• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே.. 4

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
சந்திரன் மட்டும் தன்னந்தனியாக வானத்தில் இருந்து தன் வெண்ணிற ஒளிக்கற்றைகளால் பூமியைத் தழுவிக் கொண்டிருந்த நடுநிசி நேரம் அது.

எல்லோரும் தூங்குவதற்காக காத்திருந்தவள் போல, மெல்ல தனக்காகக் கொடுத்திருந்த அந்தப் பண்ணை வீட்டை விட்டு வெளியே வந்தாள் வானதி.

வானத்தில் தெரிந்த நிலவையும், வீட்டு வளவினுள் அங்குமிங்குமாக ஒளிர்ந்த மின்குமிழ்களையும் தவிர வேறெந்த வெளிச்சமும் இல்லாதது மனதினுள் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தாலும், குழந்தைகள் இருவரையும் எவ்விதம் அங்கிருந்து கூட்டிச் செல்வது என்பது தான் அவளுக்குப் பெரிய தலையிடியாக இருந்தது.

யாழ்மொழி இரண்டு வயதுக் குழந்தை என்றாலும் கூட, அவள் சற்றே கொழுக் மொழுக்கென்றிருக்கும் குழந்தை, அவளை அதிக நேரம் தூக்கி வைத்திருக்க முடியாது. ராஜேந்திரனும் அதே ரகம் தான், அவளது குழந்தைகளைப் பார்க்கும் ஒரு சிலர் எந்தக் கடைச் சாப்பாடு என்று கேட்காமல் போவதே இல்லை.
அப்படி இருக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் இருவரையும் எவ்விதம் தூக்கிக் கொண்டு இங்கிருந்து போவது என்ற எண்ணமே அவளுக்கு மலைப்பாக இருந்தது.

எப்படிக் குழந்தைகளோடு வெளியே போவது என்பதைப் பற்றியே யோசித்தவளுக்கு, அவர்களோடு அடுத்து எங்கே போவது என்ற கேள்வி மட்டும் அப்போது தோன்றவே இல்லை.

முதலில் வெளியே செல்வதற்கான பாதையைக் கண்டு பிடிப்போம், பிறகு பிள்ளைகளை ஒவ்வொருவராக வெளியே தூக்கிச் செல்லலாம் என ஏதோ தனக்குத் தெரிந்த வகையில் யோசனை செய்து கொண்டே, முற்றத்தில் வந்து நின்று பார்த்தவளுக்கு மீண்டும் ஐயோடா என்றாகிப் போனது.

"வீட்டுக்கு மதிலைக் கட்டச் சொன்னால் சிறைச்சாலைக்கு மதில் கட்டிற கணக்கா இவ்வளவோ பெரிசாக் கட்டியிருக்கிறானுங்களே.. இதுல தனியா ஏறுறதே பெரிய விசியம் பிறகு எப்புடிப் பிள்ளையளைத் தூக்கிக் கொண்டு ஏறுறது.."
என வாய்விட்டே புலம்பியவள், பார்வையைச் சுழல விட்டாள்.

கொஞ்சத் தூரம் தள்ளித் தெற்குப் பக்கமாக நீச்சல் தடாகத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மரம், மதிலை ஒட்டி நிற்கவே நிம்மதிப் பெருமூச்சோடு அந்த மரத்தை நோக்கிச் சத்தம் செய்யாமல் நகர்ந்தவளை, ஒருவன் கவனித்துக் கொண்டிருப்பதைப் பாவம் அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வானதி மரம் ஏறுவதில் கெட்டிக்காரி, தனது அந்தப் பழக்கம் இந்த நேரத்தில் தனக்குக் கை கொடுக்கிறதே எனத் தனக்குள் எண்ணிக் கொண்டபடி, சேலையை இழுத்துச் செருகிக் கொண்டு, கிடுகிடுவென அந்தப் பெரிய மரத்தில் ஏறினாள்.

ஏறியவள் வாகாக ஒரு கிளையில் அமர்ந்து கொண்டு மதிலைப் பார்த்தாள். அவளுக்கு இப்போது நன்றாகவே எட்டும் தூரத்தில் மதில் இருந்தது. அதில் அமர்ந்தபடியே அடுத்து என்ன செய்வது என யோசனை செய்தவளை, திடீரெனக் கேட்ட உறுமல் சத்தம் திகைத்துத் தடுமாறச் செய்தது.

கிளையைப் பிடித்துக் கொண்டு வசதியாக அமர்ந்திருந்தவள், சட்டென்று கேட்ட உறுமலில் கால் நழுவும் தருவாயில் கீழே பார்க்க, அவள் ஏறியிருந்த மரத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி, அவள் பகலில் பார்த்துப் பயந்த சிங்கம் போன்ற நாய்களில் ஒன்று நின்றிருந்தது.

அந்த நாயின் கண்கள் கோலிக் குண்டுகள் போல ஜொலிப்பதைப் பார்த்தவள், வியர்த்து விறுவிறுத்துப் போகக் கைகளை விட்டு வாயைப் பொத்திக் கொள்ள, அவ்வளவு தான் மரத்தில் இருந்து தண்ணீர்த் தடாகத்தினுள் தொபுக்கடீரென விழுந்தாள்.

விழுந்தவள் தன்னைச் சுதாரித்துக் கொண்டு வெளியே வரவும், தடாகத்தினுள் ஒரு ஓரமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே ஒரு உருவம் பார்த்துக் கொண்டிருக்க, இருளில் அது யாரெனத் தெரியாதவள், ஏற்கனவே உண்டான பயத்தில் உருவத்தைப் பார்த்ததும் வீறிட்டுக் கத்தப் போக, ஒரு எட்டில் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்து அவளது வாயைப் பொத்தியது அந்த உருவம்.

ஒரு நொடி திமிறியவள் மறு நொடியே அது யாரென உணர்ந்ததும் மெல்ல அந்த அணைப்பினுள் அடங்கிப் போனாள்.

சில கணங்கள் அப்படியே கரைய, மெல்லத் தலை நிமிர்ந்தவளுக்கு, நெருக்கமாகத் தெரிந்த அந்த நீல விழிகளை ஏறெடுத்துப் பார்க்கவே முடியவில்லை.

அணைப்பில் இருந்து விலகப் போனவளால் ஒரு இஞ்ச் கூட நகரவும் முடியவில்லை.

"என்னையப் போக விடுங்கோ அருண்.."

"பரவாயில்லையே பேரு எல்லாம் கூட இன்னும் நினைவு இருக்கே.."

"இப்ப விடப் போறிங்களோ இல்லையோ.."

"விடலைனா என்னடி செய்வே.."

"கத்துவன்.."

"கத்தி.."

"நீங்கள் என்னைய இந்த மாதிரிச் செய்றீங்கள் எண்டு சொல்லுவன்.."

"எந்த மாதிரி.."

"இந்த மாதிரி.."

"சரி சொல்லு.."
என்றவனின் தோரணையில் கடுப்பானவள், பலம் கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட்டு மேலே ஏறப் போகவும், சொல்லி வைத்தது போல மேலே நின்ற நாய் உறுமவும் சரியாக இருந்தது.

நாயும் மேலே வந்தவள் மேல் பாயவும், ஒரே பாய்ச்சலில் பாய்ந்து நீரினுள் நின்றவனை அணைத்துக் கொண்டாள் வானதி.

மீண்டும் சில கணங்கள் அப்படியே கரைய
"எவ்வளவு பயமா இருந்தாலும் கூட வேறை யாரையும் இந்த மாதிரி உன்னால கட்டிப் பிடிச்சிட்டு நிற்க முடியுமா? வானம்.."
என்ற கேள்வியில் திகைத்துப் போய் அவனை நிமிர்ந்து பார்த்தவள், பதில் சொல்ல முடியாமல் விலக, அவளுக்கு முன்னால் மேலே ஏறி, தன் நாயை அழைத்துக் கொண்டு போய் விட்டான், வானதியால் அருண் என அழைக்கப்பட்ட 'அருண்மொழிவர்மன்'.

அவன் கேட்ட கேள்வியின் தாக்கத்தில் அவன் சென்று நெடுநேரமாகியும் அப்படியே நின்றிருந்தவளுக்கு அப்போது தான் சுற்றுப்புறம் மெல்ல உரைத்தது.

தண்ணீரில் தெப்பலாக நனைந்ததிலும் கால்மணி நேரத்துக்கும் மேலாகத் தண்ணீரில் நின்றதாலும் உடல் வெடவெடக்க ஆரம்பிக்கவும், வேகமாகப் பண்ணை வீட்டினுள் ஓடிச் சென்று கதவைப் பூட்டியவளுக்கு அவன் கேட்ட கேள்வி இன்னும் காதினுள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அவன் கேட்ட கேள்வி எந்தளவிற்கு உண்மையானது, உயிரே போகும் சூழ்நிலை வந்தால் கூட அவள் இன்னொருவனை அடைக்கலமாய் நினைத்து அப்படி அணைத்துக் கொண்டு நிற்பாளா? உடனேயே உள் மனது இல்லைவே இல்லை என்ற பதிலைத் தான் கொடுத்தது.

அதற்குள் யாழ்மொழி சிணுங்கவே தற்காலிகமாகத் தனது மனதுக்குப் பூட்டுப் போட்டு விட்டுக் குழந்தையிடம் ஓடினாள் வானதி.

காலைச் சூரியன் யாருக்காகவும் காத்திருக்காமல் தன் பணி நிமித்தம் வானத்தில் இருந்து தன் இளங்கதிர்களால் பூமியை ஸ்பரிசிக்கத் தொடங்கிய நேரத்தில், வெள்ளைத்தேவரின் முன்னால் வந்து நின்றாள் வானதி.

"என்னம்மாச்சி.. ராத்திரி நல்லா நித்திரை வந்திச்சிதோ.. கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது புது இடம் எண்டதால நித்திரை வரேல்லைப் போல.."

"ஐயா.. நான் இங்க இருந்து போகப் போறன்.."

"எங்க பிள்ளை.. ஏதும் வெளியால வாங்க வேண்டிக் கிடக்குதோ.. ஏதும் தேவையெண்டால் இங்க வாங்கி வர ஆக்கள் இருக்கிறினம் நீ தான் போகோணும் எண்டு இல்லை.."

"நான் போகப் போறன் எண்டு சொன்னது நிரந்தரமா.."

"விளங்கேல்லை.."

"இந்த இடத்தை விட்டு நிரந்தரமாப் போகப் போறன்.. இனி இங்க திரும்பி வர மாட்டன் எண்டு சொல்லுறன்.."

"ஏன் அம்மாச்சி என்ன நடந்தது.. ஆரும் ஏதும் சொன்னவையோ.. போற எண்டாலும் ரெண்டு குழந்தையளையும் வைச்சுக் கொண்டு கஷ்டப் படப் போறியோ.. உனக்கு இங்க என்னம்மாச்சி குறை.."

"................."

"நீ மனசுக்குள்ள எதையோ வைச்சுக் கொண்டு கஷ்டப் படுறாய் எண்டு எனக்கு நல்லாவே விளங்குது.. நீ எப்புடி என்னை நினைக்கிறியோ எனக்குத் தெரியாது.. ஆனா நான் உன்னைய என்ரை பெத்த மிகளாத் தான் பாக்கிறன் அம்மாச்சி.."
என்ற வெள்ளைத்தேவரின் வார்த்தைகளில், அப்படியே சரிந்து விழுந்து வாய் பொத்தி அழத் தொடங்கினாள் வானதி.

அவளைச் சில நிமிடங்கள் அழ விட்ட அவரோ, மெல்ல அவளது தலை வருடி
"சொல்லு ஆச்சி.. உனக்கு ஆரால என்ன பிரச்சினை.. முத்து மாதிரி ரெண்டு பிள்ளையளை வைச்சுக் கொண்டு இப்புடி நீ அலைய ஆரு காரணம்.. எதுவா இருந்தாலும் என்னட்டைக் கொட்டீரு.. உயிர் போனாலும் ஆரிட்டையும் மூச்சு விட மாட்டன்.."
என்றவரின் கையைத் தன் நடுங்கும் விரல்களால் இறுகப் பற்றிக் கொண்டவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகள் அவருக்கு ஆயிரம் கதைகள் சொன்னது. அதோடு சேர்த்துத் தன் கதையையும் வானதி சொல்ல ஆரம்பித்தாள்.

அதிலும் பாதியை மறைத்து மீதியைத் தான் சொன்னாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

"என்ரை பூர்வீகம் யாழ்ப்பாணம் ஐயா.. எனக்குக் கல்யாணம் ஆனதுக்குப் பிறகு தான் கிளிநொச்சி வந்தன்.. கிளிநொச்சியில பாரதிபுரம் தான் நான் வாழ்க்கைப்பட்டுப் போன இடம்.. அதுவும் என்ரை அக்காந்தை வீட்டுக்காரரிந்தை தம்பியைத் தான் எனக்குக் கட்டி வைச்சவை.. அந்தக் கல்யாணத்துல எனக்குத் துளி கூட விருப்பம் இல்லை.. சந்தர்ப்ப சூழ்நிலையால தான் அந்தக் கல்யாணமே நடந்தது.. என்ரை அக்காவுக்கு ஒரே கொடுமை அதே மாதிரி தான் எனக்கும் கொடுமை.. எங்க அக்காவைக் கொடுமைப்படுத்தியே அவளைத் தற்கொலை செய்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டாங்கள்.. எனக்குத் தாலி கட்டின கேடு கெட்டது குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து செத்துப் போயிட்டுது.. அது போதாதெண்டு அக்காவைக் கட்டின கேடு கெட்டது என்னையச் சீண்டப் பாத்திச்சுது.. அதனால அக்காந்தை நாலு வயசுப் பையனையும் என்ரை ரெண்டு வயசுப் பொண்ணையும் தூக்கிக் கொண்டு நான் வீட்டை விட்டு ஓடி வந்திட்டன்.. இது தான் என்ரை கடந்தகாலம்.. இதுக்குள்ள நான் இங்கினை இருக்கிறதை ஆரும் நான் தப்பி வந்த இடத்துக்குச் சொல்லிக் குடுத்திடுவினமோ எண்டு எனக்குப் பயமாக் கிடக்குது ஐயா.. அது தான் நான் இங்க இருந்து போகப் போறன்.."
என அவள் உணர்ச்சி துடைத்த முகத்தோடு சொல்லி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளைத்தேவர், அவளது தலையில் மீண்டும் கை வத்தார்.

"ஒரு கேள்வி கேக்கட்டுமா அம்மாச்சி.."

"கேளுங்கோ ஐயா.."

"உனக்கு உன்ரை ரெண்டு பிள்ளையளும் நல்லா இருக்கோணும் எண்டு விருப்பம் தானே.."

"ஓம் ஐயா.."

"அந்த விருப்பம் உனக்கு இருந்தால் தயவு செய்து.. இங்க இருந்து வேறை இடம் போறது பத்திக் கனவுல கூட நினைக்காத பிள்ளை.."

"ஐயா அது.."

"அந்தக் கேவலமான ஆளிட்டை இருந்து உன்ரை பிள்ளையளையும் உன்னையும் காப்பாத்த இந்த இடம் விட்டால் சரியான இடம் வேறை இல்லை.. இந்தக் கோட்டைக்குள்ள அருண்மொழி நினைச்சால் தவிர வேறை ஆரும் நுழையவே ஏலாது அம்மாச்சி.. தேவை இல்லாமல் மனசைப் போட்டுக் குழப்பாமல் போய்ப் பிள்ளையளைப் பாரு.."
என்று சொல்லிக் கொண்டே எழுந்தவர்
"இந்த அப்பாந்தை வார்த்தைக்கு மரியாதை குடுப்பாய் எண்டு நம்புறன்.."
என்று அவளது கண்களைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போக, ஏனோ அவளால் அவரது வார்த்தையைத் தட்ட முடியவில்லை.

பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை, தன் விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும் என்பது போல பிள்ளைகளைத் தேடிப் போனாள் அவள்.