• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மதுரையில் மளிகை கடை வியாபாரத்தில் பெரிய அளவில் பெயர் பெற்றிருந்தவர் தான் பழனிவேல்ராஜன். (அம்முவின் தாத்தா).

பழனிவேல் ராஜன் அவரது குடும்பத்தின் ஒற்றை ஆண் வாரிசு என்பதால் சிறுவயதிலிருந்தே அவர் வைத்தது தான் அவரது இல்லத்தில் சட்டம். அவரது கூற்று தான் வேதவாக்கு... ஆளுமைத் திறமையுடனும் கம்பீரத்துடனும் அவரது சமூகத்தில்(சாதி) உலா வந்தவருக்கு ஏகப்பட்ட மரியாதை...

பழனிவேல்ராஜனின் முதல் தாரத்திற்கு பிறந்தவர் தான் தியாகராஜன். முதல் தாரம் மனநல குறைபாடு ஏற்பட்டு நோயின் வீரியத்தில் தனக்குத் தானே நெருப்பு வைத்து இறந்தும் போனார்.

பழனிவேல் ராஜன் கோமதியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கனகவேல்ராஜன் மற்றும் விமலா...

தியாகராஜன் கோமதியை முழுமனதாக அன்னையாக ஏற்காவிட்டாலும், தம்பி, தங்கைக்கு நல்லதொரு தமையனாகவே இருந்தார். பழனிவேல் தன் அதிகாரத்தால் வீட்டை வழிநடத்திச் சென்றார் என்றால், தியாகு தன் அன்பால் அவரை விட செம்மையாகவே அப்பணியைச் செய்தார்.

தியாகராஜன் குணத்தாலும் பண்பாலும் அவரது அன்னையைப் போல்... ஆனால் கனகவேல் முற்றிலும் தன் தந்தையின் குணம் கொண்டவர், சட்டென கோபம் கொள்பவர்... அவர் சொல்லி ஒன்று நடக்கவில்லை என்றால் அவ்விடத்தில் சிறிய கலவரமே ஏற்படுவதுண்டு. இருந்தாலும் தந்தை சொல்லுக்கும் தந்தைக்கு நிகரான அண்ணன் சொல்லுக்கும் கட்டுப்படக் கூடியவர்... அது போல் கடைக்குட்டி மற்றும் ஒற்றைப் பெண் பிள்ளை என்பதால் விமலா தன் அண்ணன்கள் இருவருக்கும் எப்போதும் செல்லப் பிள்ளை தான்.

விமலாவிற்கு முதல் குழந்தை கலையும் வரை சொந்தங்களுக்குள் எந்த சுணக்கமும் இல்லாமல் சுமூகமாக தான் சென்றது. முதல் குழந்தை எட்டாம் மாதத்தில் கவனக் குறைவால் வயிற்றிலேயே இறந்துவிட, விமலாவின் உடல் பலவீனம் கண்டு உடன்பிறப்புகள் கண்ணில் உதிரம் கொட்டியது.

'அத்தனைக்கும் கங்காதரனின் அலட்சியம் தான் காரணம். சரியான நேரத்திற்கு சரியான சிகிச்சை இல்லாமல் தான் தங்கள் தங்கைக்கு இந்நிலை... இனி விமலாவின் உடல் தேறி வரும்வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சண்டையிட, விமலா கணவனை விட்டுக் கொடுக்காமல் 'அவர் ஒருவர் தான் என்னை இத்துயரிலிருந்து மீட்டுக் கொண்டு வர முடியும்... அவருடன் தான் நான் இருப்பேன்' என்று கூறி தமையன்களின் வசவு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கங்காதரனும் மனைவியின் பேச்சுக்கு மதிபளித்து அப்போது ஏற்பட்ட தொழில் நெருக்கடியை கூட சிவநேத்ராவின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியின் முழு நேர சேவகனாகினார்.

வெகுசில நாட்களிலேயே நேத்ராவின் தந்தை தொழிலை முன்னேற்றி காட்டிட, அவரை முதலீடற்ற பங்குதாரராக சேர்த்துக் கொண்டார் கங்காதரன். அதில் கோபம் கொண்ட கனகவேல்-ஐ 'தொழிலில் தலையிட வேண்டாம்' என்று கூறி தியாகு தடுத்தும் கேட்காமல் கனகவேல் கங்காதரனிடம் தன் வாய்ஜாலத்தைக் காண்பித்து வாங்கி கட்டிக் கொண்டான்.

'எந்த சமூகத்தான் என்று கூடத் தெரியாதவனை சக கூட்டாளியாக சேர்க்கக் கூடாது' என்று அறிவுரை வழங்கி நின்றான்.

கங்காதரனுக்கும் கோபம் தலைக்கேறவே 'மனிதனிடம் மனிதம் மட்டும் பார்த்தால் போதும்... என் தொழிலை எவரை நம்பி எவருடன் பங்கிட வேண்டும் என்று எனக்குத் தெரியும்... தேவையில்லா விஷயங்களில் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைய வேண்டாம்' என்று மூக்குடைத்து அனுப்பிவிட்டார்.

அதன்பிறகு சிவநேத்ரா பிறக்கும் தருவாயில் விமலா தன் வயிற்றில் சிசு அரும்பியது தெரியாமல் நேத்ராவின் அன்னையை கவனிக்கச் சென்றுவிட அப்போதும் ஒரு போராட்டம் முளைத்தது. மகள் கருவுற்றிருப்பது அறிந்து தன்னோடு அழைத்துச் சென்று தன் இல்லத்தில் வைத்து பார்த்துக் கொள்வதாகக் கூற வந்த பழனிவேலிடம் விமலா மறுத்துவிட்டார்.

ஏற்கனவே விமலா முதல் குழந்தை இழந்திருந்த நிலையில் இப்போது தன்னை கவனிக்காமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்ணிற்கு பணிவிடை செய்ய தன் மகளுக்கு என்ன தலையெழுத்தா! என்று எண்ணியவர், கங்காதரனிடம் சென்று 'எல்லாம் உன்னால் தான்... அவனையெல்லாம் நீ நண்பன் என்றும் கூட்டாளி என்றும் சொல்லிக் கொண்டு திரிவதால்த் தான் என் மகள் அவர்களை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறாள்' என்று வீட்டு மாப்பிள்ளை என்றும் பாராமல் எகிறினார்.

பழனிவேல் விமலாவைக் காணச் செல்லாமல் நேரே கங்காதரனிடம் 'என் மகளை சற்று நாள் அருகே வைத்து பார்த்துக் கொள்ள நினைக்கிறேன்' கூறியிருந்தால் நிச்சயம் அவரே தன் மனைவியை அனுப்பி வைத்திருப்பார் தான். இத்தனைக்கும் விமலாவின் அன்னை இல்லமும் அதே மதுரை தான் என்பதால் நிச்சயம் சம்மதம் தெரிவித்திருந்திருப்பார்....

ஆனால் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் கங்காதரனிடம் கத்திடவே, அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று உதாசினமாகக் கூறிடவே அனுப்பி வைக்க முடியாது என்று மறுத்துவிட்டார் கங்காதரன். இதனால் இடையில் சில நாட்கள் பேச்சு வார்த்தையற்று இருந்தனர் இரு குடும்பமும். கங்காதரனின் இல்லத்திலும் சில அறிவுரைகள் கிடைக்க அங்கேயும் செல்வதை நிறுத்திக் கொண்டார் கங்காதரன்.

இருந்தும் தியாகுவின் கட்டளைக்கு இணங்கி விமலாவின் ஐந்தாம் மாதத்தில் ஐவகை உணவு சாப்பாடு எடுத்து வந்திருந்தனர். ஆனால் அன்றும் நிறைமாத கர்ப்பிணியான ரேவதியையும் முன்னால் நிறுத்தி அனைத்தையும் அவருக்கும் சேர்த்தே செய்வது போல் பெற்றுக்கொள்ள அதனை அவமானமாகக் கருதினார் பழனிவேல். இருந்தும் மகளுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தார்.

அதன் பிறகும் மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் எழத் தான் செய்தது. ஏழாம் மாச வளையல் அணிவிக்கும் வைபவத்திற்கு நேத்ராவின் தந்தை ரவி அவரது குடும்ப வைபவம் போல் முன்னின்று அனைத்து வேலைகளையும் செய்தது, ஒன்பதாம் மாதம் அன்னை இல்லம் அழைத்துச் சென்ற பின் ரேவதி தன் கை குழந்தையுடன் அங்கே வந்து விமலாவைச் சந்திப்பதும், அவர்களுடன் சரிக்குச் சமம் அமர்வதும் என ஒவ்வொரு முறையும் பிரச்சனை பெரிதாகத் தான் விஸ்வரூபம் எடுத்தது.

தான் தன் இனம் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் வெறியர்களாக இருந்தனர், பழனிவேலும் அவரது மகன் கனகவேலும்... இந்த அவலங்கள் நேத்ராவின் அன்னை தந்தையைச் சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர் கங்காதரனும், விமலாவும்...

பவன் பிறந்து சிறிது ஆண்டுகள் பிணக்கு இன்றி ஓரளவு இலகுவாகவே உறவுகள் பேசிக் கொண்டனர். அதுவும் விமலா என்ற ஒற்றைப் பெண்மணிக்காக மட்டுமே! இதற்கிடையே தியாகராஜன்- உமாமகேஸ்வரி திருமணம், அடுத்ததாக கமலின் பிறப்பும் அதனை அடுத்து கனகவேல்ராஜன்- பரிமளா திருமணம் என்று வரிசையாக வைபவம் தான் இல்லத்தில்...

கமலுக்கு அடுத்து பிறந்தவன் தான் அமுதினியின் அண்ணன் அகிலன். நாட்கள் வருடங்களாக கடந்திட நேத்ராவின் பத்தாவது வயதில் அவளது பெற்றோர் இறந்துவிடவே, கங்காதரன் எவர் மறுப்பையும் பொருட்படுத்தாது நேத்ராவை தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டார். மீண்டும் சண்டை, சச்சரவுகள் ஆரம்பித்தன.

'உன் கணவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு மறுவேலை பார்க்கச் சொல்' என்று கனகவேல் விமலாவைத் தூண்டிவிட, விமலாவோ 'பெற்றோரைப் போல் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கும்போது அவள் ஏன் அனாதை இல்லம் செல்ல வேண்டும்!' என்றிடவே, இனி விமலாவிடம் இதுபற்றி பேசுவது வீண் என்று அமைதியடைந்தார்.

குழந்தைகளை மட்டும் அவ்வபோது தாத்தா இல்லம் அழைத்துச் செல்ல வருவார் கனகவேல்... அவர் கங்காதரனிடம் பேசுவதே ஒருசில வார்த்தைகள் தான். அதுவும் சுவற்றை பார்த்து தான். அந்த மாதிரி நேரங்களில் கூட நாவடக்கம் இல்லாமல் ஏதாவது கூறி அவரது முறைப்பை பரிசாகப் பெற்றுக் கொள்வான். கனகவேல் ஆசிரமம் பற்றி பேசும்போது கூட கங்காதரன், விமலாவின் சிரமம் நினைத்தும், பெண்பிள்ளை... பிற்காலத்தில் செலவு என்று நினைத்தும் தான் இப்படிக் கூறுகின்றான் என்று தான் எண்ணினார்.

ஆனால் இங்கே கதையோ வேறாக இருந்தது. கைக்குழந்தையோடு தன் இல்லம் நுழைந்த ரேவதியையே விரும்பாத பழனிவேல் நேத்ராவின் வருகையையா விரும்பப் போகிறார்! அவ்வில்லத்தில் நேத்ராவிற்கு நிகழும் அவலங்கள் எவர் கண்ணிலும் படாத படி தான் நிகழும். அப்படித் தான் நிகழ்த்த வேண்டும் என்பது பழனிவேலின் கட்டளையும் கூட.

கனகவேல் ஒவ்வொரு முறையும் நேத்ராவையும் சேர்த்து அழைத்து வருவதன் உள்நோக்கம் 'நீ வளர்ப்பு மகள் தான்... இந்த வீட்டு வம்சாவளியல்ல... உன் தகுதிக்கு மீறிய இடத்தில், சமூகத்தில் வளர்கிறாய்' என்று அவள் மனதில் பதியவைப்பதற்கே!!! பத்து வயது சிறுமிக்கும் அவ்வயதில் அவர்களது ஒதுக்கம் பெரிதாக ஒன்றும் புரிந்திடவில்லை.

விமலாவும், கங்காதரனும் நினைத்தது என்னவோ 'வீட்டிற்கு வந்த சிறுமியிடமா அவர்களது வக்கிர புத்தியை காண்பித்து விடப் போகிறார்கள்! அதுவும் கனகவேலுக்கு குழந்தை இல்லாத நிலையில், தியாகுவின் மனைவி உமா இரண்டாம் குழந்தை பிறந்து அன்னை இல்லம் சென்றிருக்க, வீட்டில் சிறார்கள் சத்தம் கேட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே! அதனால் தான் அழைத்துச் செல்கின்றனர்' என்ற எண்ணத்தில் தான் அவ்வில்லம் அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

உமா குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே புகுந்த இல்லம் திரும்பிவிட, இங்கே நேத்ரா, பவன் மற்றும் கமல் மூவரும் பெயர் சூட்டப்படாத அமுதினியைக் காணும் ஆவலில் பழனிவேல் இல்லம் வந்திருந்தனர். நேத்ரா ஆசையாய் அமுதினியைக் கொஞ்சிட முத்தமிடச் செல்ல அதனை அறேவாயிலில் நின்று பார்த்துவிட்டு கனகவேல் அவள் வாயைப் பொத்தி கீழே தள்ளிவிட்டான்.

பழனிவேலும் தன் மனைவியை அழைத்து 'அவளை ஏன் குழந்தைகிட்டே விட்ட? குழந்தை பக்கத்துல யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அப்படி என்ன வேலை வேண்டிக் கிடக்கிறது? யார் யார் என் பேத்தியை கொஞ்ச வேண்டும் என்று ஒரு தராதரம் இருக்கிறது... அதனை அனைவரும் கடைபிடித்தால் நல்லது' என்று சத்தமிட அதில் பாதி திட்டு உமாவிற்கும் சேர்த்து தான் விழுந்தது.

ஆறு வயது கமலுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்ற போதும் கீழே விழுந்து கிடந்த நேத்ராவை கை பிடித்து தூக்கிவிட்டு அவள் அருகிலேயே நின்று கொண்டான். அதற்கும் கனகவேல் நேத்ராவை முறைத்திட பின்கட்டு வழியே வெளியேறி சுற்றுச்சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.

பவனுக்கு அனைத்தும் விளங்கிட தாத்தனைப் போல் முன்கோபி குணம் படைத்த மகள்வழிப் பேரன் கனகவேல்-ஐ முறைத்து நின்றான். ஆனால் அவரோ குழந்தையை இப்படி கொஞ்சினால் நோய் வரும் அது இது என்று கூறி மருமகனை சமாளித்தார்.

அதனை முழு மனதாய் ஏற்றுக்கொள்ள தோன்றவில்லை என்றாலும், அப்போதைக்கு தலையசைத்து வைத்தான். ஆனால் அது தான் அவன் சிந்தனையைத் தூண்டும் முதல் புள்ளியாக அமைந்தது. அதன்பின் அந்த வீட்டில் நேத்ராவிற்கு அளிக்கப்படும் மரியாதையை கவனித்து வந்தவன் தான் கண்ட காட்சிகளை ஒரு நாள் அனைவரும் ஒன்று கூடியிருக்கும் நேரம் பார்த்து தன் அன்னையிடம் சந்தேகம் என்ற பெயரில் வினவிய போது தான் விஷயம் வெளி வந்தது.

நேத்ராவிற்கு கலவை சாதமாக மீந்தவைகளைத் தருவது; வீட்டிற்குள் முன் வாசல் வழியாக இல்லாமல் பின் வாசல் வழியே அனுமதிக்கும் பழக்கம்; வீட்டினுள்ளுமே எல்லா அறைகளுக்கும் செல்ல அனுமதியில்லை; மூன்று வயது அகிலனிடமும், பிறந்து இருபது நாட்களே நிறைவுற்ற அமுதினியுடனும் அண்டவிடாத் தன்மை; அவள் உறவுமுறை கூறி அழைத்தால் காட்டும் சிடுசிடுப்பு; தாத்தா, பாட்டி, மாமா, அத்தை அழைப்புகள் இல்லாமல் எல்லோரையும் அய்யா, அம்மா என்று அழைக்கும்படி உத்தரவு; என வரிசையாக அடுக்கி ஏன் சிவா மட்டும் ஸ்பெஷல் என்றானே பார்க்கனும்...

பெறாத பிள்ளைக்காக பெற்றோர்கள் நெஞ்சில் கடப்பாரை கொண்டு இடித்தது போல் அப்படி ஒரு வலியை உணர்ந்தனர்... 'பெற்ற வயிறு பற்றிக்கொண்டு எரிகிறது' என்பார்களே! விமலாவிற்கு அதனினும் தாண்டிய ஒரு உணர்வு... என் மகளை இழிவு செய்ய இவர்கள் யார் என்ற ஆத்திரம். நண்பன் மகளை தன் மகளாகக் கருதிய தந்தையவரோ விஷயம் கேள்வியுற்று துடிதுடித்துப் போனார்.

குழந்தைகளிடம் கூட ஜாதி மதம் பார்க்கும் பழக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது!!! அப்படி அந்த பிஞ்சு நெஞ்சை இப்படியெல்லாம் இழிவு படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது? குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற வார்த்தைகள் எல்லாம் என்னவாயிற்று... வெறும் ஏட்டு சுவடிக்கு மட்டும் தானா!!! என்று பல எண்ணங்கள்.

"கனகவேல் என்ன இது? சிவாவை உங்க வீட்டு வம்சமா ஏத்துக்கலேனாலும், ஒரு சின்னப் பொண்ணா நெனச்சிருக்கலாமே! இல்லே அவளை பிடிக்கலேனா இங்கே கூட்டிட்டு வராமலே இருந்திருக்கலாமே! பெரிய மனுஷனா தன்மையா நடந்துக்கத் தெரியாது!" என்று கடைசி வார்த்தைகளை பழனிவேலைப் பார்த்துக் கூறினார்.

சிறு வயது முதலே தன் பேச்சுக்கு மறு பேச்சு என்றே கேட்டிறாத பழனிவேல் தன்னை முகத்திற்கு நேர கங்காதரன் கேட்பதை அறவே வெறுத்தார்.

"விமலா... மாப்பிள்ளையா இருந்தாலும் மரியாதை கொடுத்தா மட்டும் தான் மரியாதை கிடைக்கும்னு சொல்லு..." என்றார் மூக்கு விடைக்க தரையைப் பார்த்து...

"மரியாதை கேட்டு வாங்கக் கூடாது... நடந்துக்கிற விதமா நடந்துக்கிட்டா தானா கிடைக்கும்...." என்று இப்போது நேருக்கு நேர் பேசினார் கங்காதரன்.

"இப்போ என்ன மரியாதை குறைச்சலா நடந்துக்கிட்டாங்க எங்க ஐயா!... நீங்க புத்தி கெட்டு திரிஞ்சா பெரியவங்க தானே அதை சரி செய்யனும்..." என்று கனகவேல் தன் தந்தையை கூறியதை தாங்க முடியாமல் கூறினான்.

"இப்போ என்ன புத்தி கெட்டு திரியிறாங்க... மனுஷ தன்மையே இல்லாம சாதி வெறி பிடிச்ச மிருகமாக இருக்க சொல்றியா? அவளோட அப்பா, அம்மா செய்த புண்ணியம் அவளை ராணி மாதிரி வாழ வைக்கும் டா... என் நண்பன் என்னை வாழ வெச்சிட்டு போயிருக்கான்... அன்னைக்கு அவன் நமக்கென்ன வந்ததுனு நெனச்சு ஏனோ தானோனு கடைய பாத்திருந்தாலோ இல்லே இருக்குற நட்டத்துல நாம காச எடுத்தா என்ன தெரியவா போகுதுனு என்னை ஏமாத்தியிருந்தாலோ இன்னேரம் நானும், உன் தங்கச்சியும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியாது... நடு ரோட்ல தான் நின்னுருக்கனும்..."

"அப்படி அவனோட உழைப்புல அவன் ஏத்திவிட்டு தான் நீங்க முன்னுக்கு வந்திங்கன்றதே அவமானம் தான்..." என்று கனகவேல் உரைத்திட வார்த்தைகள் தடித்துக் கொண்டே சென்றது.

கனகவேல் மீண்டும் மீண்டும் இழிவாகப் பேசியவன் இறுதியாக "என்ன இவளை வார்த்தைக்கு வார்த்தை உன் பொண்ணு உன் பொண்ணுனு சொல்லிக்கிறே... அப்போ அவ அம்மாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" என்று வரம்பு மீறியே பேசி விட்டார்.

விமலா தன் அண்ணன் என்று கூட பாராமல் கனகவேல்-ஐ அரைந்தே விட்டார்... "நானும் தான் அவளை என் பொண்ணுனு சொல்லிக்கிறேன்... அதுக்காக என்னையும் அந்த கேள்வி கேப்பேயா? இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இனி ஒருமுறை என் வீட்டு வாசல் வந்து நின்னிங்க!" என்று மிரட்டுவது போல் கூறி அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல் பேச்சை முடித்துக் கொண்டார்...

அப்போதும் கூட கனகவேலும், பழனிவேலும் தங்கள் தவறை உணர்ந்தது போல் இல்லை. அவர்களுக்கு அவர்களது சமூகம் மட்டுமே அவர்கள் கவுரவம்... தங்கள் வீட்டு பெண்பிள்ளை இப்படி மாறியது கூட சகவாசம் சரியில்லாததால் தான். கடந்த பத்து வருடங்களாக ரவி குடும்பத்துடனான பழக்கத்தால் தான் தரம் தாழ்ந்து போனாள் என்பதே அவர்களது கருத்து.

கடையிலிருந்து இல்லம் வந்த தியாகுவிற்கு சச்சரவுகள் அனைத்து அப்பன், மகன் பார்வையில் தான் உரைக்கப்பட்டது. அவர்களது பேச்சை அங்கே மாற்றிப் பேசுவோர் தான் யார்!!!

தியாகு தன் மனைவி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாத் தன்மையை ஒரு வாரம் கடந்தே தான் உணர்ந்தார். என்னவென்று கேட்டு தன் மனைவியை சமாதானம் செய்யச் செல்ல அப்போது தான் உமா நடந்தவற்றைக் கூறினார். உமாவும் ஒரு பெண்ணாய், பெண் பிள்ளையை பெற்ற அன்னையாய் யோசித்து தன் குடும்பத்தார் மீதுள்ள தவறை சுட்டிக்காட்டினார். தியாகுவும் தன் குடும்ப உறுப்பினர்களை எண்ணி அவமானமாகத் தான் உணர்ந்தார்.

தந்தை மற்றும் தம்பியிடம் இது பற்றி கேட்க, உமாவிற்கும் சேர்த்து அறிவுரை கிடைத்தது தான் மிச்சம். இனி இந்த ஊர் வேண்டாம், இந்த தொழில் வேண்டாம் என்று ஏதேதோ காரணம் கூறி தன் குடும்பத்தை கன்னியாகுமரி அழைத்துச் செல்வது மட்டுமே அப்போது தியாகுவால் முடிந்த செயலாக இருந்தது.

இதுவரை தான் கங்காதரனுக்கு தெரிந்த விஷயங்கள். அதிலும் அவர்கள் ஊரை விட்டுப் போனது கூட தியாகராஜனால் என்றெல்லாம் தெரியாது. கனகவேல் அதற்கும் ஒரு கதை கட்டி வைத்திருந்தான். 'குலம் கோத்திரம் தெரியாத வீட்டுப் பெண்ணை எடுத்து வளர்ப்பது பழனிவேல் வம்சத்திற்கு அவமானமாம்... அதனால் அவர்கள் வசிக்கும் ஊரில் தாங்கள் வசிக்க விரும்பவில்லை' என்று அப்போதும் கங்காதரனைத் தான் இழிவுபடுத்திச் சென்றிருந்தான்.

சீண்டல் தொடரும்​
 
Top