• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே.. 5

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
அந்தி சாயும் நேரம் சூரியன் தன் கதிர்களால் காணும் பொருள் யாவுக்கும் மஞ்சள் பூசிக் கொண்டிருந்தான்.

அவனது மஞ்சள் கதிர்கள் பட்டுப் பச்சைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த 'அருணோதயம்' என்ற பெயர் பச்சைக் கதிர்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

அந்தப் பெயரைப் பார்த்தபடியே கனகலக்சுமிக்குப் பின்னால், அந்த வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் வானதி.

அதை வீடு என்று சொல்வதை விடவும் அரண்மனை என்று சொல்லலாம், ஒவ்வொரு பொருளிலும் ஆடம்பரம் அப்பட்டமாகக் கொட்டிக் கிடந்தது.

வீட்டை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்த வானதியிடம், கனகலக்சுமி பேச்சுக் கொடுத்தார்.

"பிள்ளை.. நீ இங்கினை இருக்கும் வரைக்கும் இந்த வீட்டுல ஏதும் வேலை செய்வியோ.. சும்மா எல்லாம் இல்லை உனக்குச் சரியான சம்பளம் குடுப்பினம்.."

"அதுக்கென்னம்மா நான் செய்யிறன்.."

"உனக்கும் பொழுது போகும் எண்டு தான் பிள்ளை கேட்டனான்.. அதோட நீ எடுக்கிற காசையும் சேமிக்கலாம்.. அப்ப உனக்கு இங்க இருக்கிறது சங்கடமாயும் இருக்காது.."

"ரொம்ப நன்றியம்மா.."

"நன்றியெல்லாம் வேண்டாமடி தங்கம்.. நீ வந்ததுக்குப் பிறகு தான் எங்கடை வீடு.. வீடு மாரியே கிடக்குது.. அதுக்கு நான் தான் உனக்கு நன்றி சொல்லோணும்.."

"எப்புடியம்மா.. ஆரெண்டே தெரியாத எம்மேல இவ்வளவு தூரம் பாசம் காட்ட முடியுது உங்களால.."

"என்னவோ தெரியேல்லையடி.. உன்னைய முதல் தரம் பாக்கேக்குள்ள எனக்குப் புதுசு மாதிரித் தெரியவே இல்லை.. பாத்துப் பழக்கப்பட்ட ஆளு மாதிரித் தான்டி இருந்த.. இன்னும் ஒண்டு சொல்லுவன் பிறகு நீ என்னடா இவள் எண்டு வெருண்டு போடுவாய் அதனால வேண்டாம்.."

"அட சொல்லுங்கோம்மா.. நான் வெருள எல்லாம் மாட்டன்.. நீங்கள் கதைக்கேக்குள்ள கேட்டுக் கொண்டே இருக்கோணும் போல ஆசையாக் கிடக்கு.."

"ம்ம்.. உனக்கு என்ரை அருமை விளங்குது.. நான் கழுத்தை நீட்டிக் கூடவே வைச்சிருக்கிற அந்த மனுஷனுக்கு என்ரை அருமை விளங்கவே மாட்டன் எண்டுது.. நான் கதைக்க வெளுக்கிட்டாலே வேலை இருக்கு வெண்ணெய் இருக்கெண்டு எழும்பி ஓடீருவாரு தெரியுமோ.."

"ஓ அப்பாவைச் சொல்லுறியளோ.."

"ஆமா உங்கொப்பாவைத் தான் சொல்லுறன்.."

"சரி சரி அவருக்கு அப்புறமா அபிஷேகம் செய்யலாம்.. இப்ப கொஞ்சம் முதல் ஏதவோ சொல்லுவன் எண்டு சொன்னியளே அதைச் சொல்லுங்கோ.."

"அதுவா.."

"அதே தான்.."

"எனக்குக் கலியாணம் ஆகி அஞ்சாவது மாசத்துல நான் உண்டாகிட்டேன்.."

"குண்டாகீட்டியளோ.."

"அடி இவளே காது அடைப்பாடி உனக்கு.. குண்டாகலையடி உண்டாகீட்டேன் உண்டாகி.."

"ஓ சாரி சாரி.. மேல சொல்லுங்கோ.."

"ஆனா எனக்கு அம்மாவாகிற கொடுப்பினை இல்லைப் போல.. அடுத்த ரெண்டு மாசத்திலயே கரு கலைஞ்சிட்டுது.."
என்றவரின் குரல் லேசாகக் கமறியதோ என்னவோ, அவரின் தோள் தொட்டு
"அம்மா.."
என்றவளை ஏறெடுத்துப் பார்த்தார் கனகலக்சுமி.

"என்னடி.. அம்மா அழுறாவோ எண்டு பாக்குறியோ.. அதெல்லாம் ஒரு காலமடி.. ஆனா அந்தக் குழந்தை பிறந்திருந்தால் உன்ரை வயசு இருக்கும் இப்ப.. அண்டைக்கு உன்னைப் பாத்ததுக்கு அடுத்த நாள்.. நீ என்னைய அம்மா எண்டு கூப்பிட்டனீ.. அப்ப அந்த நேரம் என்ரை கலைஞ்சு போன கரு உன்ரை உருவில வந்து நிக்குது எண்ட மாதிரி எனக்கொரு எண்ணம்.."

"உம்மியாவோ அம்மா.. இப்புடி ஒரு அம்மா கிடைக்க நானும் தான் தவம் செஞ்சிருக்கோணும்.."

"என்ரை சின்னத்தேவர் மேல சத்தியமாடி.."

"கேக்கவே புல்லரிக்குது.. அது சரி ஆரு அது.."

"எதடி.. எங்க.."

"அதாம்மா ஆரவோ சின்னத்தேவர் மேல சத்தியம் எண்டியளே.. அது தான் ஆர் அவர் எண்டு கேக்கிறன்.."

"அதுவா.. அது நான் பெறாத தங்கம்.."

"அப்போ நானு.."

"நீ நான் பெறாமப் போன வைரமடி.."
என்று கொண்டே திரும்பியவர், பக்கத்தில் வந்த ஜனகனோடு மோதிக் கொண்டு நின்றார்.

"அடேய்.. வெண்..."

"போதும் நிப்பாட்டுங்கோ.. வெண்ணெய் எண்டு தானே சொல்லப் போறியள்.. அதென்ன புருஷனுக்கும் பொஞ்சாதிக்கும் நான் எண்டால் உடன வெண்ணெய் தான் ஞாபகம் வருகுது.."

"சரி சரி உடன கோச்சுக்காதேடா.."

"கோச்சுக்காமல் வேறை என்ன செய்றது.."

"குழிப்பணியாரம் கேட்டியேடா.. செய்து தர வேண்டாமோ.."

"சொல்லுறியளே தவிர செய்ய மாட்டன் எண்டுறியளே.."

"இரடா அதுக்குத் தான் குழி வெட்டப் போய்க் கொண்டு இருக்கிறம்.."
எனச் சிரியாமல் சொன்ன கனகலக்சுமியின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளி விட்டு,
"அப்ப இருங்கோ நல்ல பெரிய மண்வெட்டியாக் கொண்டு வாறன்.."
என்று கொண்டு ஜனகன் ஓடி விட, அவர்களது சம்பாஷணையில், நெடு நாளைக்குப் பிறகு கலகலவென்று சிரிக்கத் தொடங்கினாள் வானதி.

வெளியே ஏதோ அவசர வேலையாகக் கிளம்பி வந்த அருண்மொழி, அவளது சிரிப்பில் அப்படியே நின்று அவளைப் பார்க்க, அவனைப் பார்த்து விட்ட அவளோ சட்டென்று கனகலக்சுமிக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு, சிரிப்பதையும் நிறுத்தி விட்டாள்.

"ப்பா.. உனக்கு உப்புடிக் கூடச் சிரிக்கத் தெரியுமாடி.. நானும் பாக்கிறன் வந்த நாள் தொட்டு ஏதவோ ம்ம் எண்டு காரக்கொழுக்கட்டையை முழுங்கினவள் மாதிரியே மூஞ்சியை வைச்சிட்டுத் திரிஞ்சியே.. நீ சிரிச்சால் தான் லச்சணமா இருக்கிறாய்.. அடிக்கடி சிரி.."
என்று கொண்டே அருண்மொழிவர்மன் நின்ற பக்கமாகத் திரும்பினார் கனகலக்சுமி.

"ராசா.. நானு இந்தப் பிள்ளையை உள்ளார வேலைக்குப் போடலாம் எண்டு கூட்டி வந்தனான்.. உங்களுக்குப் பிரச்சினை இல்லையே.."
என அவர் அவனைக் கேட்க, வானதியை ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்த்தவன் சரி என்பது போலத் தலையை ஆட்டி விட்டு வெளியே போய் விட்டான்.

அவன் வெளியே போவதற்காகவே காத்திருந்தவர் போல, சட்டென்று வானதியின் கன்னத்தில் கிள்ளி
"நீ அதிஷ்டக்காரியடி.. நானும் ராசா மாட்டன் எண்டு சொல்லீடுவாரோ எண்டு பயந்தன்.. பாத்தா உன்னைப் பாத்ததும் சரி எண்டிட்டாரே.."
என்று தன் சந்தோஷத்தை வெளிப் படுத்த, அவரது சந்தோஷத்தைப் பார்த்துத் தானும் புன்னகைத்தாள் வானதி.

"ஏனம்மா ஒண்டு சொல்லுங்கோ.."

"என்னடி தங்கம்.."

"வேலைக்குத் தானே வைக்கச் சம்மதம் சொன்னாரு அதுக்கு ஏன் நீங்கள் இவ்வளவு சந்தோஷப் படுறீங்கள்.."

"அட உனக்கு அவரைப் பத்தியும் இங்கத்தை நடத்தையைப் பத்தியும் தெரியாது என்ன.."

"நீங்கள் சொன்னாத் தெரிஞ்சு கொள்ளுவன்.."

"எங்கடை ராசாவுக்குப் பொம்பிளைப் பிள்ளையளைக் கண்டாலே ஆகாதுடி.. இந்த இடத்துல என்னையத் தவிர ஒரு பொம்பிளை கூட இல்லை.. இப்பத் தான் நீ வந்து இருக்கிறாய்.. இவ்வளவு காலத்துல உன்னை மட்டும் தான் உள்ள கூட்டிக் கொண்டு போக ராசா சம்மதம் சொல்லி இருக்குது.. அப்ப நீ அதிஷ்டக்காரி தானே.."

"ஓ அப்புடியோ.."
என்றவளது மனதில்
"அப்ப உவரிந்தை மனுஷி எப்புடித் தான் உந்தாளோட குப்பை கொட்டுதோ.."
என்ற எண்ணம் வராமல் இல்லை.

"அப்புடித் தான்.. அதோட இன்னுமொரு விசியம்.. என்ரை மனுஷனும் என்னட்டைச் சொன்னாரு.. பிள்ளையைக் கூட்டிட்டு வரும் போது உள்ளூரக் கொஞ்சம் உதறல் தானாம்.. எப்புடியும் பொம்பிளைப் பிள்ளையை இங்க விட மாட்டாரே முதலாளி எண்டு கொண்டு தான் வந்ததாம்.. பாத்தால் உடன அவர் பிள்ளையை உள்ள இருக்க வைக்கச் சம்மதம் சொன்னதோட.. பிள்ளையிந்தை பாதுகாப்புக்கும் கூட வழி பாத்து ஆரையும் உள்ள வர விடவும் இல்லை.. பிள்ளையை வெளியால போகவும் அனுமதிக்கேல்லை.. கோபக்காரன் எண்டாலும் எல்லாருக்காண்டியும் பாத்துப் பாத்துச் செய்றதிலை அவருக்கு நிகர் அவர் தான் எண்டு சொன்னாரு.."

"ஓ.."

"ம்ம்.. அதெல்லாம் இருக்கட்டும் நீ வெளியால அந்த டெக்கரேஷன் வேலையள் மாதிரி செய்யிறியா.. இல்லாட்டிக்குச் சமையல் செய்யிறியா.."
எனக் கனகலக்சுமி கேட்டு வைக்க, வெளியே வேலை செய்தால் அருண்மொழியை அடிக்கடி பார்க்க வேண்டி நேருமே, அதனால் சமையல் வேலையே செய்வோம் என அவள் முடிவு செய்து
"நான் சமையல் வேலையே செய்றன் அம்மா.."
என்று சொன்னாள் வானதி.

அவள் அப்படிச் சொல்லி முடிக்கவும் அவளுக்குப் பின்னால் அருண்மொழி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

இப்போது தானே போனான் அதற்குள் வந்து நிற்கிறானே என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் கனகலக்சுமியின் பின்னால் மறைந்து கொண்டாள் வானதி.

சரியாக ஐந்து நிமிடத்துக்குள் அவளுக்கு முன்னால் ஒரு பத்திரம் நீட்டப் பட்டது. அதை என்னவென்பது போல வானதி பார்க்க,
"இங்க வேலை செய்யப் போறன்.. எண்டு ஒரு கையெழுத்தைப் போடடி தங்கம்.. அப்பத் தான் உனக்குப் பொறுப்பு இந்த வீடும் முதலாளியும் எண்டும் ஆகும்.. அதோட உனக்குக் குடுக்கிற சம்பளமும் கணக்கில காட்டோணும் எல்லோ அதுக்குத் தான்.."
எனக் கனகலக்சுமி சொல்ல, அவ்வளவு தானா என்பது போல அந்தக் காகிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் படித்துப் பார்க்காமலேயே தன் கையெழுத்தை வைத்தாள் வானதி.

கனகலக்சுமியும் வானதியும் உள்ளே போனதும், அவள் கையெழுத்து வைத்து விட்டுப் போன பத்திரத்தில் இருந்த அவளது பெயரை மெல்ல வருடிக் கொடுத்தான் அருண்மொழி.

அதில் அவளது பெயர் எந்தத் தலையும் இல்லாமல் வெறும் வானதி என்று மட்டும் இருக்கவே, அவனது நீலக் கண்கள் லேசாகச் சுருங்கி எதையோ யோசனை செய்ய, அடுத்த நிமிடமே தனக்குப் பின்னால் நின்றிருந்த ஜனகனின் காதுகளில் அவன் எதையோ சொல்ல, சரி என்பது போலத் தலையாட்டி விட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பி வெளியே போய் விட்டான் ஜனகன்.

அவன் போனதும் கையில் வைத்திருந்த பத்திரத்தைத் தன் சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்திக் கொண்டான் அருண்மொழி.

அதே நேரத்தில் அவனைத் தேடி வெள்ளைத்தேவர் வந்தார்.

"உங்களோட கொஞ்சம் கதைக்கோணுமே.."

"ம்ம்.."

"செல்வபதி.. பத்தித் தான்.. நீங்கள் முதியோர் இல்லம் கட்ட எண்டு கேட்டிருந்த இடத்தை.. இப்ப அவன் டபுள் மடங்கு காசு குடுத்து தனக்குச் சொந்தமாக்கீட்டான்.."

"ஐ நோ.."

"தெரியுமா.. அப்ப ஒரு நடவடிக்கையும் எடுக்கேலையோ.."

"கொஞ்சோம் வெயிட்ல போடுவம்.."

"நீங்கள் சொன்னால் சரியாத் தான் இருக்கும்.. ஆ இன்னொரு விசியம்.. அந்தப் பிள்ளையை வீட்டில இருத்தி வேலைக்கும் வைச்சதுக்கு ரொம்ப நன்றி.. நீங்கள் சம்மதம் சொல்லுவியள் எண்டு நானும் எதிர்பாக்கேல்லை.. பொம்பிளைப் பிள்ளை ஒண்டைத் திடீரெண்டு கூட்டிக் கொண்டு வந்து உங்களிட்டைச் சம்மதம் கேட்டது உங்களுக்குக் கோபம் ஒண்டும் இல்லையே.."

"நோ.."

"நீங்கள் வெளியால வெளுக்கிட்ட மாதிரிக் கிடக்குது ஒரிடமும் போகேல்லையோ.. போனால் என்னைய ஒருக்கா டவுனுல விட்டு விடுங்கோ.. பிள்ளைக்கு உடுத்திக் கொள்ளக் கொஞ்சம் உடுப்புகள் எடுக்கோணும்.. கனகத்தைக் கூப்பிடுவம் எண்டால் அவளை ஆளைப் பிடிக்கவே முடியேல்லை.."

"இந்தக் கிளைமற்ல வெளிய அலைய வேண்டாம்.. எந்தத் திங்ஸா இருந்தாலும் உள்ளார வரச் சொல்லுங்க.."
என்றவன் அவரது பதிலை எதிர்பாராமல் தன் ஜீப் ஏறி வெளியே போய் விட, வெளியே புழுதி பறக்கச் சென்ற ஜீப்பைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி,
"எப்பத்தான் என்ரை சின்னத்தேவனுக்கு நல்ல காலம் ஒண்டு பிறக்கப் போகுதோ.."
என்று சொல்லிக் கொண்டே தன் மனைவியைத் தேடிக் கொண்டு உள்ளே போனார் வெள்ளைத்தேவர்.