• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ராவுடன் பேசிக் கொண்டிருந்த கங்காதரனிடம் ராம் கேள்விகள் கேட்கத் தொடங்க கங்காதரன் தான் பதில் கூற முடியாமல் தடுமாறித்தான் போனார்.

"இப்போ யாருக்கு என்ன செய்யிது அங்கில்?"

ராமிடம் தன் பாரத்தை இறக்கி வைக்க விரும்பாதவராய் அதனை மூடி மறைக்க முற்பட்டார் அவர்... "இப்போ எதுவும் இல்லே மாப்ளே... நேத்து நடந்த ஆக்ஸிடன்ட்-ட தான் நெனச்சிட்டு இருந்தேன்... அதான் மனசு ஒரு மாதிரி இருக்கு... " என்று சமாளித்தார்.

"மாமா... அம்முவை இங்கே அனுப்பி வைங்க... நம்ம சுனோ கூட சேந்து கொஞ்ச நாள் ட்ரைனிங் போகட்டும்..." என்று தன் மாமனின் வருத்தம் தாளாமல் கூறினாள் நேத்ரா.

"சிவா ம்மா நீயும் என்னடா இப்படி யோசிக்காம பேசுறே! அம்மு- கமல் கல்யாணம் இன்னும் சட்ட பூர்வமாக பதிவு பண்ணலே... அம்மு இன்னமும் அவங்க அப்பனோட பொண்ணு தான் டா"

அவரின் மரியாதைக் தன்மையற்ற வார்த்தைகளை கவனித்த ராம் "அவங்க அப்பா யாருன்னு தெரிஞ்சதா அங்கிள்?" என்றான்.

"நா.... நான்.... நான் எங்கே போயி அவன்... அவரை தெரிஞ்சுகிறது மாப்ளே!!! இன்னும் அம்மு தன் பேமிலிய பத்தி எதுவும் சொல்லலேயே" இப்போது அவர் தடுமாறியதைக் கூட குறித்துக் கொண்ட ராம், நேத்ராவிடம் திரும்பி

"தரு சூடா மசாலா டீ கிடைக்குமா?" என்றான்.

நேத்ராவிற்கு புரிந்துவிட்டது ராம் தன்னை தவிர்த்து கங்காதரனுடன் பேச நினைக்கிறான் என்று. அதில் அவள் முகம் வாடி தொங்கிவிட, கண்களால் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

நேத்ரா அறையைவிட்டு வெளியேறிச் சென்றபின், "ம்ம்ம்... அங்கில் உங்க செல்ல பொண்ணு இப்போ இங்கே இல்லை.... என்கிட்ட எதுவும் சொல்ல நெனச்சிங்கன்னா இப்போ சொல்லுங்க?" என்றதும்

கங்காதரனின் மனமோ 'எனக்கு நீங்க வேற சிவா வேறன்னு இல்லே மாப்ளே... அவ இல்லாம உங்ககிட்ட எந்த ரகசியத்துக்கும் இடம் இல்லே... அதே போல நீங்க இல்லாம அவ மட்டும் தான் என்வீட்டு பொண்ணுன்ற உரிமையும் இல்லே... சொல்லக் கூடாதுனு முடிவு பண்ணினது ரெண்டு பேருக்கும் சேத்து தான்' என்று மனதிற்குள் மொழிந்து கொண்டார்.

"சொல்றதுக்கு ஒன்னும் இல்லேயே மாப்ளே"

"சரி நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..."

ஒரு நொடி யோசித்த கங்காதரன் பின் சம்மதம் தெரிவித்தார்.

"அம்முவோட பேமிலி பத்தி அவகிட்ட கேட்டிங்களா?"

அம்மு அதற்கான விளக்கம் கொடுக்காத நிலையில் நேற்று நடந்த உண்மையை உரைப்பதில் ராமால் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்தவர் முதல் நாள் நடந்த உரையாடலைக் கூறினார்.

"சோ நீங்க கேட்ட கேள்விக்கு அம்மு பதில் சொல்லலே அப்படி தானே!"

"ம்ம்ம்.. "

"காலைல நீங்க கேக்கலேனாலும் கமல் கேட்டிருப்பானே! சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்ன்ற ஆர்வத்துல!" என்று கமலை வம்பிழுப்பது போல் போட்டு வாங்கினான்.

அப்போதும் கூட ஒரு நொடி யோசித்து கமலைப் பற்றி தானே கேட்கிறான் என்று நினைத்து மீண்டும் உண்மையை உரைத்தார். "அம்முவுக்கு ஏதோ வேலைனு சீக்கிரம் கிளம்பி போயிட்டா மாப்ளே!"

"அப்படின்னா நீங்க இப்போ கண்டிப்பா அம்மு தான் தேடி போயிருப்பிங்க! போன இடத்துல அம்முவை பத்தின உண்மை தெரிஞ்சுருக்கும். அது தான் உங்களோட இப்போதைய கவலைக்கு காரணம்" என்று நேரில் பார்க்காத குறையாக அவர் மயக்கமடைந்ததைத் தவிர அனைத்தையும் கூறினான்.

ஒரு நிமிடம் ஆடிப்போனவர் பேச்சு வராமல், "மாப்ளே..." என்று கூறி மறுக்க நினைக்கையில் மீண்டும் ராமே பேசத் தொடங்கினான்.

"ஐ ஆம் ஸூயர் அங்கிள்...நீங்க அம்முவை தேடி போன இடத்துல ஏதோ நடந்திருக்கு? அம்முவோட குடும்ப நபர் யாரையோ பாத்திருக்கிங்க... யாரையோ என்ன யாரையோ! அம்முவோட அப்பாவை பார்த்திருப்பிங்க.... எனக்கும் தருவுக்கும் அது தெரியக்கூடதுனு நினைக்கிறிங்க?" என்று உறுதியாகக் கூறினான். மேலும் சிலவற்றைக் கூறிட ஒரு முழு நிமிடம் பின் ட்ராப் சைலண்ட் என்று சொல்லும் அளவிற்கு மூச்சுக் காற்றின் சத்தம் கூட மறுமுனைக்கு கேட்காத அளவிற்கு அப்படி ஒரு அமைதி.

கங்காதரனும் அதற்கு மேல் மறைக்க முடியாமல் அங்கே தான் கண்ட நபரையும், அவருடனான முன்பகையையும் மனவலியோடு கூறினார். மேலும் இறுதியாகவும் உறுதியாகவும்,

"என் குடும்பத்தை பிரிக்க நெனச்சு என் வீட்டுக்குள்ள நுழைஞ்ச யாரையும் இனி ஒரு நிமிடம் கூட என் வீட்டில் தங்க அனுமதிக்க மாட்டேன். கமலுக்கு அவனது காதல் முக்கியம்னா எனக்கு என் குடும்பம் தான் என் இத்தனை வருட காதலே... அதை இழக்க நானும் தயார் இல்லே... சட்ட பூர்வமா பதிவிடப்படாத கல்யாணத்தை முறிச்சிக்கிறது மட்டும் தான் இனி என்னோட எண்ணமா இருக்கும்..." என்று என்றும் இல்லாத கடினத்தன்மையோடு தன் வாதத்தை முடித்தார் கங்காதரன்.

ராம் அவரிடமிருந்து இப்படி ஒரு முடிவை சற்றும் எதிர்பார்த்திடவில்லை. அவனது எண்ணங்களும் சிந்தனைகளும் கமலை மட்டுமே மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது. அதற்குள் மறுமுனையில் கங்காதரனைத் தேடி விமலா வந்திருக்கவே அழைப்பைப் துண்டித்திருந்தார் அவர்.

'அம்மு இல்லாத வாழ்வை அவன் ஏற்பானா! குறுகிய கால காதல் என்ற போதும் பசுமரத்தாணி போல் அவன் மனதில் பதிந்தவளாயிற்றே அம்மு... அவன் தன் காதல் சொல்லிய விதமே அவள் மேல் உள்ள ஆழமான காதலை வெளிப்படுத்துவதாகத் தானே இருந்தது. அவளிடம் வம்பு வளர்த்த்தாலும் சண்டையிட்டாலும் மள்ளுக்கட்டினாலும் அம்மு தானே அவனுக்கு எல்லாம்...'

என்று கமலின் சிந்தனையில் கலந்திருந்தவனின் முன்னால் மனமனக்கும் தேநீர் நீட்டப்பட, அதில் ஈடுபாடில்லாதவனாய் கை நீட்டி பெற்றுக்கொண்டப் பின்னும், காதிலிருந்து ஃபோனை எடுக்கவில்லை.

நேத்ரா அவனின் கையிலிருந்து பரித்து தன் காதில் பொறுத்த மறுமுனை உயிரற்றுக் கிடந்தது. ராம் அப்போதும் அதனை கவனியாமல் நேத்ரா கொடுத்த தேநீரை இரண்டு மிடரு மிடரிவிட்டு மீண்டும் அவளிடம் நீட்டினான்.

"நீ குடிச்சிடு... நான் கிளம்புறேன்" என்று கூறி நகர்ந்தவனின் கைபிடித்து அழைத்து வந்து முன்னறை நீள்சாய்விருக்கையில் அவனை அமர்த்தியவள் அவனே சற்றும் எதிர்பார்க்கா நொடியில் அவன் மடியில் அமர்ந்து மீதி தேநீரைப் பருகினாள்.

"என்னை விரட்டிட்டா மட்டும் மாமா உங்ககிட்ட தனியா உண்மைய சொல்லிடுவாங்களா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவினாள்.

வழக்கம் போல் அவளது திமிரில் தான் கர்வமாக தலைதூக்கி "கரெக்ட் தான்... உன்கிட்ட மறச்சு என்கிட்ட மட்டும் எந்த உண்மையும் நேத்துவரைக்கும் சொன்னதில்லை தான்..." என்று கூறியதிலேயே அவளுக்குப் புரிந்தது கங்காதரன் அவனிடம் ஏதோ கூறியுள்ளார் என்று...

அடுத்த மிடரு தேநீரை வாயில் எடுத்திருந்தவள் அதனை விழுங்கக் கூட மறந்து கண்களை விரித்து அவன் கூற்றை நம்ப முடியாமல் பார்க்க, அவனோ அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கி மீதமிருந்த தேநீரை பருகத் தொடங்கினான்.

"தரு.... கமலுக்காக நாமலும் சில விசயங்கள் செய்ய வேண்டியிருக்கு... அங்கிள் பேசுறதைப் பாத்தா ரொம்பவே எமோஸ்னலா இருக்காருனு தோனுது... எப்படியாச்சும் அம்மு கமல் கல்யாணத்தை நடத்திடனும்..." என்று அவனும் உணர்ச்சி வயப்பட்டு பேசுவதைக் கேட்டவளும் விசயம் கொஞ்சம் பெரிது தானோ என்றே தோன்றியது.

அவன் மடியிலிருந்து எழுந்து இருக்கையில் அமர்ந்தபடி "சொல்லுங்க நாம என்ன பண்ணனும்?" என்றாள்.

"ஊருக்கு போலாமா?" தன்னிடம் கேள்வியாய் கேட்கிறான் என்றால் இது வெறும் மாமாவை சமாதானம் செய்யும் பயணம் அல்ல என்றும் அவனது திட்டம் வேறு எதுவோ ஒன்று என்று நேத்ரா அறிந்து கொண்டாள்.
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

இங்கே காலையில் தன்னவளின் மேல் கோபம் கொண்டு கடைக்கு வந்த கமலோ 'இப்போதாவது தனக்கு அழைப்பு விடுக்கிறாளா பார்.... காலையிலிருந்து தன்னைக் காணாமல் இருப்பது அவளுக்கு அவ்வளவு இனிமையாக இருக்கிறது போல! நேற்றும் இப்படித் தான் தன்னை நிராகரிப்பதற்காகவே குளியலறையில் இருப்பதாக பொய்யுரைத்தாள்... இப்போதும் நான் தான் அவளை நினைத்து புலம்பித் தவிக்கிறேன்... அவளுக்கு என் நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா! காலையிலிருந்து என் தொந்தரவு இல்லாமல், என்னைப் பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறாள் போல!' என்று தேவையற்ற எண்ணங்களை மனதில் சுமந்து தன்னையும் வருத்தி தன்னவளையும் குறைகூறி நிம்மதியற்றுத் திரிந்தான்.

ஆனால் மருந்தின் வீரியத்தாலும், நல்லிரவு தாண்டி தாமதமாக உறங்கிய காரணத்தினாலும் அதிகாலைப் பொழுதில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில் தன் ஆருயிர் சீமாட்டி தனது நெஞ்சணையில் தான் தலை வைத்து உறங்கினாள் என்பது அவன் அறிந்து கொள்ளாத விசயமாயிற்றே!

அவனின் திட்டுகளுக்கு சொந்தக்காரியோ நீண்ட நெடிய முப்பது நாட்களுக்குப் பின் தன் தந்தையோடு அமர்ந்து உண்ணக் கிடைத்த காலைப்பொழுதை முழுமையான மகிழ்ச்சியோடு அனுபவித்திட முடியாமல் கமலின் எண்ணங்களில் மனம் சிதறிக் கிடந்தாள். 'காலை உணவு உட்கொண்டால் என்னவோ! எந்தெந்த மாத்திரை என்று தெரிந்திருந்தாலும் தானாக எடுத்து போட்டுக்கொள்ள மாட்டான்... முழு சோம்பேறி... அத்தை அல்லது மிதுன் அக்கா எடுத்துக் கொடுத்திருப்பார்களா!' என்று அவனது எண்ணங்கள் தான் மனம் முழுவதும்...

"கேன்டீன் சாப்பாடு ஓரளவுக்கு ஓகே தான் டா அம்மு... ஆனாலும் உன் அத்தை சமையலுக்கு இது எவ்வளவோ பெட்டர்..."

கமலின் நினைவிலிருந்து மீண்டு வந்தவள் மீண்டும் ஒருமுறை தந்தையின் கூற்றை உள்வாங்கி, சிரித்துக்கொண்டே பதில் கூறினாள்.

"நீங்க மாமா மேல இருக்குற பொறாமைல பேசுறிங்க ப்பா... அத்தை நல்லா தான் சமைப்பாங்க... அதை மாமா மட்டும் ரசிச்சு ருசிச்சு சாப்பிட கொடுத்து வெச்சிருக்கே! உங்களுக்கு அது கிடைக்கலேனு இப்படியெல்லாம் சொல்லி மனசை ஆத்திக்கிறிங்க... அப்படித்தானே!" என்று மீண்டும் நக்கல் சிரிப்பு அவளிடம்...

"அவனை கட்டிக்கிறதுக்கு முன்னே வரைக்கும் உன் அத்தை எனக்கு சமச்சு போட்டவ... அந்த டேஸ்ட்டை ருசிச்ச எனக்குத் தெரியாதா! அவ எப்படி சமப்பானு?" என்று மேலும் மேலும் தன் கூற்று சரியே என வாதாடினார்.

பேசிக்கொண்டே மீதி உணவையும் மகளை உண்ண வைத்துவிட்டு அவளிடம் விடைபெற்றுப் புறப்பட, இருவருக்கும் நடுவில் பேரமைதி தான். 'இந்த இன்னல்களுக்கு நடுவே நீ இங்கே இருக்க வேண்டாம் மா... வா என்னோடு' என்று பெற்ற மனமாய் அழைக்க நினைத்தாலும் மகளின் கண்கள் அதனை கேட்டுவிடாதே என்று தான் யாசித்து நின்றது...

'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நினைத்ததை முடித்துவிட்டு தான் நம் இல்லம் நுழைவேன்... அதற்கு முன் என்னை வா என்று வாய் திறந்து அழைத்துவிடாதீர்கள்' என்று...

மகளின் மனதை மனதிற்குள் சென்று படித்த தந்தையாக, "பாத்து பத்திரமா இரு ம்மா..." என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.

இல்லத்திலோ கங்காதரன் வீட்டிற்கு வந்தது தெரியாத விமலாவோ சலவைத் துணிகளை அதன் இயந்திரத்தில் போட தங்கள் அறைக்குச் சென்றவர், கங்காதரனின் ஆக்ரோஷ குரல் கேட்டு வாசலிலேயே நின்று விட்டார்.

கங்காதரனின் கடைசி ஒருசில வார்த்தைகளை மட்டும் காதில் வாங்கியவர் நெஞ்சம் திடுக்கிட்டு அடுத்த எட்டு வைக்க கால்கள் ஒத்துழைக்காமல் போக தன்னவரா தன் மகனின் காதலை பிரிக்க நினைக்கிறார் என்று அதிர்ச்சி கொண்டார்.

வாசலில் நிழலாடுவதைக் கண்ட கங்காதரன் சொல்லாமல் கொல்லாமல் கூட அழைப்பைத் துண்டித்து "விமலா" என்று சத்தம் எழுப்பினார்.

அதில் அசைந்து கொடுத்த விமலாவின் மனம் கால்களையும் சேர்த்து நகர்த்தி அவர் முன்னால் நிறுத்தியது.

மனையாளின் முகத்தில் இருந்த அமைதி அவர் தன் பேச்சை கேட்டு விட்டார் என்பதனை புரிந்து கொண்ட போதும் விமலாவாக ஏதேனும் வாய் திறந்து கேட்பார் என்று நினைத்து கங்காதரன் அவர் முகத்தையே பார்த்திருந்தார்.

விமலா ஒருவிதமான ஒட்டாவா தன்மையுடன் "கூப்ட்டிங்காளா?" என்றிட, கங்காதரனும் அவள் கேட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்து "தலை வலிக்குது... ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வாயேன்" என்றார்.

விமலாவும் கணவன் சொல் தட்டாத பத்தினியாய் அங்கனமே செய்திடச் சென்றார். பல இன்னல்களைத் தாண்டியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறம் நல்லறமாக செவ்வனே நடத்திச் சென்ற இந்த மூத்தத் தம்பதிகள் கூட தங்கள் புரிதலில் சற்றே சரிந்தனர்.

கடையில் தன்னவளைத் திட்டித் தீர்த்து ஓய்ந்து போன கமலோ கைகளில் லேசாக வலியை உணர, காலையில் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் எடுக்காமல் விட்டது நினைவில் வந்தது. அதற்கும் அம்முவின் மேல் தான் கோபம் கொண்டான். நேற்று முழுவதும் அவனை விழுந்து விழுந்து கவனித்தவள் இன்று சாப்பிட்டேனா? இல்லையா? என்று கூட கேட்கவில்லை. மாத்திரையும் எடுத்து வைக்கவும் இல்லை. மருந்து எடுத்துக் கொண்டேனா என்று கேட்கவும் இல்லை... இருக்கட்டுமே! இப்படியே இருக்கட்டும்... நானா இவளை துரத்தி துரத்தி காதலித்தேன்...' என்று மீண்டும் மனதோடு புலம்பியவன், ஒரு கட்டத்திற்கு மேல்

"பைத்தியம் பிடிக்க வைக்கிறா! ராட்சசி!" என்று தன்னையும் மறந்து வாய்விட்டு திட்டத் தொடங்கியிருந்தான்.

எதிரில் நின்றிருந்த வாடிக்கையாளர் பெண் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, கடகடவென பில் போட்டு கொடுத்து அவரை அனுப்பி வைத்தான்.

இடையிடையே குறுந்தகவல் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவளிடமிருந்து ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா என்று தன் திறன்பேசியை எடுத்து பார்த்துக் கொள்வான். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும்...

இதோ இப்போது கூட குறுந்தகவல் சத்தம் கேட்டு மொபைலை கையில் எடுத்து வைத்திருக்கிறான். ஆனால் தகவல் அனுப்பி இருக்கும் நபர் இவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு நபர்... அதுவும் அவன் துளியும் எதிர்பார்த்திராத ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார்.

சீண்டல் தொடரும்.
 
Top