• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 19

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அடிபட்டுப் படுத்திருந்தவனோ எந்த வித கவலையும் இன்றி கட்டுகள் போடப்படாத மற்றொரு காலை ஆட்டிக் கொண்டு ருத்தேஷைப் பார்த்து கொன்னை வைத்தபடி அவன் அன்னை வெட்டித் தரும் பழங்களை உண்டு கொண்டிருந்தான்.

இரண்டு வயது குழந்தையோ தன் அன்னையையும், சித்தப்பனையும் மாறி மாறி பார்த்து ஏமாற்றமடைந்தான்.

கமலின் குறும்பு முகம் ஏதோ வில்லங்கம் செய்திருக்கிறான் என்று தோன்ற, விமலாவையும், மிதுனையும் பார்த்தாள் அம்மு. அவர்களது முகத்தில் கவலை தெரிந்தாலும் கண்களில் கனல் எரிந்து கொண்டிருந்தது.

பற்றாகுறைக்கு கமல் தன் கையிலிருந்த ஆப்பிலை ருத்துவிடம் நீட்டிட, அந்த பிஞ்சு நெஞ்சத்திற்கு என்ன புரிந்ததோ, கமலின் கையை தட்டிவிட்டு "பேட் பாய்" என்றான்.

கமலோ உதடு பிதுக்கி தோள்களை குழுக்கிவிட்டு மீண்டும் தன் வாய்க்கு அரைக்கும் பணியைக் கொடுத்தான். மீண்டும் ருத்துவின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. பிஞ்சு நெஞ்சமல்லவா!குழப்ப நிலை... பழங்கள் வேண்டும், ஆனால் சித்தப்பனிடம் இருந்து பெற விருப்பமில்லை.

"குழந்தைய ஏமாத்தாதே கண்ணா... என்னாச்சு உனக்கு? எப்படி அடிபட்டுச்சு?" என்று தன் கலங்கிய கண்களை துடைத்தபடி திணறிய குரலில் வினவினாள் அம்மு.

அவளைக் கண்டதும் கமலின் முகம் ப்ரகாசம் அடைந்தது. தன் அன்னை மற்றும் அண்ணி இருவரும் அம்முவைத் தான் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் தன் வதனம் கண்டபடியே உள்ளே நுழைந்த அம்முவைப் பார்த்து கண்ணடித்து, இதழ் குவித்து சத்தமில்லா பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் பறக்கவிட்டான்.

அதில் அதிர்ந்தவள் அடுத்த எட்டு எடுத்து வைக்காமல் நின்ற இடத்தில் அப்படியே தன் காலை ஊன்றி நின்றாள். அவளை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த விமலா அவள் எதற்கு நின்றாள் என்பது தெரியாமல்,

"உள்ளே வா மா" என்றார்.

ஆனால் அவளின் பின்னால் உள்ளே நுழைந்து கொண்டிருந்த கங்காதரன் கமலின் செயலை கவனித்துவிடவே, தன் முன்நெற்றியில் தட்டிக் கொண்டு,

"ஒன்னுக்கு ஒன்னு துணை வேணும்னு அவசர கதில ரெண்டு வர்ஷத்துலேயே உன்னை பெத்துகிட்டால்ல உன் அம்மா....... அவளைச் சொல்லனும்" என்றிட அம்முவைத் தவிற வேறு யாருக்கும் எதற்கு இதைச் சொல்கிறார் என்ற புரிந்திடவில்லை.

ஆனால் அம்முவிற்கோ எப்போதுமே கலகலப்பாக பேசக் கூடிய கங்காதரனே திட்டும் அளவிற்கு என்ன நடந்தது! என்று வருந்தி நின்றாள். மேலும் இப்போதெல்லாம் எதெற்கெடுத்தாலும் கமல் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது போல் தோன்றிட, எல்லாம் தன் வருகைக்குப் பின்னால் தான் என்றால் தன்னால் தானோ! என்ற எண்ணம் மனதிற்குள் புகுந்து ரணமாய் வலியைக் கொடுத்தது.

விமலா தன்னவருக்கு பதிலுக்கு பதில் கொடுக்கும் ஆர்வத்தில், "ஆமா... நான் தான் அவசரப்படுத்தி பெத்துக்கிட்டேன்... ஆனா இவன் உங்கள மாதிரியே எடக்கு மடக்கா வந்து பொறப்பான்னு எனக்கென்ன தெரியும்!!!" என்று கூறி உதடு சுழித்தார்.

கங்காதரனோ பதில் பேசாமல் தன் மனையாளை கண்டிக்கும் பார்வை பார்க்க, அதேநேரம் பவன் அறைக்குள் நுழைய கங்காதரனின் கோபம் பவனின் புறம் திரும்பியது.

"அவன் இப்படி இருக்குறதுக்கு காரணமே நீயும் உன் பெரிய மகனும் தான்... என்ன தப்பு செய்தாலும் கூட்டு சேந்துக்க வேண்டியது..." என்றிட, பவனோ முழுமையாகக் கூட உள்ளே நுழையவில்லை, அப்படியே அங்கேயே அம்முவின் அருகில் நின்று கமலைத் தான் முறைத்தான்.

இனியும் என்ன நடந்தது என்று மண்டையை பிய்த்துக் கொள்ள முடியாது என்ற முடிவோடு, கங்காதரனின் அருகே சென்று அமர்ந்து அவரது வலக்கரத்தை தன் கைக்குள் சிறை வைத்து,

"மாமா.... உங்க பிள்ளைங்க என்ன செய்தாலும் சரியா தான் இருக்கும்னு நம்புற நீங்களே திட்டுறளவுக்கு அப்படி என்ன தான் நடந்தது?" என்று கவலை படிந்த முகத்துடன் மென்குரலில் வினவினாள்.

"தெரிஞ்சே ஆக்ஸிடன்ட் பண்ணிட்டு போலிஸ்கிட்ட ட்ரங்க் அன்டு ட்ரைவ்னு பொய் சொல்லிருக்கான் ம்மா... இப்போ தான் ஃபைன் கட்டிட்டு அடுத்துமுறை இப்படி நடக்காதுனு எழுதி கொடுத்துட்டு வந்திருக்கேன்... ரெண்டு பேரும் என்ன நெனச்சு பண்றானுங்கனு தெரியலே... வர வர எனக்கு லோ ப்ரஷர் வர்றதே இவனுங்க ரெண்டு பேர்னால தான்..." என்று கோபமாக உரைத்தார்.

கமல் ஏன் இப்படிச் செய்தான் என்று எவருக்கும் புரிந்திடவில்லை என்ற போதும், பவனுக்கு மட்டுமே அதற்கான காரணம் தெரிந்திருக்கும் என்று அனைவருமே அறிந்திருந்தனர் தான். இப்போது கங்காதரன் வார்த்தைகளும் அதனையே உரைத்திட அனைவரது பார்வையும் பவனின் புறம் திரும்பியது.

பவனோ ஒருநொடியில் சுதாரித்து அழைக்காத கைபேசியை காதில் வைத்தபடி தந்தைக்கு மட்டும் கண்களால் ஏதோ சமிஞ்ஞை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். கங்காதரனும் தன் மகன் தன்னுடன் தனியாகப் பேச நினைக்கிறான் என்பதை புரிந்துகொண்டு, சற்று நேரம் கழித்து

"சரி நான் கிளம்புறேன்... விமலா நீ அவன் கூட இருந்து பாத்துக்கோ... மிது ம்மா, நீயும் வீட்டுக்கு கிளம்பு... உன்னை வீட்ல விட்டுட்டு நான் கடைக்கு போறேன்... இவன் வீடு வர்ற வரைக்கும் நான் தானே கடைய பாத்துக்கனும்.." என்றார்.

"நீங்க கார்ல வெய்ட் பண்ணுங்க மாமா. நான் பத்து நிமிஷத்துல வந்திடுறேன்." என்றிட கங்காதரனும் தலையசைத்து அங்கிருந்து சென்றார். வெளியே பவன் தன் தந்தைக்காக காத்திருந்தவன், கங்காதரன் வரவும் அவருடன் இணைந்து அனைத்தையும் கூறியபடி மகிழுந்தை நோக்கி அழைத்துச் சென்றான்.

மிதுன்யா மூவருக்கும் மதிய உணவு கொடுத்துவிடுவதாகக் கூறி அம்முவையும் மதிய உணவு இடைவேளைக்கு இங்கே அறைக்கு வந்துவிடும்படி கூறிவிட்டு, விமலாவிடம் வேறு என்னென்ன முக்கியமாக வேண்டும் என்று கேட்டு மனதில் குறித்துக் கொண்டிருந்தாள்.

அம்முவின் கண்கள் வந்ததிலிருந்து கமலின் உடலில் போடப்பட்டிருந்த கட்டுகளின் மேல் தான் இருந்தது. 'ஏன் இப்படிச் செய்தான்?' என்ற யோசனையில் முகம் வாடியபடி அமர்ந்திருந்தாள்.

அம்முவின் வதனம் வாடியதைக் கண்டவுடன் கமலுக்கும் ஏதோ போல் ஆகிவிட, அனைவர் முன்னிலையிலும் வாய் திறந்து அவளை அழைத்து அருகில் அமர்த்தி சமாதானம் செய்திட முடியாமல் போகவே, அழுகிறாளோ என்ற சந்தேகத்துடனேயே அவளைப் பார்த்தபடியே படுத்திருந்தான்.

சற்று நேரத்தில் விமலாவிடம் அமர்ந்திருந்த ருத்துவை அழைத்து, "ருத்து பேபி குட் பாய்ல?" என்றான்.

"பேட் பாய்" என்று சற்றும் யோசியாமல் பதில் வந்தது மழலையிடமிருந்து. குழந்தையை முறைத்துப் பார்த்த கமலிடம்,

"ருத்து இல்லே... தித்தா.... தித்தா ஆல்வேஸ் பேட் பாய்" என்று மேலும் ருத்துவே கூறிட, "அடிங்க... அவதார் குட்டி" என்று முனுமுனுக்க, இப்போது முறைப்பது ருத்துவின் முறையாகியது.

அதில் கமல் அவனிடம் சரண்டர் ஆகினான். "சரி டா... சித்தா பேட் பாய் தான்... நீ இப்போ குட் பாயா சித்தாக்கு ஒரு ஹெல்ப் பண்ணு... அதோ அம்மு அழறா பார்... 'சித்தா இஸ் பெர்ஃபெக்ட், அழாதிங்க சித்தி'னு சொல்லிட்டு கன்னத்துல ஒரு முத்தா கொடுத்துட்டு வா?" என்றிட, மழலையோ மழலையில் பேரம் பேசியது...

"சொன்னா அய்ஸ்க்கீம்(ஐஸ்கிரீம்) வாங்கி தர்வேயா?" அவன் நெஞ்சில் கட்டப்பட்டிருந்த வெள்ளைத் துணிக்குள் விரலை துளைத்து விளையாடியபடி வினவினான்.

"சித்தா இப்போ எழுந்து நடக்க முடியாதுல்லா.... சித்தாக்கு சரியாகி வீட்டுக்கு வரும்போது வாங்கித் தர்றேன்..."

"உங்கக்கு தான அதி பத்ருக்கு... அம்மு தித்திய வாங்கி தர சொல்லு" என்று ஏதோ பேச்சில் கவனமே இல்லாதது போல் தன் மொத்த கையையும் கட்டுக்குள் புகுத்தியிருந்தான்.

'காரியத்துல கண்ணா இருக்கானே, பயபுள்ள!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, "சரிடா... சித்திய வாங்கி தர சொல்றேன்... இப்போ மொதோ நான் சொன்னதை சொல்லிட்டு வா"

சித்தப்பனிடம் இருந்து எழுந்து ஓடிய சிறுவன் அம்முவின் கால்களை கட்டிக் கொள்ள, அவளும் குழந்தையைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள்.

ஐஸ்கிரீம் கிடைக்கப் போகிற சந்தோஷத்தில் கமல் சொல்லிவிட்ட தூது செய்தியை மறந்து "அம்மு தித்தி.... தித்தா அய்ஸ்க்கீம் வாங்க சொல்னாங்க" என்றிட அவளுக்கும் அது தெளிவாகவே புரிந்தது.

"இப்போ எதுக்கு ஐஸ்க்ரீம்? யாருக்கு? சித்தாக்கா?"

"இல்லே.... ருத்துக்கு" என்று அவன் ரகசிய குரலில் கூறினான்.

"ருத்துகுட்டிக்கு ஐஸ்கிரீம் வேணுமா?" என்று அம்முவும் ரகசியகுரலில் கேட்க மழலை தலையை மட்டும் அசைத்தது. மேலும் அதே குரலிலேயே தொடர்ந்தாள்.

"அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்களா!!!" என்றாள்.

"நோ... அம்மா ஈட்... ருத்து அய்ஸ்" என்று தனதன்னை தன்னதை பறித்துத் தின்றுவிடுவாள் என்று குற்றம் சாட்டினான்.

அன்னையின் திட்டிற்கு பயந்து பதுங்கித் தின்கும் குழந்தைகளின் காலம் மாறி, தனதன்னை தன்னிடம் இருப்பதை பங்கிட்டுவிடுவாளோ என்று நினைத்து பதுங்கித் தின்கும் குழந்தைகளின் காலமாகிவிட்டதே என்று நினைத்த அம்மு, தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,

"ஓகே... சித்தி ஐஸ் வாங்கித் தரேன். பட் ருத்து என்ன குட் ஜாப் செய்திங்க?" என்று வினவிட, அப்போது தான் சித்தப்பன் ஏதோ சொல்லச் சொன்னானே என்ற சிந்தனையே வந்தது.

ஐஸ்க்ரீம் வாங்கித் தருகிறேன் என்று தன் வயிற்றில் பாலை வார்த்த சிற்றன்னைக்கு சித்தப்பன் கொடுக்கச் சொல்லிக் கூறிய முத்தத்தை தன் சொத்தாக வாரி வழங்கிக் கொண்டே யோசித்தான் சிறுவன். எதுவும் நியாபகம் வரவில்லை என்றவுடன் ஏறியதை விட அதிவிரைவாக இறங்கி மீண்டும் சித்தப்பனிடம் வந்து சத்தமாக,

"தித்தா... அம்மு தித்தி கிட்ட என்ன சொல்லி முத்தா கொருக்கனும்?" என்றிட, கமல் முழுவதும் கேட்டு முடித்தப்பின் தாமதமாகவே தான் தமையன் மகனின் வாயை அடைத்தான்.

அம்முவோ திருதிருவென முழித்தபடி மற்ற இருவரையும் சங்கடமாக பார்த்துவிட்டு ஒரு கையை மடக்கி கட்டிக்கொண்டு மற்றொரு கையை நெற்றியில் வைத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

கமல் முத்தம் கொடுக்கச் சொன்னது என்னவோ அம்முவின் மனம் மழலையின் கொஞ்சலில் கவலை மறந்து அவனிடம் லயிக்கத் தொடங்கும் என்பதற்காகத் தான். ஆனால் ருத்து அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைக்க அந்த முத்தத்தின் அர்த்தமே வேறாக மாறிப் போனது.

ருத்துவின் வாயைப் பொத்திய நிலையில் இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டு ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து, இரு பெண்களையும் பார்த்தான். இருவரும் கமலையே வெறித்த வண்ணம் இருக்க, மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

அங்கே நிலவிய சங்கடத்தை புரிந்துகொண்ட மிதுன்யா ருத்துவை தூக்கிக் கொண்டு வெளியேறினாள். அவளைத் தொடர்ந்து விமலாவும், இருவருக்கும் தனிமை தர நினைத்து "ஆஸ்பத்திரின்றதை நியாவகத்துல வெச்சுக்கோடா" என்று கூறி அறை வாயிலை நோக்கிச் சென்றனர்.

இருவரும் வெளியேறியதும் "கமல்....." என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அடிக்க நெருங்கினாள் அம்மு. கமலின் முகத்திலோ அப்படி ஒரு பீதி.

"நோ அமுலு... சிங்கில் கேண்ட்ல சத்தியமா உன்னை என்னால சமாளிக்க முடியாது.... பெட்ல கிடந்தவனை அடுச்சு கொன்ன பாவம் உனக்கும் வேண்டாம்... சொன்னாஆஆஆ..." என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது தலைமுடியை கொத்தாக பிடித்து நான்கு சுற்று சுற்றிவிட்டு நகர்ந்து நின்றாள்.

"இம்ச...." என்று கூறியபடி வலது கை கொண்டு கலைந்த கேசத்தை நீவிக்கொண்டான்.

"சின்ன பையன்கிட்ட என்ன பேசனும்னு தெரியாதா டா?" என்று சற்று கோபம் தணிந்து திட்டத் தொடங்கினாள்.

"ஏய்... நான் அந்த அர்த்தத்துல சொல்லலே அமுலு... நீ ஃபீல் பண்றியே! அவன் உன்னை கொஞ்சினா நீயும் கொஞ்ச நேரம் அவனை கொஞ்சி விளையாடுவேயேனு தான் சொன்னேன்..."

கமல் தன்னை கணித்து வைத்திருப்பது சரி தானே! ருத்து தன்னிடம் பேசியது இரண்டே நிமிடம் தான் என்ற போதும் அவனுடன் பேசும் போதும் மனக்கணம் கொஞ்சம் குறையத் தானே செய்தது! என்று நினைத்து அமைதி கொண்டவள், முழுமையாக அமைதியடையவும் முடியாமல்,

"ஏன் டா இப்படி பண்ணினே! உன்னால எல்லாரும் எவ்ளோ ஃபீல் பண்றாங்க பாரு...." என்று மீண்டும் அவனது விபத்து குறித்து கவலையோடு கூறியபடி அவனது தோளோடு சேர்த்து கட்டப்பட்டிருந்த கட்டை நோட்டமில்லாள்.

"அமுலு... உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லட்டா....." என்றவன் அவளை அருகே வருமாறு அழைத்தான்... பெண்ணவளும் அவனை நெருங்கி நின்றாள். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வரும்படி மீண்டும் விரல் அசைத்து அழைத்தான்.

"இதுக்கு மேல உன் மடில தான் ஏறி உக்காரனும்... அப்படியே சொல்லு" என்று அவனைப் பார்த்து கத்திட,

"வீடா இருந்தா கண்டிப்பா அதை தான் செய்திருப்பேன்..." என்று கூறி பெரும்மூச்சு இழுத்துக் கொண்டு "ஹாஸ்பிட்டல் ஆகிடுச்சே! அதுவும் இல்லாம என் அம்மா வேற என்கிட்ட பாத்து நடந்துக்கோனு சொல்லிட்டு போயிருக்காங்க..."

"ஆமா அப்படியே அம்மா பேச்சை தட்டாத புள்ளே பார் நீ... இப்போ என்னனு சொல்லப் போறேயா! இல்லே நான் என் வேலைய பாக்க போகட்டுமா?"

"சரி சரி... காதை மட்டும் இன்னும் கொஞ்சம் கிட்டக்க கொடு..." என்றிட குனிந்து அவன் இதழருகே தன் செவியை நீட்டினாள். அதுவும் சற்று இடைவெளிவிட்டு தான்... ஏடாகூடமாக ஏதாவது இச்சு செய்துவிட்டால் என்ற முன்னெச்சரிக்கை தான்.

காற்றோடு கலந்த குரலில், "எனக்கு அடி படலே... இது சும்மா போட்டுகிட்ட கட்டு" என்றான்.

"சும்மா விளையாடாதே கண்ணா..." என்று அவனது பேச்சை நம்புவதா கூடாதா என்ற குழப்பத்தில் மீண்டும் கட்டுகளைப் பார்த்தாள்.

"எனக்கு அடிபடலே டா அமுலு... நீ அழறதை பாக்க ரெம்ப கஷ்டமா இருந்தது அதான் உன்கிட்ட மட்டும் உண்மைய சொல்றேன்..." என்றான்

அம்முவோ அவனது கூற்றை நம்பாமல், "நீ பொய் சொல்றே? அது எப்படி அடியே படாம ஹாஸ்பிட்டல்ல அட்மிஷன் பேட்டு கட்டு போடுவாங்க!" என்று சந்தேகமாக கேட்க, தோள்ப்பட்டையை அசைக்காமல் இருக்கு மார்பின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கட்டை பிரித்துக்காட்டினான்.

அவனது உடம்பிலோ தோள்களிலோ சிறு கீறல் கூட எங்கேயும் தென்படில்லை. அம்முவோ அதனை நம்ப முடியாமல் அவனை முன்னும் பின்னுமாக திருப்பிப் பார்த்தாள். கைகள் கொண்டு வறுடியும் பார்க்க, கமலோ

"ஏய் இம்ச... கையை எடுடி... கூச்சமா இருக்கு" என்று வெட்கப்பட்டு தட்டிவிட்டான்.

அவனது இந்த விளையாட்டில் கோபம் கொண்டவள் முழங்கைக்கு கீழே இருந்த ப்ளாஸ்டரையும் அவன் எதிர்பாராத நேரம் சரட்டென பிடித்து இழுத்தாள். அவள் இழுத்த வேகத்தில் ரத்தமும் சதையும் பிதுங்கிக் கொண்டு வெளியே வர, கமல் வலி தாழாமல் முதலில் கத்திவிட்டு அதன்பின் பல்லைக் கடித்து, தன் வலியை பொறுத்துக் கொண்டு கண்களை மூடி பின்னால் சாய்ந்திருந்த உடலை முன்னால் இழுத்து குறுக்கி அமர்ந்தான்.

அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்திருக்க, அம்முவிற்கு அப்போது தான், தான் இழைத்த அபத்தம் புரிந்து கையில் குருதியோடிருந்த ப்ளாஸ்டரை கீழே உதறிவிட்டு, அருகில் இருந்த ட்ரேவிலிருந்து ட்ரெஸ்ஸிங் கிட்டை எடுத்தாள். எடுக்கும் போதே பாதி கீழே நழுவ, கைகள் நடுங்கியபடி

"சாரி கண்ணா.... நா....ஆன் இதுவும் பொய்னு..... நெனச்சிட்டேன்....." என்று பதற்றத்தில் வார்த்தைகள் திணறிட உரைத்தாள்.

"அமுலு வெளியே டாக்டர்ஸ், நர்ஸ் யாருச்சும் இருந்தா கூட்டிட்டு வா" என்றான் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு,

"டூ மினிட்ஸ் பொறுத்துக்கோ நானே போடுறேன்.." என்று கூறியவளின் கைகள் பாக்கெட்டை பிரிப்பதற்கு கத்தரிக்கோலை கையில் எடுத்ததற்கே நடுங்கத் தொடங்கியிருந்தது.

"சொன்னா கேளு அமுலு.... அம்மாவை கூப்பிடு...... ம்மா" என்று அவளிடம் கூறியபடியே அன்னையை அழைத்தான். அவனுக்கு அவளது கைகளின் நடுக்கம் புரிந்திடவே அவன் வேறு டாக்டரை அழைக்கச் சொன்னான்.

"ம்மா...." என்று இன்னும் கொஞ்சம் பலமாகக் கத்தினான். அவன் கத்திய கத்தில் அவனது வலிகள் அத்தனையும் வெளிப்பட, அதனையும் தாங்க முடியாதவள் விமலாவைத் தேடி வெளியே வந்தாள். விமலாவோ மிதுனை வழியனுப்பச் சென்றிருந்தார் போல. அவளின் குடும்பத்தார் யாருமே அங்கே இல்லை. அப்போது மின்தூக்கியிலிருந்து வெளியே வந்த தேவ்வைக் கண்டு, அவனை உதவிக்கு அழைத்தாள்.

தேவ் பெண்ணவளை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு அறைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்தவன், ரத்தம் சொட்டும் கையோடு அமர்ந்திருந்த கமலின் நிலை கண்டு அவசரம் உணர்ந்து சடுதியில் செயல்பட்டு தன் கைகளை சுத்தாமாக கழுவிக்கொண்டு கமலுக்கு ட்ரெஸ்ஸிங் செய்யத் தொடங்கினான்.

அம்முவின் முகத்தில் தெரிந்த பதற்றம் தேவ்வை குரூரமாக சிந்திக்கச் சொல்லியது... வேண்டுமென்றே இரண்டு முறை கமலை வலியில் துடிக்கவிட்டான். கமலின் வலியைக் கண்ட அம்முவும் தவித்து தான் போனாளே தவிற தானும் டாக்டர் தான் என்பதை மறந்து தேவ்வின் செயல்களை கவனிக்கத் தவறினாள்.

அதனையும் குறித்துக் கொண்ட தேவ் அம்முவிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். "என்ன அம்மு... நீயும் ஒரு டாக்டர் தான்னு மறந்துட்டேயா?"

அதற்கு அம்முவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மாறாக கமலிடம் கண்களால் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

'அடி படலேனு சொன்னேல... பின்னே இது என்னடா?' என்று கண்களால் தன் பரிதவிப்பை உணர்த்தி வினவினாள்.

கமலும் அவள் கேள்வியை புரிந்து வாய்மொழியாய் பதிலுரைத்தான். "பெரிய அடிலாம் இல்லே டி... சும்மா கையிலேயும், கால்லேயும் தான் அடி... ஒன் வீக்ல சரியாகிடும்... நீ ஃபீல் பண்ணாதே" என்றான்.

கட்டிட்டு முடித்த தேவ், கையோடு கீழே சிந்திய குருதி மற்றும் குருதி துடைத்து எடுத்த பஞ்சு என பிற குப்பைகளையும் அகற்றிவிட்டு மீண்டும் கை கழுவிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

"தேங்கஸ் டாக்டர்" என்று கமல் தேவ்விற்கு நன்றி கூறிட, இன்னமும் அம்முவின் கண்கள் கமலைத் தான் எக்ஸ்ரே செய்து கொண்டிருந்தது.

இப்போதைக்கு இவள் தன்னை அறிமுகப் படுத்தி வைக்கப் போவதில்லை என்று உணர்ந்த தேவ் கமலிடம் தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டான், அம்முவின் தோழனாக....

அம்முவின் தோழன் என்றபோதும் கமல் தன்னை கமலகண்ணனாக மட்டுமே அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"சரி உங்களுக்கு டைம் ஆகலேயா! ரெண்டு பேரும் கிளம்புங்க..." என்று கமல் கூறிட, தேவ் அம்முவை 'போலாமா?' என்பது போல் பார்த்தான்.

அவளோ கமலை தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், "நீ போ தேவ்... நான் கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்" என்றாள்.

தேவ் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தலையசைப்போடு விடைபெற்று அங்கிருந்து சென்றான்.

"அமுலு... உனக்கும் டைம் ஆகிடுச்சு டீ... நீ போ நான் மேனேஜ் பண்ணிப்பேன்..." என்றிட,

"இந்த பொய் கட்டு எதுக்கு?" என்று அழுத்தமான குரலில் அவன் அருகே சென்று அவிழ்ந்து கிடந்த மார்புக்கட்டை கட்டியபடி வினவினாள்.

"உண்மையாவே காயம்படும்..... கட்டுபோட்டுட்டு ஹாஸ்பிட்டல்ல ஜாலியா படுத்துக்கிட்டே ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தேன்... மிஸ் ஆகிடுச்சு... அதான் பொய் கட்டு" அவளை நிமிர்ந்து பார்க்காமல் அவள் கட்டிடுவதைப் பார்த்தபடி கூறினான்.

அவனது பதிலைக் கேட்டு கட்டை இறுக்கி முடிச்சிட, அதில் சற்றே வலியை உணர்ந்தவன்,அப்போது தான் அவளது கோபம் அறிந்து நிமிர்ந்து பார்த்தான். "எதுக்கு ஹாஸ்பிட்டல்ல ரெஸ்ட் எடுக்கனும்?"

மீண்டும் தலை கவிழ்ந்து "நீ இன்னமும் ஒன் வீக் இங்கே தானே இருப்பே... அதான் உனக்கு துணைக்கு..." என்று பதுங்கிய குரலில் கூறிக் கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து அவளது முறைப்பில் பாதியிலேயே நிறுத்தினான்.

"என் உசுரு இங்கே தான் போகனும்னு இருந்தா அது எப்படினாலும் போயி தான் தீரும்... நான் செத்தா மட்டும் தான் என் குடும்பத்துத்கும் உன் குடும்பத்துக்கும் கஷ்டம்... ஆனா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி உன் அப்பாவை மனசளவுல தடுமாற வெச்சுட்டே... உன் அம்மா முகமே வாடி தொங்கி போச்சு. இன்னொரு முறை இப்படி நீயா கேனத்தனமா ஏதாவது பண்ணினே நானே உன்னை விச ஊசி போட்டு கொன்னுடுவேன் பாத்துக்கோ! இன்னைக்கு ஈவ்னிங் டாஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து சேரு... இல்லே நாளைல இருந்து நான் வீட்டுக்கு வரமாட்டேன்..." என்று மிரட்டிவிட்டு திரும்பி நடந்தாள்.

வாசல் வரை சென்றவள், மீண்டும் அவன் அருகே வந்து, "இந்த ஐடியாவுக்கு சப்போர்ட் பண்ணி உனக்கு கட்டுபோட்டுவிட்ட டாக்டர் யாரு?" என்றாள்.

அவள் தன்னை இங்கிருந்து போகச் சொன்னதில் அவள் மேல் கோபம் கொண்டிருந்தவன், பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

"கமல்ல்ல்ல......" என்று சலிப்பாக அழைத்தாள்.

அதில் இன்னும் கொஞ்சம் கோபம் கொண்டவன், "என்னடி இப்போ உனக்கு!... உன் ச்சீஃப் டாக்டர் போஸ் தான் எனக்கு சப்போர்ட் பண்றார்... போதுமா? அதான் இப்போ எதுவும் தான் வேண்டாம்னு ஆகிடுச்சே... போ போயி உன் வேலையைப் பாரு" என்று பதிலுக்கு கத்தினான்.

அவன் கோபத்தையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவள் இல்லை. டாக்டர் போஸ் ஏன் கமலுக்கு உதவ வேண்டும் என்ற குழப்பம் தான் மனதையும், மூளையும் குடைந்து கொண்டிருந்தது.

அதே சிந்தனையோடு தன் பணியைத் தொடரச் சென்றாள். இங்கே கமலும் தன் அன்னை வந்தவுடன் உண்மையைக் கூறி டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஏற்பாட்டைப் பார்க்கச் சொன்னான். அம்முவிற்காக மட்டுமே அவள் பேச்சை கேட்டு இல்லம் திரும்ப சம்மதித்தான் கமல். அதுவும் அதற்கு முன்னதாக ஒரு காரியமும் கூட செய்திருந்தான்.

சீண்டல் தொடரும்