• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 11

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
ராம் "கொடைக்கானல் போலாமா?" என்று கேட்ட அடுத்த நொடியே கமலும், அம்முவும் ஒரு சேர அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கமலுக்கு இப்போதே பயப்பந்து உருளத் தொடங்கியது.... இவ அங்கே வந்தா ஓவரா ஆடுவாளே! இதுங்களும் எப்படா இவளை என் தலையில கட்டலாம்னு தான் துடிக்கிதுங்க.... என்ற சிந்தனை. அம்முவிற்கோ 'சிக்குனான் டா மாப்ளே!' என்ற மொமெண்ட்.

"இப்போ எதுக்கு திடீர்னு? இங்கே வந்ததே எல்லார் கூடவும் டைம் ஸ்பெண்ட் பண்ணத்தான்! குழந்தைங்களே வெச்சிட்டு எங்கேயும் அலைய வேண்டாம்" என்ற குரல் கமலில் வயிற்றில் பாலை வார்த்தது.

ராமின் கூற்றுக்கு முதலில் முட்டுக்கட்டை போட்டதும் அவனது மனையாள் சிவநேத்ரா தான்.

"மேலிடமே தடா சொன்னப்பின்னாடி எங்கே போறது!!! பேசாம வீட்ல இருக்க வேண்டியது தான்" என்று அபி சுனோவைப் பார்த்தபடியே வருத்தமாக மொழிந்தான்.

"அதை எதுக்கு என்னை பார்த்து சொல்றே அபி! ஏன் நாம இதுக்கு முன்னாடி எங்கேயும் போகவே இல்லேயா? கல்யாணம் ஆன இந்த சிக்ஸ் மன்த்ஸ்லே செவன் டைம்ஸ் ஹனிமூன் போயிட்டு வந்தாச்சு..." என்று சுனோ அவன் மானத்தை வாங்கினாள்.

இருந்தும் அதற்கெல்லாம் அசராமல் "என்ன இருந்தாலும் இன்னும் நாம கொடைக்கானல் போனது இல்லேயே பட்டு"

"சும்மா இருங்க அபி... இங்கே எல்லாரும் நல்லா ஜாலியா தானே என்ஜாய் பண்ணிட்டு இருக்கோம்.... இப்போ எதுக்கு கொடைக்கானல்?"

"அது இல்லேடா கன்னுக்குட்டி" என்று ஏதோ கூற வாயெடுத்தவனை ஆரம்பித்திலேயே ஆஃப் பண்ணியிருந்தாள் அவனின் பதி.

"போதும் அபி... நான் கன்னுகுட்டியும் இல்லே பன்னுக்குட்டியும் இல்லே"

ஒரு காலத்தில் இவன் பேசமாட்டான என அவள் ஏங்கியது என்ன! அவனது திட்டும் மொழிக்கு கூட மகிழ்ந்தது என்ன! செல்லப் பெயர் சொல்லி அழைத்தான் என்று வானுக்கும் பூமிக்கும் குதித்ததென்ன! இப்போது என்னவென்றால் நிமிடத்திற்கு நிமிடம் கொஞ்சிக் கொண்டு அருகில் வருபவனை விரட்டாத குறையாகத் துறத்திவிடுகிறாள் இந்த சுனோ!!! அபியோ அதே தான் நினைத்தான் போல, முகத்தில் டன் கணக்கில் பொய்யாய் பரவியது சோகம்.

இங்கே நேத்ராவோ தன்னவன் தன் கூற்றுக்கு மறுமொழி பேசவில்லையே என்ன அதிசயம்!!! என்ற யோசனையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். ராம் இன்னமும் தன்னவளின் மேல் இருந்த பார்வையை மாற்றாமல் இருக்க, அது கூறிய மறைமுக மிரட்டலில் மேலும் கொஞ்சம் திமிராக முடியாது என்பது போல் தலையசைத்தாள்.

"திமிர் பிடிச்சவளே!" என்று எவருக்கும் கேட்காத குரலில் தன்னவளை அர்ச்சித்தான். அதனையும் புரிந்து கொண்டவள், "ஃபஸ்ட் என்ன ப்ராப்ளம்? ஏன் திடீர் ட்ரிப்? என்ன ப்ளான்?" என்று தன்னவனை சரியாக ஊகித்து வினவினாள் நேத்ரா.

உள்ளதை மறைத்து பல காரணங்கள் கூறியபோதும் நேத்ரா தன்னவனின் கள்ளத்தனம் அறிந்து 'தனியே பேசும் வாய்ப்பு கிடைத்தால் உண்மை உரைக்க வேண்டும்' என்ற அன்பு கட்டளையை கண்களால் பிறப்பித்துவிட்டு மற்றவர்களுக்கு சம்மதம் தெரிவித்தாள்.

அடுத்த எதிர்ப்பு மறைமுகமாக அம்முவிடம் இருந்து வந்தது. அவளும் கமலின் முகத்தில் தெரிந்த பீதியை நன்கு அறிந்திருந்தாளே!

"யார் யார் போறிங்க?" என்ற அம்முவின் கேள்வியில் அனைவரும் அவளைத் தான் திரும்பிப் பார்த்தனர். முக்கியமாக ஆண்களின் பார்வையில் அதிர்ச்சி அதிகமாக இருந்தது.

பவன் தான் பதிலளித்தான். "இதென்ன கேள்வி எல்லாரும் தான்! நீயும் தான்"

"நான் எதுக்கு! நீங்க ஃபேமிலியா போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க.... நான் எனக்கு வீடு பாக்க வேண்டியிருக்கு... என் கொலிக் ஒருத்தர்கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்.... இந்த வீக் எப்படியும் வீடு கெடச்சிடும்... சோ அவர் கால் பண்ற நேரம் நான் வீடு பாக்க போகனும்..." என்று தன் மறுப்பிற்கு அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து காரணம் கூறினாள்.

"ஓ... மேடம் தனியா டெஷிஷன் எடுக்குற அளவுக்கு வந்துட்டிங்களோ! அது சரி உன் பேரண்ட்ஸ் பேச்சையே கேக்காம வீட்டைவிட்டு வெளியேறி வந்தவ தானே நீ! எங்ககிட்ட தான் டிஸ்கஸ் பண்ணப்போறேயா என்ன! இல்லே நாங்க சொன்னாலும் தான் கேக்கப் போறியா!!!" என்று கோபத்தில் கத்தினான் கமல்.

குழந்தைகள் கூட அவனது கோபக் குரலில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தனர். அம்முவின் கண்கள் ஒருநொடியில் கலங்கி நின்றிட, அனைவரும் கமலை கண்டிக்கும் பார்வை பார்ப்பதைக் கூட பொருட்படுத்தாமல், அம்முவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.

கமலுக்குமே மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது. 'எப்படி தன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தது! இரண்டு நாட்களுக்கு முன்பு மாடி வழியே அவள் இல்லம் நுழையும் போது கூட அவள் தந்தையை நினைத்துப் புலம்புவதைக் கேட்டப் பின்புமா நான் அவளை வார்த்தைகளால் வதைக்கத் துணிந்தேன்!' என்று குற்றவுணர்வு தோன்றியது. அவளது கலங்கிய கண்களைப் பார்க்கப் பார்க்க அந்த குற்றவுணர்வு வழுப்பெற்றது.

'சாரி' என்று கூற வாய்த்திறந்தான் அவன். "அது...... அம்......." என்று அவள் பெயரைக் கூட முழுதுமாகக் கூறி முடிக்கவில்லை அதற்குள் பெண்ணவள் எரிமலையாய் வெடித்தாள்.

"ஆமா சார்... நான் வீட்டுக்கு மட்டும் இல்லே... யாருக்கும் அடங்காத பொண்ணு தான். அதான் நீங்களும் என் சங்காத்தமே வேண்டாம்னு தான் ஒதுங்கியிருக்கிங்களே!!! பின்னே நான் என்ன செய்தா உங்களுக்கு என்ன! நான் இங்கேயிருந்து போன உங்களுங்கு நிம்மதி தானே!!" அவளது ஆக்ரோஷப் பேச்சில் விழியைத் துறந்து வெளியேறிச் செல்லவிருந்த கண்ணீர் கூட மீண்டும் உள்ளே சென்றிருந்தது.

"எக்கேடோ கெடட்டும்னு ஒதிங்கிப் போறவனா இருந்திருந்தா இன்னேரம் தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டியா என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கமாட்டேன்..." என்று காரசாரமாக வாக்குவாதம் செய்தான் கமல்.

"உங்களை யாரு அதை செய்ய சொன்னது? எனக்கு உதவி செய்ய யாரும் இல்லேன்ற அனுதாபத்துல தாலி கட்டினவருக்கு எதுக்கு இவ்ளோ அக்கற... அன்ட் மோர் ஓவர் நீங்க கட்டின தாலிய நான் அக்ஸப்ட் பண்ணலே... அன்னைக்கே உங்ககிட்ட கலட்டி கொடுத்துட்டேன்...."

"அது உன்னோட திமிரு டி! அப்பவும் யார்கிட்டேயாவது டிஸ்கஸ் பண்ணிருப்பேயா! அட்லீஸ்ட் என்கிட்டேயாவது ஒரு வார்த்தை அடுத்த என்ன செய்யிறதுனு கேட்டாயா! இல்லேல!!! நீயா முடிவெடுத்தே... நீயா கலட்டி வெச்சுட்டுப் போன!!!"

"நீ மட்டும்... தாலி கட்டுறதுக்கு முன்னாடி சம்மந்தப்பட்ட எனக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டேயா! இல்லே நான் அப்போவே மறுப்பு சொன்ன போதும் என் வார்த்தைய காது கொடுத்தாச்சும் வாங்கினேயா! உங்களுக்கு ஆம்பளைன்ற தலைக்கணம்...."

"உனக்காக" என்று கமல் ஏதோ கூற ஆரம்பிக்க அம்மு அவனைத் தடுத்திருந்தாள்.

கையெடுத்து பெரிய கும்பிடாகப் போட்டு "யப்பா சாமி எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம்....." என்று கூறி அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

சுனோவோ அம்முவைப் பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முனைந்திட, கமல் நண்பியைத் தடுத்து நிறுத்தினான்.

"சுனோ.... அவளை அப்படியே விட்டுடு.... அவளுக்காக தான் நம்ம குடும்பமே முகம் தெரியாத ஒருத்தனை எதிர்த்து நின்னுட்டு இருக்கு... அதைக் கூட புரிஞ்சுக்காம எப்படி பேசிட்டு போறா பார்!" என்றான்.

"அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும் கமல்? அவ பேசினதுல என்ன தப்பு இருக்கு? அவ சொன்ன மாதிரி You are patriarchal." என்று மொழிந்துவிட்டு தோழியைத் தேடிச் சென்றாள்.

கமலோ தன் நட்பு உரைத்துச் சென்ற வார்த்தைகளில் தன்னை தனக்குள்ளாகவே தேடத் தொடங்கினான். யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமைதியாக கண்மூடி அமர்ந்த போதும் அனைவரின் பார்வையும் அவன் மேல் படிந்திருப்பதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது...

அமைதியாக சில மணி நேரங்கள் கடந்தது என்றால், தூங்குவதற்கு முன் பிள்ளைகள் செய்த அலப்பரையில் சில மணி நேரங்கள் கடந்திருந்தது. குழந்தைகள் உறங்கிட, மிதுன்யா கமலை உலுக்கினாள்.

"கமல் இன்னும் எவ்ளோ நேரம் இப்படி உக்காந்திருப்பே! படுத்து தூங்கு... சுனோ போயிருக்கா தானே! அவ அம்முவைப் பாத்துப்பா!" என்று கொழுந்தனின் மனமறிந்து உரைத்தாள்.

"அண்ணி...... நான் ஏதோ தெரியாம...... அப்படி...... பேசிட்டேன்..." என்று கமல் விளக்கம் கொடுக்க முன் வந்தான்.

"அதை என்கிட்ட சொல்லத் தேவையில்லே கமல்... நீ மொதோ சொன்ன வார்த்தைகள் தான் தெரியாம பேசினது... அடுத்து பேசின எல்லாம் தெரிஞ்சே தான் பேசினே இல்லேயா?" என்று பொறுமையாக அவனுக்கு நினைவூட்டினாள்.

மற்றவர்களும் யாரேனும் ஒருவர் சொன்னால் அவன் புரிந்து கொள்வான் என்று இருவரது பேச்சையும் கவனியாதது போல் கண் மூடிப் படுத்துக் கொண்டனர்.

"இல்லே அண்ணி நான் சாரி கேக்க தான் வந்தேன்... ஆனா அவ தான் நான் ஏதோ அவ மேல அக்கறையே காட்டாத மாதிரி திமிரா பேசவும் தான்... கோபத்துல" என்று தயங்கினான்.

"திமிரா பேசுறவங்க அவங்க வாழ்க்கையில நிறையா கேலி பேச்சுக்கு ஆளாகி இருப்பாங்க கமல்" என்று ராமின் குரல் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்தான் கமல்.

ராமின் பேச்சுக்கள் மட்டும் தான் கமலுக்கானதாக இருந்தது, அவனது பார்வை முழுதும் நேத்ராவை நோக்கி தான் இருந்தது. கமல் தன்னை கவனிக்கிறான் என்று தெரிந்தது ராம் அவனை நேருக்கு நேர் பார்த்து மேலும் கூறத் தொடங்கினான்.

"அம்முவைப் பாத்தா திமிரா இருக்குற மாதிரி தெரியலே! அநேகமா அவ நிறைய வலியைச் சுமந்து வந்தவளா தான் இருப்பா! அவங்க பேரண்ட்ஸ் பேச்சை மீறி வீட்டைவிட்டு வந்த மாதிரியும் தெரியலே! உனக்கு அவ மேல உண்மையான அக்கறை இருந்தா அவளைப் பத்தி மொதோ தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு." என்று கூறி திரும்பிப் படுத்துக் கொண்டான்...

நேரங்கள் கடந்தும் அம்முவும், சுனோவும் வந்தபாடில்லை என்றவுடன், இனி இருவரும் இங்கே வரப்போவதில்லை என்று கமலும் படுத்துக் கொண்டான்.

அம்முவைத் தேடிச் சென்ற சுனோவோ அவளை சமாதானம் செய்து பின்னிரவு 2 மணி அளவில் அழைத்து வந்தாள். சுனோ சென்று அபியின் அருகே படுத்துக்கொள்ள, அம்முவிற்கு விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் வெண்மதி உறங்கிக் கொண்டிருந்தாள்.

சிறுமியின் அருகே படுத்திருந்த கமலின் மறுபக்கம் தான் இடமிருக்க வேறு வழியில்லாமல் அவனுக்கு முதுகு காண்பித்து தன் கைகளையே தலையணையாக்கிக் கொண்டு கண் மூடினாள்.

பெண்டீர் வந்த அரவம் கேட்டு விழி திறந்த போதும் எவரையும் நிமிர்ந்து பார்த்திட முடியாமல் மீண்டும் கண்களை மட்டும் மூடிக் கொண்டான் கமல். தன் முதுகின் புறம் அம்மு படுக்கச் செல்வதை உணர்ந்து, பெண்ணுள்ளம் எவ்வித சஞ்சலமும் இன்றி சமாதானம் ஆகிவிட்டது என்று அறிந்து கொண்டான் அவன்.

அவனுக்கு எங்கே தெரியப் போகிறது அதீத கோபம் கூட மடந்தையின் சஞ்சலத்தை தவிடுபொடியாக்கும் என்று!

சற்று நேரத்தில் அவள் புறம் திரும்பியவன் பெண்ணவள் தலையணை இல்லாமல் இருப்பது கண்டு தன் தலையணையனை அவள் அருகே நகர்த்தி தொட்டும் தொடாமலும் அவள் தலையை அதில் கிடத்தினான். அணங்கவள் அப்போது தான் நித்ராதேவியின் கைபிடித்துக் கொண்டு கனவுலகிற்குள் புகுந்திருந்தாள்.

தூக்கக் கலக்கத்தில் நேரே புரண்டு படுத்தவளின் நேத்திரம் கண்டு அதிர்ந்தான் காளையவன். நங்கையவளின் இமை மூடிய கண்கள் கூட, அழுது சிவந்து வீங்கியிருந்தது.

தன் வார்த்தைகள் அவளை இவ்வளவு காயப்படுத்தியதா! என்று யோசித்தவனுக்கு அதற்கான விடை தெரிந்தும், ஏற்க மறுத்தது மனம்.

பெண்கள் மனதால் உறுதி வாந்தவர்களே ஆனாலும் தான் உயிராய் நேசிக்கும் ஒருவரின் சிறு சொல் கூட அவர்களை வழுவிழக்கச் செய்யும் என்பதும் உண்மை தானே.

பொழிவிழந்த அவள் முகத்தைக் கண்டபடியே மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தவனாய் கண்ணயர்ந்தான் கமல்.

தாமதமாக உறங்கிய போதும் சரியான தூக்கமின்மையால் அதிகாலையே எழுந்து கொண்ட அம்மு கண் விழித்ததே தன் மனம் கவர்ந்தவனின் மதி முகத்தில் தான். மற்றொரு நேரமாக இருந்திருந்தால் இன்னேரம் அவனை எழுப்பி சீண்டி இருப்பாள். ஆனால் இன்று ஏனோ அதற்கு மனம் வரவில்லை.

அப்போது மட்டும் அல்ல... அன்று முழுவதுமே அவளுண்டு அவள் வேலை உண்டு என்றே இருந்தாள். மிதுன், நேத்ரா மற்றும் அமியுடன் இணைந்து குழந்தைகளுடன் கொட்டமடிப்பதும், சுனோவோடு இணைந்து மற்றவர்களை கேலி பேசுவதும் என அனைவருடனும் சுற்றினாளேத் தவிர மறந்தும் கூட கமலிடம் எந்த வம்பும் செய்யவில்லை.

கமலுக்கும் அது புரியத்தான் செய்தது... இருந்தும் தனியாக சந்திக்கும் போது மன்னிப்புக் கேட்க நினைத்திருந்தான். ஆண்களில் பலர் அப்படித் தானே! திட்டுவதும், அவமதிப்பதும் அனைவர் முன்னிலையில் என்றாலும் மன்னிப்பு கேட்பது தனிமையில் தானே! அதிலும் சிலர் தன்னிலை விளக்கம் கொடுப்பார்களே ஒழிய தான் பேசியது தவறு என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கமலுக்கு அந்த தனிமையை கொடுத்திட விரும்பவில்லை விறலியவள்.

கமல் தன் காலை உணவை அமியின் இல்லத்தில் முடித்துக் கொண்டு கடைக்குக் கிளம்பிய நேரம் மிதுன் பவனுடன் கொடைக்கானல் கொண்டு செல்வதற்கான உடுப்புகளை எடுத்து வைக்க இருசக்கர புரவியில் அவர்களது இல்லம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.

அதனைக் கண்டவன் கண்களை வலையாக்கி அம்முவைத் தேடினான். அவளோ நேத்ரா மற்றும் ராமுடன் மகிழுந்தில் ஏறிக் கொண்டிருக்க ஒரு விதமான நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான். எவரது மறுப்பும் இன்றி கட்டளை பிறப்பிதற்கு தேவையும் இன்றி அனைவரும் கொடைக்கானல் தயாராகினர். மூன்று காரில் ஐந்து ஜோடிகளும் குழந்தைகளுடன் புறப்பட்டனர்.

ராமின் குடும்பம் பெரியது என்று அவர்களை தனி வாகனத்தில் வர சொல்லி கிண்டல் செய்யவும் மறக்கவில்லை பவனும் அபியும்.

குழந்தைகள் அனைவரும் ஒரே வாகனத்தில் வருவாகக் கூறி அடம்பிடித்திட, நேத்ரா மறுத்தாள். "தரு... இங்கே வர்ற நேரம் தானே என்ஜாய் பண்ணுதுங்க... இந்த வயசுல அம்மா கூடவே இருக்கனும்னு தான் பேபிஸ் ஆசப்படுங்க... ஆனா நம்ம வீட்ல தான் எல்லாரும் நம்மகிட்ட ஒட்டிக்கிட்டு ஒன்னா சுத்துதுங்க... நம்ம கூடவே வரட்டும் நான் பாத்துக்கிறேன்..." என்று கூறிவிட்டான் ராம்...

"வர வர நான் சொல்ற எதையுமே நீங்க கேக்குறது இல்லே பொம்மி ப்பா" என்று அழுத்துக் கொண்டால் நேத்ரா... (தனிமையில் மட்டுமே ராம். பிள்ளைகள் முன்னிலையில் எப்போதும் பொம்மிப்பா தான்)

முன்னதாக நின்றிருந்த கமல் மற்றும் அபி ஜோடிகளின் மகிழுந்து புறப்பட அதனைத் தொடர்ந்து ராம் குடும்பமும், கடைசியில் பவன் மற்றும் ஆரிவ் ஜோடிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.



சீண்டல் தொடரும்.