• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீசன் (2) அசுரனின் குறிஞ்சி மலரே..31

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
வானதி எழுந்து போவதையே, சிறு முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்த அருண்மொழி, அவள் உருவம் கண் பார்வையில் இருந்து மறைந்து போன பின்னரே பொன்னம்பலத்தின் பக்கம் திரும்பினான்.

"இப்போ உங்களுக்கு எல்லாம் கிளியர் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்.. சோ நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் கொஞ்சம் டவுன் வரைக்கும் போகணும்.."
என்றபடி அவன் எழுந்து கொள்ள, அதற்கு பிறகு என்ன செய்வது எழுந்து போய்த் தான் ஆக வேண்டும் என்பது போல பொன்னம்பலம் எழுந்து கொள்ள, கேமவர்ஷினியோ அசையாமல் அமர்ந்து இருந்தாள்.

எல்லோருக்கும் முன்பாகவே எழுந்து போய் விட்டார் வெள்ளையத்தேவர், அவருக்கு மனது லேசாவதைப் போல இருந்தது, எது எப்படியோ தன் சின்னத்தேவர் வானதியைத் திருமணம் செய்தாலே போதும் என்ற முடிவுக்கு அவர் எப்போதோ வந்து விட்டார்.

அதோடு முன்பு பார்த்த வானதிக்கும் இப்போது பார்க்கும் வானதிக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தன, இப்போதெல்லாம் வானதி அருண்மொழிக்காகத் தான் அனைத்தையுமே பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை அவர் கண்டு கொண்டு விட்டார்.

அருண்மொழியும் வெள்ளையத்தேவரும் சென்ற பின்னரும் அசையாமல் இருந்த மகளைப் பார்த்த பொன்னம்பலத்துக்கு, உள்ளூரக் கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

சாதாரணமாக இருந்த பெண்ணின் மனதில் அருண்மொழி பற்றிய ஆசையைத் தூண்டி விட்டோமோ என அவர் முதன் முதலில் சரியாக யோசனை செய்தார்.

"இவன் கிடக்கிறான் போக்கத்த பயல்.. உன்ரை அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஏத்த மாதிரி மாப்பிள்ளையை அப்பா பாத்துக் கட்டி வைக்கிறன் கேமா.. நீ எழும்பி வா.. நாங்கள் வீட்டை போவம்.."
என்றவரை ஒரு பார்வை பார்த்தவள், வேகமாக எழும்பிப் போய் விட்டாள்.

அவள் ஏதாவது திட்டி இருந்தால் கூட பரவாயில்லை, இப்படி அமைதியாக இருப்பது தான் ஆபத்தானது என்பது பொன்னம்பலத்துக்கு புரியாமல் இல்லை.

இனிமேல் அவளை சமாதானம் செய்து இங்கிருந்து அழைத்துப் போக வேண்டும் என்பதற்கு மேலாக, அவளுக்கு அருண்மொழியை விடவும் அந்தஸ்து உள்ள பையனை சீக்கிரமே தேட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மகளைத் தொடர்ந்தார், வயதால் மட்டுமே பெரிய மனுஷன் என அடையாளம் காணப் பட்ட அந்த மனுஷன்.

நேரம் யாருக்காகவும் காத்திருக்காமல் வேகமாக ஓடி மறைய, தன் மொட்டைமாடியில் குழந்தைகளோடு நின்றிருந்தான் அருண்மொழி.

கூடவே வெள்ளையத்தேவரும் கனகமும் நின்றிருந்தார்கள், வரப் போகின்ற அம்புஜம் மற்றும் விக்டருக்கான திதி பற்றியும், முதலாவது திதி என்பதால் என்னென்ன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் மூச்சிரைக்க ஓடி வந்த வானதி, மாடியில் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் மாடிக்கு வரும் வாசலோடு தேங்கி நின்று விட்டாள்.

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த அருண்மொழியின் விழிகள், அவளது முகத்தை ஆராய, அவள் அழுதபடி ஓடி வந்திருக்கிறாள் என்பதை அவனுக்குச் சட்டென்று புரிய வைத்தது.

இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்த பெரியவர்கள் இருவரும், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு, இங்கிதமாக விலகிப் போய் விட, அவர்கள் கீழே இறங்கும் வரை பொறுமையாக நின்றிருந்தவள், அவர்கள் போனதும் வேகமாக ஓடிப் போய் அருண்மொழியைக் கட்டிக் கொண்டாள்.

அவளது அந்தத் திடீர் அணைப்பில் திக்குமுக்காடிப் போனவனோ, சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு, அவளைத் தானும் இறுக அணைத்துக் கொண்டான்.

சில கணங்கள் அப்படியே கரைய, அருண்மொழி தான் முதலில் அவளுக்குப் பேச்சுக் கொடுத்தான்.

"அழுதியா வானம்.. முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு.."

"ம்ம்.."

"என்னாச்சுடி.."

"உங்களை ஒண்டு கேப்பன் ஓம் சொல்லுவீங்களோ.."

"கேளு.."

"நான் கொஞ்சம் அழோணும்.."

"ஹேய் என்னடீ.."

"எனக்கு வாய் விட்டு மனசு விட்டு.. உங்கடை நெஞ்சுல சாஞ்சு அழோணும் மாதிரிக் கிடக்குது.. ஆனா நீங்கள் தான் கோபப் பட்டு கிடக்கிறது எல்லாத்தையும் எறிவீங்களே.."

"சாரிடா.. உனக்கு என்ன தோணுதோ செய்.. ஆனா ஒண்ணு இண்டைக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு.."
என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், எட்டி அவனது கன்னத்தில் முத்தம் வைக்க, அவனோ தன் நெஞ்சை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

அவனது செய்கையில் அவனுக்கு நெஞ்சு வலிக்கிறதோ என்பது போலப் பதறிப் போனாள் வானதி.

"என்னாச்சு அருண்.."

"இல்லை.. இப்புடி ஒரேடியா மாறிட்டியே.. அது தான் லேசா நெஞ்சை வலிக்கிற மாதிரிக் கிடக்குது.."

"உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான்.."

"இல்லைடி நிஜமாத் தான்.. நீ இப்போல்லாம் எனக்கு ரொம்ப புதுசாத் தெரியுறே.."

"எப்புடிப் புதுசாத் தெரியிறனாம்.."

"முன்ன எல்லாம் என்னைத் தொட்டுப் பேசவே விட மாட்டே.. ஆனா இப்போல்லாம்.."

"ஆனா இப்போல்லாம்.."

"என்னைக் கட்டிக்கிட்டு தொட்டுக்கிட்டு மட்டும் தான் பேசுறே.."

"சீப் போங்கோ.. நீங்கள் சரியான மோசம்.."

"உண்மையைத் தானேடி சொன்னேன்.."
என்றவனது அணைப்பில் இருந்து வேகமாக விலகியவளோ, மாடிச் சுவரோடு சாய்ந்து கொண்டு அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள்.

"இப்போ இந்தப் பார்வைக்கு என்னடி அர்த்தம்.."
எனப் புருவம் உயர்த்தினான் அருண்மொழி.

பதிலுக்குப் பதிலாக மௌனமே பதிலாக வந்தது அவளிடம் இருந்து, ஆனால் அருண்மொழியோ சட்டென்று துணுக்குற்றான்.

இந்தப் பார்வை அவனுக்கு மட்டும் ஓராயிரம் கதை சொன்னது, இவள் ஏதோ தவறான முடிவு எடுத்திருக்கிறாள் போலும், மீண்டும் தன்னை விட்டுப் பிரிய முயற்சி செய்யப் போகிறாளோ எனத் தன்னுள் எண்ணிக் கொண்டவனது உடல் அதுவாக இறுகிப் போக, அவனது நீல விழிகள் கோபத்துக்குள் செல்ல வேண்டிப் பழுப்பு நிறத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

அவனுக்குத் தெரியாது வானதி ஏன் அழுது கொண்டே ஓடி வந்தாள் என்பது, அதன் காரணம் ரொம்பப் பெரியது.

ஜனகனோடு அவன் வீட்டுக்குப் போன வானதியை, அவனது அன்னை இன்முகமாக வரவேற்க, வானதிக்கோ ஏதோ உள்ளூர ஒரு விதமான உணர்வு மெல்லத் தோன்றத் தொடங்கியிருந்தது, அவளையும் அறியாமல் இறந்து போன அவளின் அக்கா வெண்ணிலாவின் முகம் அவள் மனத்திரையில் வந்து, வந்த வேகத்திலும் மறைந்தும் போனது.

"தங்கச்சி.. நீயே வந்து அவளைப் பாக்கிறியோ.. ஏனெண்டால் அவளை இங்க வரவேற்பறை வரைக்கும் கூட்டிக் கொண்டு வர ஏலாது.."

"விளங்குது அண்ணா.. நானே வாறன்.."

"பின்னுக்கு தான் கிணத்தடியில உடுப்பு அலம்பிக் கொண்டு இருக்கிறாள்.."

"சரி வாங்கோ அண்ணா.."
என்று கொண்டே ஜனகனோடு கொல்லைப் புறத்தில் இருந்த கிணத்தடியை நோக்கிச் சென்றாள் வானதி.

கீழே கல்லில் அமர்ந்து கொண்டு துணியைத் துவைத்துக் கொண்டிருந்த அந்தப் பிள்ளையின் பக்கவாட்டுத் தோற்றம் தான் வானதிக்குத் தெரிந்தது.

அவளுக்கு மனது மீண்டும் ஏதோ போல ஆக, அப்படியே நின்று விட்டாள்.

ஜனகன் தான் மெல்ல அருகில் போய்,
"நிலா.. உன்னைப் பாக்க ஒரு ஆள் வந்திருக்கிறா.. நீ நினைக்கிற மாதிரி அவாவைப் பாத்து பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை.."
என்று சொல்லிக் கொண்டே வானதியைத் திரும்பிப் பார்த்தான்.

அதே நேரத்தில் வேண்டா வெறுப்பாகத் திரும்பிப் பார்த்த அந்தப் பெண்ணின் பார்வையும் அங்கே நின்றிருந்த வானதி மேல் பட்டு நிலைகுத்தி நின்றது.

பார்த்த பெண்ணின் பார்வை முதலில் திகைத்து, பின்னர் பிரகாசித்து மீண்டும் வாடிப் போனது, ஏற்கனவே அவளையே பார்த்த வண்ணம் இருந்த வானதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சியால், அந்தப் பெண்ணின் மாற்றத்தை மனதில் ஏற்ற மறந்து போனாள் அவள்.

இரண்டு பெண்களது பார்வையும் ஒரு கோட்டில் சந்திக்க, கண்கள் வழி பரிமாறப் பட்ட உணர்வுகளால் அங்கே வார்த்தைகளே தேவையற்றுப் போய் விட்டன.

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியே உருவாக நின்று விட்டதை உணர்ந்த ஜனகன், அடுத்து என்ன பேசுவது என்பது போல விழித்துக் கொண்டு நின்றிருந்தான்.

'என்னடா இது.. ரெண்டு பேரும் ஏதவோ காணாததை கண்டது மாதிரி இப்புடி ஏதோ பேயறைஞ்ச மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பாத்துக் கொண்டு நிக்கினம்.. என்ன ஏதெண்டு வாயைத் திறந்து கதைச்சாத் தானே எனக்கும் தெரியும்.. என்னத்தை சொல்ல.. அவளுகளா ஒரு முடிவுக்கு வந்த பிறகு தான் நான் நிக்கிறதே தெரிய வரும் எண்டு நினைக்கிறன்.. எதுக்கும் ஆளை ஆள் பாத்து முடிக்கட்டும்.. ஒருவேளை ஒரே மாவட்டம் எண்டதால ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சிருக்கும் போல..'
எனத் தன்னுள் எண்ணிக் கொண்டான்.

இரண்டு பெண்களிலும் கீழே அமர்ந்திருந்த பெண்ணுக்கு தான் மெல்ல உணர்வு வந்தது போல், அவள் எழுந்து வந்து வானதியின் கன்னத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தாள், ஆனால் வானதியோ மூளை வேலை நிறுத்தம் செய்தது போல அப்படியே சிலையாகிப் போய்த் தான் நின்றிருந்தாள்.

சில நொடிகளிலேயே சிலையாகி நின்றிருந்த வானதியோ தன் கன்னம் தொட்டவளின் கையை இறுகப் பற்றிக் கொண்டு, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு கதறியே விட்டாள், அந்தப் பெண்ணும் தன் முகத்தை வானதியின் தோளில் மறைத்து அழத் தொடங்க, இருவரதும் அந்த திடீர் மாற்றத்தால் ஜனகன் பதறிப் போய் நின்று விட்டான்.

"ஹேய்.. என்ன நடந்த ஏன் ரெண்டு பேரும் அழுறியள்.. ஏற்கனவே ரெண்டு பேரும் தெரிஞ்ச ஆக்களோ.. என்னெண்டு சொல்லிப் போட்டு அழுங்கோ.. உள்ளூரப் பயமா இருக்குதெல்லே.."
என ஜனகன் ஒரு பக்கம் அழாக் குறையாகப் பேச, இருவரும் அழுது முடித்த பின்னரே அவனுக்குப் பதில் சொன்னார்கள்.

"அண்ணா.. இது தான் என்ரை அக்கா வெண்ணிலா.. இவா கடலில விழுந்து செத்துப் போயிட்டா எண்டு தான் நான் இவ்வளவு நாளும் நினைச்சுக் கொண்டு இருக்கிறன்.. கொஞ்சம் கூட அவாவை நான் இங்க இப்புடிப் பாப்பன் எண்டு எதிர்பாக்கேல்லை.. பாத்த உடன அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செஞ்ச மாதிரிப் போச்சுது.."

"என்ன தங்கச்சி சொல்லுறாய்.."

"ஓம் அண்ணா.. இது தான் என்ரை அக்கா.. சத்தியமா இவாவை நான் இப்புடித் திரும்பப் பாப்பன் எண்டு கனவுல கூட நினைக்கேல்லை.. எனக்கு எனக்கு என்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை.."

"கேக்கவே உள்ளுக்க சந்தோஷமாக் கிடக்குது தங்கச்சி.."

"அப்பவும்.. இந்த வீட்டுக்குள்ள வந்த நேரம் எனக்கு அக்காந்தை ஞாபகமாவே இருந்தது.. பாருங்கோவன் கடவுள் எப்புடி எங்களைத் திரும்பப் பாக்க வைச்சிருக்கிறார்.."

"எல்லாம் அவன் செயல்.. சரி ரெண்டு பேரும் கதையுங்கோ.. நான் உள்ள நிக்கிறன்.. கதைக்கிறதுக்கு உங்களுக்கு நிறைய விசயம் இருக்குமே.."
என்று கொண்டு இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு, உள்ளே போய் விட்டான் ஜனகன்.

ஜனகன் உள்ளே போனதும் தன் தமக்கையின் முகத்தை தான் அழுத்தமான பார்வை ஒன்று பார்த்தாள் வானதி.

அந்தப் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் மெல்லத் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள், ஜனகனின் வீட்டில் அடைக்கலமாகிப் போன வானதியின் அக்கா வெண்ணிலா.