• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே.. 7

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
புடைவைகளை வேகமாகத் தன் பக்கம் இழுத்து எடுத்துக் கொண்ட வானதி, புடைவைகளின் நிறத்தையோ வேலைப்பாடுகளையோ கவனிக்கவில்லை.

அவள் இழுத்து எடுத்தது எல்லாமே ஒரே டிசைனும் ஒரே கலரும் கொண்ட புடைவைகள், அதைப் பார்த்தபடியே அவளுக்கு அருகில் வந்த அருண்மொழி, தானே புடைவைகளைத் தெரிவு செய்யத் தொடங்கினான்.

அவனை அண்ணாந்து பார்த்து நிறைய எடுக்க வேண்டாம் என்று சொல்லப் போனவள், அவன் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட புடைவைகள் பத்தைத் தாண்டவும், சட்டென்று எட்டி அவனது கரத்தைப் பிடித்து, மீண்டும் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

அவளது ஸ்பரிசத்தில் ஒரு நொடி தன்னைத் தொலைத்தவன், அவளையே தான் பார்த்திருந்தான், அவளோ அவன் பார்வையில் தன் கையை விலக்கவும், மறு நொடியே அங்கிருந்து வேகமாக வெளியே சென்று விட்டான் அவன்.

அருண்மொழி வெளியே சென்ற ஐந்தாவது நிமிடம், உள்ளே வந்த கடையின் பொறுப்பாளர்
"ஐயா.. உங்களை வீட்டுல விடச் சொன்னாரம்மா.."
என்று கொண்டு இருவரையும் அழைத்துச் சென்றான்.

வாகனத்தின் ஜன்னல் வழியே, அருண்மொழியின் வாகனம் எங்கேனும் தெரிகிறதா என்பது போலப் பார்த்துக் கொண்டே வந்தவள், அவனது வாகனத்தைக் கண்டதும் சட்டென்று எட்டிப் பார்த்தாள்.

ஒரு மதுபானக் கடையின் முன்னால் அவனது வாகனம் நிற்பதைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

"உந்த எருமை இன்னும் திருந்தேல்லைப் பாரன்.. உவனை எல்லாம் கட்டி வைச்சுக் கண்ணுக்கு முளகாய்ப் பொடி பூசோணும்.."
என்று தன்னுள் முணுமுணுத்தவளை கனகலக்சுமி விசித்திரமாகப் பார்த்தார்.

"என்னடி பிள்ளை.. ஏதும் மந்திரம் கிந்திரம் சொல்லுறியோ.. ஏதவோ முணுமுணுக்கிறாய் ஒண்டும் விளங்கேல்லை.."

"அம்மா.. ஒண்டு கேக்கோணும் ஆனா எப்புடிக் கேக்கிறது எண்டு தான் தெரியேல்லை.."

"என்ன எண்டாலும் கேளன்.. என்னட்டைக் கேக்க உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்.. கேள் கேள் என்ன கேக்கப் போறாய்.."

"இல்லை.. உங்கடை ராசா குடிக்கிறவரோ.."

"அருணைக் கேக்கிறியோ.."

"ம்ம்.. அவரைத் தான்.."

"அவனிட்டை எனக்குப் பிடிக்காத விசியமே அது தான்.."

"ஓ.. அப்ப குடிக்கிறவர்.."

"ஓம்.. ஆனா ஒண்டு மொடாக் குடியெல்லாம் இல்லை.. ஏதாவது ரொம்ப யோசிச்சான் எண்டால் மட்டும் போய் ஊத்தீட்டு வருவான்.. மத்தபடி பக்கா ஜென்டில்மேன்.."

"என்னத்தைப் போங்கோ.. விசத்துல இத்தனூண்டு குடிச்சாலும் ஒண்டு தான் முழுக்கச் சரிச்சாலும் ஒண்டு தான்.. காலப் போக்குல அது ஆளைக் கொல்லாம விடவே போகுது.."

"அதுவும் சரி தான்.. என்ரை மனுஷனும் உப்புடித் தான்.."

"நீங்கள் கண்டிக்கிறேலையோ.."

"கண்டிச்சா மட்டும் கேக்கவே போகுது.. நான் விட்டிட்டன் பிள்ளை.. அவையும் அவையிந்தை உடம்பும்.. நாளைக்குப் பின்னுக்குக் குடல் குறுகிப் போச்சுது ஈரல் கருகிப் போச்சுது எண்டு கொண்டு வந்து நில்லுங்கோ அப்பத் தெரியும் இந்தக் கனகம் ஆரெண்டு எண்டு மட்டும் சொல்லி வைச்சிக்கிறன்.."

"உதுகளைத் திருத்தவே ஏலாது போல.."

"எங்க திருத்த.. அதுகளாத் திருந்தினால் தான் உண்டு.."

"ம்ம்.."

"உதுகளை விடு பிள்ளை.. உதைப் பத்திக் கதைச்சால் வீண் கவலையள் தான் மிஞ்சும்.."
என்று கொண்டு அந்தப் பேச்சுக்கு அத்தோடு முற்றுப் புள்ளி வைத்தார் கனகலக்சுமி.

புடைவைகள் அத்தனையையும் வானதியின் அறைக்குள் வைக்கச் சொல்லி விட்டுக் கனகலக்சுமி பிள்ளைகளைத் தேடிக் கொண்டு சென்றுவிட, தன் முன்னால் கிடந்த புடைவைகளைப் பார்த்தபடி அப்படியே அமர்ந்து கொண்டாள் வானதி.

எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை, உடலும் மனதும் அசதியாகி விட, கட்டிலின் விளிம்பில் சாய்ந்து தூங்கி விட்டாள்.

ஒரு மணி நேரம் அப்படியே கரைந்தோட, மெல்லக் கண் விழித்தவள் தன் முன்னால் அமர்ந்திருந்த அருண்மொழியைப் பார்த்துத் திடுக்கிட்டு எழப் போனாள்.

அவனோ உடும்புப் பிடியாக அவளைப் பிடித்து இழுக்க, அவன் மேலேயே மோதிக் கொண்டு அவன் மடியிலேயே போய் விழுந்தாள் வானதி.

அவனது தோரணையிலும் அவனது செய்கையிலும் அவன் குடித்திருப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

தன் மடிமீது இருந்தவளை இடது கரத்தால் வளைத்து இறுகப் பிடித்துக் கொண்டவன், வலது கரம் கொண்டு கலைந்து போன அவளது கேசத்தை வருடிக் கொடுக்க, சங்கடத்தோடு நெளிந்தவளால் ஒரு இஞ்ச் கூட அவனிடம் இருந்து விலக முடியவில்லை.

"குடிச்சிருக்கீங்களா.. என்னைய விடுங்கோ.. ஆரும் பாத்தா என்ன நினைப்பினம்.."

"என்ன நினைப்பினம்.."

"தப்பா நினைப்பினம்.."

"நினைக்கட்டும்.."

"விளையாடாதேங்கோ என்னைப் போக விடுங்கோ.."

"போக விடவா இப்புடி ரைட்டா புடிச்சு வைச்சிருக்கிறன்.."

"இப்ப விடப் போறியளோ இல்லையோ.."

"விட மாட்டன் என்னடி செய்வே.."

"கடிப்பன்.."

"சந்தோஷம்.. இந்தா இந்தக் கையில கடி.."

"உண்மியாவே கடிச்சுப் போடுவன்.."

"இப்ப நீ கடிக்கிறியோ.. இல்லாட்டிக்கு நான் கடிக்கவோ.."

"என்ரை ஈசனே.. எப்புடி வந்து மாட்டியிருக்கிறன் நான்.. உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.."

"சொன்னால் தீர்த்து வைச்சிடுவியோ.."

"சொல்லித் தொலையுங்கோ பாப்பம்.."

"நீ தான்டி எனக்குப் பிரச்சினை.. என்னையை வாழவும் விடமாட்டன் சாகவும் விடமாட்டன்னு ரொம்ப செய்றே.."

"நான் என்ன அப்புடிச் செய்தனான்.. இங்க தான் நீங்கள் இருக்கிறியள் எண்டு தெரிஞ்சிருந்தால் இந்தப் பக்கம் தலை வைச்சே படுத்திருக்க மாட்டன்.."

"அப்புறம்.."

"உங்களை இங்க பாத்த உடனேயை இங்கேருந்து போயிடலாம் எண்டு தான் நினைச்சன்.."

"ம்ம் பார்த்தன்.. அந்த நைட்டு உன்னோட சாகசத்தை.."

"எல்லாம் உங்களால தான்.. நீங்கள் மட்டும் அந்த நேரம் அங்க இல்லாமல் போயிருந்தால் இங்க இருந்து போயிருப்பன்.."

"கிழிச்சிருப்பாய்.. பைத்தியம் இந்த வீட்டுச் சுவருக்கு வெளியால பொறிக்கிடங்குகள் கிடக்கு.. அவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து வெளியால போக ஏலாது.."
என்று கொண்டு வானதியின் இடையை இறுக்கியிருந்த தன் இடது கரத்தை விலக்கித் தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டவன், வலது கரத்தால் அவளது முகவடிவை அளந்தான்.

அவன் தன்னை விட்டது கூடத் தெரியாமல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தவளோ தலைமேல் கையை வைத்துக் கொண்டாள்.

"பொறிக்கிடங்கோ.. அதுகள் என்னத்துக்கு.. வீட்டுக்குள்ள என்னடா எண்டால் சிங்கம் மாதிரி நாயள் நிக்குது.. வீட்டு மதில் என்னடா எண்டால் பனை மரத்தை விட உசரமாக் கிடக்குது.. போதாக் குறைக்கு வெளியால பொறிக் கிடங்கு வேறை.. எனக்கு விளங்கேல்லை இது வீடா இல்லாட்டிக்கு ஜெயிலா.."

"நீ விரும்பினால் வீடு.."

"அப்ப விரும்பாட்டிக்கு.."

"ஜெயிலு.."

"அநியாயம் புடிச்சவனே.. இப்ப என்னத்துக்குக் குடிச்சிட்டு வந்தனீங்கள்.."

"உன்னால தான்டி.."

"என்னாலயோ நான் என்ன செய்தனான்.."

"நீ தான் எனக்காக எதுகுமே செய்ய மாட்டேன்றியே அது தான்.."

"உங்களுக்காக நான் என்ன செய்யோணும்.."

"என்னையக் கல்யாணம் செஞ்சுக்கோ.."

"விசர் மாதிரிக் கதைக்காதேங்கோ.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.."

"சோ வாட்.."

"சோ வாட்டா.. உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத் தான்.."

"அந்தக் கல்யாணம் தான் ஒண்ணுமே இல்லைனு ஆயிடுச்சே.. அப்புறம் என்னையக் கட்டிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை.."

"வாழ்க்கையில ஒரு தடவை தான் கல்யாணம்.."

"அந்த ஒரு தடவை ஒழுங்கா இல்லைனா.. இன்னொனு செஞ்சிக்கிறதுல தப்பில்லைடீ.. உங்க இந்துமதம் மறுமணத்தை ஒத்துக்கிது தானே.."

"இதைப் பத்தி நான் இப்போ பேச விரும்பேல்லை.."

"அப்போ எப்போ பேச விரும்புற ஐடியா.."
என்று அவன் கேட்டுக் கொண்டிருந்த போது, கனகலக்சுமி வானதியை அழைத்தபடி அந்த அறைக்கு வருவது தெரிந்தது.

அவரது அழைப்பில் பதறிப் போனவள்,
"அச்சோ என்னைய விடுங்கோ.. அம்மா பாத்தால் தப்பாகீடும்.."
என்று கொண்டு அவனைப் பார்க்க, அவளைத் தலைசாய்த்துப் பார்த்தவனோ மெல்லச் சிரித்தான்.

இவன் எதற்கு இப்போது இப்படிச் சிரிக்கிறான் எருமை மாடு, என மனதினுள் அவனை வைதவளோ
"என்ன இளிப்பு.. விடுங்கோ என்னை.."
என மீண்டும் சொல்ல, அவனது புன்னகை இப்போது விரிந்தது.

"நான் உன்னை விட்டு ரொம்ப நேரம் ஆச்சுடி.. நீ தான் என்னைய விட்டுப் போக மனசில்லாமல் என் மேலயே இருக்காய்.."
என்று கொண்டு அவளைப் பார்க்க, அப்போது தான் தாங்கள் இருவரும் இருக்கும் நிலையை வானதி பார்த்து விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

அவளது முகபாவனைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு கணம் வாசலைப் பார்த்தான் அது உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருப்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டு, அவள் பக்கம் திரும்பினான்.

"வானம்.. வெரி சாரி.."
என்று கொண்டு அவளது கன்னத்தை இறுகப் பற்றியவன் அவளது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான். அவனது அந்தச் செய்கையில் விழி விரிய அமர்ந்திருந்தவள், அவனது ஸ்பரிசத்தில் பேச்சற்றுப் போனாள்.

சில கணங்கள் அப்படியே கரைய, கனகலக்சுமி வெளியே கதவைத் தட்டும் சத்தத்தில், அவளை மெல்ல விடுவித்தவன், அவளது உச்சியில் தன் நெற்றியால் முட்டி விட்டு, தன் மடியில் அமர்ந்திருந்தவளைத் தூக்கிக் கட்டிலில் அமர்த்தி விட்டு, அறையின் பின் வாசலுக்குப் போனான்.

போகும் போதே
"ரொம்ப அழகா வெட்கப் படுறேடி.."
என்று சொல்லிக் கொண்டே போய் விட, வெட்கப் படுகிறேனா நானா என நினைத்தவள் சட்டென்று எழுந்து கண்ணாடியில் முகம் பார்த்தாள், கன்னங்கள் சூடேறி இருப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் முத்தம் வைத்துப் போன கன்னத்தை விரல்கள் நடுங்க வருடிக் கொடுத்தவளை மீண்டும் கனகலக்சுமியின் அழைப்பு நடப்புக்குக் கொண்டு வந்தது.

அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்து அவரிடம் ஓடினாள்.

"என்னடி பிள்ளை.. நித்திரை ஆயிட்டியோ.. கன நேரமாக் கூப்பிடுறன் ஆளையே காணேல்லை.. வா வந்து தேத்தண்ணி குடி.. இண்டைக்கு நிறைய வேலையள் கிடக்கு.."

"என்ன வேலையள் அம்மா.."

"நாளைக்கு ராசாந்தை அம்மா வழிச் சொந்தக்காரர் வரப் போகினம் போல.. அது தான் அவைக்கு ஏத்த மாதிரி ரூமுகள் சாப்பாடுகள் எல்லாம் ஒழுங்கு செய்யோணும்.."

"ஓ.."

"அதெல்லாம் பாக்க ஆக்கள் இருக்கினம்.. இருந்தாலும் நாங்கள் பாக்கிற போல இருக்காதெல்லோ.. அதோட எங்களுக்கும் பொழுது போகோணுமே.."

"ம்ம்.. சரியம்மா.."

"சரி நீ இந்த தேத்தண்ணியைக் குடி.. நான் போய் ராசா வந்திட்டோ எண்டு பாத்துக் கொண்டு வாறன்.. வந்திருக்காது எண்டு தான் நினைக்கிறன்.."
என்று கொண்டு கனகலக்சுமி போய் விட, அருண்மொழி போன பின்பக்க வாசலை ஓடிப் போய்ப் பார்த்தாள் வானதி.

அவள் நினைத்தது போல தலையைப் பிடித்தபடி கதவோடு சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன்.

"கண்டதையும் ஊத்தீட்டு வந்தால் இப்புடித் தான் தலையைப் பிடிச்சுக் கொண்டு கிடக்கோணும்.."
என்று முணுமுணுத்தபடி, அவனுக்குப் பக்கத்தில் நின்றவளை அண்ணாந்து பார்த்தவன், அவளது கரம் பிடித்து இழுக்க, இப்போதும் அவனோடு மோதிக் கொண்டு வெறும் தரையில் அமர்ந்து கொண்டாள் அவள்.

"இப்புடிப் பொசுக்கு பொசுக்குனு இழுக்காதேங்கோ.. வாற கோபத்துக்கு அறைஞ்சிருவன்.."
என்று கொண்டு அவனைப் பார்த்தவள், அப்போது தான் அவனது கரத்தில் இருந்த மதுப் போத்தலைப் பார்த்தாள்.

"வெளியால வந்த உடனயே அடுத்த போத்திலைக் காலி செய்திருக்கிறானே பாவி.."
என்றபடி தலையில் கைவைத்துக் கொண்டாள்.