• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 13

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"உனக்கு இன்னமும் அவளைப் பத்தி தெரியாது கமல்" என்று தன் காதலை அனைவர் முன்னிலையிலும் கூறிய கமலுக்கு நினைவுபடுத்தினாள் சுனோ.

"தெரிஞ்சுக்கிறேன் சுனோ.... அவளுக்கு எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும் அவளுக்காக மட்டுமே அவளுக்குத் துணையா இருப்பேன்ற நம்பிக்கைய கொடுத்துட்டு என் அழுலு பத்தி முழுசும் தெரிஞ்சுக்கிறேன்..." என்று தன் காதலை முழுமனதாக உணர்ந்த கமலாக உரைத்தான்.

அனைவரும் மகிழுந்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். அங்கே மலையை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் பக்கவாட்டில் சாய்ந்து நின்றிருந்த அம்மு எதுவுமே நடவாதது போல் தன் நகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்ட கமல் சுனோவிடம்,

"இருந்தாலும் உன் ப்ரெண்டுக்கு ஓவர் நக்கல் தான். என்னை அலையவிடுறதுக்காகனாலும் இங்கே இருந்து போற வரைக்கும் எனக்கு பதில் சொல்ல மாட்டா பார்..." என்றான்.

"ஏன்? நீ அவளை அலையவிடலேயா!!! ஆறு மாசம் அவ பேர் கூட என்னனு கேக்காம பெரிய இவனாட்டம் தானே சுத்திட்டு இருந்தே!" என்று சுனோ தன் தோழியை விட்டுக்கொடுக்காமல் வக்காலத்து வாங்கினாள்.

அப்போது இடைப் புகுந்தால் மிதுன்யா... "ஆமா அதென்ன ஒரே நாள்ல இவ்ளோ லவ்? நேத்து வரைக்கும் அவளைத் திட்டிட்டு இன்னைக்கு திடீர் ப்ரொப்போசல்... உங்க அண்ணனை மாதிரி தாலி கட்டினதுனால வந்த லவ்னு சொன்னே மவனே மர்டர் தான்.... ரெண்டு பேரையும் சேத்து வெச்சு போட்டுத் தள்ளிடுவேன்..." என்று மிதுன் அண்ணனுக்கும் தம்பிக்கும் சேர்த்து வைத்தே எச்சரித்தாள்.

கமலோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு தன் தமையனைப் பார்த்து 'நீயுமா டா?' என்று மெல்லமாக தலையசைத்து வினவினான்.

பவனோ 'திறமை இருந்தா தப்பிச்சுக்கோ! இல்லேனா தினமும் பழைய சோறு தான்!!!' என்று நக்கலாக சிரித்து தன் பதிலைக் கூறினான்.

கமலோ இடவலமாக கண்களை உருட்டி, "அது..... வந்து.... அப்படி இல்லே அண்ணி.... ஒருவேளை தாலி கட்டினதே காதலால இருக்கலாமே!" என்று தனக்கே சந்தேகம் தான் என்பது போல் கூறினான்.

"நீ?!!"

அவன் மேலும் கீழும் அவசர அவசரமாக சிரித்துக் கொண்டே தலையசைத்தான்.

"லவ் பண்ணின?!!"

இப்போது திருட்டு முழியோடு சற்று வேகம் குறைத்து ஆட்டினான்.

"அதுவும் ஒரே நாள் மட்டுமே பார்த்த அம்முவே?!!"

இப்போது எந்த பக்கம் தலையசைக்க என்று தெரியாமல் மேலும் கீழுமாக இரண்டு முறையும், இடவலமாக இரண்டு முறையும் ஆட்டினான்.

"இதை நான் நம்பனும்!! அடிங்க... யாருகிட்ட கதைவிடுறே!!" என்று சத்தத்தை உயர்த்திட

மொத்தமாக இடவலமாக தலையசைத்திருந்தான்.

"பின்னே ஏன்டா பொய் சொன்னே?" என்று கேட்டபடி நடந்து கொண்டிருந்தவள் சட்டென நின்று அவனையும் எதிரில் நிறுத்தி தன் குறுக்கில் கைகளை மடக்கி வைத்து மிரட்டிட,

"அதப...தப...தபு..." என்று வார்த்தைகள் வராமல் இதழ்கள் மீண்டும் மீண்டும் ஒட்டிக் கொள்ள, அனைவரும் சிரிக்க, அபி கமலுக்கு உதவிக்கு வந்தான்(!!!).

"விடுங்க மிதுன் அண்ணி... அவனே பாவம்... பச்ச புள்ள போல நிக்கிறான்..."

"யாரு இவனா!!! இவன் சரியான ப்ராடு... என்னை சீட் பண்ணி கடத்திட்டு வந்து இவங்க அண்ணனுக்கு கட்டி வெச்சவன் தானே!!! இவன் பச்ச புள்ளையா!!!"

"டேய்... இப்போ உன்னை யாருடா எனக்கு சப்போர்ட் பண்ண சொன்னது?!!" என்று அபியின் காதைக் கடித்தான் கமல்.

"நீ மட்டும் என்னை என் பொண்டாட்டிக்கிட்ட எப்போ பார் போட்டுக் கொடுக்குறேல! அதுக்கு பலிக்கு பலி"

"அதுக்கு அண்ணிக்கிட்ட ஏன்டா போட்டுக் கொடுத்தே..."

"அங்கே என்னடா ரெண்டு பேரும் சீக்ரெட் பேசிட்டு இருக்கிங்க..." என்ற மிதுனின் கேள்விக்கு அபி துள்ளிக் கொண்டு பதில் கூற வர, கமலோ அவன் வாயை அடைத்து,

"அன்னைக்கு அந்த தப்பை நான் செய்ததுனால நம்ம பவன் மாதிரி உங்களை புரிஞ்சுக்கிட்ட ஹஸ்பண்ட் கெடச்சிருப்பானா! இல்லே நம்ம ருத்து மாதிரி ஒரு தங்கக்கட்டி உங்களுக்கு பையனா தான் கெடச்சிருப்பானா!! அவ்ளோ ஏன் 'எங்க வீட்டுக்கு அந்த மகாலட்சுமியே மருமகளா வந்திருக்கானு சொல்ற மாமியார், மாமனார் தான் உங்களுக்கு கெடச்சிருப்பாங்களா!" என்று தொடர்ந்து இடைவெளி விடாது ஐஸ் வைத்தான்.

"அடேங்கப்பா!!!!! நான் எவனை கல்யாணம் செய்திருந்தாலும் இது எல்லாமே கெடச்சிருக்கும்..." என்று ராமின் மேல் இருந்த நம்பிக்கையில் கூறினாள். நிச்சயம் ராம் தனக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் இப்படி ஒரு குடும்பத்தில் தான் சம்மந்தம் பேசியிருப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை...

"ஆனா எங்களுக்கு இப்படி ஒரு அண்ணி கெடச்சிருப்பாங்களானு தெரியலேயே!" என்று பெரிய ஐஸ் கட்டியை வைத்தான்.

"நடிக்காதே டா!!! ஐஸ் வைக்கிறதுக்குனு ஒரு அளவு இருக்கு. உனக்கு தான் பொய் சொல்ல வரலேல! பின்னே ஏன் அந்த கருமத்தை ட்ரைப் பண்ணுறே!" என்று மீண்டும் அவன் அம்முவின் மேல் காதல் என்றுரைத்ததிற்கே வந்து நின்றாள்.

"க்யூட் அண்ணி... எப்படி பொய் சொன்னாலும் கண்டுபிடிச்சிடுறிங்க..." என்று அசடு வலிந்து சமாளித்தான்.

அதற்குள் மற்றவர்கள் மகிழுந்தை நெருங்கியிருக்க, பவன் இருவரையும் வருமாறு சத்தம் கொடுத்தான்.

"ரெம்ப வலியாதே... சீக்கிரம் அம்முவை சமாதானம் செஞ்சு என் கூட சண்டை போட அவளை ரெடி பண்ணு..." என்றிட கமல் சற்று பிரம்மித்து விழித்தான்.

"உன் அம்மா தான் என் கூட மாமியார் சண்டை போட வரமாட்டுன்றாங்க... அவளையாவது ஓரகத்தி சண்டை போட சொல்லு... இப்போ வா போலாம்" என்று தன்னையே விசித்திரமாய் பார்த்த கமலை சற்றும் கண்டு கொள்ளாது கைபிடித்து அழைத்துச் சென்றாள்.

ஆரம்பத்தில் தன்னுடன் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் மிதுன்யாவிடம் இருந்து ஒதுங்கி இருந்தவன், நாளடைவில் அது தம்பி என்ற உணர்வோடு கலந்த உரிமைச் சண்டை என்பதை அறிந்து கொண்டான்.

இருந்தும் சுனோவோடு இளகுவாக ஏற்படுத்திக் கொண்ட தோழமை, அண்ணி என்ற உணர்வில் அவனுக்குள் எழவில்லை. மாறாக அன்னையின் அன்பு அவ்வபோது அவளிடம் தென்படவே, அவனும் அதற்கேற்றார் போல் குழந்தையாக மாறுவதும் உண்டு.

ஆனால் இன்றோ அவனுடன் சண்டை போட்டாலும் அவன் தவறிழைக்க மாட்டான் என்ற மறைமுக நம்பிக்கை அவளிடம் வெளிப்பட, அதில் அகமகிழ்ந்தவன், தன் கைப்பற்றி அழைத்துச் செல்வதில் முதல்முறையாக தோழமை உணர்வையும் பெற்றான். அதற்கு தன் மனதிற்குள் அவளுக்கு நன்றியும் உரைத்துக் கொண்டான்.

மகிழுந்தின் அருகே வந்து நின்றிட அம்மு பின்பக்கக் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள். அவளின் அருகே அமரச் சென்ற சுனோவைத் தடுத்து நிறுத்தினான் கமல்.

கதவைத் திறந்து உள்ளே அமரச் சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து, "நீ முன்னாடி உக்காந்துக்கோ" என்று கூறி நொடி கூட தாமதிக்காது அம்முவின் அருகே அமர்ந்தான்.

அவளோ நொடிக்கும் குறைவான நேரத்தில் தன் பக்கக் கதவைத் திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தாள். அதற்குள் சுனோவும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.

திருதிருவென எங்கே அமர்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அபியிடம், "அண்ணா நீங்க பின்னாடி உக்காந்துக்கோங்க..." என்றிட,

'புருஷனும் பொண்டாட்டியும் நல்லா நம்ம மண்டை காயவிடுறானுங்க' என்று புலம்பியபடி அபியும் பின் இருக்கையில் அமர்ந்தான்.

தன் அருகே அமரமாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் அம்முவையும் கூட ரசித்தபடி "ஏய் அவே எனக்கு தம்பி... சோ உனக்கு மச்சான்..." என்று சிரித்துக் கொண்டே கூறினான் கமல்.

அதற்கு பதிலேதும் கூறாமல், வண்டியை உயிர்ப்பித்தாள் அம்மு.

"ஏம்மா உனக்கு ஹில் ஸ்டேஷன்ல கார் ட்ரைவ் பண்ணத் தெரியுமா?" என்று தன் அதி முக்கிய சந்தேகத்தை முன் வைத்தான் அபி.

"இன்னைக்கு தான் கத்துக்கப் போறேன்..." என்று அம்முவின் பதிலில் மற்ற மூவரின் முகத்திலும் மரணபீதி...

அம்முவோ எவரையும் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. மகிழுந்தை லாவகரமாக ஓட்டித் தான் சென்றாள். ஆனாலும் வளைந்து நெளிந்து சென்ற மலைப் பாதையில் அளவிற்கதிகமாகவே சிரமப்பட்டாள். அதுவும் கொண்டை ஊசி வளைவில் சொல்லவே தேவையில்லை.

'கிராதகி... எவ்ளோ அசால்டா வண்டி ஓட்டுறா பார்... பழக்கமே இல்லாத விசயத்தைக் கூட இவளால தான் இவ்ளோ ஈசியா செய்ய முடியுது... இவளை சமாதானம் செய்யிறது ரொம்பவே கஷ்டம் தான்... நெஞ்சழுத்தக்காரியா இருப்பா போலயே!....' என்று பின்னால் அமர்ந்தபடி அவளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான் கமல்.

மேலும் மிதுன்யாவின் கேள்வி இப்போது அவனை இன்னும் கொஞ்சம் யோசிக்கத் தூண்டியது... அது என்ன திடீர் காதல்!!!... அவகிட்ட சாரி கேக்கத் தானே போனேன்... எப்படி திடீர்னு என்னை கல்யாணம் செய்துக்கோனு கேட்டேன்!!! அண்ணி சொன்ன மாதிரி கல்யாணம் ஆனதால வந்த காதலா!!!

இல்லேயே!!! இவளுக்கு தான் ஆபத்தா இருக்குமோ என்ற எண்ணம் தோன்றிய நிமிடத்திலேயே மனம் ஏதோ பதைபதைத்ததே! அப்படி என்றால் அப்போதே ஆரம்பித்த காதலா இது! என்று தன் மனதை ஆரயத் தொடச்கினான். அதனைத் தொடர்ந்து அந்த நாள் நினைவுகளுக்குச் சென்றது கமலின் எண்ணங்கள்.

அன்று கடையில் எப்போதும் போல் தன் பணியில் மூழ்கியிருந்த போது அவனது திறன்பேசிக்கு தெரியாத எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க, சைலண்ட்டில் போட்டுவிட்டு வியாபாரத்தில் முழுகவனத்தையும் செலுத்தினான்.

சற்று நேரத்தில் கூட்டம் குறைந்திட தன் திறன்பேசியை எடுத்துப் பார்த்தான். மற்றொரு புது எண்ணிலிருந்து

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்கிட்ட பேசின பொண்ணு கொஞ்ச கொஞ்சமா துடிதுடிச்சு சாகப் போறா!!! அதை நேர்ல பாக்க விரும்புறேயா?" என்று குறுந்தகவல் வந்திருந்தது.

இந்த தகவலை நம்புவதா கூடாதா என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவன், சற்று நேரத்திற்கு முன் தனக்கு தொடர் அழைப்புகள் வந்த எண்ணிற்கு மறுஅழைப்பு விடுத்தான்.

ஒரே ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட மறுமுனையின் "ஹலோ"விற்காக காத்திருந்தான் கமல். ஆனால் அதற்கு பதிலாக ஏதோ துணி கொண்டு முழுமையாக ஃபோனை மறைத்தார் போல் சலசலப்பு.

அதனை அடுத்து "என்ன செக் பண்றேயா? அவ ஃபோனை நான் எடுக்கையிலேயே தெரியல அவளுக்கு ஆபத்துனு!" என்றதோடு ஒரு நக்கல் சிரிப்பு; அழைப்பும் துண்டிக்கப்பட்டிருத்தது. (அம்மு அன்று கமலை அழைத்து அவன் அழைப்பை ஏற்காமல் போகவே தன் திறன்பேசியை மேசையில் வைத்துவிட்டு ஓய்வு அறை சென்று வந்த அந்த சிறு இடைவெளியில் அந்த மர்ம நபர் அவளது திறன்பேசியை உபயோகித்திருந்தான்.)

கமலுக்கோ பெரும் குழப்பம்... முதலில் தன்னை அழைத்தது யார் என்று தெரியாது... இப்போது குறுந்தகவல் அனுப்பியவனும் யார் என்று தெரியாது... ஆனால் அந்த குரலில் ஒலித்த தொனி அவனை நம்பத் தூண்டியது.

வழமைபோல் தன் உடன்பிறப்பின் துணையை நாடி அவனுக்கு அழைக்க, பவனோ சுனோவின் தோழிக்கு தான் ஏதோ ப்ரச்சனை அதற்கு தான் தானும் உதவிக் கொண்டிருப்பதாகக் கூறினான்.

சுனோவின் தோழி என்றவுடனேயே கமலுக்கு முதலில் நினைவு வந்தது பெயர்த் தெரியாத அம்முவின் முகம் தான். பவனிடம் மேலும் இது குறித்து விசாரித்து அம்முவின் முகவரியைப் பெற்றுக்கொண்டு அவளது இல்லம் நோக்கி விரைந்தான்.

அவளாக இருக்கக் கூடாது என்று ஒரு மனம் அடித்துக் கொண்டே இருந்தது. அதன் வேகம் கதவைத் தட்டுவதில் நன்றாகவே வெளிப்பட்டது கமலுக்கு. ஆனால் கதவைத் திறந்தது அவளே தான். அப்போதே கமலின் மனம் 'தான் எப்பேர்ப்பட்ட ஆபத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் இவளைக் காக்க வேண்டும்' என்று அந்த நொடிலிருந்தே அவளுக்காக துடிக்கத் தொடங்கியிருந்தது.

அவன் இழைத்த தவறு தன்னை விரும்புபவள் தானே! தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றால் எதிர்ப்பு கூறமாட்டாள் என்ற நம்பிக்கையில் அவளது வார்த்தைகளை காதில் வாங்காமல் தாலி கட்டியது தான். ஆனால் அதன் பிறகு அவள் தான் அணிவித்த தாலியை ஏற்க மறுத்தபோது அவளது மனதை நன்றாகவே அறிந்து கொண்டான்.

அவள் தன்னோடு பகிர்ந்து கொள்ள நினைத்தது அவளது காதலை மட்டும் அல்ல... தன்னுடைய காதலையும் தான் என்று உணர்ந்துதான் அவளது முடிவுக்கு மறுப்பு கூறாமல் அமைதி காத்தான். ஆனால் அப்போதும் மனதில் உண்டான வலி காதலால் தான் என்பதை அவன் அறிந்திடவில்லை.

அன்று இரவே அடுத்த குறுந்தகவல் வந்தது. "நல்ல காரியம் பண்ணிருக்கே! அவளை அவ வீட்டுக்கே அனுப்பி வெச்சுட்டே... இல்லேனா நீயும் சேந்து சாக வேண்டி இருந்திருக்கும்... நாளை காலை முதல் செய்தியே அவள் இறப்பு செய்தி தான்" என்றிருக்க மீண்டும் தந்தையின் அனுமதியோடு தன் இல்லம் அழைத்து வந்திருந்தான்.


இவை அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது... அம்முவாகிய இவள் பார்த்த முதல் நாளிலேயே தன் மனதில் ஏதோ ஒரு மூலையில் இடம் பிடித்துவிட்டாள். 'நான் அப்படியெல்லாம் இல்லை... எனக்கும் காதலுக்கும் எப்போதும் செட்டாகாது' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தன் காதலை உணர மறுத்திருக்கிறான் என்று...

அவளின் பாராமுகம் இன்று அவனையும் அறியாமல் அவன் காதலை வெளிப்படுத்த வைத்துவிட்டது. தான் இழைத்தத் தவறை சரி செய்யும் விதமாக முதல் அடி எடுத்து வைத்தாயிற்று. இனி அந்த குறந்தகவல்காரனையும் கண்காணித்தபடி, என் மாமனாரையும் சரிகட்டனும். அப்படியே என் அமுலுவையும் என் வலிக்கு கொண்டு வரனும்... என்று மனதிற்குள் கணக்கிட்டபடி கண்கள் மூடி அமர்ந்திருந்தவன் அம்முவின் குரலில் சட்டென விழித்தான்.

"ஹல்லோ.... ஹோட்டல் வந்திடுச்சு... இறங்குங்க... கார் பார்க்கிங்கு விடனும்" என்று அவன் முன் சொடுக்கிட்டு எழுப்பி உரைத்தாள்.

கண் விழித்துப் பார்த்தவன், அருகில் யாரும் இல்லாமல் போகவே, சுற்றிலும் இருந்த இருட்டை தனக்குச் சாதகமாத பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.

கண் முன்னால் தெரிந்த சொடுக்கிட்ட அவளது விரல்களை பட்டென கையோடு சேர்த்து பிடித்திட, அதிர்ச்சியடைந்த பெண்ணவளோ தன் கையை உருவிக்கொள்ள போராடித் தோற்றாள். அதில் அவளது முகத்தில் அவ்வளவு பதற்றம்!

"கைய விடுங்க கமல்"

"மாட்டேன்" என்றவன் மூடியிருந்த விரல்களை ஒவ்வொன்றாக விரித்தான். 'இவன் என்ன செய்கிறான்' என்று யோசித்தபடியே அவளும் தன் கையை உதறிக் கொண்டிருந்தாள்.

"ம்ம்ச்ச்ச்" என்ற சத்தத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்து பார்வையாள் அடக்கியவன், மொத்த விரல்களையும் விரித்து தன் ஒற்றை விரல் கொண்டு உள்ளங்கையில் ஊர்வலம் செய்தான்.

"கமல்... விடுங்க...." என்று கைகள் நடுங்க உள்ளம் படபடக்க அவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கமல் அவளது உள்ளங்கையில் மென்மையாக தன் இதழ் பதிக்க, பெண்ணவள் மொத்தமாக விக்கித்துப் போனாள். திருத்தம் செய்யப்பட்ட தாடியும், அதற்குள்ளாகவே முறுக்கிவிடப்பட்ட மீசையும் மலரினும் மெல்லிய தன் கைகளில் குறுகுறுப்பை ஏற்படுத்திட, மெய் சிலிர்த்து பார்வை மாற்றாமல் அவனைக் கண்டபடி சிலையென பேச்சற்று அமர்ந்திருந்தாள்.

"உன் கழுத்துல தாலி கட்டினது அனுதாபத்துனால இல்லே... நான் அதை புரிஞ்சுக்கிட்டேன்... நீயும் சீக்கிரமே புரிஞ்சுப்பே.... புரிஞ்சுக்க வைப்பேன்" என்று புன்னகை தவழக் கூறிவிட்டு இறங்கிச் சென்றான்.

அவர்கள் தங்கியிருந்தது ரெஸிடன்ஷியல் ஹௌஸ் என்பதால் குழந்தைகளுக்கு பால் காய்ச்சிக் கொடுக்க, ஏதேனும் ஒரு நேரம் தயிர் சாதம் அல்லது கலவை சாதம் கிளறிக்கொள்ள, காலையும் மாலையும் தேநீர் போட்டேக் கொள்ள என அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே செய்து உண்டனர்.

அவன் நினைத்தது போலவே அந்த ஐந்து நாள் பயணம் முழுவதும் அவள் கமலிடம் தன் விருப்பமின்மையை பல இடங்களில் காண்பித்தாள். அவனும் முதல் நாளைப் போல் இல்லாமல் அவளது தேவைக்கு மட்டுமே அவளிடம் பேசினான்.

ஒருமுறை குளிரில் இரவு உறக்கம் இல்லாமல் தவித்தவளுக்கு தனதறையில் இருந்த கம்பளியைப் போர்த்தி, ஹூட்டரை சற்றே அதிகப்படுத்திவிட்டுச் சென்றான்.

கமல் தனக்கு போர்த்திவிடுவது தெரிந்தும் பெண்ணவள் கண் திறவாமல் படுத்திருக்க, "ஸ்வீட் ட்ரீம்ஸ் இம்ச.... கனவுலேயும் நான் தான் வருவேன்... உன்னை கட்டிப்பிடிச்சு இம்சை பண்ண.... குட் நைட்" என்று கூறிச் சென்றான்.

கண்கள் திறக்காவிட்டாலும் தன் வார்த்தைகளை அவள் காதில் வாங்கிக் கொண்டாள் என்பதற்கு அடையாளமாய் கண்ணங்கள் சிவந்திருந்தது. அதனைக் கண்டு மனநிறைவோடு எழுந்து அங்கிருந்து சென்றான்.

மற்றொரு நாள் தனக்காக உடனடி குழம்பி கலந்து எடுத்து வந்தவன் தலைவலி என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவளின் அருகே குழம்பியோடு சேர்த்து மாத்திரையும் வைத்துச் சென்றுவிட்டான்.

அவன் அங்கிருந்து சென்றுவிட்டான் என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே மாத்திரையை விழுங்கினாள். சரியாக அவள் குழம்பியைக் குடித்து முடிக்கும் நேரம் அவள் எதிரே வந்து நின்று கோப்பையைப் பெற்றுக் கொண்டான். அதில் பெண்ணவளுக்கு தான் ஒருமாதிரி ஆகிப் போனது...

'எங்கே இருந்தாலும் அவன் என்னை தான் கவனிப்பான்னு எப்படி மறந்தேன்' என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

முதல் மூன்று நாட்கள் மட்டுமே அங்கே தங்கினர். நான்காம் நாள் ட்ரக்கிங் சென்றவர்கள் அங்கேயே ட்டென்ட் போட்டு தங்கிக் கொள்ள, பெண்ணவள் அந்த மலைப் பகுதியில் தனக்கென அமைத்த குடிலில் தனியாக உறங்கத் தயங்கினாள். ட்ரக்கிங்-காகவே பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் மிருகங்கள் பற்றிய பயம் இல்லை என்றாலும் வித்தியாசமான சூழ்நிலை மற்றும் தனிமை அவளை அச்சுருத்தியது என்பது உண்மை.

பெண்ணவளின் பயத்தை உணர்ந்து அவளை வம்படியாக வெளியே அழைத்து வந்து குடிலுக்கு வெளியே கொசுவலைகட்டி அதில் தூங்கச் சொல்லிவிட்டு அதன் வெளிப் பகுதியில் அவள் அருகிலேயே அவனும் படுத்துக் கொண்டான்.

அன்றைய அவனது செய்கை காந்தையவளின் தூக்கத்தை மொத்தமாக பறித்திருந்தது. நான் ஆசைப்பட்டது போல் என்னைக் காதலிக்கிறான் தான்... ஆனால் இந்த காதலை அடைய இன்னும் எவ்வளவு போராட வேண்டுமோ தெரியவில்லையே! என்று நினைத்தபடி நடுவில் இருந்த திரையையும் பொருட்படுத்தாது அவனையே பார்த்திருந்தாள்.

'ஐ லவ் யூ கண்ணா... உன்னை பார்த்து ஏன் என் காதல் துளிர்த்தது.... விட்ட உறவை தொட்டு வைக்கத் தான் கடவுள் என் கண்ணுல உன்னை காமிச்சானா!!! இந்த நிமிஷம் நீ தான் எனக்கு வேணும்னு சொன்னா நீயும் உன் குடும்பமும் என்னை முழுமனசா ஏத்துப்பிங்க தான். இருந்தாலும் எனக்கு ரெண்டு குடும்பத்தோட முழு சம்மதமும் வேணும்.... அதுக்கு நீ தான் ஏதாவது பண்ணனும் கண்ணா!' என்று நினைத்தபடி கண்ணயர்ந்தாள்.

காலை முதலில் கண் வழித்துக் கொண்டது கமல் தான். தன் வலது கை எங்கேயோ சிறைபட்டது போல் உணர்ந்தவன் மெல்ல எழுந்து தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்தான். அவனது அழுலு தான் வலைக்கு வெளியே தன் கையை நீட்டி அவனது கையை சிறைப்படித்திருந்தாள்.

பிடித்திருந்த அவளது கைகளை அழுத்தம் கொடுத்து இப்போது அவன் பிடித்துக் கொண்டான். பெண்ணவள் மெதுவாக தூக்கம் கலைந்து கண் திறந்திட முதலில் கண்ணில் பட்டது ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்த இருவரது கைகளும் தான்.

அதன்பின் தான் இரவு பயத்தில் அவன் கையைப் பிடித்தது நினைவில் வந்தது. மெல்லமாக தன் கையை எடுத்துக் கொள்ள நினைத்து அவனை நிமிர்ந்து கூட பார்க்காது அவனது விரல்களைப் பிரித்தாள்.

கமலோ மேலும் கொஞ்சம் இறுக்கிப் பிடித்து ஒரு இழு இழுத்தான். மொத்தமாக பெண்ணவளும் அவனை நோக்கி நகர்ந்திட, முட்டிக்கொள்ளவிருந்த இதழ்கள் குறுக்கே இருந்த வலையால் தவறிப் போனது. அம்முவோ திக்பிரம்மை பிடித்தது போல் கமலின் கண்களைப் பார்த்தபடி கிடந்தாள்.

கமலோ அவள் இதழ்களைப் பார்த்தபடி உதடு பிதுக்கி "மிஸ் ஆகிடுச்சே!" என்று புலம்பாத குறையாக வருந்தினான்.

அதில் உயிர் பெற்றவள் "ஏதே!!!" என்று அரண்டு கண்களை உருட்டி மிரட்டினாள்.

"என் மிஸஸ்-ஸோடு கிஸ் மிஸ்ஸிங்" என்று உரைத்த கமலின் இதழ்களுக்கு, நடுவில் இருக்கும் வலையையும் பொருட்படுத்தாது ஏகபோக கவனிப்பு நிகழ்ந்தது அம்முவின் மற்றொரு கையால்.

நிறுத்து டி என்று கூட சொல்ல முடியாமல் தொடர்ந்து விழுந்த அடியில் அவளிடம் இருந்து விலகினான் கமல்.

அம்முவோ எழுந்து நின்று இரு கைகளையும் தூசு தட்டுவது போல் தட்டிவிட்டு கமலைக் கண்டு 'அந்த பயம் இருக்கட்டும்' என்பது போல் பார்த்தாள்.

அதில் கமலுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. இப்போது தன்னை ஏதோ பெரிய வீராங்கனை போல் காட்டிக்கொண்டு கெத்தாக நின்றிருந்தாலும், அவள் அடித்தது அவளுள் தோன்றிய பயத்தினால் தான் என்று நன்கு அறிந்தவனுக்கு, 'அமுலு இஸ் பேக்' என்று கூறி குத்தாட்டாம் போட வேண்டும் போல் தான் இருந்தது.
சீண்டல் தொடரும்.