியில் புடைவைகளுக்குக் கீழே பத்திரப் படுத்தி வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

புகைப்படத்தில் இருந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவளது அருண்மொழி.

அவனது முகவடிவை மெல்லத் தன் விரல்களால் வருடிக் கொடுத்தவள், அந்தப் படத்தை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டாள், அதே நொடி அவனது கையில் பட்ட வெட்டுக் காயமும் நினைவுக்கு வரவே, சட்டென்று எழுந்து விட்டாள் வானதி.

என்ன முயன்றும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அவளால் கைவிட முடியாமல் போகவே, சேலையை இழுத்துச் செருகிய படி எழுந்து விட்டாள் அவள்.