• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே.. 3

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
கொள்ளை கொள்ளையாகச் சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்களைப் பூக்க விட்டபடி செம்பருத்தி மரங்கள் வரிசையாக நிற்க, நடுநடுவே வெள்ளை நிறப் பூக்களைப் பூக்க விட்டு நித்தியகல்யாணிப் பூ மரங்களும் நின்றன. யாரோ திட்டமிட்டு அந்தப் பூ மரங்களை நேர்த்தியாக நட்டு வைத்திருப்பது நன்றாகவே தெரிந்தது.

வெள்ளைத்தேவரின் பின்னோடு சென்று கொண்டே, அந்த வீட்டைச் சுற்றி இருந்த அத்தனை பூ மரங்களையும் ஒற்றைப் பார்வையில் பார்த்து விட்டிருந்த வானதியின் பார்வையை, அந்த வீட்டின் பக்கவாட்டு மதிலை அடுத்து இருந்த அரண்மனை போன்ற வீடு திசை திருப்பியது.

மதிலுக்கு மேலாகத் தெரிந்த அந்தப் பெரிய வீட்டின் மாடியில் யாரோ ஒரு ஆண் நிற்பது தெரிந்தது. ஆனால் யாரென்று தான் புலப்படவில்லை. அந்த நொடியில் தன் உடைந்து போன மூக்குக் கண்ணாடிக்காகப் பெருமூச்சும் விட்டுக் கொண்டாள்.

அதற்குள் வெள்ளைத்தேவரின் மனைவி கனகலக்சுமி வெளி வாசலுக்கு ஓடி வந்து இவர்களைப் பார்த்தபடி நின்று விட்டார்.

தன் கணவன் கூட்டி வரும் தோரணையைப் பார்த்தால், இந்தப் பிள்ளை கொஞ்ச நாளைக்கு நம்மோடு தான் இருக்கப் போகிறது போல, கொஞ்ச நாளென்ன வருஷக் கணக்காக இருந்தாலும் எனக்கு ஓம் தான் எனத் தன்னுள் எண்ணியபடியே, கணவன் தன்னிடம் வந்து விபரம் சொல்லும்வரை அவர் அமைதியாக நின்றிருந்தார்.

"இங்க பாரேன் கனகம்.. எங்கடை வீட்டுக்குக் குட்டிக் குட்டி விருந்தாளியள் எல்லாம் வந்திருக்கிறினம்.. ஓடியா ஓடி வந்து தூக்கு.."
என்று கொண்டே யாழ்மொழியை மனைவியிடம் கொடுக்க, ஆசையோடு குழந்தையை வாங்கிக் கொண்டார் அந்தப் பெண்மணி.

யாழ்மொழிக்கும் இன்று என்ன நடந்ததோ தெரியவில்லை, தொட்டதுக்கெல்லாம் சிணுங்கும் குழந்தை இப்போது கனகத்தோடும் ஒட்டிக் கொண்டு, அவரது காதில் தொங்கிய சிமிக்கியை ஆட்டிப் பார்த்து விட்டுக் கிளுக்கிச் சிரித்தாள்.

குழந்தையின் செய்கையில் பூரித்துப் போன கனகலக்சுமி, குழந்தையை வெள்ளைத்தேவரிடம் கொடுத்து விட்டு உள்ளே ஓடிப் போனார். தன் மனையாள் எதற்காக ஓடுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட தேவரும் மெல்லிய புன்னகையோடு நின்றிருந்தார்.

ஐந்து நிமிடத்துக்குள் கையில் ஆராத்தித் தட்டுடன் சிட்டாகப் பறந்து வந்த தேவரின் மனையாள், இரண்டு குழந்தைகளோடும் வானதியை நிக்கவிட்டு ஆரத்தி எடுக்கவும், வானதிக்கு உள்ளூர என்னவோ செய்வது போல இருந்தது. இந்தக் காலத்திலும் இப்பேர்ப்பட்டவர்களா என்று அவளால் நினையாமல் இருக்க முடியவில்லை.

ஆரத்தி எடுத்து விட்டு எல்லோரும் வீட்டினுள் நுழையப் போன நேரம், வியர்க்க விறுவிறுக்க யாரோ ஒருவன் அவர்களின் வீடு நோக்கி ஓடி வந்தான்.

"என்னடா ஜனகமகாராசா.. எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த ஓட்டம் ஓடியாறாய்.."
என்று வெள்ளைத்தேவர் வந்தவனைக் கேட்க, அந்தப் புதியவன் இந்த வீட்டுக்குப் பழையவன் என்பதை வானதி புரிந்து கொண்டாள்.

"ஆ.. நீங்கள் வந்ததை உங்கடை வாரிசு பாத்திட்டார் அது தான் உங்களைக் கையோடை கூட்டியறச் சொல்லி என்னையத் துரத்தி விட்டவர்.. ஆசையாக் கடிக்கப் போன கொய்யாக்காயைக் கூட அப்புடியே போட்டிட்டு அரக்கப் பரக்க ஓடியாறன்.."

"ஓ.. முதலாளி வீட்டையோ நிக்கிறார்.. நானும் அவரைத் தான் பாக்கோணும் எண்டு நினைச்சனான்.."

"அப்ப வாங்கோவன்.. நீங்கள் இல்லாமல் போனால் பிறகு தெரியும் தானே என்ரை நிலமை.."

"ம்ம்.. இந்தா வாறன் பொறு.."
என்று கொண்டே வானதியின் பக்கம் திரும்பியவர்,
"பிள்ளையளை இங்க விட்டிட்டு நீ மட்டும் வா அம்மாச்சி.. நான் உன்னைய எங்கடை முதலாளியிட்டை அறிமுகப்படுத்தீட்டு.. உன்னைய இங்க தங்க வைக்கிறது பத்தியும் சொல்லீட்டு வருவம்.."
என்று சொல்லியபடி மனைவியிடம் கண்ணசைவில் விடைபெற்று வெளியே வர, அவரைத் தொடர்ந்து வந்தாள் வானதி.

அவர்களுக்குப் பின்னோடே வந்த வெள்ளைத்தேவரால் ஜனகமகாராசா என அழைக்கப் பட்ட ஜனகன்,
"தங்கச்சி.. ஆரு பெரிசு.."
என்று கேட்டுக் கொண்டே, வானதியைப் பார்த்துப் புன்னகைத்தான். பதிலுக்கு அவளும் புன்னகைக்க மறக்கவில்லை.

அவன் கேட்ட கேள்விக்கு
"அது தான் நீயே சொல்லீட்டியே தங்கச்சி எண்டு.. இனிமேல் பிள்ளை உனக்குத் தங்கச்சி தான்.."
என்று பதில் சொல்லிக் கொண்டே, தங்கள் வீட்டின் பக்கவாட்டில் இருந்த கதவினூடாக அடுத்த வீட்டை அடைந்தார் வெள்ளைத்தேவர்.

மூவரும் அந்த வீட்டின் பக்கவாட்டில் இருந்த பெரிய வரவேற்பறையை அடையவும், தேவரைப் பார்த்ததும் பெரிய நாய்கள் மூன்று ஓடி வரவும் சரியாக இருந்தது.

திடீரென்று ஓடி வந்த நாய்களின் தோற்றத்தின் அளவைப் பார்த்த வானதிக்குப் பயத்தில் லேசாகக் கால்கள் உதறத் தொடங்கவே
"அப்பா.."
என்று கத்திகொண்டே தேவருக்குப் பின்னால் ஓடிப் போய் அவரது கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

தனக்குப் பின்னால் மறைந்தார் போல நின்றவளது, பயத்தை அவர் கண்டு கொண்டாரோ இல்லையோ அவள் அப்பா என்று தன்னை அழைத்ததை மட்டும் அவர் கண்டு கொண்டு விட்டார்.

அதற்குள் ஜனகன் முன்னால் போக, யாரோ நாய்களைப் பிடித்துக் கூண்டினுள் அடைத்தார்கள். கண்களை இறுக மூடிக் கொண்டு தேவரைப் பிடித்துக் கொண்டு நின்றவளின் கையை மெல்லத் தட்டிக் கொடுத்து
"நாயளைக் கட்டியாச்சுது ஆச்சி.. நீ கண்ணைத் திறந்து பார்.."
எனத் தேவர் சொல்ல, திடீரெனத் தோன்றிய பயம் சற்றுக் கூடக் குறையாமல் மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தவள் நாய்கள் கூண்டுக்குள் நிற்பதைப் பார்த்ததும் தான் பெருமூச்சு விட்டாள்.

"உதென்ன நாயோ சிங்கமோ.. பாக்கவே பயமாக் கிடக்குது.."
என்று கொண்டு முன்னால் வந்தவளுக்கு
"திபெத்து நாட்டு இனம் பிள்ளை.. சிங்கம் மாதிரி இருக்கிற இந்த நாயின்ரை ஒரு கடி.. மனிச எலும்பைச் சுக்கு நூறாக்கும் அளவுக்கு மோசமானது.."
என வெள்ளைத்தேவர் விளக்கம் சொல்ல,
வாயைப் பிளந்து கொண்டு மீண்டும் அந்த நாய்களைப் பார்த்தவளுக்குத் தொண்டை தாண்டி வார்த்தைகளே வரவில்லை.

"பிறகு என்னத்துக்கு உதுகளை வளக்கிறினம்.. பேசாமல் சிங்கத்தை வேண்டி வளக்க வேண்டியது தானே.. பாக்கவே உதறுதே பக்கத்துல வந்தால் எப்புடி இருக்கும்.."

"அது எங்கடை முதலாளியிந்தை செல்லப் பிராணியள் அம்மாச்சி.. வழமையாக் கூண்டுக்குள்ள தான் நிக்கிறது.. இண்டைக்கு எங்கையோ வெளியால உலாத்தப் போயிட்டு வந்திருக்கிறினம் போல.."

"ஆத்தி.. அம்புட்டாக் கிலோக் கணக்கில பிச்சுத் தின்டிடுமே.."

"முதலாளி சொன்னால் மட்டும் தான் அது ஆரிலையும் வாயை வைக்கும்.. இல்லாட்டிக்கு வைக்காது.."
எனத் தேவர் சொல்லிக் கொண்டே போக, இங்கிருந்து எப்போதடா ஓடிப் போகலாம் என்பது போல, நாய்கள் நின்ற கூண்டையே தான் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் வானதி.

கவனம் முழுக்கக் கூண்டுக்குள் நின்ற நாய்களின் மீது இருக்க
"இந்தப் பிள்ளையை ஒரு மாசத்துக்கு அங்க பண்ணை வீட்டுல இருக்க வைக்கப் போறன்.."
என்ற வெள்ளைத்தேவரின் குரல் அவளைத் திசை திருப்பியது.

யார் அந்த முதலாளி தன்னை அங்கே இருக்கச் சம்மதம் சொல்லுவாரோ என்பது போல, மெல்ல எட்டிப் பார்த்த வானதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

முதலாளி என்றால் ஒரு அறுபதுகளின் தொடக்கத்தில் இருப்பவராக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, அங்கே இருந்தவனைக் கண்டதும் அவனைக் கனவில் கூட அவள் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

வெளிர் வெள்ளை நிறத் தோலில் நீல விழிகளோடு இருந்தவனை அதிர்ச்சி குறையாமல் பார்த்துக் கொண்டே நின்றாள் அவள்.

அவனது நீல விழிகள் கூட அவளைத் தான் ஊடுருவிக் கொண்டிருந்தது. ஒற்றைப் பார்வையிலேயே ஆழ் மனதில் ஒளிந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து விடும் பார்வை அது. சட்டென்று மீண்டும் தேவருக்குப் பின்னால் முழுதாகத் தன்னை மறைத்துக் கொண்டாள் வானதி.

சில கணங்கள் அப்படியே கரைய
"முதலாளி சம்மதம் சொல்லியாச்சுது அம்மாச்சி.. நீ உனக்கெண்டு ஒரு வேலையோ வீடோ பாக்கும் வரை இங்கயே இருக்கலாம்.."
என்று கொண்டு அவள் பக்கம் திரும்பினார் தேவர்.

அந்தப் பதிலில் உள்ளூர அப்பாடா என்று உணர வேண்டியவளுக்கோ ஐயோடா என்பது போல இருந்தது.

எப்படி என்ன சொல்லி இங்கிருந்து ஒட்டு மொத்தமாக வெளியே போவது என அவள் உள்ளூர யோசனையில் மூழ்க, அவளது யோசனைக்கு முட்டுக் கட்டை போடுவது போல, அவளால் இங்கிருந்து வெளியே போவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது போல அடுத்து ஒரு வார்த்தை சொன்னான் சற்றே தள்ளி நின்றிருந்த ஜனகன்.

"தங்கச்சி.. இங்க இருந்து ஒரு மாசத்துக்கு நீங்கள் வெளியால எங்கயும் போகவும் ஏலாது.. ஆரும் உங்களைத் தேடி உள்ள வரவும் ஏலாது.. இதை எல்லாம் நீங்கள் நினைச்சுப் பயப்பிடக் கூடாது.. இது உங்கடை பாதுகாப்புக்குத் தான் சரியோ.."

அவன் சொன்ன செய்தியில், தேவரைக் கேள்வியாகப் பார்த்தாள் வானதி. அவளது பார்வையின் அர்த்தம் புரிந்த அவரோ
"எல்லாம் உன்ரை பாதுகாப்புக்குத் தான் பிள்ளை.. நீ நிம்மதியா இங்க இருக்கலாம்.. உனக்குப் போரடிச்சால் சுத்திப் பாக்க அங்கா அந்தப் பங்களா கிடக்குது.."
என்று சொல்ல, என்ன சொல்லி இதை மறுப்பது எனத் தலையைப் பிய்க்காத குறையாகிப் போனது அவளுக்கு.

இப்போது பேசாமல் இருந்து விட்டு, இரவானதும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட வேண்டியது தான் என அவள் தனக்குள் ஒரு முடிவெடுக்க, நீல விழிக்காரனோ அவளின் முகத்தில் நொடிக்கு நொடி தோன்றி மறைந்த உணர்வுகளையும், திலகம் இல்லாத அவள் நெற்றியையும், அவள் உடுத்தியிருந்த வெளிர் வண்ணத்துப் புடவையையும் தான் உணர்ச்சியற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதேச்சையாக அவன் பக்கம் திரும்பியவளின் கருவிழிகள், அவனின் நீல விழிகளை ஒரு நொடி சந்தித்து சட்டென்று தரை தொட்டது.

"வைரவா.. இதென்ன இப்புடிக் கொண்டு வந்து மாட்டி விட்டிருக்கியேப்பா.. ஆரைப் பாக்கவே கூடாதெண்டு நினைச்சனோ அந்த மனுஷனுக்கு முன்னால இப்புடி நிக்க வைச்சிட்டியே.."
என மானசீகமாகத் தன் குலதெய்வத்துடன் பேசிக் கொண்டவள் மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அதற்குள் வீட்டினுள் இருந்து குடிப்பதற்குக் குளிர் பானம் வரவே, வானதி அமர்வதற்கு ஒரு மரக் கதிரையை இழுத்துப் போட்டான் ஜனகன்.

எப்போதடா இந்த இடத்தை விட்டு ஓடுவேன் என்பது போல நின்றிருந்தவளுக்கு, ஆற அமர இருந்து குளிர் பானம் குடிக்கும் அளவுக்குப் பொறுமை இருக்கவில்லை.

ஆனாலும் எப்படி விலகிப் போவது, தன்னை அழைத்து வந்த ஐயாவுக்கு மதிப்புக் குடுக்காத மாதிரி ஆகி விடுமே என்பது போல, பேசாமல் அமர்ந்து கொண்டவள் புறமாக நீளமான அந்தக் குவளை கொடுக்கப் பட்டது.

அடிக்கும் வெய்யிலுக்குக் குவளையைத் தாண்டி வந்த குளிர் அவளது கரத்தை ஊடுருவ, அந்தக் குளிர்ச்சி அவளுக்கும் தேவைப் படவே, தான் நினைத்தால் கூட இனிமேல் இந்த இடத்தை விட்டு ஒரு இஞ்ச் கூட நகர முடியாது என்பதை உணராமல், கண்களை மூடிக் கொண்டு ஆழ மூச்செடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் வானதி.