• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..9

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
வானதி தான் சொன்னது போல நிறப் புடைவையை உடுத்தி இருக்கிறாளா இல்லையா என்பதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், பண்ணை வீடு நோக்கி வந்த அருண்மொழியின் பார்வையில், முதன் முதலாக ராஜேந்திரன் விழுந்தான்.

அருண்மொழி வானதியைப் பார்க்க, வீட்டின் பின் வாசல் வழியே வருவதால், அவன் இத்தனை நாட்களில் யாழ்மொழியையோ ராஜேந்திரனையோ பார்த்தது இல்லை.

சிவப்பு நிறப் புடைவையில் இருந்தவளை யாரோ ஒரு சின்னப் பையன் கொஞ்சுவதைப் பார்த்ததும், அது யாராக இருக்கும் என்ற யோசனையோடு வாசலோடே நின்றவனைப் பார்த்து விட்ட ஜனகன் அவனிடம் ஓடி வந்தான்.

"பாஸ்.. நீங்கள் கேட்ட டீடெயில்ஸ் வந்திட்டுது.. இந்தாங்கோ.."
என்று கொண்டு ஒரு காகிதக் கவரை நீட்டினான்.

அதில் வானதி பற்றிய பூர்வீகமே இருந்தது. அதிலும் அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருப்பதைப் படித்தவனது விழிகள் வேகமாக வீட்டின் உள்ளே துழாவத் தொடங்கியது.

வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து விட்ட கனகலக்சுமி,
"ராசா.. ஏன் வெளியாலயே நிக்கிறியள் உள்ள வாங்கோ.."
என்று கொண்டு அவனருகே வரவும், தலையை அசைத்தபடி உள்ளே வந்தவனைப் பார்த்ததும், தாயின் பின்னால் மறைந்து கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தான் ராஜேந்திரன்.

அவனது வெண்ணிறத் தோலும், நீல விழிகளும் சின்னவனுக்குப் பிடித்திருந்தது போலும், தாயின் சேலைத் தலைப்பை இறுகப் பற்றிக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்தான்.

வானதியையும் ராஜேந்திரனையும் சில நிமிடங்கள் பார்த்திருந்த அருண்மொழி என்ன நினைத்தானோ தெரியவில்லை, உடனே கனகலக்சுமியிடம் திரும்பித் தான் வானதியோடும் அவளது பிள்ளைகளோடும் தனிமையில் பேச வேண்டும் என்று சொல்ல, அவனது பேச்சுக்கு என்றுமே எதிர்ப் பேச்சுப் பேசாத அவரும் உடனே அங்கிருந்து மற்றவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

எல்லோரும் வெளியே போனதும், பக்கத்தில் கிடந்த சோபா மீது அமர்ந்து கொண்ட அருண்மொழி, ராஜேந்திரனைப் பார்த்துத் தன்னருகே வரும்படி சைகை செய்தான்.

அவனையும் அவனது சைகையையும் பார்த்த சின்னவனோ, சட்டென்று தாயை அண்ணாந்து பார்க்க, அவளோ போ என்பது போலத் தலையை அசைத்தாள்.

தாய் அவனிடம் போகச் சம்மதம் சொன்னதும், கைகளை இறுக்கப் பிசைந்தபடி அருண்மொழியின் பக்கத்தில் போய் நின்று கொண்டான் ராஜேந்திரன்.

சின்னவனை ஒரு கணம் பார்த்தவன் மறுகணம் வானதியைப் பார்த்தான். அவளோ குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.

ராஜேந்திரனைப் பக்குவமாக அணைத்துத் தூக்கித் தன் மடியில் அமர்த்திக் கொண்டபடி
"என்னோட பொண்ணு எங்கடீ.."
என்று கேட்டவனது தோரணையில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் வானதி.

அவன் அப்படிக் கேட்பான் என அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, எப்படி அவனால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது என அவளால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

"வானம்.. உன்கிட்டே தான் கேக்கிறன்.."
என்றவன் அவள் திகைப்பு மாறாமல் நிற்பதைப் பார்த்ததும் ராஜேந்திரனிடம் குனிந்தான்.

அவனுக்குத் தெரியும் ராஜேந்திரன் வானதியின் வயிற்றில் பிறக்கவில்லை என்பது, ஆனாலும் வானதி நேசிக்கும் அத்தனையையும் அவனும் நேசிப்பான் அது தான் அவன் தன் காதலுக்குச் செய்து கொண்டிருக்கின்ற மரியாதை.

தன் இடது கரத்தால் சின்னவனைக் கீழே விழாமல் அணைத்துப் பிடித்திருந்தவன், தன் வலது கரம் கொண்டு அவனது தலையை வருடிக் கொடுத்தபடி அவனோடு பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். முதலில் அருண்மொழியைக் கண்டு லேசாகக் கூச்சப் பட்ட ராஜேந்திரன், அவன் நடந்து கொண்ட முறையில் அவனோடு ஒட்டிக் கொண்டு விட்டான்.

"குட்டிப் பையன் பேரு என்ன"

"தாசேந்தன்.."

"தங்கச்சி பேரு.."

"உசிரு.."

"ஓ.. நல்ல பேரு தான்.. உங்க அம்மா பேரு.."

"பானதி.."

"ம்ம்.. அப்பா பேரு.."

"அப்பா இல்லியே.."
என்ற சின்னவனது தலையைத் தன் மார்போடு மெல்ல அழுத்தியவன்
"நோ கண்ணா.. உனக்கு நான் தான் அப்பா ரைட்டா.."
என்று சொல்ல, கலங்கிய கண்களை மறைக்க வேண்டி வானதி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ராஜேந்திரனோ குதூகலமாக
"ஐய்யா ஜாலி.. நானுக்கு அப்பா வந்தாச்சி.."
என்று கொண்டே அருண்மொழியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
சின்னவனது முத்தத்தைக் குனிந்து வாங்கிக் கொண்டவனது புன்னகை அழகாக விரிந்தது

ராஜேந்திரன் அப்படித் தான் பாசமாக இரண்டு வார்த்தை சொன்னாலே அவர்களுக்குப் பின்னால் நாய்க்குட்டி போல் சுற்றத் தொடங்கி விடுவான், பாசத்துக்கு ஏங்கும் ஒரு இளந் தளிர் அவன், இத்தனை நாளும் வானதியின் பாசத்தில் மட்டுமே பயிரானவனுக்கு இப்போது கிடைத்த உறவுகள் சந்தோஷத்தை மட்டுமே கொடுத்தது.

சில நிமிடங்களில் கனகலக்சுமி தன் கையில் யாழ்மொழியோடு உள்ளே வந்தார்.

"ராசா.. இது தான் வானதியோட பொண்ணு யாழ்மொழி.."
என்றவரைத் திரும்பிப் பார்த்தவன், அவரது கையில் இருந்த சின்னச் சிட்டைப் பார்த்ததும் தன்னையே மறந்து போனான்.

குழந்தை வானதியை அப்படியே உரித்து வைத்தது போல இருந்தாள். வானதி மேல் உயிரையே வைத்திருக்கும் அருண்மொழிக்கோ, அவளது சாயலில் இருந்த குட்டிப் பெண்ணைப் பார்த்ததும் அவ்வளவு பிடித்திருந்தது.

ராஜேந்திரனை இடது கரத்தில் தூக்கிக் கொண்டு எழுந்து வந்தவன், மறு கரத்தால் யாழ்மொழியைத் தூக்கிக் கொண்டான்.

குழந்தையும் சமத்தாக அவனைக் கட்டிக் கொண்டது. அருண்மொழியோடு எந்த விதமான அழிச்சாட்டியமும் செய்யாமல் ஒட்டிக் கொண்ட தன் குழந்தைகளை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே வானதிக்குத் தெரியவில்லை.

குழந்தையைக் கொடுத்து விட்டுக் கனகலக்சுமி போய் விட, இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அவளருகே வந்தவன்
"பேபீ.. இனி இப்போதைக்கு உன்னைய டிஸ்டொப் செய்ய மாட்டேன் பாத்துக்க.. பிக்கோஸ் நான் ஒரு பொறுப்பான அப்பா ஆயிட்டன்.."
என்று சொல்லி விட்டு அப்படியே வெளியே போய் விட்டான்.

மூவரும் போன திக்கையே பார்த்தபடி நின்றிருந்தாள் வானதி, அவளுக்கு நடப்பது எல்லாமே கனவு போல் இருந்தது.

வெளியே வந்த அருண்மொழிக்கோ மனசெல்லாம் பரவசமாக இருந்தது. சட்டென்று அவனது வாழ்வே வண்ணமயமாக மாறிப் போய் விட்டது போல உணர்ந்தவன், நேராகத் தன்னறைக்குள்ளே போய் விட்டான்.

அறையினுள் நுழைந்தவன் இருவரையும் தன் மேல் போட்டுக் கொண்டு படுத்தே விட்டான். அவனுக்கு அந்த நிமிடத்துச் சந்தோஷத்தை அணு அணுவாக அனுபவிக்க வேண்டும் போல இருந்தது.

அதற்குத் தோதாக ராஜேந்திரனோ அவனது மார்பைத் தட்டிக் கொடுக்க, யாழ்மொழியோ அவன் நெஞ்சிலேயே படுத்துக் கொண்டபடி, அடிக்கொரு தரம் அவனை எழுந்து எழுந்து பார்த்தாள்.

குழந்தைகளோடு வேறொரு அழகான உலகத்தினுள் சஞ்சரித்துக் கொண்டிருந்தவனை, அவனது அலைபேசி மணி ஒலித்து, அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து இந்த உலகத்தில் சேர்த்தது.

அவனது அரண்மனை போன்ற வீட்டுக்கு வரவிருந்த அவனது தாய் வழிச் சொந்தக்காரர்கள் நாளை வருவதாகவும், இன்று தங்களால் வர முடியாது உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

நீங்கள் வந்தால் என்ன இல்லாட்டிக்கு வராமல் போனால் தான் எனக்கு என்ன என்பது போல அலைபேசியைத் தூக்கி மெத்தையில் போட்டவன் குழந்தைகளோடு இலயித்து விட்டான்.

மதிய உணவு நேரத்தைத் தாண்டியும் அருண்மொழியின் அறைக் கதவு திறக்கப் படாமல் இருக்கவும், வானதி தான் அவர்களைத் தேடி வர வேண்டியதாகப் போயிற்று, கனகமும் வெள்ளைத்தேவரும் வயல் வேலைகளை மேற்பார்வை செய்யப் போய் விட்டதால், வேறு வழியின்றி அவன் அறை நோக்கிப் போனாள் அவள்.

கதவைத் தட்டிப் பார்த்தவள், எது விதமான சத்தமும் வராமல் போக, கதவை மெல்லத் தள்ள அது திறந்து கொண்டது.

திறந்த கதவைப் பிடித்தபடி உள்ளே போகலாமா வேண்டாமா என்பது போலச் சில நொடிகள் தயங்கி நின்றவளோ, பின்னர் வேகமாக உள்ளே போய் விட்டாள்.

அந்த விசாலமான அறையின் நடுவில் கிடந்த பெரிய கட்டிலில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்த மூவரையும் பார்த்ததும் அவள் எப்படி உணர்ந்தாள் என அவளுக்கே தெரியவில்லை.

இது போன்றதொரு அழகான அருமையான குடும்ப வாழ்க்கையைத் தான் அவளும் எதிர்பார்த்தாள், ஆனால் காலம் வேறொரு நரகத்துக்குள் அவளைத் தள்ளி விட்டிருந்தது. அந்த நரகத்தில் இருந்து அவளை மீட்டெடுக்க வந்த அன்பான அசுரன் தான் அருண்மொழிவர்மன் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.

கதவோடு சாய்ந்து நின்றபடி சில நிமிடங்கள் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், மெல்ல அருகில் போனாள்.

அருண்மொழியின் தூக்கத்தைக் கலைக்க விரும்பாதவளாய் ராஜேந்திரனை மெல்லத் தட்டினாள். அவளின் மகனோ அடுத்த பக்கம் திரும்பி மீண்டும் அருண்மொழியைக் கட்டிக் கொள்ள, யாழ்மொழி மெல்லச் சிணுங்கினாள்.

சின்னவளின் சிணுங்கலில் அவளைத் தட்டிக் கொடுத்தபடி மெல்லக் கண் விழித்த அருண்மொழி, தன் பக்கத்தில் நின்றிருந்தவளைப் பார்த்ததும், சட்டென்று சின்னவனைத் தூக்கி மற்றப் பக்கத்தில் படுத்தி விட்டு, வானதியைப் பிடித்துத் தன்னருகே இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலேயே போய் விழுந்தவள், சுதாரித்து எழும் முன்னால் அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

"கையை எடுங்கோ.. ஆ ஊண்டா பொசுக்கு பொசுக்குனு பிடிச்சு இழுத்து விழுத்திறது.. மோதி மோதி மூஞ்சி முகரை எல்லாம் எனக்கு நோவுது.."

"நான் இழுக்கும் போது நீ சமத்தா வந்தால் ஏன் இந்தப் பாடு.."

"உங்களைத் திருத்தவே ஏலாது.. என்னை விடுங்கோ.. நான் பிள்ளையளைத் தூக்கிக் கொண்டு போகோணும்.."

"ரெண்டு பேரையுமா.."

"ஓம்.."

"கஷ்டமா இருக்காதாடி.."

"ஏன் கஷ்டம்.."

"உன்னைய மாதிரியே கொழுக்கு மொழுக்குனு வளத்து வைச்சிருக்கே.. தூக்கீட்டு நடக்க மூச்சு வாங்காது.."

"அப்போ என்னையைக் குண்டு எண்டுறீங்கள் அப்புடித் தானே.."

"நான் எங்க பேபி அப்புடிச் சொன்னேன்.."

"எந்தப் பக்கமாப் பாத்தாலும் நீங்கள் சொன்னதுக்கு அது தான் அர்த்தம்.."

"அப்புடி இல்லைடீ.. உனக்குக் குட்டீசைத் தூக்கி நடக்கக் கஷ்டமா இருக்குமேனு.."

"ஐயே.. ரொம்பத் தான் அக்கறை முதல்ல என்னை விடுங்கோ.."

"பேபீ பிளீஸ்.. கொஞ்சம் நேரம் பேசாமல் இரேன்.. நான் இப்புடித் தூங்கி நாளாச்சு.."
என்றவன் சட்டென்று அவள் மடியில் தலை வைத்துக் கண்களை மூடிக் கொள்ள, அவளுக்குத் தான் ஐயோடா என்றாகி விட்டது.

கனகலக்சுமியுடன் பேசிக் கொண்டிருந்த நேரங்களில் அவர் தன் ராசா புராணம் பாடும் போது பலமுறை சொல்லிய ஒரு வாசகம் 'ராசா ஒழுங்கா நித்திரை கொள்ளுறதே இல்லை.. ரூம்ல ஒரு பத்து நிமிசத்துக்கு மிஞ்சி றெஸ்ட் எடுக்கிறதே இல்லை..' என்பது தான், அதை ஒரு கணம் யோசனை செய்து பார்த்தவள் தன்னையும் அறியாமல் அவன் தூங்குவதை ரசிக்கத் தொடங்கினாள்.

ஒரு வேகத்தில் தன் கரம் கொண்டு அவன் தலை கோதப் போனவள், கரம் அந்தரத்தில் இருக்க அப்படியே கரத்தை இறுக மூடிக் கொண்டாள்.
"நீ வாழ்வு இழந்தவள் தானே.."
என்ற அந்தக் குரல் அவளது காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க, காதுகளை இறுக மூடிக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கத் தொடங்கியது.